சில படங்கள் மனிதகுல பிரம்மாண்டத்தில் நம்மை உற்சாகப்படுத்தும். இன்னும் சில படங்கள் அதற்கு நேர் எதிராக நம்மை மலக்கிடங்கிற்குள் தள்ளிவிட்டது போல ஒரு ஒவ்வாமையைக் கொடுக்கும். அது ஒரு படமாக மட்டுமே இல்லாமல், ஒன்பது படங்களாக இருந்தால்? ஒன்பது படங்களும் ஒன்பது விதமாக நம்மைக் கொடுமைப்படுத்துகிறது என்றால் மிகை அல்ல. அருவறுப்புக்கு ஒன்பது ரசங்கள் உண்டா அதுவே “நவரசா”. எவ்வளவு பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் வைத்து வேலை செய்தாலும், யாருக்கும் புரியாமல் திரைமொழி லேயர்கள் என்று பேசினாலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கம் இல்லாத, படைப்புகளை, மக்கள் புறக்கணிக்கவே செய்திருக்கிறார்கள்.
“குற்றமும் தண்டனையும்” தாஸ்தாவெஸ்கி நாவலை எவ்வளவு சிதைக்கமுடியுமோ அவ்வளவு சிதைத்தால் அதுவே “எதிரி”.
கொலை செய்தது, அதை உணர்வதெல்லாம் சரி தான். ஆனால் கொலை செய்யப்பட்டவர் ஒரு மோசமான மனிதர், அந்தப்பாத்திரம் குற்றஉணர்வுக்கு காரணாமாக வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா? அந்த பாத்திரம் மனசாட்சி போல வருவதால், அந்தக்கதை சிதைந்துவிடுகிறது. ஒருவர் குற்றம் புரிந்தவரா, அந்த கொலைக்கு உண்மையிலேயே வருந்த வேண்டுமா என்பதெல்லாம் அந்தக்குற்றத்தின் அளவைப்பொறுத்தே சொல்லமுடியும். இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியாது என்னமோ உண்மை தான், அதற்காக ராஜ பக்க்ஷேயோ ஹிட்லரோ உள்ளே புகுந்து நமக்கு நீதி போதனை வகுப்பு எடுக்கமுடியுமா என்ன? அந்த இடத்தில் கதை சறுக்குகிறது.
கதை மணி சார், ஒரு இடத்தில் தஸ்தாவேஸ்கியை தாண்டவேண்டும் என்று நினைத்தவருக்கு, கால்ச்சட்டை கிழியும் சத்தமே கேட்கிறது. இவர் குற்றம் இழைத்தவர் என்று உணர்ந்து, கொலைசெய்யப்பட்டவர் மனைவியிடம் செல்கிறார். நான் தடுக்கவில்லை நானே முதல் குற்றவாளி என்று சொல்கிறாள் மனைவி. கணவன் சாகட்டும் என்று விட்ட மனைவி, அதற்கடுத்து குற்றவுணர்வு அடைகிறார். செத்தா சாகட்டும் என்று நினைக்கும் அளவுக்கு கணவன் கொடூரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஒரு கொடூரமான மனிதர் இறப்புக்கு காரணமான இருவர் குற்றவுணர்வு அடைகிறார்கள் என்பதே கதை. ஒரு குற்றவுணர்வுக்கு முன்னால் இன்னொரு குற்றவுணர்வை எதிராக வைத்து, கதையை எவ்வளவுக்கு எவ்வளவு நீர்த்து போக செய்யமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீர்த்து போக செய்கிறார் மணி.
சமூகத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தனிநபர் குற்றவுணர்வை மட்டுமே வைத்து கதை செய்ய முடியாது. மனிதர்களை சேர்த்து புரிந்து கொண்டு, வெவ்வேறு கோணங்களில் கதை சொல்வதற்கு வரலாற்று புரிதலும், கொஞ்சம் மக்களை பார்த்து மக்களின் போக்கை உணர்ந்துகொள்வதும் வேண்டும். ஒரு தனிநபராக இருந்துகொண்டு, கண்ணைமூடிக்கொண்டு யோசித்தால், தனக்கு தெரிந்த ஒரு நாலு ஐந்து உணர்வைவைத்தே படமெடுக்க முடியும். தனிநபர் உணர்வுகள் முக்கியம் தான், ஆனால் கூட்டு உணர்வு கொண்ட படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு சமூகத்தை முன்வைத்து அதற்குள் தனிநபருக்கு உண்டான பாத்திரம் தானே நியாயமானதாக இருக்க முடியும். இங்கு படைப்பாளிக்கு சமூக உணர்வு தெரியவில்லை, இயல்பான சமூகத்துடன் வெளியே உள்ளார், மக்களின் பிரச்சனைகளை கற்பனை செய்து ஒரு திரைக்கதையை எழுதுகிறார், அது மக்களின் பிரச்சனைக்கு நெருக்கமில்லாத பொழுது அது மண்ணைக்கவ்வும். அதனால் தான் நிறைய படைப்பாளிகள் gangstair போன்ற கதைகளுக்குள்ளும், போலீஸ், திரில்லர் என்று நுழைகிறார்கள். மக்கள் கதைசொல்ல, மக்களுடன் நெருங்கி இருக்கவேண்டும். வெறும் தொழில்நுட்பம் கொண்டு அதை செய்ய முடியாது.
எந்த உணர்வையும் விட நகைச்சுவை உணர்வே மக்களுக்கு நெருக்கமானது. மக்களின் அவலங்களை, அரசியல் போதாமையை, அறியாமையை சுட்டிக்காட்ட ஒரு நுட்பமான மனம் வேண்டும். போகிற போக்கில் எல்லாம் சிரிக்கவைக்க முடியாது. நானெல்லாம் சிரிப்பு இல்லை என்றால் என்றோ சிதைந்துபோயிருப்பேன். ஒன்று வடிவேலோ, இல்லை கௌண்டமணியோ என்னை லேசாகிவிட்டு போவார்கள். வடிவேலு சுயபகடி செய்துகொள்பவர், கொடூரமாக அடிவாங்கும் பொழுதெல்லாம் வடிவேலுவை நினைத்துக்கொண்டால் மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். அந்த சுயபகடி, நம் ஈகோவை சுத்தியல் வைத்து அடித்துவிடும். கௌண்டமணி one line பற்றி கேட்கவே வேண்டாம், வாழ்வு நம்மை பரிகாசம் செய்யும்பொழுதெல்லாம், கௌண்டமணி சொல்லும் சத்திய சோதனை போன்ற பன்ச் நினைவுக்கு வரும். அவமானப்படும்பொழுதெல்லாம் “எதிர் கட்சிக்காரன் பார்த்தா என்னைய என்ன நினைப்பான்” என்னும் வசனம் காதுக்குள் ஒலிக்கும். மக்கள் கலைஞன் சார்லி சாப்ளினை யாருக்குத்தான் பிடிக்காது? இந்த நவரசங்களில் கொடுமையாக எடுத்திருப்பது “நகைச்சுவை” உணர்வைத்தான். y g மகேந்திரன் படத்தில் உள்ளார் என்னும் பொழுதே கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். ஒரு படத்தில் சந்தானம் சொல்வார் “கோபம் வர மாதிரி காமெடி பண்ணாத”, அதற்கு பொருந்தக்கூடிய கதை. இத்தனைக்கும் யோகி பாபு போன்ற திறமையான நடிகரைவைத்து காமெடி செய்ய முடியவில்லை. கடைசியாக “அந்த நாற்றம் இன்னும் போகவில்லை ” என்று யோகிபாபு பார்த்து அந்த டீச்சர் சொல்வதில் எவ்வளவு வன்மம் ஒளிந்துள்ளது. தலித் சினிமாக்கள் வந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில் அந்த நாற்றம் வசனத்தில், படைப்பாளியின் மூளைக்குள் இருக்கும் மலத்தின் நாற்றம், திரையில் நாற்றமாக நாறுகிறது. இவ்வளவு வன்மமாய், இவ்வளவு கொடூரமாய், இவ்வளவு நாற்றமெடுத்து ஒரு காமெடி படத்தை பார்த்ததில்லை. படம் மொக்கையாக இருப்பதென்பது வேறு, நாற்றமெடுப்பதை போல மலக்கிடங்கு போல் இருப்பதென்பது வேறு. இந்த இரண்டாவது படம் பார்க்கும்பொழுதே நமக்குள் பாதி சக்தி போய்விடுகிறது, ஓ இதுதான் உலக சினிமா அனுபவமா?
பொதுவாக அடிப்படைவாதிகள் ஜோசியத்தை அறிவியல் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். பஞ்சாங்கத்தில் அம்மாவாசை பௌர்ணமி என்று சொல்வதாலேயே எல்லாமே சரி என்று வாதிடுவார்கள். pseudo science எனப்படுவதை science என்று பேசுவார்கள். அப்படி ஒரு படமே கார்த்திக் நரேன் படம். ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள், maturity என்பது ஆங்கிலத்திலோ தமிழிலோ இல்லை, என்ன பேசுகிறோம் என்பதில் உள்ளது. தமிழில் குப்பை என்பது ஆங்கிலத்தில் garbage அவ்வளவே. எல்லாமே preprogram செய்யப்பட்டுள்ளது என்று ஜோஸ்யக்காரர் அறிவியல் போல் பேசுவார் அல்லவா அதுவே oneline. இந்தக் குப்பை படத்தை கார்த்திக் நரேன் இயக்கவில்லை, அதுவும் நீங்கள் படம்பார்த்ததும் ஏற்கனவே preprogam செய்யப்பட்டுள்ளது, இல்லையென்றால் மக்களுக்கான படத்தை அவர் எடுத்திருப்பார் அப்படித்தானே?
எந்தக்கதையும் மனதில் ஒட்டவில்லை என்னும்பொழுது, 1965 இல் தி ஜானகிராமன் எழுதிய கதையை படமாக மாற்றியுள்ளார்கள்.
2020 வரை வந்துவிட்டோம், பெண்களின் சூழல் எவ்வளவோ மாறிவிட்டது. திருமணம் தேவையா இல்லையா என்னும் விவாதங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்க திருமணம் ஆகி, கணவன் இழந்துவிட்ட பெண்ணின் கதை, பக்கத்தில் அண்ணன் மகனின் மகளுக்கு மட்டுமே நல்லது நடக்கிறது என்னும் 60 களின் கதை இங்கு எடுபடவில்லை. இப்பொழுது இருக்கும் பார்ப்பன மக்களின் வாழ்வே வெகுஜனத்துக்கு அந்நியம், அது 60 களின் இருக்கும் விழுமியங்கள், அந்த அந்நியப்பட்ட வாழ்வு மக்களுடன் ஒன்றவில்லை. குறிப்பாக ரோகினி பாத்திரம், மணி சார் படத்தில் வருவதைப்போலவே செயற்கையாக பேசுகிறார். அந்த செயற்கைதனம் ஒன்பது படங்களிலும் உள்ளது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் பொறாமை எல்லாம் ஒரு பிரச்சனையா? மக்கள் தினம் தினம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்,
பொருளாதாரத்தில் வாழ்வே பறிபோகிறது. தினசரி ஒருவன் பல துரோகங்களை சந்திக்கிறான், பல உணர்வுகள் அவன் வாழ்வில் அலை போல வந்து மோதிக்கொண்டிருக்கிறது. ஒரு மகிழ்ச்சிக்கு பின்னாலேயே ஒரு துக்கம் தொற்றிக்கொள்கிறது. உலகமயத்தில் நிரந்தர உறவுகள் இல்லாமல் தனிமையில் தத்தளிப்பவர்கள் என்று பிரச்சனைகளின் வீரியம் அதிகம் , அதில் 60 களின் உணர்வான “பொறாமை” எல்லாம் ஒரு உணர்வா என்றே ரசிகனுக்கு தோன்றும். “பாயசம்” அந்தக்காலத்தில் சிறந்த கதையாக இருந்திருக்கலாம், ஆனாலும் ரசிகனால் ஓட்டமுடியாது,
இதை அவனால் ஆழமான உணர்வாக பார்க்கமுடியாது. ரசிகன் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துவிட்ட பிறகு, படைப்பாளி பழைய வகுப்பிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்ய? கடைசி காட்சியில் டெல்லி கணேஷ் மகள், அவரை கேவலமான பார்வையில் பார்ப்பாள். நமக்கு இந்தக்கதை பார்த்த பிறகு இதெல்லாம் ஒரு கதையா என்று டெல்லி கணேஷ் மகள் பார்க்கும் பார்வை ஒட்டிக்கொள்கிறது. அந்தப்படத்தை உணர்வதற்கான பார்வை அந்தப்படத்தினுள்ளே உள்ளது.
“ரௌத்திரம்” உழைக்கும் தலித் மக்களின் வாழ்வியலை இன்னும் மோசமான முறையில் சித்தரிக்கும் படம். வடசென்னையை பார்த்தபொழுது, அது ஒரு தொழில்நகரம் என்று தெரிந்தது. எங்கு பார்த்தாலும் கெமிக்கல் ஆலைகள், இதுவரை வடசென்னையை வெற்றிமாறன் உட்பட யாரும் சரியாக பதிவு செய்யவில்லை.ரஞ்சித் விதிவிலக்கு. ஒரு கருணையின் அடிப்படையில் அவர்களை பார்க்கவேண்டுமா? அவர்கள் வாழ்வில் வறுமை உண்டுதான் என்றாலும் அதை போக்க என்னவேண்டுமானாலும் அவர்கள் செய்வார்களா? வறுமைக்கு எதிராக அவர்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் வண்ணமயமான வாழ்வும் உழைப்பும் அவர்களிடம் உண்டு,.வெறும் சினிமா பார், உல்லாச வாழ்வு இதிலிருந்து உள்ள மூளையிலிருந்து படுக்கையறை காட்சியைத்தாண்டி வேறு யோசிக்க தெரியவில்லை இயக்குனருக்கு. இயக்குனர் லோக்கல் என்று நாம் தெரிந்துகொள்ள கெட்டவார்த்தையை மட்டுமே நம்பியிருக்கிறார். அந்த சிறுவன் ராமகிருஷ்ணனின் நடிப்பும், அந்த தங்கையின் நடிப்பும் ஆறுதல்.
இந்த ஒன்பது படங்களில் சித்தார்த் படம் கொஞ்சம் ஆறுதல், இருந்தாலும் மக்களுக்கு ஒன்றாத கதையம்சம் தான். இசுலாமிய அடிப்படைவாதிகளின் “ஜின்” செய்வினைகளை பொய் என்று போகிற போக்கில் கேள்விக்கு உட்படுத்துவதால் கொஞ்சம் முற்போக்கான கதை என்று சொல்லலாம். மற்றபடி ஒரு பழிவாங்கும் கதை,
மற்றக்கதைகளுக்கு இந்தக்கதை கொஞ்சம் பரவாயில்லை.
ஒரு மேட்டுக்குடியின் பார்வையிலிருந்து மகள் செண்டிமெண்ட், தனிநபர் உணர்ச்சிகள் என்று “கன்னத்தில் முத்தமிட்டாள் ” படத்தில் மணி சார் இயக்கி இருப்பார். அவரின் அரசியல் படங்கள் பெரும்பாலும் அரசியலை தனிநபர் உணர்விலிருந்து காயடிக்கும். இவர் வீட்டுக்குள் மோட்டு வளையத்தை பார்த்துக்கொண்டே, ஈழத்தை தன் மூளைக்குள் கொண்டுவருவார் மணி சார். அதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல “குட்டி மணி” கார்த்திக் சுப்புராஜ். மனித உயிருக்கும், நாயின் உயிருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பவனை போல ஈழத்தின் போரில் ஒரு சிறுவன் இருக்கிறானாம்? என்னும் பாத்திரப்படைப்பிலிருந்து குட்டி மணி சார் வீழ்ச்சி தொடங்குகிறது. ஒரு நாயின் உயிரை காப்பாற்ற ஒரு போராளியின் உயிர் பணையம் வைக்கப்படுகிறது.
இந்த நாய் நேயம் எல்லாம் பொதுவாக மேட்டுக்குடி சிந்தனை மரபு, அதுவும் ஒரு உயிர்தானே என்று வக்காலத்து வாங்கக்கூட சிலர் கிளம்பக்கூடும். ஒரு நாயின் மேல் பரிவு என்பது இங்கு விடயமல்ல, ஒரு போர்க்கால சூழலில் வீட்டில் இருக்கும் நாயை காப்பாற்றுவதைக்காக ஒரு போராளி உயிர் கொல்லப்படுகிறது என்பதே அவலம். அந்த ஈழத்தில் நாய்க்காக போராளியை சிக்கலில் அனுப்பும் சிறுவனின் மூளை ஈழத்தை சேர்ந்ததல்ல, குளிர் சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு ஈழத்தை பற்றி கதை எழுதும் இயக்குனரின் மூளை. அந்த சிறுவனும் அவர் தான். வரலாற்றை சமூக புரிதல் இல்லாமல் ஒரு தனிநபர் உணர்ச்சியாக மாற்றுவதில் “குட்டி மணி” கார்த்திக், பெரிய மணிக்கு சளைத்தவர் அல்ல.
அதர்வா படம் இன்னொரு மொக்கை கதை, ஈழத்துக்கு பதிலாக நக்சல் பிரச்சனை அவ்வளவே. இதற்கு மணி சார் தான் கதை.
அரசியல் பிரச்னையை, தனிநபர் தையிரியம், சுடும்பொழுது கைநடுங்குவது என்று சுருக்கி தனக்கு தெரிந்த அரசியல் காயடிப்பதை செய்கிறார் மணி. மணி சார் டச் என்பது, வீரியமாக இருக்கும் பிரச்சனைகளை தனிநபர் பிரச்னைகளாய் சுறுக்குவது. ரோஜா படம் போல இங்கும் அஞ்சலி அதாவாவுக்காக காத்துகொண்டு இருக்கிறாள்.
கடைசியாக “சட்டை மேலே எவ்வளவு பட்டன்” என்னும் வசனம் போல இருக்கும் சூர்யா படம். காதலை காபீ டே யில் இருந்து
இசைக்கு நகர்த்தியுள்ளார் கெளதம். நன்றாக உற்றுப்பார்த்தால் மணி சார், கெளதம் படங்களில் வரும் காதல் கொண்டாடப்படுகின்றன, இல்ல அப்படி ஒரு பார்வை மக்களிடம் பொதுப்புத்தியில் உண்டு.
யோசித்துப்பார்த்தால் காதலில் முதல் நிலை பார்த்துக்கொண்டே இருக்கும் பரவசம் தாண்டி, உறவு முறைகளில் இருக்கும் சிக்கல்களை அவர்கள் பெரிதாக பேசி இருக்க மாட்டார்கள். அப்படி பேசி இருந்தாலும், பெரும்பாலும் மேம்போக்கானதாகவும், பிற்போக்கானதாகவும் இருக்கும். பார்த்தவுடன் வரும் ஒரு வித attraction மட்டுமே இவர்கள் படங்களில் காதலாக வியந்தோதோதப்பட்டு இருக்கும். அந்த அந்த காலகட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் இவர்களைகொண்டாடி இருப்பார்கள் அவ்வளவே. காதலில் இயல்பாக இருக்கும் வர்க்க பிரச்சனைகள் , நம் ஊரில் இருக்கும் சாதி ரீதியான பிரச்சனைகள் எல்லாம் இவர்கள் படங்களில் இருக்காது. இல்லை மார்க்கெட் வேண்டும் என்பதற்காக, வெளியூரில் படமோட வேண்டுமென்பதற்காக வேறு வேறு மதம் இங்கு ஒரு பிரச்சனை என்று வைப்பார்கள்.
பொதுவாக காபி டே, பப் காதல் தான் மணி சார் மற்றும் கௌதம் உடையது. கொஞ்சம் வாசிப்பு, கொஞ்சம் வாழ்வு பற்றிய புரிதல் வந்துவிட்டாலே இதையெல்லாம் காதல் என்று சொல்லமுடியாது? இந்த மண், இந்த மண்ணில் இருக்கும் காதல் பிரச்சனைகள் எதையுமே இவர்கள் எடுத்ததில்லை. அதைத்தாண்டி இளையாராஜா, ரகுமான் என்று பாடல்களில் பாடல்களை படமாக்கும் விதங்களில் இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். அதைத்தாண்டி மக்களின் ரசனை பெரிதாக இல்லாத பொழுதுகளில் இவர்களுக்கான வெளிச்சமும் இங்கு உண்டு. இன்று ரஞ்சித், மாரி செல்வராஜ் என்று ரசிகனின் ரசனை ஓரளவு வளர்ந்துள்ளது. அதைத்தாண்டி மலையாளம், தெலுங்கு என்று ott காலகட்டத்தில் எல்லாரும் படம்பார்க்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் தத்துவம் எடுபடுகிறது. இளைஞர்கள் படிக்கிறார்கள். அந்நியன், ரோஜா, உன்னைப்போல் ஒருவன், பம்பாய், gentle man என்று வலதுசாரி சினிமாவை ரசித்த ரசிகன் இன்று பெருவாரியாக குறைந்துள்ளார்கள். அன்று கொண்டாடிய இயக்குனர்களை இன்று கொண்டாட முடியாத மனநிலை நமக்கு வந்திருக்கிறது.
மக்கள் வாழ்வியலை பேசும் படங்களையே ரசிக்கிறார்கள். மக்கள் வாழ்வில் சந்நிதிக்கும் பொருளியல் உளவியல் பிரச்சனைகளுக்கும் முன் இங்கு முன்வைக்கப்படும் நவரசம் கோமாளித்தனமாக உள்ளது. ஒரு வேளை ரசனை முறை சிறுபிள்ளைத்தனமாக இருந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படைப்பு வரும்பட்சம் ரசித்து இருக்கலாம். இன்று மக்கள் கொரோனா காலகட்டத்தில் உள்ளார்கள், மன இறுக்கம் அதிகமாகிவிட்டது, அந்த கொடுமைகளில் இந்தக்கொடுமை வேறா என்று இரண்டாவது கதை பார்த்தவுடனேயே இந்தத்தொடர் பார்ப்பதை நிறுத்தி விடுகிறார்களாம், கேள்விப்பட்டேன்.