Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நந்தலாலாவில் நொந்தலாலா கையிலைநாதனின் எதிர் வினைக்கு பதில்-1 : லெனின் மதிவானம்

சுமார் எட்டு வருடங்களின் பின் தலைகாட்டியுள்ள நந்தலாலா சஞ்சிகையின் 52 பக்கங்களில் சுமார் 26 பக்கங்களில் கையிலைநாதன் எனது ‘ஆசிரியன்’ பத்திரிகை பற்றிய விமர்சனம் குறித்து நீண்ட கட்டுரையொன்றினை எழுதியிருக்கிறார். அதில் எனது எழுத்துக்கள் தொடர்பிலும் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அச்சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஏனைய ஆக்கங்களும் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நூல்களில் பிரசுரிக்கப்பட்டவையே. அப்படியாயின் இவ்விதழ் தனிப்பட்ட என்னை தாக்குவதற்காகவே வெளிவந்துள்ளது என்பதனை வாசகர் ஒருவர் இலகுவில் புரிந்துக் கொள்ளக் கூடியனவாகவே இருக்கும்.

கட்டுரையாளரின் மனக்குமுறல்களும் நக்கல்களும் எனக்குப் புரிகின்றன. அதே மொழியில் பதிலளிக்க வேண்டும் என எனது பேனையும் உணர்வுகளும் துடிக்கின்றன. ஆனால் ஒரு கோட்பாட்டுத்தளத்தில் நின்று அதற்கான பதிலளிக்க வேண்டிய தேவையை உணர்ந்தவன் என்ற வகையிலும் அத்தகைய நாகரிகத்தையே இதுவரை என் எழுத்துக்களில் கடைப்பிடித்து வந்திருக்கின்றவன் என்ற வகையிலும் அவ்விமர்சனக் கட்டுரைப் பொறுத்து ஒரு கோட்பாட்;டுத் தளத்தில் நின்று பதிலளிக்க வேண்டியுள்ளதை உணர்கின்றேன்.

தனிப்பட்ட பொறாமையுணர்வு கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லைமில்லை என்ற போதினும் அக்கட்டுரையில் இடம்பெறுகின்ற உண்மை சாராத விடயங்களும் திரிபுகளும் மறைப்புகளும் சீர்குழைப்புவாத சிந்தனையுடன் முன்வைக்கப் படுகின்றபோது அது பற்றி தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது.

நந்தலாலாவில் (தீண்டல்-8, 9-ஜுலை 25,2004) கே.கணேஷ் பொறுத்து வெளிவந்த நேர்காணல, பப்பலோ நெருதாவின் புரட்சிகர பக்கங்களையெல்லாம் ஒதுக்கி விட்டு அவரே தன் குறிப்பில் குறிப்பிட்டிருந்த ஒரு பெண்ணுடனான உறவுக் குறித்த சம்பவமொன்றினை ஆதாரமாகக் கொண்டு அவரை காமத்தனாக மட்டுமே கண்டு திருப்தி கொள்ளும் இலக்கிய வகையறாக்கள், கே. கணேஷின் அமைப்பாக்க நடைமுறை, மொழிப்பெயர்ப்பு துறையில் அவர் ஆற்றிய தன்முனைப்பற்ற பங்களிப்புகள் அனைத்தையும் தகர்த்து விட்டு அல்லது அப்பங்களிப்புகளிளால் ஆத்திரமுற்று அவரை வெறும் கோயில் பூசாரியாக மட்டும் காட்ட முனைந்த நந்தலாலாவின் எந்தணிப்பையும் இதனுடன் ஒப்புநோக்க தக்கதொன்றே.

இவர்கள் இடதுசாரி சுலோகங்களையும் கோசங்களையும்- கூடவே அந்த பின்னணியில் முகிழ்ந்த ஆளுமைகளையும் தமக்கு சாதகமாக தூக்கி பிடித்து தம்பட்டம் அடித்து குதியாட்டம் போடுகையில் அவர்களின் வரவு முக்கியமானதாக தோன்றலாம். சற்று ஆழமாக நோக்கினால்தான் அறிந்தோ அறியாமலோ இவர்களில் சிறுமுதலாளித்துவ குணாம்சம் மறைந்திருப்பதனையும் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது சீர்குழைப்புவாத சிந்தனையாக முனைப்புப் பெறுவதையும் காணலாம். அவ்வம்சம் புதிய தலைமுறையினரை குழப்பி திக்குமுக்காட வைக்கக் கூடிய நச்சுத் தன்மைக் கொண்டது. எனவே சில முனைப்புற்ற விடயங்களை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

என் மீதான கட்டுரையாளரின் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ சிறுகதை பேராசிரியர் க. கைலாசபதியால் நாடகமாக்கபட்டுள்ளது பற்றிய தகவலாகும். இத்தகவலை நான் இ.முருகையனின் கைலாசபதி பற்றிய கட்டுரைகளிலிருந்தே பெற்றேன். வாசகர்களின் நலன் கருதி அப்பந்தியை இ;ங்கு குறித்துக் காட்டுகின்றேன்.

‘இக்காலத்திலே (றோயல் கல்லூரியில் மாணவராயிருந்த காலத்தில்-கட்டுரையாசிரியர்) கைலாசபதி ஒரு படைப்பாளியாகவும் தோற்றம் காட்டினார். கவிதைகள் சிலவற்றையும், சிறுகதைகள் சிலவற்றையும் அவர் ஆக்கினார். நாடகங்களும் எழுதினார். இவை வானொலியில் ஒளிப்பரப்பாகின. 30, 40 நாடகங்கள் இவர் எழுதினாரென இவரே சொல்லக் கேட்டிருக்கின்றேன். சேக்ஸ்;பியரின் ‘றறெம்பெஸ்ற்’ என்னும் நாடகத்தை வானொலிக்கென தமிழாக்கி ஒரு தொடராக ஒலிபரப்பச் செய்துள்ளார். ஒரு நத்தார் பெருநாளையொட்டி ‘கல்லறைக்கு எதிரில்’ என ஒரு நாடகம் ஆக்கினார். புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ கைலாசின் கையிலே ஒரு வானொலி நாடகமாயிற்று. ‘குரல்கள்’ என்னும் மகுடமிட்ட வேறொரு நாடகம் ஒரு விதத்திலே பரிசோதனை முயற்சியாய் அமைந்தது.’

இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு எனது குறிப்பு பின்வருமாறு அமைந்திருந்தது.

‘கைலாசபதி தனது ஆரம்ப காலங்களில் கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் போன்ற படைப்பிலக்கியங்கள் சிலவற்றினையும் எழுதியுள்ளார். அவரது பெரும்பாலான நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. நத்தார் பெருநாளையொட்டி ‘கல்லறைக்கு எதிரில்’ என ஒரு நாடகம் ஆக்கியுள்ளார். அவ்வாறே புதுமைபித்தனின் கபாடபுரம் கைலாசபதியால் நாடகமாக்கப்பட்டுள்ளது. ‘குரல்கள்’ என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார் எனக் கவிஞர் முருகையன் குறிப்பிடுகின்றார்.’

(துணைநூல் பட்டியலில், கைலாசபதி ஆய்வு வட்டம் (தொகுப்பு), கைலாசபதி- தளமும் வளமும், கைலாசபதி ஆய்வு வட்டம், கொழும்பு,2005. என நூல் பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன)

ஆக கைலாசபதி ஆரம்கால காலங்களில் இத்தகைய பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்ற தகவலையும் மேலும் அத்தகவல் முருகையனிலிருந்து பெறப்பட்டது என்பதனையும் குறிப்பிட்டிருந்தேன். கைலாசபதி தொடர்பாக முக்கிய பதிவுகளை வெளிக்கொணர்ந்த முருகையனின் தகவல் இலகுவில் புறக்கணிக்கதக்கதல்ல. அவர் தமது குறிப்பில் புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் எனத் தெளிவாகவே குறிப்பிடுவதை ஞாபகமறதியில் குறிப்பிட்டதாக மட்டும் அர்த்தப்படுத்த முடியுமா? அப்படியாயின் அவர் வழங்கிய கைலாசபதி பற்றிய ஏனைய தகவல்களும் அத்தகைய தவறுகளுக்கு உட்பட்டதா? என்பதெல்லாம் முக்கியமான கேள்விகளாகும்.

கைலாசபதியால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்ததாக கூறப்படும் நாடகத்தை கேட்கவோ அல்லது அதன் பிரதியை பார்க்கவோ கிடைக்காமையினால் அது பற்றிய கருத்துக்கள் எதனையும் என்னால் முன் வைக்க முடியவில்லை. அந்நூல் அடிப்படையில் கைலாசபதியின் பல்துறைசார்ந்த ஆளுமை பற்றிய அறிமுக நூலே. மேலும் கைலாசபதியின் புதுமைபித்தன் பற்றிய விமர்சனம் மிக முக்கியமான ஒன்றாகும். புதுமைப்பித்தனின் பற்றிய விமர்சனத்தை காத்திரமாக முன் வைத்த கைலாசபதி அவரது பலமான பக்கங்களையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை என்பதை கைலாசபதியின் முழுமையான கட்டுரைகளை வாசிப்பதால் தெரிந்துக் கொள்ள முடியும்.

இ;து தொடர்பாக கையிலைநாதனின் கூற்று இப்படியாக அமைந்திருந்தது:

முருகையனின் கூற்றுப்பிரகாரம், நோக்கினால் கைலாசபதி பயணித்த பாதையின் அடித்தள ‘பரப்பகலம்’ தெளிவாகின்றது எனலாம். ஓர் கறாரான, செறிவுமிக்க இலக்கிய கண்ணோட்டத்தை தான் வந்தடைய, கைலாசபதியின் ஆரம்ப படிநிலை தவிர்க்க முடியாதபடி அவரது மாணாக்கர் காலத்திலேயே எப்படி இலக்கியத்தின் பரந்துப்பட்ட விடயங்களைத் தொடுவதாகவும் மேலும், பரந்துப்பட்ட விவகாரங்களை அலசி ஆராய்ந்து முயன்று பார்த்திருக்கக்கூடிய ஓர் விஸ்தாரமான அடித்தளத்தை கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது அமைந்திருக்கவே வேண்யிருக்கின்றது என்பது போன்ற முடிவுகளுக்கு வந்து சேரலாம். இது, கைலாசபதியின் ஆளுமைக்கு சிறப்பும் அணியும் சேர்க்கும் விடயமாகும். இதற்கு எதிர்மாறாய், மறுப்புறத்தில் திரு. மதிவானின் மொட்டையான கூற்றுப்பிரகாரம் பார்த்தால், ஒன்று ‘தமிழ் நாவல் இலக்கியத்தை’ ஆற்றிய கைலாசபதி ‘கபாடபுர’த்தை நாடகமாக்கினார் என்பது நிகழ முடியாத பொய் என்றாகின்றது’

என, எனது கூற்றிலிருந்த ‘கைலாசபதி தனது ஆரம்ப காலங்களில் கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் போன்ற படைப்பிலக்கியங்கள் சிலவற்றினையும் எழுதியுள்ளார்’ என்ற வசனத்திலிருந்த ‘ஆரம்ப காலங்களில்’ என்ற சொல்லை மறைத்துவிட்டு முருகையனின் கூற்றையும் எனது கருத்துக்களையும் வௌ;வேறு துருவங்களாக்கி சதுரங்க காய்களை நகர்த்தி செல்கின்றார் கையிலைநாதன்.

முருகையன் சொன்னால் அது முற்போக்கானது. நான் சொன்னால் அது பிற்போக்கானது. இவ்வம்சம் ஆய்வு முறையியலை இவர் விளங்காதவராக இருக்கின்றார் என்பதுடன் மட்டும் பொறுத்திப் பார்க்க முடியாது. இத்தகைய விமர்சனங்களையெல்லாம் கையிலைநாதன் போன்றோர் ஏன் முருகையன் உயிரோடு இருந்த காலத்தில் முன் வைக்கவில்லை என்பதும் சுவாரசியமான வினா தான். அது போக, இவரின் விமர்சனம் உள்நோக்கம் கொண்டே முன் வைக்கின்றார். குறிப்பாக என் ஆய்வுகள் மீதான காழ்ப்புணர்வினாலும் மனக்குமுறலாலும் இத்தகைய இலக்கிய பித்தலாட்டங்களில்; ஈடுபடுகின்றார் என்பதை இவர் அடிக்கடி பெரும் மதிப்புக் கொண்டு குறிப்பிடும் தீவிர வாசகனால் மட்டுமன்று சாதாரண வாசகனாலும் இலகுவில் புரிந்துக்கொள்ள முடிகின்றது.

கைலாசபதியின் பல்கலைக்கழகம் சார்ந்த பங்களிப்பை குறிப்பிடுகின்ற போது பல்கலைக்கழகத்தில் தன் ஆளுமையை எவ்வாறு விருத்தி செய்துக் கொண்டார் என்பதையும், படைப்பூக்கத்தை விரிவுப்படுத்துபவராக, சமூகக் களத்தையும் கல்வி புலத்தையும் விரிவுப்படுத்துபவராக, முகாமைத்துவ ஆளுமைக் கொண்டவராக எவ்வாறு செயற்பட்டிருக்கின்றார் என்பதையும் அந்நூலில் குறிப்பிட்டிருந்தேன். அவரது வளாகத் தலைவர் பதவி என்பது சக இடதுசாரி நண்பர்களின் ஆலோசனைப் பேரிலே அதனை ஏற்க வேண்டியிருந்தது என்பதை சுபைர் இளங்கீரன் பதிவாக்கியிருக்கின்றார். பின் அப்பொறுப்பை ஏற்ற கைலாசபதி அப்பதவியை ஏனோதானோ என நினைத்து வெறும் வருமானத்தை பெறும் இடமாகக் மட்டும் கருதாமல், அச்சந்தர்ப்பத்தை சமூகம் சார்ந்த மேம்பாட்டிற்;காக பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் எனது நூலில் குறிப்பிட்டிருயிருந்தேன். வளாகத் தலைவர் பதவி கைலாசபதிக்கு தனிப்பட்டவகையில் எத்தகைய நட்டங்களை உருவாக்கியிருந்தது என்ற விடயமும் அந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவரது பதவி காலம் முடிந்து அதேசமயம் சர்வதேச முதலாளித்துவம் ஆட்சிக்கு வந்த போது கைலாசபதி எத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்டார்; என்பதை கைலாசபதியின் துணைவியார் சர்வமங்களம் மற்றும் அவருடன் நெருக்கம் கொண்டிருந்த நண்பர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இக் கூற்றினை தனக்கு சாதமான வகையில் திரித்துக்கொள்கின்ற கையிலைநாதன் நான் கைலாசபதி பதவிக்காக தேசிய முதலாளித்துவத்தை ஆதரித்திருந்தார் எனக் காட்ட முனைவதாக தனது தூரிகை கொண்டு புதியதொரு சித்திரத்தை ஆக்க முனைகின்றார். தேசிய முதலாளித்துவம் பற்றிய கைலாசபதி விமர்சனம் எத்தகை தெளிவான பார்வையை கொண்டிருந்தது என்பதை எனது கைலாசபதி பற்றிய நூலிலும் மற்றும் ஜீவநதியில் (இதழ்-2010) வெளிவந்த ‘இலங்கையில் உலகமயமாதலின் ஊடுறுவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி’ (செம்பதாகையில் அவர் புனைப்பெயர்களில் எழுதிய உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் குறித்த கட்டுரைகள்) என்ற கட்டுரையில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கின்றேன்.

வரையறுக்கப்பட்ட வாசகரான கையிலைநாதன் அதனை வாசித்திருந்தாலும் என் மீது கொண்ட காழ்ப்புணர்வு காரணமாக இத்தாக்குதலை மேற்கொண்டிருப்பார் என்பது எதிர்பார்க்கக் கூடியதொன்றே.

சிங்கமலை சிறுகதையும்
மந்திர யதார்த்தவாதமும்

ஆசிரியன் பத்திரிகையில் கையிலைநாதனின் ‘சிங்கமலை’ என்ற சிறுகதையும் இடம்பெறுகின்றது. மனித முன்னேற்றத்திற்காக ஆசிரியராக பணிப்புரிந்த கிறித்தவ பாதிரியார் ஒருவரின் சமூக பங்களிப்பை எடுத்துக் கூறுவதாக இக்கதை அமைந்துள்ளது. அவரது ஏனைய கதைகளுடன் ஓப்பிடுகின்றபோது இக்கதை உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவத்தினை பெறவில்லை என்றே கூற வேண்டும். தான் எடுத்துக் கொண்ட விடயத்தினை வாசகனின் உணர்வில் உணர்த்தி வைப்பதற்கு பதிலாக அறிவித்து வைப்பதாகவே கதை அமைந்துள்ளது. கதையை மூன்று நான்கு முறை வாசித்தவுடன் தான் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இவ்வம்சம் இக்கதையில் மிக முக்கியமான குறைப்பாடாக தெரிகின்றது. ஆசிரியர் ஒருவரின் ஆளுமையை மற்றும் மக்களை நேசிக்கும் பண்பை அழகுற சித்திரித்துக் காட்டுவதாக யோ. பெனடிக் பாலனின் ‘லூக்காஸ் மாஸ்டர்’ என்ற கதை அமைந்துள்ளது.

மேலும் வரும் பின்வரும் பந்தி இவ்வாறு அமைந்திருக்கின்றது.

‘சிங்கத்திடம் முனகளுடன் வினவினேன்: ‘இவர் அப்படி இல்லையே என்று. சில வினாடிகள் மௌனித்திருநத்து சிங்கம். பின், உடம்பையும் உடையையும் விடு. அது சாமான்யர்களுக்கு. எனக்கு உயிரும் உயிர்ப்பும் தான் முக்கியம் என்று முனங்கியது. ‘யார் நீ என்றேன் மெதுவாக’. அவனில் ஒரு பாதி என்ற சிங்கம் வானை நோக்கி நெடும்மூச்செறிந்தது.’

இந்த கதைக் கூறும் உத்தி எந்த பாணியை சேர்ந்தது?; அவை மெஜிகல் ரியலிச கூறுகளை தன்னகத்தே கொண்டிருப்பதை சித்தப்பிரமைக்கு ஆட்படும் அவரது தீவிர வாசகனகனால் உணர முடியாமல் இருப்பது வேறுவிடயம். ஆனால் சராசரி வாசகனகனால் சாதாரணமாகவே புரிந்துக் கொள்ள முடியும்.

அந்த கதையில் வருகின்ற மெஜிகல் ரியலிச பாணி மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் முழுமை பெற்றிருக்கலாம் என்பதே எனது கருத்தாக இருந்தது. அதற்கு உதாரணமாக நான் வாசித்து அறிந்திருந்த கென்யா நாட்டு எழுத்தாளர் கூகி வோ தியாங்கோவினதும் தமிழ் இலக்கியத்தில் அதனைச் சாத்தியபடுத்திய ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகளையும் உதாரணம் காட்டியிருந்தேன்.

தமிழில் திறமை கொண்ட பல எழுத்தாளர்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வதற்கும் பழைய கதை சொல்லும் முறையையே கையாளுவதற்கும் காரணம் அவர்களது சமூக அனுபவமும் அதனைப் படைப்பாக்கும் திறனும் விஸ்தரிக்கப்படாமையேயாகும். கையிலைநாதனின் கதைகளை பொறுத்தமட்டில் முப்பது வருடங்களுக்கு முன் அவரின் கதைகளின் உள்ளடக்கமும் உருவகமும் எப்படியிருந்ததோ அப்டியே தான் அவரது கடைசிக் கதையான சிங்கமலையும் அமைந்திருக்கின்றது.

இன்று தமிழ் சிறுகதைத் துறையில் முக்கிய கணிப்பினைப் பெற்று வருகின்ற ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் இதுவரை தமிழ் சிறுகதை வளர்ந்து வந்த முறையிலிருந்து தோன்றி புதிய வார்ப்பில் – புதிய மரபில் நடைபோடுவதாக அமைந்துள்ளன. மெஜிகல் ரியலிச அடிப்படையில் வாழ்வைச் சித்திரிக்க முற்பட்ட மக்கள் விரோத படைப்பாளிகள் இலக்கியவானில் கற்பனாவாதச் சிந்தனையில் பவனி; வந்தனர். இன்றைய சூழலில் மெஜிகல் ரியலிசத்தை மாத்திரமன்று யதார்த்தவாதத்தை கூட சமூகமாற்றத்தை சிதைக்கும் வகையில் பின் நவீனத்துவவாதிகளால் தூக்கி பிடிக்கப்படுகின்றது. இதற்கு மாறாக முற்போக்கு படைப்பாளிகள் வாழ்க்கையின் பன்முகப் போக்குகளையும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும் வளர்ச்சிப் போக்குகளையும்; படைப்பாக்க தவறவில்லை. முற்போக்கு மார்க்சியப் படைப்பாளர்கள் யதார்த்த பாத்திரப் படைப்புகளை அவர் சிருஷ்டித்துள்ளார்- மக்களை விடுதலை நோக்கி நகர்த்திச் செல்லும் வகையில் அவர் பாத்திரப்படைப்புகளை வார்ப்புச் செய்துள்ளார்.

அதே சமயம் கற்பனைப் பாத்திரங்களை உருவாக்குகின்ற போது கூட அவற்றினை சமுதாயப் பின்புலத்தில் வைத்துப் படைப்பாக்கத் தவறவில்லை. ‘கதையின் தலைப்பு கடைசியாக இருக்கக் கூடும்’ என்ற கதை இதற்குத் தக்க எடுத்துக் காட்டாகும். இக்கதை இந்திய அரசியல் பின்புலத்தில் நின்று கொண்டு மெஜிக்கல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட கதையாகும். இந்தியச் சமூகத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வாழ்வு குறித்து இக்கதை அமைந்துள்ளது. கதை சொல்லும் பாணியில் இவற்றில் பவணி வருகின்ற பாத்திரங்கள் யாவும் இன்றைய விடுதலையை நாடும் அதே நிலைக்குரிய பாத்திரங்களை மறுவாசிப்புச் செய்ய ஏதுவாக உள்ள புனைகதை ஏற்பும் சமூகமாற்றத்திற்கான உந்தலும் முற்போக்கு இலக்கியத்திற்கு மாத்திரமன்று, முழுத் தமிழ் இலக்கியத்தையும் செழுமைப்படுத்துகின்றது. அப்படைப்புகள் இயல்பாகவே விடுதலை மார்க்கத்தை நோக்கிய இயங்காற்றலைத் தோற்றுவிக்கும் பண்பினைக் கொண்டமைந்துள்ளது.

இவ்வாறே, கென்யா நாட்டு எழுத்தாளர் கூகி வோ தியாங்கோவின் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’, ‘கறுப்பின மந்திரவாதி’ ஆகிய நாவல்களில் கையாளப்பட்ட இலக்கிய உத்தி நினைவுக்கு வருகின்றன. கூகி தமது நாவலில் மெஜிகல் ரியலிச கலையாக்க உத்தி முறையை எவ்வாறு மக்கள் சார்பான இலக்கிய உத்தி முறையாக மாற்றி வெற்றிப்பெற்றிருக்கின்றார் என்பதை அவரது நாவல்களை வாசித்து உணரக் கூடியதாக உள்ளது.

கூகி பிறந்து வளர்ந்த கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யா, இயற்கை வளங்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டை பிரித்தானியர் தமது காலனித்துவ ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்த போது அந்நாட்டை மீட்பதற்கான சுதந்திரப் போராட்டங்கள் எழுந்தன. இந்தச் சூழலில்; ‘மாவ் மாவ் இயக்கம்’ என பிரித்தானியரால் அழைக்கப்பட்ட ‘மண் மீட்புப் படை’, கென்யாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது. மக்கள் போராட்டங்களின் ஊடாகவும் பல்லாயிரக்கணக்கான உயிர்த்; தியாகங்களுடனும் மீட்டெடுக்கப்பட்ட நாட்டை பின்வந்த உள்நாட்டு இடைத் தரகர்களால் எவ்வாறு ஏகாதிபத்திய சக்திகளுக்கு காட்டிக் கொடுத்தார்கள் என்பதனையும் அதற்கு எதிரான மக்களின் கலகக் குரல்களும் எதிர்ப்புகளும் சூழ் கொண்டனதென்பதையும்; இவ்விரு நாவல்களும்; அழகுற எடுத்தக் காட்டுகின்றகின்றன.

சிலுவையில் தொங்கும் சாத்தான் என்ற நாவலில் நவீன திருட்டிலும் கொள்ளையிலும் பேர்போன ஏழு நிபுணர்களை தேர்ந்தெடுப்பதற்கான மாபெரும் விருந்து கற்பிதம் செய்யப்படுகின்றது.

இவ்விருந்தில் கலந்து கொள்கின்ற செல்வந்தர்களும் தொழில் அதிபர்களும் போட்டியில் வெற்றிபெறுவதற்காக தாம் மக்களையும் நாட்டையும் எவ்வாறு கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையைப் பெற்றுக் கொண்டோம் என்பதனையும், கூடவே ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளையடிப்புக்கும் திருட்டுக்கும் எவ்வாறு துணைபோகின்றோம் என்பதனையும் ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு எடுத்துரைக்கின்றார்கள். இவ்வாறு கென்யா நாட்டு மக்கள் மீதான சுரண்டலையும் ஒடுக்கு முறைகளையும் அந்நாட்டில் தோன்றிய இடைத்தரகர்கள் ஊடாக, அதிலும் அவர்களின் பெருமையை பேசுவது போல அங்கத தொனியில் வெளிக்கொணர்கின்றார் நாவலாசிரியர். கூகியின் நாவல்கள் பொது மக்களால் பெரிதும் போற்றப்பட்டன. இந்நாவல் எவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது என்பது குறித்து ஆதவண் தீட்சண்யா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

‘சிலர் எழுதிய தாள்கள் மலம் துடைக்கவும் தகுதியற்றதாக அருவருப்பூட்டும். ஆனால் சிறையிலடைக்கப்பட்ட கூகி அங்கு மலம் துடைக்கும் தாளில் ஒரு நாவலை எழுதி முடிக்கிறார். அது நாட்டின் வயல்வெளிகளிலும் அடுப்படிகளிலும் தெருமுனைகளிலும் மதுபான விடுதிகளிலும் வரிக்குவரி வாசிக்கப்படுகிறது. மதுபான விடுதியில் வாசித்து காட்டுறவனின் கோப்பை காலியாகிற போதெல்லாம் என் கணக்கில் அவனது கோப்பையை நிரப்பு என்று கூட்டத்திலிருந்து யாரோ ஒருவன் செலவழிக்கிறான், கூகியின் எழுத்தைக் கேட்பதற்காக. தமிழில் அப்படி வாசிக்கப்படும் உக்கிரமான முதல் படைப்பு என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற எளிய ஆசையை அகங்காரம் துளியுமின்றி இவ்விடத்தில் வெளிப்படுத்துகின்றேன். எனக்கு முன்பாகவே யாருடைய எழுத்தேனும் வாசிக்கப்படுமானால், வாசித்துக்காட்டுகிறவரின் கோப்பை என் செலவில் தளும்பி வழியும் -என் மகிழ்வைப்போல’

கூகியின் நாவலில் கையாளப்பட்ட இந்த இலக்கிய உத்தி-நுட்ப முறையை பாரதி முதல் ஆதவன் தீட்சண்யா வரையில் கையாளப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வரலாற்றை நுண்ணியத்துடன் நோக்குபவர்களால் புரிந்துக் கொள்ள முடியும். அவ் வுத்தி முறை தழிழக்குள் சாத்தியப்பட்டுள்ளது என்பதையே இந்த பரிசோதனை முயற்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

இத்தகைய விமர்சனத்தை ஆதாரமாகக் கொண்டு நான் யதார்த்தவாதத்தை நிராகரித்துவிட்டு மெஜிகல் ரியலிசத்தை முன்மொழிவதாக கூறி மெஜிகல் ரியலிசத்தை சமூகமாற்றத்திற்கு எதிராக பாவித்த எழுத்தாளர்களையெல்லாம் உதாரணமாக தூக்கிப் பிடிக்கின்றார். அவர் உதாரணம் காட்டுகின்ற மெஜிகல் ரியலிச எழுத்தாளர்களான ஃபிரான்ஸ் கப்கா, சல்மான் ருஷ்ட்டி, காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், Alejo Carpentier, Marcos, Franz   என இன்னும் இது போன்ற பலரின் பட்டியலை நீட்டிச் செல்கின்றார்.

இவர்கள் அனைவரiயும் ஒரே தளத்தில் வைத்து நோக்குவது எந்தளவு பொருத்தமானது என்பதும் சுவாரசியமான கேள்வி தான். எடுத்துக்காட்டாக காப்ரியல் மார்க்குஎஸ் எழுத்துக்களில் சமூகம் சார்ந்த பக்கம் எவ்வாறு முளைவிட்டிருந்தது என்பதனையும் அவரது எழுத்துக்கள் ஃபிடல் காஸ்ரோ போன்ற தலைவர்களுக்கு எவ்வாறு ஆதர்சனமாக விளங்கியது என்பதனையும் கையிலைநாதன் அறியாதது துரதிஸ்டமானதொன்றே. ஃபிடல் காஸ்ரோ காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் பொறுத்து ‘காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் எழுத்துக்கள் யாவும் ஆத்மார்த்தமான- போலிதனங்கள் அற்ற இலக்கிய படைப்புகளாகும். அவை எப்போதும் உண்மைக்கு மாறானதாக இருந்ததில்லை. அவரது லத்தின் அமெரி;க்கா சார்ந்த படைப்புகள்; ஆத்மார்த்த உணர்வும் விசுவாசமும் உண்மைத் தன்மையும் கொண்டதாக விளங்குகின்றது. அவை முற்போக்கு சிந்தனையின் அதாரமாக அமைந்துள்ளன’ (The Guardian, Tuesday 14 October 2003) எனக் குறிப்பிடுகின்ற அவர் மார்க்குவெஸின் முக்கிய படைப்புகளில் ஒன்றான ‘“One Hundred Years of Solitute” ‘ நாவலின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்காட்டத்தவறவில்லை.

இது இவ்வாறிருக்க, முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் தோற்றம் பெற்ற வந்த யதார்த்தவாதம் பாட்டாளிவர்க்க விடுதலைக்கு துணையானபோது முதலாளித்துவம் மெஜிகல் ரியலிச பாணியை கையாண்டு அதனை தகர்ப்பதற்காக பயன்படுத்திக் கொண்ட இலக்கிய உத்தி என்பதை நாம் அறிவோம். அதேசமயம்; அவற்றினை மக்கள் சார்பு இலக்கிய படைப்பாளிகளும் சமூகமாற்றத்திற் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தவறவில்லை. எடுத்துக் காட்டாக பாரதியின் The Fox with the Golden Tail ( பொன் வால் நரி) என்ற கதை மெஜிகல் ரியலிச பாணியை கொண்டது என்பதை நாம் அறிவோம்.

ஐரோப்பிய நாடுகளில் யதார்த்தவாதம்; எவ்வாறு அந்நாட்டுக்குரிய இலக்கிய போக்காக திகழ்ந்ததோ அவ்வாறே லத்தின் அமெரிக்க நாடுகளில் மெஜிகல் ரியலிஸம் முனைப்புற்ற இலக்கிய போக்காக இருந்ததுள்ளது. இந்த இலக்கிய செல்நெறியை வரலாற்று அடிப்படையிலும் இயக்கவியல் அடிப்படையிலும் உணரத் தவறியதன் வெளிப்பாடே கையிலைநாதன் இத்தனைப் பக்கங்களை வீணடித்து தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கின்றார்.

உண்மையில் கையிலைநாதன் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று மார்க்சிய மூலவர்களை (இவர் கைலாசபதி வரையில் வந்ததே ஆச்சரியமானதொன்று தான்) கடவுளர்களாக்கி வெறும் சுலோகங்களுக்குள் மட்டுமே முடங்கி போனவராக இருப்பதனால் இவரால்; யதார்த்த சுழலுக்கு ஏற்றவகையில் இலக்கியத்தின் உள்ளடக்கம்-உருவகம் பற்றிய மாற்றங்களை காண முடியாமலிருக்கின்றது. முற்போக்கு இலக்கியத்திற்கும் அழகியல் பிரச்சினை உண்டு. காலத்திற்கு ஏற்ற வடிவத்தை மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் படைப்பாக்கித் தர வேண்டியது முற்போக்கு- மார்க்சிய படைப்பாளியின் கடமையாகும்.

Exit mobile version