நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் காற்றில் திசைமாறி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்த, இரு இலங்கை மீனவர்களை மீட்டு, இந்திய கப்பற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடியக்கரையில் உள்ள இந்திய கடற்படை முகாம் வீரர்கள் வியாழக்கிழமை காலை கடல் பரப்பில் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் கடலில் நின்ற படகில் இருந்த 2 பேரை மீட்ட கடற்படையினர், அவர்களது படகையும் படகுத் துறைக்கு கட்டி இழுத்து வந்தனர்.
இவர்கள் இலங்கை, யாழ்பாணம் மாவட்டம், பருத்தித் துறையைச் சேர்ந்த அப்புலிங்கம் மகன் சந்திரமோகன் (37), வல்வெட்டித்துறை, அம்மன்கோவிலடி ரெத்தினவேல் மகன் ரவிச்சந்திரன் (57) என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை திக்கம் கடற்கரையில் இருந்து கண்ணாடி இழைப்படகு ஒன்றில் கடலுக்குள் சென்றுள்ளனர்.கடல்வளம் பெரு வணிகர்களால் அபகரிக்கப்படும் போது வாழ்விற்காகப் போரடும் ஈழத் தமிழ் மீனவர்கள் இவர்கள்.
படகில் எரிபொருள் தீர்ந்ததால், படகை இலங்கைக்கு செலுத்த முடியாமல் போனதால் காற்றின் வேகத்தில் திசைமாறி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், அவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய பாஸ்போர்ட் விதிகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.