Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

த்ரிஷ்யம் 2: குற்றம் புரிதலின் அழகியல்-பேராசிரியர் ராஜ்

எல்லா குற்றவாளிகளும் ஏதோவொரு தடயத்தை விட்டுச் செல்வார்கள் என்றவொரு குறிப்பு தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் வரும். த்ரிஷயம் 1–இல் குற்றவாளி விட்டுச் செல்லும் தடயம் என்று எதுவுமிருக்காது. இது குற்றமும் விடுதலையும் பற்றியது. ஆனால் குற்றத்தை பார்த்த ஒரு சாட்சி த்ரிஷயம் 2‌ –இல் வருகிறான்.
அவனுடைய துணை கொண்டு குற்றத்தின் முடிச்சியை அவிழ்ப்பது தான் படத்தின் திருப்புமுனை. ஆனால் அதற்கு முன்பே குற்றவாளியை போலீஸ் பாதி நெருங்கியிருக்கும். ஜார்ஜ் குட்டியின் வீட்டின் படுக்கையறை வரை ஒட்டுக் கேட்கப்படும். பொதுவாக கொலைப்பழி போன்றதொரு குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது அந்த நகரத்தை விட்டு வெளியேறுவதை தான் ஒரு சராசரி குடும்பம் கடைப்பிடிப்பதாக இருக்கும். ஆனால் ஜார்ஜ் குட்டி சொந்த ஊரிலே வாழ்வது என்றெடுத்த முடிவுக்கு பின்னால் பொருளாதார நலன் அடங்கியுள்ளது. பழைய கேபிள் டி.வி. ஆபரேட்டர் அல்ல அவர்; தியேட்டர் முதலாளி. அது ஊரில் வாழும் மற்றவர்களிடம் ஒரு அசூயையை ஏற்படுத்தி இருக்கும். அவர்கள் பொச்சரிப்புடன் ஜார்ஜ் குட்டியை கொலைகாரன் என்று பேசத் தொடங்குவார்கள்.
தமிழ்ப்படங்களில் கையை வாயில் பொத்தி தான் வதந்தியை பேசும் காட்சிகள் இடம் பெறுகிறது. ஆனால் பிறர் வாழ்க்கையை அறிந்து கொள்வதிலுள்ள உந்துதல், துப்புதுருவல், ஒட்டுக் கேட்கும் தன்மை, ஒன்றை ஊதிப் பெரிதாக்கும் வேட்கை என்ற அனைத்து சிறிய குணங்களையும் த்ருஷ்யம் 2 காட்சிப்படுத்தி உள்ளது.
ஆண்கள் கூடுமிடமான ஒரு ஹோட்டலில் தான் அதிகமான விவாதங்கள் நடைபெறுகின்றன. அங்கு எல்லோரும் மாறி இருப்பர். ஆனால் ஹோட்டலை நடத்தும் இக்கா மட்டுமே ஜார்ஜ் குட்டி மீது மாறாத சினேகத்துடன் இருப்பார். இக்கா ஓர் இசுலாமியர். கதையின் நாயகனுக்கு மானசீக தோழனாக இக்காவை காட்டுவதில் கடத்தப்படும் பார்வையாளர் நுகர்வு முக்கியமானது. ஜார்ஜ் குட்டி மீது மற்றவர்கள் தங்கள் சந்தேகத்தை வலுப்படுத்தும் போது இக்கா அதை கலைத்து விடுவார். ஒரு வேளை ஜார்ஜ் குட்டியின் குற்றம் இக்காவுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் படத்தின் இந்த பகுதிகளை தேவையற்ற இழுவை என்று மலையாள படங்களை வெறுக்கும் தமிழ் விமர்சகர்கள் எழுதுகிறார்கள். இந்த படம் கவனப்படுத்தி இருக்கும் இன்னொரு முக்கிய விசயம் போலீசின் குணம் பற்றியது.
சிறிய வழக்குக்கே ஒரு முறைக்கு நான்கு முறை வீட்டுக் கதவை தட்டத் தயங்காதவர்கள் கொலை வழக்கு – அதுவும் முக்கியப் போலீஸ் அதிகாரிக்கு எதிரான தீங்கு – என்றால் விட்டுவிட மாட்டார்கள். ஜார்ஜ் குட்டி குடும்பத்துக்கு தொல்லைகள் கொடுத்த வண்ணமே இருக்கிறார்கள். த்ரிஷ்யம் 1 -இல் போலீஸ் விசாரணை சித்திரவதையாகவும், த்ரிஷ்யம் 2‌–இல் அது புலனாய்வு கலையாகவும் வெளிப்படுகிறது. ஆனால் அடக்குமுறை தொடர்கிறது. ஜார்ஜின் வீட்டருகே இன்னொரு வீட்டில் ஒரு போலீஸ் தம்பதி குடியேறி ஜார்ஜ் குடும்பத்தை நோட்டமிடுகிறார்கள். ஜார்ஜின் மனைவிக்கு பெண் போலீஸ் நெருக்கமாகி அக்குடும்பத்தின் பதற்றத்தை மட்டுமல்லாமல், கொலை செய்ததையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இது தங்கள் விசாரணை சரியான பாதையில் செல்வதான நம்பிக்கையை போலீசுக்கு ஏற்படுத்துகிறது.
இந்த படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லராக மட்டுமே பார்க்க விரும்புபவர்களுக்கு லாஜிக் ஓட்டைகள் பெரிதாக தெரிகிறது. படத்தின் முக்கால்வாசி நேரம் சும்மா போவதாக நினைக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் இருக்கை முனைக்கு இவர்களை இழுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் தங்கள் ஏமாற்றத்தை வெளியிடுகிறார்கள். ஆனால் இந்த படம் வேறு பல விசயங்களுக்காகவும் முக்கியமானவை.
பெண் விடுதலைக்கு பெண்கள் குழந்தை பெறக் கூடாது என்ற மகத்தான பிரகடனம் கொண்ட ‘பெண்கள் விடுதலை’ கட்டுரையில் தந்தை பெரியார் பெண்கள் குழந்தை பெறாமலிருந்தால் அது ஆண்களின் சுமையையும் போக்கும் என்கிறார். குழந்தை குட்டிகள் இருப்பதாலேயே ஓர் ஆண் யோக்கியமற்ற காரியங்களில் ஈடுபட நேர்வதாக கூறுகிறார். ஆணுக்கு அநாவசியமான பொறுப்பும், கவலையும் அதனால் கூடுவதாக கூறுகிறார். ஜார்ஜ் குட்டியின் கவலை இரண்டு பெண் குழந்தைகளை பெற்றவரின் கவலை. அதிலிருந்தே அவர் அந்த கொலையை மறைக்கும் எல்லா நேர்மையற்ற செயல்களிலும் இறங்குகிறார். ஜார்ஜின் மனைவி ராணி தாங்கள் எதிர் கொண்டிருக்கும் சிக்கல் குறித்து ஜார்ஜ் அலட்சியமாக இருப்பதாக உளவாளி பெண் போலீசிடம் தெரிவிக்கிறார்.
ஆனால் ஜார்ஜ் குட்டி உள்ளூர போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டமிட்டபடியே இருக்கிறார். போலீஸ் விசாரணை ஒரு தனிநபருக்கு என்ன பாதிப்பை விளைவிக்கும் என்பதற்கு ஜார்ஜ் குட்டியின் மூத்த மகள் சந்திக்கும் பிரச்சினைகளில் வெளிப்படுகிறது. அவள் சற்றே மனநிலை குழம்பியபடியும், வலிப்பு நோயின் வாதையாலும், துர்கனவுகளை சந்தித்தபடியும், சதா பீதியூட்டலுக்கு உள்ளாகியபடி காட்சி அளிக்கிறார். த்ரிஷ்யம் – 1&2 மலையாளத் திரைப்படங்களுக்கே உரிய மனித வாழ்வனுபவத்தை மேனிலையாக சித்தரிக்கிறது. கடன் பிரச்சினைகள், மூத்த மகளின் திருமணத் தாமதம் போன்றவை இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் ஒரு சிறிய கர்வத்தை‌ ஜார்ஜ் குட்டிக்கு வழங்குகிறது. தனது இளைய மகளின் கல்லூரி நண்பர்கள் பார்ட்டிக்கு வரும் நாளுக்கு விரிவான ஏற்பாடுகளை மேற்கொள்வார். அப்போது மனைவி அவர்கள் பொருளாதாரப் பிரச்சினையை கூறும் போது தான் இப்போது தியேட்டர் முதலாளி என்பார். கடன் இன்னும் தீரவில்லை என்று மனைவி நினைவுப்படுத்துவார். த்ரிஷ்யம் 2– இன் இறுதிக் காட்சி வித்தியாசமானது. தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை சற்று நெகிழ்த்தி படமாக்கும் முயற்சியின் முதல் படியாக நாவலாக ஒரு முக்கிய எழுத்தாளரின் பார்வையில் அது வெளியாகும். அந்த எழுத்தாளர் விவரிக்கும் நாவலின் காட்சிகள் அடிப்படையில் தான் படம் முடிவமைதி கொள்கிறது.
எது எதார்த்தம், எது புனைவு என்று தீர்மானிக்கவியலாத மீஎதார்த்தம் அதில் துலங்குகிறது. எதார்த்தமும் புனைவும் ஒன்று மற்றொன்றில் மயக்கம் கொள்ளும் ஒரு இடைநிலை ஏரணம் (fuzzy reality) தான் த்ரிஷ்யம் 2– இன் ஈற்றமைதி. ஜார்ஜ் குட்டியின் குடும்பத்துக்கான தண்டனை என்ன? அது உடல் நோவல்ல; உள்ள வேதனை. போலீசின் ஒவ்வொரு அசைவையும், நடவடிக்கைகளையும் கண்காணித்தும், முன்ணுணர்ந்துமாக இருக்க வேண்டிய சாபம். நேரடியாக இல்லாத ஒரு மறைமுகத் தண்டனை. அதனை வாழ்நாளெல்லாம் ஜார்ஜ் குட்டி குடும்பம் சந்தித்தபடியே இருக்க வேண்டும். த்ரிஷ்யம் 2 குற்றம் புரிதலின் அழகியல்.
Exit mobile version