இது தொடர்பான மனுவை நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. சசிகலா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கிரி, “இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அன்பழகனின் வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா, “வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கூடுதல் அவகாசம் கோரப்படுகிறது’ என்றார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், “பதில் மனுவைத் தாக்கல் செய்ய மீண்டும் அவகாசம் கேட்கக் கூடாது’ என்று கூறி மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பெங்களூரில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தனது மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று கோரி க. அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு 2 முறை விசாரணைக்கு வந்தபோதும் சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.