காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட உள்ளது.
காலம் தாழ்த்திய தமிழக அரசின் பேச்சுவார்த்தை, மனிதாபிமான அடிப்படையில் கூட நீர் தரமறுக்கும் கர்நாடக அரசு போன்ற மக்கள் விரோத அதிகார மையங்கள் தம்மை சமூகத்தின் எதிரிகளாக வெளிப்படுத்திக் கொண்டன.
விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் சேரன் கூறுகையில், ”ஜெயலலிதா, ஜெகதீஷ் ஷெட்டர் பேச்சு மூலம் தண்ணீர் கிடைக்கும், அதன் மூலம் சம்பா நெற்பயிர் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் இல்லை என்று கூறியிருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் செயலாகும். உடனடியாக மத்திய அரசு தலையிட்டு கர்நாடக அரசை கலைத்துவிட்டு ராணுவத்தின் உதவியுடன் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும்” என்றார்.
”விவசாயிகளை ஏமாற்றக் கூடாது”: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மன்ற செயலாளர் என்.வி.சுந்தரம் கூறுகையில்,”டெல்டா மாவட்ட சம்பா பயிர்களை காப்பாற்ற இனி மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை, மேல்முறையீடு போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தரக் கூடிய பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். வழக்கு, மேல்முறையீடு என்பதெல்லாம் விவசாயிகளை ஏமாற்றும் செயல்” என்றார்.
பிரதமர் தலையிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் கோட்டூர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ”டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்றவும், விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும் பிரதமர் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டும். சம்பா சாகுபடி யும் இல்லாமல் போனால் விவசாயிகள் குடும்பங்கள் அன்றாட செலவுகளுக்கே திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.” என்றார்.
தண்ணீர் இல்லை என்றால்… நாகை மாவட்ட தேசிய வேளாண் வளர்ச்சி நவீன விவசாய குழு தலைவர் திருவரசமூர்த்தி கூறுகையில், ‘கர்நாடகம் இந்தியாவில்தான் இருக்கிறதா, செயல்படும் மத்திய அரசு என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுத்து சம்பா பயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு யூனிட் மின்சாரம் கூட வெளிமாநிலத்திற்கு அனுப்ப விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக மக்கள் இறங்குவார்கள்” என்றார்.
கர்நாடக மாநில அரசை தட்டிக்கேட்க ஆளில்லை: மன்னார்குடி ரங்கநாதன் கூறுகையில், ”கர்நாடகம் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறது. இதை தட்டி கேட்க கூட ஆள் இல்லை. மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. உள்நாட்டு தண்ணீர் பகிர்வு சட்டம் தெளிவாக உள்ளது. அதற்கு நல்ல சட்ட வலு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் பயிர்களை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும். மும்முனை மின்சாரமும் இல்லாத நிலையில் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது” என்றார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது,
‘தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் முதலமைச்சர்கள் காவிரி பிரச்சினை சம்பந்தமாக பெங்களூரில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது அதிர்ச்சியும், ஏமாற்றமும் தரத்தக்கதாகும். காலம் தவறி செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலாலும் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை என்பதற்கு இந்த பேச்சுவார்த்தை ஒரு உதாரணமாகும். மனிதாபிமான அடிப்படையில் கூட இப்பிரச்சினையை பார்க்காத கர்நாடக அரசின் போக்கு கண்டிக்கத் தக்கதாகும்.’