Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் வந்தால் உயிர்பெறும் தேமுதிக- சுபகுணராஜன்

தேமுதிக எனும் கட்சி இன்றைய விவாதப் பொருளானது. முழுமையாகப் பார்க்கவில்லையெனினும் , அவ்வப்போது பாரக்கவே செய்தேன். விவாதத்தில் யாராவது இந்தக் கட்சியின் அடிப்படையான கோளாறு பற்றிப் பேசுவார்களா என எதிர்பார்த்தேன். நான் கவனித்தவரை, நெறியாளர்கள் உட்பட ஒருவரும் அது குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

மற்றவற்றை விட்டுத் தள்ளுவோம். இந்தக் கட்சி தேர்தல் காலத்தில் மட்டும் உயிர் பெற்று உலவும் கட்சி என்பதுதான் விபரீதம்.

விஜயகாந்த் செயலாக இருந்த போது கூட மிக முக்கியமான கொள்கை சார்ந்த , மாநில உரிமைகள் தொடர்பில் வாய்திறந்ததில்லை. ஏற்கனவே பூஜை புணஸ்க்காரம் நிறைந்த கட்சி என்பதாலும், தேசிய முற்போக்கு என்பதாலும் , எந்தவிதமான ‘திராவிடம் ‘ கொள்கைகளில் மறந்தும் ஒரு வார்த்தை உச்சரித்ததில்லை. ஆனால், விஜயகாந்த் ஒரு விதமான வட்டார/ மொழியுணர்வு கொண்டவர். இயல்பான மொழியில் எதையாவது நல்லதாக சொல்வதுண்டு.

வேதனை என்னவெனில் , ஜெயலலிதா போன்ற முரட்டு எதேச்சதிகாரப் பெண்ணோடு , அரசுடனான உறவால் கிடைத்திருக்கக் கூடிய, சுயலாபம் கருதாமல் கடுமையாக மோதியவர். ஆனால் அதே எதேச்சதிகாரத்தை தேமுதிக வில் செயல்படுத்திய பிரேமலதாவை அவரால் நெறிப்படுத்த முடியவில்லை.
கட்சிப்பதவிகள், சட்டமன்ற , உள்ளாட்சித் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் தேர்வின் போது மட்டுமே களை கட்டும் தேமுதிக. பிரேமலதா மீடியாவில் முழங்குவார். ஒரேமுறை பெற்ற 8% வாக்கு வங்கியை இன்னும், கட்சிக்குள்ளும், கூட்டணிகளிலும் ‘விற்பனைக்கு’ வைத்து ஏலம் விடுவார்.

தேர்தல் காலம் தவிர வேறு எந்தவகையான ( அந்தக் கட்சி நடத்திய கூட்டங்களைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். போராட்டமெல்லாம் தெரியவே தெரிகிறது. நாடு தீப்பற்றி எரிந்தாலும் அபூர்வமாகவே அறிக்கை வரும் ) அரசியல் செயல்பாடுகளும் இல்லாத கட்சி இப்போது ‘செல்லாக் காசாகி’ விட்டது.

இப்போது அம்மையார் , ஊசிப் போன தயிர் சாதத்தை , தேவாமிர்தமென கூவி விற்கிறார். கொள்வாரில்லை.
தேசீய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் நூற்றுக்கும் மேலான ஜோசிய ஆலோசனைகளின் பேரில் துவங்கப்பட்டது தேமுதிக.
விஜயகாந்த் எனும் ஒரு தனிநபரின் ஒருநாளைய பொதுப்புத்தி சார்ந்த நற்பண்புகளால் உருவான கட்சி தேமுதிக. கொள்கை, கோட்பாடுகள் அவரே அறியாதவை. அறிந்து கொள்ளும் அக்கறையற்ற எளிய மனிதர். அவருக்கு அவரது வாழ்வே, சத்தியம், தத்துவம், உன்னதம்.

தேர்தலுக்காக மட்டும் இயக்கமுறும் கட்சிகள் இருப்பது தேவையில்லை, முறையில்லை. இது போன்ற கட்சிகள் இல்லாமலாவதே நல்லது.

Exit mobile version