இதுவரை பரோல் மட்டுமே பெற்று தனது சொந்த வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த பேரறிவாளன் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
1991-ஆம் ஆண்டு தமிழகத்தில் வைத்து முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி பேரறிவாளன் உட்பட எழுவர் வேலூர் சிறையில் 28 ஆண்டுகளாக உள்ளார்கள்.
இவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் ஆயுள் தண்டனைக்கைதிகளை அரசியல் சட்டம் 161-வது விதியின் படி மாநில அரசே விடுதலை செய்வதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதாவது ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களை தமிழக அரசே விரும்பினால் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு விடுதலை செய்யலாம் என முடிவெடுத்து அதை ஆளுநருக்கு அனுப்ப, ஆளுநர் அது தொடர்பாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டார்.
இதனையடுத்து பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்தமனு மீதான விசாரணை நேற்று நடந்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா “இவர்களின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளது” என்றார்.
இன்றும் அந்த வழக்கின் விசாரணை நடந்த நிலையில் ”தமிழக ஆளுநரே ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பார். என்றும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார்” எனவும் அறிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலையில் நேற்றைய நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை இன்று மத்திய அரசு எடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவின் சாதனை என பேரறிவாளன் விடுதலையை பறைச்சாற்றுவதற்காக இவர்கள் எழுவரும் தேர்தலுக்கு முன்பாக விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது. ஆனால், எழுவரில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்து விட்டு ஏனைய ஆறு பேரையும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கலாம் என்றும் அரசுக்கு ஒரு யோசனை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.