ஆசியப் பொருளாதாரத்தின் உலகு சார்ந்த புதிய மாற்றம், பிராந்திய அதிகார மையங்களின் புதிய எழுற்சி, மேற்குப் பொருளாதார ஆதிக்கத்தின் பின்னடைவு என்ற சிக்கலான பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் அப்பால் பேரினவாத அடக்கு முறைக்கெதிரான வீழ்ச்சி என்பது சில இலகு படுத்திய பாடங்களைக் கற்றுத்தந்திருக்கிறது.
புலிகள் தமது போராட்டத்தின் ஆரம்பப் காலப் பகுதிகளிலிருந்தே அதிகார வர்க்கங்களுடனான சமரசம் மட்டுமே தமது அரசியற் தந்திரோபாய உக்தியாகக் கையண்டிருந்தனர்.
1980 களின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டின் கட்சி அரசியல் வாதிகளைப் பின்புலமாகக் கொண்டும் அதிகார மட்டத்தில் செல்வாக்கு நிலையிலுள்ளவர்களை ஆதாரமாகக் கொண்டும் தமது செயற்பாடுகளை வளர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், ஐரோப்பிய நாடுகளிலும் இதேவைகையான தமது செயற்பாட்டுத் தளத்தை விரிவு படுத்தியிருந்தனர்.
ஐரோப்பாவின் அரசியல் வாதிகள், சில தன்னார்வ அமைப்புக்களின் உறுப்பினர்கள், வியாபார நிறுவனங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டே புலிகள் அமைப்பின் சர்வதேசச் செயற்பாடுகள் அமைந்திருந்தன. மத்தியதரவர்க்க, படித்த நிர்வாக அமைப்பாளர்களூடாகவும் கட்சிசார் அரசியல் வாதிகளூடாகவம் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடுகளின் ஆதார சக்தியாக புலிகளின் பண வலிமையும் உலக மயப்படுத்தப் பட்டிருந்த அவர்களின் வியாபார அமைப்புக்களுமே அமைந்திருந்தன.
இவையெல்லாம் இராணுவத்தளபாடங்கள் மட்டுமே போராட்டத்தின் ஒரே பலமென நம்பிடிருந்த புலிகளின் தலைமைக்கு அதற்கான இராணுவப் பலத்தை அதிகரிப்பதற்காகவே பயன்பட்டன.
உள்நாட்டில் மட்டுமல்ல அன்னிய தேசங்களிலும் கூட மக்களின் பலத்தையும் மக்கள் சக்தியையும் முற்றாகவே நிராகரித்த அதிகார அரசியல் மீது நம்பிக்கை கொண்டிருந்த புலிகளின் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் புலிகளை மட்டுமல்ல போராட்டத்திற்கான நியாயத் தன்மையையும், உலகெங்குமுள்ள ஜனநாயக, மனிதாபிமான சக்திகள் மத்தியில் சிதறடித்து இனப்படுகொலைக் கெதிரான போராட்டத்தைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது.
G20 நாடுகளின் ஒன்று கூடல் லண்டனில் நிகழ்ந்த போது பிரித்தானிய அரசு அதிர்ந்து போகும் வைகையில் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சமூக உணர்வுள்ள மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நாளில் வன்னியில் இலங்கை அரசு தனது சொந்த மக்களைக் கொசுக்கள் போலச் சாகடித்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறத்தில் பிரித்தானியத் தமிழ் போரம் போன்ற புலி சார் அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் தலைமை தாங்கி நடாத்திய புலம் பெயர் தமிழ் மக்களை மட்டுமே உள்வாங்கிக் கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் பிரித்தானிய மக்கள் மத்தியிலோ, அவர்களைப் பிரதிநித்தித்துவப் படுத்தும் அரசியல் முற்போக்குக் கூறுகள் மத்தியிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது அவ்வாகிரமிப்பை எதிர்த்து “போர் எதிர்ப்பு அணி” பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டது. இவர்கள் நடாத்திய முதல் எதிர்ப்பூர்வலம் மூன்று லட்சம் பிரித்தானிய மக்களைத் தெருவில் இறக்கியிருந்தது. இவ்வணியின் தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சாரங்களும் பிரித்தானியப் பிரதமராகவிருந்த ரொனி பிளேயரின் அரசியல் செல்வாக்கையும், அவரின் மனிதாபிமான பிம்பத்தையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து வந்த தேர்தலில் குறித்த தோல்வியைச் சந்திக்கவும் இது பிரதான காரணமாக அமைந்திருந்தது.
பிரித்தானிய அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோக்கும் சக்திவாய்ந்த இது போன்ற அமைப்புக்களோ, அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்களோ இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இன்று வரை அணுகப்படவில்லை. ஐம்பதாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் கூட அதிகார மையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த புலி சார் அமைப்புக்களின் இந்தச் சிந்தனை முறையும் அரசியலும் தான் எதிர்ப்புப் போரை அதன் தடையங்கள் கூட இல்லாமல் நிர்மூலமாக்கியிருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடத்தப்பட்ட போதெல்லாம் தெருவுக்கு வந்து போர்க்குரல் கொடுத்தவர்கள் தான் தமிழ் நாட்டுமக்கள். 1983 இல் இலங்கையில் இனப்படுகொலை ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த போது நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் நாடே செயலிழந்து போயிருந்தது. இலங்கை அரசின் திட்டமிட்ட இனப் படுகொலைகளை நன்கு அறிந்திருந்த தமிழ் நாட்டு மக்கள் புலிகளை அவ்வடக்கு முறையின் பிரதானமான எதிர்ப்புச் சக்தியாகக் கருதினார்கள்.
மக்களை ஒரு போதும் நம்பியிராத புலிகள் தமிழ் நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை தமக்குச் சார்பாகக் கையாளும் வழி முறையாக இம் மக்கள் எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள, கருணாநிதி, வைகோ, நெடுமாறன் போன்ற சந்தர்ப்பவாதிகள் இலங்கைப் பிரச்சனையை முன்வைத்துத் தம்மை வளர்த்துக் கொண்டனர்.
பிரபாகரன் கொல்லப்பட்டால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு பாயும் என்றவர்களின் கரங்களில், பிரபாகரனோடு ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது கீறல் கூட ஏற்படவில்லை. பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என சூடான, சுவாரஸ்யமான விவாதங்களில் இவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது தடுப்பு முகாம்களில் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம் என வர்ணிக்கப்படும் வன்னிப் படுகொலை நடந்து சாட்சியின்றிச் சுத்தம் செய்யப்பட்ட இலங்கைத் தீவின் கொல்லைப் புறத்திலில்ருந்து இந்த அரசியல் வாதிகள் நடத்தும் அரசியலென்பது அவமானகரமானது.
இன்றைக்கு வரைக்கும் இவர்களின் பணபலம் மிக்க அரசியலுக்கு அப்பால் இலங்கை அரசு சாட்சியின்றி நடத்தும் இனப்படுகொலைக்கெதிராக மக்கள் கலை இலக்கியப் பேரவை போன்ற இடதுசாரி அமைப்புக்களும் ஏனைய ஜனநாயக அமைப்புக்களும், தனி மனிதர்களும் நடாத்தும் போராட்டங்கள் தியாக உணர்வு மிக்கது மட்டுமல்ல மக்கள் மத்தியில் குறித்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளால் ஏமாற்றப் பட்டதைத் தமிழ் நாட்டு மக்கள் இனம்காண ஆரம்பித்துள்ளனர்.
புலிகள் இராணுவ பலம் மிக்க அமைப்பாக இருந்த போது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட அமைப்புக்களும், தனி மனிதர்களுமே இன்று இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
மேற்கு நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் மக்கள் சார்ந்த அமைப்புக்களைப் புறக்கணித்த புலிகளின் சிந்தனை முறையையும் செயற்பாட்டுத் தன்மையையும் இன்று கவனத்தில் கொள்ளப்படவேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
இராணுவ அமப்பின் பலம் மட்டுமே புலிகளின் பலம் என்ற நிலையானது, புலிகளின் அப்பலம் அழிக்கப்பட்ட போது அவர்கள் எதிர்ப்பரசியற் தளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டார்கள். இந்நிலையில் புலிகள் குறித்த தொடர்ச்சியான விமர்சமென்பது இலங்கை அரசின் பேரினவாத அடக்கு முறையை நியாயப்படுத்துவதாக அமையும் என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டாலும் புலிகளின் தோல்வியுற்ற போராட்ட முறைமை என்பதும் அதற்கான சிந்தனை வடிவங்களும் முற்றாக விமர்சனத்திற்குட்படுத்தப் படவேண்டியது அவசியமாகும்.
புலிகளின் இவ்வாறான அதிகார சமரச அரசியலின் நேரடியான தொடர்ச்சியே தேசம்கடந்த தமிழீழ அரசாகும். ஏலவே தோல்வியுற்ற இவ்வரசியல் சிந்தனை முறமையானது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.
புதிய ஒழுங்கமைபின் அதிகார மையங்களான ஐரோப்பா,அமரிக்கா,இந்தியா,சீனா போன்ற நாடுகளின் அணிகளிடையேயான சர்வதேச உறவு என்பது மக்கள் நலன் சார்ந்த, மனிதாபிமானம் சார்ந்த ஒன்றல்ல.
சரிந்து விழுகின்ற வியாபாரக் கட்டமைப்பை மறுபடி ஒழுங்கைமைக்க முடியாமல் திணறுகின்ற மேற்கிற்கும், புதிய ஆசிய வல்லரசுகளுக்கும் தமது வியாபார நலன்களே பிரதானமானவை. ஆப்கானிஸ்தானிலும்,இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதிலும் இதே வியாபார நலன்களுக்காக இன்னும் மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்படும்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களைப் போலவே உலகெங்கும் படுகொலைகளையும், அவலத்தையும் எதிர்னோக்கும் மக்கள் கூட்டங்களைப் பலப்படுத்த வேண்டும். மேற்கு நாடுகளில் அழுத்தக் குழுக்களோடு இணைந்து கொண்டு அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நிராகரித்து, புதிய முற்போக்கு இயக்கங்களைப் பலப்படுத்தவேண்டும். இவர்கள் முன்னெடுக்கும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.
தவிர, தேசம் கடந்த தமிழீழ அரசு என்ற புலிகளின் தோல்வியடைந்த போராட்ட அரசியலின் தொடர்ச்சியென்பது அபாயகரமானது. அநாவசியமான, மறுதலையான நம்பிக்கையை வளர்க்கும் இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய போராட்ட சக்திகள் ஈழத் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பது மட்டுமல்ல நீண்டகால நோக்கில் எதிர்ப்பரசியலுக்கான சாத்தியப்பாட்டையே நிமூலமாக்கும் தன்மை வாய்ந்தது.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் சமூக உணர்வுள்ள மக்கள் நலன் சார்ந்த அரசியற் சக்திகளுடன் புலிகளின் அரசியலுக்கப்பால் ஒருங்கிணைந்து செயற்படுதல் என்பது மட்டுமே தெற்காசியாவில் எதிர்வு கூறப்படும் எதிர்காலப் படுகொலைகளை எதிர்கொள்வதற்கான ஆரம்ப வழிமுறையாக அமையமுடியும்.
தொடர்புடைய முன்னைய பதிவுகள் :
1.எதிர்ப்பரசியலின் எதிர்காலம்
2.இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம்
3.புலிகளின் சரணடைவு அரசியலும் புத்துயிர் பெறும் சிங்கள பெளத்த மேலாதிக்க வாதமும்
4. பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்