Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை – இன்று முழு கடையடைப்பு : சந்திரசேகர் ராவ்

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினையில் இறுதி முடிவு எடுப்பதற்காக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இருந்தது. நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குப் பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, தனி தெலுங்கானா மாநில பிரச்சினை பற்றி மத்திய மந்திசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஒரு மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:ஒன்றுக்கும் உதவாத ஆலோசனை கூட்டம் இது.மற்றொரு முறை, மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். தெலுங்கானா தனி மாநில கோரிக்கையில், மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை. காங்கிரஸ் நினைத்தால் ஒரே நாளில் முடிவெடுக்க முடியும். ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்பது ஏமாற்று வித்தை. இது போல, ஆயிரம் முறை சொல்லிவிட்டனர்.
இந்தப்பொய்யை, இனி மேலும் யாரும் நம்ப மாட்டார்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தை முடித்த பிறகு, ஒரு வாரத்தில் முடிவு காணப்படும் என்றாவது சொல்லியிருக்கலாம் அல்லது,கூட்டம் குறித்து பிரதமரிடம் விளக்குவேன் என்றாவது சொல்லியிருக்கலாம். அதை விட்டு விட்டு, ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என, கூறுவது முற்றிலும் நாடகம்.
இந்த நாடகத்தை, பல ஆண்டுகளாகவே காங்கிரசார் நடத்தி வருகின்றனர்; அதே நாடகத்தை, இனியும் தொடரப் போகின்றனர். கொடுத்த வாக்குறுதியை, நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்றனர். முதல் கட்டமாக, தெலுங்கானா பகுதி முழுதுவம், நாளை, பந்த் நடத்தப்படும். அடுத்த கட்டம் குறித்து, ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு சந்திர சேகர ராவ் கூறினார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரசேகர் ராவ் கட்சி, தெலுங்கானா பகுதியில் இன்று முழு அடைப்பு (பந்த்) போராட்டம் அறிவித்து உள்ளது.

Exit mobile version