பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய படையெடுப்பைத் தொடர்ந்து, அரபு மொழி சூடானின் ஆட்சிமொழியாகியதால், அராபியரிடமிருந்து வேறுபட்டுள்ள போதிலும் அரபு மொழி பேசும் வடக்கு சூடானிய கருப்பினத்தவர்களும் தம்மை அராபியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர். வடக்கு சூடானில் இஸ்லாமிய நாகரிகம் வளர்ந்த அதேநேரத்தில், தெற்கே சிறுபான்மையினரான பழங்குடியினர் பல்வேறு மொழிகளுடன் தமது மரபுவழி பழக்க வழக்கங்களுடன் இருந்தனர். மதம்,மொழி, பண்பாடு முதலானவற்றில் வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்குமிடையே வேறுபாடும் முரண்பாடுகளும் நீடித்தன. ஆங்கிலேயர்கள் 19ஆம் நூற்றாண்டில் சூடான் முழுவதையும் தமது காலனியாட்சியின் கீழ் கொண்டு வந்தனர். காலனிய ஆட்சியிலும் வடக்கு தெற்கு முரண்பாடு தொடர்ந்தது. ஆங்கிலேயர்கள் வடக்கு சூடானில் கல்விக்கூடங்களை உருவாக்கி, தமது ஆட்சிமுறைக்கு ஏற்ப வடக்கு சூடானியர்களைப் பயிற்றுவித்தனர். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து 1956இல் வடக்கு சூடானியர்களிடம் பெயரளவிலான சுதந்திரத்தை அளித்துவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினர். தென்பகுதியின் பழங்குடியினரை ‘நாகரிகப்படுத்தும்; பொறுப்பு கிறித்துவ மிஷினரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்து வந்த காலங்களில் தெற்கு சூடான் கிறித்துவமயமாகியது. இது வட தென் சூடானியர்களின் சுருக்கமான வரலாறு.
தென் சூடானில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சூடானின் செல்வச் செழிப்பு அதிகரித்தது. ஆனால் தென் சூடான் வட சூடான் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டது. பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட தென் சூடான் மக்களை அரபு மொழியைப் பேசுமாறும் இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொள்ளுமாறும் வட சூடான் அரசு வற்புறுத்தியது. ஓமார் அல் பஷீர் இரணுவச் சதியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமியச் சட்டங்களை வட தென் சூடான் மக்கள் மீது திணித்தார். 1989 ஆம் ஆண்டிற்கு பின்னர் 2010 ஆம் ஆண்டில் பஷீர் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியானார்.
அதேவேளை அமரிக்காவும் அதன் நேச நாடுகளும் எண்ணை வளத்தைக் கொள்ளையடிக்க தென் சூடானின் விடுதலைப் போராட்ட அமைப்பான மக்கள் விடுதலை இராணுவத்திற்கு அமரிக்க அரசு ஆயுதங்களையும் ஏனைய வசதிகளையும் வழங்கியது.
இனக்க்குழுக்களையும் வறிய மக்களையும் கொண்ட தெற்கு சூடானில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தின் மீது நம்பிக்கைவைக்காத மக்கள் விடுதலை இராணுவம் தூய இராணுவக் குழுவாகச் செயற்பட்டது.
இனவெறி மற்றும் மதவெறி கொண்ட வலதுசாரி இராணுவக் குழுவான மக்கள் விடுதலை இராணுவம் ஏகாதிபத்தியங்களின் கைப்பொம்மையானது. தென்சூடான் எண்ணை வளத்தை சீன நிறுவனங்களே சுரண்டிவந்தன. தென் சூடானை அவசர அவசரமாக அமரிக்க அரசு பிரித்துவைத்ததன் பிரதான காரணம் எண்ணைவளத்தைக் கையகப்படுத்துவதே.
பிரிவினைக்குப் பின்னர் கொலைக் களமாக மாறிய தென் சூடான், டிசம்பர் 14 ஆம் திகதியின் பின்னர், அதன் உச்சத்தை அடைந்தது. தென் சூடான் இன்று மனிதப் பிணக்காடாகக் காட்சியளிக்கிறது. ஏகாதிபத்தியங்களால் வீங்கி வளர்ந்த இராணுவம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது.
நூயர் இனக்குழுவைச் சேர்ந்த துணை ஜனாதிபதி ரீக் மாச்சார் தனக்கு எதிராக இராணுவச் சதியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் அறிவித்து அவரைப் பதவி விலக்கினார் தென்சூடானின் ஜனாதிபதி சல்வா கீர். இவர் டின்கா இனக்குழுவைச் சேர்ந்தவர். இந்த இரு இனக்குழுக்களுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. நூயா இனக்க்குழுவினரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் எனச் செய்திகள் கூறுகின்றன.
தலைநகர் ஜூபாவில் நுயார் இனக்குழுவைச் சேர்ந்த 200 பேர் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. எண்ணை குதங்களுக்கு அண்மையில் 75 மனிதப் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை டிங்கா இனக்குழுவினரதாக இருக்கலாம் என செய்திகள் தெரிவித்தன. குறைந்தது ஆயிரம்பேர் மோதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா சமாதானப்படை அதிகாரி ரொபி லான்சர் தெரிவிக்கின்றார்.
மக்கள் சாரி சாரியாக அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை உட்பட பல நாடுகள் தென்சூடனிலிருந்து தமது நாட்டைச் சார்ந்தவர்களை வெளியேற்றியுள்ளன.
நத்தார் பெருநாள் தென் சூடானியர்களுக்கு பயங்கரங்களோடு கடந்துபோனது.
ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட தென் சூடான் அதே எகாதிபத்தியங்களால் கொலைக்களமாக மாற்றப்பட்டுள்ளது.
சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு தென் சூடான் சிறந்த படிப்பினை,
அது சரி தென்சூடான் உருவான போது அமரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நாடுகடந்த தமிழீழ அரசு தென் சூடானில் தூதரகத்தை நிறுவியுள்ளதாக அறிவித்தது. தென் சூடான் நிலைமைகள் குறித்து துண்டறிக்கைகூட வெளியிடாத நிலையில் தூதரகத்திற்கு என்ன நடந்தது என்பதையாவது மக்களுக்கு அறியத்தரலாமே?
தென் சூடான் தோன்றிய போது இனியொருவில் பதியப்பட்ட கட்டுரைகள்: