அந்தவகையில் சிங்களத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத , நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கும் சீனாவைப் புரிந்து கொண்டாலே போதும்.
ஆதலால்,முதலில்ஆசியாவை நோக்கி நகரும் புவிசார் அரசியலின் தவிர்க்கமுடியாத பார்வை, தென்சீனக் கடலிலும், இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் ஆழமாகப் பதிவதை கவனிக்க வேண்டும்.
இலங்கை தேசிய இனப் பிரச்சினையில், மேற்குலகின் வகிபாகம் காத்திரமான பங்கினை வகிக்கப்போகிறது என்பதனை ஏற்றுக்கொண்டு ,அதனடிப்படையில் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போர், ஆசியாவில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
மேற்கின் பொருளாதார வீழ்ச்சியும். ஆசியாவின் வளர்ச்சியும் ஓருலகக் கோட்பாட்டில் வெடிப்புகளை ஏற்படுத்துவதோடு, புதிய சமநிலைகளை உருவாக்க முயல்கிறது. உலக ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைக்க விரும்பும் மேற்குலகு , எந்த வகையான மூலோபாயத்திட்டங்களை ஆசியா குறித்து வகுத்துள்ளது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை மேற்குலகின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் சீனாவின் தந்திரோபாயங்கள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன என்பதை முதலில் ஆய்வு செய்வது பொருத்தமானது.
தற்போதைய பூகோள அரசியல் சிக்கல், கொதிநிலைப் பிரதேசங்களான மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் கொரியாவில் நிலை கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுவதை நோக்க வேண்டும் .
அதில் கொரிய வளைகுடாவை எடுத்துக் கொண்டால் , அப்பகுதி வடகிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள உலகப்பொருளாதார இயங்குதளத்தின் முக்கிய பிரதேசமாகக் கணிப்பிடப்படுகிறது. கிழக்கு சீனக் கடல் அங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் தைவான் நீரிணையில் அமெரிக்காவும் சீனாவும் நடாத்தும் ஆதிக்கப் பனிப்போர் , தைவான் ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டால், இராணுவ மோதல் இவ்விரு நாடுகளுக்கிடையே உருவாகும் வாய்ப்பு உண்டென்று எதிர்வு கூறப்படுகிறது.
தைவானின் தனிநாட்டுப் பிரகடனமானது , சீனாவின் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள உய்குர் [UYGUR]என்கிற தேசிய இனமக்கள் பெரும்பான்மையாக வாழும் சின்ஜியாங் [Xinjiang] மற்றும் திபெத் மாகாணங்களில் தனியரசிற்கான போராட்டங்களை வலுப்படுத்தும் என்பது சீனாவின் அச்சம்.
இப்பிரச்சினை குறித்து பல புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் பேசும்போது, அமெரிக்கா-சீனாவின் மிக முக்கியமான மூலோபாய முரண்பாட்டு மையப் பிரதேசமாக [Strategic confrontational area] தைவான் அமையுமென்று உறுதியாக நம்புகிறார்கள்.
கிழக்காசிப் பிராந்தியத்தில் சீனாவுடன் மோதிக்கொள்ளும் இன்னுமொரு முக்கிய நாடு ஜப்பான். படைத்துறையை நவீனமயப்படுத்துவதில் அமெரிக்காவிற்கு இரண்டாவது நிலையிலுள்ள ,அதற்காக 100 பில்லியன் டொலர்களை செலவிடும் சீனாவுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் இராணுவபலம் மிகக் குறைவானதுதான்.
அதேவேளை ஜப்பானால் சென்ககு [Senkaku] என்றும், சீனாவால் டியொயு [Diaoyu] என்று அழைக்கப்படும் தீவு குறித்தான உரிமை கோரலில் ,இவ்விரு நாடுகளும் இன்னமும் முரண்பட்டுக் கொள்கின்றன. சீனாவை சார்ந்த ஹைஜியன் 51,26,66,137 என்கிற நான்கு கடல் கண்காணிப்புக் கலங்கள் இத்தீவைச் சுற்றி நிலைகொண்டுள்ளன.. இதனை வழிமறிக்க, ஜப்பானின் F-15 ரக போர் விமானங்கள் அத்தீவின் வான்பரப்பில் வட்டமிடுகின்றன. இந்நிலை இன்னமும் நீடிக்கிறது.
இதன் எதிர்வினையாக ,ஜப்பானியப் பொருட்களை பகிஸ்கரிக்கும் நடவடிக்கை சீன மக்களால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மேற்குலகின் பொருளாதாரச் சரிவினால் மந்தநிலையை எட்டியுள்ள ஜப்பானின் ஏற்றுமதி வர்த்தகம் இதனால் மேலும் பாதிப்படைந்தது.
இவைதவிர, உலகின் அரிதான கனிமவள உற்பத்தியில் [Rare earth minerals] 93 சதவீதம் கொண்டிருக்கும் சீனா, தனது ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தப் போவதாக இரண்டாவது தடவையாக அறிவித்த விவகாரமும் ஜப்பானை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்க மொழியில் கூறினால், சீனாவுடனான நாணயப்போரில் , யுவான் நாணயத்தின் மதிப்பினை அதிகரிக்காவிட்டால் , இறக்குமதியை குறைத்து விடுவோம் என்று அமெரிக்கா அச்சுறுத்தியவுடன், அரிதான கனிமவள விவகாரத்தை முதன்முதலாக சீனா கையிலெடுத்தது.
இவ்வாறான பிராந்திய ஆதிக்கப்போட்டியும், பொருளாதார சந்தைப் போட்டியும் இந்த பூகோள வல்லாதிக்க சக்திகளின் முரண்படுகளமாக கிழக்கு ஆசியாவை மாற்றியமைத்துள்ள நிலையில், 7 நாடுகளை எல்லையாகக்கொண்ட தென்சீனக் கடலில் புதிய மோதல் களம் திறக்கப்பட்டுள்ளது.
விடுதலைக்காகப் போராடும் தமிழ் தேசிய இனம் கவனிக்க வேண்டிய விவகாரம் இங்குதான் ஆரம்பமாகிறது.
தென்சீனக் கடலில் மையமிடும் முதல்நிலை, இரண்டாம் நிலை பொருளாதார- இராணுவ வல்லரசுக்களுக்கிடையே நிகழும் பனிப்போர் , இதன் அடுத்தகட்டமாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகருமா அல்லது ஏற்கனவே ஆரம்பித்து விட்டதா என்பது குறித்து பேசப்படவேண்டும்.
3.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தென்சீனக் கடலின் முழுமையான ஆதிபத்திய உரிமையை சீனா ஏன் கோருகிறது?.
இந்துமகா சமுத்திரம் இந்தியாவின் கடல் அல்ல என்று கேலி செய்யும் சீனா, தென்சீனக் கடல் தனதென்று ஏன் கூற முற்படுகிறது?.
2.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை தாண்ட முடியாமல், Fiscal Cliff பற்றி கையைப் பிசையும் அமெரிக்கா மீண்டெழும் காலத்திற்கு முன்பாக , ஆசிய நாடுகள் பெரும்பாலானவற்றை தனது பொருளாதார பிடிக்குள் கொண்டுவருவதோடு, அவற்றோடு இராஜதந்திர உறவுகளையும் பலப்படுத்த வேண்டுமென்கிறவகையில் சீனா தனது நீண்ட கால மூலோபாயத் திட்டங்களை வகுப்பது போல் தெரிகிறது.
ஆனாலும் தென்சீனக் கடல் பிராந்திய கரையோர நாடுகளான பிலிப்பைன்ஸ் ,புருணை ,மலேசியா ,வியட்நாம் ,இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றோடு கடல் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டு, எவ்வாறு இவர்களுடன் தனது உறவினை சீனா வளர்த்துக் கொள்ள முடியுமென்கிற கேள்வியும் எழுகிறது.
உடன்பாடற்ற விடையங்களை மூடிவைத்துவிட்டு, அபிவிருத்தியில்கூட்டிணைந்து ஈடுபடுவோம் [Shelving disagreement & Joint development ] என்பதை இந்த தென்சீனக் கடல் பிராந்திய நாடுகளுக்கு சீனா தனது தீர்வுத் திட்டமாக முன்வைக்கிறது.
தாய்லாந்து நீரிணையில் [Strait of Thailand ] 1992 இல் ஏற்பட்ட வியட்நாம்-மலேசியா கூட்டு அபிவிருத்தி ஒப்பந்தம், 1997 இல் உருவான வியட்நாம் -தாய்லாந்து ஒப்பந்தம் மற்றும் கம்போடியா -வியட்நாம் உடன்படிக்கை என்பனவற்றை கருத்தில் கொண்டு, தானும் இந்நாடுகளுடன் இவ்வாறான அபிவிருத்தி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி , பிரச்சினையைத் தீர்த்துவிடலாமென்று சீனா எதிர்பார்க்கின்றது.
இருப்பினும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் , சீன-அமெரிக்க அரசியல் அதிகாரப் போட்டியில் எதிர்கொள்ளும் சிக்கலான விடயம் என்னவென்றால், இவை அனைத்தும் பொருளாதார உறவில் சீனாவோடு நெருங்கியும், சீனாவிற்கு எதிரான பாதுகாப்பு வட்டத்துள் அமெரிக்காவுடன் இணைந்து இருப்பதுவே ஆகும்.
சீனாவின் முதலீடு தென்கொரியாவிலும், தைவானிலும் அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோன்று வியட்நாம், சிங்கப்பூர் , இந்தோனேசியாவிலும் தனது வர்த்தக உறவுகளை அதிகரித்து வருகிறது.
மறுபுறத்தில் தென்சீனக்கடலில் உள்ள பரசெல் [PARACEL ] மற்றும் ஸ்பரட்லி [SPRATLY ] போன்ற தீவுகளுக்கான உரிமத்தை விட்டுக் கொடுக்க முடியாதென இறுக்கமாகவிருக்கிறது.
சர்வதேச கடல் எல்லைகளை நிர்ணயம் செய்யும் UNCLOS [UN Convention on the Law of the Sea ] என்கிற ஐ.நா. சாசனத்தையும் மீறி, 1974 ஆம் ஆண்டு வியட்நாமிடமிருந்து பரசெல் தீவினை சீனா கைப்பற்றியது. சீன மொழியில் நன்ஷா [Nansha ] என்றழைக்கப்படும் ஸ்பரட்லி தீவையும் தனதென்று உரிமை கோருகிறது.
இத்தீவுகளுக்கான உரிமை கோரலுக்கு, சீனா முன்னிறுத்தும் வாதமானது , வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது.
அதாவது ஐ.நா.சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 200 மைல் நீள விஷேட பொருளாதார வலயப் பிரதேசம் [EEZ ] , ஆழமற்ற கடல் படுகையின் கண்டத் திட்டு கொள்கை [Continental Shelf principle ] மற்றும் ஹான் ,மிங் ஆட்சிகால வரலாற்றுச் சான்றுகளை வைத்து தனது முழு தென்சீனக் கடலுக்குமான ஆதிபத்திய உரிமையை சீன நிறுவ முற்படுகிறது.
சீனாவைப் பொறுத்தவரை அது இரண்டு வகையான பிரச்சினைகளை தற்போது எதிர்கொள்கிறது. இவ்விரண்டும் எதிர்காலத்தில் சீனாவின் பாதுகாப்பிற்கும் , பொருளாதார வளர்ச்சியின் தாங்குதிறனிற்கும் அச்சுறுத்தலாக அமையுமென திடமாக நம்புகிறது.
200 இற்கும் அதிகமான தீவுகளை கொண்ட இக்கடற்பிராந்தியத்தில் எண்ணெய் ,எரிவாயு மற்றும் அரிதான கனிம வளங்கள் பெருகிக் காணப்படுகிறது. அத்தோடு,நாளொன்றிக்கு 29.8 மில்லியன் பரல் எண்ணெய்யை பயன்படுத்தும் இப்பிராந்திய நாடுகளின் எரிசக்தி தேவை ,ஆண்டொன்றிக்கு 2.7 சதவீதமாக அதிகரிக்குமென கணிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் இதன் தென்மேற்கில் அமைத்துள்ள சிங்கப்பூர் மற்றும் மலாக்கா நீரிணையிலிருந்து, வடகிழக்கிலுள்ள தைவான் வரையான கடல் பிரதேசத்தின் வளங்களைப் பங்கிடுவதில், இவர்களுக்குள் ஏற்படும் முறுகல் நிலையை அமெரிக்கா எவ்வாறு கையாளப்போகிறது என்பதில்தான் இப்பிராந்தியத்தின் சமநிலை தீர்மானிக்கப்படப்போகிறது.
ஆனாலும் அமெரிக்காவானது இப்பிராந்திய நாடுகளின் நலன்களை முன்னிலைப்படுத்தி தனது நீண்ட கால மூலோபாயத் திட்டங்களை வகுக்காது என்பதையும் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
ஐரோப்பா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளுக்குமிடையிலான வர்த்தக வளர்ச்சிக்கு இக்கடல் பகுதி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இப் பிரதான கடல் பாதை ஊடாக உலகின் அரைவாசி பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் நகர்கின்றன. இந்நிலையில் முரண்படும் நாடுகளோடு படைத்துறை ஒத்துழைப்பினைப் பேணும் அமெரிக்காவால் தனது எண்ணெய் வழங்கல் பாதையில் ஆபத்து உருவாகும் என்று சீனா எண்ணுவது போலுள்ளது.
அடுத்ததாக சீனாவின் எரிசக்திப் பசி குறித்தான விடயங்களை ஆழமாகப் பார்க்க வேண்டும்.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி , 2011 இல் 450 மில்லியன் தொன் மசகு எண்ணெய்யை சீனா பயன்படுத்தியுள்ளது. அதில் 250 மில்லியன் தொன் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.எண்ணெய் பயன்பாடு மற்றும் அதன் இறக்குமதிக்கான விகிதாசாரம் தொடர்ச்சியாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
‘எண்ணெய் இல்லார்க்கு இவ்வுலகில்லை ‘ என்கிற யதார்த்தக் கோட்பாட்டினை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள சீனா, தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய பல அகழ்வு அபிவிருத்திப் பணிகளில் பாரிய முதலீடுகளை செய்கிறது. 2011 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்ளூர் உற்பத்தி [GDP ] 7.52 ட்ரில்லியன் டொலர்களை கொண்ட சீனாவிற்கு இதுவெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.
சீனாவின் டயாங்க் யிஹாவ் [Dayang Yihao] என்கிற சமுத்திர ஆய்வுக் கப்பல், தனது 26வது பூகோளரீதியான ஆய்வினை பூர்த்தி செய்து கடந்த டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று நாடு திரும்பியுள்ளது. 245 நாட்களை உள்வாங்கிய இவ்வாய்வுப் பயணம் , இந்து சமுத்திரம் பசிபிக் பிராந்தியம் மற்றும் நைஜீரியா ஊடக 38,036 கடல் மைல்களை கடந்துள்ளது.
அதேவேளை, இலங்கையுடன் கடல் ஆய்வு குறித்த ஒப்பந்தமொன்றில் சீனா கைச்சாத்திடப் போகிறது என்கிற செய்தி இந்திய ஆங்கில ஊடகமொன்றில் அண்மையில் வெளியான செய்தி இங்கு குறிப்பிடத்தக்கது.
இவைதவிர, இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மத்தியகிழக்கில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களால் சீனாவின் எண்ணெய் கொள்வனவு தடைப்படுமாயின் அல்லது அமெரிக்காவின் பிடிக்குள் அவ்வர்த்தக கட்டுப்பாடு செல்லுமாயின் , இதற்கு மாற்றீடாக என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு கவலை கொள்வதே சீனாவின் இன்றைய தேவையாக இருக்கிறது.
ஆதலால்,தனது பெருநிலப்பரப்பிலும் , தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பரப்பிலும் எண்ணெய்யைத் தேடுதுவதுதான் சீனாவின் அடுத்த தெரிவாக இருக்கும். அதற்கான வேலையை அது ஆரம்பித்து விட்டது என்பதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம்.
தேசிய சீன எண்ணெய் கூட்டுத்தாபனம் [CNPC] வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், வடகிழக்கு சீன மாகாணத்திலுள்ள டாகுஇங் [Daqing ] எண்ணெய் வயலில் இருந்து மட்டும், கடந்த ஆண்டு 40 மில்லியன் தொன் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.12வது 5 வருட திட்டப்படி இதேயளவு உற்பத்தி 2015 வரை நீடிக்குமென சி.என்.பி.சி கூறுகிறது.
இதுமட்டுமல்லாது, சங்குய்ங் [Changqing] எண்ணெய் வயலில் இருந்து 22.31 மில்லியன் தொன் மசகு எண்ணெயும் 28.54 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவும் உற்பத்தியாகியதாக இவ்வறிக்கை மேலும்சுட்டிக் காட்டுகிறது.
உய்கூர் தேசிய இன மக்கள், தமது விடுதலைக்காப் போராடும் சின்ஜியாங் பிரதேசத்தின் லுக்குன் [Lukqun] எண்ணெய் வயலில் தனது எண்ணெய் அகழ்வினை சீனா அரசு அதிகரித்துள்ளது. அங்கு 100 மில்லியன் தொன் எண்ணெய் இருப்பதாக ஆய்வுகள் கூறும் அதேவேளை, அங்குள்ள 113 எண்ணெய் கிணறுகளில் இருந்து தினமும் 1,100 தொன் எண்ணெய்யை அகழ்வதாக சீன எண்ணெய்க் கூட்டுத்தாபனம் பெருமையடைகிறது.
இவற்றோடு , கடலில் எண்ணெய் அகழ்வினை மேற்கொள்ளும் சீனாவின் மிகப் பெரிய தேசிய எண்ணெய் நிறுவனமான ‘சினூக்’ [CNOOC] , கடந்த மாதம் தென்சீனக் கடலில் தனது எண்ணெய் அகழ்வுப் பணியை ஆரம்பித்திருக்கிறது.
ஆகவே, தென்சீனக் கடலில் சீனாவின் மேலாதிக்கப்போக்கிற்கான காரணத்தை உற்று நோக்கினால் , எரிசக்தி தேவையின் பின்புலம் தெளிவாகத் தெரியும்.
சர்வதேச உறவில் ,சீனாவின் பன்முக அடையாளங்கள் புரிந்து கொள்ளப்பட முடியாதவையாக இருக்கிறதென சலிப்புறும் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக பேராசிரியர் டேவிட் ஷம்பௌக்ஹ் போன்றவர்கள், பொருளாதாரத் தேவை குறித்தான ஒரு நாட்டின் மூலோபாய நோக்கங்களைப் புரிந்து கொண்டாலே போதும்.
சீனா ,முரண்பாட்டுக் குவியலின் மொத்த உருவமல்ல. இப்போது அதனுடைய பிரச்சினை, மூல வளங்களின் வழங்கல் பாதை பாதுக்காப்பாக சீராக இருக்க வேண்டும். அது தடைப்பபடுமாயின் , உள்ளூர் மற்றும் அண்மித்த கடல் பிரதேங்களில் இருந்து அவற்றினை பெற்று எரிசக்தி தேவையை எவ்வாறு சமன் செய்வது என்பதுதான்.
அபரிமிதமான பொருண்மிய வளர்ச்சியே , ஆசிய நாடுகளுடன் நெருங்கிய இராஜதந்திர உறவினை வளர்க்க உதவுமென்று சீனா எண்ணுகிறது. அதனூடாக, புவிசார் அரசியல் களத்தில் காத்திரமான பங்கினை தன்னால் வகிக்க முடியுமென கற்பிதம் கொள்கிறது.
துறைமுக அபிவிருத்தி ஊடாக ,இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உட்புகும் சீனாவின் மூலோபாய நகர்வினை அடுத்துவரும் கட்டுரைகளில் பார்ப்போம். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.