Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தூக்குக் கயிற்றில் தனது சுயரூபத்தைக் காட்டிய ஜெயலலிதா!

தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் சட்டவல்லுனர்கள், ஜனநாயகவாதிகள்,மனித உரிமை வாதிகள் ஆகிய அனைவரினதும் காதில் பூச்சுற்றியிருக்கிறார் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயல்லலிதா. தேர்தல் காலத்தில் அவர் வாயிலிருந்து ஓடிய தமிழ் உணர்வுப் பாலாற்றில் குளித்து செட்டில் ஆனவர்கள் புலம் பெயர் அமைப்புகள் மட்டுமல்ல சீமான் போன்ற இனவாத அரசியல் நடத்தும் உணர்ச்சிப் பிழம்புகளும் தான்.

ஐரோப்பிய நாடுகளில் தமிழினவாத அரசியல் நடத்தும் தமிழர் பேரவைகளும், நாடுகடந்த தமிழீழங்களும் ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளையெல்லாம் அம்மா வெறும் நகைச்சுவையாகத் தான் கருதியிருக்கிறார் என்பதெல்லாம் இப்போதாவது அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

“3 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும்” என்ற பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டு தமிழ்ப் பேசும் மக்களின் காதில் பூச்சுற்றியிருக்கிறார்.

“1957 ஆம் ஆண்டு சி.எம்.எஸ்.பாலன் இற்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனைக் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த பின்னரும் முதலமைச்சர் நம்பூதிரிபாத் ரத்துச் செய்த சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது”.

“1971 இல் சி.என்.அண்ணாதுரை தூக்குத் தண்டனையை ரத்துச் செய்த சம்பவம் நடத்திருக்கிறது”

“அன்னம்மா என்பவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை கிருஷ்ணய்யர் இல்லாமல் செய்திருக்கிறார்”

இந்த உண்மைகள் அனைத்தையும் கண்முன்னாலாயே குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சீமானும் வைக்கோவும் புடைசூழ ஒரு மானில முதல்வர் பொய் சொல்லியிருக்கிறார். ஈழப் பிரச்சனையைத் தீர்த்துவைப்பேன் என சூழுரைத்து ஆட்சிக்கு வந்த வியாபாரியை என்ன செய்யலாம் என்று தமிழ் நாட்டு மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.
செங்கொடியும், முத்துக்குமாரும் இன்னும் ஆயிரம் மனிதர்கள் பிறந்த மண்ணில் மக்கள் அணிதிரள்வார்கள் என்பது மட்டும் திண்ணம். அவர்கள் ஈழமக்களதும்,கஷ்மீர் மக்களதும், பழங்குடி மக்களதும், இன்னும் உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்கள் அனைத்தினதும் குரலாக ஒலிப்பார்கள்.

தனது அறிக்கையில் எங்காவது ஒரு இடத்திலாவது மூன்று பேரை அரசியல் படுகொலை செய்ய இந்திய அரசு திட்டமிட்டிருப்பது தவறானது என்று கூறியிருப்பார் என விளக்குப் போட்டுத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. சிலவேளைகளில் சீமானுக்கும் ஜெயலலிதாவை நம்பிய புலம்பெயர் இனவாதிகளும் கண்டுபிடிப்பார்களோ?

அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கொலைகளை நிறுத்தச் சொல்லி ஜனதிபதிக்கு ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாமல்லவா?

ஜெயலலிதா தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று மனதார விரும்புகிறார். அரசியலில் செட்டிலாக விரும்பும் சீமான் போன்றோர் அதைப் பற்றிப் பேசத் தயாரில்லை.

இன்னொரு நாள் இவர்கள் இனப்படுகொலை ராஜபக்ச குடும்பத்தில் அங்கத்தவர்கள் ஆனாலும் வியப்படைவதற்கில்லை.

ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

3 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்யலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி அவர் மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். ஒருவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால், அதில் மாநில முதல்வரால் தலையிட முடியாது.

தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ள அந்த மூவரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்கின்றேன்

Exit mobile version