Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தூக்கில் தொங்குவது தமிழரின் அரசியல் நியாயம்!

இன்று(30.08.2011) லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்மரணதண்டனைக்கு எதிராகவும் இந்திய அரசிற்கு எதிராகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. 500 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஊர்வலத்தில் மரணித்த தோழர் செங்கொடியின் படங்கள் தாங்கிய பதாகைகளும் காணப்பட்டன.

 புதிய திசைகள் அமைப்பினரால் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்:

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கழித்து குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடத் துடிக்கிறது இந்திய அரசு. பத்து வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட கருணைமனுவை இப்போது நிராகரித்து தண்டனையை இந்திய ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். இது ஒரு சட்ட அநீதி; ஒரு அரசியல் அநீதி என்று கூறும் நாம் அவர்களது தண்டனை நீக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோருகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் தமிழினவழிப்பை தலைமை தாங்கி நடத்தி முடித்திருக்கும் இந்திய அரசு புலிகள் அமைப்பை அழித்தொழிக்கும் தமது நிகழ்ச்சி நிரலையும் நிறைவேற்றியுள்ளது. சிறீலங்கா, இந்திய அரசுகள் நினைத்ததற்கு மாறாக பெரிய அளவில் உருவாகியுள்ள போர்க் குற்ற விசாரணை என்பது இரு அரசுகளுக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் பரந்த அளவில் உருவாகி வரும் ஈழத்தமிழர் மீதான இனவழிப்பு பற்றிய விழிப்புணர்வும் அதற்கெதிரான பலதரப்பினரின் போராட்டங்களும், இந்திய அளவில் முதல்முறையாக ஈழத்தமிழர் பிரச்சனை பேசப் படுவதும், தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தெற்கு, வடக்கு மாநிலங்களில் எழுந்து வரும் எதிர்ப்புகள் என்பன இந்திய அரசு எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சனைகள்.

வடக்கு கிழக்கு மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அடிப்படையிலேயே நிராகரித்து வந்த ஜெயலலிதா போன்ற சந்தர்ப்ப வாத அரசியல்வாதிகள் கூட இன்று ஈழத்தமிழரை காக்கப் புறப்பட்டுள்ள தேவதை வேடம் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றால் தமிழகத்தில் உருவாகியிருக்கும் எழுச்சியின் அளவு இந்திய அரசிற்கு தலைவலிதான். இத்தனை வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கை இன்று தூசு தட்டி தீர்ப்பளிக்க முனைந்திருப்பதன் மர்மம் ஒன்றும் புரியாத புதிர் அல்ல. போர்க்குற்ற விசாரணை, சிறீPலங்கா அரசுக்கு எதிரான தமிழ் நாட்டின் கடும் போக்கு இவற்றை தற்காலிகமாக திசை திருப்புவதுதான் இதன் நோக்கம்.

இக்கொலை வழக்கில் இந்திய அரசின் பட்டியல் படி பிரதான குற்றவாளிகள் பற்றிய விபரங்கள் முறையாக முடிக்கப் படாமலேயே நேரடியாக சம்பந்தப் படாத இம்மூவருக்கும் தண்டனை வழங்கபட்டிருக்கிறது. இந்திய அரசால் நீக்கம் செய்யப் பட்டுள்ள தடா சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் சாட்சியங்களும் இவ்வழக்கிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையோ, டெல்லி உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்புகள் எதையும் கணக்கில் எடுக்காமல் அடாவடித்தனமாக இத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது. 21 வது வருடமாக எந்த இடைவெளியுமின்றி ஒரு ஆயுள் தண்டனை அனுபவித்தபின் தூக்கு தண்டனை என்பது உலகநாடுகள் பின்பற்றும் எந்த பொது நீதிகுள்ளும் அடங்காது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னை பீற்றிகொள்ளும் இந்திய அரசின் ஜனநாயகம் இதுதான்.

அமைதிப்படை என்ற பெயரில் தமிழ் பகுதிகள் மீது படையெடுத்து ஆயிரக்கணக்கில் எங்கள் மக்களை கொன்று குவித்து ,பெண்களை மானபங்கபடுத்தி, சொத்துக்களை சூறையாடிய இந்திய இராணுவத்தின் தலைமை அங்கம்தான் ராஜீவ் காந்தி. எமது தேசத்தின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு, எமது மக்களின் பிணக்குவியலின் நடுவே ராஜீவ் காந்தியின் மரணம் ஒன்றும் கவலைக்குரிய விடயமல்ல. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு நீதி கேட்பவர்கள் தமிழ் மக்களின் பிணங்களுக்கு நீதி சொல்லட்டும்.

தனிமனித படுகொலைகள் அதுவும் பட்டியல் இட்டு படுகொலை செய்வது என்பதை போராட்ட வழிமுறையாக கொண்ட போராட்ட குழுக்களால் தலைமை தாங்கப் பட்டு இறுதியில் சுய அழிவும், மக்களின் பேரழிவையும் சந்தித்த மக்கள் கூட்டம் தான் நாங்கள். தனிமனித அழிப்பு எமது சமூகத்திற்கு எந்த சரியான மாற்றத்தையும் தந்ததில்லை அதற்கு மாறாக எம்மத்தியில் இருந்த பல தேவையான சக்திகளை அழித்ததுடன் எதிர்தரப்பில் மீண்டும் மீண்டும் மிக மோசமான சக்திகளால் அவை பிரதியிடப் பட்டுக்கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலையையும் நாம் இந்த வகையிலேயே அடக்கமுடியும்.

தூக்கு தண்டனைக்கு எதிராக நாம் எழுப்பும் குரல் என்பது உயிர்பிச்சையல்ல, கருணை காட்டக் கோருவதுமல்ல இது எமது அரசியல் உரிமை ஒரு இனத்தின் மீதான அடக்குமுறையின் ஒரு அடையாளம் தான் இந்த தூக்கு தண்டனை. தமிழகத்தில் இயங்கிவரும் எமது உண்மையான நட்புசக்திகள் கூறுவது போல, தூக்கு மேடையில் இன்று நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். எம்மிடையே இருக்கும் பலர் அதிகாரத்தில் இருக்கும் போது முருகன், பேரறிவாளன், சாந்தன் போன்ற பலரை ‘தூக்கிலிட்டு’ வேடிக்கை பார்த்தவர்கள் தான். தொப்புள் கொடி உறவென்று தமிழக மக்களை தேவைக்கேற்ப அழைத்துக்கொண்டு ஜெயலலிதாவை தமிழினத்தின் மீட்பு தேவதையாக சித்தரித்து தூக்கு தண்டனைக்கு உயிர்பிச்சை கேட்கும் புலத்தில் உள்ள சிலர் தங்கள் தரப்பு மரண தண்டனை வழிமுறைகளை இச்சந்தர்ப்பத்தில் ஒரு முறை மீளாய்வு செய்து கொள்வது அவசியம்.

இந்திய அரசு சிறீலங்கா அரசுடன் இணைந்து ஈழத்தமிழர் மீதான கொலைகளை தான் விரும்பியவாறு நடத்திக் கொண்டிருக்கிறது. இம்மூவரின் தூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம் என்பது எமது விடுதலைப் போரின் ஒரு பகுதியாகவே பார்க்கப் படவேண்டும். இவர்களின் இந்நிலைமையின் பொறுப்பாளிகள் என்றவகையில் எமக்கு முக்கிய கடமையும் இருக்கின்றது.

Exit mobile version