Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘துரோகி’களுக்கு எதிராக வங்காளிப் புலியும் ரஷ்யன் ஏ.கே யும் : சோளன்

வங்காளிப் புலிப்படம் போட்ட கொடி
வங்காளிப் புலிப்படம் போட்ட கொடி

மேற்குலகமும் இந்தியாவும் சேர்ந்துதான் எம்மை அழித்தது என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள் புலம்பெயர்ந்து களம்கண்டவர்கள். அதைச் சுத்தியே மயிர்கூர்ச்செறியும் விவாதங்கள் ஐந்தாம் ஈழப் போராட்டம் போல உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. அழித்துப்போட்ட ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் ‘விதானைக்கு லஞ்சம் குடுத்த மாதிரி’ வாழைக்குலையும் சாராயப் போத்திலும் குடுத்து எங்கட பக்கம் இழுத்துப் போடவேணும் என்று கோட்டு சூட்டுப் போட்ட ஒரு அன்பர் கோப்ரா பியர் மீசையில் முட்டி சிந்தனைச் செதுக்கிச் செதுக்கிப் பேசலானார். இன்னொரு அன்பரோ துரோகிகள் அழிச்சுப் போட்டாங்கள் என மீசை முறுக்கேற கொந்தளிக்கலானார்.

விவாதம் சூடேறச் சூடேற லஞ்சம் குடுப்பதா இல்லையா என்பது விவாதப் பொருளாக மாறியது. லண்டன் புறநகர்ப் பகுதி உணவகத்தில் ஈழத் தமிழர்களின் தலைவிதியைக் கையிலெடுத்த கனவான்களின் விவாதம் பற்பல தத்துவ முத்துக்களை உதிர்த்து உலர்த்தியது.

மேற்குலலம் துரோகிகள், இவர்களை நம்பக்கூடாது என்பவர்களுக்கும் லஞ்சமே தஞ்சம் என்பவர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. இரண்டு குழுவுமே ஊடறுத்துத் தாக்கிய தத்தமது பஞ் டயலாக்குகளுக்கு ஊடாக ஒன்றை மட்டும் மறைத்தது. நாங்கள் விட்ட எல்லாத் தவறுகளையும் மறைத்து மேற்கு உலக மட்டுமே தவறு என்று ரெஸ்ரன்ட் இரவல் மேசையில் அடித்து அடித்து விவாதித்தது.

சோளனுக்கு கோப்ரா மேல் கோபம் இருந்தமையால். லயன் லாகர் மீது லைப்பு இல்லாமையால், பதப்படுத்தப்பட்ட பனங்கள்ளு அருந்தி அமைதியாக அவதானித்தான்.

திறந்தவீட்டுக்குள் நுளைந்த நாய் போல விவாதத்திற்குள் நுளைய வேண்டும் என்று இசக்குப் பிசக்காகச் சிந்தனை சிதறி ஓடியது.

ஏதோ தனக்குள் சொல்லிக்கொண்டான்;

மேற்குலகமும் இந்தியாவும் சேர்ந்து தான் அழித்தது என்பதில் என்ன சந்தேகம். ஆனால் ஐரோப்பியனுக்கு ஒரு வழிமுறை எப்பவுமே இருக்கும். பிரபாகரனையும் மற்ற முக்கியமானவர்களையும் சரணடைய வைத்து காந்திக்குக் கட்டிவைத்த மாதிரி ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டிவைத்து நவ நாகரீக அகிம்சாவாதியாக பிரபாகரனை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும்.
உவன் மகிந்தனைப் போல கொலை செய்வதைவிட துண்டுகட்டி அகிம்சாவாதி ஆக்குவது பலமடங்கு பலன் தரும் என்பது ஐரோப்பியனுக்குத் தெரியும். ரவுடியாகவே வளர்ந்த மகிந்தனுக்கு போட்டுத் தள்ளுவதைத் தவிர வேற எதுவும் தெரியாது.

இப்படியான சூழலில் தான் புலம்பெயர் நாடுகளில் பணம் கறந்து களம் காணாத போராளிகளுக்கு வன்னியைக் கூண்டோடு அழிக்க ஆசை வந்தது. கறந்த பணத்தை சாட்சி இல்லாமல் சுருட்ட கைலாயம் அனுப்புவதே ஒரே வழி என்பதை கச்சிதமாக கணக்குப் போட்டனர்.

பிரான்சிஸ் ஹரிசன்(BBC) எழுதிவைத்ததைப் போல பிரபாகரனையும் குழுவினரையும் நந்திக்கடலில் குந்தியிருக்குமாறு அறிவுரை கூறி அழித்து முடித்தனர். அமெரிக்கா வரும் ஐரோப்பா ஆளனுப்பும் என்று இவர்கள் அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை.

சாட்சி இல்லாமல் மகிந்தன் நடத்திய அழிப்புக்கும், சாட்சியில்லாமல் புலம்பெயர் புலிகள் சுருட்டிய பணத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு.

சரி கொன்று போட்டாப் பிறகும் தலைவர் வந்தால் தான் கணக்குக் காட்டுவம் என்று காசானந்தர்கள் நடத்தும் காவடியாட்டம் இன்னும் தொடர்கிறது.

சோளன் சிந்தனையை ஓடவிட்டுக்கொண்டிருக்க புலம்பெயர் சிந்தனைச் சிப்பிகளின் மூளைக்குள் இருந்து உதிர்ந்த முத்துக்களைக் கவனிக்கத் தவறிவிட்டான்.

இப்போது விவாதம் கொடியை நோக்கி திரும்பியிருந்தது. இஸ்லாமுக்கு ஒரு கொடி இருக்கிறது. அதற்கு அவர்கள் விளக்கம் வைத்திருக்கிறார்கள். சிங்களவன் ஒரு கொடி வைத்திருக்கிறான். பௌத்த பாசிசம் என்று அதுக்கு விளக்கம் சொல்லலாம். கம்யூனிஸ்ட்டுக்கு ஒரு கொடி இருக்கு அதுக்குப் பின்னாலையும் தத்துவம் இருக்கு. கொடியைப் போட்டுட்டு அதுக்கு தத்துவம் தேடிக்கொண்டிருக்கும் ‘மகான்கள்’ புலன் பெயர்ந்த தமிழர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

அதாலதான் மொள்ள மாறியளும், முடிச்சவுக்கியளும், கொடியோடை அலையுறாங்கள்.

ஈ பி ஆர் எல் எப், ஈரோஸ், புளட், டெலோ என்று நூற்றுக்கணக்கான இயக்கங்களிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் செத்துப் போனார்கள். சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு இப்பவாவது எல்லாரையும் இணைத்து ஒரு அரசியலையும் அடையாளத்தையும் கொண்டுவருவம் என்றால், வங்கோளிப் புலியைக் காட்டி ஈழத் தமிழர்களை வெருட்டுகிறார்கள்.

வங்கோளிப் புலியையும், ரஷ்யன்ட ஏ.கே 47 ஐயும் ரத்தைக் கறையையும் போட்டு ஒரு படத்தை உருவாக்கிப் போட்டு இதுதான் தேசியக் கொடியென்றாங்கள். சொந்த நாட்டில எதுவும் இல்லையா என்று கேட்டால் தேசியத்தின் பேரால் துரோகி என்கிறாங்கள். வங்கதேசத்துப் புலியை கூட்டுவந்து கடிக்க விடுவதா உங்கடை நோக்கம் என்றால் மூச்சு விடுறாங்கள் இல்லை.

சிங்களவன் சிங்கத்தை வைத்தால் நாங்களும் சரிக்குச் சரி ஒரு மிருகத்தை வைக்க வேணும் என்கிறார்கள். அப்ப, யாழ்ப்பாணம் மட்டும் தான் தமிழீழம் என்ற நிலைக்கு வந்தப் பிறகு அங்க என்ன மிருகம் இருக்கென்று தேடிப்பார்த்தால். மசிர்க்குட்டியைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. ஏதாவது ஒரு மிருகத்தை போட்டுத்தான் கொடி போடவேணும் என்றால் மசிர்க்குட்டியும் பூவரசம் இலையும் தான் தேசியக் கொடியாகும்.

வங்கோளிப் புலி போட்டு கொடி பிடித்தால் ராஜபக்சவுக்கு தேசிய பிஸ்னசுக்கு மேடை கிடைக்கும். இது தான் பலபேருக்கு விருப்பம். கூட்டிக் களித்துக் கணக்குப் போட்டால், வங்கோளிப் புலிப்படம் போட்ட கொடி பிடிக்கவேணும் என்று குரல்வளை கிழியக் கத்தும் யாராவது ஒருவர், இலங்கை அரசாங்கத்தோட வேலை செய்யவில்லை, இந்திய அரசாங்கத்தோடு வேலை செய்யவில்லை, காசுசேர்த்துப் பணம் சுருட்டவில்லை, கோயில் போட்டு பணம் சுருட்டவில்லை என்று முகம் காட்டிச் சொன்னால் சோளன் டொங் என்று காலில் விழவும் தயார்.

தேசியக் கொடி, தேசியத் தலவர்.. என்று ஜிகாதிகள் வேதம் ஓத உணவு விடுதியில் விவாதம் வெடித்துச் சிதற சோளன் சிந்தனையோடு வெளியேறினான்.

Exit mobile version