சமீபத்தில் ஆடு திருடிய இளைஞர்களால் ஒரு காவல்துறை ஊழியர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விசயம். இதன் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம். உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கியை உபயோகித்துக் கொள்ளலாம்! எனக் கூறியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு . இந்த செய்தியை போஸ்டர் பேப்பரில் போட்டு கொண்டாடுகிறது தினமலர். போலீஸிடம் துப்பாக்கி இருப்பது யாரை பாதுகாக்க?
என்பதை தினமலரின் மகிழ்ச்சி நமக்கு புரியவைக்கிறது. ஜெய்பீம் படத்தை தொடர்ந்து போலீஸ் வன்முறை குறித்து விவாதம் எழுந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக விவாதம் வேறு வேறு திசைகளில் சென்றுவிட்டது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் , பென்னிக்ஸ் , தந்தை மகன் இருவரையும் விடிய விடிய அடித்து சித்ரவதொ செய்து கொன்றது போலீஸ். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சிதம்பரம் பத்மினியின் பிறப்புறுப்பில் லத்தியால் செருகினார்கள். அவரது கணவன் முன்பாகவே ஆறு போலீஸ்காரர்கள் பத்மினியை மாறி மாறி வன்புணர்வு செய்தனர். அத்தியூர் விஜயா என்கிற இருளர் சாதிப் பெண்ணை போலீஸ் வன்புணர்வு செய்தது. அப்போதெல்லாம் அப்பாவிகள் போலீஸ் ஸ்டேஷன் போகும்போது துப்பாக்கி எடுத்துச் செல்லலாம்! என எந்த டிஜிபியாவது சொன்னார்களா?
எல்லாருடைய உயிருக்கும் மானத்துக்கும் ஒரே மதிப்புதான். சமூகத்தில் ஏன் திருட்டும் வன்முறையும் நிகழ்கிறது? அதிகாரத்துக்கு தெரியாதா? ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பு, மற்றும் பொருளாதார நிலை. வேலையின்மை. அனைவர்க்கும் இலவசக் கல்வி எனும் இலக்கை அடைய முடியாமல் செய்கிற தனியார்மயக் கல்வி. இப்படி நிறைய காரணங்கள் இருக்கின்றன. வன்முறைக்கு தீர்வு கையில் துப்பாக்கி வைத்துக் கொள்வதுதான்! என்றால், பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு, துப்பாக்கி தொழிற்சாலைகளைதான் தொடங்க வேண்டியிருக்கும். கர்ப்பிணிகளை அழைத்துச் செல்லும் பைக்கை எட்டி உதைக்கும் வக்கிரம் உடையவர்களும் காவல் துறையில் இருக்கவே செய்கிறார்கள். இத்தகையோரிடம் துப்பாக்கியும் இருந்தால்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது.