Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துப்பாக்கிச் சனியன்களுக்கு எதிராக மேலாடைத்துணி -மணிப்பூரின் வீர மகளிர்

nagawomவிடுதலையின் 62வது வருட நிறைவை நாடே கொண்டாட வடகிழக்கு மூலையில் மட்டும் கொண்டாட பெரிதாக ஏதுமில்லை.

    ஜூலை 23 என்ற சாதாரண ஒரு நாளில் மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ஒரு இளைஞனைக் காவல் துறையினர் விரட்டிச் செல்லும் போது ரபீனா தேவி என்ற ஒரு கர்ப்பிணி சுட்டுக் கொல்லப்பட்டாள். அதே நேரத்தில் ஐயத்திற்குரிய ஆயுததாரி ஒருவர் மருந்துக்கடையொன்றினுள் தள்ளப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தங்களை சுட்டதாக காவலர்கள் கூறிக்கொண்டனர்.

    இந்த போலி மோதலை ஒரு ஒளிப்படக் கலைஞர் படம்பிடித்து அது தெஹல்கா சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. இந்த ஒளிப்படக் கலைஞரும் எங்கே தன்னை அடையாளங்கண்டு கொள்வார்களோ? என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளார்.

    அவர்  எடுத்த 12 படங்களும் கீழ்க்கண்ட சாபக் கேடான குற்றத்தின் சாட்சிகளாக விளங்குகின்றன. வெறுங்கையுடனிருந்த சாங்காம் சஞ்சித் என்ற இளைஞனை  ஒரு மருந்துக்கடையினுள் நெட்டித் தள்ளியதன் பின்னர் அவனைப் பிணமாக வெளியே கொண்டு வந்து சுமையுந்து ஒன்றில் ஏற்றிச்சென்றனர். இந்நிகழ்ச்சி முழுக்க பட்டப்பகலில் (காலை 10.30 மணி) நெரிசல் மிக்க சந்தைப் பகுதியில் நடந்தது.

   

          ஓரவஞ்சனையான ஊடகப்பார்வை

    ஜூலை 31 ஆம் தேதி வெளிவந்த தெஹல்கா சஞ்சிகை அம்பலப்படுத்திய படுகொலையுடன் சேர்த்து மணிப்பூரில் இவ்வருடம் நடந்த மோதல் கொலைகளின் எண்ணிக்கை 225.

    முன்னாள் ஆயுததாரி ஒருவர் காவல்துறையின் அதிரடிப்படையினரால் மிக அருகாமையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வைப்பற்றி அம்மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய காங்கிர° முதல்வர், “நான் கொல்ல விரும்பவில்லை. ஆனால் வேறு வழி?” எனக் கூறுகின்றார்.

    முன்னாள் ஆயுததாரியின் கொலையைப் படம் பிடித்த ஒளிப்படப்பிடிப்பாளர் அதை இம்பால் ஊடகங்களில் வெளியிடாமல் அ°ஸாமிற்கு அனுப்பி, அதன் பின்னர் தெஹல்காவில் வெளியிடச் செய்தப்பிறகுதான் நாடளாவிய கவனம் பெற்றது.

    2004ஆம்  ஆண்டு மனோரமா என்ற இளம்பெண் அ°ஸாம் துப்பாக்கி படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வையொட்டி மணிப்பூரின் தாய்மார்கள் முழு அம்மணமாக போராட்டம் நடத்தினர். இது தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் நாட்டின் மனச்சாட்சியை சுட்டது.

    தைரியமான அழுத்தம் கொடுக்கக்கூடிய உள்ளூர் ஊடகங்கள் இல்லாத நிலையில் அரசு நடத்தும் கொலைகளுக்கு எவ்வித தண்டனையுமில்லை. தெஹல்காவின் அம்பலத்திற்குப் பிறகு உள்ளூர் ஊடகங்கள் கிளர்ச்சிகளை வெளியிடுகையில் அரசின் அராஜகம் கூடுதலாகியுள்ளது.

    இம்பாலின் கிழக்குப் பகுதியில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தைப் பதிவு செய்யச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது புகை குண்டு வீசிய அதிரடிக்காவல் படையினர், அவர்களை துப்பாக்கியின் முனையில் நிறுத்தி விசாரிக்கின்றனர்.

    வீதிகளில் ஆர்ப்பாட்டம்

    தெஹல்கா வெளிக் கொணர்ந்த இப்படு கொலையின் எதிரொலி இம்பாலின் வீதிகளில் ஆத்திரமாக வெடித்தது. பெண்கள், ஆண்கள், இளையோர் என வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, பாதுகாப்பு படையினருக்கு “ஆயுதப்படையினர் சிறப்பு அதிகார சட்டம்”  இன் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கை திரும்பப் பெறுவததோடு, நீதி வழங்குமாறும் கோரினர்.

    இந்த கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும் உயர்ந்தெழும் இக்கோரிக்கை தணிந்தபாடில்லை. ஏதாவது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு கோபத்தை வீதிகளுக்கு கொண்டு வந்து விடுகின்றது. இத போன்ற கிளர்ச்சிகளுக்கு ஆட்சியாளர்களின் எதிர் வினையும் புதிதல்ல.

    விடியலிலிருந்து அந்தி வரை ஊரடங்கு சட்டம், போராட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டு, பலப்பிரயோகம் என அரசு எதிர்கொள்கின்றது. இதன் எதிர்வினையாக, கடையடைப்பு, ஊரடங்கு சட்ட மீறல், கைதாதல் என மக்களும் போராடுகின்றனர். இவ்வாறாக வன்முனை சுழன்று கொண்டேயிருக்கின்றது.

    இம்முறை பிரச்சனை பெரும்பான்மை மெய்திகள் வாழும் இம்பால் பள்ளத்தாக்குடன் முடிந்துவிடவில்லை. டாங்குல் நாகர்கள் வசிக்கும் மலைப்பகுதிகளிலும் ஆக°ட் 12 அன்று நடந்த இரு ஐயத்திடற்கமான ஆயுததாரிகளின் கொலைகளைக் கண்டித்து கடையடைப்பு, கிளர்ச்சிகள் நடைபெற்றன.

    மணிப்பூரை அவதானிக்கும் வெளியாள் எவருக்கும் வியப்பூட்டக் கூடிய சங்கதி என்னவெனில், பெண்கள் அச்சம் தவிர்த்து அணி திரள்வதுதான். துவக்கு, கண்ணீர் புகை குண்டு, கேடயம் ஏந்திய காவலர்களுக்கு எதிராக தங்களது உணர்வை பதிவு செய்யும் முகமாக தங்களது மேலாடைகளைப் கழற்றி தரையில் பரப்பி விடுகின்றனர்.

    எமா கெய்தல்  என்றழைக்கப்படும் இம்பாலின் அனைத்து மகளிர் சந்தையைச் சார்ந்த மகளிர், அணியணியாகச் சென்று தங்களது எதிர்ப்புணர்வை பதியும் முகமாக கைதாகின்றனர். பிரித்தாணியருக்கெதிரான போராட்டக் கூற்றை நினைவூட்டும் விதமாக இப்போராட்ட வடிவத்தை இன்னொரு ‘நூபிலா’ (பெண்களின் சமர்) என்றழைக்கின்றனர்.

    ஊடகங்களுக்கு பேட்டியளித்த சவுபா தேவி என்ற பெண் கூறுகையில், “பொறுத்துக் கொள்ளும் எல்லைகளைத் தாண்டி விட்டதால் இனிமேலும் எங்களால் வாளாவிருக்க வியலாது. எனவே தான் ஒன்று எங்களைக் காவல்துறை கொல்லட்டும் அல்லது சிறைப்பிடிக்கட்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்து வந்துள்ளோம்.”

    ஆயிரக்கணக்கான தினசரிக் கூலிகளின் வாழ்க்கையையும், கல்வியையும் ஊரடங்கு உத்தரவு எந்தளவிற்கு பாதித்துள்ளது என்பதை மணிப்பூரின் பெண்கள் விவரித்தனர். விடியலிலிருந்து பொழுது சாயும் வரை நடைமுறையிலுள்ள ஊரடங்கு காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவூட்டுவது, போதுமான நீரை பெறுவது, யாருக்காவது உடல் நலிவுற்றால் அவர்களுக்கு உரிய மருத்துவ உதவியைப் பெறுவது என அனைத்துமே பெண்களின் தலையில்தான் விழுகிறது.

    சிக்கலான சூழல்

    மணிப்பூரின் சூழல் மிகவும் சிக்கலானது. 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரள். 40க்கும் மேற்பட்ட கோத்திர, இனக்குழுக்கள் தங்களுக்கிடையேயும் அரசுக்கெதிராகவும் போரிடுகின்றனர். அத்துடன் சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டத்துணையுடன் பல்லாயிரக்கணக்கான ராணுவ, துணை நிலை ராணுவப்படையினர் வேறு.

    மணிப்பூரில் உள்ள ஊடகவியலாளர்கள் அரசுக்கும், தலைமறைவுக் குழுக்களுக்கு மிடையே சிக்கித் தவிக்கின்றனர். தினசரி ஊடகப் பணி என்பது கண்ணி வெடிப்பரப்பினுள் நடப்பதைப் போன்றதுதான். பெருநிலப்பரப்பில் வசிக்கும் நாம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நடப்பதைப் பற்றி கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். மணிப்பூர் என்பது முடிவில்லாத ஒரு சண்டைக்களம் மட்டுமல்ல, இயல், இசை, நாடகத்துறை மரபுசார் கைவினைத்திறன், விளையாட்டு போன்றவற்றில் செழித்த மாநிலமது. விருது பெற்ற புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகாம் இம்மாநிலத்தைச் சார்ந்தவர்தான். தொடர்பாடலின் முதல் அடி என்பது தகவல்களை அறிவதுதான். வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் அது அறவே இல்லை என்பதுதான்.

    பன்றிக்காய்ச்சல் பீதியினால் மும்பை, புனே நகரங்களில் நடந்த தன்விருப்ப கடையடைப்பு என்பது பரவலாகப் பேசப்படுகின்றது. ஆனால் மணிப்பூரில் வலுக்கட்டாயமாக கடையடைப்பு என்பது நடைபெறுகின்றது. ஆனால் அதைப் பற்றி மிகக் கொஞ்சம்தான் நாம் அறிந்துள்ளோம். நியூயார்க் வானூர்தி நிலையத்தில் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டதை ஊடகங்கள் குவிமையப்படுத்துகின்றன. ஆனால் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அன்றாடக் காட்சிகள் என்பதை நம்மில் ஒரு சிலரே அறிவோம்.

    அன்னிய நாடொன்றில் வரிசையில் நிற்பவரைத் தனியாக அழைத்து விசாரித்தால் அது குற்றமாக இருக்கலாம். ஆனால் உங்களது சொந்த நாட்டிலேயே அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் போது, நீங்கள் கேள்விகளால் துளைக்கப்பட்டு சோதனையிடப்படும் போது அதை எப்படி நீங்கள் உணர்வீர்கள்?

    இதைத்தான் மணிப்பூரின் மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டக் குரல் கேட்கப்படவுமில்லை, கவனிக்கப்படவுமில்லை.

    – (கல்பனா ஷர்மா, செவந்திநைனான் ஆகியோர் எழுதிய கட்டுரைகளின் சுருக்கம் 23,30/08/09, ஹிந்து நாளிதழ்)

மொழியாக்கம் : பஷீர்(shalai_basheer@yahoo.com)

Exit mobile version