கடந்த பல மாதங்களாக டெல்லி உட்பட பல மாநிலங்களில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் சவாலாக விளங்கினாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த போராட்டங்கள் பெருமளவு பரவாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களை தீவிரப்படுத்த ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கொரோனா காலத்திலும் தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்று கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த நரேந்நதிர சிங் தோமர், “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே அரசு தயாராக உள்ளது. ஆனால், வரும் முன்பு, விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு அவர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.