Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திமுக கூட்டணியை எதிர்ப்பது பாஜக ஆதரவுதான் ஏன்? – மாதவராஜ்

இப்போது திமுக கூட்டணியை எதிர்ப்பவர்களை மட்டும் பிஜேபி ஆதரவானவர்கள் என்று சொல்கிறீர்களே, அப்படியென்றால் சென்ற தேர்தலில் இடதுசாரிகள் நீங்கள் மக்கள் நலக் கூட்டணி அமைத்தது பிஜேபிக்கு ஆதரவு நிலைபாடுதானே?

சென்ற தேர்தலுக்கு முன்பே மத்திய பிஜேபியின் பாசிச ஆட்சியின் நடவடிக்கைகளையும், அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்து எப்போதும் போல் இடதுசாரி கட்சிகள் இயக்கங்கள் நடத்தி வந்தன. ஒருமித்த கருத்துக்களோடு இருந்த விசிக, மதிமுக போன்ற கட்சிகளோடு கூட்டு இயக்கங்களும் நடக்க ஆரம்பித்தன.

சென்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுக தலைவர் ஜெயலிதாவும் இருந்தார்கள். பிஜேபியோடு அதிமுகவும் சரி, திமுகவும் சரி கூட்டணி அமைக்கவில்லை. பிஜேபி தனித்து விடப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பு பிஜேபிக்கு சுத்தமாக இல்லை.

எனவே சென்ற தேர்தலில் திமுகவும் சரி, அதிமுகவும் சரி, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிஜேபி குறித்த பெரிய அளவில் விமர்சனங்களை முன்வைக்கவில்லை. பிஜேபி அரசின் ஆபத்தை முழுமையாக உணராத போக்கு இரண்டு கட்சிகளிடமும் இருந்தது.

திமுகவும், அதிமுகவும் தங்களுக்குள் யார் ஆட்சி பொறுப்புக்கு வருவது என்று ஒன்றையொன்று கடுமையாய் விமர்சனம் செய்து கொண்டு தேர்தலை சந்தித்தன.

இந்துத்துவா சக்திகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் , அதன் சித்தாந்தங்களுக்கு தமிழகம் மெல்ல இரையாகிக் கொண்டு இருப்பதை இடதுசாரி சக்திகள் உணர்ந்திருந்தன. இரண்டு திராவிடக் கட்சிகளும் தங்கள் சித்தாந்தங்களில் நீர்த்துப் போனதும் , சித்தாந்தமற்ற அரசியலில் இந்துத்துவா சக்திகள் எளிதில் ஊடுருவ முடிந்ததையும் அறிந்திருந்தன.

எனவே – தமிழகத்தில் பிஜேபி எந்தத் தொகுதியையும் வெல்வதற்கான ஆபத்தற்ற சூழலில் – தமிழக அரசியலில் கருத்தியல் ரீதியாக மக்களை சென்றடைவதற்கான உத்தியாகவும், ஒரு மாற்று அரசியலை முன்வைக்க கிடைத்த வாய்ப்பாகவுமே சென்ற தேர்தலை இடதுசாரிக் கட்சிகள் கையாண்டன.

தேர்தலில் அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்தது. மக்கள் நலக் கூட்டணியால் திமுக தோற்றது என்று விமர்சனங்கள் எழுந்தன. அப்போது பிஜேபியும் ஒரு தொகுதியிலும் வென்றிருக்கவில்லை.

அதன் பின்னரே, ஜெயலலிதா மரணம், அதைத் தொடர்ந்த மத்திய பிஜேபி அரசின் கபளிகர ஆட்டம், அதிமுக அரசும் அமைச்சர்களும் மத்திய அரசுக்கும் பிஜேபிக்கும் கை கட்டி நின்ற பரிதாபங்கள் என நிகழ்வுகள் நடந்தேறின. இவை யாவும் தேர்தலுக்குப் பின்னர் நடந்த எதிர்பாராத காட்சிகள். பிஜேபியின் மூர்க்கத்தனமான, அநியாயமான ஆட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதற்கு எப்படி மக்கள் நலக் கூட்டணி பொறுப்பாகும்? மக்கள் நலக் கூட்டணியே பிஜேபிக்கு ஆதரவு நிலைபாடு என்று எப்படி சொல்ல முடியும்?

ஆனால் இந்தக் கெட்டதில் நல்லது ஒன்றும் நடந்தேறியது. பிஜேபி மிகக் கடுமையாக தமிழகத்தில் அம்பலப்பட்டது. இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற நிற்கும் வெறியைக் கண்டு, தமிழகத்தில் இருக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அனைத்தும் தங்கள் முன் நிற்கும் ஆபத்தை முழுமையாக உணர முடிந்தது. திமுகவும் வெளிப்படையாக பிஜேபி எதிராக கருத்துக்கள் தெரிவித்ததுடன் இயக்கங்கள் நடத்தியது.

இடதுசாரி, ஜனநாயக சக்திகளோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு விரிந்த பரந்த அளவில் திமுக தலைமையில் பாசிச பாஜகவுக்கு எதிராக சித்தாந்த ரீதியாக இந்துத்துவாவை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும் வேண்டும் என்னும் பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் அணி திரண்டு இருக்கின்றன. அதுதான் எதிர்காலத்துக்கான நம்பிக்கை.

பிஜேபியோ மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த அதிமுக கட்சியோடு இணைந்து தேர்தலில் நிற்கிறது. அதிமுக வெற்றி பெற்றால் அது மத்திய பிஜேபியின் வாலாகத்தான் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் இந்த தேர்தலில் முறையே பாசிச பாஜவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நிற்கின்றன. தெளிவாகப் பிரிந்து இரண்டு அணிகளாக நிற்கின்றன.

அதனால் திமுக கூட்டணியை எதிர்ப்பது, பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு என்றே தர்க்க ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் கருத வைக்கும்.

Exit mobile version