சென்னையில் 16 இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன. கொளத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். எழிலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகன் கலந்து கொள்கிறார். வட சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் ஆர்.டி.சேகர், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். போராட்டம் குறித்து கட்சியின் முன்னணித் தலைவர்களுடன் கருணாநிதி நேற்று மாலையில் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், போராட்டம் அமைதியாக நடைபெற, போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் இடங்களை திமுகவினர் ஏற்கனவே அறிவித்துள்ளதால், அங்கு ஒவ்வொரு துணை கமிஷனர் தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களில் டிஎஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ராமானுஜம் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆலோசனை நடத்தினார்.
யார் யார்: திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாளை(4ம்தேதி) காலை முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் துரை முருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, டி.«.க.எஸ் இளங்கோவன் எம்பி உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கலந்து கொள்ள சம் மதம் தெரிவித்து பெயர்களை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். போராட்டம் எப்படி நடைபெற வேண்டும் என்பதை ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார். போராட்டத்தில் கைதாகும் தொண்டர்கள் ஜாமீனில் வெளிவர மாட்டார்கள். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.