டக்ளஸ் தேவானந்தா அவர்களே,
பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிமல்கா பெர்னாண்டோ அவர்கள் தடுப்பு முகாம்களில் மக்கள் நடாத்தப்படும் முறை பற்றிச் சொல்லியிருக்கிறாரே? 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்ட மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்பதாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இங்கெல்லாம் அருகில் இருப்பவருக்குத் தும்மல் வந்தாலே, பன்றிக் காய்ச்சல் வந்துவிடுமோ என்றி மூக்கைப் பொத்திக்கொள்கிறார்கள்.
என்னே கேவலமையா உங்கள் ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது?
நீங்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கம் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்த போது ஏதோ நீங்கள் மூச்சுக்கூட விடாமல் மௌனமாய் இருந்தீர்களே அதையெல்லாம் இப்போது பேசவேண்டாம். உங்களுக்கு ஒரு நியாயம் இருந்தது .. புலிகள் அழிக்கப்படுகிறார்களே என்று!
நீங்கள் எதுவுமே பேசாமல் அரச நியாயாம் கற்பித்துக் கொண்டிருந்த வேளைகளிலெல்லாம் உங்கள் மக்கள் சேவைக்குத் தடையாகப் புலிகள் இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருந்தீர்கள்!
இப்போதுதான் புலிகள் இல்லையே. அதுவுமல்லாமல் நீங்கள் எதிர்பார்த்த ஆட்சி அதிகாரமும் உங்கள் கரங்களிலே குவிந்துள்ளதே.
உங்களையெல்லாம் நிமல்கா பெர்னாண்டோ போல அரசிற்கெதிராகவெல்லாம் பேசச் சொல்ல யாரும் கோரிக்கை விடவில்லை. அதெல்லாம் பெரிய விடயம், வேண்டாம்..
இதோ உங்கள் கண்முன்னாலேயே உங்கள் மொழிபேசும் மக்கள் முகாம்களில் அனாதைகள் போல கொல்லப்படுகிறார்களே?
ஹிட்லரின் சித்திரவதை முகாம்களை விடவும் கேவலமான நிலையில் மக்கள் அணுவணுவாகக் கொல்லப்படுகிறார்களே?
இதைப்பற்றி எல்லாம் இன்னமும் நீங்கள் மூச்சு விடவில்லையே? புலிகள் இல்லாத “சுதந்திர பூமியில்” ஆட்சி நடத்தும் நீங்கள் அந்த மக்களை வெளியேற்ற என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
மூன்று நாட்களாக வெள்ளத்தில் மலக் கழிவுகளின் மத்தியில் மிருகங்களைப் போல வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் மக்களை முன்றே நாட்களில் புலித் தலைமையை முற்றாக அழித்த “செயற்திறன் மிக்க” உங்கள் அரசாங்கத்தின் ஊடாக அம்மக்களைத் தற்காலிகமாகவேனும் காப்பாற்றலாமே?
மேற்கு நாட்டுத் தன்னார்வ நிறுவனங்களையே முகாம்களின் பக்கம் நெருங்கவிடாத உங்கள் அரசு எங்களையெல்லாம் அதுபற்றிப் பேசவே அனுமதிக்காது எனவே நீங்கள் தான் ஒரே ஒரு சரியான ஆள். உங்கள் அரசாங்கம் அல்லவா….?
உங்கள் உயிரைத் துச்சமென மதித்து, வெளியே வந்து இதோ இந்த அரசு இனப்படுகொலையை முகாம்களிலும் நடத்திக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் நீங்கள் கூறுவீர்கள் என்றும் சர்வதேச அமைப்புக்களின் தலையீட்டை உங்கள் ராஜபக்ஷ நண்பர்களுக்கு எதிராகக் கோருவீர்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க நாங்கள் எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள்களல்ல.
இதற்கு முன்னால் ஆயிரம் பகிரங்கக் கடிதங்களை ஆயிரம் பேர் எழுதியிருப்பதாகக் கேள்வியுற்றிருப்பீர்கள் இது ஆயிரத்து ஒன்றாவதாக இருக்கலாம். ஆனால் இது அவசரமானது.. நாளை பொழுது புலர்ந்தால் எரிக்கப்பட்டதிலிருந்து தப்பியோடி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் நோயின் பிடியில் அழிக்கப்பட்டுவிடுவார்கள்.
உங்கள் பதிலை எதிர்பார்க்காத ..
வட்டக்கச்சியான்
15.08.2009