Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தலைமைகளே… தலைவர்களே…! : எஸ்.ஹமித்

bloodedHands

(உம்மத்தில் ஒருவன்)

தலைமைகளே… தலைமைகளே…

இஸ்லாத்தை அடகு வைத்து
இலாபம் தேட முனையாதீர்…!
முஸ்லிம்களை விற்றுமக்கு
முடிசூட எண்ணாதீர்…!

தலைமைகளே… தலைமைகளே…

அல்லாஹ்வின் உருவமென
பொல்லாத பொம்மை செய்து
எல்லோரும் பார்த்திருக்க
எரித்தவரைச் சேராதீர்…!

தலைமைகளே… தலைமைகளே…

கண்டித்து ஹலாலுணவைக்
கண்டிவரை ஆட்டம் போட்ட
சண்டியரின் ஆட்சிக்கு
சாமரங்கள் வீசாதீர்…!

தலைமைகளே… தலைமைகளே…

முஃமினான மாதர்களின்
முக்காட்டை களையச் சொல்லி
‘முசுப்பாத்தி’ பண்ணியோர்க்கு
முண்டெதுவும் கொடுக்காதீர்…!

தலைமைகளே… தலைமைகளே…

பள்ளிகளின் உட்புறத்தில்
பன்றிகளின் இரத்தத்தை
அள்ளியள்ளித் தெளித்தோரை
ஆதரிக்க நினையாதீர்!

தலைமைகளே… தலைமைகளே…

இறையில்லம் பலவற்றை
இடித்தழித்த பின்னணியில்
இருப்போரின் அரசவையில்
இனிமேலும் இருக்காதீர்!

தலைமைகளே… தலைமைகளே…

தறிகெட்ட நாய்களைப்போல்
தர்காநகர் அளுத்கமையில்
வெறியாட்டம் ஆடியோரை
வெறுத்திடுவீர்; விரும்பிடாதீர்!

தலைமைகளே… தலைமைகளே…

உம்மத்தின் கோரிக்கையை
உறுதியுடன் செவிமடுப்பீர்…
எம்மவுத்து வந்திடினும்
எமதுரிமை காத்திடுவீர்!

Exit mobile version