Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தலைகளைப் பறி கொடுத்தோர்!! : மா.சித்திவினாயகம்

உண்மையிலேயே அந்தப் பலசரக்குக் கடை விளம்பரங்களைப்
படித்துப்பார்த்ததில்
மிக…மிக…சர்ச்சைக்குரியதாகவும்….சஞ்சலப்படுத்துவதாகவும்…
பயப்பட வைப்பதாகவும்…இருந்தது!

தலையுள்ள இறால்களை விட…………
தலையில்லா இறால்களுக்கும்
தலையுள்ள நெத்தலிகளை விட……………
தலையில்லா நெத்தலிகளுக்கும்
அதிக விலையும் அதிக மவுசும் என
அந்த விளம்பரங்கள் –என்னைக்குழப்பி விடுகின்றன !

தலைகள் இருப்பதே கேவலமாகவும்
கௌரவக் கோளாறாகவும் உணருகிற நாட்கள் இது !
மண்ணுள் புதைந்த பாறாங் கல்லெனச்
சிந்திப்பதையே மறுதலித்தெறிந்து

பழைய பித்தலாட்டக்காரர்கள்…
காலம் காலமாக விரித்துப் போட்டிருக்கிற
கட்டுக் கட்டான பொய்ப் பந்தல்களின் மேல்
தலையே இல்லாமல் – நீ தத்தி நடக்கலாம் !
படுத்து உறங்கலாம் ! குந்தியிருந்து பஞ்சாயத்து நடத்தலாம் !

செத்தபிணங்கள் முரசமொலிக்க‌
எலும்புக்கூடுகள் ஊர்வலம் போகுமாம்.
சிந்திய குருதியுள் நாடுகள் அமிழ்ந்து
நமக்கென ஒருபெரு உலகம் விரியுமாம்.
கதையளந்து, வெறும் வாய்ப்பந்தல் போடலாம்!
உரலில் போட்ட தானியம் போல உன் இனத்தை – நீயேகுத்தி அரிக்கலாம் !
அழுது புரண்டெழும் வாழ்விற்கு
அர்த்தமிருப்பதாய் புரட்டுக் கூறித்
தீபாவளி ,பொங்கல், புதுவருசம் எனச் சலிப்புகளை
உற்சாகங்களாக்கி வியாபாரமாய் விற்றுத் தள்ளலாம் !

பிரபஞ்சத்திற்கான புதிய சங்கீதங்களைச் சுடுகாடாக்கி விட்டு
அடுத்தவன் பிரக்ஞையை உன் பிரக்ஞை என்று வாதிடும்
உனக்கு – வட்டமாய் திரண்ட ஓர் தலையிருந்தென்ன ???
இல்லாமலிருந்தென்ன ??

ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படும் இவரின் கவிதைகள் “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

பின் இவர் புலம் பெயர் நாடுகளில் பல புனை பெயர்களில் எழுதினார். ஜேர்மனியில் இளம் அருவி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984ல் அதனை வெளியீடு செய்தவர். அங்கிருந்த காலத்தில் “தீ” என்னும் கவிதைதொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பிறகு இவர் கனடாவிற்குப் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அங்கு தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட “அரும்பு” சிறுகதைத் தொகுதியில் இவரின் “குறி” சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகிப் பயன் பாடுமிக்க கவிதையரங்குகளை நடத்தினார். இணையங்கள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகள், சஞ்சிகைகள் எனப் பலவற்றில் கவிதைகள் எழுதினார்.

பத்திரிகையில், தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி அவர்கள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் இவரின் கவிதைதொகுப்பு ஒன்று  சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.

Exit mobile version