தலிபான்களால் அதிக அளவு பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தலிபான்களுடன் மென்மையாக போக்கைக் கடைபிடிக்கிறது. கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மித்தல் தலிபான்களின் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானெக்ஸாவைச் சந்தித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்துக்கள், இந்துத்துவ தேசியம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாஜக இந்தியாவில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஆப்கானில் தலிபான்களின் எழுச்சியில் இந்தியா என்ன முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கந்தகார் விமானக் கடத்தலின் பின்னர் பயங்கரவாதக் குழுவாக தலிபான்களைக் கருதி வந்த இந்தியா அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்பவே நடந்தது வந்தது.
இப்போது ஆசியாவில் உள்ள சீனா, இலங்கை, பாகிஸ்தான் என இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளும், இன்னொரு வல்லரசான ரஷ்யாவும் தலிபான்களுடன் மென்போக்கைக் கடைபிடிக்கும் நிலையில் அமெரிக்காவும் மோதல் போக்கை கைவிட்டு ஆப்கானை விட்டு வெளியேறி விட்டது. இப்போது இந்தியாவும் தலிபான்களுடன் விட்டுக் கொடுத்து போகும் சூழலில்தான் உள்ளது. கடந்த பல மாதங்களாக இந்தியா தலிபான்களுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கந்தஹார் விமானக்கடத்தலில் தலிபான்களுக்கு உள்ள தொடர்பும்
2008-09 ஆண்டில் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாலிபனின் துணைத் தலைவர் சிராஜுதீன் ஹக்கானிக்கு உள்ள தொடர்புமாக இந்தியா அவர்களை எச்சரிக்கையுடன் கையாண்டு வந்த நிலையில் இப்போது கத்தாரில் இருந்து தலிபான்களுடன் தொடர்புகளைப் பேண நினைக்கிறது இந்தியா.
ஆப்கானில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசையே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்காக மக்களால் தெரிவு செய்யப்படாமல் தலிபான்களால ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டாலும் அந்த விஷயத்தில் இந்தியாவால் தனித்து எதையும் செய்ய முடியாது.காரணம் அமெரிக்காவே சூடு பட்ட பூனையாக ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள அனுபவம் வெறும் அமெரிக்கா தொடர்புடையது மட்டுமல்ல,. அது இந்தியாவுக்கான பாடமும் கூட.