ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றாக வெளியேறியுள்ளதால் தலிபான்கள் நாடு முழுக்க அதை கொண்டாடி வருகின்றனர். காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் நாடு முழுக்க அவர்கள் அமெரிக்காவின் வெளியேற்றத்தை கொண்டாடி வருகிறார்கள்.
உலகில் உள்ள ஆயுதக் குழுக்களிலேயே நவீன ஆயுதங்களையும் அதி நவீன இயந்திர துப்பாக்கிகளையும், டாங்கிகளையுமே தலிபான்கள் பயன்படுத்தி வந்தனர்.அமெரிக்காவால் பயிற்ச்சி அளிக்கப்பட்ட ஆப்கான் ராணுவ வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்த போது அவர்கள் அமெரிக்க ராணுவத்திற்கு இணையாக பயன்படுத்திய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தலிபான்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
ஜூன் 2021 நிலவரப்படி ஆஃப்கன் விமானப் படையிடம் 167 விமானங்கள் இருந்தன. இதில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் இருந்தன. இந்த விமானங்களில் பெரும்பாலானவை இப்போது தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.
ஆப்கானிஸ்தான் அரசுக்குச் சொந்தமான 9 படைமுகாம் விமான தளங்கள் இருந்தன. இந்த தளங்களில் தாக்குதல் விமானங்களும், ஆளில்லாமல் தாக்கும் திறன் கொண்ட விமானங்களும் இருந்தன. இப்போது அந்த விமானங்களை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த விமானங்களை தலிபான்களால் உடனடியாக இயக்க முடியாது என்றாலும் இந்த அதி நவீன ஆயுதங்களை அவர்கள்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இது வரை ஆயுதக் குழுவாக இருந்த தலிபான்கள் இப்போது அரசாக மாற இருக்கிறார்கள்.ஆனால் அதை உலகின் பெரும்பான்மை மேற்குல நாடுகளோ அமெரிக்க ஆதரவு நாடுகளோ ஆதரிக்க வாய்ப்பில்லை. ஆனால். ஆசியாவில் சீனா , இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் ரஷ்யா போன்ற நாடுகளும் ஆதரிக்கும் என தெரிவதால் தலிபான்கள் அணுகுமுறையும் பழைய பாணியில் இருக்காது என்கிறார்கள்.