Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்களுக்கு என்ன தேவை? : சண் தவராஜா

இந்தப் பகுதியில் இனியொரு… இன் பிரதான கருத்தியலுக்கு முழுமையாக  உடன்பாடற்ற, முழுமையான தொடர்பற்ற  அரசியல் சமூகம் சார்ந்த  கருத்துக்கள் பதியப்படுகின்றன. விவாதத்தை நோக்கமாகக் கொண்டு கருத்துக்களைச் செழுமைப்படுத்தும் நோக்கில் இப் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்குப் பரிகாரமாக ஏதோவொரு தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய சூழலில் சிறி லங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்தத் தீர்வு ஒப்புக்காகவேனும் வழங்கப்பட்டாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எப்பாடு பட்டேனும் அத்தகைய தீர்வு ஒன்றை வழங்காமல் விட்டுவிட அல்லது குறைந்த பட்சம் குறுகிய காலத்திற்காகவாவது அதனை ஒத்திப் போட்டுவிட சிங்கள தேசம் கங்கணம் கட்டி நிற்கின்றது. அதற்காகப் பல்வேறு மாய்மால வித்தைகளை அது காட்டி நிற்கின்றது.
தேவையற்ற சர்ச்சைகளில் தமிழ் மக்களை இழுத்துவிட்டு தேசியப் பிரச்சினையில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிட முயன்றுவரும் சிங்களம், ஒருபடி மேலே சென்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை அச்சுறுத்திச் செயற்படாது தடுக்கும் நோக்குடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒரு அரசியற் படுகொலையையும் நிகழ்த்தியுள்ளது. தனது கைப்பிடியில் வைத்துள்ள கே.பி. போன்ற கைத்தடிகளால் புலம்பெயர் மக்களை |வெல்ல| முடியாது போயுள்ள சூழ்நிலையில் இறுதி ஆயுதமாகப் படுகொலைகளை அரங்கேற்ற சிங்கள அரசு துணிந்துள்ளது.
ஆனால், பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிய கதையைப் போன்று பரிதியின் நினைவு நிகழ்வில் திரண்ட தமிழ் மக்கள் கூட்டமும், சிங்கத்தின் குகை என சிங்களம் நினைத்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் தேசிய மாவீரர் நாள் அனுட்டான விடயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும் தடைகளையும் மீறி பொங்கி எழுந்தமைiயும், தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த மக்கள் துடித்து நிற்பதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலேயே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமையும் சிங்களம் எதிர்பார்த்திராத விடயங்கள் மாத்திரமன்றி, அதற்கு அதிர்ச்சி தரும் விடயங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பான கதைகள் அடிபடத் தொடங்கியுள்ளன. தென்னாபிரிக்க அரசாங்கம் இதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. நோர்வே அரசாங்கம் சமாதான முயற்சிகளில் இருந்து வெளியேறியதன் பின்னான சூழலில் அந்த வகிபாகத்தை நிரப்புவதற்குத் தென்னாபிரிக்கா களத்தில் இறங்கியுள்ளதைப் போன்று தெரிகின்றது.
உலகில் மூன்றாவது அதிக தமிழ் மக்களைக் கெண்ட நாடாக உள்ள போதிலும் தென்னாபிரிக்கா கடந்த 2009 யூனில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் சிறி லங்காவுக்கு எதிரான தீர்மானம் மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட போது சிறி லங்காவிற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தமையை மறந்துவிட முடியாது. சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணாக, தமிழ் மக்களைக் கூட்டுப் படுகொலை புரிந்து யுத்தத்தில் சிறி லங்கா வெற்றி பெற்றிருந்த அக்காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக தென்னாபிரிக்கா வாக்களித்து இருந்திருந்தால் நொந்து போயிருந்த தமிழ் மக்களுக்கு ஒரு சிறு ஆறுதலாவது கிடைத்திருக்கும்.
ஆனாலும் கூட இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையான மூன்றாந் தரப்பு என்ற அனுசரணையாளர் பாத்திரத்தை தென்னாபிரிக்கா வகிப்பதைப் புறந்தள்ளிவிட முடியாத நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.
இத்தகைய பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் திடீர்ப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சிறி லங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அழைத்ததாகவும், அதனை கூட்டமைப்பு நிராகரித்து பிறிதொரு திகதியில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் விமர்சிப்பவர்கள் இரா சம்பந்தன் தனியாகப் பேச்சுக்களில் கலந்து கொள்வாரா அல்லது ஏனையோரையும் அழைத்துச் செல்வாரா என்பது போன்ற கருத்தாடல்களைத் தொடங்கியுள்ளார்கள்.
ஏனைய பேச்சுக்களைப் போலன்றி தற்போதைய பேச்சுக்கள் ஏதேனும் ஒரு வடிவத்தில் |தீர்வு| ஒன்றைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களின் சார்பில் பேச்சுக்களில் கலந்து கொள்ளும் ஏக வாய்ப்பைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை நிறைவேற்றும் விதத்திலான தீர்வு ஒன்றைப் பற்றிப் பேசுமா என்ற நியாயமான கவலை பலரிடம் உள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இன்று விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதை மறந்துவிட முடியாது. அவ்வாறு பலவீனமான நிலையில் இருந்து கொண்டு பலமான கோரிக்கைகளை முன்வைத்துவிடவும் முடியாது.
இந்நிலையில், தமிழர் அரசியல் பலமிக்க அமுக்கக் குழுவாக விளங்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளதை மறந்துவிடக் கூடாது. தங்களின் எதிர்பார்ப்பாக – அதேவேளை ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டு சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளத் தக்கதான – ஒரு தீர்வுப் பொதியினை புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் முன்மொழியும் போது அது பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வலுச் சேர்ப்பதாக அமையும். இந்த இடத்தில், ஈழத் தமிழர் விவகாரத்துக்குத் தீர்வுகாணும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்களின் கருத்தும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட ஓ பிளேக் முன்பொரு தடவை கூறியமையை நினைத்துப் பார்ப்பது நல்லது.
தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும் சுயநிர்ணய உரிமையே என்ற போதிலும் இன்றைய சூழலில் அந்தக் கோரிக்கைக்கான சர்வதேச ஆதரவு கிட்டுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே, சாத்தியமான மற்றுமொரு தீர்வை முன்மொழிவதே சாலச் சிறந்தது. அவ்வாறு எதனையும் கூறாமல் இருந்துவிட்டு எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறைகூறுவதில் அர்த்தமிருக்க முடியாது.
அது மாத்திரமன்றி, தமிழர் தாயகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீள் கட்டுமான மற்றும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஒரு பொதுவான ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுச் செயற் திட்டத்தையும் தமிழர்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு பொது இணக்கப்பட்டுடன் கூடிய செயற்திட்டம் இருக்குமாயின் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனேயோ அன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் நிதியுதவியிலேயோ அதனை கொஞ்சங் கொஞ்சமாகவேனும் நிறைவேற்றிக் கொள்ளலாம். இன்றை நிலையில் தாயகத்திற்குப் புலம்பெயர் மண்ணிலிருந்து பாரியளவு நிதி அனுப்பி வைக்கப் படுகின்ற போதிலும், அந்த நிதி மத்தியப்படுத்தப்பட்ட ஒரு திட்டம் இல்லாத நிலையில் பெருமளவு விரயமாகி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
சர்வதேசச் சூழல் தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாறி வருவதைப் பயன்படுத்திக் கொள்வதனாலேயே இன்று நாம் ஒவ்வொன்றாக இழந்து போய்க் கொண்டிருக்கும் அற்ப சொற்ப உரிமைகளையாவது தக்க வைக்க முடியும்.

Exit mobile version