Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் பாடநூல்களில் இருந்த சாதி பெயர்கள் மொத்தமாக நீக்கம்!

1949 நவம்பர் 25 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு மீதான விவாதத்தைத் தொகுத்துப் பேசிய அண்ணல் அம்பேத்கர், ஜனவரி 26, 1950 அன்று இந்தியா மிகப் பெரிய முரண்பாட்டிற்குள் கால் வைக்கப் போகிறது என்ற எச்சரிக்கையை விடுத்தார்.
அரசியலில் ஒரு மனிதருக்கு ஒரு வாக்கு; ஒரு வாக்கிற்கு ஒரு மதிப்பு என்ற நிலையை அடைந்திருந்தாலும் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் அத்தகைய சமத்துவத்தை அடையவில்லை. இந்த முரண்பாட்டைக் களைவதே இந்த நாட்டிற்கு நல்லது என்றார்.‌
இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 17 தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று பிரகடனப்படுத்துகிறது; பாகுபாடு கொண்ட சமூக அமைப்பான ‘சாதி’ ஒழிக்கப்பட்டது என்பதே அதன் பொருள்.


ஒருவரை மற்றொருவர் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்த இயலாது. இவரை விட அவர் தாழ்ந்தவர்; அவர் சாதியில் பிறந்தவருடன், இவர் சாதியில் பிறந்த மகளோ மகனோ திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒருவர் கூறினால், அத்தகைய கூற்று இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.


சமத்துவக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை வகுப்பறையில் மாணவர்கள் உணரும்படியாக, கற்றல் கற்பித்தல் அமைந்திட வேண்டும் என்பதே கல்வி அமைப்பின் நோக்கம்.
அத்தகைய நோக்கத்தை நிறைவேற்றிடும் வகையில், பல்துறை ஆளுமைகள் பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தால் ஒழிக்கப்பட்ட, பாகுபாடு கொண்ட சமூக அமைப்பின் குறியீடான, சாதிப் பெயர் நீக்கிட தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.


“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வாக்கியமே நாமக்கல் கவிஞர் இராமலிங்கனாரை வரலாற்றில் நிலைப்பெறச் செய்தது; சாதிப் பெயர் அல்ல.முதன்முதலில் சங்க இலக்கியத்தை நேர்த்தியுடன் அச்சிட்ட, தமிழ் பதிப்புத் துறையின் முன்னோடி என்பது தான் யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரன் அவர்கள் வரலாற்றில் இடம் பெற காரணம்; சாதிப் பெயர் அல்ல.


காப்பியக்காலத்தை நன்கு உணர்ந்து, பதிப்பிக்க, சமணச் சமயத்தை வலிந்து கற்று, சங்க இலக்கியங்களைப் பதிப்பித்துத் தந்த பெருமையே உ. வே. சாமிநாதரை வரலாற்றில் இடம் பெறச் செய்தது; சாதிப் பெயர் அல்ல.


மானுடம் வெல்ல, அளப்பரிய சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் பெயருக்குப் பின்னால், அவர்களைக் குறுகிய வட்டத்தில் அடைத்து வைத்திருந்த சாதிப் பெயரை, பாடநூல்களில் இருந்து நீக்கிய நிகழ்வு, பல்துறை ஆளுமைகளைப் பெருமைப்படுத்தி, பொதுமை மாந்தர்களாக அவர்களை மாணவர்கள் உணரச் செய்திடும் நடவடிக்கை.
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உள்ளிட்டோர் விரும்பிய சமத்துச் சமூகத்தைக் கட்டமைத்திடும் நோக்கத்துடன், பாடநூல்களில் பல்துறை ஆளுமைகளின் பெயருடன் இருக்கும் சாதிப் பெயரை நீக்கும் தமிழ் நாடு அரசின் நடவடிக்கையைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முழு மனதுடன் வாழ்த்தி வரவேற்கிறது.
தீட்சிதர், தேசிகர் உள்ளிட்ட, சாதிய அடையாளத்தைக் கொண்டு, பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சொற்களையும் தமிழ் நாடு அரசு நீக்கிட வேண்டும்.பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பெயர்களில் இருக்கும் சாதியைக் குறிக்கும் சொற்களை, தமிழ் நாடு அரசு நீக்கிட உத்தரவிட வேண்டும்.


இரண்டாயிரம் ஆண்டுகளாக பாகுபாடு கொண்ட சமூக அமைப்பின் காரணமாக கல்வி மறுக்கப்பட்டு, கல்வியிலும், சமூகத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கிடப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு நடைமுறைக்காக வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், சாதியை வளர்ப்பதற்கு அல்ல; மாறாக சாதியை ஒழிப்பதற்கே.
பல நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கான தீர்வே இட ஒதுக்கீடு.


சாதிவாரி இட ஒதுக்கீட்டை வைத்துக் கொண்டு பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப் பெயரை நீக்குவதால் என்ன பலன் என்று கேட்பவர்கள், சமத்துவச் சமூகத்தைக் கட்டமைக்க விரும்பாத – பாகுபாடு கொண்ட சமூக அமைப்பைத் தொடரச் செய்ய விரும்புகிறவர்கள்.
இறந்த பிறகு உடலைப் புதைக்கவும், எரிக்கவும் தனித்தனியாக இடுகாடும், சுடுகாடும் வைத்துக் கொண்டு, தன் மக்களுக்குத் தன் சாதியில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பரப்புரை செய்து கொண்டு, வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க, பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை விமர்சிப்பவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானவர்கள்.
இவர்களை மாணவர்கள் சரியாக அடையாளம் கண்டு, சாதி ஒழிப்பு குறித்தச் சரியான புரிதலை ஏற்படுத்தும் விதமாக வகுப்பறை உரையாடல் நிகழ்ந்திடும் வகையில் பாடத்திட்டமும், பாட நூல்களும் அமைந்திட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ் நாடு அரசைக் கோருகிறது.

முனைவர் பி. இரத்தினசபாபதிதலைவர்முனைவர் முருகையன் பக்கிரிசாமிதுணைத் தலைவர்பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபுபொதுச் செயலாளர்பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

Exit mobile version