Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் நாடு இலங்கை மீனவர்களிடயே பேச்சுவார்த்தை தோல்வி

தமிழ்நாடு மற்றும் இலங்கை நாட்டு மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. சர்வதேச கடல் எல்லையில் பாரம்பரியப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், எல்லை கடந்து வந்து மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படும் அவலநிலை தொடர்கிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு, அவர்களை மீட்க தேவையான துரித நடவடிக்கைகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். இந்த நிலைக்கு முடிவு கட்டும் நோக்கத்தில், மீனவர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இருதரப்பு மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் ஜெயலலிதா செய்தார். அதன்படி, இருநாட்டு மீனவ பிரதிநிதிகளும் கடந்த ஜனவரி 27–ந் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முன்னதாக தமிழகத்திலும், இலங்கையிலும் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த மற்ற நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை கொழும்பில் ஏப்ரல் 13–ந் தேதி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு கோரியபடி, இலங்கையில் கைதாகி இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் இலங்கை அரசு விடுதலை செய்யாவிட்டாலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நிலை தொடர்ந்தாலும், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார்.எனவே இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை மே 12–ந் தேதி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு மத்திய அரசு தகவல் அளித்தது. எனவே இதுபற்றி 10–ந் தேதியன்று தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மீன்வளத் துறை செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து கொழும்பில் நேற்று இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. தற்போது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதால், 6 பேர் கொண்ட உயர்மட்ட குழுஅமைக்கப்படும். இரண்டு நாட்டிலும் இருந்து தலா 3 அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த உயர்மட்ட குழுவின் கூட்டம் அடுத்தமாதம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version