Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்(5): T .சௌந்தர்

தமிழ் திரை இசையின் ஜாம்பவான்களாக இருந்த ஜி.ராமநாதன், எஸ்.வீ. வெங்கட்ராமன் , எஸ்.எம். சுப்பையாநாயுடு, சி.ஆர். சுப்பராமன் ,கே.வீ . மகாதேவன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,ஆர்.சுதர்சனம் , ஏ .எம் ராஜா ,கண்டசாலா , எஸ் .தட்சிணாமூர்த்தி , வீ. தட்சிணாமூர்த்தி , சீ. என் பாண்டுரங்கன், எஸ்.ராஜேஸ்வரராவ் , ஆதிநாராயணராவ் மற்றும் வேதா, ஜி .கே.வெங்கடேஷ் , ஆர் .கோவர்த்தனம், ஜி.தேவராஜன் , எம்.பி. ஸ்ரீனிவாசன், விஜயபாஸ்கர் போன்ற இசை மேதைகளின் வழித் தோன்றலாக இளையராஜா வருகிறார்.

இளையராஜாவின் வருகை தமிழ் திரையிசையின் புதிய பரிமாணமாக அமைந்தது.ஹிந்தி திரைப்படப்பாடல்களின் ஆதிக்கத்தின் நீட்சி தொடர்ந்த காலத்தில் இளையராஜா அறிமுகமானார்.1950 களில் ஆரம்பித்த தமிழ் மெல்லிசையாக்கம் , 1960 களில் நல்ல நிலையில் வளர்ந்ததெனினும் ஹிந்தி இசையின் தாக்கத்திலிருந்து முற்றாக விடு பட முடியவில்லை.ஹிந்தி படப்பாடல்கள் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்திவந்தன.1976 ல் அன்னக்கிளி வந்ததும் நிலைமை முற்றாக மாறியது என்பது தமிழ் திரையிசையின் வரலாறாகும்.எனது பத்து வயதுகளில் நான் கேட்ட அன்னக்கிளி பாடல்கள் மிக்க தாக்கம் விளைவித்தன. . கேட்ட இடத்திலேயே நின்று ,பாடல் முடியும் வரை நின்று கேட்ட பாடல்கள் அவை என்பது எனது முதல் இசை அனுபவம் ஆகும். குறிப்பாக எஸ்.ஜானகி பாடிய ” அன்னக்கிளி உன்னைத் தேடுதே ” என்ற பாடலில்ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் இனம் புரியாத மயக்கம் தந்தது என்பேன்.அந்தப் பாடலில் இழைந்திருந்த , இனம் புரியாத சோகம் , விம்மல் அதன் காரணமாக இருந்திருக்கலாம்.!

அந்த நேரத்தில் யார் பாடியது ,யார் இசையமைத்தது என்பதெல்லாம் தெரியாது.அறியாத வயதாக இருந்தாலும் நல்ல இசைக்காக மனம் திறந்திருந்தது என்பேன். ” அன்னக்கிளி உன்னைத்தேடுதே ” என்ற அந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம் ஆபேரி என்பது இப்போது புரிகிறது.

உருக்கமும் , இனிமையும் , ராஜகம்பீரமும் ஒன்றிணைந்த அற்ப்புதமான தமிழ் ராகம் ஆபேரி.இந்த ராகத்தில் அமைக்கப்படுகின்ற பாடல்கள் பெரும்பாலும் ஹம்மிங் உடன் தான் அமைக்கப்பட்டிருக்கும். அந்த பாடலில் அன்னக்கிளி என்ற பாத்திரத்தின் சோகம் சொல்லப்பட்டு விடுகிறது.

நாடகம் ,கூத்து போன்ற கலை வடிவங்களை விட மக்கள் சினிமாவை தமக்கு நெருக்கமனாதாக கருதுகின்றனர்.ஸ்டுடியோ தளங்களில் உருவான காட்சி அமைப்புக்கள் மாறி , கிராமங்களில் நேரடியாக ஒளிப்பதிவு செய்யும் ஒரு போக்கின் ஆரம்பமாக அமைந்த படமான ” அன்னக்கிளி ” யில் அறிமுகமானவர் இளையராஜா. கதைக்கேற்ப இசையும் கிராமத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.படத்தின் டைட்டில் இசையே அதை கட்டியம் கூறி விடுவதாய் அமைந்தது.அந்த டைட்டில் இசையிலேயே தமிழக நாட்டுப்புற இசையும் ,மேலைத்தேய இசையும் இணைந்த இசையாக அதனை அமைத்திருப்பார் இசைஞானி இளையராஜா.

தமிழ் நாடக அரங்கு சங்கரதாஸ் சுவாமிகளால் எவ்வாறு புத்தெழுச்சி பெற்றதோ , அதை போன்றே தமிழ் திரை இசையும் இளையராஜாவின் இசையால் புத்தெழுச்சி பெற்றது எனலாம்.தமிழ் மரபுகளை நன்கறிந்த சங்கரதாஸ் சுவாமிகள் போலவே , இளையராஜாவும் அதிலிருந்தும் தனக்கு முன்பிருந்த திரை இசை மேதைகளின் பாதிப்பிலும் , அவற்றுடன் நாட்டுப்புற இசை, கர்னாடக இசை , மேலைத்தேய செவ்வியல் [ Western Classsical Music ] போன்ற இசை வகைகளின் இனிய கலப்பிசையாக தனது படைப்புக்களை உருவாக்கினார்.நாட்டுப்புற இசை , கர்நாடக இசை , மேலைத்தேய செவ்வியல் இசை போன்றவற்றில் அவருக்கு இருக்கும் தேர்ச்சி முன்பிருந்த இந்திய இசையமைப்பாளர்களுக்கோ அல்லது பின்னையவர்களுக்கோ இல்லை.இவை மட்டுமல்ல ஜாஸ் இசை போன்றவற்றிலும் அவருக்கு இருக்கும் அபாரத் திறமை இந்திய இசையமைப்பாளர்களுக்கு இல்லை எனலாம்.

இவ்விதம் பலவகை இசை தெரிந்தவராக இருந்த போதிலும் , அர்த்தமற்று குழப்பாமல் , அவற்றை எல்லாம் தனது கைதேர்ந்த கலை ஆற்றலால் கேட்கக் கேட்கத் திகட்டாத , கேட்கக் கேட்கப் புதுமைமிக்க , கலையுணர்வை அள்ளித்தரும் பாடல்களாக்கி தமிழ் மக்கள் மனங்களில் நிலைபெறச் செய்த மேதையாகத் திகழ்பவர் இசைஞானி இளையராஜா.பலவிதமான இசைகளையும் பின்னிப் பின்னி , குழைத்துக் குழைத்து இசையில் பிரமிப்புக்களை தோற்றுவித்த நேரத்தில், அவை தோற்றத்தில் எளிமையையும் கலந்திருக்கும் அர்ப்புதங்களை செய்து காட்டியவர் இசைஞானி.

அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் வெளிவரும் போது, அவற்றை முதலில் கேட்கும் போது , மிகச் சாதாரணமானது போல இருக்கும்.ஆனால் , தொடர்ந்து கேட்கக் கேட்க புது , புது விடயங்களை அவதானிக்கக் கூடியதாய் இருக்கும். கேட்கக் கேட்க புதுமை மிளிரும் பாடல்களாய் இருப்பதை நம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

நாம் அன்றாடம் கேட்ட பல வாத்தியங்களின் ஒலிகளிலும் புதுவிதமான , வியப்பூட்டும் சப்தங்களை உண்டாக்கிக் காட்டினார்.அவை சப்த தொழில் நுட்பத்தால் செய்யப்பட்டதல்ல.அவை அவரது ஆரம்பகால பாடல்களில் , சிறப்பான தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே செய்து காட்டப்பட்டன என்பது வியப்புக்குரியது.!

மிகச் சிறந்த இசைமரபைக் கொண்ட தமிழ் சூழலில் , பலருக்கு அது சுமையாய் அமைந்து விட்ட சூழ் நிலையில் , அதிலிருந்து உள்ளக்கிளர்ச்சிகளை உருவாக்கக் கூடிய , சில சமயங்களில் அந்த மரபை மேலும் செழுமை படுத்தக் கூடிய இசை விநோதங்களை இளையராஜா படைத்துள்ளார்.பல குரல் இசையிலும் [ chorus ] , வாத்தியைசையமைப்பிலும் [ Orchestra music ] இவை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டிருக்கின்றன.பாடலின் போக்கில் , பின்னே இழுபட்டுப் போகும் மன சலிப்பைத் தரும் பாதையை மூடி ,பாடலின் உணர்வை மேலும் கூட்டும் படியாக வாத்திய இசையின் இனிமையால் கற்பனையில் புதிய தரிசனங்களைக் காட்டியவர் இளையராஜா.அவரது பாடலின் நடுவே வரும் இடையிசைகளை கேட்பவர்கள் இதனை உணரலாம்.

ஒரு பாடலில் , ஒரு தமிழ் செவ்வியல் [ கர்னாடக இசை ] ராகத்தை அடிப்படையாக கொண்ட மெட்டிருக்கும், அதில் நேர்த்தியான மேலைத்தேய செவ்வியல் வாத்திய இசையும் , தமிழக நாட்டுப்புற இசையின் கூறுகளும் , நம்மைப் பிடித்தாட்டும் நாட்டுப்புற தாளமும் ஒன்றிழைத்துப் பின்னப்பட்டிருக்கும்.நாட்டுப்புற இசை, கர்னாடக இசை , மேலைத்தேய செவ்வியல் [ Western Classsical Music ] போன்ற தனித்துவம் மிக்க இசை வகைகளை இளையராஜாவை போல் மிக லாவகமாகக் கலந்தவர்கள் யாரூமில்லை எனலாம்.தமிழ் மக்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் , மண்ணில் வேர் ஊன்றிய இசையால் இசையுணர்வை தட்டி எழுப்பியவர் இசைஞானி. இந்த பேராற்றலால் இசையை தமிழ் சினிமாவின் கதாநாயகன் ஆக்கினார்.

முன்பிருந்த கதாநாயகர்களின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டது.இளையராவின் இசை இருந்தால போதும் , கதாநாயகர்களாக யாரையும் வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை உருவாகியது.அற்பத்தனத்தின் சின்னமாக இருந்த தமிழ் திரை உலகின் கதாநாயகர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது நியாயமானதே. ஒரு சிலரை சிறந்த நடிகர்கள் என்றும் , வேறு சிலரை மட்டமான நடிகர்கள் என்பது போன்ற கருத்துக்களை தமிழ் பத்திரிகைகள் திட்டமிட்டு பரப்பி வந்தன. “பெரிய ” என்று அவர்களால் புளுகப்பட்ட ஜிகினா கதாநாயகர்கள் செய்வதை தான் இவர்களும் செய்தார்கள்.!! இந்த கதாநாயகர்கள் கூட இரண்டாம் பட்சமாக்கப்ப்ட்டார்கள்.அந்த”மட்டமான “நடிகர்களின் படங்களிலும் சிறப்பான இசை தான் இருந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கப்பட்டது இசைஞானிக்கே என்பதும் அவரது இசையின் ஆத்திகம் எனலாம்.

இவரது கட்டுக்கடங்காத, மிதந்து வரும் இசை அலைகளுக்கு ஈடு கொடுக்க பாடலாசிரியர்களால் முடிவதில்லை. இவரது இசையின் கற்பனை வளத்துக்கு பாடலாசிரியர்களால் ஈடு கொடுக்க முடிவதில்லை.அதனால் பாடல் எழுதுவது என்பது அர்த்தமற்ற சடங்குகளாக்கப்பட்டன.

இசை என்பது தனி மொழி என்பது இசைஞானியின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்ப்பட்டது.மொழியின் மாயைகளை எல்லாம் இவரது இசை இலகுவாகக் கடந்து விடுவதால் , தடுமாறும் பாடலாசிரியர்களுக்கு அவரே அடி எடுத்துக் கொடுக்கும் நிலையும் நடந்தேறியுள்ளது. மெட்டுக்களுக்கு ஈடு கொடுக்க முடியாத ” கவிஞர்கள் ” ராஜா , ரோஜா , மயிலே , குயிலே ஏதேதோ எல்லாம் எழுதி தள்ளியிருக்கிறார்கள்.தமிழில் இயல் , இசை ,நாடகம் என்பது கலையின் வரிசைப்படுத்தலாகும்.படைப்பாற்றலில் முன்னிறுத்தப்பட்ட இயல் [ கவிதை ] பின்னுக்குத் தள்ளப்பட்டதையிட்டு பாடலாசிரியர்களை பின்னுக்குத் தள்ளுவதாகக் இளையராஜா மீது குற்றச் சாட்டு வைக்கப்பட்டது.

அவருக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் எல்லாம் பாட்டுக்கு இசையமைத்தது போலவும் , இளையராஜா தான், தன்னுடைய மெட்டுக்கு பாடல எழுத நிர்ப்பந்தந்திப்பதகவும் செய்திகள் வெளியாகின.தமிழ் திரையிசையில் வெளிவந்த 99 வீதமான பாடல்கள் எல்லாம் மெட்டுக்கு எழுதப்பட்டவையே. அதில் ” பெரிய கவிஞர்கள் ” என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் மெட்டுக்கு பாடலை விரைவாக எழுதக்கூடியவர்களாக இருந்ததாலேயே அவ்விதம் பெயர் எடுத்தார்கள்.இசை என்பது மொழியின் எல்லைகளை எல்லாம் கடந்த . தன்னளவில் மிக உயர்ந்த கலை என்ற நிலை இளையராஜாவின் காலத்தில் அவரது இசையால் உருவானது.

படைப்பாற்றல் மிக்க ஒரு முழுமையான ஒரு கலைஞனாக அவரைக் குறிப்பிடலாம். மேலை நாட்டில் கலைஞர்கள் பெரும்பாலும் தாங்களே பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடுவார்கள்.அந்த வகையில் இந்தியாவில் அவரே பாட்டெழுதுவது , இசையமைப்பது , பாடுவது போன்றவற்றால் முழுமையான கலைஞனாக விளங்குகிறார்.எனக்குத் தெரிந்த வகையில் ஹிந்தி இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் என்பவர் பாடலாசிரியராக இருப்பவர் . ஆனால் அவர் பாடி நான் கேட்டதில்லை.இளையராஜா பாடல்களையும் மிகச் சிறப்பாக பாடுவார். உணர்ந்து பாடுவது அல்லது இதயத்தால் பாடுவது , அல்லது ஆத்மாவால் பாடுவதென்பதை அவர் எழுதி இசையமைத்துத் தானே பாடிய

” இதயம் ஒரு கோவில் – அதில்
உதயம் ஒரு பாடல் ” [ படம் : இதயக்கோயில் ]

என்ற பாடலில் துல்லியமாகக் கேட்கலாம். அதே பாடலை பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பாடியிருக்கிறார் [ இளையராஜாவின் பாடல் போல் அல்லாமல் வெறும் அலங்காரம் அதில் வெளிப்படும் ] ,எனினும் இளையராஜாவின் பாடல் உள்ளத்தால் பாடிய பாடல் என்பதை நாம் துல்லியமாய் கேட்கலாம்.இதே தன்மையை ” நானாக நான் இல்லை தாயே ” என்ற பாடலிலும் நாம் அவதானிக்கலாம்.எத்தனையோ பாடல்களை இதற்க்கு உதாரணம் கூறலாம்.

தமிழக நாட்டுப்புற இசை, கர்னாடக இசை போன்றவற்றுடன் அவரது இசைக்கு முக்கிய அகத்தூண்டுதலாக [ Inspiration ] இருந்தது மேலைத்தேய செவ்வியல் இசை [ Western Classsical Music ]ஆகும்.இசை ஒரு சமூகத்தின் பண்பாட்டின் விளைபொருள் என்றால் , அப்படிப்பட்ட இசை மற்றொரு பண்பாட்டிலிருந்து வரும் இசையுடன் கலப்பது அல்லது இணைப்பது என்பது இலகுவான காரியமல்ல.இரு வேறு நிலைப்பட்ட , பண்பாட்டுப் பின்னணியைக் கொண்ட இசையை கலப்பது என்பது இரண்டு இசையையும் கற்று தெளிந்தவர்களுக்கே சாத்தியமாகும்.குறிப்பாக ஹார்மொனியை அடிப்படையாகக் கொண்ட மேலைத்தேய செவ்வியல் இசையை [ Western Classical music ]நமது இசையுடன் கலந்து , இணைத்து அவர் தந்த இசை , உலக இசைக்கு கிடைத்த புது இசை எனலாம்.குறிப்பாக பாடல்களுக்கிடையில் அவர் கொடுத்திருக்கும் இடை இசைகளை [ InterLutes ] போல எங்கும கேட்டிருக்க முடியாது.

அவற்றையும் , அவர் இசையமைத்த படங்களின் பின்னணி இசையையும் ஒரு தொகுப்பாகத் தொகுத்தால் அவை உலக இசைக்கு ஒரு புதிய வகையான இசையாக அமையும் என்பதில சந்தேகம் இருக்கமுடியாது.அப்படிப்பட்ட ஓர் அழகும் , இனிமையும் நிறைந்த இசையை உலகில் எங்கும் கேட்டிருக்கவும் முடியாது.மேலைநாட்டு செவ்வியல் இசையில் ஞானமும் , பரீட்சயமும் இருந்தாலும் அவற்றில் நிறைய பரிசோதனை செய்யும் பேராசை , ஆர்வம் அவரை இயக்கியிருக்கிறது.அந்த பரிசோதனைகளில் அவர் தானும் பயின்று நம்மையும் மகிழ்வித்திருக்கிறார்.

வாத்திய இசைக் கலவைகளில் அவர் வடித்துத் தந்திருக்கும் வித விதமான, மனதை வருடுகின்ற வார்த்தையால் வர்ணிக்க முடியாத, கற்பனைகளின் உச்சங்களான இசைத் துணுக்குகளை எல்லாம் கேட்டால் அவரது இசையின் வேட்கை எப்படிபட்டது என்பது புரியும்.அந்தவகையில் அவருக்கு சமைதையாக யாரயும் முன் நிறுத்த முடியாது.அவை கற்பனையின் சிகரங்கள் என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இவ்விதம் வித விதமான நாதக் கனலின் கலவைகளை , வெவேறு விதமான , பல வகைப்பட்ட வாத்தியங்களை வைத்து அவர் நிகழ்த்தியிருக்கும் நாத விநோதங்களின் மூலம் வாத்தியங்களைடையே ஒரு சமத்துவ நிலையை காண்பித்து வாத்தியங்களுக்கிடையேயும்ஒரு ஜனநாயகப் பண்பை சாவகாசமாகக் காட்டியிருப்பார்.வாத்தியங்களுக்கிடையே ஏற்றத் தாழ்வில்லை.இசையின் போக்குக்கு , அதன் வெளிப்பாட்டிற்கு ஏற்ப வாத்தியங்களின் சேர்க்கையை அவர் கையாளும் முறையில் அவர் ஒரு மகா சிற்பி. இசையில் எவ்வளவு தீவிரம் , ஆற்றல் இருப்பதால் தான் அவர் இது போன்ற அற்ப்புதங்களை அனாசாயமாக தந்திருப்பது சாத்தியமாகியிருக்கிறது .

பாடல்களில் பலவிதமான உணர்வு நிலைகளுக்கு ஏற்ப வாத்தியங்களை அவர் பிரயோகித்திருக்கும் முறையை ஒவ்வொரு பாடலிலும் கேட்டு அதிசயிக்கலாம்.அதிலும் ஒவ்வொரு வாத்தியங்களிலும் என்னென்ன விதங்களில் எல்லாம், கலா நேர்த்தியுடன் இடையிசையை வழங்கியிருகிறார் என்பதை ஏராளமான பாடல்களின் மூலம் உதாரணங்களாகக் காட்டலாம்.அவற்றைப் பாடல்களுடன் கேட்பது முழுமையான இன்பம். ஆனால் இடையிசையை [ InterLutes ] தனியே பிரித்தெடுத்துத் தனியே கேட்கும் போது அதன் இனிமையும் , அவர் கலாமேதமையும் உணரலாம். ஏனெனில் அப்போது தான் அதில் முழுக் கவனமும் நம்மால் செலுத்த முடியும்.இல்லை என்றால் பாடலின் இனிமையில் மெய்மறந்து போக நேரிட்டு விடும்.வாத்தியனகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் வயலின் என்ற வாத்தியத்தை அவர் எத்தனையோ விதங்களில் பயன்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்.ஒவ்வொரு பாடலிலும் நாம் அதனை கேட்கலாம். எத்தனை விதவிதமாக இசையை தந்த அவர் அவை போல மீண்டும், மீண்டும் வராமலும் பார்த்திருக்கின்றார்.தொல்காப்பியர் கீழ் கண்ட பாடலில் சொல்வார்.

சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல்; மாறுகொளக் கூறல்;
குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;
பொருளில கூறல்; மயங்கக் கூறல்;
கேட்போர்க் கின்னா யாப்பில் ஆதல்;
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்;
தன்னா னொருபொருள் கருதிக் கூறல்;
என்ன வகையினும் மனங்கோ ளின்மை;
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும். (தொல்.110)

கூறியது கூறல்; மாறுகொளக் கூறல், குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;. பொருளில கூறல்; மயங்கக் கூறல் இலக்கியத்திற்கு மட்டுமல்ல இசை போன்ற கலைகளுக்கும் பொதுவானதாக உள்ளது எனலாம். இந்த வழுக்களை மிக நுட்பமாகத் தவிர்த்திருக்கிறார் இளையராஜா. அவர் நினைத்திருந்தால அவர் போட்டமெட்டுக்களையே திருப்பித் , திருப்பி வெவேறு விதமாகப் போட்டிருக்க முடியும்.

அவர் அவ்வாறு செய்திருந்தாலே அவர் இன்னும் 30 வருடங்கள் நிற்க முடியும்.கற்பனையின் அதீதங்களை படைத்த அவர் , ஒவ்வொரு பாடலிலும் புதிது , புதிதாக தாவி சென்றிருக்கிறார். இவரது படைப்பாற்றல் திறன் என்பது மனித மூளையின் அற்ப்புதங்கள் அல்லது வினோதங்கள் என்று தான் எண்ணத்தோன்றும்.

மேலைத்தேய இசையில் CounterPoint [ மெட்டுக்குள் மேட்டு ]என்று சொல்லப்படுகின்ற ஒரு சிக்கலான , மேலைத்தேய இசையமைப்பாளர்களில் மிகவும் திறமைமிக்கவர்களால் கையாளப்படும் ,மிக இனிமையனதுமான ஒரு நுட்பம் இருக்கிறது.அதில் சிறந்து விளங்கியவர் Johannes Sebastian Bach [ 1665 – 1750 ] என்ற சிம்போனி இசை மேதை.அந்த இசை முறையை இளையராஜா ஒரு சில தமிழ் பாடல்களில் முழுமையாகச் செய்து காட்டியிருக்கிறார்.கீழ் கண்ட பாடல்களில் முழுமையாக இந்த முறையை பயன் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

1. என் கண்மணி உன் காதலி [ படம்: சிட்டுக்குருவி ] பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இந்தப் பாடல் பற்றிய சுவையான தகவலையும் இளையராஜா சொன்னார். இந்த CounterPoint [ மெட்டுக்குள் மேட்டு ] முறையை இந்த பாடல் காட்சிக்கு பொருத்தமாக வந்த போது, கவிஞர் வாலிக்கு இந்த இசை முறை பற்றி விளக்கிய போது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை என்றும் , பின் தானே ஒரு பாடலை முன்மாதிரியாக எழுதிக்காட்டி விளக்கிய பின்னர் தான் அவர் முழுமையாக அந்தப் பாடலை எழுதியதாக சொன்னார் இளையராஜா.

2. பூமாலையே தோள் சேரவா [ படம்: பகல் நிலவு ] பாடியவர்கள்: இளையராஜா + எஸ்.ஜானகி

3. தென்றல் வந்து தீண்டும் போது [ படம்: அவதாரம் ] பாடியவர்கள்: இளையராஜா + எஸ்.ஜானகி
இந்த CounterPoint முறையை ஒவ்வொரு பாடல்களிலும் வரும் இடை இசையில் வரும் வாத்தியங்களில்எத்தனையோ விதம் ,விதமாகவும் , கோரஸ்களில் விதமாகவும் ஆயிரக்கணக்கான பாடல்களில் வார்த்தையால் வர்ணிக்க முடியாதளவு CounterPoint களை அள்ளிவீசியிருப்பார் இசைஞானி. விதம் ,விதமான நிறங்களை தான் விரும்ய கோணங்களில் நிறுத்தி உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார்.மரபு ராகங்களைக் நவீன இசைக்குள் இழுத்து வந்த இவரது கலா மேதமைத்தனம் இவருக்கு முன்பும் , பின்பும் எவருக்கும் இருக்கவில்லை.

சிறுகதையில் புதுமைப்பித்தன் , புராதன கதை மாந்தரை உலாவவிட்டதைப் போல இசையில் தனக்கு முன்பிருந்த இசை மேதைகளின் படைப்புக்களை தனது இசையில் தோரனைகளாக உலவ விட்டு , தனது படைப்புக்களுக்கு உத்வேகம் [ Inspiration ] மூட்டி நம்மை இனம் புரியாத பரவசத்திற்கு உள்ளாக்கியவர் இளையராஜா! தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் த்னன்னையும் விஸ்தரித்துக் கொண்டு , தான் கற்றவற்றிலிருந்து பெற்ற அனுபவம் மட்டுமல்ல தன ஆளுமையால் இசையில் புதிய பரிமாணங்களை செய்து காட்டியவர்ர் இளையராஜா.

ஜி.ராமனாதனின் பாடல்களையும் , சி.ஆர் .சுப்பராமனின் பாடல்களையும் , விஸ்வநாதன் ராமூர்த்தியின் பாடல்களையும் ,இவர்களைப் போலவே இன்னும் பல இசைமேதைகளின் பாடல்களை எல்லாம் தோரனைகளாக்கி, எல்லோரும் இலகுவில் கண்டு பிடிக்க முடியாதவாறு இசையில் ஒரு புத்துணர்ச்சியை , விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.பாடல்களில் சௌந்தர்யத்தையும் , நெகிழ்வையும் , உருக்கத்தையும் , களிப்பையும் , நகைச்சுவையையும் , நுட்பமாகவும் , அநாயாசமாகவும் செய்து தனது மேதைத்தனத்தை நிரூபித்தவர் இசைஞானி இளையராஜா.INSPIRATION ஆக அவை எடுத்தாளப்பட்டாலும் கேட்பவர்கள் நெகிழும் வண்ணம், ஆச்சரியப்படும் வண்ணம் , குதூகலிக்கும் வண்ணம் இருக்கும்.கைதேர்ந்த கலா மேதமை அவரது தனித்துவாமாகும்.

ஜி.ராமநாதன் இசையமைத்த சக்கரவர்த்தி திருமகள் [1957 ] படத்தில இடம் பெற்ற” சங்கத்துப்புலவர் பலர்” [ பாடியவர்கள்:என்.எஸ்.கிருஷ்ணன் , சீர்காழி கோவிந்தராஜன் ] என்ற பாடலை அகத்தூண்டலாகக் [Inspiration] கொண்டு
” சாதி மத பேதமின்றி சண்டை சிறு பூசல் இன்றி சகலரும் செல்லும் சினிமா” [பாடியவர் : இளையராஜா ] பாடலில் மேல் சொன்ன என்.எஸ்.கிருஷ்ணன் பாடலின் நையாண்டி தன்மை நிறைந்திருக்கும்.

சி.ஆர் .சுப்பராமன் இசையமைத்த தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற
” ஓ.. ஒ . ஒ தேவதாஸ் …” என்ற பாடலை [பாடியவர்கள்: கண்டசாலா + ராணி ] ஆதாரமாக வைத்துக் கொண்டு” அடி வான் மதி என் பார்வதி “ [படம் : சிவா ]
பாரியாத பூவே அந்தக தேவ லோக தேனே “

” ஒ.. பாட்டி நல்ல பாட்டி தான் “போன்ற பாடல்களை அற்ப்புதமாக அமைத்ததுடன் , வாத்திய இசையால் நம்மை புதிய உலகத்திற்கும் அழைத்துச் சென்றிருப்பார்.தேவதாஸ் பட பாடலின் அந்த டியூன் நமக்கு பரீட்ச்யமாயிருந்தாலும் , அதையும் தாண்டி பல்வேறு நிலையில் அது புது பாடலாகி விட்டது.அந்த பாடலில் நம்மை வைத்து புதிய உலகத்தைச் சுற்றி காட்டியது போல.!! நமக்கு தெரிந்த டியூன் தான எனினும், நமக்கு தெரியாத டியூனும் அதில் இருக்கும்.கீழ் கண்ட பாடலிலும் இது போன்ற செய்திகள் உண்டு.

” முதன் முதாலாக காதல் டூயட் பாட வந்தேனே ” [படம்: நிறம் மாறாத பூக்கள் ] என்ற பாடலின் நடுவே “எழிலார் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள் ” என்ற வரிகளைக் கொண்ட தேவதாஸ் பட பாடலான ” சந்தோசம் தரும் சவாரி போவோம்” என்று தொடங்கும் பாடலின் வரிகளை அனாயாசமாக பயன்படுத்தியிருப்பார்.

” தரைமேல் பிறக்க வைத்தான் ” [ பாடியவர்:டி.எம் .சௌந்தரராஜன் ] [இசை: விஸ்வநாதன் ராமூர்த்தி, படம் : படகோட்டி]என்ற பாடலை அகத்தூண்டலாகக் கொண்டு [Inspiration]

” கடலிலே எழும்புற அலைகளை கேளடி ” [பாடியவர் : இளையராஜா ] பாடலில் மேல் சொன்ன தன்மை நிறைந்திருககும்.
இவை இசையில் நனவோடை யுத்தி எனலாம்.நினைவுப் பாதையில் மேல் மன எண்ணத்தின் செயல்பாடாகவும் , அடிமன எண்ணத்தின் செயல்பாடாகவும் அமையும் முறை.இந்த யுத்தி இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அலை , அலையாக எழும் உள் மன எண்ணங்களை சித்தரிக்கும் முறை என்பர்.

” நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் ” [ படம் : அன்பே வா / பாடியவர்:டி.எம் .சௌந்தரராஜன் ] [இசை: விஸ்வநாதன் என்ற பாடலை அகத்தூண்டலாகக் கொண்டு

” புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா” [ படம்: அபூர்வ சகோதரர்கள் ] என்ற பாடலை, யாரும் கண்டு பிடிக்க முடியாதவாறு அமைத்தார்.அது மட்டுமல்ல தமிழ் நாட்டுபுற இசையின் நுண்ணிய அழகுகளை எல்லாம் காட்டியதுடன் , அதன் நுண் விவரணைகளின் மூலம் தமிழ் செவ்வியல் இசையின் [கர்னாடக இசை ] ராகங்களை காட்டி , நாடுப்புற இசையின் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் தான் தமிழ் செவ்வியல் இசை [கர்னாடக இசை ] என்பதை எத்தனையோ பாடல்களில் நிரூபித்தவர்இளையராஜா. சிந்துபைரவி [1984] படத்தில் , ” பாடறியேன் படிப்பறியேன்” என்ற பாடல் மூலம் ஒரு காட்சியில் , நாடுப்புற இசையிலிருந்து தான் கர்நாடக இசை வந்தது என நிரூபிக்கும் ஒரு காட்சி எல்லோரும் அறிந்தது.

ஆனாலும் நூற்றுக்கணக்கான ,அவர் இசையமைத்த பாடல்கள் நாட்டுப்புற பாணியில் அமைந்த பாடல்களிலும் செவ்வியல் இசை ராகங்கள் இருக்கும்.அந்த ராகங்களை எல்லாம் இழுத்து நாட்டுப்புற சாயம் போட்டு விட்டிருப்பார்.இவ்விதம் மெட்டுக்களை மாற்றுவதை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் வார்த்தையில் சொல்வதனால்” வேட்டிக்கு சாயம் பூசுவது போல “.!

” நெஞ்சம் மறப்பதில்லை அது ” [ பாடியவர்:பி .பி .ஸ்ரீநிவாஸ் + சுசீலா ] [இசை: விஸ்வநாதன் ராமூர்த்தி, படம் : நெஞ்சம் மறப்பதில்லை [1963 ]என்ற பாடலை அகத்தூண்டலாகக் கொண்டு [Inspiration]

வான் உயர்ந்த சோலையிலே – இதயக்கோயில் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி பாடிய அந்த பாடலின் ஆரம்பத்தில வரும் ஹம்மிங்கை அமைத்திருப்பார் இளையராஜா.

இந்த மாதிரியான இசையில் அகத்தூண்டுதல் [ INSPIRATION ] போன்ற விடயங்களை , நுட்பங்களை எல்லாம் பொது ஜனங்களுக்கு வெளிப்படையாகச் சொன்னவரும் இளையராஜா தான்!!. மக்கள் மத்தியில் இசை பற்றிய ஒரு விழிப்புணர்வும் , விரிந்த பார்வையும் அவரின் வருகையால் ஏற்ப்பட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.மதுரையில் 1987 இல் நடைபெற்ற , ஆர்மேனியாவில் இடம் பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மூத்த இசையமைப்பாளர்களான கே.வீ.மகாதேவன் , எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் , விஸ்வநாதன் ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்களை எல்லாம் எப்படி, எப்படி வெவ்வேறு பாடல்களாக மாறினார் என்பதை அவர்கள் முன்னிலையில் பாடிக்காண்பித்தார்.அதனை விஸ்வநாதன் ” இது நமது தொழில் ரகசியம் , அதை இங்கே பேசக்கூடாது”என்று சொல்லி விட்டு தானும் எப்படி எப்படி எல்லாம் மாற்றினேன் என்று பாடிக்காட்டினார் . அன்று அந்த மேடையில் இளையராஜா பாடிக்காட்டிய ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்கள வருமாறு.

1. ” வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ” [ படம் : பாத காணிக்கை ]

2. ” பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா” [படம் : பணத்தோட்டம் ]

3. ” மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று ” [படம் : பந்தபாசம் ]

இந்த மூன்று பாடலகளையும் மாற்றி, மாற்றி அந்தந்த மெட்டிலும், அதே சமயம் அடுத்த பாடலின் மெட்டலும் பாடலாம். ” வீடு வரை உறவு வீதி வரை ” என்ற பாடலின் மெட்டை வைத்துக் கொண்டு மற்ற இரண்டு பாடல்களையும் பாடலாம். அதே போலவே ஒவ்வொரு பாடல்களையும் அவ்விதம அடுத்தடுத்த பாடலின் மெட்டில் பாடலாம்.சந்தம் ஒன்றாக இருக்கும்.இந்த பாடல்களின் அமைப்பு முறையை இளையராஜா பின்னரும் பலமேடைகளில் பாடிக்காட்டியிருக்கிறார்.இந்த சந்தப்பாடல் என்பது தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.அது தனியே ஒரு துறையாக கருதப்படுவதாகும்.அவை வண்ணப்பாடல்கள் என்றும் அறியப்படுகின்றன.இந்த வண்ணப்பாடல்களில் சமயக் குரவரான சம்பந்தர் வியக்கத்தக்க பாடல்களை எழுதியுள்ளார்.அருணகிரிநாதரும் சிறப்பான சந்தக்கவிதைகளை தந்தவராவார்.அருணகிரிநாதரின் “ஏறுமயில் ஏறு விளையாடும் முகம் ஒன்று ” சந்தப்பாடலை அடிப்படையாககொண்டு இளையராஜா மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்று கேளு என்ற கரகாட்டகாரன் படப்பாடலை தந்தார்.அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாகும்.

நாட்டுப்புற இசை என்றாலே ” எல்லாம் வெறும் தன்னானே , தன்னானே தானே “என்றும் தங்களை ” மேன்மக்களாக ” கருதிய , புதுமைப்பித்தன் வார்த்தையில் சொன்னால் ” அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகள் ” இளையராஜா பயன் படுத்திய நாட்டுப்புற இசையால் கொதிப்புற்றார்கள்.

” நிதி சால சுகமா – ராம
நி சந்நிதி சேவ சுகமா”

[ அதாவது காசு சம்பாதிப்பது நல்லதா ? இல்லை உன் சந்நிநிதியில் சேவை செய்வது நல்லதா ?] என்று பாடி ” காசுக்காக பாட மாட்டேன் ” , ” மன்னனையும் புகழ்ந்து பாட மாட்டேன் ” என்று சங்காரம் செய்த தியாகய்யரை பெருமையாக , முன் மாதிரியாகக் காட்டி விட்டு , ” ஒரு கச்சேரிக்கு இவ்வளவு தொகை தந்தால தான் கச்சேரிக்கு வருவேன்” என்று தியாகய்யரின் ” கொள்கைகளை ” குழி தோண்டிப்புதைத்தவர்கள் இளையராஜாவை எதிர்த்தார்கள். 50 கீர்த்தனைகளை வைத்துக்கொண்டு பிழைப்பை நடாத்தியவர்கள் நாட்டுப்புற இசையின் வல்லமையை காட்டிய இளையராஜா மீது ” அறம் ” பாடினார்கள்.1977 , 1978 காலங்களில் ” இதயம் பேசுகிறது ” என்ற வார இதழில் கர்னாடக இசையின் கொடுமுடி என்று கருதப்பட்ட இசை விமர்சகர் சுப்புடு, இளையராஜாவை தாக்கி எழுதிக்கொண்டிருந்தார்.அதில் வெளிப்பட்டதேல்லாம் காழ்ப்ப்புணர்ச்சி தவிர வேறொன்றுமில்லை. பிற்காலத்தில் அதே சுப்புடு இளையராஜாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.சுப்புடுவுடன் நேரடியாகப் பழகிய ராகவன் தம்பி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்.

” பிற்காலத்தில் சுப்புடு இளையராஜா பற்றிய தன்னுடைய கருத்துக்களை முற்றிலும் மாற்றிக் கொண்டார். நேர்ப்பேச்சில் ஒருமுறை உண்மையாவே அவன் ராகதேவன் தான்யா… அவனை மாதிரி கல்யாணியையும் , ஹம்சானந்தியையும் இப்படிக் கும்பாபிஷேகம் பண்ணி அசத்த முடியாதுய்யா… என்பார். இது தவிர இளையராஜாவின் செந்தூரப்பூவே பாடலை சுப்புடு சொக்கிப் போய்க் கேட்டதை நான் கண்டிருக்கிறேன்.”

அதையெல்லாம் தாண்டி கர்னாடக இசை தனக்கு சாதாரணம் என்பது போல , அதில் பயன்படும் ராகங்களை வைத்து பல அற்புதங்களை செய்துகாட்டினார்இளையராஜா. .அதுமட்டுமல்ல கர்நாடக இசைக்கு ஒரு புதிய ராகத்தையும் கண்டு பிடித்து வழங்கியுள்ளார்.அந்தராகத்தின் பெயர் பஞ்சமுகி என்பதாகும்.” எல்லாம் வெறும் தன்னானே , தன்னானே தானே” என்று சொன்னவர்களுக்குப் பதிலடியாக நாடுப்புற இசையின் சிறப்புக்களை அங்கும் ,இங்கும் அலைய விட்டு ,தமிழ் செவ்வியலிசையின் [ கர்னாடக இசை ] ராகங்களில் ஊடுருவி அவற்றுடன் மேலைத்தேய செவ்வியல் வாத்திய இசைஇலிருந்து புறப்படும் சௌந்தர்ய சங்கீத ஒலியை குழைத்து உணர்வில் தங்கவும் , மனதை உருக வைக்ககூடிய பாடல்களால் மக்களை கட்டிப்போட்டார்.இவ்விதமான இசையை இந்தியா என்றும் கேட்டதில்லை.அதன் அடிநாதம் நாட்டுப்புற இசையிலேயே இருந்தது எனலாம்.அதுமட்டுமல்ல இசை மீதிருந்த அதீத ஈடுபாடும் ,இசை பற்றிய தேடலும் , உலக இசை பற்றிய ஆர்வமும் அவரை அகன்ற வெளிகளில் சாதாரணமாக அவரைப் பயணிக்க வைத்தது. அதனை இசைஞானி இளையராஜா ” என் கனவும் நனவும் இசையே ” என்று மிக அழகாகச் சொல்வார்.

அந்த இசை மூலம் தமிழ் மக்களின் இசை எனபது கர்னாடக இசை , மட்டுமல்ல நாட்டுப்புற இசையும் தான் என்பதை நிரூபித்துக் காட்டினார்.இசை ஒரு பண்பாட்டிலிருந்து உருவாகிறது என்பது உலக அளவில் ஒப்புக்கொண்ட கருத்தாகும்.இந்தக் கருத்தை தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது இசை எது என்பதை தெளிவு படுத்திக் காட்டியவர் இளையராஜா.நாட்டுப்புற இசை என்பது உலகில் தோன்றிய எல்லா இசைக்கும் அடிப்படையானது என்பதை உலக இசையறிந்தவர்கள் அறிவார்கள்.நாட்டுப்புற இசையில் இருந்தே செவ்வியல் இசை பிறந்தது என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.தமிழ் மொழியிலும் அவ்வாறே.எனினும் தமிழில், தமிழ் மக்களின் உழைப்பால் உருவான இசைகளை திருடிய கூட்டம் நாட்டுபுற இசையை இழிவானதாக் கருதியது.இவ்விதம் உலகில் எந்த இசையையும் யாரும் இவ்வளவு கேவலாமகக் கருதுவதில்லை..இந்த நிலையை உடைத்தெறிந்தவர் இசைஞானி இளையராஜா தான் என்பது எல்லோரும் அறிந்ததே.” இசை என்பது ஒரு சமூகத்தின் உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம்” என்பர்.. அந்த வகையில் உலக இசைக்கு ஒரு பெரிய கொடையாக கிடைத்தது தமிழ் செவ்வியல் இசையான கர்னாடக இசையாகும்.குறிப்பாக தமிழ் மக்கள் உருவாக்கிய ராகங்கள் உலக இசைக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கொடையாகும்.அதுவும் தமிழ் நாட்டுப்புற இசை தந்த கொடை எனலாம்.

நாட்டுப்புற இசையிலிருந்து அகத் தூண்டுதல் [ INSPIRATION }பெற்று , அவற்றைத் தங்கள் உள்ளத்தில் தேக்கி , தமது படைப்புக்களில் மதத்தான அனுபவமாக மாற்றிய உலக இசை மேதைகளின் வரிசையில் இடம் பிடிக்கிறார் இளையராஜா.

இலக்கியத்தில் புதுமை செய்ய வேண்டும் என்றால் பாமரர்களின் மொழி நன்கு கைவரப் பெற வேண்டும் என்பார் பேராசிரியர் சித்தலிங்கைய்யா. அது இசைக்கும் பொருந்தும் எனலாம்.நாட்டுப்புற இசையின் பாதிப்புப் பெற்ற இசைகலைஞர்கள் பலர் மிகச் சிறந்த இசை மேதைகளாக , இசையமைப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை உலகெங்கிருந்தும் எடுத்துக் காட்டலாம்.மேலைத்தேய இசையுலகில் சிம்பொனி இசை மேதைகளான மொசார்ட், ஹைடன் , மொசார்ட் , பீத்தோவன் , டோவாரக் மற்றும் பார்தாக் , வாஹன் வில்லியம்ஸ் போன்ற எண்ணற்ற கலைஞர்களை உதாரணம் காட்டலாம்.

ஜோசெப் ஹைடன் [Joseph Haydn [ 31.03. 1732 – 31.05.1809 ] அவரது குடும்பத்தின் இசையார்வத்தால் தனது இளமைக்காலம் தொட்டு நாட்டுபுற இசையில் ஆர்வம் காட்டி வந்தார்.அவரது தாய், தந்தை பாடிய நாட்டுப்புற பாடல்கள் , அவரது முதுமைக்காலத்திலும் மறையவில்லை என்று அவரது சுயசரிதை எழுதிய georg August Griesinger என்பவர் குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமல்ல இளைஞாக இருந்த ஹைடன் நாட்டுப்புற இசையை சேகரிக்க வயல்களிலும் வேலை செய்தார் என்று Giuseppe Carpani என்ற எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார். ஹைடன் ஜிப்சி இசையிலும் மிக்க ஈடுபாடு காடினார்.அவரது இசைக் குழுவில் பல ஜிப்சி இனக்கலைஞர்கள் பங்களித்தார்கள்.தனது இசைப்படைப்புக்களில் தேவையான இடங்களில் விரிவாக நாட்டுப்புற இசையை பயன் படுத்தியிருக்கிறார் என்று இசை விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

மொசார்ட் [ Mozart 1756 – .1791 ] பிரெஞ்சு நாட்டுப்புற இசையிலும் ஈடுபாடு கட்டியவர்.பிரெஞ்சு நாட்டுப்புற இசையிலிருந்து அவர் பெற்ற உத்வேகம் [ Inspiration ] “Variation on the French Folk song ” Twelve Variation on ‘ Ah vous dirai -je , Maman’ என்ற இசை உருவாகக் காரணமாகியது. இந்த இசை வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டதே Twinkle..Twinkle.. Little Star , Baa,Baa black Sheep போன்ற குழந்தைகளுக்கான பாடல்கள்.

பீத்தொவேன் [ Beethoven 1770 – 1827 ] தனது ஆரம்பகால இசைப்படைப்புகளில் தான் கேட்டு மகிழ்ந்த நாட்டுப்புற இசையை, இயற்க்கை ஒலிகளை சிம்போனிகளில் பயன் படுத்தியுள்ளார்.அதுமட்டுமல்ல ஆங்கிலேய , ஐரிஸ் நாட்டுப்புறப் பாடல்களிலும் ஈடுபாடுகாட்டினார்.

அந்தோனியோ ட்வோரக் [ Antonio Dvorak 1841 – 1904 ] என்ற சிம்பொனி இசைக்லைஞரும் தனது வழிகாட்டிகளான மொசார்ட் , பீத்தோவன் , ஹைடன் போன்று ஐரோப்பிய நாட்டுப்புற இசையிலும் , இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க நாட்டுப்புற இசையிலும் ஈடுபாடுகாட்டினர்.அவர் 1892 – 1895 காலப் பகுதிகளில் அமெரிக்காவில் தங்கி வாழ்ந்தார். குறிப்பாக அமெரிக்கப் பூர்வீக மக்களின் இசையையும் , ஆபிரிக்க கறுப்பின மக்களின் இசையிலும் அதீத ஈடுபாடு காட்டினார். Harry Burliegh என்ற கறுப்பின இசைக்கலைஞர் அவரால் முன்னுக்கு கொண்டு வரப்பட்டார். அவர் மூலம் கறுப்பின மக்களின் மதம் சார்ந்த இசையை [ Spiritual ] அறிமுகம் செய்தார். Harry Burliegh என்பவரே கறுப்பின மக்களில் தோன்றிய முதல் செவ்வியல் இசைக்கலைஞராக விளங்கினார். ட்வோரக் தனது ஒன்பதாவது சிம்போனியில் பூர்வீக அமெரிக்க மக்களின் இசையை பயன்படுத்தினார்.Dvorak – Symphony 9 ” From the New World” என்பது அந்த இசை வடிவத்தின் பெயராகும்.
இந்திய அளவில் ,ஹிந்தி திரை உலகில் எஸ்.டி.பர்மன் ,ஹேமந்த் குமார், சலீல் சௌத்திரி , ஷங்கர் ஜெய்கிசன் , நௌசாத் , சி.ராமச்சந்திரா , ரோசன் , மதன் மோகன் ,ஜெயதேவ் போன்ற இன்னும் பல கலைஞர்களை நாட்டுப்புற இசையில் ஈடுபாடு காட்டியதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.எஸ்.டி.பர்மன் ,ஹேமந்த் குமார், சலீல் சௌத்திரி போன்ற இசைமேதைகள் வங்காள நாட்டுப்புற இசையிலும் . சி.ராமச்சந்திரா மராட்டிய நாட்டுப்புற இசையிலும் , சங்கர் ஜெய்கிசன் பஞ்சாப் நாட்டுப்புற இசையிலும் தோய்ந்ததால் தான் , திரையில் இசை பின்னனல்களாக அவற்றை இழைத்து அற்ப்புதங்களை நிகழ்த்தினார்கள்.

குறிப்பாக எஸ்.டி. பர்மன் வங்காள நாட்டுப்புற இசைக்கலைஞராக தனது இசை வாழ்வை தொடங்கியவர். தாகூரின் பாடல்களால் உந்துதல் பெற்றவர்.வங்காள நாட்டுப்புற பாடலகளை பாடுவதில் வல்லவரான எஸ்.டி.பர்மன் வங்காள நாட்டுப்புற பாடல்களைப் பாடி இசைத் தட்டுக்களாக வெளியிட்டுள்ளார்.நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்ல செவ்வியலில் மெல்லிசை கலந்த பாடல்களைப் பாடுவதிலும் திறமையானவராக இருந்தார்.அவருடைய இசையமைப்பில் உருவான பல ஹிந்தி திரைப்பட பாடலகளில் வங்காள நாட்டுப்புற இசையின் தாக்கம் இருப்பதை நாம் கேட்கலாம்.ஹிந்தி திரைப்பட இசையுலகின் மிகச்சக் சிறந்த இசையமைப்பாளர்களில் இசைமேதை எஸ்.டி. பர்மன் மிக முதன்மையானவர் எனலாம். இவர் இசையமைத்த sujatha [1959] என்ற படத்தில் அவர் இசையமைத்து , அவரே [எஸ்.டி. பர்மன் ] பாடிய அற்ப்புதமான பாடலான

SUN MERE BANDHU RE என்ற பாடலின் ஹம்மிங்கை அடிப்படையாக வைத்துக் கொண்டு , மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாகப்பிரிவினை படத்தில் இடம் பெற்ற

” தாழையாம் பூ முடித்து
தடம் பார்த்து நடை நடந்து ” என்னும் ஒரு கிராமியப்பாடலாக வடித்துத் தந்தார்கள்.தமிழில் இந்தப் பாடல் சிறந்த நாட்டுற இசை என்ற அந்தஸ்த்தை பெற்று விளங்குகிறது.உண்மையில் அது வங்காள நாட்டுப்புற இசையின் கொடையாகும்.இந்தப் பாடல் அமைந்த ராகம் பிலகரி.இந்தியாவில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த ராகம் பயன்பாட்டில் உள்ளது.

மேலே சொன்ன எஸ்.டி. பர்மனின் பாடலின் சாயலில் இளையராஜா அமைத்த பாடல்.

” உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் ” – படம் : பொண்ணு ஊருக்கு புதிசு – பாடியவர்கள்: இளையராஜா + ஜென்சி இந்த பாடலில் தோரணைகளில்சில ஒற்றுமை இருக்கிறதெனினும் , முழுமையாக வெளியே தெரியாது.

அவரைப் போன்றே ஹேமந்த் குமார் என்கிற இசை மேதையும் வங்காள இசைவடிவங்களிளிருந்து உந்துதல் பெற்றவர். சி.ராமச்சந்திரா மராட்டிய நாடுப்புற இசையுடன் மேலைத்தேய[ penny goodman ] இசையை கலந்த முன்னோடியாவார்..Albela [ 1952 ] படத்தில் இந்த வகைக் கலப்பு இசையை கேட்கலாம்.

எஸ்.டி. பர்மன் தனது அந்திமக்காலத்தில் இசையமைத்த ” ஆராதனா ” , ” மிலி ” போன்ற திரைப்படங்களில் வெளி வந்த பாடல்கள் மெல்லிசையில் சாகாவரம் பெற்ற பாடல்களாக விளங்குகின்றன.சலீல் சௌத்திரி வங்காள நாட்டுப்புற இசையுடன் , மேலைத்தேய செவ்வியல் இசை வடிவத்தையும் இணைத்து பல இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார்.மதுமதி என்ற திரைப்படத்தில் வரும் பாடல்களில் அவருடைய இனிமையான கலவை இசையை நாம் கேட்டு மகிழலாம்.மலையாளத்தில் அவர் இசையமைத்த ” செம்மீன் ” படப்பாடல்களான ” கடலின் அக்கறை போனோரே “[ பாடியவர் ஜேசுதாஸ் ] ,” மானச மைனே வரு ” [ பாடியவர்: மன்னா டே ] , ” பெண்ணாளே பெண்ணாளே.. ” [ பாடியவர்கள்: ஜேசுதாஸ் + லீலா ] போன்ற தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் புகழ் பெற்றவையாகும். அந்தப் பாடலகளில் வங்காள நாடுப்புற இசையின் தெறிப்புக்களை நாம் கேட்கலாம்.

எஸ்.டி.பர்மன் ,ஹேமந்த் குமார், சலீல் சௌத்திரி , ஷங்கர் ஜெய்கிசன் , நௌசாத் , சி.ராமச்சந்திரா , ரோசன் , மதன் மோகன் ,ஜெயதேவ் போன்ற இசை மேதைகளை இசைஞானி அடிக்கடி நினைவு கூருவதும் , அவர்களை போற்றுவது தற்ச்செயலானது அல்ல.இசையில் ஒருவன் சாதனை படைக்க வேண்டும் என்றால் அவனுக்கு மக்கள் இசை வசப்பட்டிருக்க வேண்டும் என்பதை தனது இசை முன்னோர்களின் வழியில் சென்று , அவர்களையும் மீறி இசையில் பிரமிப்புக்களை செய்து காட்டியவர் இசைஞானி இளையராஜா.இந்த பிரமிப்புக்கள் தொழில் நுட்பத்தால் செய்யப்பட்டவை அல்ல .

கலையில் தொழில் நேர்த்தியின் அவசியம் குறைத்து மதிப்பிட முடியாததெனினும் , தொழில் நுட்பம் மட்டும் கலையாகி விடாது.உணமையான கலை என்பது தொழில் நுட்பத்தையும் தாண்டிச் செல்லுவதாகும்.தொழில் நுட்பத்தை வாகனமாகக் கொண்டு கற்பனையின் உச்சங்களை எல்லாம் மிகச் சாதாரணமாக தாண்டிச் சென்றிருப்பார்இளையராஜா.அவரது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் தலைமையில் , ஒன்றுபட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் கலைக்குழுவில் பணியாற்றிய காலங்களில் இளையராஜா பெற்ற உந்துதல், அனுபவங்கள் அவரது இசைக்கு அடிப்படையானதாக அமைந்தது எனலாம். தமிழ்நாட்டு கிராமங்களில் அவர்களது கலைக்குழுவின் கால்கள் படாத இடமில்லை என்பார்கள்.
” மாட்டு வண்டி போகாத ஊருக்குக் கூட எங்கள் பாட்டுவண்டி போயிருக்கு ” , இது வெறும் வார்த்தையல்ல ,பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம் , இன்று உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப் பெட்டியை பல மைல்கள் தலையில் தூக்கி , நடந்து சென்று கிராமம் கிராமமாக பாடியிருக்கிறோம்.”- என்பார் இளையராஜா.

அந்த நாளைய அரசியல் செய்திகளை எல்லாம் தேவையான இடங்களில் பாடல்களாக அமைப்பதில் சிறந்து விளங்கிய பாவலர் வரதராஜன் அவர்களின் மூலம் இசை நுட்பங்களை எல்லாம் கற்றுக் கொண்டார். இந்த நினைவுகளை பற்றி இளையராஜா நிறைய சொல்லியிருக்கிறார்.இவ்வாறு ஊர் ஊராராக சுற்றியதன் மூலம் மக்களின் இசையை கற்றதோடு , மக்களின் ரசனையையும் அறியும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார் இளையராஜா.மற்ற இசையமைப்பாளர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மற்ற இசையமைப்பாளர்கள் திரையில் அறிமுகமாகி மக்களுக்கு அறிமுகமானவர்கள்.இளையராஜாவோ மக்களிடம் அறிமுகமாகி , அவர்களது ரசனைகளை அறிந்து கொண்டு திரைக்கு அறிமுகமானவர்.மக்கள் இசையில் நின்று கொண்டு , அவர்களே அதிசயிக்கும் வண்ணம் பல புதுமைகளை செய்து காட்டினார்.மக்களுக்கு தெரிந்த இசை , ஆனாலும் தெரியாத பக்கங்களையும் காட்டும் இசை வல்லுநர் ஆனார். அதனால் தான் எல்லாத் தரப்பு மக்களாலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.அவர் ஒரு சிறந்தைசையமைப்பாளர் என்பதை ஒரு பாமரனும் ஒத்துக் கொள்வான். பாலமுரளியும் ஒத்துக்கொள்வார்.

இசையைத் தங்கள் கோரப்பிடிக்குள் வைத்திருந்த இசைச் சனாதநிகளையும் ஒப்புக் கொள்ள வைக்கும் வல்லமை அவரது இசைக்கு இருந்தது.” வெறும் தன்னானே ..தன்னானே ” என்று எள்ளி நகையாடியவர்களின் வாய்களுக்கு அவரது இசை பூட்டு போடப்பட்டது.சினிமா இசைக்கு முழு அங்கீகாரம் கிடைத்தது.கொடுக்கும் விதத்தில் கொடுத்தால் எல்லோரும் ரசிப்பார்கள் என்பதை நிரூபித்துக் காட்டியவர் இசைஞானி இளையராஜா.பல வழிகளைக் கொண்ட , பல திசைகளைக் கொண்ட ,கட்டுக்கடங்காத இசை உலகம் இளையராஜவினுடையது.இசை பற்றிய ஆழமான புரிதலும் , மரபும் , நவீனமும் பற்றிய விழிப்புணர்வும் கொண்டவர் இளையராஜா..இசையில் மண்வாசனை , தமிழ் செவ்வியல் இசை , மேற்கத்தேய

செவ்வியல்இசை , மேற்கத்தேய பொப் இசை போன்ற பல்வகை இசையிலும் ஆழமானபுரிதல் அவர்க்குண்டு.இசையில் நுனிப்புல் மேய்வது , அதைமறைக்க நவீன தொழில் நுட்ப ஒலிகளைப் பயபடுத்தி மக்களை பயமுறுத்துவது போன்ற செப்படி வித்தைகள் அவரது இசையில் கிடையாது.இசையில் நவீனம் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவர் இசைஞானி இளையராஜா.அவர் வளர்ந்த அளவுக்கு தமிழ் திரைத்துறையினர் வளராததால் ,சப்த சித்துவிளையாட்டுக்கள் , இசையில் நுனிப்புல் மேயும் சிறுபிள்ளைத்தனங்கள் படத் தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் போதுமானதாக இருக்கிறது.அவருக்கு இசையில் அகத் தூண்டுதலாக பல இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள்.தனக்கு முன்பிருந்த எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களை எல்லாம் நிரம்ப கேட்டிருக்கிறார்.எங்கோ

எதிரொலித்தவைகளை அல்லது எதிரொலிகளின் எதிரொலிகளாக ஒலிக்க விடுபவரல்ல ராஜா.பலவிதமான உணர்வுகளை நம்முள் எழச் செய்வது அவரது இசை. ” உணர்ச்சியில்லாமல் நல்ல இசையை வழங்குதல் சாத்தியமில்லாத ஒன்று.. உங்கள் உணர்ச்சியின் முன் நீங்கள் செய்யும் தவறுகளும் , குற்றங்களும் மங்கிப் போய்விடும்.” – என்பார் இசைமேதை Yehudi Menuhin . இந்த இசை மேதையின் மேற்கோளுக்கு ஒப்ப சாதாரண நான்கு வரிகளில் உள்ள ஒரு சிறிய பாடலில் கூட இசையால் உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் இளையராஜா. சாதாரணமாக உள்ள சில வரிகளை இசைக் காவியம் ஆக்கும் தன்மை அவரது இசைக்கு இருக்கிறது.நாயகன் படத்தில் வரும் Theme Music , இசையை எளிமையான நான்கு வரிகளை வைத்து படத்தின் ஆத்மாவை காட்டியிருப்பார் இசைஞானி.நாயகன்

God father [ 1972 ] என்ற புகழ் பெற்ற படத்தை அப்பட்டமாக காப்பியடித்து மணிரத்தினம் ” பெரிய ” டைரக்டர் ஆன படம். God father என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் Theme Music மிகவும் அற்ப்புதமாக இருக்கும்.அதை இசையமைத்தவர்கள் அந்த திரைப்படத்தை இயக்கியவரான Francis Ford Coppola என்பவற்றின் தந்தையாரான Carmine Coppola என்பவரும் Nino Rota என்ற புகழ் மிக்க இசையமைப்பாளரும் ஆவார்கள். அந்த திரைப்படத்தின் உயிர் மூச்சே அந்த Theme Music தான் என்று அடித்துச் சொல்லலாம்.வார்த்தையால் வர்ணிக்க முடியாதளவுக்கு வசீகரமும் , மர்மமும் , இனம் புரியாத சோகமும் , இனிமையும் நிறைந்த இசை என்பேன்.அந்த இசைக்காகவே அந்த படத்தை எத்தனையோ முறை பார்த்த ஞாபகம்.சிசிலியன் நாட்டுப்புற இசையில் இருந்து கிடைத்த மெட்டு என்பத எனது ஊகம்.அந்த மெட்டு கீரவாணி ராகத்திற்கு மிக நெருக்கமாய் உள்ள மெட்டு.

நாயகன் படத்தின் உயிரை கீழ்க் கண்ட நான்கு வரிகளை வைத்து காவியமாக்கியிருப்பார் இசைஞானி இளையராஜா.

” தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனை

யாரடித்தாரோ….”

சாதாரண சொற்களில் எவ்வாறு கவிதை ஆற்றலை வெளிப்படுத்துவது என்பதை பாரதி அருமையாக விளக்குவான்.

“கல்லை வைர மணி ஆக்கல் – செம்பைக்
கட்டித் தங்கம் எனச் செய்தல் – வெறும்
புல்லை நெல் எனப் புரிதல் …… ” பாரதி

என்னும் பாரதி வரிகளுக்கு ஒப்ப சாதாரண வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்துவிடுபவர் இளையராஜா.

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் தன்னையும் விஸ்தரித்துக் கொண்டு , தான் கற்றவற்றிலிருந்து பெற்ற அனுபவம் மட்டுமல்ல தன ஆளுமையால் இசையில் புதிய பரிமாணங்களை செய்து காட்டியவர்ர் இளையராஜா.

இசை என்ற பேராற்றலில் வாத்தியங்களை தன் எண்ணத்திற்கும்,தான் விரும்பிய இடங்களின் எல்லைகளுக்கும் சென்று , தேவையான போது கட்டுப்படுத்தவும் , ரசிகர்களின் ஆழ் மன கடலின் இருக்கும் எண்ணங்களை , கற்பனை திறனைத் தூண்டி விடவும் , அநாசாயமாக இசையின் எல்லைகளை எல்லாம் தாவித் தாவி தாண்டும் ஆற்றல் பெற்ற ஓர் அற்ப்புத இசையை வழங்குவதில் இவருக்கு ஈடு இணையாருமில்லை எனலாம்.

மனித நுண்ணுணர்வில் உள்ளுயிர்ப்பை ஏற்ப்படுத்தும் இயற்க்கை வாத்தியக் கருவிகளை வைத்து இவர் எழுப்பிய இசை ஜாலங்களுக்கு தமிழில் ஈடு இணை யுண்டா ? இந்தியாவில் உண்டா?

அதுமட்டுமல்ல இசை மீதிருந்த அதீத ஈடுபாடும் ,இசை பற்றிய தேடலும் , உலக இசை பற்றிய ஆர்வமும் அகன்ற வெளிகளில் அவரைப் பயணிக்க வைத்தது.

வட இந்திய , ஹிதித் திரைப்பட இசை தமிழ் நாட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த சூழ் நிலையில் இளையராஜாவின் ” அன்னக்கிளி ” இசையால் ஹிந்தி மோகம் குறைந்தது என்பது சாதாரண விடயமல்ல.மிகத் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் பலர் அப்போதும் இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்.பின்னர் இளையராஜாவின் திரை இசை ஹிந்தியிலும் மெதுவாகப் பரவியது.

அதன் வளர்ச்சி 1990 க்ளில் அப்பட்டமாகப் பிரதி பண்ணுமளவுக்கு வளர்ந்தது.குறிப்பாக Anand Milin என்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் பல வெற்றிப்பாடல்களை எல்லாம் ஹிந்தி திரைப்பாட்ல்களாக்கியுள்ளார்.அந்த வகையில் ஒரு தமிழ் இசையமைப்பாளரின் பாடல்கள் ஹிந்தியில் அப்பட்டமாகக் கொப்பியடிக்கப்பட்டது இளையராஜாவின் பாடல்களே.! ஹிந்தி மொழி எதிர்ப்புக் காலத்திலும் ஹிந்தி பாடல்கள் பிரபலமாக இருந்தன.

இளையராஜாவின் தமிழ் பாடல்கள் பல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. சில உதாரணங்கள்.

1 . ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா – அக்கினிநட்சத்திரம் – இளையராஜா

Tap , Tap Tapori – film: Baagi [1990 ] Singers Amit kumar + Anand chitragupt Music: Anand Milin
2 . கேளடி கண்மணி பாடகன் சங்கதி – புது புது அர்த்தங்கள் – எஸ்.பி.பி

chandni raat Hai – film: Baagi [1990 ] Music: Anand Milin

3 . இளைய நிலா பொழிகிறதே – பயணங்கள்முடிவதில்லை – எஸ்.பி.பி
Neele Neele Ambar – film : Kalakar – Kishore kumar music : Kalyanji anandji
4 . ஒ , ப்ரியா ப்ரியா – இதயத்தைத் திருடாதே – மனோ + சித்ரா

ஒ, Piya ,Piya – film: Dil – Music: Anand Milin

5 . அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே – கோழி கூவுது – இளையராஜா

Ekh D0 theen Chor – film: tazaab [1988] Music: Laxmikanth Pyarelaal

6 . ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் – உறவாடும் நெஞ்சம் [ 1976 ] – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை: இளையராஜா

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் – இளமை ஊஞ்சலாடுகிறது [1978] – எஸ்.பி.பி + வாணி ஜெயராம் இசை: இளையராஜா

நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் – film: அழியாத கோலங்கள் [1979] இசை: சலில் சௌத்ரி இந்த மூன்று பாடல்களிலும் ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது.

இளையராஜாவின் இசையில் மேலைத்தேய இசையின் பாதிப்பு.

1 . Danza, No1 from cancion Y danca [ Antonio Ruiz Pipa ]

எந்தப் பூவிலும் வாசம் உண்டு – முரட்டுக்காளை – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

2 . My favorite Things – Sound of Music

பூட்டுக்கள் போட்டாலும் – சத்திரியன் – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

3 . Singing In The Rain – Film : SInging In The rain – Gene Kelly

ஒ கோ மேகம் வந்ததோ – மௌனராகம் – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

4 . Corazon Herido – [ Wounded Heart ] Composed: conzalo Vargas – rythm: Bolivia

இவள் ஒரு இளங்குருவி – பிரம்மா – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

5 . My Mine – [ Hypnotic Tango ]

ஊர் ஓரமா ஆத்துப் பக்கம் – இதயக்கோயில் – இளையராஜா + சித்ரா இசை; இளையராஜா / இந்த பாடல் நேரடியாத் தெரியாது.தாளம் ஓரளவு ஒத்து போகும்.

6 . Rock Aroud The Clock

ரம்பம் பம் ஆரம்பம் – மைக்கேல் மதன காம ராஜன் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை; இளையராஜா

7 . Alegra En Almaguer – ” Les Flute Indienn syd

நேற்றிரவு நடந்ததென்ன – இன்னிசை மழை – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை; இளையராஜா

8 . Legend of the gorry – Richard clayderman – Desparado

ஒ ..பட்டர் பிளை – மீரா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + ஆஷா போஸ்லே இசை; இளையராஜா

9 . Money Money – ABBA

கண்மலர்களின் அழைப்பிதழ் – தைப்பொங்கல் – இளையராஜா + எஸ்.ஜானகி இசை; இளையராஜா

10 . Boney M – Sunny 1976

டார்லிங் டார்லிங் – பிரியா – பி.சுசீலா இசை; இளையராஜா/ மேற்சொன்ன Boney M – Sunny 1976 என்ற பாடலின் ஒரிஜினல் வடிவம் கீழே உள்ளது.

Victor D’mario & his Orchestra – Jueves [Tango ] rafael Rossi /Udenino toranzo ( recorded: 19.06. 1951)

11 . Roses From South – J.Strauss – Arranged by : James Last

புத்தம் புதுக் காலை – அலைகள் ஓய்வதில்லை – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

02:40 ஆவது நிமிசத்தில் கொஞ்ச இடத்தில் வரு இசைப்பகுதி ” புத்தம் புது காலை ” இசைப்பகுதியுடன் இசைந்து போகும்.

12 . Jezebel ( Million Seller – no 2 Hit ) 1951 – frank Laine – The Norman Luboff Choir

லவ்வுன்ன லவ்வு , மண்ணெண்ணெய் – மீரா – மனோ + மின்மினி இசை; இளையராஜா

இது போன்ற ஸ்பானிய இசையை , அல்லது ஜிப்சி இசையை எம்.எஸ்.விஸ்வநாதனும் ” சம்போ சிவ சம்போ ” போன்ற பாடலிலும் பயன்படுத்தியிருப்பார்.

13 . Lambada இசையை அடியொற்றி

ஊர் அடங்கும் சாமத்திலே -புதுப்பட்டி பொன்னுதாய் – சுவர்ணலதா + உமா ரமணன் இசை; இளையராஜா
Lambada பாடலின் மெல்லிசைப் பாங்கு ” ஊர் அடங்கும் சாமத்திலே ” என்ற பாடலில் தெரிப்புக்கலாக விழும்.

மேலைத்தேய செவ்வியல் இசையில் [ WESTERN CLASSICAL MUSIC ] உந்துதல் பெற்று இளையராஜா இசையமைத்த பாடல்கள்:.

1 . Dvorak’s New World Symphony , 3rd Movement

சிட்டுக் குருவி முத்தம் தருது – film:சின்னவீடு [1985 ] Singers: எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ். ஜானகி t Music: இளையராஜா

2. Shubert Last Symphony [ 1822 ] இந்த இசைப்பகுதியின் பாதிப்பில் உருவானது கீழ் உள்ள பாடல்.நேரடியாக தெரியாது எனினும் தோரணைகளில் அதன் சாயல் தெரியும்.

இதயம் போகுதே – film:புதிய வார்ப்புக்கள் [1978 ] Singers: ஜென்சி Music: இளையராஜா இந்த விடயம் சமீபத்தில் இளையராஜாவே சொல்லித்தான் அறிந்தோம்.

3 . Mozart , 25th Symphony , !st Movement

வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் – film: கிழக்கு வாசல் [1978 ] Singer: இளையராஜா Music: இளையராஜா மேலைத்தேய சிம்பொனி இசையைக் கூட எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டுப்புற இசைக்கு இசைவாக தந்திருப்பது ஆச்சரியப் படுத்துவதாகும்.அந்த இசையில் ஒரு மிகச் சிறிய துரும்பு தான் அது.அடஹி வைத்து விளையாடிஇருப்பார்.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அது.

4 . George Bizet’s 1897 L’Arlésienne Suite Number One, 4th movement, called ‘Carillon’

A .B. C நீ வாசி – கைதியின் டயரி – ஜேசுதாஸ் – வாணி ஜெயராம்

5 . Vivaldi four Season Spring Part 1

பொன்மாலை பொழுது – film:நிழல்கள் [1980 ] Singers: எஸ்.பி.பாலசுரமணியம் Music: இளையராஜா இந்த பாடலில் மேல் சொன்ன இசைப்பகுதியின் தெறிப்புகள் தெரியும்.நேரிடையாக சொல்ல முடியாது. கேதார ராகத்தின் ஆளுமைக்கு இந்த பாடல் வந்து விடுவதால் புதிய பாடலாகி விடுகிறது.

இளையராஜாவின் தாக்கமில்லாத இசையமைப்பாளர்கள் யாருமில்லை என்னுமளவுக்கு , அவருடைய இசையின் தாக்கம் அவரது சம கால இசையமைப்பாளர்களிலும் இருந்தது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. ஜெர்மனியின் செந்தேன் மலரே – உல்லாசப்பறவைகள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை : இளையராஜா
சித்திரமே உன் விழிகள் – நெஞ்சிலே துணிவிருந்தால் – கே ஜே .ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் இசை : சங்கர் கணேஷ்

2. உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி – எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா
பட்டு வண்ண ரோசாவாம் – கன்னிப்பருவத்திலே – மலேசியா வாசுதேவன் + சைலஜா இசை : சங்கர் கணேஷ்

3. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள் – கே ஜே .ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் இசை : இளையராஜா
கொண்டையில் தாழம் பூ – அண்ணாமலை – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : தேவா

4. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு – வைதேகி காத்திருந்தாள் – ஜெயச்சந்திரன் + வாணி ஜெயராம் இசை : இளையராஜா
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – சூரிய வம்சம் – ஹரிஹரன் + சித்ரா இசை : எஸ்.எ. ராஜ்குமார்

5. வளையோசை கல கல கலவென – சத்யா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + லதா மங்கேஷ்கர் இசை : இளையராஜா
வேலை வேலை ஆம்பளைக்கு – அவ்வை சண்முகி – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : தேவா

6. மழை வருது மழை வருது குடை கொண்டு வா – ராஜா கைய வச்சா -கே ஜே .ஜேசுதாஸ் + சித்ரா இசை : இளையராஜா
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் – சந்திரமுகி – மதுபாலகிருஷ்ணன் + ஆசா போலே இசை : வித்யாசாகர்

7. காட்டிலே கம்மன் காட்டிலே – ராஜகுமாரன் -எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : இளையராஜா
தாமர பூவுக்கும் தண்ணிக்கும் – பசும்பொன் – கிருஷ்ண சந்திரன் + சுஜாதா இசை : வித்யாசாகர்

8. உன்னைக் காணாமல் நானேது – கவிதை பாடும் அலைகள் -அருண்மொழி + சித்ரா இசை : இளையராஜா

ராசா ராசா உன்னை கட்டி வச்சேன் – பசும்பொன் – ஹரிகரன் + சித்ரா இசை :S.A. ராஜ்குமார்

9. துள்ளி துள்ளி நீ பாடம்மா – சிப்பிக்குள் முத்து – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : இளையராஜா
ஆகாயம் கடல் நிறம் நீளம் தான் – பாசவலை – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை :மரகதமணி

1 0. தீபங்கள் ஏற்றும் இது கார்த்திகை தீபம் – தேவதை – எஸ்.பி.சரண் + சந்தியா இசை : இளையராஜா
AIRTEL MOBILE ADVERT SONG – – MUSIC இசை :A.R.ரகுமான்

1 1. ஒரே நாள் உன்னை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது -எஸ்.பி.பாலசுப்ரமணியம் + வாணி ஜெயராம் இசை : இளையராஜா
சகானா சாரல் தூருதோ – சிவாஜி – உதித் நாராயன் + சின்மயி MUSIC இசை :A.R.ரகுமான்

1 2. என்கிட்டே மோதாதே – -எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா
மதுரைக்கு போகாதடி – அழகிய தமிழ் மகன் – உதித் நாராயன் + சின்மயி MUSIC இசை :A.R.ரகுமான்

ரகுமான் தான் இளையராஜாவின் பாடல்களை கேட்பதில்லை பேட்டிகள் கொடுப்பவர்.!!

1 3. மனசு மயங்கும் மௌன கீதம் – சிப்பிக்குள் முத்து – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை : இளையராஜா

மந்திரம் சொன்னேன் வந்துவிடு – வேதம் புதிது – மனோ இசை :தேவேந்திரன்

தேவேந்திரன் , மற்றும் ரவீந்திரன் போன்ற மிகச் சிறந்த இசையமைப்பாளர்களும் இளையராஜாவின் இசையில் அல்லது அவரது வாத்தியக் கலைவையால் பாதிப்புற்றவர்கள் எனலாம்.

ரவீந்திரன் [ 1941 – 2005 ] மிகச் சிறந்த இசையமைப்பாளராக மலையாள சினிமாவில் திகழ்ந்தவர்.கர்னாடக இசையில் தேர்ச்சி பெற்ற ரவீந்திரன் , கர்நாடக இசையுடன் மெல்லிசை கலந்த [ SEMI- CLASSICAL SONGS ] பாடல்களை மிக அற்ப்புதமான முறையில் இசையமைத்துத் தன்னை மேதை என நிரூபித்தவராவார். அவர் இசைInயமைத்த பரதம் , ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா , கமலதளம் , ராஜ சில்பி , சூரிய காயத்திரி போன்ற திரைப்படப் பாடல்கள் இனிமை மிக்கவையாகும்.தனக்கென ஓர் பாணியை அமைத்து வெற்றி பெற்றவர் ரவீந்திரன்.

இளையராஜா தனக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களைப் பற்றி வியந்து பல முறை போற்றி பாராட்டியுள்ளார். அவர்களது இசையின் தாக்கம் தன்னில் ஏற்ப்படுத்திய உணர்வுகளைப்பற்றியும் , அவர்கள தந்த பாடல்களின் சிறப்புக்களையும் பேசியிருக்கிறார்.ஹிந்தியில் ஹேம்சந்த் பிரகாஷ், நௌசாத், சி.ராமச்சந்திரா , எஸ்.டி.பர்மன் , ஷங்கர் ஜெய்கிஷன், ரோஷன், மதன் மோகன் , ஹேமந்த் குமார் , சலில் சௌத்ரி போன்ற இசைமேதைகளின் பாடல்களிலிருந்து அகத்தூண்டுதாலாக சில பாடல்களை அவர் தந்துமிருகிறார்.

சலில் சௌத்திரியின் இசைக்குழுவில் கிட்டார் வாத்தியக் கலைஞனாக அவர் பணியாற்றியதால் ,அவரில் பாதிப்பு இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.குறிப்பாக வாத்திய இசைக்கருவிகளின் சேர்க்கைகளில் அந்த பாதிப்பு இருப்பதாக நினைக்கிறன்.சல்லீல் சௌத்திரியும் மேலைத்தேய செவ்வியல் இசையில் மிக்க ஈடுபாடு கொண்ட கலைஞனாக இருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

1. KORA KAGAZ THA – ARATHANAA [ 1969 ] – KISHORE KUMAR + LATA MANGESHKAR MUSIC : S.D.BURMAN

தேவதை ஒரு தேவதை – பட்டாகத்தி பைரவன் [ 1979 ] – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை : இளையராஜா

2. KHILTE HAIN GUL YAHAAN – SHARMELEE [ 1971 ] – LATA MANGESHKAR MUSIC : S.D.BURMAN

செந்தூரப் பூவே செந்தூரப் பூவே – பதினாறு வயதினிலே [ 1977 ] – எஸ்.ஜானகி இசை : இளையராஜா மேல் சொன்ன பாடலின் inspiration ஆக இருக்கலாம். கண்டுபிடிக்க முடியவில்ல்லை. இந்த ராகம் ஆபேரி என்பதால சில ஒற்றுமையும் இருக்கலாம்.

3. O.. NIRDAI PREETAM – STREE [ 1961 ] – LATA MANGESHKAR MUSIC : C.ராமச்சந்திர

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே – கர்ணன் 1964 – பி.சுசீலா இசை: மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
மாலையில் யாரோ மனோத்து பேச – சத்திரியன் [ 1991 ] – ஸ்வர்ணலதா இசை : இளையராஜா

இந்தப் பாடல்களில் எங்கோ சில் சாயல்கள் உண்டு. நிச்சயமாக எங்கே என்று சொல்ல முடியாதளவுக்கு உந்துதலை [ inspiration ] ஒளித்து வைத்திருக்கிறார்கள். அருமையான INSPIRATION என்று சொல்லலாம். இந்த மூன்று பாடலும் அமைந்த ராகம் சுத்ததன்யாசி ராகம்.காடும் ,காடு சார்ந்த இடத்திற்குப் பொருத்தமான ராக்கம் என்பார்கள். இந்தப் பாடல்களும் காட்டுப்பகுதியிலே படமாக்கப்பட்டிருக்கும். மேலே தந்துள்ள ஹிந்தி படம் சகுதலை பாடுவதாக அமைக்கப்பட்டது. இந்த சுத்ததன்யாசி ராகம் சிலப்பதிகாரத்திலும் பயன் பட்டுள்ளது என்றும் கூறி பாடியும் காட்டுவார் தனது குரு நாதரான தன்ராஜ மாஸ்டர் என்று ஒரு பேட்டியில் இசைஞானி இளையராஜா சொல்லியிருக்கிறார்.அந்த தன்ராஜ் மாஸ்டர் என்பவர் வேறு யாருமல்ல. கர்னாடக இசை என்பது தமிழ்மக்களின் இசை என்பதை ஆணித்தரமாக நிரூபித்த மாமேதை ஆப்ப்ரகாம் பண்டிதரின் பேரன்.

4. o bekarar dil ho chuka hai – KHORAAR [ 1964 ] – LATA MANGESHKAR MUSIC : HEMANT KUMAR இந்தப் பாடலில் வரு முதல் ஹம்மிங் மட்டும் கீழ்க் உள்ள பாடலில் வரும்.

ராசாவே உன்னை விட மாட்டேன் – அரண்மனைக்கிளி [ 1992 ] – எஸ்.ஜானகி இசை : இளையராஜா

5. Buddham saranam gachchami – angulimaal [ 1964 ] – manna dey MUSIC : ANIL BISWAS இந்தப் பாடலில் வரு முதல் பகுதி மட்டும் கீழ்க் உள்ள பாடலில் வரும்.
தரை வராத ஆகாய மேகம் – சந்திரலேகா [ 1995 ] – உன்னிகிருஷ்ணன் இசை : இளையராஜா

6 . APNE DIL SE BADAI DUSHMA – BETAB [1983 ] – LATA + SHABIR KUMAR MUSIC: R.D.BURMAN
பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற பாடல் மேலே உள்ள பாடலின் மிகவும் STRONG INSPIRATION என்று சொல்லலாம்.

சினிமா இசையில் , வாத்திய இசையில் [ orchestration ] அவர் பெற்றிருந்த அசாத்தியமான திறமை சினிமா இசைக்கு வெளியேயும் சில இசைப்படைப்புக்களை உருவாக்க உதவியிருக்கிறது.அதற்க்குச் சிறந்த சான்றுகளாக விளங்குபவை

1. HOW TO NAME IT
2. NOTHHING BUT WIND

என்ற இரண்டு சிறந்த இசைப்படைப்புக்களாகும்.

” HOW TO NAME IT ” – [எப்படி பெயரிட்டு அழைப்பது ] , ” NOTHHING BUT WIND ” [ காற்றைத்தவிர வேறில்லை ] இவை மேற்கத்திய இசை , கர்நாடக இசை இணைந்த ஒரு கலப்பிசையாகும்.இரண்டு வித்தியாசமான செவ்வியல் இசைகளின் Inspiration னிலிருந்து கிடைத்த இசை.இந்த இசைத்தட்டுக்கள் வெளிவந்த போது இசைமேதை ரவிஷங்கருக்கு போட்டு காண்பித்த போது ” இதை இந்தியன் ஒருவன் உருவாக்கியிருக்க முடியாது ” என்றார். அதனை சுபின் மேத்தா கேட்க வேண்டும் என்று ரவிசங்கர் அனுப்பி வைத்த போது அந்த ஆல்பத்தைக் கேட்டு பிரமித்த சுபின் மேத்தா ” இந்த இசையமைப்பாளருக்கு எத்தனை உதவியாளர்கள்? ” என்று கேட்டாராம்.

இளையராஜா தனது மானசீகக் குருவாகக் கருதும் Paul Mauriat [1925 – 2006 ] என்கிற பிரெஞ்சு செவ்வியல் இசைக்கலைஞரின் வாத்தியஇசை அமைப்பை தனது இசையின் முன்னுதாதரணமாக[ Musical Inspiration ] கருதுபவர். Paul Mauriat வின் இசையின் பாதிப்பு இளையராஜாவின் வாத்திய இசைச் சேர்ப்பில் இருப்பதை நாம் காணலாம்.Paul Mauriat மேற்கத்தேய செவ்வியல் இசையை எடுத்துக் கொண்டு நவீன இசைக்கருவிகளுடன் இணைத்து புதுமை செய்த இசைமேதையாவர். HOW TO NAME IT என்ற இளையராஜாவின் படைப்பைக் கேட்டு விட்டு ” Somethink different and wonderfull ” என்றும் மிகவும் மனம் திறந்து பாராட்டியதுடன் , இதை நான் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார்.

இளையராஜாவின் இது போன்ற படைப்புக்களின் பரிசோதனை முயற்சிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தது சினிமா இசையே.அங்கு அவர் பெற்ற பயிற்ச்சியும் , அதனால் அவர் பெற்ற ஞானமும் , இசை பற்றிய விரிந்த பார்வையும் தான் அவரை இந்தியாவின் தலைசிறந்த இசைக்கலைஞன் ஆக்கியது.
கர்னாடக இசை ராகங்களை இளையராஜா பயன்படுத்தும் பாங்கும் அதில் பாண்டித்தியம் பெற்றவர்களும் வியப்பதாக இருக்கும்.பழத்தில் பிழிந்தெடுத்த ரசமாய் , ஜீவ ரசமாய் , ராகங்களின் உள்ளடக்கத்தில் அவர் நிகழ்த்தியிருக்கும் அற்ப்புதங்கள் அவரை ராஜசில்பி எனச் சொல்லும்.இசையில் புதுமை நோக்கில் எவ்வளவு தீவிரம் காட்டினாரோ அவற்றை எல்லாம் மரபில் நின்றே செய்து காட்டினார் என்பது இசை குறித்த அவரின் தீவிரத்தைக் காட்டும்.புழக்கத்தில் இல்லாத எத்தனையோ ராகங்கள் அழகின் லயங்களைக்காட்டி உயிர் பெற்று நிற்கின்றன.அதற்க்கு ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும்.

ரீதி கௌளை என்ற ராகத்தில் அவர் இசையமைத்த ” சின்னக் கண்ணன் அழைக்கிறான் ” [ படம் ; கவிக்குயில் -1977- ] என்ற பாடல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சொல்லலாம்.இந்த ரீதி கௌளை ராகத்தில் இளையராஜாவுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் ஒரு முழுமையான பாடலில் பயன்படுத்தினார்கள் என்பதுஎனக்குத் தெரிந்த வரையில் இல்லை என்பேன். ராகமாலிகையாகப் பயன்பட்டிருக்கலாம் என நம்புகிறேன்.இதே போலவே நாடகப்பிரியா[ நெஞ்சே குருநாதரின் -படம்: மோகமுள் ] , பவானி [ பார்த்த விழி – படம்:குணா ], நளினகாந்தி [ என்தன நெஞ்சில் நீங்காத – படம்: கலைஞன் ] போன்ற பாடல்களை சொல்லலாம்.பிற இசையமைப்பாளர்கள் பயன்படுத்தாத ராகங்களை பயன்படுத்தி வெற்றி கண்டார்.

தமிழ் மண்ணில் வேர் ஊன்றி வளர்ந்த இசையை அடிப்படையாக வைத்துக் கொண்டு திரை இசையில் எத்தனையோ விதம் விதமான பாடல்களை அவர் தந்திருக்கிறார்.அவரது இசை பற்றி இன்னும் எத்தனையோ தலைப்புக்களில் கட்டுரைகள எழுதுவதற்கான விசயங்கள் உள்ளன.இந்தக் கட்டுரையின் பாடுபொருளான அகத்தூண்டுதல்[ INSPIRATION ] என்பதே இளையராஜாவின் இசை ஏற்ப்படுத்திய உந்துதலாலேயே எழுந்தது.பல விதமான இவரது பாடல்கள் இசை பற்றிய புத்துணர்வை என்னுள் ஏற்ப்படுத்தின.இனிமையான மெட்டுக்களைத் தந்த இசை மேதைகளின் இசைச் சாறுகளை எல்லாம் பிழிந்தெடுத்து . அதன் உன்னதங்களை எல்லாம் தனது அழகியல்மிக்க இசையால நமக்கு தொய்வில்லாமல் தந்த இசை மேதை இளையராஜா. அவரது இயல்பான திறமையும் , கடின உழைப்பும் தந்த பலன்களை நாம் மட்டுமல்ல இனி வரும் சந்ததிகளும் அனுபவிக்கப்போகிறார்கள்.

என்னதான் உலக இசை மற்றும் , மேற்கத்தேய இசையால் அவர் உந்துதல் பெற்று அவர் இசையமைத்திருந்தாலும் , அதனை நமது இசைக்கு ஏதுவாக அமைத்துப் புதுமை செய்தார்.அவற்றில் பிறநாட்டு சிறப்பான இசைவகைகளை இழுத்து வந்து நம் முன் நிறுத்தினாலும் , அவை நம்மீது ஆதிக்கம் செலுததுபவையுமல்ல.நம்மீது திணிப்பதுமல்ல.அவை வேறான இசையாக இருந்த போதிலும் அவற்றை நமது இசையுடன் இழைத்து இசைவாக்கியது தான் மாபெரும் சாதனை.அந்த இசை மூலம் அவர் நமது கற்பனைக்கு சவால் விட்டிருப்பார்.
நீரோடைகள் , பனிமலைகள், பச்சை பசும் வயவேளிகள்,மேகங்களால் மூடப்பட்ட நீல மலைகள், காலைக்கதிரின் ஒளிக்கற்றைகள , மாலைக்கதிரின் வெம்மை இது போன்ற பல இயற்கையின் பேரழகுகளை எல்லாம் தனது வாத்திய இசையால் நம் மனக் கண்களில் நிறுத்தினார்.பாடல்களில் அவர் செய்திருக்கும் இசைக்கோலங்கள் வேறு ஒருவர் தனது வாழ் நாளில் செய்ய வேண்டியதை குறுகிய கால எல்லைக்குள் , அதி வேகமாச் செய்து காட்டினார்.வேகமாச் செய்தாலும் தரத்தில் குறைந்தவயுமல்ல எனபது அவரது கலையாற்றலுக்கு எடுத்துக் காட்டாகும்.இன்று சில இசையமைப்பாளர்கள் வருசத்திற்கு
ஓரிரண்டு படங்களுக்கு இசையமைக்கப் படுகின்ற பாடுகளை நாம் அறிவோம்.அவ்விதம் நீண்ட நாட்கள் எடுத்தும் பாடல்கள் சிறப்பாக அமைவதில்லை.

இணையத் தளங்களில் பாடல்களை தேடுவோர் இளையராஜா கொடுத்துள்ள சிறந்த பாடல்களின் பட்டியலையும் ,அவரது சமகலாத்தவரும் , அவருக்குப் பின் வந்தவர்களின் சிறந்த பாடல் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவரது வேகமும் , தரமும் நிறைந்த பாடல்களைத் தரும் ஆற்றலை உணர்ந்து கொள்ளலாம்.எந்தவித பின் புலமும், கூட்டணியும் ,பரிவாரங்களும் ,அரசியல் பின் புலமும் இல்லாமல் தனித்து தன் இசை ஒன்றையே நம்பி “இசையின் எல்லா பரிமாணங்களிலும் ” வெற்றிக்கொடி நாட்டியவர் இந்திய அளவில் இளையராஜா ஒருவரே.

வட இந்தியாவில் ஹேம்சாந் பிரகாஸ் , அணில் பிஸ்வாஸ் , நௌசாத், S.D. பர்மன் , C.ராமசந்திரா , கய்யாம் , ஹேமந்த் குமார் , ஷங்கர் ஜெய்கிஷன் , சலீல் சௌத்திரி , மதன் மோகன் , ரோஷன் , O.P.நய்யார் , ரவி , R.D.பரமன் , தென்னிந்தியாவின் G.ராமநாதன் ,S.M.சுப்பைய்யா நாயுடு ,S.V. வெங்கட்ராமன் , C.R.சுப்பராமன் ,கோவிந்தராஜிலு நாயுடு , R.சுதர்சனம் , C.N.பாண்டுரங்கன் , S.தட்சிணாமூர்த்தி , K.V.மகாதேவன் , V.தட்சிணாமூர்த்தி , S.ராஜெஸ்வராவ் , A.ராமராவ் , S.ஹனுமந்தராவ் ,T.சலபதிராவ் , கண்டசாலா ,A.M.ராஜா ,பெண்டலாயா , பாப்பா , லிங்கப்பா , விஸ்வநாதன் ராமமூர்த்தி , R.கோவர்த்தனம், வேதா ,G.தேவராஜன் , வேதா, M.P.ஸ்ரீனிவாசன் , G.K.வெங்கடேஷ் , M.S.பாபுராஜ் போன்ற இசைமேதைகளின் இசை ஊற்றுகளிலிருந்து உருவான மகாநதியே இசைஞானி இளையராஜா.
பெருநதிகள் கொண்டு வந்து சேர்க்கும் பலவகை நறும் மூலிகைகள் மகாநதியில் கலந்தது போலவே மேல் சொன்ன அத்தனை இசைமேதைகளின் இசை , மற்றும் அவர்களது நிறைவேறாத ஆசைகள் , கனவுகள் , கற்பனைகள் இளையராஜாவின் இசையால் நிறைவேறியுள்ளன என்று சொல்லலாம்.ஒரு இசையமைப்பாளர் [ COMPOSER ] என்ற சொல்லுக்கு முழுமையாக அர்த்தம் கொடுப்பதாயிருந்தால் இளையராஜாவையே இந்தியாவின் ஒரே ஒரு COMPOSER என்று சொல்லவேண்டும்.

இசைஞானி இளையராஜா இந்த நூற்றாண்டு தந்த அதிசயம்.
ஊன் உயிர்கள் உள்ளமெல்லாம்
உருகிடவே அருவியைப்போல்
தேனமுதத் தென்றலிலே
கானமுதம் பொங்குதடா

ஊட்டும் தாய் அன்பினிலே
உள்ளதெல்லாம் சொல்லி உன்னை
வாட்டமின்றி கண் வளர
வாழ்த்தியதும் இன்னிசையே

ஆடுவதும் பாடுவதும் அவரவர்க்கு வாய்ப்பதல்லால்
வீடு தோறும் கீரையைப் போல்
விலை போட்டு வாங்குவதா ?

என்ற S.C. கிருஷ்ணன் பாடிய பழைய பாடல் வரிகளை கேட்கும் போது இளையராஜாவும் ,அவரது இசைப் பேராற்றலும் என் நினைவுக்கு வரும்.

“புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்…”அவர் பாடுவதாக காண்பித்தது தற்செயலானதா…?

அதுமட்டுமல்ல இசைமேதை மொசார்ட் பற்றி இன்னொரு இசைமேதையான பிரான்ஸ் சுபேர்ட் [ Franz Shubert ] சொன்ன வாசகங்கள் கன கச்சிதமாக இளையராஜாவுக்கும் பொருந்துகிறது!. இளையராஜாவின் இசையில் பிரமிக்கும் போதெல்லாம் இந்த வாசகங்கள் என் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடிவதில்லை.
” A world that has produed a Mozart is a world worth saving. what a picture of a better world you have given us , Mozart ! ” – Franz Shubert

அவருக்குப் பின் வந்த பல இசையமைப்பாளர்கள் தாளத்தை வைத்து முழக்குவது , ஒரு மெட்டை வைத்துக் கொண்டு , அதையே திரும்ப,திரும்ப அலுப்புத் தட்டும் வரையில் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆற்றல் அற்ற படைப்புக்களை ஏதேதோ பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள்.

தொடரும் …..

முன்னைய பகுதிகள்:

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் : T.சௌந்தர்
Exit mobile version