அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.நாம் பார்க்கும் ,கேட்கும் , படிக்கும் விசயங்களிலிருந்து கிடைக்கும் அறிவு நம்மைச் சிந்திக்கவும் தூண்டுகின்றன.இந்த ” தூண்டுதல் ” அல்லது “உந்துதல்” அல்லது இந்த நிகழ்வுகள் ஏற்ப்படுத்தும் ” பாதிப்பு ” நம்மைச் செயலாற்றவும் வைக்கின்றன.நாம் அனுபவிக்கும் பல விசயங்களில் சில நம்மை அறியாமலேயே நமது மனங்களில் பதிந்தும் விடுகின்றன.இவை பொதுவாக எல்லா மனிதர்களிளிடமும் வெவ்வேறுவிதமாக நிகழ்கின்றன.
இந்த தூண்டுதல் அல்லது உந்துதல் என்பதே எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையானதாகவும் உள்ளது.ஒரு சம்பவத்தால் தூண்டப்படும் , உந்தப்படும் அல்லது பாதிப்புக்குலாகும் கலைஞன் தன்னுடைய ஆற்றலுக்குத் தக்கவாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.கவிஞன் என்றால் கவிதையாகவும் , ஓவியன் என்றால் ஓவியமாகவும் ,சிற்பி என்றால் சிற்பமாகவும் ,இசைக்கலைஞன் என்றால் பாட்டாகவும் ,இசையாகவும் வெளிப்படுத்துவான்.தூண்டுதல் ,உந்துதல் , பாதிப்பு என்பதை ஆங்கிலத்தில் Inspiration என அழைப்பர்.ஆயினும் தமிழில் அகத்தூண்டுதல் ,அக எழுச்சி , உள்ளுயிர்ப்பு , உளத்தூண்டுதல், திடீர் கிளர்ச்சி , உத்வேகம் , துணையூக்கம் போன்ற சொற்கள் அதன் அர்த்தத்தை தெளிவுற விளக்க உதவுகின்றன.
பார்க்கும் பொருளிலிருந்து அறிவு பெரும் மனிதன் அதனைப் பிரதி செய்து பார்ப்பதிலும் ஆனந்தம் அடைகிறான்.குழந்தைகள் ஒருவரைப் பார்த்து ,அவரை போலவே நடித்துக் காட்டுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறோம்.மனிதனின் அடிப்படை உணர்வாகவும் இது இருக்கிறது.கலைகளின் அடிப்படையே பிரதி [ copy ] பண்ணுவதிலிருந்து தான் ஆரம்பமாகிறது.அதன் மூலம் கற்று வளரும் கலைஞன் நாளடைவில் தான் கேட்டு ,பார்த்து , ரசித்த விசயங்களை உள்வாங்கி , பின் தான் உணர்ந்தவாறு படைக்கும் போது தனக்கென ஓர் வடிவத்தை [Style ] அல்லது ஓர் பாணியை உருவாக்கும் நிலைக்கு உயர்கிறான்.தமது நுண்ணிய அறிவாலும் , படைப்பாற்றல் திறமையாலும் பிற கலைஞர்களிடமிருந்து தாம் பெற்ற பாதிப்பை , உந்துதலை , மற்றவர்கள் இலகுவாக கண்டுபிடிக்க முடியாதவாறு ” மறைப்பு ” செய்யும் ஆற்றல் மிக்க கலைஞர்கள் உயர்வாகவும் போற்றப்படுகின்றனர்.கற்பனை வளமும் பரிசோதனை ஆர்வமும் மிக்க கலைஞர்கள் உள்ளத்திலிருந்து புதுமை உணர்ச்சி பீறிட்டு எழும்.அந்த உந்துதல் ஒரே துறையில் உள்ளவர்களிடமிருந்து பெறுவது ஒருவகை.முற்றிலும் மாறுபட்ட ஓர் துறையிலிருந்தும் உந்துதல் கிடைக்கலாம்.படைப்பாற்றலை தூண்டிவிடக்கூடிய ஒரு பொறி எந்த துறையிலிருந்தும் வரலாம்.
ஜப்பானிய ஓவிய முறையால் அகத்தூண்டுதல் பெற்ற Vincet Vangoh ,ஜப்பானிய முறையில் ஓவியங்களை பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்.ஜிப்சி இன மக்களின் இசையில் தோய்ந்த சிம்போனி இசை மேதை Franz List [ 1811 – 1886 ] ஜிப்சி இனக் கலைஞரான Janos Bhihari [ 1764 – 1824 ] என்பவரின் வயலின் இசை பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.” Like drops of some Feirry Spirit essence,the notes of this magic Violin came to our ears. “
கண்ணதாசன் மிக அழகாக சொல்வார்.
பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
தனை கண்டான் மதங்களைப் படைத்தான்
இங்கே பாடுபொருள் இசை.இசை என்றாலே பரந்துபட்ட தமிழ்மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு செலுத்துவது சினிமா இசையே.பேசும் படங்கள் வெளியாகி [ 16.10.1931 ] 80 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.பாடல்கள் இல்லாத சினிமாவை தமிழ் மக்களால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது எனக் கூறுமளவுக்கு தமிழ்சினிமாவில் பாடல்கள் நிறைந்துள்ளன.வசனம் பிரபல்யம் அடைந்த காலத்திலும் பாடல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை.பாடல்கள நிரம்பியிருந்தாலும் அவை இசை பற்றிய படங்களுமல்ல என்பதும் கவனத்திற்குரியது.இந்தப்போக்கு சினிமா பற்றிய தவறான புரிதல் உள்ளவர்களால் தமிழ் சினிமாவுக்கு நிகழ்ந்த விபரீதம் என தீவிர சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள்.எது எவ்வாறாயினும் இசை நம்முடன் ஒட்டி உறவாடி வந்துள்ளது.இது தொன்று தொட்டு வாத மரபின் தொடர்ச்சி எனக் கருதலாம்.
இந்த இசை நமக்கு பல் வகையான படி நிலைகளைத் தாண்டியும் ,பலவிதமான சேர்க்கைகளின் சங்கமமாகவுமே இன்று நமக்கு கிடைத்துள்ளது.தொனமையான் சான்றாக கூத்து கலை இருந்தது என்பதை தொல்காப்பியம், சிலப்பதிகாரம் திருக்குறள் ,பதிற்றுப்பத்து போன்ன்ற பழந்தமிழ் இலககியங்களிருந்து அறிகிறோம்.ஆக இந்த இலக்கியங்களுக்கு முற்ப்பட்ட காலத்திலேயே கூத்து ஆடப்பட்டிருக்கிறது.கூத்து ,இசை போன்ற கலைகளைப் பற்றி நிறைய பேசும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ மாதவியை ” நாடகமேத்தும் கணிகை ” என்கிறார்.நாடகம் ,நாட்டியம் இவை இரண்டுக்கும் உள்ள பொதுப் பெயர் கூத்து.தனிப்பாடலுக்கு ஆடுவது நாட்டியம் எனவும் , கதையை மைய்யமாக வைத்து நடாத்தப்படுவது நாடகம் எனவும் அழைத்தனர்.ஆடலும், பாடலும் தான் நாடகமாகவும் இருந்தது.இயலும் ,இசையும் [பாட்டும் ,இசையும் ] இருப்பதால் நாடகத்தை முதன்மையான கலையாகக் கொள்வதில் தவறில்லை என்பார் நாடக மேதை .டி.கே. சண்முகம்.முத்தமிழலும் இயல் ,இசை ,நாடகம் என்றே வைத்தனர்.
தாங்கள் கற்றுக்கொண்ட ஆசிரியர்களிடமும் ,முன்னோர்களின் படைப்புக்களிலும் ஆர்வம் காட்டும் கலைஞர்கள் தாமும் அதுபோலவே படைக்க வேண்டும் என்ற உந்துதல் [INSPIRATION ] பெறுவது இயல்பான ஒன்றே.ஆயினும் இந்த [INSPIRATION ] உந்துதல் என்பதும் ஒருவகை Copy [பிரதி எடுத்தல் ] ,அல்லது திருட்டு தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.அதில் தேவை என்றால் நல்லது,கெட்டது , மிக மோசமானது என வகைப்படுத்தலாம் என்பார் இசையமைப்பாளர் இசைவாணன். அதுமட்டுமல்ல Adoption [ பொருத்துதல் ] ,Influence [ செல்வாக்கு ] போன்றவவை உந்துதல் [INSPIRATION ] என்பதற்கு மிக நெருக்கமாக கொள்ள தக்கதே. இவற்றை காரணமாக வைத்து Imitation [ போலி ] , Copy [பிரதி எடுத்தல் ] Overlapping [ பொருத்துதல் ] போன்றவற்றை கலை ஆக்கத்திறனற்ற படைப்புக்களை செய்யும் “கலைஞர்கள் “, தொழில் நுட்பவல்லுனர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளும் குறுக்கு வழியாக பயன்படுத்தும் அபாயமும் உண்டு.
இவைகளுக்கப்பால் தங்களுக்கு முன்னால் இருந்த கலைவடிவங்களிளிருந்து உந்துதல் [INSPIRATION ] பெற்றவர்களை தமிழ் கலை ,இலக்கியச் சூழலில் நாம் காணக்கூடியதாக உள்ளது.சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரி , சாத்துவரி ,ஆற்றுவரி , முகமில்வரி , ஆச்சியரகுரவை , அம்மானை வரி , கத்துவரி , ஊசல்வரி ,வள்ளைப்பாட்டு போன்ற பாடல் வகைகள் நாடோடிப் பாடல்களிலும் , வாய்மொழிப்பாடல்களிலும் இருந்து கிடைத்தவை என்றும் ,பின் வந்த மாணிக்கவாசகர் , இளங்கோ அமைத்த அம்மானைவரியை அக எழுச்சியாக [ inspiration ] கொண்டு தனது தேவாரத்தில் ” திரு அம்மானை ” என்றொரு பகுதியை அமைத்தார்.திருவாசகம் , திவ்யப்பிரபந்தம் , தத்துவராயர் பாடுதுறை போன்ற பாடல் வகைகளும் நாடோடிப்பாடல்களினாலும் ,வாய்மொழிப்பாடல்களினாலும் அடியொற்றி [ inspiration ] கிடைக்கப்பெற்றவைகளே! என்பார் முனைவர் அசோகன்.இதிலிருந்து இளங்கோ அடிகள் எந்தளவுக்கு அவற்றில் மனதை பறிகொடுத்தார் [ Inspiration ]என்பது புரியும்.
சிலப்பதிகாரத்து கதையோட்டத்திற்கு ஏற்ப தமிழ் செவ்வியல் இசையையும் , நாட்டுப்புறபாங்கான இசைவகைகளையும் மிக நுட்பமாக பயன் படுத்தி வெற்றி கண்டார் இளங்கோ. அந்த இசைவகைகளால் உந்துதல் [ inspiration ] பெற்றார் என்பதை கோடிலிங்கம் , வைத்திலிங்கம் போன்ற கலைஞர்கள் அழகாக விளக்கி பாடுவதில் வல்லுனர்களாக உள்ளனர்.சிலப்பதிகார இசையூற்று என்பது இளங்கோவடிகள் மக்களிசையிலிருந்து பெற்ற உந்துதலேயாகும்.
சங்க இலக்கியங்களில் வளர்ச்சியடைந்த இசை, பௌத்தர்களுக்கும்,சமணர்களுக்கும் எதிராக பயன்படத் தொடங்கிய அரசியலில் நடுநாயகமாகத் திகழ்ந்தது.அதுவரையில் தீண்டத்தகாதவர்களாக இருந்த பாணர் பரம்பரையில் வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணத்தார் இசைப்பாடல்களை பாட , புதிதாக பண்களுக்கு மெட்டமைக்க அமர்த்தப்பட்டார்.இவரே பண்டைக்காலத்தில் வாழ்ந்த முதல் இசையமைப்பாளராவார்.பாடல் எழுதுபவர் ஒருவர் ,அதற்க்கு மெட்டுப் போட இன்னொருவர் என்கிற முறை அன்றே ஆரம்பமாகி விட்டது எனலாம்.
சங்க கால இலக்கியங்களில் வழங்கப்பட்ட உரு, உருப்படி போன்ற பாடல் வகைகளின் சாயல்களை கொண்ட பாடல் முறையே தேவாரத்தின் ஊற்றுக்கண் [ Inspiration ] என்பார் உ.வே.சாமிநாதய்யர்.
பின்னாளில் கீர்த்தனை என்கிற இசைவடிவம் உரு, தேவாரம் போன்ற இசை வேரிலிருந்து தோன்றியதே என இசையறிஞர்கள் கருதுகின்றனர்.தேவார காலத்திற்குப் பின் தோன்றிய செய்யுள் இலக்கியங்களில் சம்பந்தருடைய சந்தம் ,யாப்பு வடிவங்கள் கம்பர் ,அருணகிரிநாதர் ,சிவவாக்கியர் போன்ற பெரிய புலவர்களுக்கு வழிகாட்டியாக [ Inspiration ] விளங்கியது.கம்பருடைய இசைச் செல்வம் சம்பந்தருடைய இசை செல்வத்துடன் இயைந்து தோன்றுபவை என்பர்.திருக்குறளிலிருந்து ஏராளமான கருத்துக்களை கம்பன் தனது பாடல்களில் இழைத்தான் என்பார் மீ.ப.சோமு..சித்தர் பாடல்களின் இசையமைதியை பெருங் கவிஞர்கள் தங்களது முன்னோடிகளாக கொண்டார்கள்.தன காலத்திற்கு முன்பிருந்த இலக்கிய வடிவங்களை அறிந்த பாரதி தன்னை அறிமுகம் செய்யும் போது ” எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா, யானும் ஒரு சித்தன் இந்த நாட்டிலே ” என்று அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி செல்கிறார்.
தமிழிலில் புலவர்களை வரிசைப்படுத்திய பாரதி கம்பனைப் போல்,வள்ளுவன் போல், இளங்கோ போல் .. என கம்பனை முதலில் வைத்தான். வரலாற்றில் பின் வந்தவன் கம்பன்.ஆனால் தன் முன்னோர்களின் இலக்கியங்களை உள்வாங்கி செழுமை பெற்றவன் கம்பன்.அதனால் தான் கம்பனை முன்னே வைக்கிறான் பாரதி.
இதுவரை சொல்லப்பட்ட இசையில் ஏற்ப்பட்ட பலவிதமான மாற்றங்களும் தமிழ் மரபில் பெற்றவவையாக கொள்ளலாம்.இங்கே அகத்தூண்டுதல் [ inspiration ] ,தழுவல்கள் [ adoptation ] போன்றவை நிகழ்ந்திருப்பது அந்த கலைகள் புதிதாய் மாற உதவியிருக்கின்றன.அவர்களுக்கு கிடைத்தவற்றிலிருந்தும் ,கற்றவற்றிலிருந்தும் ,அதில் தோய்ந்தும் ,பெற்ற அனுபவங்களின் சாரம் எனலாம்.தமது சிந்தனைகளை தங்களது முன்னோர்களிடமிருந்தும அவர்கள் பெற்றது அவர்களது அறிவின் சூட்சுமமாக விளங்கியது.அவர்களது உள்ளத்தில் ஊற்றெடுத்து புது வடிவங்களாகிய நிலை எனலாம்.எல்லாவிதமான அறிவும் மதத் துறைக்குள் அமிழ்த்தப்பட்டிருந்ததேனினும் அவர்கள் நிறைய கற்றவர்கள் என்பது ஐயமில்லை.
வான் கலந்த மாணிக்க வாசக
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்
தேன் கலந்து பால கலந்து
செங்கனி தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பது
என்று வள்ளலார் திருவாசகம் பற்றி கூறிய உயிர் கலந்த நிலை எனலாம்.இவை எல்லாம் மதம் என்ற வட்டத்துக்குள் சுற்றினாலும் அதில் கிடைத்த இசை குறித்து நாம் மகிழலாம்.” நினைவில் நிறுத்திக்கொள்ள இசை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் .இல்லை எனின் இந்த வாய் மொழிக்கவிதைகள் வழி வழியாக வந்திருக்காது. ” என்பார் ஜே .சி .ஹார்ட் என்ற அறிஞர்.
கிரேக்கத்தில் எழுச்சி பெற்ற நாடகம் ,வீழ்ச்சியடைந்து பின் 14 ஆம் நூற்றாண்டில் மீண்டும் ரோமில் புத்தியிர் பெற்றது போல் , வீழ்ச்சியடைந்த தமிழ் நாடகம் சோழர் காலத்தில் ராராஜ ராஜேஸ்வர விஜயம் எனும் நாடகத்தின் மூலம் 10 ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது என்பார் அவ்வை சண்முகம்.எனினும் தமிழ் கூத்து வளர்ச்சி சீரானதாக அமைந்திருக்கவில்லை.
இந்திய கண்டத்தின் இசை என்பது கி .பி 13 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் செவ்வியல் இசையே.தமிழ் செவ்வியல் இசையுடன் அரேபிய இசையும் [ Arabian music] , பாரசீக இசையும் [ Iranian Music ,Afganistan Music ] ஒன்று கலந்த இசை இன்று ஹிந்துஸ்தானி இசை என அழைகப்படுகிறது. இது முகலாய மன்னர்களின் படையெடுப்பின் பின்னால் அரசவை இசையாகவும் வளர்ச்சியடைந்துடன் பொழுது போக்கு இசையாகவும் வளர்ச்சியடைந்தது.பல்வேறு இசைகளின் தழுவலாக விளங்கும் இந்த இசையில் தமிழ் செவ்வியல் [ கர்ந்டாக இசை ] இசையின் ராகம் பாடும் [ ஆலாபனை]முறை பின்பற்றப்படுகின்றது.ஹிந்துஸ்தானி இசையில் ராகத்தை நீண்ட நேரம் ஆலாபனை செய்வது குறிப்பிடப்படும் அம்சமாகும்.ஹிந்துஸ்தானி இசை எனபது தமிழ் இசையின் ஒருவிதமான வளர்ச்சியே என்பார் இசை ஆய்வாளர் மம்மது..தமிழ் இசை போல சுத்தமான இசையாக இல்லாவிடினும் , மிக இனிமையான இசை இசையாகும்.
சந்தப்பாடல் ஒன்று மிகச் சமீபத்திய காலத்தில் வெற்றிக்கொடி நாட்டியதை நாம் அறிவோம்.அதற்க்குச் சான்றாக இளையராஜா இசையமைத்து மிகவும் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு [ படம் : கரகாட்டக்காரன் ] என்ற பாடலைச் சொல்லலாம். அருணகிரிநாதரின் ” ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று ” என்ற பாடலின் சந்தத்தை INSPIRATION வைத்தே உருவானது என்று இளையராஜாவே கூறினார்.
கி .பி 16 ஆம் நூற்றாண்டில் பள்ளு நாடகமும் , 17 ,18 ஆம் நூற்றாண்டில் முறையே குறவஞ்சி நாடகமும் , குழுவ நாடகமும் வளர்ச்சியுற்றன.இவ்விதம் பல்வேறு காலங்களில் ஏற்ப்பட்ட மாறுதல்களோடும் புதிய வடிவங்களோடும் இணைந்து இசை மாற்றங்களைக் கண்டே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.கதைகளை பாடல்களுடன் சொல்வது காலகாலமாக இருந்து வந்துள்ளது.லாவணி , வில்லுப்பாட்டு , கதாகலாட்சேபம் போன்றவவையும் இதற்க்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
கி .பி 18 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சியாளர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்தேய நாடகம் பாரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்தியது.வெள்ளை ஆட்சியாளரகளுக்கு நடாத்தப்பட்ட நாடகம் காலப்போக்கில் ஆங்கிலம் படித்த மத்தியதர வர்க்கத்தினரிடமும் அறிமுகமாகியது.இந்த வகை நாடகங்களின் செல்வாக்கு இந்திய நாடக அரங்கிலும் மாற்றங்களை ஏற்ப்படுத்தின.ஆங்கில நாடகத் தொழில் நுட்பம் வியப்பூட்டியது.மேற்கத்தேய நாடக உத்திகளையும் ,இந்திய புராணக் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளையும் இணைத்து 1860 களில் பம்பாய் பார்சி நாடகக் குழுவினர் உருவாக்கிய ஒரு வகை கலப்பு நாடகமாக ஹரிச்சந்திரா அரங்கேறி வெற்றி பெற்று இந்திய நாடக அரங்கில் மாற்றங்களை ஏற்ப்படுத்தியது.
தமிழ் நாடகத்தில மறுமலர்ச்சி ஏற்ப்படுத்தியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்[ 1867 – 1922 ].மதிப்பிழந்து போன நாடக கலைஞர்களுக்கு அந்தஸ்தையும் ,கௌரவத்தையும் தனது நாடகங்கள் மூலம் பெற்றுக்கொடுத்தவர் சுவாமிகள்.அவருடைய நாடகங்களில் இசை மிகப்பிரதான இடத்தை வகித்திருந்தது.அவர் எழுதிய பெரும்பான்மையான நாடகங்கள் அம்மானைப் பாடல்களைத் தழுவிய மக்கள் பழகி வந்த நாடகங்கள் என்பார் அவ்வை T.K.சண்முகம்.வெண்பா ,கலித்தொகை ,விருத்தம், ,சந்தம் சிந்து வண்ணம், ஓரடி , கும்மி ,கலிவெண்பா , தாழிசை ,கீர்த்தனை என பல்வகைப்பட்ட பாடல்களுடன் ,சிறு உரையாடல் பகுதியையும் இணைத்துப் புத்தெளுச்சியூட்டியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.
பல்வகை இசை தெரிந்தவராகவும் , சந்தப்பாடல்க்ளில் சிறந்த ஞானமிக்கவராகவும் விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள் சிறுவர்களுக்கென நாடக அமைப்பையும் [ போய்ஸ் கம்பனி ] நிறுவிய முன்னோடியுமாவார்.அவருடைய பாய்ஸ் கம்பனியை பின்பற்றி பல நாடகக் கம்பனிகள் உருவாகின. பின்னாளில் சினிமாவில் புகழ் பெற்ற பெரும்பான்மையான கலைஞர்கள் பலரும் அவர் உருவாக்கிய நாடக மரபிலிருந்து வந்தவர்களாக இருந்தனர்.அவர்களின் பட்டியல் மிக நீண்டது.அவர்களில் சிலரை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாகும். S.G. கிட்டப்பா , M.K. தியாகராஜா பாகவதர் , P.U.சின்னப்பா , N.S.கிருஷ்ணன் , M.M.தண்டபாணி தேசிகர் , T.K.சண்முகம் , T.K.பகவதி , K.P.சுந்தராம்பாள் , M.G.ராமசந்திரன் ,சிவாஜி கணேசன் ,T.S.பாலைய்யா ,T.A.மதுரம் , S.S.ராஜேந்திரன் , A.P.நாகராஜன் , K.A.தங்கவேலு , சீர்காழி கோவிந்தராஜன் , T.V.ரத்தினம் ,இசையமைப்பாளர்களில் S.V.வெங்கட்ராமன் , S.M.சுப்பைய்யாநாயுடு , K.V.மகாதேவன் , M.S.விஸ்வநாதன். சங்கரதாஸ் சுவாமிகளின் தாக்கம் தமிழ் சினிமாவில் 1970 கள் வரை நீடித்தது என்பர்.
பல்வகை நாடகங்களை [ மராட்டிய , ஆங்கிலேய ] பார்க்கும் வாய்ப்புப் பெற்ற சுவாமிகள் அவற்றிலிருந்து தனது நாடகபாணியை உருவாக்கினார். மக்களுக்கு தெரிந்த கதை ,மக்களுக்கு தெரிந்த இசை என்பது அவரது தாரக மந்திரம்.
இங்கே சங்கரதாஸ் பற்றி குறிப்பிடுவதற்கான காரணம் என்னவென்றால் தற்காலத்தில் FUSION இசை [ FUSION MUSIC ] என்று அறியப்படுகின்ற கலப்பிசையின் முன்னோடியே அவர் தான் என்பதை வலியுருத்துவதர்க்காகவே.
நாடகங்களில் பாடப்படும் பாடல்களில் தமிழ் செவ்வியல் இசையையும் [ கர்னாடக இசை ] , நாட்டுப்புற இசையையும் பயன் படுத்திய அவர் , இரண்டு இசையையும் கலந்து ஒருவிதமான கலப்பிசையையும் உருவாக்கினார் .பாமரர்கள் ரசிக்கும் அதே வேளையில் , பண்டிதர்கள் பாராட்டும் வகையிலும் பாடல்களை அமைத்து பாராட்டைப்பெற்றார்.அதன் மூலம் படித்தவர்கள் மத்தியிலும் நாடகத்திற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தார். ” கர்நாடக இசையில் அமைந்த கீர்த்தனை மெட்டுக்களை அப்படியே தனது நாடகத்தில் வைத்து பாமர மக்கள் மத்தியில் அந்த வர்ண மெட்டுக்களை பிரபலப்படுத்தினார்.கர்னாடக இசை தெரியாத சாதாரண மக்கள் , கர்நாடக இசை கீர்ததனைகளை கேட்கும் போது சுவாமிகளின் நாடகப்பாடல் மெட்டுக்களை அவர்கள் பாடுகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு பிரபல்யமாக்கியவர் சுவாமிகள் “என்பார் ஆய்வாளரும் ,சிறந்த பாடகருமான திரு. அரிமளம் பத்மநாபன்.இதனால் விளைந்த பயன் என்னவென்றால் செவ்வியல் இசையை பாமரரும் ரசிக்கும் வழக்கத்தை உருவாக்கியதே.அதனால் அன்றைய நாடக ரசிகர்களுக்கு ராகங்களைக் கேட்கும் பரீட்சயம் இருந்தது.
சுவாமிகளின் கைவண்ணத்தில் உருவான ஒரு கலப்பிசை [ FUSION MUSIC ] தமிழ் மத்தியில் மிகப் புகழ் பெற்றிருந்தது.இன்றும் இருக்கிறது.அந்தப் பாடல் சத்தியவான் சாவித்திரி என்ற நாடகத்திற்காக 1890 இல் ஆண்டு சுவாமி எழுதி இசையமைத்த “ஏனோ என்னை எழுப்பலானை மட மானே ” என்ற புகழ் பெற்ற பாடலாகும்.அந்தப்பாடல் அமைக்கப்பட்ட ராகம் தமிழிசையில் மிகவும் புகழ் பெற்ற ராகங்களில் ஒன்றான ஆபேரி ராகமாகும்.பாடலில் அங்கங்கே நாட்டுப்புற இசையின் உள்ளோசைகள் [ கமகங்கள் ] ஊடாடிக்கொண்டிருக்கும். ஆபேரி ராகத்தின் கனம் குறையாமலும் , நாட்டுப்புற இசையின் இனிமை குறையாமலும் அமைக்கப்பட்ட அற்ப்புதமான கலவைக்கு சிறந்த எடுத்துக்காட்டு அந்தப் பாடல். அது பிற்காலத்தில் நவராத்திரி என்கிற படத்தில் ” தங்கச் சரிகை சேலை ” என்ற பாடலில் இடம் பெற்றது.
கதாநாயகன் சேரியில் வாழும் கதாநாயகன் , வெற்றிக்களிப்பில் தாரை , பறை , தம்பட்டை அடித்து குதூக்கலாமாக ஆடிப்பாடுகிறார்கள்.பாடல முடியும் தருவாயில் , அவனை விரும்பும் காதலி [உயர் “குலப்பெண் ] தனது தோழிகளுடன் தீபம் ஏந்திய வண்ணம் ,தேவாரத்தை மென்மையாகப் பாடிக்கொண்டு வருகிறாள்.அவனின் பாடல் முடியவில்லை ,இவளது பாடல் தொடங்கியதும் அவர்கள் மெதுவாக தமது சத்தத்தை குறைத்து கொள்கிறார்கள்.இரண்டு பாடலும் ஒன்றை ஒன்று குழப்பாமல் இணைந்து கொள்கின்றன.
இது தளபதி படத்தின் பாடல் சூழ்நிலை [ Situation ].இங்கே இளையராஜா தனது கைவண்ணத்தை காட்டுகிறார். நாட்டுப்புற இசையயும் ,தமிழ் செவ்வியல் இசையும் மிக்ஸ்[ mix ]செய்கிறார்.பயன்படுத்தப்பட்ட ராகம் ஒன்று தான்.இருவரது மனஓட்டத்தை மிக நுட்பமாக இணைத்துவிடுகிறார்.
“ராக்கம்மா கையை தட்டு ” என்ற பாடல் தான் அது.இசையில் வியப்பூட்டும் அரியசாதனைப் பாடல்.இந்த பாடலுக்கு பயன் படுத்தப்பட்ட ராகம் ஆபேரி.சங்கரதாஸ் சுவாமிகளும் இதே ஆபேரி ராகத்தில் தான் தனது இசைக்கலப்பை [ mixing ]செய்தார்.
இந்திய நாடக இசையில் முக்கிய திருப்பமாக ஹார்மோனியம் என்கிற மேலைத்தேய வாத்தியத்தின் வருகை அமைந்தது.1860 களில் பார்சி நாடக குழுவினராலும் ,மராத்திய நாடக குழுவினராலும் அங்கீகாரம் பெற்று புகழ் பெற்றது.கவாலி இசை [ QAWWALI ] , ஹிந்துஸ்தானி இசையிலும் பக்கவாத்திய கருவியாக முக்கிய இடம் பிடித்தது.எனினும் இந்திய சுதந்திரப்போராட்டக் காலத்தில் இந்த வாத்தியத்திற்கு எதிரான [ அந்நிய வாத்தியம் என்பதும் ,இந்திய இசையை கெடுக்கிறது என்பதுமான ] கருத்துக்கள் ஒலித்தன.வல்லபாய் பட்டேல் ஹார்மோனியத்தை உடைக்கவேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.அவர் மட்டுமல்ல பாரதியாரும் ஹார்மோனியயத்தைக் கடுமையாகசாடியும் ,இகழ்ந்தும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.அகில இந்திய வானொலியிலும் [ All-India Radio] அதன் மீதான தடை 1940 -1971 வரை இருந்தது எனினும் ,இன்று வரை தனியே ஹார்மோனிய வாத்திய கச்சேரிக்கு அங்கு இடமில்லை.இவை ஒரு புறம் இருந்தாலும் இந்திய ,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இதன் பயன்பாடு பல்கி பெருகியுள்ளது.நாடக மேடைகளில் இதன் பங்களிப்பு அளப்பெரியதாவே இருந்தது.
அத்துடன் மேற்கில் கண்டுபிடிக்கப்பட ஒலிப்பதிவு தொழில் நுட்பத்தின் வருகையும் , அதன் வளர்ச்சியும் இசையை புதிய தளத்திற்கு இட்டுச் சென்றது.வர்த்தக விரிவாக்கத்தின் விளைவாக 1920 களில் இசைத்தடுக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டன.கிராமபோன் இசைத்தட்டுக்கள் [GRAMMEPHONE ] என அவை அழைக்கப்பட்டன.அன்றைய தமிழகத்தில் புகழ் பெற்றிருந்த நாடகபாடல்களும் ,சில் கர்னாடக இசை பாடகர்களின் பாடல்களும் இசைத்தட்டுக்கலாக வெளியாகின. இசைத்தட்டு விற்பனையின் வளர்ச்சி, புதிய பாடகர்களின் பாடலகளையும் வெளியிடும் ஆர்வத்தை தூண்டின.1924 ஆம் ஆண்டு M.S.சுப்புலட்சுமி எட்டு வயதில் பாடிய ” மரகத வடிவு செங்கதிராளா ” என்ற பாடல் இசைத்தட்டாக வெளி வந்தது.இதுவே M.S.சுப்புலட்சுமி யின் முதல் இசைத்த்ட்டுப்பாடலாகும் .S.G.கிட்டப்பா , K.P.சுந்தராம்பாள் போன்று நாடகமேடைகளில் புகழ் பெற்ற கலைஞர்களின் பாடலகள தனி இசைத்தட்டுக்களாக[Private Records ] வெளிவந்தன.
சுதேசமித்திரனில் [29.10.1931] வெளியான காளிதாஸ் பட விமர்சனத்தின் முக்கிய பகுதிகளை தருகிறேன்.
“தென்ன்னிதிய நாடகமேடையில் கீர்த்தி வாய்ந்த விளங்கும் மிஸ்.டி.பி.ராஜலட்சுமி முதன் முதலாக சினிமாவில் தோன்றுவதை ,இவளை நாகட மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்.தமிழ் ,தெலுங்கு பாசையில் தயாரிக்கப்படுள்ள இப்பேசும் படம் இன்னும் சில வரங்கள் இங்கு செல்லும் என்று எளிதில் கூறலாம்………..நாடக மேடையில் இவள் பாட்டுக்களில் சிறந்ததாகிய தியாகராஜா கிருதிகளான ” எந்தரா நீதனா “, ” சுர ராக சுதா ” என்ற இரு பாட்டுக்களையும் ஹரிகாம்போதி ,சங்கராபரணம்முதலிய ராகங்களிலும் கேட்கலாம். இதைத்தவிர ” இந்தியர் நமக்குள் ஏனோ வீண் சண்டை ” , ” ராட்டினமாம் காந்தி கைபாணமாம் ” என்ற பாட்டுகளை இனிய குரலுடன் பாடுகிறாள்.வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது.மிஸ் .ஜான்சிபாயும் , மிஸ்டர் ஆர்டியும் செய்த குறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது.அவசியம் பார்க்கத் தகுந்தது. ”
தமிழ் நாடக மேடைகளில் தமிழ் செவ்வியல் இசையும் [ கர்னாடக இசை ] ,நாட்டுப்புற இசையும் , ஓரளவு ஹிந்துஸ்தானி இசையும் கலந்த ஒரு கலவையாக இருந்தன என்பதற்கு S.G.கிட்டப்பா பாடி இன்று நமக்கு கிடைத்துள்ள இசைத்தட்டுப் பாடல்கள் சான்றாக உள்ளன என்பார் இசை ஆய்வாளர் வாமனன்.
ஏனெனில்இந்த Auld Lang Syne என்ற பாடல் அமைக்கப்பட்டுள்ள மெட்டு தமிழ் செவ்வியல் இசையில் மோகன ராகத்திற்கு மிக நெருக்கமான சாயலைக் கொண்டதாக உள்ளது.மலையும் மலை சார்ந்த இடத்திற்கு ஏற்ற ராகம் மோகனம் என தமிழ் செவ்வியல் இசை இடம் வழங்கியுள்ளது
மோகன ராகத்தை இந்துஸ்தானி இசையில் பூபாலி [ Bhupali ] என அழைப்பர்..அதன் காரணமாக தாகூர் “Scotch Bhupali” என அதற்க்கு பெயரிட்டார் போலும். Auld Lang Syne என்ற பாடல்உலகமெங்கும் பாடப்பாகின்றது.சமீபத்தில் சீன தொலைக்காட்சியில் சீன பெண்பாடகி ஒருவர் பாடிய போது இது சீனப் பாடலோ என் எண்ணவைத்தது.உலகவியாபகமான ராகங்கள் என வர்ணிக்கப்படும் 5 சுரங்களைக் கொண்ட [ Bentatonic Scale ] ராகங்களில் மோகனமும் ஒன்றாகும.தென் கிழக்கு ஆசியாவில் [இந்தியா ,பாகிஸ்தான்,நேபால்.வியட்நாம் , பங்களாதேஷ் , சீன,ஜப்பான் , அசாம்,பர்மா ,தாய்லாந்து,கம்போடியா ]சர்வசாதாரணமாக கேட்கக்கூடிய ராகம் இதுவாகும்.அதுமட்டுமல்ல சூடான்,எத்தியோப்பியா ,சோமாலியா ,அரேபிய போன்ற நாடுகளிலும் கேட்ககூடிய ராகமாகும் இந்த மோகனம்.மேற்சொன்ன Auld Lang Syne என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு தாகூர் இரண்டு பாடல்களை தந்திருக்கிறார்.
1. ஆனந்த லோகே மங்கள லோகே [ Anandha loke mangala loke ] இந்த பாடலின் அனுபல்லவியை , கொஞ்சம் துரித கதியாகக் கொண்டு ” உள்ளத்துக்குளே ஒழிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா ”
என்ற பழனி [1965 ] படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூத்தி தொட்டும் தொடாத மாதிரியும் தழுவி செல்லும் படியாக அமைத்திருப்பார்கள்.இந்தபாடலை விட இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி
நான் நன்றி சொல்ல சொல்ல ,
நாணம் மெல்ல மெல்ல
என்னை அணைப்பதென்ன ….
” உள்ளத்துக்குளே ஒழிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா ” என்ற பாடலையும் ,நான் நன்றி சொல்வேன் பாடலின் ” நான் நன்றி சொல்ல சொல்ல ” என்று ஆரம்பமாகி பின் வரும் மூன்று வரிகளையும் சாதாரணமாக முணு முணுத்து பார்த்தாலே இலகுவில் புரியும்.
இதே பாடலை தனது இனிய வாத்திய பரிவாரங்களுடன் இளையராஜாவும்
சோலை இளங் குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ ………..
என்ற பாடலின் { படம்: காவலுக்கு கெட்டிக்காரன் பாடியவர்கள் : மனோ + சித்ரா ] பல்லவியாகக் கொண்டு ஆரம்பித்து , பின் பாடல் வேறு திசையில் சென்று இனிமையை கொடுக்கிறது.
பொதுவில் பார்க்கும் பொது இவை வெவ்வேறு பாடல்களே.ஆனாலும் அவற்றின் சாயல்களில் ஒற்றுமையும் இருக்கும்.
2. புர்னோ செய் தினேர் கதா [ Purano shei Diner katha] இந்த பாடலின் பல்லவியை ஆதாரமாகக் கொண்டு , காலம் சென்ற இசையமைப்பாளர் சந்திரபோஸ் “சின்ன கண்ணா செல்லக் கண்ணா ” என்று ஆரம்பமாகும் சித்திரா பாடும் பாடல் {பாடலில் ” தாய் மடியில் நீ படுக்கும் காலம் நிம்மதி ” என்ற வரிகள் வருகின்ற பாடல் . படம் தெரியவில்லை.] இந்த பாடலைத்த்ழுவியதாக இருக்கும்.
தமிழ் செவ்வியல் இசையையும் ,நாட்டுப்புற இசையையும் பயபடுத்தி வந்த தமிழ் சினிமாவை ஹிந்தி சினிமாவின் மெல்லிசைப் பாங்கான பாடல்கள் 1940 களிலேயே ஆக்கிரமிக்கத் தொடங்கின.ஹிந்தி பாடலகளின் மெல்லிசையின் இனிமையும் ,வாத்திய இசை இணைப்பும் பரந்து பட்ட மக்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை..அது இந்திய திரை இசையில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.தமிழ் திரை இசையிலும் இளையராஜாவின் வருகை வரை அதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.அந்தக் கால தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஹிந்திப் பாடல்களை காப்பி பண்ணும் படி தமிழ் இசையமைப்பாளர்களை கட்டளையிட்டனர் எனலாம்! இந்த போக்கை நியாயப்படுத்துவது போல இசை அறிஞர் பாபநாசம் சிவன், ராண்டார் கையிடம் சொன்ன செய்தி :[ ராண்டார் கை BBC பேட்டி ]
” ஏற்கனவே இருக்கும் ஒரு பாட்டினை அப்படியே திரைப்பாடலாக மாற்றுவதில் தவறில்லை . இசை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.அது என் வழியா வருது,பங்கஜ் முல்லிக் ஊடாக வருது ,சைகல் வழியே வருது, மேல் நாட்டில் Bing Krosby யாலும் வருது ..யாருக்கும் சொந்தம் கிடையாது.”
பழைய தமிழ் திரையிசைப்பாடல்களில் இன்று மிகப்பெருமையாகப் பேசப்படும் பாடல்களில் சில ஹிந்தி ,வங்காள மொழிகளில் வெளிவந்த பாடல்களின் நேரடித்தழுவல்களாகவே இருந்துள்ளன.மீரா [1940 ] படத்தில் M.S.சுப்புலட்சுமி பாடிய ” காற்றினிலே வரும் கீதம் ” என்ற புகழ் பெற்ற பாடல் இன்று ஒரு Classical தரத்திற்கு மதிக்கப்படுகிறது.மெட்டின் இனிமை , M.S.சுப்புலட்சுமி என்கிற புகழ் பெற்ற பாடகி ஒரு புறம் என்பவை பாடலின் புகழுக்கான காரணங்கள்.S.V.வெங்கட்ராமன் என்கிற அந்த காலத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் அந்த படத்தின் இசையமைப்பாளராக இருந்தார்.அவர் சொந்தமாக பல அற்புதமான பாடல்களைத் தந்தவர்.
குறிப்பிட்ட அந்தப்பாடல் 1935 இல் ஜுதிகா ராய் என்ற வங்காளப் பாடகி பாடிய பாடலின் நகலாகும்.”வதனமே சந்திர விம்பமோ..” என்ற தியாகராஜபாகவதர்[ படம்: சிவகவி 1940 ] பாடிய பாடலும் வங்காள இசையமைப்பாளர் தாஸ் குப்தா [ Das Guptha ] அமைத்த நாட்டிய இசையில் இருந்து எடுக்கப்பட்ட டியூன் ஆகும்.
சகுந்தலை [1940 ] படத்தில் N.S.கிருஷ்ணனும் ,T.S.துரைராஜும் பாடிய ” தூர கடல் தாண்டி போவோமே மீன் பிடிப்போமே ” என்ற பாடல் நல்ல நகைச்சுவைப்பாடல்.அடிப்பியா ….?அப்பன் மவனே சிங்கம்டா ..போன்ற வசனங்கள் கலகலப்பூட்டுபவை.நாட்டுப்புறப்பாங்கில் அருமையான மெட்டமைப்பை கொண்ட பாடல்.இந்தப் பாடல் 1905 ம் வருடம் தாகூர் இசையமைத்த எகல சோலே ரே என்று ஆரமபமாகும் பஜன் பாடலின் நகலாகும்.இது போல இன்னும் பல உதாரணங்களை காட்டலாம்.1940 களிலிருந்து ஆங்காங்கே நடந்த நகலெடுபுக்கள் 1950 களில் இன்னும் அதிகரித்தன. அவை உளத்தூண்டுதலாக [ Inspiration ] அல்லாமல் தொந்தரவான நகலெடுப்புக்களாகின.மெட்டுக்குள் அடங்காத தமிழ் சொற்களும் ,சரியற்ற உச்சரிப்புகளுமான பாடல்கள் வரத் தொடங்கின.இந்த நிலையை நையாண்டி செய்வது போல் T.R.மகாலிங்கம் மோகனசுந்தரம் படத்தில் ” பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா..” என்றொரு பாடல் பாடுவார்.அந்தப் பாடலின் சரணத்தில்
வட நாட்டு பட மெட்டில்
நல்ல தமிழை புகுத்தி
தொல்லை தரும் தமிழ் பட்டு வேணுமா ?
நல்ல ஹிந்திப்பாடல் மெட்டுகளுக்கு உயிரோட்டமான , கவிதை நயமிக்க வரிகளை எழுதியவர் கம்பதாசன்.AAH [1953 ] என்ற ஹிந்திப்படம் தமிழில் அவன் [1953 ] என்று மொழியாக்கம் செய்யப்பட்டது.அந்த படத்தின் அத்தனை பாடலகளையும் எழுதியவர் கம்பதாசன்.
1. கண் காணாததும் மனம் கண்டு விடும் [ A.M.ராஜா + ஜிக்கி ]
2. ஏகாந்தமாம் இம்மாலையில் என்னை வாட்டுது உன் நினைவே [ ஜிக்கி ]
3. அன்பே வா அழைக்கின்ற எந்தன் மூச்சே [ A.M.ராஜா + ஜிக்கி ]
4. காரிருள் நேரம் சாலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே [ A.M.ராஜா ]
காலத்தை வென்று நிற்கின்ற , அமரத்துவம் மிக்க , மெல்லிசையில் தன்னிகரற்ற பாடல்களாக இன்றும் அவை விளங்குகின்றன.நல்ல பாடல்களைக் கொண்ட திரைப்படங்களை மொழி மாற்றம் செய்யும் போது விளைகின்ற நன்மைகளில் இதுவும் ஒன்றாகும்.அது மட்டுமல்ல திரும்பவும் ரீ மேக் [remake] செய்யப்படும் போதும் அதே நல்ல பாடல்கள் பயன் பட்டு வெற்றி பெறுகின்றன.நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்ட AAH 1953 [ தமிழில் அவன் ]. Mughal – E – Azam 1960 [ தமிழில் அக்பர் ], Woh kaun Thi ? [ 1964] தமிழில் யார் நீ ? போன்ற படப்பாடல்கள் மெல்லிசையின் உச்சங்கள் என்று சொல்லலாம்.யார் நீ ? படத்தின் இசையமைப்பாளர் வேதா என்பவர்.ஆயினும் அவை ஹிந்தி பட பாடல்களின் நகல்களே.அந்த பாடல்களை இசையமைத்தவர் மெல்லிசையில் பல அர்ப்புதங்களை செய்த மாமேதை மதன் மோகன்.
AAH 1953 Music : Shankar Jaikishan
Mughal – E – Azam 1960 Music : Naushad Ali
Woh kaun Thi ? [ 1964] : Music : Madhan Mohan
அவ்வாறான ஒரு சூழல் [ பலவிதமான இசைகளின் கலப்பு ] வடஇந்தியாவில் 15 ,16 ஆம்நூற்றாண்டில் அரசியல் மாற்றங்களால் ஏற்ப்பட்டிருந்தது.இந்திய செவ்வியல் இசையுடன் [தமிழ் செவ்வியல் இசையே ], அரேபிய இசை கலந்து ஏற்கனவே ஹிந்துஸ்தானி இசையாகி , பாரசீக [ ஈரான்,ஆப்கானிஸ்தான் ] இசை நுட்பங்கள் இணைந்து கவாலி ,கசல் போன்றஇசைவடிவங்கள் தோன்றி களிப்பாட்ட இசையாகவும் [ entertanining] வளர்ந்திருந்தன.இந்த வரலாற்றுப் பின்னணியே ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்கள் தலை சிறந்த மெல்லிசைப்பாடல்களை தர இலகுவாக இருந்தது எனலாம்.
செவ்வியல் இசை மரபு கொண்ட தமிழ் சூழலில் இது இலகுவான காரியமாக இருக்கவில்லை.எனினும் அந்த மரபிலிருந்தே அவர்கள் அதனைச் சாதித்துக் காட்ட முனைந்தார்கள். முயற்ச்சியில்….
[ தொடரும் ]