Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்

தமிழ்த்திரைப்பட இசையுலகில் இசையமைப்பாளர் யாரென அறியப்படாத காலத்தில் பாடல்களை அமைத்தவர் இசை அறிஞர் பாபநாசம் சிவன்.கர்னாடக கீர்த்தனைகள் அப்படியே ஒலித்த காலத்தில் அந்த முறையிலேயே தனது பாடலகளையும் அமைத்துக் கொடுத்தவர்சிவன். பின்னர் இசையமைப்பாளர்களுடன் இணைந்த போதும் பாடல்களுக்கான் சுரங்களை எழுதிக் கொடுத்துவிடுவார். பாடலுக்கு வாத்தியம் சேர்ப்பது இசையமைப்பாளர்களின் வேலையாக இருந்தது.தமிழ் செவ்வியல் இசைப் [ கர்னாடக இசைப்] பாடலான ” எப்ப வருவாரோ ..” என்ற பாடல் மெட்டில் ” சர்ப்ப கோண போதன் …” என்ற பாடலை தியாகராஜபாகவதர் பாடினார்.பாபநாசம் சிவனின் inspiration தமிழ் செவ்வியல் இசையே .

செவ்வியல் இசை மரபு கொண்ட தமிழ் சூழலில் ஹிந்தி திரைப்பட இசை போன்ற மெல்லிசை உருவாவது இலகுவான காரியமாக இருக்கவில்லை.பொதுவாக மரபு என்பதை ஒரு சுமை என சொல்வார்கள். எனினும் அந்த மரபிலிருந்தே அவர்கள் அதனைச் சாதித்துக் காட்ட முனைந்தார்கள். அந்த முயற்ச்சியில் மந்திரிகுமாரி [1949 ] , பொன்முடி [1950 ] போன்ற படங்களில் சிறந்த மெல்லிசைப்பாடல்களை தந்தவர் இசை மேதை ஜி.ராமநாதன்.மந்திரிகுமாரியில் அவர் இசையமைத்த

1. வாராய் நீ வாராய் [ திருச்சி லோகநாதன் + ஜிக்கி ]

2. உலவும் தென்றல் காற்றினிலே [ திருச்சி லோகநாதன் + ஜிக்கி ]

போன்ற பாடல்களும், பொன்முடி படத்தில்

1. வான் மழையின்றி வாடிடும் பயிர் போல் [ ஜி.ராமநாதன் + டி.வீ .ரத்தினம் ]

2. நீல வானும் நிலவும் போல [ ஜி.ராமநாதன் + டி.வீ .ரத்தினம் ]

3. என் காலமோ மாற நம் காதலே பொய்யானதோ [ ஜி.ராமநாதன் ]

போன்ற பாடல்கள் தமிழ் திரை இசையில் மெல்லிசைக்கான முன் முயற்சிகளாகும். இந்தப் பாடல்கள் இன்றுவரை அவருடைய புகழை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றன.பொன்முடி படத்தில் ஜி. ராமநாதனே எல்லாப்பாடல்களையும் பாடினார்.அவர் சிறந்த பாடகர் என்பது பலரும் அறியாத செய்தியாகும்.உயிரோட்டமாக பாடுவது என்பதை இவர் பாடும் முறையில் அறியலாம்.இவருடைய பாடல்களை கேட்கும் போது இதனை நான் உணர்ந்திருக்கிறேன்.குறிப்பாக கே.வீ .மகாதேவன் இசையமைத்த ” எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே ” என்ற பாடலை [ படம்: அல்லி பெற்றபிள்ளை ] மிக, மிக உருக்கமாக அவர் பாடியிருப்பார். அவர் இசையமைப்பில் பாடல்கள் பெரும் பாலும் ஓங்கி குரல் எடுத்து பாடும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.அதில் உயிரைப்பிடித்தாடும் உணர்வுகள் நிறைந்த சங்கதிகள் இருக்கும்.வேறு ஒரு பாடகர் பாடும் போது ஜி.ராமநாதன் எவ்விதம் அதனை பாடிக்காண்பித்திருப்பார் என்கிற எண்ணம் எழாமல் இருக்க முடியாது.அவரைப்பற்றி அவரிடம் சிறந்த பாடல்களைப் பாடிய திரு.சீர்காழி கோவிந்தராஜன் கூறுகிறார்.

” ஹார்மோனியத்தில் அவருடைய கை விரலகள் நளினமாக நடமாடும்.அவருடைய உடல் மெல்லக் குலுங்கும் .குழைவுடன் அவரது குரலிலே பாடல் உலவும். ஆஹா .. சொக்க வைத்து விடுவார்.இசை என்ற வலையிலே கேட்பவர்களைச் சிக்க வைத்து விடுவார். அவர் பாடும் போது திருப்தியடையும் தயாரிப்பாளர்கள் ,நாங்கள் அதே பாடலைப் பாடும் போது லேசில் திருப்தியடைய மாட்டார்கள். “.
இந்தக் கருத்தை நிச்சயமாக அவர் பாடுவதை கேட்பவர்கள் உணரலாம்.அது மட்டுமல்ல அவரது பாடல்களை பாடி பழகினால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடலை இலகுவாகப் பாடலாம் என்கிற சிந்தனை பல காலமாக என்னுள் இருந்தது.அந்தக் கருத்துச் சரியென நிரூபிப்பது போல திரு.T.M.சௌந்தரராஜன் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ” திரை இசை அலைகள் ” என்ற வாமனனின் நூலில் வாக்குமூலம் தருகிறார்.

” நான் வளர்வதற்கும் ,என்னுடைய சாரீரத்தை பக்குவப்படுத்துவதற்கு , நான் தைரியமா பாடிக்கிட்டிருக்கிறதுக்குஜி.ராமநாத ஐயர் தான்.அவர் கொடுத்த வழிதான்…அவரோட மியூசிக்தான் நான் சிங்கம் மாதிரி பாடிக்கிட்டிருக்கேன்.சாரீரத்தில் ஆண்மை வேண்டும் என்பார்.அவர் அப்படித்தான் பாடிகாட்டுவர். “

கர்னாடக இசையையும் ,நாட்டுப்புற இசையையும் ஆதர்சமாக [ Inspiration ]கொண்டு ஜி.ராமநாதன் இனிமையான பல பாடல்களைத் தந்தார். கர்னாடக இசையில் உள்ள ராகங்களை அடையாளம் காணவும் ,அவை குறித்து அறியவும் விரும்புபவர்கள் இவரது பாடல்களை கேட்பது நல்ல பயன் தரும்.தமிழ் செவ்வியல் இசை ராகங்களின் இலக்கணங்கள் மாறாமல் , அதன் இனிமையான பக்கங்களை எடுத்துக் கொண்டு [ நீட்டி முழக்காமல் ] ,மன உணர்வுகளை சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக , குறுகிய நேரத்திற்குள் [ 3 நிமிடத்திற்குள் ] வெளிப்படுத்தக் கூடிய அற்ப்புதங்களை பாடல்களில் நிகழ்த்திய இசை மேதை ஜி.ராமநாதன்.ஒப்புவமையில்லாத கானங்களால் கேட்போரின் மனங்களை பரவசப்புடுத்துகிற , உருக வைக்கிற சக்தி அவருடைய பாடல்களில் இருந்தன.
கர்னாடக இசையை அடிப்படையாக [ Inspitration ] வைத்துக்கொண்டு அவர் இசையமைத்த பாடல்களை மூன்று பிரிவுக்குள் அடக்கலாம் என நினைக்கிறேன்.

1. மெல்லிசை வடிவம் [ Light music ]

2. செவ்வியல் இசை தழுவிய பாடல்கள்[ Semi Classical songs ]

3. ராகமாலிகையில் அமைந்த பாடல்கள்

இதில் எந்தப் பிரிவான பாடல் என்றாலும் அதில் ராகங்களை மிக எளிதாக அடையாளம் கண்டு விடலாம் என்பது முக்கிய அம்சமாகும்.மெல்லிசைப்பாடல்களுக்கு எடுத்துக் காட்டாக சில பாடல்கள்.

1 . யானைத் தந்தம் போல பிறை நிலா

வானிலே ஜோதியாய் வீசுதே …… ஜி.ராமநாதன் 1952 இல் அமரகவி என்ற படத்தில் இசையமைத்து எம்.கே.தியாகராஜபாகவதர் + P .லீலா இணைந்து பாடிய , ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட்ட, அருமையான இந்தப் பாடலை உந்துதலாக [ Inspiration ] கொண்டு ஷங்கர் – ஜெய்கிஷன் என்கிற புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் 1954 இல் வெளியான [ Film: Badshah] என்ற ஹிந்திப் படத்தில் Aa neele Gagan tale pyar என்ற பாடலைத் தந்தார்கள்.

யானைத் தந்தம் போல பிறை நிலா…. என்ற அந்தப்ப் பாடல் மெல்லிசையின் முன்னோடியான பாடல் ஆகும்.இந்த பாடலை இன்று கேட்கும் போதும் மிகவும் வியப்பாக இருக்கும்..புதுமைக்கு புதுமையாயும் ,பழமைக்கு பழமையாயும் விளங்குகின்ற பாடலாகும்.பின்னாளில் 1984 இல் ஜோதிமலர் என்ற படத்தில் ஷங்கர் கணேஷ் இசையமைப்பில் ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் பாடிய

வெண்ணிலா முகம் பாடுது
கண்ணிலே சுகம் தேடுது என்ற பாடல் G.ராமனாதனின் மேற்சொன்ன பாடலின் பாதிப்பால் உருவானது என்பதை என்பதை யாரும் உணரலாம்.

2 . அழகோடையில் நீந்தும் இள அன்னம் [ கோகிலவாணி ] திலங் ராகம்

3 . அன்பே எந்தன் முன்னாலே [ ஆரவல்லி ] ராகம் மோகனம்

4 . வாராய் நீ வாராய் [ மந்திரி குமரி ] ஆபேரி ராகம்

5 . வாடா மலரே தமிழ் தேனே [ அம்பிகாபதி ] முகாரி ராகம்

6 . அன்பே என் ஆரமுதே வாராய் [ கோமதின் காதலன் ] ஆபேரி ராகம்

7 . மோகன புன்னகை செய்திடும் நிலவே [ வணங்காமுடி ] T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா [ கமாஸ் ராகம்]

8 . கற்பனை கனவினிலே [ கதாநாயகி ] A.M.ராஜா + K.ராணி

9 . துரையேஇளமை பாராய் [ கதாநாயகி ] A.M.ராஜா + K.ஜமுனாராணி

10 . காற்றுவெளியிடை கண்ணம்மா [ கப்பலோட்டிய தமிழன் ] – ராகம் மோகனம் [பாரதி பாடலை காதலர்கள் பாடும் பாடலாக மாற்றி , மிக அருமையாக

இசையமைக்கப்பட்ட பாடல் இது.]

செவ்வியல் இசை தழுவிய பாடல்களுக்கு [Semi Classical songs ] எடுத்துக் காட்டாக சில பாடல்கள்.

1 .என்னைப் போல் பெண்ணல்லவோ[ வணங்காமுடி ] ராகம் தோடி

[உணர்ச்சிகரமான , மிகச் சிறப்பான பாடல்.பி.சுசீலா அவர்கள் மிகச் சிறப்பாகப் பாடிய பாடல்.] தோடி ராகத்தின் அழகுகளை எல்லாம் ,எங்கும் சிந்தாமல் சிறப்பாக காட்டியிருப்பார் ஜி.ராமநாதன்.

2 . பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்[ சித்தூர்ராணி பத்மினி ] கல்யாணி ராகம்

3 . சிந்தனை செய் மனமே[ அம்பிகாபதி ]கல்யாணி ராகம்

4 . மன்மதலீலையை[ ஹரிதாஸ் ] சாருகேசி ராகம்

5 . அற்புதக் காட்சி ஒன்று கண்டேன் [ சதாரம் ] சுத்த சாவேரி ராகம்

6 . ஆடல் காணீரோ [ மதுரை வீரன் ] ராகம் சாருகேசி

7 . வா வா கலைமதியே வா [ கற்ப்புக்கரசி ] சுத்த தன்யாசி ராகம்

8 . சரச மோகன சங்கீதாம்கிருத[ கோகிலவாணி ] சுத்த தன்யாசி ராகம்

9 . கேட்ப்பதெல்லாம் காதல் கீதங்களே [ இல்லறஜோதி ] P.லீலா ஆபேரி ராகம் P.லீலா மிக சிறப்பாகப் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.

சிறு குறிப்பு : 1970 , 1980 களில் இந்தவகை பாடல்களில் [ SEMI CLASSICAL ] மலையாள சினிமாவில் மிக , மிக அற்ப்புதமான பாடல்களை கே.ஜே. ஜேசுதாஸ் ஏராளமாக பாடல்களைப் பாடியிருக்கிறார்.ஜி.தேவராஜன் , வீ. தட்சிணாமூர்த்தி , பாபு ராஜ் , எம்.பீ. ஸ்ரீனிவாசன் , பாஸ்கரன் , ரவீந்திரன் , எம்.ஜி.ராதாகிருஷ்ணன் , பாம்பே ரவி போன்றோர் மிக அழகான பாடலகளை இசையமைத்திருக்கிறார்கள்.இந்தவகைப் பாடல்களைக் கேட்டே தமிழ் செவ்வியல் இசையை [ கர்னாடக இசையை ] ரசிக்கும் அல்லது கேட்கும் நிலைக்கு நான் வந்தேன்.

ராகமாலிகையில் அமைந்த பாடல்களுக்கு எடுத்துக் காட்டாக சில பாடல்கள்.

1 . காத்திருப்பான் கமலக் கண்ணன்[ உத்தம புத்திரன் ] ராகமாலிகையில் அமைந்த ராகங்கள் சாருமதி ,திலங் , மோகனம்.
பி.லீலா மிகச் சிறப்பாகப் பாடிய பாடல்.இந்தப் பாடலின் ராக அமைப்பை மிகவும் வியந்து பாராட்டியுள்ளார் இளையராஜா.என்னுடைய கணிப்பிலும் தமிழ் சினிமாவில் வெளிவந்த தலை சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

2 . எல்லையிலாத இன்பத்திலே[ சக்கரவர்த்தித் திருமகள் ] அமைந்த ராகங்கள் கல்யாணி , கானடா

3 . தண்ணீர் விட்டோ வளர்த்தோம் [ கப்பலோட்டிய தமிழன் ] அமைந்த ராகங்கள் சிந்துபைரவி , ஜோன்புரி ,தேஷ் ,சிவரஞ்சனி
இந்த பாடலில் வரும்

” மேலோர்கள் வெஞ் சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதும் காண்கிலையோ .”

என்ற வரிகளை தேஷ் ராகத்தில் அவர் பாடும் போது கண்கள் குழமாகி விடும்.

திருச்சி லோகநாதன் மிகவும் அருமையாக இந்தப் பாடலை பாடிருக்கிறார்.அவர் தான் சில பாடல்களை பாட வேண்டும் என்று ஜி.ராமநாதன் பிடிவாதம் பிடித்து ,பல நாட்கள் { திருச்சி லோகநாதன் மலேசியாவில் இருந்து இசை நிகழ்ச்சி நடாத்தி விட்டு திரும்பும் வரை ]காத்திருந்து பாட வைத்தாக திருச்சி லோகநாதனின் புதல்வர் டி.எல் .மகராஜன் தெரிவித்திருந்தார்.

4 . நித்திரை இல்லையடி சகியே [ காத்தவராயன் ] அமைந்த ராகங்கள் ஆபேரி , பாகேஸ்வரி , பந்துவராளி. இதுவும் அவரது சிறந்த படைப்புக்களில் ஒன்றாகும்.

தமிழ் செவ்வியல் [ கர்னாடக இசை ] ராகங்களை அடிப்படையாகக் கொண்டு ஜி,ராமநாதன் அமைக்க முக்கியமான காரணமாய் அமைந்தவை அக்கால ராஜா ராணி கதைகளை மைய்யமாகக் கொண்டு வெளி வந்த திரைப்படங்களே.அவர்கள் ஏற்கனவே நாடகங்களிருந்தும் வந்ததால் அவர்களுக்கு அவை தோதாக இருந்தது எனலாம்.அவர்களது இசை நாடக பாணியில் இருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.அதிலிருந்து மனதை நெகிழ வைக்கும் நல்ல பாடல்களை தந்தது அவரின் சிறப்பாகும்.

பாரதி பாடல்களுக்கு ஜி.ராமநாதன் இசையமைத்த முறை மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விசயமாகும்.வேறு பல இசையமைப்பாளர்களும் பாரதி பாடல்களுக்கு இசை வழங்கியிருந்தாலும் ஜி.ராமநாதன் பாடலகள் உணர்வு வெளிப்பாடில் சிறந்து விளங்குகின்றன.கப்பலோட்டிய தமிழன் படத்தில்

” தண்ணீர் விட்டோ வளர்த்தோம் …” என்ற பாடலுக்கு மிக அற்ப்புதமாக இசையமைத்திருப்பார்.. இந்த பாடலை உணர்ச்சி ததும்ப திருச்சி லோகநாதன் பாடியிருக்கிறார்.” காற்று வெளியிடை கண்ணம்மா ..” பாடல் இசையமைப்பும் மெல்லிசையின் உயர்ந்த இடத்தில நிற்கின்ற பாடல் ஆகும்.இந்த பாடல்களை பாரதி கேட்டிருந்தால் மிக ஆனந்தம் அடைந்திருப்பான். 1963 ஆம் வருடம் ,தனது 53 ஆம் வயதில் மரணமடைந்த ஜி.ராமனாதனின் இழப்பு நல்ல இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாகும்.தனது இறுதிப படமான தெய்வத்தின் தெய்வம் படத்தில்

” நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை “,

” பாட்டுப்பாட வாய் எடுத்தேன் ஆராரோ “,

” கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி ” ,

” கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் ” .. போன்ற அருமையான மெல்லிசைபாங்கான பாடல்களைத் தந்தார்.

” பாட்டுப்பாட வாய் எடுத்தேன் ஆராரோ “

என்ற பாடலில் ஒப்பாரி இசையை மிக லாவகமாகப் பயன்படுத்தியிருப்பார்.இந்த பாடலை [ஒப்பாரி இசையை ] உந்துதலாகக் [ Inspiration ] கொண்டு பார் மகளே பார் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் ” பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா போகுமிடம் சொல்லாமல் போய் விட்டாயே ” என்ற பாடலை சிறப்பாகத் தந்தார்கள்.

மரபிசையில் நின்று புதுமை செய்த ஜி.ராமநாதன் மேற்கத்தேய இசையை ஒரு சில பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். ராக் ஆன் ரோல் [ Rock and Roll ] பாணியை யாரடி நீ மோகினி பாடலில்[ படம் : உத்தமபுத்திரன் ] இணைத்தார்.அது மட்டுமல்ல “சின்னப்பெண்ணான போதிலே …” என்ற பாடலை[ படம் : ஆரவல்லி ] ஆங்கில பாடலான Que Sera Sera [ When I was a Little Girl…] பாடலின் மெட்டில் தமிழில் தந்தார்..

இந்த இரண்டு பாடல்களில் அவர் மேலைத்தேய இசையை பயபடுத்தினார்.இவருடைய பாடல்களில் ஹிந்தி இசையமைப்பாளர்களான நௌசாத் , சி .ராமச்சந்திரா [ C. Ramchandra ]போன்றோரின் தாக்கமும் உண்டு. சி .ராமச்சந்திரா இசையமைத்த Yeh Zindagi Usi Ki என்ற அனார்க்கலி படப்பாடலை தழுவி தமிழில் காவேரி என்ற படத்தில் ” என் சிந்தை நோயும் தீருமா ” என்ற ஜிக்கி பாடிய பாடலை அமைத்தார். Yeh Zindagi Usi Ki என்ற அதே பாடலை அனார்க்கலி[ தமிழ் ] படத்தில் ஆதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளர் அனார்க்கலி என்ற படத்தில் ” ஜீவிதமே சபலமோ ” என்ற பாடலாகத் தந்தார்.இன்னுமொரு பாடலில் ஜி.ராமநாதன் இந்த பாடலை Strong Inspiration ஆகக் கொண்டு ,கண்டுபிடிக்க முடியாத வண்ணம் ” விண்ணில் வாழும் தேவனோ ” [படம்: கோகிலவாணி – சீர்காழி ,ஜிக்கி ] என்ற பாடலை அமைத்தார்.

கப்பலோட்டிய தமிழன் படத்தில் மிக சிறப்ப்பாக பாரதியின் பாடல்களை அமைத்தவராயினும் அதில் வரும் ” வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் ” என்ற பாடல் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் இசையமைத்து கம்யூனிஸ்ட் கட்சி நாடகங்களில் பாடப்பட்டு வந்த பாடல என்றும் , எந்தவித நன்றியில்லாமல் அதை திரைப்படத்தில் பயன் படுத்திக் கொண்டார்கள் என்று ” இளையராஜா சகோதர்களின் இசை பயணம் ” என்கிற நூலை எழுதியவரும் பாவலர் வரதராஜனின் தோழருமான சங்கை வேலவன் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

கர்நாடக இசையில் , மிகவும் அருமையான ராகங்களை எல்லாம் தனி பக்தி உணர்வை மட்டும் காட்டி வந்த சூழலில் ,அதையும் தாண்டி பலவிதமான உணர்வுகளையும் காட்டலாம் என நிரூபித்தவர்கள் சினிமா இசையமைப்பாளர்கள்.அனாதைகளாக ,தேடுவார் இல்லாமல் கிடந்த ராகங்களை எல்லாம் பிரபலப்படுத்தியவர்கள் தமிழ் திரை இசையமைப்பாளர்கள்.அதற்க்கு சிறந்த உதாரணம் ” மன்மதலீலையை வென்றார் உண்டோ ” [ படம்: ஹரிதாஸ் 1945] என்ற சாருகேசி ராகப்பாடல் .சாருகேசி ராகம் .கர்னாடக இசைக்கலைஞர்களே அதனை தொடாதிருந்த நிலையில்,இந்த பாடல் மூலம் சாதாரண மக்களையும் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.இந்த பாடலின் புகழே , வித்துவான்களை சாருகேசி ராகத்தின் பக்கம் திருப்பியது.

எனது பதின்ம வயதில் அவரின் பாடல்களால் மிக ஈர்க்கப்பட்டேன்.எங்கள் ஊரில் [ கம்பர்மலை , வல்வெட்டி துறையை அண்மித்த கிராமம். ]எந்த விதமான கொண்டாடங்களிலும் ஜி.ராமநாதன் இசையைத்த பாடல்கள் ஒலிக்கும்.குறிப்பாக ” அம்பிகாபதி ” படப் பாடல்கள்.அவை மனதில் மிக தாக்கம் ஏற்ப்படுத்தின.இந்தப் பாடல்கள் எங்கள் காதுகளில் நம்மை அறியாமல் விழுந்து கொண்டேஇருந்தன. . ஜி..ராமநாதனை அடையாளம் கண்டு , ரசிக்க தொடங்கிய காலத்தில் அவரது வேறு படப்பாடல்கள் நாம் அறிந்த வட்டாரத்தில் இருக்கவில்லை. ஒரே இடம் இலங்கை வானொலி தான்.இலங்கை வானொலியில் அன்று ” ஒரு படப்பாடல் ” நிகழ்ச்சி என ஒலிபரப்பாகும். அந்த நிகழ்ச்சியில் மட்டும் ஒரு படத்தின் எல்லா பாடல்களும் ஒலிக்க விடுவார்கள்.ஒரு படத்தின் ஒரு பாடல் மட்டுமே ஒருநாளில் ஒலிபரப்புவது அன்றைய இலங்கை வானொலியின் வழமை.ஒரு படப்பாடல் நிகழ்ச்சியில் ஜி.ராமநாதனின் பாடல்களென்றால் அது தான் எங்களுக்குத் திருநாள்.அவரது பாடலகளை ஒலிப்பதிவு செய்ய நானும் , எனது பால்ய நண்பனும் [ பிரேமதாஸ்- கனடா ] ரேடியோ முன்பு தவம் கிடப்போம்.

நாம் ஒரு பாடலில் வரும் தபேலா தாளத்தை வைத்து ஜி.ராமநாதனின் பாடல்களை கண்டு பிடித்து விடுவோம்.அவரது பாடல்களில் தாளம் சிறப்பானதாக இருக்கும். தபேலா சிறப்பான முறையில் சுருதி சேர்க்கப்பட்டிருக்கும்.அப்படி ஒரு நாதம் வேறு எந்த இசையமைப்பாளரிடமும் நான் கேட்டதில்லை .அவ்வளவு இதமாக இருக்கும்.தபேலா “அடியை ” வைத்தே இசையமைப்பாளர் யார் எனகண்டுபிடித்து விடுவோம். கே.வீ.மகாதேவன் பயன் படுத்தும் தபேலாவின் தாளமும் அவரது பாடல்களை அடையாளப்படுத்துபவையாக இருக்கும்.ஆயினும் ஜி.ராமனாதனின் தபேலா “அடிக்கு” இணையில்லை என்பது தான் நமது கருத்தாகும்.அந்த சவுண்டு இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றில் உண்டு.ஆனாலும் அதன் சுகமே தனி தான்.நாம் ஜி ராமநாதன் மேல் பைத்தியம் பிடித்து திரிந்த காலத்திலேயே தான் ” அன்னக்கிளி ” படப்பாடல்கள் என்னை உலுக்கி விட்டிருந்தது.அதை தொடர்ந்து பல படங்கள்…ஆனால் இளையராஜா புதியவர் என்பது தான் தெரியும்அவர் பற்றி அதிக விபரம் தெரியாது.அவரது பாடலகளில் இருந்த இளமை , இனிமை ,புதுமுறையான வாத்திய இசையால் நாம் கிறங்கடிக்கப்பட்ட நேரம்.

இதே காலத்தில் நாம் ஜி.ராமநாதன் பாடல்களில் ஈடுபாடும் , அவர் பற்றிய தேடுதலில் ஈடுபாடும் காட்டியது என்பது நமது வயதுக்கு மீறியதாகவே இருந்தது. இதற்க்கு முக்கிய காரணம் எனது பெரிய அத்தை [ சகுந்தலை சுந்தரம் ] .ஜி.ராமநாதன் பாடல்கள் பற்றிய தேடலில் எனது அத்தை சகுந்தலை ஜி.ராமநாதன் பற்றி சில தகவல்களை சொன்னார்.சினிமா ,வணிக இலக்கிய இதழ்கள் வாங்கிப் படிக்கும் பழக்கம் அவர் வீட்டில் இருந்தது.பேசும் படம் என்ற சினிமா இதழும் வாங்குவார்கள்.பழைய பேசும் பட இதழ்கள் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது கும்பியடி சுந்தரம் [சுந்தரப்பா] என்பவர் மிக பழைய காலத்து பேசும் படங்கள் இதழ்கள் எல்லாம் வைத்திருப்பதாக சொன்னார்.சுந்தரப்பாவிடம் உள்ள புத்தங்களை யாரும் எளிதில் தொட முடியாது.ஆனால் என்னை அவர் வரவேற்று புத்தங்கங்களை பார்க்க அனுமதி தந்தார்.அவரின் உருவப்படம் ஒன்றை வரைந்து கொடுத்து அவரிடம் நெருங்கினேன்.அதுமட்டும் காரணமல்ல எனபது பின்னால் தெரிந்தது.அவர் பெரிய இசை ரசிகர். அவர் எனது பெரியப்பாவின் நண்பன்.எனது பெரியப்பாவின் பெயர் கே .குழந்தைவேல்.இருபது வருடங்கள் [ 1943 – 1964 ] இலங்கை வானொலியில் வாய்பாட்டில் A கிரேட் கலைஞராக இருந்தவர்.இந்திய சங்கீத மேதை சாம்பமூர்த்தி அவர்களால் நடாத்தப்பட்ட தேர்வில் எடுத்த எடுப்பிலேயே “A கிரேட்” கலைஞராகத் தெரிவி செய்யப்பட்டவர்.தனது 42 வது வயதில் காலமானவர்.அவர் ஒரு பிறவிக்கலைஞர். நாதஸ் வர இசைமேதை வேதாரண்யம் வேதமூர்த்தி இவர் பாடிய வாசஸ்பதி ராகத்தை கேட்டு மிகவும் வியந்து, பாராட்டி பொன்னாடை போர்த்தினார்.சுந்தரப்பா அவரது ரசிகன் .சுந்தரப்பா வீட்டில் தான் ஜி.ராமநாதனின் புகைப்படத்தை முதன் முதலில் பார்த்தேன்.அவரது வீட்டுச் சுவரில் குடும்ப படங்கள் வரிசையில் எம்.கே.தியாகராஜ பாகவதர் ,டி.ஆர்.மகாலிங்கம் போன்றோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

ஜி .ராமனாதனின் பாடல்களை எந்த நேரமும் ஒலிக்க விட்ட ஒலிபெருக்கி உரிமையாளர்களான சதாசிவம் [ Sivam Sound Service ], அவரிடம் வேலை பார்த்த குணம் ,வீரசிங்கம் [Singam Sound Service ], அப்புத்துரை , சில்வா , சின்னராஜா போன்றவர்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை.

தமிழ்த்திரை இசையின் ஜீவனாக இருந்தவர் ஜி.ராமநாதன். இவரது பாடல்கள் சுருதி சுத்தமாக இருக்கும்.நமக்கு தெரிந்த ராகமாக இருந்தாலும் நமக்குத் தெரியாத சில விசயங்களையும் காட்டிவிடும் கைவண்ணம் அவரிடம் இருந்தது.பாடலின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கம்பீரம் நிலைகொடிருக்கும்.எங்கும தொய்ந்து விடாத வியப்பு இருக்கும்.கர்நாடக இசையில் மணிக்கணக்கில் பாடிவராத உணர்வுகளை சில நிமிடப்பாடல்களில் காட்டிவிடுவார். .டி .என் ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் போல கம்பீரமானது அவரது இசை..அவற்றை யாரும் ஈடு செய்ய முடியாது.

இசைஞானி இளையராஜா சொல்வார் : ” உயிர் வளர்க்க நல்ல இசை தேவை .அப்படி நல்ல இசை தந்தவர் மாபெரும் இசையமைப்பாளர் ஐய்யா ஜி.ராமநாதன் அவர்கள்.” என்று.

ஜி.ராமநாதனின் சம காலத்தவர்களான S.M.சுப்பையா நாயுடு , S.V.வெங்கட்ராமன் , C.R.சுப்பராமன் போன்றோரும் இது போன்ற அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.

S.M.சுப்பையா நாயுடு இசையமைத்த semi – classical songs பாடல்கள் சில.

1. வந்திடுவார் அவர் என் மனம் போலே [ மலைக்கள்வன் ] பி. பானுமதி [ கல்யாணி ராகம்]

2. உன்னை அழைத்தது யாரோ [ மலைக்கள்வன் ] பி. பானுமதி [ கல்யாணி ராகம்]

3. கொஞ்சும் சலங்களை ஒலி கேட்டு [கொஞ்சும் சலங்கை ] [ பி.லீலா கானடா ராகம் ]

4. நீயே கதி ஈஸ்வரி

S.M.சுப்பையா நாயுடு இசையமைத்த மெல்லிசை பாடல்கள்:

1. கண்ணுக்குள்ளே உன்னை பாரு [ மரகதம் ] T.M.சௌந்தரராஜன் + ராதாஜெய லட்சுமி

2. தங்க நிலவில் கெண்டை இரண்டு [திருமணம் ] A.M.ராஜா + ஜிக்கி

3. வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் [ மன்னிப்பு ] T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா

4. கண்ணில் வந்து மின்னல் போல் [ நாடோடி மன்னன் ] T.M.சௌந்தரராஜன் + ஜிக்கி

5. நீ எங்கே என் நினைவுகள் அங்கே [ மன்னிப்பு ] T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா

6. வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் [ மன்னிப்பு ] T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா

சிங்கார வேலனே தேவா என்கிற பாடல் தேவாரபாடலான மாந்திரமாவது நீறு என்ற பாடலின் மெட்டு என்றும் , அது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டதென்றும், பின் கிருபானந்தவாரியார் தலையிட்டு தீர்த்துவைததாக ஆய்வாளர் வாமனன் பதிவு செய்திதிருக்கிறார்.

S.V.வெங்கட்ராமன் இசையமைத்த சிறந்த பாடல்கள் சில

1. எங்கும் நிறைந்தாயே [ மீரா ] M.S.சுப்புலட்சுமி

2. இசைஅமுதம் போல் உண்டோ [ கோடீஸ்வரன் ] P.லீலா

3. ஆசைக்கனவுதான் பலிக்குமா [ கோடீஸ்வரன் ] P.சுசீலா

4. விழி அலை மேலே செம்மீன் போலே [ மருதநாட்டு வீரன் ] T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா

5. சந்த்ரோதயம் இதிலே [ மங்கையர்க்கரசி ] P.U.சின்னப்பா

6 . என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே – இரும்புத்திரை – ராதா ஜெயலட்சுமி

7. நெஞ்சில் குடியிருக்கும் – இரும்புத்திரை – டி .எம் எஸ். + பி. லீலா

இவர்களோடு ஆர் .சுதர்சனம் என்ற இசையமைப்பாளரும் இவர்கள் காலத்தில் நல்ல பாடல்களைத் தந்தவர் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.அவர் இசையமைத்த பாரதிதாசனின் ” துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ” மிகவும் சிறப்பான பாடலாகும்.மேலே குறிப்பிடபட்டவர்கள் இசையமைத்த ஏராளமான பாடல்கள் உள்ளன.இங்கே மிக ,மிக சிலவற்றையே குறிப்பிட்டுள்ளேன்.

நாட்டுப்புற இசையயை பயன்படுத்தியதிலும் வெற்றி பெற்றார்கள்.குறிப்பாக RAP என்று இன்று ஏதோ புதுமையான இசை என்று அறியப்படுகின்ற இசையை முதலில் பயன்படுத்தியவர்களும் அவர்களே.

தமிழ் நாட்டுப்புற இசையில் இவை நிறைந்து கிடக்கின்றன.பெரும்பாலும் பழைய திரைப்படங்களில் வந்த என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல்கள் இந்த வகையிலேயே அமைந்திருக்கும்.பேச்சோசைப் பாடல்கள் [ RAP MUSIC ]என்பது ஏதோ வெள்ளைக்காரன் கண்டு பிடித்தது போலவும் , அதை இந்தியாவில் எ.ஆர் . ரகுமான தான் கண்டுபிடித்தார் என்பது போலவும் சிலர் பிதற்றுகிறார்கள். 1940 களிலும் . 1950 களிலும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே பேச்சோசையை பாடல்களை அசாத்தியமாக பயன்படுதியுள்ளார்கள்.நாம் நம்மை வெள்ளைக்காரனாக காட்டிக்கொள்ள எத்தனையோ பிரயத்தனங்கள் செய்யலாம் ஆனால் , நாம் விரும்பாவிட்டாலும் நமக்கு இனக் கூறு அடிப்படையில் நெருக்கமானவர்கள் கறுப்பின மக்களே.இசையிலும் அவ்வாறே.அடிமைகளான கறுப்பின மக்கள் கொண்டு சென்ற இசையே இன்று உலவும் பல் வகை இசைகளின் ஆதாரமாக உள்ளது.ராப் [ RAP MUSIC ] இசை வடிவமும் கறுப்பின மக்களினுடையதே.அதை வெள்ளைக்காரர்கள் தமத்தாக்க முயல்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வந்த ராப் [ பேச்சோசை] பாடல்கள்.

1. சம்பளமே .. ஆ .. சம்பளமே .. எலுமிச்சம்பழமே , சம்பளமே எலுமிச்சம்பழமே [ இன்பவல்லி 1949 ] N.S. கிருஷ்ணன் + T.A. மதுரம் இசை :ஜி.ராமநாதன்

2. வெளியே போயி வீட்டுக்கு வந்தா யாரையும் காணோம் , ம். எங்கே போயிட்டா ? [ வாழப்பிறந்தவள் 1953 ] A.ரத்னமாலா இசை :ஜி.ராமநாதன்

3. காட்டுக்குள்ளே கண்ணி வச்சு [ ஆர்யமாலா 1941 ] N.S. கிருஷ்ணன்

4. கண்ணே உன்னால் நான் அடியும் கவலை கொஞ்சமா [ அம்பிகாபதி ] N.S. கிருஷ்ணன் + T.A. மதுரம் இசை :ஜி.ராமநாதன்

5. காவாலிப் பயலே சும்மா கிடடா , ஆமா அம்புட்டு ஆயுப்போச்சோடா [ சகுந்தலை ] N.S. கிருஷ்ணன் + T.S.துரைராஜ்

6. சங்கத்த்துப் புலவர் புலவர் [ சகாரவர்த்தித் திருமகள் ] N.S. கிருஷ்ணன் + சீர்காழி இசை :ஜி.ராமநாதன் ..

இந்தப்பாடலை [ சங்கத்த்துப் புலவர் புலவர் ] உந்துதலாக [ inspitration ] கொண்டு பொண்ணுக்கேற்ற புருஷன் என்ற படத்தில் ” ஜாதி மத பேதம் இன்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா ” என்ற பாடலை அமைத்தார் இளையராஜா.குறிப்பாக நடிகர்களின் பெயர்களை வரிசையாக ” ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்து, காதல மன்னன் கமலஹாசன , பிரபு , சத்யராஜ் ” என்று சொல்லுமிடத்தில் பேச்சோசை அழகாக விழும்.இதை எல்லாம் யார் பேசினார்கள்.? நமக்கு எல்லாம் அமெரிக்காவிலிருந்து தானே வரவேண்டும்!!!

இந்த பேச்சோசை பாடல் வகையை மிகச் சிறப்பாகப் பயன் படுத்திய இன்னுமொரு முக்கிய கலைஞர் வீணை இசை மேதை எஸ்.பாலசந்தர். இவரும் பி.லீலாவும் இணைந்து பாடிய” மாதர் மணியே வா மனம் வீசும்மலரே வா ” [படம் : ராஜாம்பாள் [1951] இசை: எஸ்.பாலசந்தர்.இந்த பாடலில் பேச்சையும் , பாட்டையும் கச்சிதமாகக் கையாண்டிருப்பார்.அந்தப்பாடல் , பாடுகிறார்களா அல்லது பேசுகிறார்களா என எண்ணவைக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்த வகை பாடல்களுக்கான உந்துதல்[ INSPIRATION ] Maurice Chevalar என்கிற அமெரிக்க கலைஞரிடமிருந்து அவர் பெற்றதாகும்.

தொடரும்…

முன்னைய பதிவு:

தமிழ் சினிமாஇசையி​ல் அகத்தூண்டு​தல்(1) : T.சௌந்தர்

Exit mobile version