இலங்கையின் வட கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் போதைப்பொருள் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பாடசாலை இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டு இப்போதை பொருள் விற்பனை திட்டமிட்டு நடைபெறுகின்றது. பல ஆற்றல் மிக்க இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிவருகின்றனர். வட கிழக்கு மக்களில் நலன்களில் அக்கறை கொள்வதாகக் கூறும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ இது குறித்து மௌனம் சாதிக்கின்றனர்.
புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு “மறுவாழ்வு வழங்கப்பட்டதாக” விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகிய இருபகுதியினர் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
முன்னை நாள் போராளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த போதே போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானதாகத் தெரிய வருகிறது.
மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு நிகழ்த்தும் இனச் சுத்திகரிப்பின் ஒரு பகுதியாகவே இளைஞர்களைப் போதைவஸ்திற்கு அடிமையாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்வைத்திருக்கிறது எனப் பலர் சந்தேகிக்கின்றனர்.
வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்படும் இனச் சுத்திகரிப்பிற்கு எதிராக முன்னெழக்கூடிய போராட்டங்களை அழிப்பதற்கு போதையை இலங்கை அரசு கருவியாகப் பயன்படுத்துகின்ற அதே வேளை இதற்கு எதிரான குரல்கள் வெளிவராமல் இருப்பது ஒரு சமூகம் அழிவை நோக்கி நகர்த்தப்படுவதை உணர்த்துகிறது.
புற்று நோய் போன்று சமூகத்தை அழித்துவரும் இந்த நோயை எதிர்கொள்ள சமூக உணர்வுள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டியதன் தேவை இன்று உணரப்படுகிறது. புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர் சமூகம் இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த காத்திரமான பங்களிப்பை வழங்கும் என பலர் எதிர்பார்க்கின்றனர்.
மகிந்த குடும்பம் துமிந்த சில்வா போன்ற போதைப் பொருள் கடத்தல் காரர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : சித்திரன்