Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவோம்- ஆழி செந்தில்நாதன்!

நவம்பர் 1 – இது தமிழ்நாடு ஒரு நவீன அரசாக உருவான நாள்.

இந்த நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவித்து அதைக் கொண்டாடவேண்டும் என்று தமிழ்நாட்டரசு முடிவுசெய்திருக்கிறது. இதன் மூலமாக மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்த இந்த நாளை தமிழர் தாயகத் திருநாளாகக் கொண்டாடவேண்டும் என்று நிலவி வந்த நீண்டகால கோரிக்கை ஒன்று நிறைவேறியிருக்கிறது. இந்த அரசாங்கத்தைப் பாராட்டவும் ஒரு வாய்ப்பு வந்திருக்கிறதே என்கிற வியப்புடன் இந்த முடிவை எடுத்தற்காக தமிழ்நாட்டரசைப் பாராட்டலாம்!

பிரிட்டிஷ் காலத்தில் உருவான சென்னை மாகாணத்தைப் பிரித்து தங்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் எனப் போராடிய ஆந்திர மக்களின் கோரிக்கைகளின் காரணமாக 1953 இல் சென்னை மாகாணத்திலிருந்து முதலில் ஆந்திரப் பிரதேசம் பிரிந்தது. கேரள, கர்நாடகப் பகுதிகளிலும் ஏற்பட்ட போராட்டங்கள், இந்தியா முழுக்க பல இனத்தவர்கள் நடத்திய மொழிவழி மாநிலக் கோரிக்கைகளின் விளைவாக, 1956 இல் இந்தியாவே மொழிவழியாக மறுசீரமைக்கப்பட்டது. சென்னையிலிருந்து கேரளமும் கர்நாடகமும் வெளியேறின. மீதி இருந்த நிலம் நம் நிலமாக இருந்தது. நவீனத் தமிழ்நாட்டின் பிறப்பு குறைப்பிரசவமாகவும் இருந்தது. நமது மூன்று எல்லைப் பகுதிகளிலும் தமிழர் நிலங்கள் பறிபோயின. மீட்ட நிலங்களுக்கோ பெரும்போராட்டங்கள் நடத்தியே மீட்கமுடிந்தது.

கர்நாடகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மாநிலம் உருவான நாள் ராஜ்ய உத்ஸவ தினம் என்று கொண்டாடப்படுகிறது. அதை இந்திய சுதந்திர நாளைவிட எள்ளளவிலும் குறையாத நாளாக கன்னடர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் கர்நாடக வரைபடத்தைத் தாங்கிய மஞ்சள் கொடி கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் பறக்கும். 1956 மாநிலங்கள் மறுஒழுங்கமைப்புச் சட்டத்தின்கீழ் உருவான பல மாநிலங்களில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. கேரளாவில் இது கேரள பிறவி தினம் என்று கொண்டாடப்படுகிறது. அதைப்போலவே ஒடிஷாவிலும் (உத்கல் திவஸா, ஏப்ரல் 1; 1936 இல் இதே நாளில் ஒரியா மாகாணம் உருவானது) கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு மட்டும் தன்னுடைய மறுபிறப்பைக் கொண்டாடாமலிருந்தது.

ஆனால் இந்த நாளை நாம் ஏன் கொண்டாடவேண்டும்?

கொஞ்சம் கடந்த காலத்துக்குச் செல்வோம்.

.

இந்தியத்துணைக்கண்டத்தின் பல்வேறு ராஜ்ஜியங்கள், பிரதேசங்கள், தேசங்கள், பழங்குடியினர் பகுதிகள் ஆகியவை ஒரு குடைக்கீழ் கொண்டுவரப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உருவானது என்பதை நாம் அறிவோம். பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டனின் நேரடி கட்டுப்பாட்டில் மாகாணங்களும் மறைமுக கட்டுப்பாட்டில் சமஸ்தானங்களும் தனித்தனி அலகுகளாக இருந்தன. அந்த மாகாணங்களை பிரிட்டிஷார் உருவாக்கியபோது. பல்வேறு மொழிபேசும் பிரிவினரின் பகுதிகளை வலுக்கட்டாயமாக இணைத்து தமது நிர்வாக வசதிக்காக ஒற்றை அலகுகளாக மாற்றினர். ஒரு மொழியைப் பேசுவார் ஒரே மாகாணத்துக்குள்ளும், பல மாகாணங்களுக்கிடையிலும் அல்லது மாகாணங்களுக்கும் பல சமஸ்தானங்களுகிடையிலும் பிரிந்துகிடந்தனர்.

தொடக்கத்தில் இது பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களாலும் ஐரோப்பிய அரசியல் கருத்துகளின் நுழைவாலும் இந்திய அரசியல் தளத்தில் பல மாற்றங்கள் நடந்தபோது மக்களின் மொழிசார் அடையாளமும் ஓர் அரசியல் காரணியாக முன்னுக்குவந்தது. ஒரு மொழி பேசும் மக்கள் – மதம், சாதி, வட்டார அடையாளங்களுக்கு அப்பால் – தங்களுக்கான தேசிய அல்லது பிரதேச அடையாளங்களை கண்டடைவே செய்தனர். காலனிய காலகட்டம் எவ்வாறு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்ததோ அதைப் போலவே இந்திய மக்கள் என பொத்தம்பொதுவாக அறியப்பட்ட மக்களின் மத்தியில் மொழிசார் அடையாளத்தையும் உருவாக்கியது, அல்லது ஏற்கனவே இருந்ததை மீள்கொணர்ந்தது.

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு மிக நீண்டது. தனி மாநிலம், தனி நாடு கோரிக்கைகள் எல்லாம் ஏதோ 1947க்குப் பிறகுதான் எழுந்தன என இன்று ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் பிரிட்டிஷ் காலத்திலேயே அவை தொடங்கிவிட்டன. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது!

தனி மாநில/மாகாண கோரிக்கைகளின் தொடக்கம் ஒரிசாதான் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 1895 இல் சம்பல்பூரில் உருவான ஒரு மொழிக்கிளர்ச்சியைத் தொடர்ந்து ஒரிசா மாநில கோரிக்கை எழுந்தது. அப்போது சம்பல்பூர் பகுதி மத்திய மாகாணத்துடன் இணைந்திருந்தது.

 ஆங்கிலேயே அரசு சம்பல்பூரில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க முயற்சி செய்தபோது, ஒரிய மொழியினர் அதை எதிர்த்து போராடினார்கள். இந்தியாவின் முதல் பெரும் மொழிப்போராட்டமான அதில் ஒரிய மக்கள் தோற்றுப்போனார்கள். இந்தி, ஒரியமொழியை (தற்காலிகமாக) அதிகார பீடத்திலிருந்து ஒழித்துக்கட்டியது. வரலாற்றுப் புகழ்பெற்ற கலிங்க நாட்டவர்கள் அந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து ஒரியர்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பினார்கள். அப்போது ஒரிய மக்கள் வாழும் பெரும் பகுதிகள் மத்திய மாகாணத்திலும் பிஹாருடனும் இருந்தன. சென்னை, கல்கத்தா மாகாணங்களிலும் கலிங்கம் துண்டாடப்பட்டுக்கிடந்தது. பல சமஸ்தானங்களிலும் ஒரிய மக்கள் வாழ்ந்தார்கள்.

ஒரிய தேசியத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மதுசூதன் தாஸ் உள்ளிட்டோர் ஒருபுறம் இந்திய விடுதலைக்கான போராட்டங்களில் மகாத்மா காந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டுக்கொண்டே மறுபுறம் ஒரிய மாநிலத்துக்கான போராட்டத்தையும் நடத்தினார்கள். 1912 இல் வங்கத்திலிருந்து பிஹாரும் ஒரிசாவும் பிரிக்கப்பட்டு பிஹார்-ஒரிசா மாகாணம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகும் ஒரிய மக்கள் தொடர்ந்து போராடினார்கள். சைமன் கமிஷன், லண்டன் வட்டமேஜை மாநாடு போன்ற களங்களிலும் இது எதிரொலித்தது. இறுதியில் 1935 இல் பிஹார்-ஒரிசா மாகாணத்திலிருந்து பிரிந்து ஒரிசா தனி மாகாணமாக ஆனது. (இதைப் போலவே பம்பாய் மாகாணத்திலிருந்து சிந்தி பேசும் மக்களின் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு சிந்து மாகாணம் உருவாக்கப்பட்டது). இந்தித் திணிப்பு எதிர்ப்பும் மொழி அடையாளத்துக்கான போராட்டமும் ஏதோ தமிழ்நாட்டுச் சரக்கென்றும் தேசவிரோதம் என்றும் நினைப்பவர்களுக்காக இந்த ஒரிய வரலாற்றை நினைத்துப்பார்க்கவேண்டும்.

ஒரியர்களைப் போலவே மராத்தியரும் தமக்கான மொழிசார்ந்த புவி அடையாளத்தை கண்டடைவதில் பின்தங்கியிருக்கவில்லை. 1906 இல் பால கங்காதர திலகர் முதன் முதலில் மகாராஷ்ட்டிரா என்கிற மராத்திய தேசத்தைப் பற்றி கனவுகண்டார். 1919 இல் அவர் மகாராஷ்ட்டிர மாநிலம் குறித்த கோரிக்கையை காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் கோரிக்கைகளில் ஒன்றாக்கினார். 1938 இல் மத்திய மாகாணம் இருமொழி பேசும் பம்பாய் மாகாணத்திலிருந்து விதர்பாவை தனி மாநிலமாக ஆக்க தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு விதர்ப்பாவையும் பிற மராத்தி பேசும் பகுதிகளையும் உள்ளடக்கி தனி மராத்தி மாநில கோரிக்கைக்கு அறைகூவல் விடுத்தவர் வேறு யாருமல்ல, வீர சவர்க்கர் என்று இந்துத்துவவாதிகளால் அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சவர்க்கர்! ஆனால் மராத்திய அடையாளம் என்பது வெறுமனே இந்துத்துவ அடையாளம் மட்டுமல்ல. அது பெருவாரியான மக்களின் ஏற்பு பெற்றிருந்தது. அதனால்தான் 1948 அக்டோபர் 14 ஆம் தேதி பம்பாயை தலைநகராக கொண்ட மராத்திய மாநிலம் வேண்டும் என தர் கமிஷனிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார் அண்ணல் அம்பேத்கர்.

ஒரியாவும் மராத்தியமும் விதிவிலக்குகள் அல்ல.

 1905 இல் ஒரு மொழி பேசும் வங்கத்தை கர்சன் பிரபு இரண்டாக உடைத்த பிறகே இந்தியாவில் மொழிக்கும் நிலத்துக்கும் இடையிலான உறவுகள் புலப்படலாயின. மொழி அரசியல் பருண்மையான வடிவம் எடுத்தது. 1913 இல் பாப்தாலாவில் ஆந்திர மாநிலத்துக்கான முதல் கோரிக்கை எழுப்பப்பட்டது. 1915 இல் ஆந்திர காங்கிரசுக்காரரகள் இந்திய தேசிய காங்கிரசையே மொழிவாரி மாகாண கிளைகளாக பிரிக்கும்படி கோரினார்கள். 1921 இல் இதை காங்கிரஸ் கட்சி ஏற்றது. இந்தியாவை மொழிவாரியாக பிரித்து அணுகும் போக்கை பிரிட்டிஷாரும் ஏற்கத் தொடங்கினர். 1919 மான்ட்டேகு – செம்ஸ்போர்டு அறிக்கை இந்த யதார்த்தத்தை அங்கீகரித்தது. 1920 இல் தேசபந்து சி ஆர் தாஸும் தன் சுயராஜ்ய திட்டத்தில் மொழிவாரி மாநிலங்களை அங்கீகரித்தார். 1927 இல் சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் 40க்கு 32 பேர் என ஆந்திர மாகாண உருவாக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

பெருந்தேர்ச்சக்கரம் உருண்டோடத் தொடங்கிவிட்டது. இந்திய சுதந்திர உணர்வை மாகாண உணர்வு நசுக்கிவிடுமோ என்கிற அச்சம் சிலரிடம் நிலவியதே தவிர, பெரும்பாலான மக்கள் தலைவர்கள் மொழிவாரி பிரிவுகளை நியாயமானதாகவே கருதினர். 1927 இல் சைமன் கமிஷனும் மொழிவாரி மாகாண அடிப்படையை அங்கீகரித்தது.

அடுத்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸ் தலைவர்கள், கம்யூனிஸ்ட்கள், நீதிக் கட்சியினர்,. முஸ்லீம் தலைவர்கள் பலர், தீவிர ஜனநாயகவாதிகள் கட்சியினர் என இந்தியாவில் எல்லா தரப்பினருமே மொழிவாரி மாகாணங்கள் என்கிற கருத்தாக்கத்தையே வந்தடைந்தனர். இந்தியா இத்தகைய மொழிவாரி மாகாணங்களின் ஒன்றியமே என்கிற புரிதலும் பெரும்பாலோனோரை சென்றடைந்தது. 1938 இல் சென்னை மாகாணத்தை தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள பகுதிகளாக பிரிக்கும் தீர்மானத்தை கொண்ட வெங்கடப்பய்யா பந்துலு கொண்டுவந்தார். உருவாகவுள்ள சுதந்திர இந்தியாவுக்கான அரசியல்சாசன நிர்ணய சபை, மொழிவாரி மாகாணங்கள் என்கிற கருத்தாக்கத்தை புதிய அரசியல்சாசனத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக ஆக்கவேண்டும் என்று அனைத்தந்திய மொழிவாரி மாகணங்களின் லீக் என்கிற ஒரு அமைப்பு 1947 மே 13 ஆம் தேதி பெஸ்வாடாவில் கூடி தீர்மானமியற்றியது. சென்னை சட்டமன்றமும் 1946 இல் இத்தகைய தேவையை வலியுறுத்தி தீர்மானம் இயற்றியிருந்தது: “இந்தியாவுக்கான அரசியல்சாசனத்தை உருவாக்குவதில் இது அதியத்தியாவசியமான தேவையாகும்” என அந்தத் தீர்மானம் கூறியது.

மத்திய சட்டசபை 1948 இல் எஸ்.கே.தர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை ஆராய்ந்தது. மொழிவாரி மாகாணங்கள் தொடர்பான யதார்த்தத்தை தர் கமிட்டி அங்கீகரித்தது. ஆனால் அது தேச நலன்களுக்கு எதிரானது என்று முடிவு செய்தது. அதாவது சுதந்திரத்துக்கு முந்திய காங்கிரஸ் இப்போது மொழிவாரி மாநிலங்கள் விஷயத்தில் தனது சுயமுகத்தைக் காட்டத்தொடங்கியது. ராஜாஜி, கோல்வாக்கர் போன்றோர் மொழிவாரி மாநிலங்களை ஏற்கவில்லை. ஆனால் இந்த துரோகத்தைக் கண்டு மாகாணங்களில் இருந்த பல காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இந்திய சுதந்திரத்துக்காக போராடிய அவர்களில் பலர் அடுத்த போராட்டக் களமாக கண்டடைந்தது மொழிவாரி மாநிலங்களுக்காகத்தான். 1952 டிசம்பர் 16 இல் பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்க்கொடைக்குப் பின் நேரு அரசு தனது தூக்கத்தை கலைக்கவேண்டியதாயிற்று. 1913 முதல் போராடிவந்த ஆந்திர மக்களின் தனி மாகாண கனவு 1953 அக்டோபர் 1 இல் புதிய ஆந்திர மாநிலம் என்கிற வடிவில் நிறைவேறியது . இது இந்தியா முழுக்க தனி மாநிலக் கனவுகளிலிருந்த மக்களுக்கு உற்சாகமளித்தது. மொழிவாரி மாநிலம் கூடாது என்பதுதான் நேருவின் எண்ணம். ஆனால் மக்களின் போராட்டத்துக்குப் பணியவேண்டிய நிலை அவருக்கு வந்தது.

1953 இல் மத்திய அரசு மாநில மறுஒழுங்கமைப்பு குழுவை அமைத்த்து. 1955 இல் அந்த குழு 16 மொழிவழி மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங் களையும் அமைக்க பரிந்துரை செய்தது. அதன் அமலாக்கம் மாநில மறுஒழுங்குமைவுச் சட்டம் 1956 மூலமாக நடந்தேறியதெல்லாம் நாம் அறிந்த வரலாறாகும்.

பிரிட்டிஷ் காலத்தில் மலபார் பகுதி சென்னை மாகாணத்திலும் வட கேரளத்தின் சில பகுதிகள் தென் கர்நாடக பகுதியுடனும் இருந்தன. கொச்சி பகுதியும் திருவிதாங்கூர் பகுதியும் தனித்தனி சமஸ்தானங்களாக இருந்தன. 1949 இல் இரு சம்ஸ்தானங்களும் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி உருவானது. பிறகு மாநில மறுஒழுங்கமைவுச் சட்டத்தின் கீழ் 1956 நவம்பர் 1 இல் இவையாவும் இணைந்து கேரள மாநிலமாக உருவாயின. இதற்காக அடித்தளமிட்டு போராடிய ஐக்கிய கேரள இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் இருதரப்பினரும் இருந்தனர். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும் ஏ கே கோபாலனும் இந்திய தேசிய கவி வள்ளத்தோள் நாராயணன் மேனனும் ஐக்கிய கேரள இயக்கத்தின் பிரதான முகங்களாக இருந்தார்கள். கர்நாடகமும் அதே வழியிலேயே சென்றது. மைசூர் சமஸ்தானம், சென்னை மற்றும் பம்பாய் சமஸ்தானங்களில் அடங்கியிருந்த கன்னடர்கள் பெருவாரியாக வசித்த பகுதிகள், ஹைதராபாத் கர்நாடகப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய மைசூர் மாநிலம் 1956 நவம்பர் 1 இல் உருவானது. இது 1973 இல் கர்நாடகம் என பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

மேற்கே மகாராஷ்டிரத்துக்கு பிறகு குஜராத்தும் அவ்வாறே உருவானது. பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்து பிரிந்து போனதிலிருந்தே குஜராத்திகளும் தங்களுக்கு தனி்மாநிலம் வேண்டும் என விரும்பினார்கள். குஜராத் காங்கிரஸ் தலைவர்களான இந்துலால் யக்னிக்கும் மொரார்ஜி தேசாயும் இந்த குஜராத் மாநில போராட்டத்தின் முக்கிய முகங்கள். மகாகுஜராத் இயக்கம் என்கிற பெயரில் பம்பாய் மாநிலத்தின் குஜராத்தி பகுதிகளையும் செளராட்டிர, கட்சி பகுதிகளையும் இவர்கள் இணைத்தார்கள்.

இவ்வாறாக இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினை சூறாவளியாக சுழன்றடித்த வேளையில் தமிழகம் ஒரு வினோதமான சூழலைச் சந்தித்தது. மொழி அரசியலுக்கும் மாநில உரிமைகளுக்கும் முன்னோடி என கருதப்படும் தமிழகம் 1940-1950களில் இவ்விஷயத்தில் மிகவும் குழம்பிப்போயிருந்தது.

தமிழகம் கிட்டத்தட்ட மறந்துவிட்ட ஒரு முக்கிய முன்னெடுப்பு குறித்து இங்கே பேசவேண்டும். அது 1920களின் இறுதியில் நடந்தது. காங்கிரஸ்காரராக இருந்த சர் சி.சங்கரன் நாயர் (சென்னை மாகாண அரசியல் தலைவர்களில் ஒருவர்) 1926 இல் மத்திய சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்திலுள்ள பத்து தமிழ் மாவட்டங்களை தனியாக பிரித்து பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீ்ழ் டொமினியன் அந்தஸ்து உள்ள பிரதேசமாக – கிட்டத்தட்ட சுயாட்சி உள்ள பகுதியாக – தமிழகத்தை உருவாக்கவேண்டும் என ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அது அப்போது ஏற்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு தமிழ்நாட்டில் தனி மாகாண அல்லது தனி நாடு கோரிக்கைகள் மெல்ல மெல்ல உருவாகத்தொடங்கின. முதன்முதலாக இந்தியா என்பது ஒரு நேஷனா என தந்தை பெரியார் கேள்வி எழுப்பியது இதற்கு பின்புதான். தொடக்க கால தமிழ்த்தேசியவாதிகள் அல்லது தமிழறிஞர்கள் இக்காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்குட்பட்ட தமிழ் மாகாணம் ஒன்றை இந்திய எல்லைக்கு உட்பட்டோ அல்லது அதற்கு வெளியிலோ கேட்டார்கள். ஆனால் அவை எதுவுமே பெரும்போராட்டங்களாக வெடிக்கவில்லை.

சங்கரன் நாயரின் கோரிக்கையான டொமினியன் அந்தஸ்துள்ள தமிழ்நாடு என்பதும் பெரியாரின் தமிழ்நாடு தமிழருக்கே என்கிற முழக்கமும் சோமசுந்திர பாரதியார் உள்ளிட்டோரின் தமிழ்நாட்டு கோரிக்கையும் நாற்பதுகளில் பலமிழந்தன. ஐம்பதுகளில் மற்ற இடங்களில் ஐக்கிய கேரளம், சம்யுக்த மகாராஷ்டிரம், விசாலாந்திரம், கர்நாடக ஏகிகரண இயக்கம் என்றெல்லாம் இயக்கங்கள் தோன்றி மொழி அடையாள அரசியல் பரவிய நேரத்தில், தமிழகத்தின் தலைவர்கள் தமக்கான வியூகத்தை வகுத்திருக்கவில்லை.

சொல்லப்போனால் தமிழ்நாட்டில் எல்லைக் காப்பு போராட்டங்களே மாநில உருவாக்க போராட்டமாக இருந்தது. குமரி போன்ற ஓரிரு பகுதிகளைத் தவிர தமிழ் பெருநிலம் ஏற்கனவே பிரிட்டிஷாரால் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது அதற்கு காரணமாக இருக்கலாம். மபொசி, நேசமணி, மங்கலங்கிழார், தளபதி விநாயகம், பி எஸ் மணி, குஞ்சன் நாடார் போன்றோரின் போராட்டங்கள் எல்லைக் காப்பை மையமாக கொண்டிருந்தன. சென்னை மாகாணத்திலிருந்து தமிழ்நாட்டை நோக்கிய பயணம் திசைகெட்டுப்போயிருந்தது. இதனால் பெரும்பாலுமான தமிழர்கள் மத்தியில் மொழிவாரி மாநிலக் கோரிக்கை குறித்து குழப்பமே நீடித்தது.

திராவிட நாடு கோரிக்கையை முன்மொழிந்திருந்தபோதும், அண்ணா மொழிவாரி மாநிலக்கோரிக்கையை தீவிரமாக ஆதரித்தார். தொடக்கத்தில் இந்த விஷயத்தில் சற்றுத் தடுமாற்றங்கள் இருந்தாலும், மொழிவழி மாநிலங்கள் பிரிவது தவிர்க்கவியலாத நிலை உருவான போது, அரசாங்கத்திடம் திமுக அளித்த ஆவணங்களும் கோரிக்கைகளும் மிகத்துல்லியமாக அதைக் காட்டுகின்றன. தென் தேசங்கள் நான்கையும் இணைத்து தட்சிணப்பிரதேசம் என ஒரு கதம்ப மாநிலாக ஆக்கும் நேருவின் திட்டத்தை அதனால்தான் பெரியாரும் அண்ணாவும் ஏற்கவில்லை. நான்கு தனி மாநிலங்கள் உருவாவதே திராவிட நாட்டின் எல்லையையும் துலக்கப்படுத்தும் என்று திமுக கூறியது. தெற்கெல்லை, வடக்கெல்லைப் போராட்டங்களில் அது பங்கெடுத்தது. சக திராவிட மாநிலமாக இருந்தாலும் பிற மாநிலங்களுடனான எல்லைகளைப் பிரிப்பதில் தமிழ்நாடு தன் மண்ணுரிமையை இழந்துவிடக்கூடாது என்பதில் அண்ணா தெளிவாக இருந்தார். தேவிகுளம், பீர்மேடு விவகாரத்தில் காமராசரை விளாசினார். அரசுக்களித்த ஆவணங்களில் எல்லைகளை வகுப்பதில் ஒரு மொழியினரின் நிலத்தை பிற மொழியினர் அபகரிக்க்கூடாது என்று அது குறிப்பிட்டு வலியுறுத்தியது.

நவீன தமிழ்நாட்டு வரலாற்றில் கம்யனிஸ்ட்களின் மாபெரும் பங்களிப்பு இந்தச் சூழலில் நிகழ்ந்தது. ஐக்கிய தமிழகம் என்றொரு முழக்கத்தின் கீழ் ஜீவா தமிழர்களை ஒருங்கிணைத்தார். ஆந்திரத்தில் நடந்த விசாலாந்திரா இயக்கமும் கேரளத்தில் நடந்த ஐக்கிய கேரள இயக்கமும்கூட கம்யூனிஸ்ட்களின் பங்கேற்பால் பலமடைந்த இயக்கங்கள்தான். ஆனால், தேவிகுளம், பீர்மேடு விவகாரத்தில் கேரளாவிலுள்ள கம்யூனிஸ்ட்கள் நடத்திய ஐக்கிய கேரள இயக்கத்திடம் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்கள் நடத்திய ஐக்கியத் தமிழக இயக்கம் தோற்றுப்போனது. அனைத்திந்திய சட்டகத்துக்கள் சிக்கியவர்கள் – தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களோ கம்யூனிஸ்ட்களோ – தோற்றுத்தான் போனார்கள். (இந்தியா முழுக்க மொழிவாரி ரீதியாக இடங்கள் பிரிக்கப்பட்டபோது, தேவிகுளமும் பீர்மேடும் மட்டும் “புவியியல்” காரணங்களுக்காக கேரளத்திடமே இருக்கும்படி அனுமதிக்கப்பட்டது. இது அப்போதே இந்திய ஆட்சிமையத்தில் மலையாளிகளுக்கு இருந்த செல்வாக்கைக் காட்டுகிறது).

இவ்வாறாக, குமரி மாவட்ட இணைப்பு தவிர, பிற இடங்களில் இழப்பு நேர்ந்திட, சென்னை மாகாணத்தின் எச்சமாக தமிழ்நாடு – வேறுவழியில்லாமல் – உருவானது. அதனால்தான் தமிழகத்தில் நவம்பர் 1 ஒரு கொண்டாடப்படக்கூடிய நிகழ்வாக இருந்ததில்லை என்று கூறப்படுவதில் பொருளில்லாமலில்லை.

ஆனால் இந்த நாளை கொண்டாடவேண்டியதன் அவசியம் இன்று நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது இந்தியாவின் பன்மைத்தன்மையை அங்கீகரித்த ஒரு செயல்பாடாகும். இந்தியா பல்வேறு தேசங்களின் கூட்டமைப்பு என்பது வேறுவடிவத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு அது. அதுமட்டுமல்ல, அது மக்கள் போராடி வென்ற ஒரு உரிமையாகும்.

அந்தப் போராட்டங்கள் எப்படிப்பட்ட நேரத்தில் நடந்தன என்பதை சிந்தித்துப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் தாக்கம் உயிர்ப்பாக இருந்த காலம் அது. காஷ்மீரும் நாகாலாந்தும் ஹைதராபாதும் நேரு அரசை அச்சுறுத்திய காலமும் அது. மாகாணங்களையும் சமஸ்தானங்களையும் இணைத்து புதிய மத்திய – மாகாண அதிகாரப் பகிர்வு பற்றி பேசும்போதெல்லாம் வலுவான மத்திய அரசே வேண்டும் என எல்லா ஆட்சியாளர்களும் விடாப்பிடியாக இருந்த காலமும்கூட. இந்திய ஒன்றிய அரசு வெறுமனே இந்திய மத்திய அரசாக மாறிக்கொண்டிருந்தது.

ஆனால் அந்த சூழலிலும் மக்கள் தங்களுக்கான மொழிவாரி மாநிலங்களுக்காக போராடினார்கள். அவர்கள் அதை இந்தியாவுக்கு எதிரானதாக ஒரு நடவடிக்கையாக பார்க்கவில்லை. இந்தியாவின் வரலாற்று நிதர்சனமாக பார்த்தார்கள். ஆனால் இந்தியா குறித்த ஒரு குறுகிய பார்வை வைத்திருந்த சில தலைவர்கள்தான் அதை தேசவிரோதமாக பார்த்தார்கள். இன்றுவரை மொழிவாரி மாநிலப் பிரிவினை தவறானது என பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இரண்டாயிரமாண்டுக்கு முன்பிருந்தே நாம் தமிழ்நாடாக, தமிழகமாக, தமிழ்கூறு நல்லுலகமாக, தமிழ் நிலமாகவே அறியப்பட்டிருந்தோம். இந்த அடையாளம் புதிதல்ல. ஆனால் நவீன அரசியல் பொருளில் 1956 இல்தான் ஒரு தேசியத்தகைமையை அடைந்தோம். பல அரசுகளாக பிரிந்திருந்த தமிழர் நிலம், பல்வேறு அரசுகளோடு தன்விருப்பின்றி பிணைக்கப்பட்டிருந்த தமிழர் நிலம், ஒரு நிலமாக மாறியது அன்றுதான். தாயகம் மீண்டும் கிடைத்தது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் ஒரு தமிழ் அரசாக அது உருவான நாள் அந்த 1956 நவம்பர் 1 தான் என்கிற உண்மையை யார் மறுக்கவியலும்?

இன்று அதைக் கொண்டாடுவதற்கு மிகப்பெரிய காரணங்களும் உருவாகியிருக்கின்றன. இந்தியாவை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்ததே தவறு என்று வாதாடக்கூடியவர்கள் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள். இந்த மொழிவழித் தேசிய இனங்களை கூறுபோடவேண்டும் என்று நினைக்கும் அமித் ஷாக்களும் மோடிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் அரியணையில் இருக்கிறார்கள்.

மாநிலங்கள் என்பவை அரசியல் அலகுகள், வெறும் நிர்வாக அலகுகள் அல்ல. (States are political units, not merely administrative units). அந்த மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து அவற்றை வெறும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கும் வேலையில் ஏற்கனவே இறங்கியிருக்கிறது பாஜக அரசு. ஒரே நாடு ஒரே ஆட்சி, ஒரே நாடு ஒரே அரசாங்கம் என்பதை நோக்கிச்செல்லும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளின் குறிக்கோள் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள தேசிய இனங்களை சிதைப்பதுதான்.

இன்னொரு புறம், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் தேர்தல் முறைக்காக, தொகுதி மறுசீரமைப்பு நடக்காலம் (அதாவது, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்ந்தால்!). அப்போது மக்கள் தொகை அடிப்படையில் புதிய தொகுதி எண்ணிக்கைப் பங்கீடு நடக்குமானால் தமிழகம் கிட்டத்தட்ட பத்து நாடாளுமன்றத் தொகுதிகள் வரை இழக்கலாம். இந்தி மாநிலங்களில் அந்த எண்ணிக்கை கூடும். இந்த அபாயத்தை தமிழ்நாட்டிலுள்ள தேர்தல் கட்சிகள்கூட முன்னுணர்ந்து செயல்படவில்லை என்பது வேதனைக்குரியது.

இந்தி மாநிலங்களிலிருந்து வரும் மக்களின் கட்டுக்கடங்காத புலப்பெயர்ச்சி மூலம் தமிழ்நாட்டின் மக்கள்தொகை இயைபே மாறிக்கொண்டிருக்கிற இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் பெட்டிக்கடைகூட குஜராத்திகளிடம் பறிபோகிற நிலையில். தமிழ்நாட்டின் பொதுத்துறை வேலைகள் அனைத்தும் இந்திக்காரர்களுக்கே என்கிற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருக்கும் இந்த நிலையில். மீண்டும மும்மொழித்திட்டம் அமலாகி தமிழை தமிழர்களை வைத்தே அழிக்கும் ஆட்டத்தை அவர்கள் தொடங்கிவிட்ட நிலையில், நமது சமூக நீதி அரசியல் குழிதோண்டி புதைக்கப்படுகிற இந்தச் சூழலில்…

கண்கெட்ட பிறகு கதிரவனை வணங்குவதுபோலத் தோன்றினாலும், இந்த பாழாய்ப்போன எடப்பாடி பழனிச்சாமி அரசு அறிவித்துவிட்டதற்காக கோபித்துக்கொள்ளாமல், தமிழ்நாடு நாளை நாம் கொண்டாடவேண்டும்.

மொழிவழி மாநிலங்கள் உருவானதன் வரலாற்று, அரசியல் பொருளை அறிந்து, தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கான போராட்டத்தை முன்னெடுக்க இந்த நாளை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

விரைவில் தமிழ்க்கொடி ஒன்றும் பறக்கவேண்டும். இந்த தருணத்தில் தமிழ்நாட்டின் எல்லை காத்தப் போராளிகளுக்கும் அதில் உயிர்நீத்த 11 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்

Exit mobile version