Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்‘நாடு’ ஏன் கசக்கிறது? -எழுத்தாளர் நக்கீரன்

‘நீர் எழுத்து’ நூல் தொடங்கி இதுவரைக்கும் ‘இந்திய நாடு’ அல்லது ‘இந்திய தேசம்’ போன்ற சொற்களை நான் பயன்படுத்துவது கிடையாது. நம் அரசியலமைப்பு Union of states என்று குறிப்பிடுவதால் அதை மதிக்கும் பொருட்டு இந்திய ஒன்றியம் அல்லது ஒன்றிய அரசு என்கிற சொற்களையே பயன்படுத்தி வருகிறேன். தீவிர தேசபக்தர்கள் புளகாங்கிதத்துடன் குறிப்பிடும் ‘ராஷ்ட்ர’ என்கிற சொல்லை நான் மதிப்பதேயில்லை. மேலும் இயற்கை அறிவியல் ரீதியில் இந்த நிலப்பகுதியை குறிப்பிட நேரும்போது ‘இந்தியத் துணைக்கண்டம்’ அல்லது ‘துணைக்கண்டம்’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன். ஆனால், இந்தச் சொல்லின் பயன்பாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கோல்வால்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இன்றைக்கும் நம் நாட்டின் தலைவர்கள் சிலர் நம் நாட்டை ஒரு ‘கண்டம்’ அல்லது ‘துணைக்கண்டம்’ என்று அழைக்கின்றனர். இப்பரந்த பிரதேசத்தில் உள்ள பல்வேறு தட்பவெப்ப நிலைகளும் நிலவகைகளும் உள்ளன. பலநாடுகளின் கூட்டமாக இப்பிரதேசம் உள்ளது. எனவே, இப்பிரதேசம் ஒரே நாடு என அழைக்க தகுதியற்றது என்கின்றனர்… இது நம்மைக் கட்டியாளவந்த அந்நியன் செய்த சூழ்ச்சி” என்கிறார் அவர். ஏற்கனவே, ‘ஒன்றியம், துணைக்கண்டம்’ போன்ற சொற்கள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது ‘தமிழ்நாடு’ என்ற சொல்லும் அவ்வரிசையில் இணைந்துள்ளது. நாடு என்கிற சொல் ஏன் கசக்கிறது? நாடு என்றால் அது ‘இந்திய நாடு’ என்பதாக மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? இந்தியா ஒரு நாடு என்பதை நமது அரசியலமைப்பு சட்டமும் ஆதரிக்கவில்லையே? இதுவரை தமிழகம் என்ற சொல்லை ஒரு செல்லப் பெயர்போல எழுத்துகளில் பயன்படுத்தி வந்துள்ளேன். ‘அகம்’ என்பதைவிட ‘நாடு’ என்கிற சொல்தான் எரிச்சலை உருவாக்குகிறது எனில் அந்த எரிச்சலை அதிகரிக்க இனி தமிழ்நாடு என்ற சொல்லையே பயன்படுத்த தீர்மானித்துள்ளேன். அதுபோல ‘நடுவண் அரசு’ என்பதையும் விடுத்து இனி ‘ஒன்றிய அரசு’ மட்டுமே. நமது எழுத்தாளுமைகளும் இதழியலாளர்களும் இவற்றை பின்பற்ற வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் ‘ஒன்றிய அரசு, துணைக்கண்டம், தமிழ்நாடு’ போன்ற சொற்களையே பயன்படுத்த வேண்டும். இது சட்டபூர்வமானது என்பதால் அச்சம் தேவையில்லை. வாழ்க இந்திய அரசியலமைப்பு!

Exit mobile version