Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தலைமைகள் பதில் கூற வேண்டும்! : வெகுஜனன்

tamil-leaders-150x1501

வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்கள் கடந்த 30 ஆண்டுகளாகக் கொடிய பேரினவாத யுத்தத்தாலும் தமிழீழக் கோரிக்கைக்கான போராட்டங்களாலும் அனுபவித்த அவலங்களும் துன்ப துயரங்களும் கணக்கிட முடியாதவைகளாகும். ஏதோ ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இழப்புகளுக்கும் துன்பத்திற்கும் ஆளாகாத ஒரு குடும்பத்தைத் தானும் வடக்கு கிழக்கில் காண்பது அரிதாகும். உயிர் இழப்புக்கள், சொத்தழிவுகள், வீடு வாசல்களை இழந்த இடப்பெயர்வுகள் தொடர் நிகழ்வுகள் ஆயின. நிலபுலங்கள் அவற்றின் வளங்கள் வாழ்வாதாரங்கள் தொழில்துறைகள் விவசாயம் மீன்பிடி யாவற்றையும் அவ்வப்போது இழந்து கொண்டே வந்திருக்கிறார்கள். மக்களின் உழைப்பு பொருளாதாரம் கல்வி சுகாதாரம் சமூகப் பண்பாட்டம்சங்கள் யாவும் சிதைவுகளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகி வந்துள்ளன.

 
இத்தகைய அழிவுகளுக்கு உழைக்கும் மக்களான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் அன்றாடத் தொழில்களில் ஈடுபடுவோர் ஆளாகினர். அவற்றிலிருந்து மீள முடியாத நிலையிலேயே இன்றும் அவ் உழைக்கும் மக்கள் இருந்து வருகின்றனர். அத்துடன் கீழ் மத்திய தர வர்க்க மக்களான அரசாங்க தனியார் ஊழியர்கள் உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டனர். பொருளாதார நெருக்கடிகளும் விலை உயர்வுகளும் எல்லோரையும் வாட்டி வதைத்தன. ஓரளவு வசதி வாய்ப்பு உள்ள குடும்பங்களில் இருந்து பலர் புலம் பெயர்ந்தனர். அத்தகையோர் அனுப்பிய பணமானது ஒரு சிறு ஆதாரமாக உதவியதே தவிர சமூக நலிவையும் துன்பங்களையும் போக்க உதவவில்லை. போராட்டத்தின் பெயரால் போராட்டத்திற்கு எனத் திரட்டப்பட்டளவு நிதியானது சமூக ரீதியாக தமிழ் மக்களின் இழப்புக்களுக்கும் துயரங்களுக்கும் எவ்விதத்திலும் உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இழப்புக்களில் இன்றும் எதிர்காலத்திலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகிக் கொண்டமை மக்களின் உயிர் இழப்புக்களாகும். கொடிய பேரினவாத யுத்தம் வான் தரை கடல் ஆகிய மூன்று முனைகளாலும் மக்களைப் பலி கொண்டது. இவ்வாறு வடக்கிலும் கிழக்கிலும் வயது வேறுபாடின்றி மக்கள் கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு பேரினவாத இராணுவத்தால் தமிழ் மக்கள் அழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட அதே சம காலத்தில் தமிழீழத்திற்காக ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களால் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டமை தான் சோகத்தின் மேல் சோகமானதாகும். தமிழீழத்தைத் தலைப்புப் பெயராகக் கொண்ட அனைத்து ஆயுத இயக்கங்களும் ஜனநாயக மறுப்பையும் அராஜகங்களையும் கொலைகளையும் கொள்ளைகளையும் கொண்டிருந்தன. துரோகிககள், காட்டிக் கொடுப்போர், சமூக விரோதிகள், திருடர்கள் போன்ற பெயர்களில் வீதிவீதியாக மக்கள் இளைஞர்கள் சுட்டுப் போடப்பட்டனர். அடுத்த கட்டமாக இயக்கங்களுக்குள் எற்பட்ட உள் முரண்பாட்டால் விடுதலைக்கு என நம்பிச் சென்ற இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டனர். அதன் பின் இயக்கங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் கொலைகள் இடம்பெற்றன. இறுதியாக தனி ஒரு தலைவன் தனி ஒரு இயக்கம் ஏகப் பிரதிநிதி என்பதற்காக விடுதலைப் புலிகள் எல்லா இயக்கங்கள் கட்சிகள் தனி நபர்கள் மீதான கொலைகளைப் புரிந்து கொண்டது. இத்தகைய கொலைகளுக்கு தமிழீழத்தைப் பிரகடனஞ் செய்த தலைவர்களே பலியாக வேண்டிய பரிதாபத்திற்கு ஆளாக வேண்டியதாயிற்று. இவ்வாறு கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் – போராட்டம் ஆகியவற்றால் தமிழ்மக்கள் இளைஞர்கள் யுவதிகள் சுமார் ஓன்றரைக்கும் இரண்டு லட்சத்திற்கும் இடைப்பட்ட தொகையின் கொன்றழிக்கப்பட்டனர் என்றே மதிப்பிடப்படுகிறது.

 
இவ்வாறு எந்த மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கவென ஆயுதம் தூக்கிப் போராடினார்களோ அந்த மக்களையும் இளைஞர் யுவதிகளையும் இறுதி வரை தமது துப்பாக்கிகளுக்கு இரையாக்குவதில் இருந்து விடுபடவே இல்லை. தமது இறுதிக் காலப் பாதுகாப்பிற்கும் இருப்பிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கணக்குக் காட்டுவதற்காகவும் தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்ட குற்றச்சாட்டிற்கு உள்ளாகினர். முல்லைத்தீவில் இறுதிப் போர்க்களத்தில் மக்கள் பேரவலங்களுக்கு ஆளாகிப் பல ஆயிரக் கணக்கில் கொல்லப்படுவதற்கு யுத்தத்தை அகோரமாக முன்னெடுத்த மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பேரினவாத நிலைப்பாடு மட்டுமன்றி விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களைப் பலாத்காரமாக மறித்து வைத்திருந்தமையும் மீறித் தப்ப முனைந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடாத்திக் கொலைகள் புரிந்தமையும் மறுக்க அல்லது மறைக்க முடியாதவைகளாகும். இம் மனிதப் பேரவலத்தை மக்கள் முல்லைத்தீவில் அனுபவித்து சுமார் ஐம்பதினாயிரம் வரையான மக்களைப் (சரியான விபரம் பெறப்படாத நிலையில் குத்துமதிப்பாகவே கூற முடிகிறது) பலி கொடுத்து நிற்கும் நிலை எதனால் ஏற்பட்டது என்பதே மக்கள் முன்ந்து வரும் கேள்வியாகிறது. இவற்றுக்குப் பதிலும் பொறுப்பும் கூற வேண்டியவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகின்றது.

இவ்வாறான கேள்விகளுக்கு மூன்று தரப்பினர் பொறுப்பும் பதிலும் தர வேண்டியவர்கள் ஆகின்றனர்.

 
1 -இலங்கையின் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கமாக இருந்து ஆட்சி அதிகாரத்தை முன்னெடுத்து வந்த இரண்டு பிரதான கட்சிகளும் அவர்களோடு இணைந்த பௌத்த சிங்கள மேலாண்மையாளர்கள் அனைவருமாவார். அவர்கள் முன்னெடுத்து வளர்த்த பேரினவாதமே இராணுவ ஒடுக்கு முறையாகவும் யுத்தமாகவும் தமிழ் மக்களைப் பலி கொண்டு வந்திருக்கிறமை வரலாற்றுத் தெளிவுடையதாகும்.

 
2 – இத்தகைய பேரினவாத ஒடுக்கு முறைக்கு இலங்கையின் வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்கைக் கணக்கில் கொண்டு பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளங்களிலான யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்கும் இருப்பிற்குமான தூர நோக்கில் அமைந்த கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பேரினவாதத்தை எதிர்ப்பதற்கு அதன் எதிர் நிலையான குறுந்;தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து சாத்தியமற்றதும் அழிவுகரமானதுமான கொள்கைகளே முன்னெடுக்கப்பட்டன. அதன் வளர்ச்சியாகவும் உச்சமாகவும் முன்னெடுக்கப்பட்டு 30 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்ததே தமிழீழக் கோரிக்கையும் அதற்கான போராட்டமும் ஆகும்.

 
3 – இக் கோரிக்கையை வென்றெடுக்க இந்திய மேலாதிக்கத்தையும் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளையும் நாடிச் சென்று நாசங்கள் தேடப்பட்டன. அத்தகைய அந்நிய மேலாதிக்க சக்திகள் தங்களுடைய ஊடுருவல் தேவைகள் இருப்பு என்பனவற்றுக்காக இத் தமிழீழப் போராட்டத்தை வளரச் செய்து வழிகாட்டி வந்துள்ளதுடன் தத்தமது தேவைகள் முடிந்ததும் தமிழீழப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கும் உதவி ஒத்தாசை புரிந்து கொண்டன. அதனையே தமிழ் மக்கள் முல்லைத்தீவின் இறுதிப் போர்க்களத்தில் பேரவலங்களின் மத்தியில் கண்டனர்.
 
 
இத்தனைக்கும் பின்பும் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் யாவும் தமிழ் மக்கள் முன்னால் என்ன பதிலையும் பொறுப்பையும் கூறப் போகிறார்கள். யுத்தம் முடிந்துள்ளது என்றும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரகடனம் செய்துள்ளனர். ஆனால் அவற்றால் அழிவுற்ற வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு இன்று முட்கம்பி வேலிகளுக்குள் தடுத்து வைத்துள்ள மூன்று லட்சம் தமிழ் மக்களுக்கும் ஏற்கனவே அழிவுகள் அவலங்கள் இழப்புக்கள் இடப்பெயர்வுகளுக்கு உள்ளான தமிழ் முஸ்லீம் மக்களுக்கு அதே தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் என்ன கூறப் போகிறார்கள். அத்தனைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் தான் பொறுப்பு எனக் கூறி ஏனைய தலைமைகள் தப்பித்துக் கொள்ள முடியாது. வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய சாத்தியமற்றதும் தூர நோக் கற்றது அழிவுகரமானதுமான தமிழீழக் கோரிக்கையை நிறைவேற்றிய தந்தையர்கள் மைந்தர்கள் தொடந்து அவற்றை நடைமுறைப்படுத்திய அண்ணன்மார் தம்பிமார் யாவரும் தமிழ் மக்களுக்குப் பதிலும் பொறுப்பும் கூற வேண்டியவர்களே.
 
 
வரலாறு நிறுத்தியுள்ள குற்றவாளிக் கூண்டிலிருந்து உரிய பதில் கூறாது அதனைக் கடந்து சென்று பாராளுமன்றத்திற்கும் உள்ளுராட்சி சபைகளுக்கும் செல்வதில் எவ்வித அர்த்தமும் இருக்க முடியாது. 33 வருட (1976-2009) கால அரசியல் போராட்ட வழிகாட்டலின் சகல தவறுகளுக்கும் பழி பாதகங்கள் அனைத்திற்கும் அழிந்து போன புலிகள் இயக்கத்தின் மீது மட்டும் பழியைச் சுமத்தி விட்டு ஏனைய தமிழ்த் தேசியவாதக் கட்சிகளும் இயக்கங்களும் தவறிக் கொள்ள முடியாது. தமிழீழக் கோரிக்கையைப் பாராளுமன்றத்திற்கும் அதற்கு அப்பாலான போராட்டத்திற்கும் கையில் எடுத்த சகலரும் தமிழ் மக்களுக்கு இன்று பதில் கூற வேண்டியவர்களே ஆவர். தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலம் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படாது விட்டால் நிகழ்காலத்தில் சரியான அரசியல் மார்க்கம் தேடப்பட முடியாத ஒன்றாகிவிடும். அதனால் எதிர்காலமும் இருள் மண்டியதொன்றாகவே அமைந்து விடும். அதனாலேயே மக்கள் இளந் தலைமுறையினர் தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் அனைத்திடமிருந்தும் உரிய பதிலை எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version