Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்

silapathikaram“குடிமக்கள் காப்பியம்” என்று போற்றப்படுகின்ற சிலப்பதிகாரம் ஒரு இசைக் களஞ்சியம் என்று விதந்து பேசப்பட்டாலும் அது தமிழர் வளர்த்த பல கலைகளைப் பற்றிய பொக்கிஷமாகவும் கருதப்படுகிறது.

பாட்டுக்கலையில் தமிழ்மக்கள் பேராற்றல் மிக்கவர்களாக விளங்கியதை எடுத்தியம்பும் செல்வமான சிலப்பதிகாரம் மாத்திரம் நமது கைகளில் கிடைத்திருக்காவிட்டால் இந்திய இசையில் பார்ப்பனர்களால் ஏற்ப்படுத்தப்பட்ட தில்லு முல்லுகள் வெளிச்சத்திற்கு வராமல் போயிருக்கும்.

சாம வேதத்திலிருந்து தான் சங்கீதம் பிறந்து என்கிற புளுகுகளை வரலாறாய் நம்ப வேண்டிய துர்ப்பாக்கியம் நிகழ்ந்திருக்கும்.

கோவலன் , கண்ணகி கதையை சொல்லும் இளங்கோவடிகள் , கதையோட்டத்தில் அந்தக் கால கூத்து இசையையும் , நாட்டார் இசையயும் அல்லது வாய் மொழி இசையையும் கதைக்குப் பொருத்தமான இடங்களில் அமைத்து பெருமை சேர்த்துள்ளார்.அதுமட்டுமல்ல இசையின் இலக்கணங்களையும் விவரித்துச் சொல்லியிருக்கின்றார் என்பர்.

” இளங்கோ மிகப் பெரிய கலைஞர். கலைஞனுக்குள் கவிஞன் அடக்கம்.இசையில் வல்லவர்.ஓவியத்தில் திளைத்தவர்.சிற்பக்கலையில் சிறந்தவர்.அவருக்குத் தெரியாத கலைகளே இல்லை.ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் உணர்ந்தவர் .கலைச் சுரங்கம், கவிதா ஊற்று , சிலப்பதிகாரம்.” என்பார் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் [ சிலப்பதிகாரம் – தெளிவுரையும் ஆய்வுக் குறிப்புகளும் ]

சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் அரிய இசைச் செய்திகளை தனது கடின உழைப்பால் , ஆராய்ச்சியால் பார்ப்பனீய பித்தலாட்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.அவருடைய ஆராய்ச்சி இன்றைய ராகங்களின் பெயர்கள் பண்டைய தமிழ் ராகங்களுக்கு சூட்டப்பட்ட வடமொழிப் பெயர்கள் என நிறுவியது.

பெருமைமிக்க ராகங்களில் ஒன்று தான் பந்துவராளி.நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்த ராகங்களில் இதுவும் ஒன்று.பந்துவராளி என்றும் காமவர்த்தினி என்றும் இன்று அறியப்படுகின்ற இந்த ராகத்தின் பண்டைய தமிழ்ப் பெயர் சாதாரி பண்.

மாலை நேரத்திற்குரிய ராகமாகவும் , எல்லோரையும் கூப்பிடுகிற ராகம் இது என்று விளக்குவார் சிலப்பதிகாரத்தை இசைப்பதில் வல்லவரான கோடிலிங்கம் அவர்கள்.

” ஆடு மாடுகளை மேயவிட்டு இடையன் , தான் கொண்டு போன கூழோ ,சாதமோ உண்டு விட்டு தூங்கி விடுவான்.மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு ,சூரியன் மறைகிற நேரம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்ட வேண்டுமல்லவா , அப்போ ஒன்று திரட்டும் போது உண்டாக்கும் ஒலி ,ஒன்று திரட்டுகிறதுக்கு ஏற்ற நேரம் ஏற்ற ஒலியிலிருந்து பிறந்து இந்த ராகம் ” -என்பார்.

இந்த ஒலியிலிருந்து பிறந்த சாதாரிப்பண் தரும் சோக ரசத்தை மாலை வேளையில் கோவலன் பிரிவால் வாடும் மாதவி பாடுவதாக பாடலில் அமைத்தார் இளங்கோ என்பார் மா.கோடிலிங்கம்.- [ சிலப்பதிகார இசை அரங்கம் – தமிழ் மக்கள் இசைவிழா 2 ம் ஆண்டு – ம.க.இ.க – ]

இளங்கோவடிகளின் அந்தப் பாடல்:

வேறு (மயங்கு திணை நிலைவரி)

இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை? – 40

இந்த பாடலின் விளக்கம் :

மாலைக் காலத்தில் இளமையான இருள் எங்கும் பரவியது. பகல் செய்கின்றவனாகிய கதிரவன் மறைந்து விட்டான்.போக்குவதற்குரிய வருத்தத்தால் கண்கள் நீரைச் சொரிகின்றன, மொட்டவிழ்ந்த , மலர்களைச் சூடியுள்ள கூந்தலையுடையவளே! பிரிந்தவர் நாட்டிலும் , நம் வளைகள் நெகிழ, நெருப்பினைச் சிந்தி வருகின்ற இந்த மயக்கம் பொருந்திய மாலைக் காலம் இருக்குமல்லவா? –

முனைவர் ச.வே.சுப்பிரமணியன் [ சிலப்பதிகாரம் – தெளிவுரையும் ஆய்வுக் குறிப்புகளும் ]

இந்த மாலைப் பொழுது என்பது அவர் பிரிந்து போயிருக்கும் அந்த ஊரில் வராதா ? என்னை மட்டும் ஏன் கொள்ள வேணும்.. ? எனக் கேட்கிறாள் மாதவி.

கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை? – 41

இன்பமும் , துன்பமும் தரும் மாலைப் பொழுதின் பெருமை பற்றி ஏராளமான கவிதைகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன.அவற்றிலிருந்து உத்வேகம் பெற்ற சினிமா கவிஞர்களும் தமது பாடல்களில் ஆங்காங்கே பயன் படுத்தி இருக்கின்றார்கள்.

மாலைப் பொழுது வந்து படை போல கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும் – பாடல் : அன்புள்ள அத்தான் வணக்கம் – கைராசி – கண்ணதாசன்.

அந்தி நேரத்து ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது
பல உயிர்கள் மகிழ்வதும் ஏது –

பாடல் : வாடிக்கை மறந்ததும் ஏனோ – கல்யாணப்பரிசு – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மாதவி அடைந்த துன்பத்தை சாதாரிப் பண்ணில் மாலைப் பொழுதுக்குரிய ராகத்தில் பாடினார்கள் என்பார்கள் இசை அறிஞரும் , சிலப்பதிகத்தை பாடுவதிலும் வல்லவர்களான கோடிலிங்கம் , வைத்திலிங்கம் சகோதரர்கள்.

சாதரிப்பண்ணின் இன்றைய பெயர் பந்துவராளி அல்லது காமவர்த்தினி என்பதாகும்.தமிழ் செவ்வியல் இசையில் 51 வது மேளகர்த்தா ராகம்.இந்த ராகத்தை முத்துச் சுவாமி தீட்சிதர் காசிராமக்ரியா ராகம் என்றழைத்தார்.ஹிந்துஸ்தானி இசையில் பூர்வி தாட் என அழைக்கப்படுகிறது.மேல் ஸ்தாயியில் பாடுவதற்கு உகந்த ராகமாகவும் , விரிவான ஆலாபனைக்கு உகந்த ராகமாகவும் விளங்குவதுடன் மக்களையும் இலகுவில் கவரக்கூடிய ராகமாகவும் விளங்குகின்றது. தொன்று தொட்டு தமிழ் மக்கள் பழகி வந்த ராகங்களில் ஒன்று தான் பந்துவராளி.

தமிழ் செவ்வியல் இசையில்

01. சிவ சிவ என ராதா – தியாகய்யர்

02. நீனே நேரே நம்பி நானுரா – தியாகய்யர்

03. நீயே பேதை முகம் பாராயோ – பாபநாசம் சிவன்

போன்ற பாடல்கள் புகழ் மிக்கவை.அதில் பெரும்பான்மையானவை

ராமா
எத்தனை காலம்
நீ என்னை காப்பாற்றாமல்
சும்மா இருக்கப் போகிறாயோ
பார்ப்போமே !

இது போன்ற புலம்பலாகவே இருக்கும்.இந்தப் புலம்பல்களை இசைதான் காப்பற்றி வந்துள்ளது.

இனிமையையும் உருக்கத்தையும் உயிரினிக்கத் தருகின்ற பந்துவராளி ராகத்தில் சினிமா இசையமைப்பளர்கள் தந்த பாடல்கள் செவ்வியல் இசையின் இனிமை போலவே பேரின்பம் தரும்.

வாத்திய இசையுடன் ராகம் கொள்ளும் உறவில் பிறக்கும் விந்தைமிக்க இசை நம்மை ஆட்டி வைக்கும்.தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை இந்த ராகம் பயன்பட்டு வருகிறது என்று துணிவுடன் கூறலாம்.

தமிழ் சினிமாவில் பந்துவராளி ராகத்தில் வெளிவந்த பாடல்கள்.

01. தேவியை பூஜை செய்வாய் – படம்: சாவித்திரி பாடியவர்:எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசை:துறையூர் ராஜகோபால்
ஒப்பற்ற பாடகி எம்.எம்.சுப்புலட்சுமி பாடிய இனிமையான பாடல். சிறிய பாடல் என்றாலும் எ,அதிலும் இனிய சங்கதிகளைக் கொண்ட அருமயான பாடல்.

02. அம்பா மனம் கனிந்துனது – படம்: சிவகவி பாடியவர்:எம்.கே.தியாகராஜா பாகவதர் – இசை:ஜி.ராமநாதன்
சுப்பர் ஹிட் பாடல் என்று சொல்லத் தக்க பாடல்.இசையமைப்பிலும் பாடப்பட்ட முறையிலும் தன்னிகற்ற எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களின் குரலினிமையில் இனிக்கின்ற பந்துவராளி அவரது ஆற்றலையும் ஞானத்தையும் என்றென்றும் பறை சாற்றும் பாடல்.எனது தாத்தாக்கள் அவருடைய குரலின் இனிமையை எவ்விதம் போற்றினார்கள் என்பதை நினைத்து பார்க்கின்றேன். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவர்களது நினைவுகள் வந்து போவது தவிர்க்க முடியாதுள்ளது .அவரின் பெருமையை ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள்.பாகவதரின் அழகிய குரலும் இன்பம் தரும் இனிய இசையும் பந்துவராளியை என்றென்றும் பெருமை சேர்க்கும்.இப்போது பல தலைமுறை தாண்டி கேட்கும் போதே பரவசம் அளிக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.ஒப்பற்ற பாடல்.பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன் , எம்.கே.தியாகராஜா பாகவதர் வெற்றி கூட்டணி தந்த பாடல்.

03. ஏழு சுரங்களுக்குள் – படம்: அபூர்வ ராகங்கள் பாடியவர்:வாணி ஜெயராம் – இசை:எம்.எஸ். விஸ்வநாதன்
ராக மாலிகையில்அமைக்கப்பட்ட பாடல்.பாடல் ஆரம்பம் பந்துவராளி ராகத்தில்ஆரம்பித்த்து , பின் ரஞ்சனி ,சிந்துபைரவி , காம்போதி என மிக அழகாக நிறைவுறும் பாடல்.தமிழ் திரை தந்த சிறந்த பாடல் வரிசையில் நிச்சயமாக இந்தப் பாடலுக்கும் ஒரு இடம் உண்டு என்று துணிந்து கூறத் தக்க பாடல். படத்த்தில் கதாநாயகி ஒரு கர்நாடக இசைப்பாடாகியாக வரும் காட்சிக்கு அமைக்கப்பட்ட இந்தப் பாட்டைப் பாடி புகழின் உச்சிக்குச் சென்றவர் வாணி ஜெயராம். இசை நிகழ்ச்ச்சிகளில் அடிக்கடி ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்றாக் இருப்பதர்க்கு மக்கள் மத்தியில் இந்த பாடல் பெற்ற செல்வாக்கே காரணம் எனலாம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு இசைமேதை என நிரூபிக்க இந்தப் பாடல் ஒன்றே போதும் .

04. நீராட நேரம் நல்ல நேரம் – படம்: வைரநெஞ்சம் பாடியவர்:வாணி ஜெயராம் – இசை:விஸ்வநாதன்
“கிளப் டான்ஸ்” என்று சொல்லக் கூடிய தேவை அற்ற சமாச்சாரத்த்திற்க்கு போடப்பட்ட இன்மையான பாடல்.ஒரு புதிய கோணத்த்தில் பந்துவராளி ராகத்த்தில் அமைக்கப்பட்ட மெல்லீசைப்பாடல்.மெல்லிசை மன்னரின் கற்ப்பனை வியக்க வைக்கும்.

05. ரகு வர நன்னு ரா – படம்: இசை பாடும் தென்றல் பாடியவர்:ஜேசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை:வீ.தட்சிணாமூர்த்தி /இளையராஜா
தியாகராஜர் எழுதிய தெலுங்குக் கீர்த்தனை.” எண்டே மோஹங்கள் பூவணிஞ்சு ” என்ற மலையாளப் படத்திற்க்காக ஜோடிக் குரலில் பாடப்பபட்ட பாடல்.கர்நாடக் இசை அரங்குகளில் ஒலிப்பது போன்றே அமைக்கப்பட்ட பாடல்.மலையாள படத்த்திற்க்கு வீ.தட்சிணாமூர்த்தி இசையமைத்த பாடல்.தமிழில் ” இசை பாடும் தென்றல் ” என்ற பெயரில் ஏடுக்கப்பட்ட் போது ” வீ.தட்சிணாமூர்த்தி யின் இசை சிறப்பாக இருக்கும் இதைவிட் என்னால் சிறப்பாக அமைக்க முடியாது ” என்று இசைஞானிஇளையராஜா அப்படியே பயன்படுதித்திக் கொண்ட பாடல்.

06. அம்மா என்றாலே – படம்: நந்தா பாடியவர்:இளையராஜா – இசை:யுவன்சங்கர் ராஜா
பொதுவாக இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் தாள லயத்தில் பாடலை அமுக்குவதில் “திறமை ” காட்டும் நிலையில் அதில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நல்ல பாடல்.

07. ஓர் ஆயிரம் யானை கொன்றால் – படம்: நந்தா பாடியவர்:ஹரிசரண் – இசை:யுவன்சங்கர் ராஜா
அதே படத்தில் மீண்டும் அதே ராகத்தில் ஆவேசம் எழ வைக்கும் அதே நேரத்த்தில் உள்ளத்த்தை துன்புறுத்தும் வகையிலும் அமைந்த பாடல்.

இளையராஜாவும் பந்துவராளி ராகமும்:

பொதுவாக மற்றைய ராகங்களைப் போலவே இந்த ராகத்திலும் அசாத்தியமாக பல கோணங்களிலும் பாடல்களைத் தந்தவர் இசைஞானி இளையராஜா.பலவித ரசங்களையும் திரைச் சூழலுடன் இரண்டறக் கலந்து இணைந்து போகும் பாடல்களாக்கியதுதுடன் தனது இசை ஆர்வத்த்திற்க்கும் உரம் போட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

01. செங்கமலம் சிரிக்குது – படம்: தாவணிக் கனவுகள் – பாடியவர்கள் :S .P .பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
நேர்த்தியான இசையில் பந்துவராளி காட்டும் ஒரு விறு விறுப்புடன் ஒத்திசையும் இசையில் இனிமை தரும் காதல் பாடல்.

02. வா வெளியே இளம் பூங்கிளியே – படம்: பாடு நிலாவே பாடியவர்கள் :S .P .பாலசுப்ரமணியம் + சித்ரா – இசை :இளையராஜா
பல் வகை தாளங்கள் குழைந்து தத்தி தத்தி தாவி வந்தாலும் இசையுடன் இழைந்து போகும் அழகு காட்டும். பந்துவராளியில் இளையராஜாவின் கைவரிசை பாடல்.

03. உரக்க கத்துது கோழி – படம்:எஜமான் – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
விரகதாபப்பாடல் தமிழ் இலக்கியத்திற்கு புதிதல்ல.அதை தமிழ் சினிமா இயக்குனர்கள் கதைக்கு தேவையோ இல்லையோ ஒரு படத்தின் வெற்றிக்கு இது போன்ற சமாச்சாரங்களை வலிந்து அல்லது தேவையற்ற இடங்களில் புகுத்துவது அவசியம் கருதுகிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலைக்கு போடப்பட்ட பாடல்.

” முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், – நல்லாய்! – மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து. ” – ஐந்திணை ஐம்பது

காதலர் பிரிவால் தவிக்கின்ற தலைவிக்கு மாலை வேளையில் வண்டுகள் இடும் ரீங்காரம் உயிரை வாட்டுகிறது என்கிறது அந்தப் பாடல்.சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனை பிரிந்த நேரத்தில் ” சாதாரி ” பண்ணில் [ இன்றைய பந்துவராளியில் ] பாடிய பாடல்களைப் பற்றி இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம்.
இந்தப்பாடல் மாலையில் அல்ல இரவில் பாடப்படும் பாடலுக்கு பந்துவராளியில் ஒரு இனிய மெட்டு.

04. என்னே பெத்த ஆத்தான்னு – படம்:கரகாட்டக்காரி – பாடியவர்: இளையராஜா – இசை :இளையராஜா
நாடுப்புற இசையிலிருந்து தோன்றி வளர்ந்தவையே ராகங்கள் என்பதை நிரூபிப்பது போன்ற பாடல்.பந்துவராளியை இழுத்து வந்து நாட்டுப்புற இசைக்கு இசைவாக்கிய ,அல்லது அந்த ராகத்திற்கு நாட்டுப்புற சாயம் பூசிய பாடல்.

05. கூட பிறந்த சொந்தமே – படம்:கிழக்கும் மேற்கும் – பாடியவர்: இளையராஜா – இசை :இளையராஜா.

தமிழ் செவ்வியல் இசை மரபால் ஓரங்கட்டப்பட்ட ஒப்பாரி இசையை சினிமா இசை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அர்ப்புதமாகப் பயன்படுத்திக் கொண்டது என்ற வகையில் அதன் சுவையை அருமையாக சினிமா இசையமைப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.இங்கே பந்துவராளி ராகத்தில் ஒரு ஒப்பாரி இசை.

06 . என் சோக கதையை கேளு – படம்:தூறல் நின்னு போச்சு – பாடியவர்: மலேசியா வாசுதேவன் – இசை :இளையராஜா.
துன்ப உணர்வைப் பிரதிபலிப்பதில் ஜீவனை தரும் பந்துவராளியில் நகைச்சுவை கலந்த சோகப் பாடல்.

07. கண்களுக்குள் உன்னை எழுது – படம்: தந்து விட்டேன் என்னை – பாடியவர் :எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
மேலைத்தேய பொப் இசையின் தாளத்தில் வருகின்ற பந்துவராளி.பல்லவி கொஞ்சம் அவசரமாகத் தொடங்குவது போலிருந்தாலும் பின் தொடர்ந்து வரும் சரணங்கள் சாமரம் வீசுவது போன்ற மேன்மை தரும்.

08. என்ன வரம் வேண்டும் – படம்: நந்தவனத் தெரு – பாடியவர் :மனோ + குழுவினர் – இசை :இளையராஜா
மெதுவாக நகரும் தாள அமைப்பிலும் , கோரஸ் இசையும் இணைந்த மென்மையான மெட்டமைப்பில் சுகம் தரும் பந்துவராளி.மேல் ஸ்தாயியில் பிரகாசிக்கும் இந்த ராகத்தில் கீழ் சுருதியில் பாடினாலும் இனிக்கும் என்பதை நிரூபிக்கும் பாடல்.

09. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் – படம்: நினைவெல்லாம் நித்யா – பாடியவர்கள் :எஸ்.ஜானகி + எஸ்.பி. பாலசுப்ரமணியம் – இசை :இளையராஜா
இசைஞானியின் சுப்பர் ஹிட் பாடல்.பந்துவராளியில் எப்படிப்பட்ட கற்பனை!! மாலையில் பாடுவதற்கு பொருத்தமான ராகம் இது என்று கருதப்படுவதால் , மாலை நேரத்தையும் , காதலையும் இணைக்கும் சூழ்நிலைகளுக்கு இளையராஜா இந்த ராகத்தை பயன் படுத்தியது போல வேறு ஒரு இசையமைப்பாளரும் பயன்படுத்தவில்லை என்று சொல்லலாம்.

09. வழி மேல் விழியாய் – படம்: அர்ச்சனைப்பூக்கள் – பாடியவர்கள் :எஸ்.ஜானகி – இசை :இளையராஜா

ஏகாந்தமாய் ,ஆகாயமாய் விரிந்து செல்லும் கற்பனை ஆற்றல் மிக்க இசைஞானியின் இனிய இசை வார்ப்பு.

சுபபந்துவராளி ராகம்:

செவ்வியல் இசையில் சுபபந்துவராளி 45வது மேளகர்த்தா ராகம் ஆகும்.இதன் ஜன்ய ராகம் தான் பந்துவராளி என்ற கருத்தும் உண்டு.இந்த ராகத்தை முத்துசுவாமி தீட்சிதர் சிவபந்துவராளி என்று அழைத்தார் என்பர்.

பந்துவராளி மற்றும் சுபபந்துவராளி இரண்டுக்குமான சுரங்கள் பின்ப்வருமாறு:

பந்துவராளி
ஆரோஹணம் : ஸ ரி1 க3 ம2 ப த1 நி3 ஸ்
அவரோஹணம் : ஸ் நி3 த1 ப ம2 க3 ரி1 ஸ

சுப பந்துவராளி
ஆரோஹணம் : ஸ ரி1 க2 ம2 ப த1 நி3 ஸ்
அவரோஹணம் : ஸ் நி3 த1 ப ம2 க ரி1 ஸ

பந்துவராளி இரக்க உணர்வைத் தருகின்ற ராகம்.இருப்பினும் சினிமா இசையமைப்பாளர்கள் பல விதமான பாடல்களைத் தந்து சினிமா இசையைப் பொலிவுறச் செய்தார்கள் என்று சொல்லத்தக்க வகையில் பாடல்களைத் தந்தார்கள்.

பந்துவராளியை போன்ற சாயலைக் கொண்ட சுபபந்துவராளி தனக்கென ஒரு தனித்தனமையைக் கொண்டுள்ள ராகம்.அதன் முத்திரை என்பது சோக ரசம் என்று தான் சொல்லவேண்டும்.மனதை கரைய வைக்கின்ற குணம் கொண்டது இந்த ராகம்.

இந்த ராகத்தில் பாடலை ஆரம்பித்தால் முடிவு வரை சோகரசம் இசையின்பமாகப் பெருகி நம்மை ஆட்டிப்படைக்கும்.வேறு ராகங்களில் அவற்றின் குணவியல்புகளைத் தாண்டி அதற்க்கு மாறான குணங்களை வெளிப்படுத்திய சினிமா இசையமைப்பாளர்கள் இந்த ராகத்தில் மட்டும் இதன் குணாம்சனமான சோகத்துடன் நிறுத்தியிருக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றும்.

ராகங்களைப் பற்றி இளையராஜா ஒரு முறை சொல்லும் போது ராகங்கள் அழுவதில்லை என்றார்.ஏனைய ராகங்களை அழுவதற்கு மட்டுமல்ல வேறு உணர்வுகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது தான் அவர் கருத்து.அதை நிரூபிக்கும் வண்ணம் திரையில் இசையமைப்பாளர்கள் பலவிதமான பாடல்களையும் தந்திருக்கின்றார்கள்.
ஆனால சுபபந்துவராளியில் தனியே சோக ரசமிக்க பாடல்களையே பெரும்பாலான திரை இசையமைப்பாளர்கள் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.சினிமாவில் சோக காட்சிகளுக்கு அதிகம் பயன்பட்டுள்ள ராகம் இதுவாகும்.பெரும்பாலும் சோகப் பாடல்களை கொண்ட ராகமும் இதுவாகும்.

ஆனாலும் இசைஞானி மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் , இதயத்தோடு இயல்பாக கலக்கும் பாடல்களையும் தந்து பெருமைப்படுத்தியிருக்கின்றார்.

சுபபந்துவராளி ராகத்தை ஹிந்துஸ்தானி இசையில் தோடி [todi] என அழைக்கின்றனர்.

தமிழ் திரையில் வெளிவந்த சுபபந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல்கள் சில:

01. நெஞ்சம் குமுருதே – படம்: மகதல நாட்டு மேரி பாடியவர்:கண்டசாலா – இசை:R.பார்த்தசாரதி
ரங்கசாமி பார்த்தசாரதி என்ற இளைய , புதிய இசையமைப்பாளர் இசையமைத்த அற்ப்புதமான பாடல்.ராகமாலிகை பாடலில் தொடக்கத்தில் சுப பந்துவராளியில் ஆரம்பிக்கும் பாடல்இது. இவர் ஒரு சில படங்களுக்கு மட்டும் இசையமைத்தார்.இவர் இசையமைத்த பாடல்களான ” கூந்தலிலே நெய் தடவி ” [படம் : கல்யாண ஊர்வலம் – பாடியவ்ரக்ள : ஜேசுதாஸ் + எஸ்.ஜானகி ],” இறைவன்இருக்கின்றானா ” [படம் : அவன் பித்தனா ] . ” எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் ” போன்ற பாடல்கள பிரபல்யம் மிக்கன.

இசையமைப்பிலிருந்து ஒதுங்கிய அவர் தமிழில் முதன் முதலாக இளையராஜாவின் பாடல்களை CDயில் வெளியிட்ட பெருமைக்குரியவராவார்.ஓரியண்டல் இசை நிறுவனத்தின் [ Oriental Records ] மூலம் நல்ல இசை தட்டுக்களை வெளியிட்ட பெருமை இவரை சேரும்.இவருடைய இசைத் தட்டுக்களில் சித்தார் மேதை ரவிசங்கர் , வீணை மேதை எஸ்.பாலசந்தர் , ஜேசுதாஸ் போன்ற கலைஞர்களது இசை வடிவங்கள் வெளிவந்துள்ளன.

02. ஒரு சொல்லாலே வீண் ஆனதே – படம்: ராஜா ராணி – பாடியவர்:ஜிக்கி – இசை: டி. ஆர். பாப்பா
மிக அருமையான சோகப்பாடல்.செனாய் , குழல் போன்ற வாத்தியங்களால் இதயத்தை வாட்டும் படியாக அமைக்கப்பட்ட பாடல்.இசைமேதை டி. ஆர். பாப்பா தந்த அருமையான , காலத்தால் அழியாத பாடல்.

03. இந்த நாடகம் அந்த மேடையில் – படம்: பாலும் பழமும் பாடியவர்:பி.சுசீலா – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
அருமையான தொகையறாவுடன் ஆரம்பிக்கும் அற்ப்புதமான கிளைமாக்ஸ் பாடல்.

கண் கொடுத்து கண் பறித்தாய்
காணவும் வைத்தாயே – தாயே

என்ற வரிகளை பாடும் போது கல் நெஞ்சங்களையும் கனிய வைக்கும் இசையை வர்ணிக்க வார்த்தை இல்லை எனலாம். உணர்ச்சிக் குவியல்களாய் நிரப்பபட்ட படத்தில் மெல்லிசை மன்னர்களின் அற்புத இசையால் தமிழ் மக்களின் ஆன்மாவை ஊடுருவிச் சென்ற பாடல். ராகங்களின் தனித்துவத்தை மெல்லிசையால் கட்டி நவீனம் செய்த மெல்லிசை மன்னர்களின் கலைநயமிக்க பாடல்.செனாய் வாத்தியத்தை என்ன அர்ப்புதமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்ற வியப்பும் ,அதனை வாசித்த கலைஞரின் ஆற்றலையும் எண்ணி வியக்கவும் வைக்கும் பாடல்.

04. கால மகள் கண் திறப்பாள் – படம்: ஆனந்த ஜோதி பாடியவர்:பி.சுசீலா – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

தம்மைத் தாமே தேற்றும் ஒரு அற்புதமான பாடல் மூலம் இசை ரசிகர்களை என்றென்றும் உருக வைக்கும் பாடல்.

கள்ளிருக்கும் தேரைக்கெல்லாம்
கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம்
துணை இருந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை
நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
உனக்கு இல்லையா – தம்பி
நமக்கு இல்லையா ..?

என்ற வரிகளில் இசை உருக்கத்தின் உச்ச்சத்திர்க்குச் சென்று அழிவற்ற பாடலாகி நம் நெஞ்சங்களை வாட்டுகின்றது.

05. உன்னை நான் சந்தித்தேன் – படம்: ஆயிரத்தில் ஒருவன் பாடியவர்:P. சுசீலா – இசை:விஸ்வநாதன் ராம மூர்த்தி
விரகதாபத்தை வெளிப்படுத்தும் இசையில் உள்ளுணர்வில் அதி அற்ப்புதம் நிகழ்த்தும் பாடல்.பந்துவராளியின் ஒளிப்பிழம்பில் தோய்ந்து கனிந்து நம் நெஞ்சங்ககளை நெகிழ வைக்கும் பாடல்.
ஆச்சர்யமிக்க மெல்லிசையாய் வியக்க வைக்கும் இசையமைப்பில் ஹிந்துஸ்தானி இசையின் வீச்சுக்கள் பொலிவுற்று பாடலின் உணர்வு நிலையை சிறப்பிக்கின்றது.இந்தப் பாடலுக்கான இசை உந்துதல் இசை மேதை நௌசாத் அவர்களின் பாடல் ஒன்றிலிருந்து கிடைத்ததாகும்.

06. ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே – படம் :அவன்தான் மனிதன் -பாடியவர் T.M.S – இசை: எம்.எஸ். M.S.விஸ்வநாதன்
மனதை வாட்டும் துன்பத்தை அள்ளி இறைக்கும் பாடலாக அமைக்கப்பட்டாலும் அதில் கம்பீரமும் , தன்னிரக்கமும் , தன்னைத் தானே நொந்து கொள்கின்ற தியாக உணர்வையும் தருகின்ற பாடல்.படத்தை பார்க்காமலே கதாபாத்திரத்தின் இயல்பை உணர்த்தும் பாடல்.மெல்லிசைமன்னரின் இசையில் நம் மனதை குழைய வைக்கும் பாடல்.

07. பொய்யின்றி மெய்யோடு – படம் :சரணம் ஐயப்பா – பாடியவர் : K.J.ஜேசுதாஸ் — இசை: சந்திரபோஸ்
பாடகர் K.J.ஜேசுதாஸ் திரைப்படத்தில் தோன்றி பாடுவதாக அமைந்த காட்சி.இந்த ராகத்திர்க்குரிய இரக்கம் நிறைந்த பாடல். ஆங்காங்கே பல சிறப்பான பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் சந்திரபோசின் அழகான கற்பனையில் அமைந்த பாடல்.ஜேசுதாஸ் உருக்கமாக பாடும் பாடல்.

08 . அப்பன் யாரு அம்மா யாரு – படம் :புதிய பாதை – பாடியவர் : K.J.ஜேசுதாஸ் — இசை: சந்திரபோஸ்
சோக ரசம் ததும்பும் பாடல்.இந்தப் படத்தின் பிரபலமான பாடல் இந்தப் பாடல்.

09. வாழ்வே மாயம் – படம் :வாழ்வே மாயம் – பாடியவர் : K.J.ஜேசுதாஸ் — இசை: கங்கை அமரன்
ராகத்தின் இயல்பிற்கு ஏற்ப அமைந்த பாடல்.விரக்தியின் உச்சத்தில் பாடப்படும் பாடல்.புதிய கோணத்தில் சுபபந்துவராளியை பயன்படுத்தியுள்ளார் கங்கை அமரன்.

இளையராஜாவின் இசையில் சுபபந்துவராளி ராகம் :

01. ஆயிரம் தாமரை மொட்டுக்களே – படம்: அலைகள் ஓய்வதில்லை – பாடியவர்கள் :S .P .பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
வியக்க வைக்கும் மிருதங்க இசையுடன் ஆரபிக்கும் பாடல். முதன் முதல் காதலை வெளிப்படுத்தும் காட்சிக்கு அமைக்கப்பட்ட பாடலில் அதிரடியான மிருதங்க இசையை அனாயாசமாக பயன்படுத்தியதை பலரும் பாரட்டிய பாடல்.பொதுவாக தபேலா போன்ற வாத்தியங்களைத் தான் பயன்படுத்துவார்கள்.
செனாய் .குழல் ,பின்னணியில் பெண்கள் கோரஸ் என இசைக்கலவையில் இன்ப அதிர்ச்சி தரக் கூடிய நாத வினோதங்கள் சேர்ந்த கலவை பிரமிக்க வைக்கும்.
செனாய் என்ற வட இந்திய வாத்தியத்தை இளையராஜா தமிழ் நாட்டுபுற இசைக்கருவி என்று சொல்லத்தக்க அளவில் மிக அதிகளவில் பயன் படுத்தியிருக்கின்றார்.
இந்தப் பாடலுக்கான தூண்டுதல் தனது தாயார் சின்னதாய் அம்மாள் பாடிய நாட்டுப்புறப் பாடலிலிருந்து பிறந்தது என்பார் இளையராஜா.
சுபபந்துவராளி ராகத்தில் ஆச்சரியமிக்க ஒரு மகிழ்ச்சி பாடல்.இதுவும் இளையராவின் சாதனை.

02. எங்கே நிம்மதி நிம்மதி என்று – படம்: நடிகன் – பாடியவர்கள் :S .P .பாலசுப்ரமணியம் – இசை :இளையராஜா
நிம்மதி இழந்தவனின் பாடல் அல்ல.அந்தப் போர்வையில், பாசாங்காக பாடப்படும் நகைச்சுவைப்பாடல்.

03. நேற்று இருந்த உலகம் இன்றைக்கில்லை – படம்:பரணி – பாடியவர்: சித்ரா – இசை :இளையராஜா
இயற்கை வாத்திய கருவிகளின் பிரயோகத்தில் இளையராஜாவுக்குரிய ,அவர் ஜனரஞ்சகப்படுத்திய பாணியில் இருந்து சற்று விலகி ராகங்களில் புதைந்திருக்கும் ஆழமான அழகை வெளிப்படுத்த வயலின் ,புல்லாங்குழல் வித்தியாசமான முறையில் பயன்படுத்தப்பட்ட பாடல்.சித்ரா அழகாக பாடிய எளிமையான பாடல்.

04. எல்லோருடைய வாழ்க்கையிலும் – படம்:பாட்டுக்கொரு தலைவன் – பாடியவர்: இளையராஜா – இசை :இளையராஜா
எத்தனை எத்தனை விதமான பாடல்களை ஒரே ராகத்தில் ஒருவரால் இசையமைக்க முடியும் என்று ஆச்சரியப் பட வைக்கும் பாடல்.அத்தனையிலும் ராகத்தின் இனிமையை தருவது இசைஞானியின் தனித்துவம் என்று ஒப்புக் கொள்ள வைக்கின்ற வகையில் தருகின்ற பாடல்களில் ஒன்று.

05. அழைக்கிறான் மாதவன் – படம்: ஸ்ரீ ராகவேந்திரா பாடியவர்:K.J.ஜேசுதாஸ் + மலேசியா வாசுதேவன் + தினேஷ் – இசை:இளையராஜா
மனத்தைப் பிணிக்கின்ற வகையில் ஜேசுதாஸ் குரலில் ஆரம்பமாகும் பாடலின் தொடர்ச்சியாக , இணைந்து பாடியவர்களும் அருமையாகப் பாடிய பாடல்.பாடலின் முழுமை மனம் உருகும் படி அமைந்த பாடல்.

06. ஒரு மூணு முடிச்சாலே – படம்: அம்மன் கோயில் கிழக்காலே பாடியவர்:மலேசியா வாசுதேவன் +குழுவினர் – இசை:இளையராஜா
நாட்டுப் புற இசை என்ற வளையத்த்தில் சுற்றி வரும் சுப பந்துவராளி ராகம் நகைச் சுவை பாடலாக பாவலா காட்டும் பாடலில் கதாநாயகனின் உள்ளக் குமுறலையும் வெளிப்படுத்தும் பாடல்.

07. அலைகளில் மிதக்குது – படம்: அந்த ஒரு நிமிடம் பாடியவர்:S .P .பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
தமிழ் சினிமாவின் ” ஊக்கிகளாக ” கருதப்படும் ஒரு காட்சிக்கு போடப்பட்ட பாடல்.படத்தில் ஒரு தழுக்கு , ஒரு குலுக்கு,
ஒரு கிலுக்கு காட்சியில் பாடல் அகப்பட்டுக் கொண்டாலும் பந்துவராளியின் மயக்கும் தன்மையை அழகாக வெளிப்படுத்தும் பாடல்.சுபபந்துவராளி ராகத்தில் இன்னுமொரு ஆச்சரியமிக்க ஒரு மகிழ்ச்சி பாடல்.

08. தாலி என்பது இங்கே – படம்:துருவ நட்சத்திரம் – பாடியவர்: இளையராஜா – இசை :இளையராஜா
மீண்டும் ஒரு அருமையான சோகப்பாடல்.கம்பீரத்துடன் தாயின் பெருமையை பறை சாற்றும் அதே வேளை உணர்ச்சி செறிவில் நன்றாக செதுக்கப்பட்ட பாடல்.ஆழமான உணர்வை வெளிக்கொண்டு வர உதவும் புல்லாங்குழல் பந்துவராளியின் பாவத்தை தூக்கி நிறுத்துகிறது.

09.என்ன என்ன கனவு கண்டாயோ – படம்:வள்ளி – பாடியவர்: இளையராஜா – இசை :இளையராஜா
மனதை நெருடுகின்ற மெட்டு , கோரஸ் இசையுடன் இழைந்து தரும் விரக்தி உணர்வு பொங்கும் பாடல்.

10. வைகறையில் வைகை கரையில் – படம்:பயன்கள் முடிவதில்லை – பாடியவர்: S .P .பாலசுப்ரமணியம் – இசை :இளையராஜா
எடுத்த எடுப்பிலேயே மனதை பிணிக்கும் மெட்டில் சுபபந்துவராளி அழகு காட்டும் பாடல்.மூத்த இசையமைப்பாளர்களின் சாயலில் மெட்டு இருந்தாலும் ராஜாவின் வாத்திய இசையின் அழகு நிறைந்த பாடல்.

பிறமொழிப் பாடல்களிலும் ஏராளமான பாடல்கள் இந்த ராகத்தில் உள்ளன.ஹிந்தி பாடல்களில் லதா மங்கேஸ்கர் பாடிய மீரா பஜன் இசைத் தட்டில் ” நந்த நந்தன ” என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ராகம் வசந்தா:

மாலையில் பாடுவதற்கு உகந்த ராகமாகக் கருதப்படும் ராகங்களில் இன்னுமொரு முக்கியமான ராகம் வசந்தா.கலைநயமும் ,அழகுணர்ச்சியும் நிறைந்த ராகம்.பந்துவராளி , ஹம்சானந்தி , வசந்தா போன்ற ராகங்களில் அமைந்த பாடல்களைக் கேட்கும் போது ஒரே மாதிரி இருப்பது போன்ற மயக்கம் உண்டாகும்.ராகம் பற்றி நன்கு தெரிந்தவர்களும் சில சமயங்களில் அடையாளம் காண்பதில் இடர் படுவதுண்டு.எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்தமானதாகவும் கருதப்படும் இந்த ராகம் வீர உணர்வையும் சிறப்பாக வெளிப்படுத்தும் தன்மை குறிப்பிடத்தக்கது.
செவ்வியல் இசையில் வசந்தாஎன்கிற இந்த ராகம் லலிதா என்ற ராகத்திற்கு நெருக்கமானது.ஆனாலும் சிலர் இரண்டு ராகங்களும் ஒரே ராகம் தான் என்று சொல்வதும் உண்டு.

சூரியகாந்தம் என்ற 17 வது மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகம் வசந்தா என்றும் , 15 வது மேளகர்த்தா ராகமான மாயாமாளவ கௌளை ஜன்ய ராகம் ” லலிதா ” என்றும் சொல்லப்படுகிறது.

வசந்தா : ஸ ம1 க3 ம1 த2 நி3 ஸ்
: ஸ் நி3 த3 ம1 க3 ரி1 ஸ

லலிதா :ஸ ரி1 க3 ம1 த1 நி3 ஸ்
ஸ் நி3 த1 ம1 க3 ரி1 ஸ

என சுரங்கள் அமைந்துள்ளன.தமிழ் செவ்வியல் இசையில்

நடனம் ஆடினார் – பாபநாசம் சிவன்
சீதம்மா மாயம்மா – தியாகையர்

போன்ற பல கீர்த்தனைகள் பிரபலமானவை .

வசந்தா ராகத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படப்பாடல்கள் சில:

வசந்தா ராகத்தில் வெளிவந்த பாடல்கள் 80 வருட திரை இசையில் அதிகம் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

01. வசந்த ருது மன மோகனமே – படம்:சிவகவி1943 -தியாகராஜா பாகவதர் + டி.ஆர்.ராஜகுமாரி – இசை: ஜி.ராமநாதன்
தமிழ் திரை இசையின் இசை அதிசயம் என்று கொண்டாடப்பட்ட MK தியாகராஜா பாகவதர் அவர்களும் ஜி.ராமநாதனும் நிகழ்த்திய அர்ப்புதங்களில் விளைந்த பாடல். ராகங்களின் வீச்சுக்களை அறிந்து இசையமைத்த ஜி.ராமநாதன் என்ற இசைமேதையின் இனிய பாடல்.அருமையான கூட்டணியில் அமைந்த பாடல். இன்றும் அசைக்க முடியாத பாடல்.பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன் , எம்.கே.தியாகராஜா பாகவதர் வெற்றி கூட்டணி தந்த பாடல்.

02 . நடராஜன் உன் திரு நடம் கண்டு
நங்கையை கண் பாரைய்யா -படம்: கன்னிகா 1947 – பாடியவர்கள்:குமரன் + எம்.எஸ்.சரோஜினி
இந்த பாடல் வசந்தா ராகத்தில் முழுமையாகப் பாடப் படுகின்ற பாடல்.செவ்விய இசை சார்ந்தாக ஒலிக்கின்ற பாடலில் முழுமையாக வசந்தா ராகத்தை அனுபவிக்கலாம்.

03. அம்மா பாரம்மா – படம்:அம்மா 1952 – ஜிக்கி – இசை:வீ.தட்சினாமூர்த்தி
பல்லவி மிக அழகாக வசந்தா ராகத்தில் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் பின் ராக மாலிகையாகி செல்கிறது.சமீபத்தில் மறைந்த பழம் பெரும் இசையமைப்பாளர் வீ.தட்சினாமூர்த்தி இசையமைத்த ஆரம்பகாலப் பாடல்.

04. சிவகாமி ஆட வந்தால் – படம்:பாட்டும் பரதமும் 1974 – TMS + சுசீலா இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
” சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான் ”
என்று கேட்டு “நடமாடிப் பார்க்கட்டுமே ” என்று கம்பீரமாகக் கேட்கும் பாடல்.ஆரம்பம் வசந்தா ராகத்தில் அழகாக அமைந்து பின் ராகமாலிகையாகத் தொடரும் பாடல்.இந்தப் பாடலின் பின் பகுதியும் ராகமாலிகையாக முடிவடைகிறது.

05. வந்தனம் என் வந்தனம் – படம்: வாழ்வே மாயம் – பாடியவர்: பாலசுப்ரமணியம் – இசை : கங்கை அமரன்
வசந்தாவின் அழகை நிறைவாக , போதையூட்டும் உணர்ச்சியோடு தந்த பாடல்.” அந்தி மழை பொழிகிறது ” என்ற பாடல் தந்த தூண்டுதலில் பிறந்தது இந்தப் பாடல் என்று இதன் இசையமைப்பாளர் கங்கை அமரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாக்கு மூலம் தந்திருக்கின்றா.

06. மின்சார பூவே பெண் பூவே – படம்:படையப்பா – பாடியவர்கள்:ஸ்ரீநிவாஸ் + நித்யஸ்ரீ – இசை:AR.ரகுமான்
வசந்தா ராகத்தில் அழகான மெட்டு . நித்யஸ்ரீயின் மிகைப்படுத்தப்பட்ட பாடும் முறை , தத்தளிக்கும் இடை இசை என என சில அம்சங்களை தவிர்த்திருக்கலாமோ என எண்ண வைக்கும் பாடல்.கம்பீரமான உணர்வைத் தருகின்ற வசந்தாவை , பொருத்தமான ஒரு சூழலுக்குப் பயன் படுத்திய ரகுமானின் முயற்ச்சியை பாராட்டலாம்.

07. கண்டேன் கண்டேன் காதலை – படம்:பிரிவோம் சிந்திப்போம் – பாடியவர்கள்:கார்திக் + – இசை:வித்யாசாகர்
மெல்லிசையாக பல நல்ல பாடல்களை தருகின்ற வித்யாசாகரின் இனிமையான பாடல்.

08. மான் கண்டேன் மான் கண்டேன் – படம்:ராஜரிஷி – பாடியவர்கள்:KJ .ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை:இளையராஜா
உயிர்க்கட்டுக்களை இதமாக வருடும் வசந்தா ராகத்தை அதன் பயன் அறிந்து ,அதன் அழகின் அமைதியை மெல்லிசை வார்ப்பில் செவ்வியல் அசைவுகளை இழைத்து தந்த இசைஞானியின் படைப்புணர்வின் உன்னதமிக்க பாடல்.

09. அந்தி மழை பொழிகிறது – படம்:ராஜபார்வை – பாடியவர்கள்:SP .பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி -இசை:இளையராஜா
பூக்களை மலர்த்தும் , புதுச் செடிகளை செழிக்க வைக்கும் மண்ணின் வளம் போல மாலை நேரத்திற்கு பொருத்தமான வசந்தா ராகத்தில் சம்பிரதாய வேலிக்குள் பிற இசையின் எழில்களையும் சிறை புகுத்தி உயிர் உணர்ச்சியின் வலிமையை மேலோங்கச் செய்கின்ற பாடல்.நான்கு நிமிடத்தில் எத்தனை ,எத்தனை மெருகூட்டல்.எத்தனை ,எத்தனை அழகூட்டல்.
வசந்தா என்ற பேரெழிலில் புதுப் பூவாய் பூத்த பாடல்.

10. நில் நில் பதில் சொல் – படம்:பாட்டு பாட வா – பாடியவர்கள்:இளையராஜா + உமா ரமணன் – இசை:இளையராஜா
புது தினுசாக வசந்தா ராகத்தில் மீண்டும் இளையராஜாவின் கை வண்ணம்.

பழைய பாடல்கள் பெரும்பாலும் வசந்தா ராகத்தை பரவலாக ராக மாலிகைப் பாடல்களில் பயன்படுத்தினார்கள்.
இளையராஜா இசையமைத்த ” என்ன சமையலோ ” உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் பாடலில்
” பாடு வசந்தா

ருசித்துப் பார்க்க கொஞ்ச ரசம் தா “,… என்ற வரிகள் வசந்தாராகத்தில் அமைந்திருக்கும்.

அகத்தியர் படத்தில் ” வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்” என்ற பாடலில்

” …அனைத்தும் உன் வசந்தானா ? ஆணவம் ஏன் ?”

என்ற வரிகள் வசந்தா ராகத்தில் அமைந்திருக்கும்.

ஈழத்துப் பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடலாக நான் கருதும் ஒரு பாடல் வசந்தா ராகத்தில் அமைக்கப்பட்டது.திறமைமிக்க ஈழத்துப் பாடகியான திருமதி.பார்வதி சதாசிவம் என்பரால அருமையாகப் பாடபட்டது.
இலங்கை வானொலியில் அடிக்கடி ” ஈழத்து மெல்லிசைப் பாடல் ” நிகழ்ச்சியில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இனிமைமிக்க பாடல்.

இனிமைமிக்க அந்தப் பாடல்

” மல்லிகை பூத்த பந்தலில்
மெல்லிய வாசம் வந்தது “

என்று தொடங்கும்

மாலை நேரத்தில் பூக்கின்ற மல்லிகை போலவே , மயக்குகின்ற மாலைப்பொழுதின் வண்ணங்களை , இசையின் லாவண்யங்களை , தங்கள் படைப்புக்களில் தந்து , நம் இதயத்தோடு இணையும் இனிய பாடல்களாகத் தந்த இசையமைப்பாளர்கள் அளவோடு பயன்படுத்திய ராகம் இந்த வசந்தா என எண்ணத் தோன்றுகிறது.

[ தொடரும் ]

முன்னைய பதிவுகள்:

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

Exit mobile version