Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்

ராகம் சிந்துபைரவி:

தொன்மைமிக்க இசைப்பண்பாட்டைக் கொண்ட இந்திய இசைக்கு வெளியிலிருந்து வந்து பெருந் தாக்கத்தை விளைவித்து , இந்திய ராகங்களில் ஒன்றாக கலந்த ராகங்களில் முதன்மையானது சிந்துபைரவி.இந்திய, தமிழ் மரபார்ந்த கிராமிய இசைக்குப் பொருத்தமாக மக்கள் தகவமைத்துக் கொண்ட முதன்மையான ராகமும் சிந்துபைரவி என்றால் மிகையில்லை.

நாடுப்புற இசைக்கு கனகச்சிதமாகப் பொருந்தும் இந்த ராகம் தமிழ் செவ்வியல் இசையில் கச்சேரி முடிவில் சிறிய பாடல்களைப் பாடப் பயன்படுத்தப்படுகிறது.

வட இந்தியாவிலிருந்து வந்த ராகம் இது என கூறப்படுகின்ற இந்த ராகம் மத்திய கிழக்கு மற்றும் அரேபியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ள ராகமாகும்.புனித குரான் இந்த ராகத்திலேயே ஓதப்படுகிறது என்பர்.அரேபியர்கள் நமக்கு வழங்கிய கொடை இந்த சிந்துபைரவி.

வரலாற்றுக் காலம் தொட்டே அரேபியாவிற்கும் தமிழகத்திற்கும் ஏற்ப்பட்ட வர்த்தகத் தொடர்பு , பரிவர்த்தனைகளால் தமிழகத்தில் மெதுவாக வந்தமர்ந்த ராகமோ என்றெண்ணவும் வாய்ப்புத் தருகின்ற ராகம் சிந்துபைரவி.

நல்ல குதிரைகளைச் சோழ நாட்டில் சென்று வாங்கி வர பாண்டிய மன்னனால் அனுப்பப்பட்ட திருவாதவூரார் என்ற தலைமை அமைச்சர் அரச பணத்தை கையாடி , பின் நரிகளைக் குதிரைகளாக்கிய கதை நாம் எல்லாம் சமய பாடத்தில் படித்திருக்கிறோம்.அந்த திருவாதவூரார் தான் பின்னாளில் நெஞ்சுருகத் தேவாரம் பாடிய மாணிக்கவாசகர் ஆனார்.அவரது காலம் 7 ஆம் நூற்றாண்டு.

குதிரைகள் அரேபியாவிலிருந்து வந்தன.அந்த குதிரைகளை பராமரித்து வந்தவர்கள் ராவுத்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.இன்றும் தமிழ் நாட்டில் ராவுத்தர் அழைக்கப்படும் பிரிவினர் அந்த சந்ததியினரே என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.அதைப் போலவே இசையிலும் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்.

ஆங்கிலக் காலனியக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு , இன்று நம் வாழ்விலிருந்து பிரித்துப் பார்க்கவியலாத அளவுக்கு நம் உணவில் இரண்டறக் கலந்து விட்ட மிளகாய் , தேயிலை போன்று இந்திய இசையால் உள்வாங்கப்பட்ட ராகம் சிந்துபைரவி என எண்ணத் தோன்றுகின்றது.மிளகாய் , தேயிலை போன்றவை வெளியிலிருந்து நமக்குக் கிடைத்தவை என்பதை இன்று எத்தனை பேர் ஒத்துக் கொள்வர்?

தேயிலையையும் ,மிளகாயையும் அறிமுகப்படுத்தியதற்க்கான காரணம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்வதற்காகவே.சீனாவின் கையிலிருந்த தேயிலை சந்தையை முறியடிக்க இந்தியாவில் வலிந்து தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. அதே போல இந்தியாவின் கையிலிருந்த மிளகு சந்தையை முறியடிக்க மிளகாய் அறிமுகப்படுத்தப்பட்டது.

வர்த்தகம் சார்ந்த லாப வெறியும் , திட்டமிட்ட நாசகார நோக்கமும் , அடிப்படையாக இருந்தாலும் அதன் பக்க விளைவாக பண்பாட்டு மாற்றங்களையும் நிகழ்த்தினர்.

ஆனால் சங்கீதத்தை பொறுத்தவரையில் இப்படியான இடர்பாடுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.இனிமைமிக்க இசையின் உட்புதைந்த நாதம் மனித மனங்களை ஆட்கொள்வது உலகப்பொதுமையாகும்.அது மட்டுமல்ல இசை என்பது வியாபாரப் பொருளாக மாறாதது அன்றைய காலம்.இயல்பாகவே மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கும்

சங்கீத மும்மூர்த்திகள் இந்த ராகத்தில் அதிக சாகித்தியங்கள் இயற்றவில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளதென்பர்.

ஆயினும் தமிழ் செவ்வியல் இசையில் ” தேசிக தோடி” என்கிற ராகத்தில் தியாகய்யர் எழுதிய ” நமோ நமோ ராகவாய ” என்ற கீர்த்தனை சிந்துபைரவி ராகத்திற்கு ஒத்துப் போகிறதேதென்கின்றனர்.

இந்த ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்களாக

01 வெங்கடா சலநிலையம் வைகுண்ட புற வாசம்
02 பங்கஜ நாம – சுவாதித் திருநாள் எழுதியது
03 சரணாகதி பாலனம்

தமிழில்..

01 கான ரீங்காரம் செய்யும் கருவண்டே –
02 கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கோடியே
03 அன்று இவ்வுலகம் அளந்தாயடி போற்றி
04 கருணை தெய்வமே கற்பகமே

போன்ற பாடல்களும் பிரசித்தமானவையாகும்.தமிழ் பக்திப் பாடல் வரிசையில்

“சின்னஞ் சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி ..”

என்று சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் பாடலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற பாடல் ஆகும்.

நாடக மேடையை பொருத்தவரையில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளால் இந்த ராகம் பயன் படுத்தப்பட்டுள்ளது.ஞான சுந்தரி நாடகத்தில் காட்டில் குழந்தையை கொண்டு விட்டு வரும்படி கூறும் இடத்தில்

” அய்யோ நான் என்ன செய்குவேன் ” என்ற பாடலும் ,

” இந்த மாதிரி செய்திடில் எங்கு சென்றிடுவாரடி ” என்ற பாடலும்

சிந்துபைரவியில் அமைந்ததென்பார் ஆய்வாளர் அரிமளம் பத்மநாபன்.

மத்தியகிழக்கு நாடுகளில் மட்டுமல்ல துருக்கி , அசபர்ஜான் போன்ற தெற்கு சோவியத் குடியரசுகளிலும் கேட்கலாம்.

மேலைத்தேய இசையில் மைனர் ஸ்கேல் [ Minor Scale ] அமைப்பை சேர்ந்த ராகம் சிந்துபைரவி.கிரீஸ் போன்ற மத்தியதரை நாடுகளிலும் இந்த ராகத்தின் சாயலை கேட்கலாம்.

நாடக மேடைகளில் பிரபல்யமான விளங்கிய ராகங்களில் சிந்துபைரவி மிகமுக்கியமானதாகும்.நாடக மேடைகளில் பயன்படுத்தப்பட்ட வாத்தியக் கருவியான ஹார்மோனியத்தை தொட்டாலே பிறக்கும் ராகம் சிந்துபைரவி ராகமே என்று நகைச்சுவையாகப் பேசும் அளவுக்குப் பிரபலமான இந்த சிந்துபைரவி.

எங்கள் ஊர்பக்கம் [ யாழ்/ வடமராட்சி பகுதிகளில் ] நாடக மேடைகளில் 1950. 1960 களில் அதிகம் பிரபலமான ராகங்களில் சிந்துபைரவி முதன்மையானது என்பதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்றாகும்.

பிறவி இசைக்கலைஞரான எனது பெரியப்பா [ க.குழந்தைவேல் ] பாடிப் புகழ் பெற்ற சில பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருந்தன.சிறந்த கர்னாடக இசைப்படகராக விளங்கிய அவரது இனிமையான பாடல் திறத்தால் , அவரை நாடக மேடைகளிலும் பாட வைத்தார்கள்.அவரது பாடல்களை இசை ரசிகர்கள் ரசித்துக் கேட்டார்கள்.குறிப்பாக நாடக ஆரம்பிப்பதற்கு முன்பும் இடைவேளைகளிலும் அவரது பாடல்களை மக்கள் ஆரவாரித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் என்பதை அந்தக் கால நாடக இசை ரசிகர்கள் நினைவு கூறுவார்கள்.

அதுமட்டுல்மல்ல ” குழந்தைவேலு பாடும் சிந்துபைரவி ராகத்தை நீ கேட்க வேண்டும்.அப்படி யாரும் ராகம் பாடி நான் கேட்டதே இல்லை” என்பார் சிறந்த கர்னாடக இசை ரசிகையும் , வல்வெட்டித்துறை , ஊரிக்காட்டை சேர்ந்த சங்கீத வித்துவான் நடராஜாவின் தங்கையான தங்கமணி மூத்தாட்டி.தங்கமணி ஒரு இசைப் பைத்தியம்.மார்கழி சீசனில் இந்தியாவில நடக்கும் வானொலிக் கச்சேரிகளில் யார் யார் எப்படி எல்லாம் ராகம் பாடினார்கள் கிலாகித்துப் பேசக் கூடியவர்.

அவரது அபிபிராய்பபடி குழந்தைவேலுவை ராகம் பாடுவதில் வெல்ல இந்தியாவிலேயே ஆள் இல்லை என்பதை ஒவ்வொரு ராகங்களைப்பற்றிப் பேசும் போதும் கூறுவதைக் கேட்டு ஆனந்தப்பட்டிருக்கின்றேன்.

எனது பெரியப்பா பாடிய வாசஸ்பதி ராகத்தைக் கேட்டு அசந்து போனவர்களில் தமிழ் நாட்டு நாதஸ்வரமேதை வேதாரண்யம் வேதமூர்த்தியும் அவர்களும் அடக்கம்.

அந்த வகையில் எனது பெரியப்பா பாடிய பாடல்களில் ” ஐயா..ஏழை யாருமில்லாத மாபாவி ஆனேன் ” என்ற பாடல் மிகப் புகழ் பெற்றது என்பார் எனது நீண்ட நாள் நண்பர் தர்மா.அவரது இளமைப் பருவத்தில் எனது பெரியப்பாவின் பாடல்களை தான் கேட்டிருக்கின்றேன் என்றும் இந்தப் பாடலை தன்னால் என்றும் மறக்க முடியாது என்றும் கூறுவார்.”அந்தக் குரல் என் காதுகளில் இன்றும் ஒலிக்கிறது ” எனபர தர்மா.

அதுமட்டுமல்ல சமஜமாஜக் கட்சியின் தலைவராக இருந்த தர்மகுலசிங்கம் என்பவர் மறைந்ததையிட்டு எனது பெரியப்பா பாடிய

” எங்கள் அருந்தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே ..” என்ற பாடலையும்

கிலாகித்துப் பேசுவார் என் இனிய நண்பர் தர்மகுலசிங்கம் என்று இயற்பெயரைக் கொண்ட தர்மா.

முன் அறிமுகம் இல்லாத நாம் டென்மார்க்கில் ஒரு ஹோட்டலில் சந்திக்க நேர்ந்தது.ஒரு சிலநாளில் நண்பர்கள் ஒன்று கூடலில் பாட்டு பாடும் போது நமக்குள் நல்ல அறிமுகம் ஏற்ப்பட்டது.எனது பெரியப்பாவை முன்பு அறிந்திருந்த அவர் தனது நினைவில் அரை குறையாக இருந்த பாடல்களைப் பாடிக் காண்பித்தார்.

” ஐயா..ஏழை யாருமில்லாத மாபாவி ஆனேன் ”
” எங்கள் அருந்தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே ..”

என்ற இரு பாடல்களையும் மனமுருகப் பாடிக்காண்பித்தார் தர்மா.மேற்ப்படி பாடலை கேட்க வாய்ப்பற்ற நான் இவை இரண்டு சிந்துபைரவி ராகம் என்று விளக்கினேன்.அதிலிருந்து அவரது அபிமானத்தை பெற்ற ராகமாகி விட்டது. சிந்துபைரவி.எடுத்த எடுப்பிலேயே எல்லோரையும் கவரும் சக்தி கொண்ட ராகம்.

இந்திய நாடகமேடைகளிலும் புகழ் பெற்ற சிந்துபைரவியை , சினிமாவிலும் புகழ் பெற வைத்தவர்கள் நாடகப் பரம்பரையில் இருந்து வந்த சினிமா இசையமைப்பாளர்களே!.

சினிமாவில் எத்தனை பாடல்கள் , எத்தனை பாவங்கள் , என பல தரப்பட்ட உணர்வுகளையும் அள்ளி , அள்ளி இறைத்திருக்கின்றார்கள்.நாட்டுப்பற இசை சார்ந்த பாடலாயினும் , செவ்வியல் இசை சார்ந்த பாடல்களாயினும் அழுத்தமான முத்திரைகளைப் பதித்த ராகம் சிந்துபைரவி.

சினிமாவில் சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடல்கள் சில:

01 ஆனந்தம் என் சொல்வேனே – படம் : சகுந்தலை 1940 – பாடியவர்: M.S.சுப்புலட்சுமி – இசை : துறையூர் ராஜ கோபால சர்மா – பாடலாசிரியர் :பாபநாசம் சிவன்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

தமிழ் திரையிசையின் ஆரம்ப கால இசையமைப்பாளரான ராஜகோபால் சர்மா இசையமைத்த அழகான சங்கதிகளைக் கொண்ட பாடல்.கதாநாயகி இய்றக்கை எழில் கண்டு பூரித்து பாடும் பாடல்.பின்னணியில் பறவைகளின் ஒலிகளையும் சேர்த்து இனிமை சேர்த்திருப்பது காட்சியின் பின்னணியை வெளிப்படுத்துகிறது.மாருதம் மனதில் வீசும் வகையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியிருக்கின்றார்.மகிழ்ச்சி பொங்கும் உணர்வுக்கு சிந்துபைரவிராகத்தை பயன்படுத்திய இசையமைப்பாளரின் திறன் வியக்க வைக்கிறது.

02 வதனமெ சந்திர விம்பமோ – படம் : சிவகவி – பாடியவர் : எம்.கே.தியாகராஜா பாகவதர். – இசை: ஜி.ராமநாதன் – பாடலாசிரியர் :பாபநாசம் சிவன்.
இனிமையான முன்னிசையுடன் ஆரம்பிக்கும் காதல் பாடல்.தியாகராஜபாகவதர் சங்கதிகளை அனாயாசமாப் பாடி அசத்திய பாடல்.தொட்ட இடமெல்லாம் இனிமை , இனிமை என்று சொல்லும் வகையில் பாடிய பாடல்.இரண்டரை நிமிசத்துக்குள் எத்தனை அற்புதமான சங்கதிகளை தாவித் தாவி செல்லும் வகையில் ஜி. ராமநாதன் வழங்கிய இசை அற்புதம் இந்தப்பாடல்.

மின்னும் மோகன கொடியிடையாள் ” என்ற வரிகளில் உச்சத்திர்க்கு செல்லும் போது சிந்துபைரவி உயிர் நிலையங்களை தாக்கும் சங்கதிகளை கொடுத்த ராமநாதனை பாராட்டுவதா அதை எழில் போங்க பாடிய தியாகராஜனை பாராட்டுவதா? காலத்தை வென்று சிந்து பைரவியின் புகழை நிலை நாட்டும் பாடல்.

03 பூமியில் மாநிட ஜென்மம் அடைந்தும் – படம் : அசோக்குமார் (1941) – பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர் – இசை : ஜி.ராமநாதன் – ஆலந்தூர் சிவசுப்ரமணியம் – பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
சத்திய ஞான தயாநிதியாகிய புத்தரின் போதனைகளை சிந்துபைரவி ராகத்தில் அழககாகப் போதிக்கும் பாடல். ஆற்றொழுக்கான இசையின் தியராஜபகவதரின் புகழ் பெற்ற பாடல்.

04 காசிநாதா கங்காதரா – படம் : ஹரிச்சந்திரா 1944 – பாடியவர்: P.U.சின்னப்பா – இசை: S.V.வெங்கட்ராமன்

05 கண்ணா நீ இல்லாமலே காணும் – படம் : பாரிஜாதம் (1950) – பாடியவர் :S.V.வெங்கட் ராமன்
இசை: S.V.வெங்கட் ராமன்

06 ஸ்ரீ தாமோதரா – படம்:சுதர்சன் (1951) – பாடியவர்: P.U.சின்னப்பா – இசை: G.ராமநாதன் – பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

07 எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு – படம்
: பிழைக்கும்வழி (1948) – பாடியவர் :D.K.பட்டம்மாள் – இசை:ஜி.அஸ்வத்தாமா

08 காற்றினிலே வரும் கீதம் – படம்: மீரா – பாடியவர் : M.S.சுப்புலட்சுமி – இசை: S.V.வெங்கட் ராமன்

காலமெல்லாம் நிலைத்திருக்கும் வகையில் இசையமைக்கப்பட்ட இனிமையான பாடல்.மென்மையாக பாடினாலும் இனிமை தரும் பாடல். சிக்கலான சங்கதிகளை வைக்காமல் மெல்லிசைப் பாங்கில் அமைக்கபட்ட பாடல்.வங்காளப் பாடல் ஒன்றின் தழுவல் என்று சொன்னால் இன்று யாரும் நம்ப மாட்டார்கள்.அந்த அளவுக்கு தமிழில் நிலைபெற்ற பாடல். எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மிகப் புகழை பெற்றுத் தந்த பாடல்.

09 கொஞ்சும் கிளியான பெண்ணை – படம் : கூண்டுக்கிளி (1954) – பாடியவர் : T.M.சௌந்தரராஜன் – இசை: K.V.மகா தேவன் – பாடலாசிரியர் :
விந்தன்
சரியா, தப்பாஎன்று கேள்வி கேட்கும் முற்போக்கு எழுத்தாளர் விந்தன் எழுதிய பாடல்களில் ஒன்று .

மண்ணும் பொன்னும் மாயை என்று
மக்களுக்கு சொல்லி விட்டு பெண்ணைப் பார்த்து கண்ணடித்தல் சரியா தப்பா …

தனக்கேயுரிய பாணியில் போலிகளை கேலி பேசி நம்மை விழிப்பூட்டும் பாடல்.இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற காலத்திற்கு முன்பே சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடிய பாடல்.கே.வீ. மகாதேவன் தந்த இனிமையான நாடகப்பாணிப் பாடல்.

10 இன்ப வருத்தமெல்லாம் – படம்: குல தெய்வம் – பாடியவர் – சி.எஸ்.ஜெயராமன் – இசை : ஆர். சுதர்சனம்

இன்ப வருத்தமெல்லாம் நிறைவாகி
இருக்கின்ற பெண்கள் நிலை-இங்
கிவ்விதமாய் இருக்குதண்ணே! இதில்
யாருக்கும் வெட்க மிலை!

என்று அழகான விருத்த பாணியில் தொடங்கும் பாரதிதாசன் பாடல். வாழ்விழந்த இளம் பெண்களின் துயரத்தை எண்ணி மனம் நொந்து பாரத்திதாசன் பாடிய அற்ப்புதமான பாடல்.மனம் உருகும் வண்ணம் சி ..எஸ்.ஜெயராமன் அற்ப்புதமான முறையில் பாடிய பாடல். பாடலில் பொருள் அறிந்தும் சிந்துபைரவியின் தன்மை அறிந்தும் மிகச் சிறப்பான முறையில் இசையமைக்கப்பட்ட பாடல்.

புரட்சிக்கவி பாரதிதாசனார் எழுதிய ” கைம்மைப் பழி ” என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளைக் கொண்ட பாடல்.தமிழ் விதவைப் பெண்களின் துயரநிலையை எடுத்துச் சொல்லும் பாடல்.

சீரற்று இருக்குதையோ குளிர் தென்றல்
சிறந்திடும் பூஞ்சோலை-சீ சீஎன்று
இகழ்ந்திடப் பட்டதண்ணே – நறுஞ்
சீதளப் பூ மாலை.

என உளம் நொந்து எழுதப்பட்ட பாடலுக்கு இசைமேதை ஆர். சுதர்சனம் அவர்களின் இசை கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது.கேட்கும் தோறும் கண்களின் கண்ணீரை வரவழைக்கின்ற உணர்ச்சி வெள்ளம் இந்தப் பாடல்.

11 மணப்பாறை மாடு கட்டி – படம் :மக்களைப் பெற்ற மகராசி (1957) – பாடியவர் : சௌந்தரராஜன் – இசை: K.V.மகா தேவன்

சோகத்தில் கொடி கட்டிப்பறக்கும் ஒரு ராகம் நாட்டுப்புற பாங்கிற்கும் சிறப்பான முறையில் பொருந்தும் ஒரு ராகத்தில் தனக்கே உரிய பாங்கில் இசை வழங்கும் கே.வீ.மகாதேவன் இசையமைத்த புகழ் பெற்ற பாடல்.நாட்டுப்புற தாளலயத்தில் நம்மை துள்ள வைக்கின்ற பாடலில் சிந்துபைரவியை அமர்த்திய மகாதேவன் தந்த அமர்க்களப் பாடல்.

12 சித்தமெல்லாம் எனக்கு சிவா மயமே – படம்: திருவருட் செல்வர் (1967) – பாடியவர் : T.M.சௌந்தரராஜன் – இசை : K.V.மகா தேவன்
சிந்துபைரவியில் மனமுருக பாடி இறைவனை கனிய வைக்கும் பாடல்.கரையாத மனத்தையும் கரைக்கும் வல்லமைமிக்க ராகத்தில் அமைத்து ரசிகப் பெருமக்களை கவர்ந்திழுக்கும் பாடல்.

13 ஒன்றானவன் உருவில் இரண்டானவில் – படம் :திருவிளையாடல் (1965) – பாடியவர் : K.B.சுந்தராம்பாள் – இசை: K.V.மகா தேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடும் திறனில் தனித்துவதுவமும் ,உணர்ச்சிப்பெருக்கும் காட்டும் கே.பி.சுந்தராம்பாள் உணர்ச்சி ததும்பப் பாடிய பாடல். ஒன்று , இரண்டு என்று எண்களை வைத்து கண்ணதாசன் விளையாடிய பாடல்.

14 மாயமே நான் அறியேன் – படம் : மிஸ்ஸியம்மா (1955) – பாடியவர் P.லீலா – இசை:S.ராஜேஸ்வர ராவ் – பாடலாசிரியர் :தஞ்சை ராமையாதாஸ்

மெல்லிசைப பிரவாகத்தில் பிறந்த பாடல்.மெல்லிசையில் சிந்துபைரவியை அமர்த்தி மனத்தைக் கரைய வைக்கும் வகையில் இசைமேதை எஸ்.ராஜேஸ்வரராவ் அமைத்த பாடல். 1950 களில் தனது இசையால் சிறப்பான இடம் பிடித்த பி.லீலா பாடிய சிறப்பான பாடல்.ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசையமைப்பை இன்றும் கேட்டும் வியக்கின்றோம்.வெண்ணிலாவை ராஜாவாக உருவகித்து பாடும் புதுமையும் தருகின்ற பாடல்.

15 என்னை யாரென்று எண்ணியெண்ணி – படம் : பாலும் பழமும் (1961) – பாடியவர் : T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன்

பாலும் பழமும் படத்தின் உணர்ச்சி மிக்க பாடல்களில் முதன்மையான பாடல்.படத்தின் விசித்திரமான சூழ் நிலைக்கு , பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்த போதும் வெளியே சொல்ல முடியாத ஒரு சூழ் நிலையில் பாடப்படும் பாடல்.
செனாய் என்ற வாத்தியத்தின் பயன்பாட்டை மிக நேர்த்தியாக மனமுருகும் வண்ணம் படைத்தளித்த மெல்லிசைமன்னர்களின் பாடல். மெல்லிசையில் முனைப்புக் காட்டிய இரட்டையர்கள் ராகத்தின் தன்மையறிந்து , சூழ்நிலைக்குத் தகுந்த வாறு , ராகத்தின் கனதி வெளியே தெரியாத வண்ணம் தந்த பாங்கு வியக்க வைக்கிறது. செனாய் வாத்தியம் அழாதவர்களையும் அழ வைக்கும் எனபதை இந்தப் பாடலில் அனுபவிக்கலாம்.

16 ஆனந்தம் சிவஞானம் தான் – பூம்பாவை 1954 – பாடியவர் கே.ஆர் :ராமசாமி –
நடிப்பிசைப் புலவர் என்று புகழ் பெற்ற ராமசாமி பாடிய நேர்த்தியான சிந்துபைரவி ராகப் பாடல்.சிவனின் புகழை நிலை நிறுத்தும் ஒரு பக்திப் பாடல். ஆங்காங்கே மனதை நெகிழ வைக்கும் சங்கதிகளை மிக நேரத்த்தியாக நிஜ வாழ்வில் நாத்திகத்தை வரித்துக் கொண்ட கே.ஆர். ராமசாமி அருமையாகப் பாடிய பாடல்.

17 நினைக்கத் தெரிந்த மனமே – படம் :ஆனந்த ஜோதி 1962 – பாடியவர்: P.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன்

சோக ரசம் ததும்பும் பாடல் ஒன்றுக்கு மீண்டும் சிந்துபைரவி ராகத்தை வேறு கோணத்தில் தந்த மெல்லிசைமன்னர்களின் சிறந்த பாடல்.குறிப்பாக செனாய் வாத்தியத்தை அதன் சிறப்பறிந்து உணர்ச்சி மேலிடும் வண்ணம் சங்கதிகளைப் போட்டு நம்மை வாட்டி எடுக்கும் படியாக அமைக்கப்பட்ட பாடல்.பொதுவாக வாத்தியக் கருவிகளை வாசித்த கலைஞர்களும் தங்கள் மேதாவிலாசத்தைக் காண்பித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

18 எங்கே நீயோ நானும் அங்கே – படம் :நெஞ்சிருக்கும் வரை 1967 – பாடியவர்: P.சுசீலா – இசை : விஸ்வநாதன் – கண்ணதாசன்.
வாழ்விலும் , தாழ்விலும் ஒன்றுபட்டு இருப்பதே தாம்பத்திய வாழவின் வெற்றி.ஆசைக்கனவுகள் உடைந்து நீறாகும் போது கலங்காமல் தன கணவனை நினைத்து உருகும் மனைவி , நம் இதயத்தை பிழியும் வண்ணம் பாடும் பாடல்.

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்
கண்ணில் நீரை காணாமல் கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன்.

என்று அன்பில் உருகுவதும்

காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும் .. என்று நம்பிக்கையும் தருகின்ற மனதை நெருட வைக்கின்ற பாடல்.மெல்லிசைமன்னரின் கற்பனை வளம் பிரமிக்க வைக்கும்.

19 சொன்னது நீதானா சொல் சொல் – படம் :நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 – பாடியவர்: P.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன்
தமிழ் சினிமாவின் மெல்லிசைத் திலகங்களாகிய விசுவநாதன் ராமமூர்த்தியின் இனிய இசையில் உண்டான பாடல். ஹிந்துஸ்தானி இசையின் மென்மையை அதற்கே உரித்தான வாத்தியங்களான ,சித்தார் , சாரங்கி போன்றவற்றை அளவறிந்து தந்த புத்துயிர்ப்பாடல்.பளிங்கு போன்று தொட்டால் மின்னும் சிந்துபைரவி ராகத்தில் ,அதன் சிறப்பம்சங்கள் அறிந்து மெல்லிசை வார்ப்பாக , சோக உணர்வு
பகைப்புலமாக விளங்கும் வண்ணம் தந்த கற்பனை செறிந்த உணர்வுப் பாடல்.
உணர்வில் சிகரங்களைத் தொடும் பாடல்களை மரபு ராகங்களில் தந்த மேதைகளாக விளங்கியவர்கள் மெல்லிசை மன்னர்கள்.கண்ணதாசன் + மெல்லிசைமன்னர்கள் + பி.சுசீலா என்ற கூட்டணியின் சாதனைப் பாடல்களை ஒன்று.
இந்தப்பாடலில் தபேல வாத்தியம் மிக வித்தியாசமான முறையில் கையாளப்பட்டுள்ளது என்பர்.இந்தப் பாடலுக்கு தபேலா வாசித்தவர் புகழ் பெற்ற தபேலா கலைஞரான சாகிர் குசைனின் தந்தை தபேலாமேதை அல்லா ராக்கா என்ற செய்தியும் உண்டு.[ இந்த செய்தி சரிதானா என்பதை அறிந்தவர்கள் கூறலாம்.]

20 ஆசை கனவு தான் பலிக்குமா – படம் :கோடீஸ்வரன் 1960 – பாடியவர்: P.சுசீலா – இசை : எஸ்.வீ.வெங்கட்ராமன்
தமிழ் சினிமாவின் முதல் இசையமைப்பாளர் என்று பெயர் எடுத்த எஸ்.வீ. வெங்கட்ராமன் தந்த இனிய , தனித்துவம் மிக்க மெல்லிசைப்பாடல்.
வேகமான தாள லயத்தில் சிந்துபைரவி மிக சொகுசாக அமர்ந்து நம்மை இன்ப வெள்ளத்தில் மிதித்தும் பாடல்.என்ன உற்சாகம் ! என்ன வேகம் ! அத்தனையையும் ஆற்றொழுக்காக தரும் லாவண்யம் என்ன ..! என்ற வியக்க வைக்கின்ற தேனமுதப்பாடல்.

அதனை சுசீலா தேனாகப்பாடியிருக்கின்றார் என்றால் மிகையான சொல் அல்ல.கேட்க , கேடகப் பரவசம் தருகின்ற பாடல்.

பொதுவாக அழுவதற்க்கே இந்த ராகத்தை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் பயன் படுத்திய அந்தக் காலத்தில் பரவசமாயும் இசையமைக்கலாம் என கோடிட்டுக் காட்டிய பாடல்.இடையில் வரும் வாத்தியங்களும் இணையில்லாத ஆனந்தத்தை அணையாக்கி இனபத்தை தருகிறது.

21 என்னை மறந்ததேன் தென்றலே – படம் :கலங்கரை விளக்கம் 1965 – பாடியவர்: P.சுசீலா – இசை: விஸ்வநாதன் -கவிஞர்: பஞ்சு அருணாசலம்

சிந்துபைரவியில் மெல்லிசைமன்னர் தந்த இன்னொமொரு இனிய பாடல்.நேரடியாக ராகம் தெரியாமல் அதன் தொனிப்புக்களிலே ராகத்தின் புதிய ஒரு பக்கத்தைக் காண்பிப்பது போல அமைக்கப்பட்ட பாடல்.விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இணை பிரிந்த பின் தனியே விஸ்வநாதன் இசையமைத்த பாடல்.செனாய் வாத்தியத்தின் பங்களிப்பு இந்தப்பாடலும் சிறப்பு சேர்த்திருகிறது.

22 எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர்கள் கூட்டம் – படம் :பாசமும் நேசமும் 1962 – பாடியவர்: P.B . ஸ்ரீநிவாஸ் – இசை: வேதா.
எளிமையான மெட்டிலும் , மென்மையான சங்கதிகளாலும் சோக உணர்வை வெளிப்படுத்தும் பாடல். பொருத்தமான பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மென்மையான குரலில் பாடிய எளிமையான பாடலிலும் சிந்துபைரவியை அனுபவிக்க இதமாக தந்தவர் இசையமைப்பாளர் வேதா.

23 துள்ளியே ஓடுமே வாழ்வுமே – படம் :வஞ்சம் – பாடியவர்: A.M ராஜா – இசை:டி. ஏ. கல்யாணம்
பழம் பெரும் இசையமைப்பாளர் டி. ஏ. கல்யாணம் இசையமைத்த பாடல்.அதிகமாக இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.அறியப்படாத
திரைப்படம் ஆயினும் இந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடல்.குதிரையின் வேகத்திற்கு ஈடு ஒடுக்கும் தாளத்தில் அமைக்கப்பட்ட பாடல்.
எதிர்பார்ப்பு, நம்பிக்கையுடன் பாடும் பாடலின் ஆழத்தில் சிந்துபைரவியின் குணாம்சமான மெல்லிய சோகத்தை அனுபவிக்கலாம்.

24 எந்தன் உள்ளம் துள்ளி விலையாடுவதெனொ – படம் :கணவனே கண் கண்ட தெய்வம் 1955 – பாடியவர்: P.சுசீலா – இசை: ஆதி நாராயணராவ்.
50 களில் வெளிவந்த புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று.புது தினுசாக சிந்துபைரவியை தந்த ஆதி நாராயண ராவின் கற்பனை வளமிக்க பாடல்.

25 அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் – படம் :அநாதை ஆனந்தன் 1969 – பாடியவர்: சீர்கழ்ழி கோவிந்தராஜன் – இசை: K.V.மகா தேவன் – கண்ணதாசன்

உணர்ச்சி செறிவும் , நெகிழிச்சியும் மேலிட K.V.மகா தேவன் தந்த இனிய பாடல். சீர்காழி அருமையாகப் பாடிய பாடல்.

26 ஏழுமலை வாசா எமை ஆளும் ஸ்ரீனிவாச – படம் :கனிமுத்து பாப்பா 1972 – பாடியவர்: P.சுசீலா – இசை : டிவி ராஜு. – பாடல் : பூவை செங்குட்டுவன்

28 மூட நம்பிக்கையாலே கேடு விளையும் மனிதா – படம் :ஜாதகம் 153 – பாடியவர்: P.B ஸ்ரீநிவாஸ் – இசை : ஈமனி சங்கர சாஸ்திரி.
P.B ஸ்ரீநிவாஸ் பாடிய முதல் பாடல். மூடநம்பிக்கைகளால் ஏற்ப்படும் கேடுகளை விளக்கும் பாடல்.

29 ஆசை மனதில் கோட்டை கட்டி – படம் :நம்ம வீட்டு தெய்வம் 1968 – பாடியவர்: P.சுசீலா – இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலின் ஆரம்பத்தில் வரும் கம்மிங் வேறு ஒரு ராகம் [ நடபைரவி ] கலந்து போவது போல் ஜாலம் காட்டி போகும் குன்னக்குடியின் சிந்துபைரவி பாடல்.சேனை வாத்தியம் துல்லியமாக சிந்து பைரவியை பறைசாற்றுகிறது.

30 உன் அன்பை தேடுகின்றேன் மாது எந்தன் ராணி வா வா – படம் : – பாடியவர்: P.ராஜா + P.சுசீலா – இசை

31 அமுத யோகம் வெள்ளிகிழமை – படம் :பாட்டாளியின் சபதம் 1960 – பாடியவர்: T.M.சௌந்தரராஜன் + P.லீலா – இசை : – இசை : வேதா
ஹிந்தி பாடலின் நேரடித் தழுவல் பாடல்.லாவகமும் , ஆற்றொளுக்காகவும் போகும் பாடல்.

32 தடுக்காதே என்னை தடுக்காதே – நாடோமன்னன் 1958 – சந்திரபாபு + ஜமுனாராணி – இசை: எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு.

தேசந்தோறும் ஜனரஞ்சகப் பாடல்களுக்கு இருக்கும் மவுசை தனது பாடலுடனும் நடிப்புடனும் இணைத்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.நடனக் காட்சிகளில் தனது தனித்துவத்தை காட்டிய சந்திரபாபு பாடுவதிலும் திறமைமிக்கவர் என்பதை தாளலயம் மிக்க இந்தப் பாடலிலும் நாம் காணலாம்.
நாட்டுப்புறப் பாங்கான பாடலில் சிந்துபைரவியை பொருத்திய பாங்கு இயல்பாகவும் அமைந்த பாடல்.

32 தந்தனா பாட்டுப்படணும் – மகாதேவி 1957 – சந்திரபாபு + ரத்னமாலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

மெல்லிசைமன்னர்களின் சிந்துபைரவி ராகத்தில் இன்னுமொரு நாட்டுப்புறப் பாங்கில் அமைந்த பாடல்.

33 காதல் எனும் சோலையிலே ராதே ராதே – படம் :சக்கரவர்த்தித் திருமகள் 1957 – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன் –

தமிழ் சினிமாவில் சோக காட்சிகளுக்கு அதிகம் பயன்பட்ட சிந்துபைரவி ராகத்தை இனிமைமிக்க மகிழ்ச்சி பாடலாக ஜி.ராமநாதன் தந்த அருமையான பாடல். வேகமும் , பிருக்காகளும் பொங்க சீர்காழி கோவிந்தராஜன் அனாயாசமாகப் பாடிய கம்பீரமான பாடல்.

33 சீர்மேவும் குரு பதம் – படம் :சக்கரவர்த்தித் திருமகள் 1957 – பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன் + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்

கேள்வி – பதில் பாடலில் பகுத்தறிவுக் கருத்துகளை பிரச்சாரம் செய்த பாடல்.நகைச்சுவைச் சக்கரவர்த்தி என்.எஸ்.கிருஷ்ணன் இணையில்லாத வகையில் நடிப்புடன் பாடிய பாடல்.ஜி.ராமநாதனி நாட்டுபுறப் பாங்கான இசை அபாரம்.

கோவிலை கட்டி வைப்பதெதனாலே
சிற்ப வேலைக்குப் பெருமைஉண்டு அதனாலே

என்று நாத்திக வாதிகள் தங்கள் கருத்துக்கு வலு சேர்க்கும் பாடல்.

34 குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் – படம்: மகாதேவி 1957 – பாடியவர் :T .M . சௌந்தரரராஜன் – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி – பாடல்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
ஒரு செய்தியை எடுத்துக் கூறுவதற்கும் சிறப்பான முறையில் பயன்படும் ராகங்களில் சிந்துபைரவி சிறந்தது என்ற பொருள் அறிந்து கொடுக்கப்பட்ட பாடல்.எம்.ஜி.ஆர் தனது படங்களில் நல்ல எடுத்துக் கூறுவதை முக்கியமாகக் கருதியவர்.
இந்தப்பாடலிலும் மிக நல்ல கருத்தை பட சூழ்நிலைக்கு ஏற்ப பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார்.

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் -மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் – பல
வரட்டு கீதமும் பாடும் – விதவிதமான
பொய்களை வைத்துப்
புரட்டும் உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா

என்று இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் எழுதிய பட்டுக்கோட்டையாரின் கைச்சரக்கை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.பாடல் என்றால் எதுகை , மோனையும் ,அலங்கார சொற்களும் மட்டும் போடாமல் சரியான பதப் பிரயோகங்களும் , கருத்துச் செறிவுடனும் எழுதிய இளம் மேதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

உருக்கமான மெட்டும் , ராகமும் ,அந்த மனோபாவத்திற்கு ஏற்ற வரிகளும் பாடிய முறையும் மனதை நெகிழ வைப்பதாக இருக்கும்.என் பால்ய வயதில் எனது அத்தையுடன் மகாதேவி படம் எத்தனயோ முறை பார்த்து அழுத பாடல்.

35 தாயித்து தாயித்து – படம்: மகாதேவி 1957 – பாடியவர் : T .M . சௌந்தரரராஜன் – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி – பாடல்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

மீண்டும் அதே படத்தில் இடம் பெற்ற பாடல்.இதுவும் ஒரு சேதியை கூறும் பாடல். மேலே சொன்ன பாடலில் சோகம் இழையோடியிருக்கும். ஆனால் இந்தப் பாடலில் கொஞ்சம் நகைச் சுவை கலந்திருக்கும் வண்ணம் இசையமைக்கப்பட்ட பாடல்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , மெல்லிசைமன்னர்கள் கூட்டணியில் அமைந்த வெற்றிப்பாடல்.

36 தெய்வம் இருப்பது எங்கே – படம்:சரஸ்வதி சபதம் 1967 – பாடியவர் :T .M . சௌந்தரரராஜன் – இசை: K .V . மகாதேவன் – பாடல்:கண்ணதாசன்
கே.வீ.மகாதேவன் தந்த இனிய பாடல்.

அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை .
இசையில் கலையில் கவியில்
மழலை மொழியில் இறைவன் உண்டு
இவை தான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு

என்று போலி ஆத்மீகவாதிகளின் தோலை உரிககும் கண்ணதாசனின் வரிகளைக் கொண்ட பாடல்.

37 திருடாதே பாப்பா திருடாதே – படம் :திருடாதே 1960 – பாடியவர்: T.M.சௌந்தரராஜன் – இசை: – எஸ்.எம். சுப்பைய்யாநாயுடு
சினிமா பாடல்களில் சமூகக் கருத்துக்களை தெளிவுடன் எழுதியவர் பட்டுக்கோட்டையார்.தான் சார்ந்த பொதுவுடமைக் கருத்துக்களை எல்லாப் பாடல்களிலும் வலியுறுத்தி எழுதினார்.எம்.ஜிஆருக்கு மட்டுமல்ல, எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரியாகவே எழுதினார்.எம்.ஜி.ஆர். பாடல்கள் புகழ் பெற்றதால் , எம்.ஜி.ஆருக்கு என்று பிரத்தியேகமாக எழுதினார் என்று தவறான கருத்து நிலவுகிறது.

இந்தப் பாடலும் சிந்து பைரவி ராகத்தில் அருமையாக அமைக்கப்பட்டு அருமையான செய்தியை கூறுகிறது.புது தினுசாக இசையமைத்த எஸ்.எம்.சுப்பைய்யனாயுடுவை பாராட்டல் தகுந்த செயல் தான்.

38 வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் – படம் :நான் பெற்ற செல்வம் 1955 – பாடியவர்: T.M.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன் – க.மு.செரீப்

ஜி.ராமநாதனின் தனித்துவமிக்க இசையில் உருவான பாடல்.கா.மு செரீப் என்ற அந்த நாளைய கவிஞர் எழுதிய கருத்தாழம் மிக்க பாடல்.பாடல் உச்சஸ்தாயியில் செல்லும் இடங்களில் ராமனாதனின் முத்திரை அழகாக விழும் பாடல்.காலங்ககளைக் கடந்து நிற்கும் வண்ணம் இசையும் ,பாடலும் ஒன்றித்துப் போகும் பாடல்.

39 எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ – படம் :சக்கரவர்த்தித் திருமகள் 1957 – பாடியவர்: எம்.எல்.வசந்தகுமாரி – இசை: ஜி.ராமநாதன்
பாடல் வரிகளுக்கேற்ப கோபாவேசம் பொங்க பாடும் பாடல்.

40 வாராய் என் தோழி வாராயோ – படம் :பாச மலர் 1961 – பாடியவர்: எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன்

மணப்பெண்ணை மணவறைக்கு அழைத்து வரும் பாடலை சிந்துபைரவி ராகத்தில் எத்தனை வண்ணங்களைக் கலந்து தந்து தமிழ் மக்கள் மனதில் நிலைத்து விட்ட மெல்லிசை மன்னர்களின் பாடல். சிந்துபைரவியில் இப்படி ஒரு பாடலா என்று வியக்கும் வண்ணம் , பலவிதமான உணர்வுநிலைகளையும் அள்ளி வீசும் எழில் மிக்க பாடல்.பாடலின் பின்னணி இசையிலும் பல புதுமைகளை செய்து காட்டிய மெல்லிசைமன்னர்களின் கற்பனை வளம் மிக்க பாடல்.
பாடலில் நாதஸ்வரம் , கைதட்டு போன்றவை மிகப் பிர மாதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.உணர்ச்சி வசப்பட வைக்கும் பாடல்.

41 இந்த வாழ்வு சொந்தமானால் – நல்லதங்காள் 1957 – திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை : ஜி.ராமநாதன்

“அறிவுள்ள அழகன் என மணவாளனாக அமைந்தான் ..” என்ற தொகையறாவுடன் ஆரம்பிக்கும் பாடல்.தொகையார முடிந்தது அருமையான ஹம்மிங்கும் துள்ள வைக்கும் தளத்திலும் ஒரு குதூகலக் காதல் பாடல்.அருமையான இசையமைப்பாளர் ஜி.ராமநாதனின் முத்திரைத் தாளமும் , அலாதியான கமகங்களும் நிறைந்த பாடல்.இந்தப் பாடலைக் கேட்க்கும் போதெல்லாம் என்னுள் உற்ச்சாகம் பொங்கி எழும்.

42 நிலவோ அவள் ஒளியோ – அருணகிரி நாதர் 1963 – டி.எம் சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை: ஜி.ராமநாதன்.

முன்பு சொன்ன பாடலில் துள்ள வைத்த ராமநாதன் மனதை வதைக்கும் வண்ணம் தந்த பாடல்.ஜி.ராமனாதனுக்கே உரிய பாங்கில் பாடல் அங்கங்கே உச்சசச்தாயிக்கும் போய் வரும்.

43 நெஞ்சினிலே நினைவு முகம் – சித்ராங்கி 1963 – டி.எம் சௌந்தரராஜன் + பி.சுசீலா + கே.ஜமுனாராணி இசை: வேதா

வேதா இசையமைத்த அழிக்கமுடியாத துக்கமயமான பாடல். மெல்லிசையின் இனிமையும் தடபுரளாத ராகத் துடிப்பில் நம்மை உள்ளார்ந்து வதைகின்ற பாடல்.

44 சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் – சம்சாரம் 1950 – ஏ .எம் ராஜா இசை: ஈமனி சங்கர சாஸ்திரி

ஏ .எம் ராஜா பாடிய முதல் பாடல்.சம்சாரத்தின் பெருமையை எடுத்துச் சொல்லும் பாடலிலும் தொனிப்புகளில் சோகத்தின் நிழலாட்டத்தைக் காண்பிக்கும் பாடல்.பாடலின் இடையே சிந்துபைரவி தனது மாட்சிமையை காட்டுகிறது.

45 கல்யாண சாப்பாடு போடா வா – படம்: மேஜர் சந்திரகாந்த் – பாடியவர்கள்: டி.எம் சௌந்தரராஜன் – இசை: வீ.குமார்

கானா பாடல் என்று இன்று ஏதோ சிலர் “கண்டுபிடித்த” பாடல்களின் முன்னோடி பாடல்.சிறப்பான பாடல்கள் தந்த மெல்லிசையில் வல்லமை மிக்க வீ.குமார் தந்த கானா பாடல்.

46 உனக்கென்ன மேலே நின்றாய் – சிம்லா ஸ்பெஷல் 1982 – எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

1980 களில் வந்த பாடல்களில் நவீன இசைக்கருவிகளுடன் மெல்லிசைமன்னர் தந்த அருமையான மேட்டமைப்புக் கொண்ட பாடல்.

47 ஒரு பொம்மலாட்டம் நடக்குது – படம்: – பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் – இசை: சங்கர் கணேஷ்

48 பந்தம் பாசபந்தம் – படம்:பந்தம் – பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் – இசை: சங்கர் கணேஷ்

49 தஞ்சாவூரு மண்ணெடுத்து – பொற்காலம்1997 – கிருஷ்ணராஜ் இசை: தேவா

பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தேவாவின் பாடல். மணப்பாறை மாடு கட்டி என்ற பாடலை நினைவூட்டுகின்ற பாடல்.

50 மார்கழி திங்கள் அல்லவா – சங்கமம் 1997 – எஸ். ஜானகி + உன்னிகிருஷ்ணன் இசை: ஏ.ஆர்.ரகுமான்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஒரு சில நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. ஓவர் ஆக்டிங் படத்திற்குத் தகுந்தது போல் அல்லாமல் எஸ்.ஜானகி யும் ,உன்னிகிருஷ்ணனும் அருமையாக , உள்ளத்தைத் தொடும் வண்ணம் பாடிய பாடல்.

51 அவள் வருவாளா அவள் வருவாளா – படம்: நேருக்கு நேர் – பாடியவர்கள்: ஹரிகரன் + சாகுல் ஹமீது – இசை: தேவா

இனிமையான பாடல். புதுமையாக ஒலித்த தேனிசைத் தென்றல் தேவாவின் புகழ் பெற்ற பாடல். பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்

இதுவரை சிந்து பைரவி ராகத்தில் எத்தனையோ சிறந்த இசையமைப்பாளர்கள் வகை, வகையாக வேள்வி நடத்தியிருக்கும் களத்தில் அவர்களையும் தாண்டி எத்தனை பாடல்கள், அதில் எத்தனை ,எத்தனை உணர்வுகளை அள்ளிக் கொட்டி , நம்மைத் திகைப்பில் ஆழ்த்தும் படைப்பாற்றல் மிக்க இசைஞானி தந்த சிந்து பைரவி ராகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களைப் பார்ப்போம்.

01. மாதா உன் கோவிலில் மனை தீபம் ஏற்றினேன். படம்: அச்சாணி 1978 – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

இசைஞானி அமைத்த ஆரம்பகாலப் பாடல்களில் ஒன்றாக விளங்கினாலும் அதில் நிறைந்த இசை முதிர்ச்சியைக் காண்பித்த உருக்கமான பாடல்.அசையாமல் நின்று உணர்ச்சிகளை அந்தரங்க சுத்தியுடன் பாடும் வல்லமை கொண்ட எஸ். ஜானகி இந்தப் பாடல் பதிவின் பாடும் போது மனமுடைந்து அழுததாக சமீபத்தில் இசைஞானி கூறியிருந்தார்.

மேரியின் அருளுக்காக உருகும் தாய்மை , நிஜமாகவே நம்மையும் உருக வைத்து விடுகிறது.

மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்றவா மாதா

என்ற வரிகளைப் பாடும் போது நாம் எவ்வளவு பாதிக்கபடுகிறோம் என்பதை வார்த்தையால் வர்ணிக்க முடிவதில்லை.இதயத்தை அறுத்தாலும் மனித மாட்சிமையை நிலை நிறுத்தும் பேரன்பு இழையோடும் பாடல்.

02. மாலை நேரக் காற்றே மௌன ராகம் ஏனோ . படம்: அகல் விளக்கு 1979 – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

நெருப்பிலே குளிக்க வைத்த ராமன் செய்த கொடுமை தன வாழ்வில் அனுபவித்தேன் என்று வஞ்சிக்கப்பட்ட பெண் பாடும் பாடல்.அது இசையால் நம் நெஞ்சங்களை ஊடுருவி மனமிரங்க வைக்கின்ற பாடல்.வாத்தியங்களில் சாரங்கி, கிட்டார் , வயலின்கள் என பல கருவிகள் பயன்பட்டாலும் துயரத்தில் நீந்த வைக்கும் குழலிசை அற்ப்புதமாகப் பயன்படுத்தப்படுள்ளது.

03. தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு . படம்: கடவுள் அமைத்த மேடை 1978 – பாடியவர்: பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை: இளையராஜா

வாத்தியங்களைப் பயன் படுத்தும் உத்தியம்சங்களில்
அனாயாசம் காட்டும் இசைஞானி ஹசல் அமைப்பில் வந்த சோகப்பாடல்.இசைஞானியின் இசையில் ஒரு சில பாடல்களே பாடிய ஸ்ரீனிவாஸ் தனக்கே உரிய பாங்கில் , நழுவி போகும் சங்கதிகளை அருமையாக பாடித் தந்த பாடல்.

04 . மணி ஓசை கேட்டு எழுந்து – படம்: பயணங்கள் முடிவதிள்ளில் 1983 – பாடியவர்: எஸ் .பி.பாலசுப்பிரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

மாதா உன் கோவிலில் பாடலின் சாயல் உள்ள பாடல். தமிழ் சினிமாவில் “கான்சர் “என்ற அலையடித்துக் கொண்டிருந்த காலத்தில் ,அந்த கொடிய நோயின் உக்கிரத்தை இசையில் மட்டும் தான் அனுபவித்தோம்.காட்சியமைப்பில் கொண்டு வரமுடியாத துன்பத்தை இந்தப் பாடலின் இசையில் இழைத்து , இழைத்து சோக சித்திரத்தை தீட்டி நம்மை உருக வைத்தவர் இசைஞானி.

05 . இளமை என்னும் பூங் காற்று – படம்: பகலில் ஒரு இரவு 1979 – பாடியவர்: எஸ் .பி.பாலசுப்பிரமணியம் – இசை: இளையராஜா

பாடலின் மைய்ய கருத்தை பற்றிப்பிடித்துப் போகும் இசை.இசை என்ற மாயமானைத் தன் எண்ணப்படி மடக்கி தான் நினைத்த இடத்தில் எல்லாம் கொண்டு சென்று தனது இசை ஆளுமையை நமது மனங்களில் பதிய வைத்த பாடல்.வியக்க வைக்கும் வாத்திய இசை எப்போது கேட்டாலும் நம்மை பரவசப்படுத்தும்.பாடல் வரிகளும் இசையும் ஒன்றுக்கொன்று அரவணைத்து உச்சம் எய்திய பாடல் இது.இசைஞானி செய்த பரிசோதனைகளில் சிந்துபைரவி ராகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இசை அற்புதம்.

கண்ணதாசன் ” கங்கை நதிக்கு மண்ணில் அணையா ” என்று கேட்பது இசைஞானியின் இசைக்கு அணையா என்று பொருத்தி பார்க்கலாம் என்பது போல பாடலின் 03:00 ஆவது நிமடத்தில் வயலின் இசை பொங்கிப் பாய்கிறது. எங்கள் பருவ வயதுகளை இசையில் படிய வைத்த இசைஞானியின் சிந்துபைரவிக்கு என் வணக்கம்.

06 . பூங் காற்று புதிரானது – படம்: மூன்றாம் பிறை 1979 – பாடியவர்: கே.ஜே .ஏசுதாஸ் – இசை: இளையராஜா

பழமையில் புதைந்து கிடக்கும் ராகங்களில் மேற்கத்தேய இசைச் செல்வமான arrangement என்று சொல்லப்படுகின்ற இசை வகையில் அவற்றை இழைத்து இசையின் லாவண்யங்களை காட்டுவதையே இயக்கு சக்தியாகக் கொண்டு செயலட்டவர் இசைஞானி.அங்கே மரபும் உண்டு . நவீனமும் உண்டு.

வயிலின்களின் உறுமலும் , கிட்டாரின் அதிர்வும் , புல்லாங் குழலின் நெளிந்து ,குழைந்து ஓடும் குறுகுறுப்பின் அழகும் இணைந்து நம் உயிர்களை தன் பாட்டோடு இணைத்து விளையாடிய புதிரான பாடல்.அதில் சிந்துபைரவியின் இணைப்பு அபாரம்.பாடலில் வரும் 03: 00 வது நிமிடத்தில் வயலினின் உறுமல் அலாதியானது.

பெருமைமிக்க சிந்துபைரவியை இலைமறைகாயாய் போடப்பட்ட மெட்டை கௌரவமிக்க முறையில் பாடி நம்மை கரைய வைத்திருப்பவர் தங்கக் குரலோன் ஜேசுதாஸ் அவர்கள்.

” என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிர் அன்றோ ..”

என்ற வரிகளில் உருக்கத்தின் நிறைவை , அழகிய சிற்ப்பத்தை தரிசிக்கும் நிறைவாகத் தருகின்றார் ஜேசுதாஸ்.

07 . பொம்மு குட்டி அம்மாவுக்கு – படம்: என் பொம்முகுட்டி அம்மாவுக்கு 1979 – பாடியவர்: கே.ஜே .ஏசுதாஸ் – இசை: இளையராஜா

பாசத்தை உயிர் நேசமாக வரித்துக் கொண்ட தம்பதியினர் தத்தெடுத்த குழந்தை பறி போய் விடுமோ வருந்தும் பாடல்.கண் மூடிக் கேட்கும் போது பல விதமான உணர்வுகளைத் தரும் இந்தப் பாடலின் அடிநாதம் வேதனையே. பரிதாபம் தேடி தருவதற்கு சிந்துபைரவியில் ஒரு இரக்கப் பாடல்.

08 . என்ன சத்தம் இந்த நேரம் – படம்: புன்னகை மன்னன் 1985 – பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

மௌன ரகசியம் பேசி உருகி , உருகி நெஞ்சைக் கசக்கிப் பிழியும் அவஸ்தையை தரும் பாடல்.நம் ஜீவன்களைத் தாலாட்டிய பாடல்.மௌனம் என்பது ஒரு மொழி என்பார்கள். இந்தப் பாடலில் மௌனத்தை இசையாக்கவும் முடியும் , அதோடு சேர்த்து வேதனையையும் கொடுக்க முடியும் என்று செய்து காட்டிய இசைஞானியின் உத்தியை எண்ணி எண்ணி வியப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

இசையின் நுட்பங்களை , வாத்தியங்களின் ஊடாட்டங்களை எளிமையாக்கி , அர்த்தமுள்ள சோதனை முயற்ச்சிகளாக்கி காட்டுவதில் இசைஞானி ஒரு மாயமான்.

இங்கே குறிப்பிடப்பட்ட அத்தனை உணர்வுகளை எல்லாம் களமாக்கிய ராகம் சிந்துபைரவி.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் தனக்குப் பிடித்தது என்று பாடகர் பி.ஜெயச்சந்திரன் கூறிய பாடல்.இன்னுமொரு நூற்றாண்டை எதிர் கொள்ளும் பாடல்.

09 பொன்னை போல ஆத்தா – படம்: என்னை விட்டு போகாதே – பாடியவர்: இளையராஜா

தமிழ் சினிமாவில் அம்மா பற்றிய பாடல்கள் பல வெளி வந்துள்ளன.அவற்றில் பழைய பாடல்களை எடுத்துக் கொண்டால் இலக்கண தமிழில் தாயின் பெருமையை போற்றுவதை கேட்டிருக்கின்றோம். இனபமான பாடல் என்றாலோ அல்லது துன்பமான பாடல் என்றாலோ அந்த வகையிலேயே அமைக்கப்பட்டன.

ஆனால் இந்தப் பாடல் ஒரு சாமானியன் பாடுவதாக அமைக்கப்பட்ட சிறந்தபாடல் எனலாம்.ஒப்பாரி இசையை ஒதுக்கிய ஒரு சூழலில் அந்த இசையின் உத்தி செறிவையும் , உள்ளடக்க செறிவையும் தந்து நம் உணர்வு நிலைகளை ஆழமாக தாக்கும் பாடல்.

பொன்னைக் கேட்கும் வாயில் சேலை கேட்ட ஆத்தா
நூலைக் கூட நானும் வாங்கித் தந்ததில்லை
அடி ஆத்தா …அடி ஆத்தா …

என்று பாடும் இடங்கள் மனதை கரைய வைக்கும் சிந்துபைரவியின் உச்சம் என்று கூறலாம்.

தாயைப் பற்றி இவ்வளவு உருக்கமான பாடல் இதுவரை வெளி வரவில்லை என்று அடித்துக் கூறலாம்.

சாமானியன் பாடுவதாக அமைத்து சிந்துபைரவி என்ற ராகத்தை சாமானியர்களும் நமது பாடல் என்று உணர வைத்த இசைஞானியின் சாதனைப் பாடல் இது.

10 நிலவே முகம் காட்டு – படம்: எஜமான் – -பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி

பிள்ளையில்லை என்று வருந்தும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் தேற்றும் பாடல்.பாத்திரங்களின் மனோபாவங்களை நுட்பமாக , உணர்ச்சி முனைப்புக்களாக தருவதில் தனக்கு நிகர் தானே என இசைஞானி நிரூபித்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்.சிந்துபைரவி ராகத்தை தனது இசைச் சிகரத்தில் ராஜா வைத்த பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.

கணவனின் பெருமையை மின்னல் போல வெட்டி மறையும் நினைவுகளாய் படத் தொகுப்பில் அருமையாக இணைத்து பாடலை அருமையாக படம் பிடித்திருக்கின்றார் படத்தின் இயக்குனர்.இந்த படத்தின் வேறு சில காட்சிகளிலும் மிக அருமையாக சிந்துபைரவி ராகத்தை பின்னணி இசையாக இசைஞானி அமைத்திருக்கின்றார்.

11 நான் ஒரு சிந்து காவடி சிந்து – படம் : சிந்துபைரவி 1985 – பாடியவர். சித்ரா – இசை: இளையராஜா

மனித அடையாளத்திற்கு சவால் விடும் கேள்வி ஒன்று அந்தரங்கத்தில் மனதை நிலை குலைய வைக்கும் நிலையில் , தான் யார் என்று சொல்ல முடியாத நிலையில் ஒரு பெண் பாடும் ஒப்பாரிப்பாடல்.பெற்றவள் யார் என்று தெரிகிறது, ஆனால் சொல்லக்கூடிய பின்னணியும் சூழ்நிலையும் அவளுக்கு இல்லை.

நெஞ்சை உலுக்குவதற்க்கென்றே அமைந்த ராகமான சிந்துபைரவி ராகத்தில் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத கோணத்தில் விசித்திரமான பாடலாகத் தந்து நம்மை குற்ற உணர்விற்குள் தள்ளி விடுகின்ற பாடல்.

இசைச் சிகரத்தில் இளையராஜாவை நிற்க வைத்த பாடல்களில் ஒன்று.எடுத்த எடுப்பிலேயே சித்ரா என்ற பாடகியை உச்சத்திற்குக் கொண்டு சென்ற பாடல்.

11 ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும் – படம்: எஜமான் – -பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி
– இசை: இளையராஜா

இன்பமாகப் பாடும் பாடலில் அதையும் மீறி துன்ப உணர்ச்சி இழையோடும் அற்ப்புதமான பாடல்.

12 செம்பகமே செம்பகமே – படம்: எங்க ஊரு பாட்டுக்காரன் – -பாடியவர்கள்: மனோ + ஆஷா போஸ்லே – – இசை: இளையராஜா

இசைச் சிருஷ்டியில் கற்பனையின் அற்ப்புதங்களை , அதன் கூர்மையை இசைஞானி படைத்தளித்த தருணங்களில் வெளிவந்த மனோகரமான பாடல்களில் இதுவும் ஒன்று. பரவசமாய் காற்றில் மிதக்கும் குயிலின் குரலில் மனம் லயிப்பது போல சிந்துபைரவியின் அந்தரங்கங்கள் நம்மோடு உறவாடச் செய்யும் பாடல்.நினைவுகளைப் பதிவாக்கி வைத்திருக்கும் உள்மனங்களை கிளறி அபூர்வ உணர்வைத் தருகின்ற பாடல்.மனதை விட்டு நழுவிச் செல்லாத வகையில் படைக்கப்பட்ட சிந்துபைரவி.

13 தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு – படம்: தர்மத்தின் தலைவன் – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + பி.சுசீலா -இசை: இளையராஜா

ஒரு ராகத்தில் புதிய , புதிய கோணங்களில் பாடலை வடிப்பது என்ற லட்சியத்துடன் செயல்படுவது என்று சபதம் செய்தது போல ஒவ்வொரு பாடலிலும் சிருஸ்டித்தன்மையில் அழகியில் வீச்சக்களை தந்த இசைஞானியின் இன்னுமொரு புதுத் தடத்தில் செல்லும் பாடல்.
பாசம் என்ற உணர்வுத் தளத்தில் வைத்து நம்மை உருக வைக்கின்ற மெட்டு.நவீனமாக வாத்தியங்களை தாவித் தாவி செல்லும் வகையில் அமைத்து அதில் உணர்வுகளை மனம் குழையும் வண்ணம் செய்வது இசைஞானியின் தனித்துவம்.இங்கே ராகம் மறந்து நமக்கு உணர்ச்சி தான் மேலிடுகிறது.அதற்க்கு தாவித் தாவிச் செல்லும் பியானோ ஒரு கருவியாக மட்டும் அனாசாயமாகப் பயன்படுத்தியிருப்பார் இசைஞானி.

14 வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது – படம்: சத்யா – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + லதா மங்கேஸ்கர் – இசை: இளையராஜா

காதல் வேகம் கருத்தின் வேகமாய் மாறி வாத்தியங்களும் ஒரு லயத்தில் விறு விறுப்புக் காட்டி , நழுவி , நழுவி ஓடுவது போல அமைக்கப்பட்ட பாடல்.சிந்துபைரவி ராகத்தை இன்னுமொரு புதிய விரிப்பில் கொண்டு சென்ற பாடல்.இசையில் மனக்கற்பனை வடிவங்களின் எல்லைகைகளுக்கு நம்மை அழைத்து செல்வதில் மட்டுமல்ல அர்த்தபுஸ்டியுடன் ராக சஞ்சாரங்களை என்னென்ன விதமாக கையாண்டால் ரசிகர்களின் மன நிலைகளை சிறைபிடிக்கலாம் என்ற சூத்திரம் தெரிந்த வல்லாளன் போல சிந்துபைரவி ராகத்தில் அந்தரங்க தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்.சிந்துபைரவிராகத்தில் இவ்வளவு சுகமான காதல் கீதமா என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை.

15 சோலைப் பசுங் கிளியே சொந்தமுள்ள பூங் கோடியே – படம்: என் ராசாவின் மனசிலே – பாடியவர்:இளையராஜா – இசை: இளையராஜா

சிந்துபைரவி ராகத்தில் எத்தனை எத்தனை சோகப் பாடல்கள்.சாமானியன் ஒருவனின் குரலாக ஒலிக்கும் இப்பாடல் ஆழ்ந்து நோக்கத்தக்க ஒப்பாரி இசை வடிவம்.இசைப் பண்பாட்டுத்தளத்தில் விடுபட்டுப் போயிருந்த ஒப்பாரி இசையை நவீன களத்தில் மீட்டெடுத்த பாடல்.இழப்பின் ஆன்மாவை நெஞ்சங்களை நீறாக்கும் வகையில் இசைஞானி தந்த பாடல்.உருகாதவர்களையும் உருக வைக்கும்.

16 முத்து மணி மாலை என்னைத் தொட்டு தொட்டு – படம்: சின்ன கவுண்டர் – பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் + பி.சுசீலா குழுவினர் – இசை: இளையராஜா

ஆனந்தம் வெள்ளமென பெருக்கெடுத்தோடும் குதூகலப் பாடல்.1990 களின் உச்சபாடல்களில் இதுவும் ஒன்று.மகிழ்ச்சி பாடலிலும் எங்கோ இதமான சோகமும் ஒழித்து வைக்கப்பட்ட பாடல்.”பின்னணி இசையின் ராஜா” தந்த மகோன்னதப்பாடல்.

17 மச்சி மனாரு மனசுக்குள்ளே பேயாரு – படம்: என்னுயிர்த் தோழன் – பாடியவர்:இளையராஜா + சித்ரா – இசை: இளையராஜா

கேலி கிண்டல் , நகைச்சுவை உணர்வுகளுக்கும் சிந்துபைரவி இசைந்து கொடுக்கும் ராகமாக இசைஞானி அமைத்த பாடல்களில் ஒன்று. மெட்ராஸ் தமிழில் காதல் ஜோடி பாடும் பாடல்.தனக்கு விரும்பிய உணர்வுகளை எல்லாம் எந்த ராகத்திலும் வைப்பேன் என்று நமக்கு உணர்த்தும் பாடல்.

18 வெள்ளிமணி கிண்ணத்திலே – படம்: தர்மத்தின் தலைவன் – பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் + மனோ – இசை: இளையராஜா

மேலே குறிப்பிட்ட அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் பாடல்.

புதிது புதிதாகப் படைப்பதில் சலிக்காத இசைஞானி தந்த இன்னும் பல பாடல்கள் சிந்து பைரவி ராகத்தில் உள்ளன. அவை.

20 புண்ணியம் தேடி காசிக்கு போவார் – படம்: காசி 2002 – பாடியவர்கள்: ஹரிகரன் – இசை: இளையராஜா

உருகாதவர்களையும் உருக வைக்கும் பாடல். இப்படி சொல்வதைத் தவிர வர்ணிக்க வேறு வார்த்தையில்லை.

20 மாமரத்து குயிலே – படம்: ராஜ ராஜ தான் – பாடியவர்கள்: இளையராஜா + சித்ரா – இசை: இளையராஜா

21 தென் பாண்டித் தமிழே என் சிங்கார குயிலே – படம்: பாசப் பறவைகள் 1987 – பாடியவர்கள்: ஜேசுதாஸ் + சித்ரா – இசை: இளையராஜா

22 நிலவு பாட்டு நிலவு பாட்டு – படம்: கண்ணுக்குள் நிலவு – பாடியவர்கள்: ஹரிகரன் – இசை: இளையராஜா

23 என் மன வானில் சிறகை விரிக்கும் – படம்: காசி 2002 – பாடியவர்கள்: ஹரிகரன் – இசை: இளையராஜா

24 தீராத விளையாட்டு பிள்ளை – படம்: காற்றுக்கென்ன வேலி – பாடியவர்கள்: – இசை: இளையராஜா

25 யார் தூரிகை தந்த ஓவியம் – படம்: பாரு பாரு பட்டணம் பாரு – பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

26 விரலில் சுத்தி மீட்டவா – படம்: நந்தவனத் தேரு – பாடியவர்கள்: – இசை: இளையராஜா

27 சேர்ந்து வாழும் நேரம் – படம்: தொடரும் – பாடியவர்கள்: – இசை: இளையராஜா

28 ஊருக்கொரு கட்சி – படம்: ரமணா – பாடியவர்கள்: – இசை: இளையராஜா

29 ராம் ராம் ஹே ராம் – படம்: ஹே ராம் – பாடியவர்கள்: குழுவினர் – இசை: இளையராஜா

தொடரும்…

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்
Exit mobile version