Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்

பலவகை பாவங்களை வெளிக்கொணருவது ராகங்களின் சிறப்பு. இருப்பினும் சில குறிப்பிட்ட உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்கு சில ராகங்கள் அதன் சிறப்பான அமைப்புக்களால் கையாளப்பட்டு வரப்படுகின்றன.

ராகங்களை விஸ்தாரமாகப் பாடும் கர்நாடக இசையில் , அதன் அழகுகளை காட்டும் மிக மிக அற்ப்புதமான ராகங்களில் ஒன்று.

கர்னாடக இசையில் இந்த ராகம் நல்ல முறையில் பயன் பட்டாலும் , அந்த அரங்குகளால் மறக்கடிக்கப்பட்ட ராகமும் , பின்னர் சினிமா இசையமைப்பாளர்களின் முயற்ச்சியால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட ராகமும் இந்த சாருகேஷி தான்.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்
அவரோகணம் : ஸ் நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ

இது ஒரு சம்பூரண ராகம்.

கர்நாடக் இசையில் தியாகய்யர் , சுவாதித் திருநாள் , முத்துச் சுவாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்கள் பாடல்கள் புனைந்து சிறப்பித்திருக்கின்றார்கள்.
ஆடமோடி காலதே – தியாகய்யர்

கிருபையா பாலையா – சுவாதித் திருநாள்

போன்ற பாடல்கள் மிகவும் சிறப்பானவை.

முத்துச்சுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் இதனை தரங்கிணி என அழைக்கின்றனர்.பாண என்றழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தில் இரண்டாவது ராகம்.இதனை கிரகபேதத்தால் வாசஸ்பதி , கௌரிமனோகரி , நாடகப்ப்ரியா போன்ற ராகங்கள் உருவாகும்.சாருகேஷி என்ற பெயரிலேயே ஹிந்துஸ்தானி இசையிலும் அழைக்கபடும் ராகம்.

நுனித்து நோக்கினால் இந்திய தவிர்ந்த வேறு நாடுகளிலும் அங்காங்கே கேட்கக் கூடிய ராகமாக சாருகேசி விளங்குகின்றது. குறிப்பாக பாரசீக நாடுகளில் புழக்கத்தில் உள்ளது எனலாம்.அரேபிய நாட்டுப்புற இசை யில் அதிகம் காணப்படுகின்ற ராகம் இது.

அதனால் தான் அரேபிய பற்றி கதைகளை படமாக்கும் அமெரிக்க, ஐரோப்பிய திரைத்துறையினர் இந்த ராகத்திலமைந்த இசையை பின்னணி இசையாக பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பாலைவனக் காட்சிகளில் இந்த ராகத்தின் சாயல்களில் அமைந்த பின்னணி இசையை Lawrence of Arabia [1962 ] , Harem [ 1986 ] போன்ற படங்களிலும் , மத்திய கிழக்கு பற்றிய விவரணப்படங்களிலும் தாராளமாகக் கேட்கலாம்.

அரேபியர்களின் ஆதிக்கம் ஸ்பெயின் வரை நீடித்ததன் விளைவாக இந்த ராக சாயல் இசை ஐரோப்பாவிலும் வழக்கத்தில் வந்திருக்கும் என ஊகிக்கலாம்.இனிமையும் , இரக்கமும் , எழுச்சியும் தும் இந்த ராகத்தின் தாக்கம் காற்றில் கரைந்த கர்ப்பூரம் போல ஐரோப்பிய நாட்டார் இசை வழக்கிலும் கரைந்திணைந்ந்திருக்கிறது.
ஐரோப்பிய உயர் இசையான [ செவ்வியல் இசை ] சிம்பொனி இசைமேதைகள் சிலரின் இசை வடிவங்களில் இந்த ராகத்தின் சாயல் இழையோடுவதை நாம் காணலாம்.

பிரான்ஸ் சூபர்ட் [ Franz Schubert ] என்கிற இசை மேதையின் படைப்பான

– Impromptu in C minor Op. 90, No. 1 – Allegro molto

மற்றும்

Caucasian Sketches – by Mikhail Mikhailovich Ippolitov-Ivanov என்கிற ரஷ்ய இசையமைப்பாளரின் படைப்பிலும் [ இந்த இசைக்கான மூலம் யோர்ஜியா மாநிலத்தின் நாட்டார் பாடல் என்பர் ] நாம் கேட்கலாம்.

ஹங்கேரிய ஜிப்சி இசையிலும் சார்கேசி ராகத்தின் ஜன்ய ராகமான வாசஸ்பதி ராகத்தின் தெறிப்புக்களை கேட்கலாம்.

ராகங்களில் பொதிந்து கிடக்கின்ற விண்டுரைக்க முடியாத இனிமையான பக்கங்களை எல்லாம் அமுதக் குழைவாகத் தந்தவர்கள் விந்தைகள் புரிந்த சினிமா இசையமைப்பாளர்கள் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல. அவர்கள் ராகங்களைச் சிறப்பாகக் கையாண்டு இணையற்ற பாடல்களைத் தந்திருக்கின்றனர்.

ரசங்கள் என்ற வகையில் தமிழ் சினிமாவில் சிருங்கார ரசம் என்றால் சாருகேசி ராகம் தான் அதனுடன் இறுகப் பிணைந்ததென்று கூறுமளவிற்கு எல்லா இசையமைப்பாளர்களும் பயன்படுத்தி வெற்றியடைந்திருக்கின்றனர்.

சாருகேஷி ராகத்தில் அமைந்த பாடல்கள் சில:

01 மன்மத லீலையை வென்றார் உண்டோ – படம் :ஹரிதாஸ் 1945 – பாடியவர் : எம்.கே.தியாகராஜா பாகவதர் – இசை : ஜி.ராமநாதன்

சாருகேஷி ராகம் என்றதும் பலரும் இன்றும் எடுத்த எடுப்பிலேயே உதாரணம் காட்டும் பாடல் இந்தப் பாடலே.ராகத்தின் குணங்ககள் கெடாமல் , அதே வேளை எல்லோர் வாயிலும் இந்த ராகத்தை முணுமுணுக்க வைத்த ஜி.ராமனாதனின் திறமை என்றென்றும் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

இந்த பாடலாலேயே இந்த ராகமும் புகழ் அடைந்தது.கர்னாடக மேடைகளில் அதிகம் பாடப்படாமலிருந்த இந்த ராகத்தை துணிவுடன் எடுத்தாண்ட இசைமேதை ஜி.ராமநாதன் , இந்த ராகத்தில் எவ்வளவு தோய்ந்திருந்தால் இது மாதிரியான ஒரு பாடலை தந்திருப்பார் என்ற வியப்பு மேலிடுகிறது.பாடிய தியாகராஜபாகவதரை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

கர்நாடக இசையுலகில் அதிகம் பயன்படாத அல்லது வித்துவான்களின் வாய்களிலே நுழையாத இந்த ராகத்தை எடுத்து பாமரனும் பாடலாம் என்று புகழ் பெற வைத்த பாடல். பாடல்.இந்த பாடலின் வெற்றியும் , அதனை இசையமைத்த ஜி.ராமனாதனையும் அவரது வீடு சென்று கர்னாடக இசை வித்துவான் செம்மங்குடி சீனிவாசய்யர் பாராட்டினார் என்பது இசையுலக வரலாறு.

இந்த பாடலின் வெற்றிக்கு பின்னர் தான் இந்த ராகத்தை செம்மங்குடி தனது கச்சேரிகளில் பாடத் தொடங்கினார் என்றும் அவர் தான் சுவாதித் திருநாள் கீர்த்தனையை[ கிருபையா பாலையா சௌரே ] புகழ் பெற வைத்தவர் என்றும் கூறப்படுகிறது.

02 ஆடல் காணீரோ – படம் :மதுரை வீரன் 1956 – பாடியவர் : எம்.எல் .வசந்தகுமாரி – இசை : ஜி.ராமநாதன்

சிருங்கார ரசம் கொட்டும் நாட்டிய இசைக்குப் பொருத்தமான ராகத்தில் இசைமேதை ஜி.ராமநாதன் அமைத்த அருமையான் பாடல்.பொதுவாகவே நாட்டியப்பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ராகங்களில் சார்கேசிக்கு முதலிடம் உண்டு.

03 வசந்த முல்லை போலே வந்து – படம் :சாரங்கதாரா 1957 – பாடியவர் : டி. எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்

மீண்டும் ஒரு நாட்டியப்பாடல். ” இந்தப்புற ஆட வேண்டும் என்றல் இளவரசர் பாட வேண்டும் ” என்ற முஸ்தீப்புடன் வரும் பாடல். எம்.கே.தியாகராஜா பாகவதர் பாடும் பாணியில் பாடி தன் இசை வாழ்வை ஆரம்பித்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு கன கச்சிதமாக அதே ராகத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்துக் கொடுத்து புகழ் சேர்த்த பாடல்.பாகவதரின் பாதிப்பை இந்தப் பாடலில் நாம் உணரலாம்.
04 உலாவும் தென்றல் நிலாவை பிரிவது – படம்: கோடீஸ்வரன் 1958 – பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை: எஸ்.வீ .வெங்கட்ராமன்
நாடக் மரபில் வந்த இசைமேதை எஸ்.வீ .வெங்கட்ராமன் அமைத்ததை இனிய பாடல்.பாடலை இனிமை பொங்கப் பாடிய ஏ.எம்.ராஜா., சுசீலா இணை பாடலின் மகுடம். சாருகேசியில் 1950 களிலேயே ஜோடிப்பாடல் தந்து அசத்தியவர் எஸ்.வீ .வெங்கட்ராமன்.

05 எந்தன் நல்ல தாயும் நீயம்மா – படம் : பெற்ற தாய் 1953 – பாடியவர்: கண்டசாலா – இசை: பெண்டலாய நாகேஸ்வரராவ்

மெல்லிசையின் வீச்சுக்களை தந்த முன்னோடி இசையமைப்பாளர் பெண்டலாய நாகேஸ்வரராவ்
தந்த மனதை நேரும் பாடல். தாயன்பின் எல்லையின்மையை , இதய வலி உண்டாக்கும் வண்ணம் தந்த விதம் அருமையிலும் அருமை.

06 விண்ணிலே தவழும் மதி – படம் :துளிவிஷம் 1954- பாடியவர் : கே . ஆர் .ராமசாமி – இசை :
பரவலாக அறியப்படாத இசையமைப்பாளர் கே.என்.தண்டபாணிப்பிள்ளை என்பவர் அமைத்த இனிமையான பாடல்.பாடி நடித்து புகழ் பெற்ற ராமசாமி அழகாகப் பாடிய சாருகேசி ராகப்பாடல். செவ்விசைப் பாணியில் ஆனந்தமாகப் பாடப்படும் அருமையான பாடல்.

07 இரவினில் வந்ததேனோ – படம் ராஜமகுடம் – பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் + பி.லீலா – இசை:மாஸ்டர் வேணு
சாருகேசி என்ற ராகப் பிரவாகத்தில் ,அதில் மறைந்திருக்கும் ரசங்களை நுணுகி அறிந்து பொருத்தமாக விரகதாபத்தை வெளிப்படுத்திய மகோன்னதமான பாடல்.
தன் சகபாடி இசையமைப்பாளர்கள் விதம் விதமாக பாடல்கள் தந்தாலும் அவர்கள் எல்லாம் வியக்கும் வண்ணம் உயிரினிக்கும் , இணையில்லாத , சுவைமிக்க பாடல் தந்தவர் இசைமேதை மாஸ்டர் வேணு என்பேன்..வார்த்தையால் சொல்ல முடியாத உணர்வை என்னுள் கிளர்த்தும் பாடல்.எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்.

08 வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே – படம்: நாட்டுக்கொரு நல்லவன் 1958 – சீர்காழி + பி.சுசீலா – இசை: மாஸ்டர் வேணு
இதயத்தை இதமாகாக வருடுகின்ற காதல் பாடல்.சாருகேசி ராகத்தை புதிய கோணத்தில் தரும் மாஸ்டர் வேணுவின் இன்னுமொரு அழகான பாடல்.

09 நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை 1958 – பாடியவர் : பி.லீலா – இசை : எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு
எல்லாவிதமான பாடல்களையும் பாடும் ஆற்றல் பெற்ற பி.லீலா பாடி அசத்திய பாடல்.குறிப்பாக செவியால் இசையில் அவர் பாடுவதே அலாதியானதாக இருக்கும்.சாருகேசி ராகத்தில் நெஞ்சை உருக்கும் வண்ணம் அவர் பாடிய அழகான பாடல்.

10 தூங்காத கண் என்று ஒன்று – படம் குங்குமம் 1962 : – பாடியவர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா இசை : கே.வீ.மகாதேவன்

கேட்கும் கணந் தோறும் நம்மை [எத்தைனையோ வருடங்களாக ] வாட்டிக்கொடிருக்கின்ற பாடல். உள்ளத்தை ஊடுருவி செல்லும் வகையில் சாருகேசி ராகத்தை உயர்த்தி ஆழ்ந்த சோக உணர்வை உள்ளம் கொள்ளை கொள்ளும் விதமாக அமைத்த கே.வீ.மகாதேவனின் ஆற்றல் மிக்க பாடல்.
ராகங்களின் நேரடித் தன்மை காட்டி நம்மை அலுக்க வைக்காமல் கதா பாத்திரங்களின் ஊடே உணர்வுகளை வெளிப்படுத்தி அந்த உணர்வுகளை , அந்த அனுபவத்தை ரசிகர்களிடமும் இழை பிசகாமல் தந்த கே.வீ.மகாதேவனின் மெல்லிசை அற்ப்புதம்.

11 நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும் – படம்: ராணிசம்யுக்தா 1962 – பாடியர்: பி.சுசீலா – இசை : கே.வீ.மகாதேவன்
சாருகேசி ராகத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இனிமையும் , கனிவும் கொண்ட மனதை வருடுகின்ற இதமான பாடல்.வழமை போல சுசீலா அவர்கள் மிக இனிமையாகப் பாடிய பாடல்.

12 யாரோ யாரோ – படம் அந்தமான் கைதி 1954 – பாடியவர்கள் : கண்டசாலா + பி.லீலா – இசை டி.கோவிந்தராஜுலு நாயுடு
மெல்லிசையின் கூறுகளில் புதுமை மிளிரும் அழகான பாடல்.மென்மையாகப் பாடியும் இனிமை சேர்க்கலாம் என்பதை நிரூபிக்கும் பாடல்.

13 நிலவே நீ தான் ஒரு வழி கூறாயோ -படம்: சின்னத்துரை 1952 – பாடியவர் :டி ஆர் .மகாலிங்கம் இசை : டி.ஜி. லிங்கப்பா
டி ஆர் .மகாலிங்கம் மூன்று வேடத்தில் நடித்த படம். இனிமையான் இந்தப்பாடலை இசையமைத்தவர் , இசையமைப்பாளர் டி.கோவிந்தராஜுலு நாயுடுவின் புதல்வராக டி.ஜி. லிங்கப்பா.அர்ப்புதமாகப் பாடும் மகாலிங்கம் சிறப்பாகப் பாடிய பாடல்.

14 பேசுவது கிளியா இல்லை – பணத்தோட்டம் 1963 – பாடியவர்கள்: சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை: விசுவநாதன் ராமமூர்த்தி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல அநாசாயமாக மிக பெரிய ராகங்களை எல்லாம் இன்ப வெள்ளமாக ஊற்றெடுக்கும் பாடல்களைத் தந்த மெல்லிசைமன்னர்களின் இனிக்கும் பாடல்.

15 ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு – படம் :எங்க பாப்பா 1966 – பாடியவர் : டி. எம்.சௌந்தரராஜன் + எம்.எஸ்.ராஜேஸ்வரி இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
மனதை நெகிழ வைக்கின்ற , மனதில் வெறுமையை ஏற்படுத்துகின்ற பாடல்.பற்றும் , பாசமும் பொங்கும் உணர்வை மெல்லிசையில் ஓர் இயக்கமாகவே நடாத்தியவர்கள் அந்தக் கால இசையமைப்பாளர்கள்.அதில் புதிய திசையை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

16 அம்மம்மா கேளடி தோழி – படம் கறுப்புப் பணம் 1964 : – பாடியவர் : எல்.. ஆர் .ஈஸ்வரி இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

செவ்வியல் இசையில் வெளிப்படையாக தெரியும் ராகங்களை மறைத்து ,அவற்றில் எழும் ஜீவன்களை மெல்லிசையாக்கி ராகங்களை புதிய கோணங்களில் தந்து மெருகூட்டியவ்ர்கள் மெல்லிசை மன்னர்கள்.

காபரே நடன பின்னணியில் இரு பெண் பாத்திரங்கள் பாடும் பாடலாக அமைக்கப்பட்ட அதி உன்னதமாக விரகதாபத்தை வெளியிடும் பாடல்.சாருகேசி ராகத்தில் இப்படி ஒரு பாடலா என்று வியக்க வைக்கும் பாடல்.

எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்களில் மிகவும் சிறப்பான பாடல்.கவிஞர் கண்ணதாசன் தயாரித்த படத்தில் இடம் பெற்றதால் , மெல்லிசை மன்னர்களிடம் எல்.ஆர்.ஈஸ்வரி தான் பாட வேண்டும் என்று கூறி பாட வைத்த பாடல். பி.சுசீலா தான் பாட வேண்டும் என்பது இசையமைப்பாளர்களின் கருத்து.தயாரிப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன் ” எல்.ஆர்.ஈஸ்வரி பாடவில்லை என்றால் வேறு இசையமைப்பாளர்களை நியமித்து விடுவேன் ” என்று கூறியதால் எல்.ஆர்.ஈஸ்வரி பாட நேர்ந்தது.

பி.சுசீலா ஒருமுறை கூறியது போல ” பழைய பாடல்களை யார் பாடினாலும் நன்றாக இருக்கும் ” என்பதை நிரூபிக்கும் வகையில் எல்.ஆர்.ஈஸ்வரி மிக மிக அருமையாகப் பாடிய பாடல்.

17 தென்றலில் ஆடை பின்ன – படம் கண்ணே பாப்பா 1972 : – பாடியவர்: பி.சுசீலா இசை : விஸ்வநாதன்
ராகத்தின் வெவேறு தெறிப்புக்க்ளில் பாத்திரங்களின் தடுமாற்றம் ,சோகம் வேதனை எத்தனை எத்தனை உணர்வுகளை தந்து படைப்புலகின் சிகரத்தில் நின்று மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்.

18 அழகிய தமிழ் மகள் இவள் – படம் ரிக்ஷாக்காரன் 1972 : – பாடியவர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா இசை : விஸ்வநாதன்

ஆரம்ப புல்லாங்குழல் இசையின் குழைவிலேயே சாருகேசியின் இசை அற்ப்புதத்தைக் காட்டும் பாடல். அந்த இசையின் குழைவை பாடல் ” தென்றலில் ஆடை பின்ன ” பாடலின் இறுதியில் வரும் சில வினாடிகள் வரும் குழைவிலும் அனுபவிக்கலாம்.புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் கோரஸ் இசை சௌந்தர்யத்தை பிணைக்கும் விசித்திர ஓவியங்கள் ஆக விரிந்து மாஜாஜாலம் காட்டிச் செல்பவை.

பாடலில் வரும் ” நீல விழி பந்தல் நீயிருக்கும் மேடை ” என்ற வரிகளை நா.காமராசன் ” பந்தல் வேறு மேடை வேறு ” என்று பொருந்தாத வரிகள் என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.

19 மூன்று தமிழ் தோன்றியதும் – படம் பிள்ளையோ பிள்ளை 1972 : – பாடியவர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா இசை : விஸ்வநாதன்

சாருகேசியின் செவ்வியல் இசைத் தோற்றம் சற்று வெளிப்படையாகக் காட்டும் பாடல்.சாருகேசியின் இனிய சங்கதிகளை சீவியல் இசை சாந்த அசைவுகளுடன் அள்ளித் தந்த பாடல்.

20 பாட்டோடு ராகம் இங்கே – படம்: அக்கா தங்கை – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் – இசை : விஸ்வநாதன்
சோக ரசத்தை பிழிந்து சாருகேசியின் இனிமையுடல் கலந்து வரும் பாடல்.விதம் விதமான ராக அசை போடும் மெல்லிசைமன்னரின் யூகித்து அறிய வைக்கும் சாருகேசி பாடல்.
16 நடந்தாய் வாழி காவேரி – படம்: அகத்தியர் – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் – இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
தனித்துவமும் இனிமையும் வேகமும் ஒன்று சேர பாடல்களைத் தரும் குன்னக்குடி வைத்தியநாதன் இனிமையான சாருகேசி பாடல்.

21 காற்றினிலே பெருங் காற்றினிலே – படம்: துலா பாரம் 1969 – பாடியவர் : கே.ஜ யேசுதாஸ் – இசை :ஜி.தேவராஜன்
சொல்லொணாத் துன்பத்தை சுமந்து வரும் இசை.மனதில் வெறுமையையும் ,விரக்தியையும் , ஆறுதலையும் ஒன்று சேரத் தரும் பாடல்.” பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை ” என்பது போல வஞ்சிக்கப்பட்ட பேதையின் துயரத்தை வெளியிடும் பாடல்.

பாலை நிலமும் , மொட்டை மரங்களும் வறண்ட வாழ்வின் குறியீடாகப் படக் காட்சியில் காண்பிக்கப்படுகிறது.அந்த ராகத்திலேயே அந்த தன்மை இருப்பதை மிக நுட்பமாக ஜி.தேவராஜன் தனது இசையிலும் கொண்டுவந்திருக்கின்றார்.சார்கேசி பாலைவனப் பிரதேசத்திற்கு நன்கு ஒத்து போகும் ராகம் என்கிற என் எண்ணத்தை இந்தப் பாடலில் நிரூபிக்கின்றார் இசை மேதை ஜி.தேவராஜன்.மத்திய கிழக்கு பகுதிகளில் மிகுதியாக ஒலிக்கும் ராகம் இது.

22 சந்திர திசை பார்த்தேன் தோழி – படம்: கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1981 – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

இஸ்லாமிய பெண் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.சாருகேசியில் அமைக்கப்பட்டது என்ன தற்செயலானதா?இந்த பாடலும் என்னை வசீகரிக்கின்ற பாடல்களில் ஒன்று.
23 என் வேதனையில் உன் கண் இரண்டும் – படம்: யார் நீ 1968 – பாடியவர்: சுசீலா – இசை: வேதா
எப்படிப்பட்ட பாடல் . எப்படிப்பட்ட இசை என்று வியக்க வைக்கும் பாடல்.மெல்லிசைமேதை மதன் மோகன் ஹிந்தியில் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவம்.துயரத்தை தேக்கி வைத்து கொட்டி தீர்க்கும் பாடல்.வார்த்ததையில் விவரிக்க முடியாத துயரம் தோய்ந்த பாடல்.

இங்கே எத்தனை இசைமேதைகள எத்தனை விதமாக சாருகேசி ராகத்தில் தந்த பாடல்களில் மனம் சொக்கிய நாம் , இதற்க்கு மேலும் ஒரு கற்பனை வளம் இருக்குமா என்று எண்ணத் தக்க வகையிலும் திகைக்கும் வண்ணமும் பாடல்கள் தந்து சென்றுள்ளார்கள்.

இந்த ஆச்சரியங்களை எல்லாம் ஒரு நொடியில் தவிடு பொடியாக்கியது போல மக்கள் இசை என்னும் நாட்டுப்புற இசையின் பாதிப்பிலிருந்து பிறந்தது ஒரு இசையருவி.மலையில் உருவாகும் அருவி சுழித்து வேகத்துடன் வருவது போல , துணிவுடன் புறப்பட்ட இசையருவி நம் இசை வாழ்வையே மாற்றியது.அது மரபையும் நவீனததையும் பிணைத்து அந்நிய இசை உறவுமுறைகளில் மன அதிர்ச்சி தந்து புண்ணாக்காமல் , மாறாக பிற மக்களின் இனிய பண்புகளில் இழையோடிக்கிடக்கும் இசைச் சிறப்புக்களை எல்லாம் , முன்னோர்களிடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்ற இசைச் செல்வங்களுடன் இணைத்து இசையில் புதிய தரிசனங்களை தொட்டுக்காட்டி பாமரர்களை மட்டுமல்ல பண்டிதர்களையும் வியக்க வைத்தது.அந்த இசையருவி அன்னக்கிளி என்ற மலை முகட்டிலிருந்து இறங்கியது.இசையருவி தந்த சாருகேசி ராகப்பாடல்களை இனி பார்ப்போம்.

01 உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வைச்ச கிளி – படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 – பாடியவர் : எஸ் .பி பாலசுப்ரமணியம் – இசை : இளையராஜா
பொருந்தாத திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி பாமரனின் உள்ளக் குமுறல் சாருகேசி ராகத்தில் எங்கள் உள்ளங்களைத தாக்கி கண்களை குழமடைய செய்கின்ற பாடல்.

02 சின்னஞ் சிறு கிளியே சித்திர பூ விழியே – படம் முந்தானை முடிச்சு 1983 – பாடியவர் : எஸ் .பி பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
நாயகி விரக்தியின் உச்சத்தில் பாடும் பாடல்.ஒன்றுபட முடியாத மனங்களின் போராட்டம் பாடலில் வேதனையாக வெளிப்படும் பாடல்.நம் இதயங்களையும் இதமாக வருடும் இசை.

03 உயிரே உயிரின் ஒளியே – படம் என் பொம்முக்குகுட்டி அம்மாவுக்கு 1985 – பாடியவர் : கே .ஜே யேசுதாஸ் + சித்ரா – இசை : இளையராஜா

பெற்ற பிள்ளையை பறிகொடுத்த இரு உள்ளங்களின் இதயக் குமுறல்.குமுறலும் அதை ஆற்றுவதும் நம் நெஞ்சங்களை அறுக்கிறது.
” தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் – சொந்தம் ஒன்று
மன்றம் அதில் வந்ததென்ன
சொர்க்கம் ஒன்று பூமி தன்னில் கண்டது போல்
இன்பங்களை தந்து விட்டு சென்றதென்ன “

என்று அவள் குமுறுவதும்

” துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணையேது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும் “

அவன் தேற்றுவது நம்மையும் வாட்டுகிறது.

04 சின்னமணி பொன்னுமணி – மல்லு வெட்டி மைனர் 1990 – பாடியவர்கள் :கே .ஜேஏசுதாஸ் + உமா ரமணன் + சித்ரா – இசை: இளையராஜா
சாருகேசியின் எல்லையற்ற ஆற்றலை விரித்து நாட்டுபுற இசையில் குழைத்து தரும் இசைஞானியின் துயர் பாடல்.இடையிசையில் ஒலிக்கும் புல்லாங் குழல் மனதை தடவிக் கொடுக்கும்.

05 மயங்கினேன் சொல்ல தயங்கினேன் – நானே ராஜா நானே மந்திரி – பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் + சுசீலா – இசை: இளையராஜா
சாருகேசியின் இனிய காதல் பாடல். பின்னணி இசையின் லாவகமும் எல்லையற்று தரும் இசையும் ராகத்தை அழகு செய்யும்.

06 சிறிய பறவை சிறகை விரிக்கிறதே – அந்த ஒரு நிமிடம் 1985 – பாடியவர்கள் : பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
கற்பனையின் உச்சம் என்று சொல்லக்கூடிய இசைப்படைப்பு. மெல்லிசையின் இனிமையும் , செவ்வியல் இசையின் செம்மையும் , மேலைத்தேய இசையின் ஆற்றல் பெருக்கமும் ஒன்றிணைந்து எல்லையற்ற இனிமையை தந்து ராகத்தின் பெருமையை பேரொளி வீசச் செய்கின்ற பாடல்.பலவகை இசை வடிவங்களை அனாசாயமாகக் கலந்து ஒன்றை ஒன்று உறுத்தாது தரும் இசை மந்திரவாதி இளையராஜாவின் கற்பனை உச்சம்.

07 ஆடல் கலையே தேவன் தந்தது – ராகவேந்திரா 1985 -பாடியவர்கள் : கே .ஜேஏசுதாஸ் – இசை: இளையராஜா

ஜி.ராமநாதனுக்கு ” ஒரு வசந்த முல்லை போலே வந்து ” பாடல் என்றால் இசைஞானிக்கு இந்தப்பாடல். செவ்வியல் இசையிலும் மரபின் வளமிக்க இசை வடிவங்களை குறைஎதுமின்றி கொடுக்கவும் தன்னால் முடியும் என்றும் , தன முன்னோர்களின் வழியில் நின்று , அவர்களின் படைப்புக்களில் உத்வேகம் பெற்று , அவர்களின் இனிய இசைக்கு ஈடாக , பாலா சமயங்களில் அவர்களுக்கு மேலாக தன்னாலும் கொடுக்க முடியும் என நிரூபித்த பாடல்.ஈடு இணையற்று ஏசுதாஸ் பாடிய சிருங்கார ரசமிக்க பாடல்.

08 காதலின் தீபம் ஒன்று – தம்பிக்கு எந்த ஊரு 1986 -பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
புது தினுசாக சாருகேசியை பயன்படுத்திய பாடல்.ராகத்தின் தெறிபபுக்களில் பரவசம் தரும் பாடல்.இசைப் பசி எடுக்கும் ரசிகர்களுக்கு வித விதமாகப் பரிமாறி ருசிகளின் பல வகைகளை காண்பிக்கும் கைவல்யக்காரன் இசைஞானியின் அற்ப்புதமான பாடல்.

09 பெத்த மனசு பித்ததிலும் – என்ன பெத்த ராசா 1986 -பாடியவர் : இளையராஜா – இசை: இளையராஜா
சருகு பொருக்கி வந்து
சாதம் வடித்து தந்து
பசியே தெரியா மகனாய் வளர்த்த தாயை பற்றிய பாடல்.

10 மணமாலையும் மஞ்சளும் சூடி – வாத்தியார் வீட்டுப் பிள்ளை 1990 – பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா
ஒரு ராகத்திலேயே எத்தனை எத்தனை வகைப் பாடல்களை ஒருவரால் கொடுக்க முடியும் என்று வியக்க வைக்கும் படைப்பாற்றல்.ஒரு குதூகலப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப்பாடல்.

11 வானத்திலே வெள்ளிரதம் – படம் :எங்க ஊரு மாப்பிள்ளை – பாடியவர்கள்: மனோ + சித்ரா – இசை: இளையராஜா
இனிமையான காதல் பாடலாக இசையமைக்கப்பட்டாலும் மனதை வாட்டுகின்ற ஒரு சோக இழை பாடல் பாடல் முழுவது தொடர்வது மனதை வருடுவதாக அமைந்து இதம் தரும் பாடல்.கீபோட் இசைக்கருவியின் இனிமையை அங்காங்கே படர விட்ட பாடல்.

12 அரும்பாகி மொட்டாகி – படம் :எங்க ஊரு காவல்காரன் – பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி + சுசீலா – இசை: இளையராஜா
சாருகேசி ராகத்தில் எத்தனை எத்தனை இன்பம் தருகின்ற பாடல். பின்னணி இசையில் லாவண்யங்கள் காட்டும் பாடல்.இரண்டாவது தலைமுறையினருடன் சுசீலா பாடிய அருமையான பாடல்.

13 நல்லதோர் வீணை செய்தே – படம்: மறுபடியும் – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
எளிமையான் வாத்திய இசை கொண்ட பாடல்

14 நாடு பார்த்ததுண்டா – படம்: காமராஜர் – பாடியவர் : இளையராஜா – இசை: இளையராஜா
நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல். பெருந்தலைவர் காமராஜருக்கு இசைஞானியின் இசை அஞ்சலி இது.

15 தூது சொல்வதாரடி – சிங்காரவேலன் 1990 – பாடியவர் : எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
மிக மிக அருமையான சாருகேசி.

16 தென்பாண்டிசீமை தமிழ் கொடுத்த தாய் – படம் : நாடோடி பாட்டுக்காரன் 1990 – பாடியவர் : கங்கை அமரன் – இசை: இளையராஜா
தங்கு தடையில்லாத ஆற்றோட்டமிக்க தாய்ப்பாசம் பற்றிய பாடல்.கங்கை அமரன் அழகாகப் பாடிய பாடல்.

17 சக்கரக் கட்டி சக்கரக் கட்டி- படம் :உள்ளே வெளியே – பாடியவர்கள்: பாலசுப்ரமணியம் _+ எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
துள்ளிசைக்கும் சாருகேசி எப்படி இன்னிக்கும் என்று சாதிக்கும் பாடல்.

18 அம்மா நீ சுமந்த பிள்ளை – படம் :அன்னை ஓர் ஆலயம் 1979 – பாடியவர் : சௌந்தர்ராஜன் – இசை: இளையராஜா

19 சின்ன பொண்ணு சேலை – படம் :அறுவடை நாள் 1987 – பாடியவர் : இளையராஜா – இசை: இளையராஜா

சமீப காலத்தில் வெளியான சாரூகேசி ராகத்தில் அமைந்த பாடல்கள்:

01 ஏதோ ஏதோ ஒன்று – படம் : எனக்கு 20 உனக்கு 18 2003 – பாடியவர்கள்: ஹரிகரன் + சித்ரா – இசை: ஏ.ஆர்.ரகுமான்
அருமையான மேட்டுக் கோடா இனிமையான் சாரூகேசி ராகப்பாடல்.பின்னணி இசையில் தடுமாறும் பாடல். இருப்பினும் சாருகேசி இனிக்கின்றது.

02 உதயா உதயா உளறுகிறேன் – படம் : உதயா 2004 – பாடியவர்கள்: ஹரிகரன் + சாதனா சர்க்கம் – இசை: ஏ.ஆர்.ரகுமான்
ஹசல் பாணியில் அமைந்த மக அருமையான மெட்டு .பாடியவர்கள் மிக மிக அருமையாகப் பாடிய பாடல்.சில இடங்களில் பின்னணி இசை கொஞ்சம் ஆரவாரத்தை குறைத்திருக்கலாம் என எண்ண வைக்கும் பாடல். மேல் சொன்ன பாடலுக்கு இந்த பாடலுக்கும் அதிக ஒற்றுமை உண்டு.

03 தைய்ய தா தைய்ய தா – படம் : திருட்டுப்பயலே – பாடியவர்: சாதனா சர்க்கம் – இசை: பரத்வாஜ்
மனதைத் தொடுகின்ற அழகான சார்கேசி.பல இனிமையான பாடல்களை தந்தவர் பரத்வாஜ்.

பிற மொழிகளிலும் சாருகேசி ராகத்தை மெல்லிசை வார்ப்புக்களில் அற்ப்புதமாக தந்து நம்மை மகிழ்வித்திருக்கின்றார்கள்.சில ஹிந்திப் பாடல்கள்.

01 Bainya Na Dharo – FIlm : Dastak (Old) 1965 – singer : Lata Mangeshkar – Music : மதன் மோகன்

02 Aap Kyon Royen – Film : Woh Haun Thi 1964 – Singer: Lata Mangeshkar – Music: Madhan Mohan
இந்த 2 பாடலையும் இசை அற்ப்புதம் என்று சொல்ல வேண்டும். இதே பாடல் தான் தமிழில் யார் நீ படத்தில் ” என் வேதனையில் ” என்று சுசீலாவும் அற்பபுதமாகப் பாடினார்.

03 Dheere Dheere Subah Huyee – Haisiyat (1984) – Singer: K.J.Yesuthas – Music: Bappi Lahiri

பாடலின் அர்த்தம் புரியாமலேயே துன்பத்தில் என்னையும் என் நண்பன் தேவனையும் உருக வைத்த பாடல். குறிப்பாக தேவன் என்ற என் நண்பனைப் பாதித்த பாடல்.

மலையாலப்பாடல்களில் குறிப்பாக ” சர்க்கம் ” படத்தில் ” ஜேசுதாஸ், சித்ரா இணைந்து பாடிய ” கிருஷ்ண கிருபா சாகரம்” என்ற பாடல்.

தொடரும் …

[ தொடரும்..]

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்
Exit mobile version