Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்

தமிழர்களின் இசைக்கலையின் தொன்மையைப் பறைசாற்றும் இனிமைமிக்க ராகங்களில் ஒன்று சுத்ததன்யாசி.பழந் தமிகழத்தில் இந்த ராகம் இளிப்பண் என அழைக்கப்பட்டது.மருத நிலத்திற்குரிய ராகமாயினும் காடுசார்ந்த பிரதேசத்திற்கும் உரிய ராகம் எனக் கருதப்பட்டும் வந்துள்ளது.

இசைஆய்வாளர் திரு.நா.மம்மது அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

“மருத நிலத்திற்குரிய சிறுபண் சுத்ததன்யாசி, இது ஆம்பல் குழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆம்பல் குழல் என்ற வார்த்தையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் “ஆம்பலம் தீங்குழல் கேளாமோ தோழி” என்று கூறுகிறார். ஆம்பல் குழல் என்பது இன்று சுத்த தன்யாசி ராகமாக இருக்கிறது.”

சிலப்பதிகாரம் ஆச்சியர் குரவையில் வரும் பாடல் இது.

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! – ஆச்சியர் குரவை.

சங்க இலக்கியத்தில்
“ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” (குறிஞ்சிப்பாட்டு: 222)
என்றும்

அறிவனார் இயற்றிய “பஞ்சமரபு” என்ற பழந்தமிழ் இசைநூலில் வண்ணங்களைப் [ பாடலகளை ] வகுத்துச் சொல்லும் போது ” ஆம்பல் வண்ணம் ” என்ற குறிப்பையும் தருவது மனம் கொள்ளலாம்.பஞ்சமரபு தரும் வண்ணங்கள் சில:

1. பத்திய வண்ணம்
2. சித்திர வண்ணம்
3. ஆம்பல் வண்ணம்
4. பாத்திப வண்ணம்
5. குவளை வண்ணம்

இந்த ராகம் குறித்த செய்தி ஒன்றை இசைஞானி தனது நூல் ஒன்றில் குறிப்ப்ட்டிருக்கின்றார்.தனது மேற்கத்திய இசை குருவும் , பியானோ ஆசிரியருமான தனராஜ் மேலைத்தேய இசைத் துணுக்குகளை வாசித்து விட்டு ,” இது சுத்ததன்யாசி ராகம் என்றும் , சிலப்பதிகாரத்தில் இளங்கோ இன்ன இடத்தில் இந்த ராகத்தைப் பாடுவார் என்று பாடியும் காண்பிப்பார் ” என்ற குறிப்பை தருகின்றார்.

அது போலவே ஒரு இசை நிகழ்ச்சியில் சி.ராமச்சந்திரா இசையமைத்த ஹிந்தி பாடல் [ நிருதையே ப்ரீதம் ] பற்றிய குறிப்பிட்டு பேசும் போது , இந்தப்பாடல் காடும் ,காடும் சார்ந்த இடத்திற்கும் பொருத்தமாக ராகத்தில் சகுந்தலை பாடுவதாக அமைந்த பாடல் என்று தகவலையும் கூறினார்.

உயர்ந்த பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் இந்த இராகங்கள் உயர்பீடத்திலிருந்து வந்த தனி ஒரு மனிதனின் மூளையில் உதித்தவையல்ல.புராதன மனிதர்களில் இசையை நேசித்த குலமரபு கொண்ட மக்களின் கூட்டு முயற்சியில் பரிணமித்ததனவாகும்.

காலத்திற்குக் காலம் ராகங்களின் பெயர்கள் வெவேறு விதமாக அழைக்கப்பட்டு வ்நதாலும் அவற்றின் அடிப்படை
அம்சங்கள் மாறாமல் தொடர்ச்சியாகப் பாதுகாத்து வந்த பெருமை பிற்காலத்தில் “இழிகுலத்தோர் ” என இகழப்பட்ட மக்களின் விடாப்பிடியான பற்றுதலின் பயனாய் கிடைத்ததாகும்.இன்று அந்த இசையை தமது சொந்தம் என்று கொண்டாடி பிழைப்பு நடத்துபவர்கள் சூழ்ச்சிகள் மூலம் கைப்பற்றிக் கொண்டவர்கள்எனபது கசப்பான வரலாறு.

தமிழ் செவ்வியல் இ சையில் ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்களில் இதுவும் ஒன்று.ஹரிகாம்போதி ராகத்தின் சேய் ராகங்களில் ஒன்று.கிரக பேதத்தால் விளைந்த ராகங்களில் ஒன்று.இந்த விபரங்களை இந்தக் கட்டுரையின் ஆறாவது பகுதியில் காணலாம்.

ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள் உலகத்தின் பல பாகங்களிலும் ஒலிக்கின்ற ராகங்களாக இருப்பதால் , குறிப்பாக கிழக்கு ஆபிரிக்க நாடான சூடான் நாட்டுப்புற இசையில் மிகுந்து காணப்படுகின்ற ராகமாக இது விளங்குகின்றது.
இந்த ராகத்தை முத்துச்சுவாமி தீட்சிதர் வழிவந்தவர்கள் உதயரவிச்சந்திரிகா என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.

இந்த ராகத்தின்
ஆரோகணம் :ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம் :ஸ் நி2 ப ம1 க2 ஸ

01 நாராயாணா நின் நாம தஸ் மரனேய – புரந்தர தாசர்

இந்த பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி பிரபல்மாக்கினார்.

02 எந்தநீசினா எந்த யுசினா – தியாகய்யர்

03 சுப்ரமண்யே ந ரட்சிதோ – முத்துசுவாமி தீட்சிதர்

போன்ற பாடல்கள் கர்நாடக் இசையுலகில் பிரபலமானவை.

ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தை தனி [ Dhani ] என்று அழைக்கின்றனர்.

அதி மனோகரமான ராகங்களில் ஒன்றாக விளங்குவதால் , மக்களை மயக்கும் தன்மை மிகுந்ததால் திரை இசையமைப்பாளர்களும் இதனைப் பெருமளவில் பயன்படுத்தி பெருமை சேர்த்திருக்கின்றார்கள்.மொழி எல்லைகளைக் கடந்து இந்திய திரை இசையை வளப்படுத்திய ராகங்களில் இதுவும் ஒன்று.

மனதை மயக்கும் பல பாடல்கள் நமது தமிழ் சினிமாவிலும் வெளிவந்து நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டுள்ளன.இனி சுத்ததன்யாசி ராகத்தில் அமைந்த பாடல்களை பார்ப்போம்.

01 கண்ணா வா மணி வண்ணா வா – படம்: ஹரிதாஸ் 1955 – பாடியவர்: என்.சி.வசந்தகோகிலம் – இசை:ஜி.ராமநாதன்

அழகான முன்னிசையுடன் ஆரம்பித்து புதுமணம் பரப்பி ,மனதில் புத்துணர்ச்சியுடன் குழலூதும் ஆயனை அழைக்கும் பாடல்.

02 சரச மோகன சங்ககீதாம்கிருத – படம்: கோகிலவாணி 1995 – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் – இசை:ஜி.ராமநாதன் – பாடலாசிரியர் : எஸ்.டி. சுந்தரம்

தித்திக்கு தீந் தமிழில் சிந்தையிலே எழும் ஜீவலயமாக காற்றின் அலைகளில் தேன் மழை தூவும் ஜி.ராமநாதனின் அமரசங்கீதம் என்றால் மிகை இல்லை.முன்னோர்களின் பாரம்பரிய இசைச் செல்வத்தை வைத்து அவர் கட்டிஎளுப்பியஇசைக் கோபுரம்.சீர்காழி கோவிந்தராஜன் இனிப்பாகப் பாடிய பாடல்.

மனதிற்கு நிம்மதி தரக்கூடிய பாடல் என்று சொல்லத் தக்க பாடல்.நல்ல இசை .தெளிவான வார்த்தை.நிகரில்லாமல் பாடப்பட்ட பாடல்.இசையின் சிறப்பை அழகாக சொல்லும் பாடல்.

இன்று சந்தைச் சரக்காகி சிதைந்து தொங்கும் “புயல் இசை” படைக்கும் , “பாடல் “என்ற பெயரில் கடை விரிக்கும் “இசையில்லாத இசையை ” அன்றே விமர்சனம் செய்தது போல எழுதப்பட்ட அற்ப்புதமான பாடல் வரிகள் இதோ :

சந்தையிலே விற்கும் பொருள் அல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான் கவி சுகக் குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீதம் [ பாடலாசிரியர்: எஸ்.டி.சுந்தரம் ]

யாரோ ஒருவரது பாடல்களை வெட்டி ஒட்டி வித்தைகள் புரியும் கையாலாகாதவர்க ளின் “திறமை”யை அன்றே விமர்சித்தது போல எழுதப்பட்ட பாடல்.

ராகத்தின் இனிமை காலங்களைக் கடந்தும் நிற்கிறது.ஒரு மனி கச்சேரி என்று கூடச் சொல்லலாம்.

03 விண்ணில் வாழும் தேவனோ – படம்: மந்திரவாதி 1955 – பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் + ஜிக்கி – இசை: லக்ஷ்மன் பிரதர்ஸ்

தமிழ் திரை இசையின் முதல் இரட்டையர்கள் என்று பெயர் பெற்ற இரட்டையர்கள் இசையமைத்த அற்ப்புதமான காதல் பாடல்.மேலைத்தேய இசையின் மென்மையை ஆனந்த ராகமாக மன ஓடையில் நீந்தச் செய்யும் பாடல்.கேட்கும் போதெல்லாம் பரவசம் தருகின்ற மெல்லிசை வார்ப்பு.

04 என் சிந்தை நோயும் தீருமோ – படம் : காவேரி 1956 – பாடியவர்: ஜிக்கி – இசை: ஜி.ராமநாதன்

05 ஜீவிதமே சபலமோ – படம் : அனார்க்கலி 1956 – பாடியவர்: ஜிக்கி – இசை: ஆதி நாராயணராவ்

இந்த இரண்டு பாடலும் ஒரே பாடல் மெட்டைக் கொண்டவை. ஹிந்திப்பாடல்களின் இனிமை என்ற ஆதிக்கத்திற்கு ஆளான பாடல்.ஜி.ராமநாதன் , ஆதி நாராயணராவ் போன்ற மாபெரும் இசையமைப்பாளர்கள் கூட ஹிந்தி பாடல்களை அப்படியே பயன்படுத்த பணிக்கப்பட்டார்கள்.இரண்டு பாட்லகளையும் பாடியவர் அருமை பாடகி ஜிக்கி.ஹிந்தி ப்பாடலின் நேரடியான மெட்டமைப்பைக் கொண்ட சாகாவரம் மிக்க பாடல்.நல்ல
மெட்டுக்களை தமிழ் பாடல்களாக்கி நல் இசையை அறிமுகம் செய்தமை இதன் விளைவால் கிடைத்தவையாகும்.

06 வ வா வா வளர்மதியே வா – படம் : வணங்காமுடி 1958 – பாடியவர்கள்:வசந்த குமாரி – இசை : ஜி.ராமநாதன்.

சிரமத்தில் திகழ்வது சீவக சிந்தாமணி
செவிகளில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
கண் கண்ட ஐம்பெரும் காவியத்திலகமே

என்ற அற்ப்புதமான விருத்தத்துடன் ஆரம்பிக்கும் சுத்ததன்யாசி இனிமையில் தோய்ந்த பாடல்.
செவ்வியல் இசை வித்தகி வசந்தகுமாரி ஜி.ராமநாதன் இசையில் பாடினால் கேட்கவும் வேண்டுமா? அந்த அருமையான் இணைப்பில் வெளிவந்த பாடலமுத துளிகளில் ஒன்று இந்தப்பாடல்.

07 கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே – படம்: கர்ணன் 1964- பாடியவர்: பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் கற்பனை வளத்திர்க்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளத்தில் பரிவையும் , இனிமையையும் அள்ளி வீசும் பாடல். மக்களின் இதயங்களின் ஆழத்தில் உள்ள இசையுணர்ச்சியைக் கிளறி விடும் பாடல்.விரகதாபத்தை சிறப்பாக வெளிக்கொணரும் பாடல்.

06 நீயே எனக்கு என்றும் நிகரானவன் – படம் : பலேபாண்டியா 1962 – பாடியவர்கள்:சௌந்தரராஜன் + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
மெல்லிசை மன்னர்கள் செவ்வியல் இசைப்பாங்கில் நகைச்சுவைப்பாடலாக அமைத்து ஆச்சரியப்படுத்திய பாடல்.

08 தொட்டால் பூ மலரும் – படம் : படகோட்டி 1964 – பாடியவர்கள்:சௌந்தரராஜன் + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசையில் ராகங்களின் கனம் தெரியாமல் , இசையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி இனிமைக்கு முதலிடம் தந்த மேதமை கேட்க்கும் போதெல்லாம் வியக்க வைக்கும்.

சில மூளை மழுங்கிய பைத்தியங்கள் சீர்துலங்கும் இது போன்ற பாடல்களை எடுத்துக் கொண்டு குதறி , நல் இசையை நாசமாக்கும் கடையூழியில் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.இசை மரபுகளில் கட்டி எழுப்பிய மெல்லிசைச் சிற்ப்பங்களை அடித்து நொறுக்கும் இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?இசையை படு மொட்டையாக்கும் அயோக்கியத்தனத்திற்கு எத்தனையோ மூளைக்கோளாறுகள் வக்காலத்து வாங்குவது அதை
விடக் கொடுமை.

09 கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் – படம்: மகாகவி காளிதாஸ் 1966 – பாடியவர்:சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை :மகாதேவன்
அழகான விருத்தத்துடன் ஆரம்பிக்கும் கம்பீரமான பாடல்.காளிதாசன் பாடுவதாக அமைந்த இந்தப் பாடலின் பின் பகுதி ராகமாலிகையாக நிறைவுறுகிறது.ராகங்களின் ஜீவனில் உயிர் துடிப்பு மிக்க பாடல்களைத் தந்த திரை இசைத் திலகம் மகாதேவன் பாடல்.

10 மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட – படம்: உங்கள் விருப்பம் 1974 – பாடியவர்:கோவை சௌந்தரராஜன் +எல்.ஆர்.அஞ்சலி – இசை :விஜயபாஸ்கர்
சௌந்தரராஜனின் நகல் கோவை சௌந்தரராஜன் பாடிய பாடல். 1970 களில் நல்ல பாடல்களைத் தந்த இசையமைப்பாளரான விஜயபாஸ்கர் இசையமைத்த வித்தியாசமான பாடல்.

பழைய மரபு ராகங்களிலிருந்து புதிய கோணங்களில் பாடல்கள் தந்து அவற்றிற்குப் புது அர்த்தங்கள் உண்டாக்கும் உணர்ச்சி ஓவியங்களை தீட்டுவதில் வல்லவர் இசைஞானி இளையராஜா.அவரது பாடல்களில் பழமை புதுமெருகு பெற்று மின்னும் வண்ணம் பாடல்கள் தந்து தனது இசை ஆளுமையை நிறுவியவர் இளையராஜா.அது அவரது இசை நுண்ணறிவுக்கு சான்றாக விளங்குகின்றது.தலைமுறையாகவும் , வழிமுறையாகவும்
நம் முன் விரிந்து கிடக்கும் , இவை “நமது சிறப்புரிமை ” என்று போற்றத் தக்க , உயிரோட்டம்மிக்க , நளினம் மிக்க ராகங்களில் பாடல்களைத் தந்து தமிழ் சினிமா இசைக்கு பெருமை சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் இசைஞானி.

பாரதிதாசன் பாரதியார் பற்றி சொன்னது போல ” நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா ” இசைஞானி.

சுத்ததன்யாசி ராகத்தில் அவர் இசையில் பாட்டமுத அருவிகள் ஊற்றெடுத்தது போல பாடல்கள் பிறந்தன.ஒரு இசையமைப்பாளனுக்கு இத்தனை கற்பனை வளமா என்று வியக்க வைக்கும் படியாக பாடல்களை தந்த இசைத் திறனை என்னென்பது!
மற்றைய இசையமைப்பாளர்கள் இந்த ராகத்தில் ஒரு சில பாடல்களையே தந்தார்கள் என்ற ரீதியில் இளையராஜா இசையின்பம் குன்றாமல் பாடல்கள் தந்த விதம் வியக்க வைப்பதாகவும்.

அவரது பாடல்களின் எண்ணிக்கையும் ,அதன் தரத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால் அவர் ஞானக் கடல் என்பது புரியும். இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த சுத்ததன்யாசி ராகப் பாடல்கள்:

01 மாஞ்சோலைக்கிளி தானோ – படம்:கிழக்கே போகும் ரயில் 1978 – பாடியவர்: ஜெயச்சந்திரன் – இசை: இளையராஜா
ஆரம்பம் முதல் முடிவுவரை சிக்கலான தாளக் கட்டுமானத்தை தழுவி நிற்கும் பாடல்.ஜெயச்சந்திரன் அனாசாயசமாகப் பாடி அசத்திய பாடல்.ராகங்களில் மட்டுமல்ல , சிக்கலான தாளங்களை அமைத்து பாடலின் செழுமைக்கு மதிப்பு கொடுக்கும் இளையராஜாவின் கட்டுக் கோப்பான பாடல். சமீபத்தில் “எங்கேயும் எப்போதும் ராஜா ” என்ற இசை நிகழ்ச்சியில் ஹரிகரன் பதற்றத்துடன் பாடியதைக் கேட்ட போது
ஜெயச்சந்திரன் பாடியதை எண்ணி வியக்க நேர்ந்தது.எப்படிப்பட்ட பாடல் ! சுத்த தன்யாசி ராக அமைதியில் தோய்தத்தெடுக்கப்பட்ட தேன் பாடல்.புழுதியில் விளையாடிக்கொண்டிருந்த எங்கள் இளமைக்காலங்களை இது போன்ற புது இசை மழையில் தோய்த்து எமது நினைவுத்திரையில் நிழலாட செய்த பாடல்.

02 சிறு பொன்மணி அசையும் அதில் – படம்:கல்லுக்குள் ஈரம் 1978 – பாடியவர்கள்:: இளையராஜா + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
சுத்ததன்யாசி ராகத் தெறிப்பில் மின்னும் பாடல்.ராகத்தின் இனிமைக்கூறுகளில் நம்மை ஒட்டவைத்து , அவற்றிற்கு நாட்டுப்புற சாயங்களை மெல்லத் தடவி கலைசுவையில் நம்மை சொக்க வைக்கும் வாத்திய இணைப்புக்களை கலை நயத்துடன், உயிர்களை வசப்படுத்தும் விதத்தில் தந்து ஆச்சரியப்படுத்தும் பாடல்.

03 காலை நேரக் காற்றே – படம்:பகவதி புறம் ரயில்வே கேட் 1983 – பாடியவர்: தீபன் சக்கரவர்த்தி + எஸ்.பி.சைலஜா – இசை: இளையராஜா
1980 களில் வெளிவந்த வண்ணப்படங்களுக்கே இசையால் வண்ணங்களைப் பூசி , காட்சிகளின் அழகுகளை எல்லாம் தன இசையால் மேவி நமது கற்பனைகளுக்கு விருந்து வைத்த பாடல்.இந்த வகையில் பாடல்களை அமைப்பது மட்டுமல்ல இன்னார் பாடினால் தான் கேட்க முடியும் என்ற அம்சத்தை தரத்து யார் பாடினாலும் இந்த வகை இசையை ரசிக்க வைத்ததும் மாபெரும் சாதனையாகும்.பாடலின் அமைப்பில் பாடகர்களின்
குரல்களும் ஒரு வாத்தியமாக்கியது முன்பு நடைபெறாதது.

04 பூந் தளிர் ஆட – படம்: பன்னீர் புஷ்பங்கள் 1980 – பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

மேற்கத்திய இசைக்கும் ஒத்து போகும் சுத்த தன்யாசி ராகத்தில் இளமை துள்ளும் பாடல்.கோரஸ் இசை எப்படியெல்லாம் பயன் படுத்திருப்பதையும் , வாத்திய இசையின் நளினம் கலந்த நலமும் இன்றும் கேட்கும் போதும் புதுமை விஞ்சி சிகரத்தில் நிற்கின்ற பாடல்

05 விழியில் விழுந்து – படம்: அலைகள் ஓய்வதில்லை 1980 – பாடியவர்கள்:: இளையராஜா + ஜென்சி – இசை: இளையராஜா

கற்பனைக்கு எட்டாத அசாத்தியமான பாடல்.சாதாரன் மிருதங்கத்தை பயன்படுத்திய முறை கலாதியானது.இசைத் தவனம் உள்ளவர்களுக்கு நல்ல தீனியான பாடல்.

06 தவிக்குது தயங்குது ஒரு மனசு – படம்:நதியைத்தேடி வந்த கடல் 1978 – பாடியவர்கள்:: ஜெயச்சந்திரன் + எஸ்.பி.சைலஜா – இசை: இளையராஜா

தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருந்த பாடல்களை ” பழைய பாடல் ” ஆக்கிய ராஜாவின் மேலைத்தேய இசை வண்ண கோலத்தில் அமைந்த பாடல்.பெரும்பாலான இசையமைப்பாளர்கள் பயன் படுத்திய வாத்தியங்கள் ஆயினும் அதிலிருந்து வேறுபட்ட ஒலிகளை எலூபிக் காட்டிய

07 ராஜா பொண்ணு அடி வாடியம்மா – படம்:ஒரே முத்தம் 1990 – பாடியவர்:ஜெயச்சந்திரன் – இசை: இளையராஜா

இளையராஜா – ஜெயச்சந்திரன் என்ற இணைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பான பாடல்கள் என்பதற்கு இந்தப் பாடலும் சிறந்த சான்றாகும்.சுத்த தன்யாசி ராகத்தை எத்தனை எத்தனை வண்ணங்களில் தந்தாலும் இனிக்கின்ற வகையில் தந்து சிறக்க வைக்கும் பாடல்.

08 தென்றல் காற்றும் அன்புப் பாட்டும் – படம்:பகவதி புறம் ரயில்வே கேட் 1983 – பாடியவர்: பி.எஸ்.சசிரேகா – இசை: இளையராஜா

எத்தனை விதமான பாடல்களைத் தந்தாலும் ,அதிலும் புதிதாக ஒலிக்கும் அழகான , ஆச்சரியமிக்க சோகப்பாடல்.

09 காலையில் கேட்டது கோயில் மணி – படம்:செந்தமிழ் பாட்டு 1990 – பாடியவர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + ஸ்வர்ணலதா – இசை: இளையராஜா

இனிமை இனிமை என்றும் இனிமை மாறாத பாடல்களை பரிபூரணமாக தமிழ் சினிமாவுக்கு அள்ளி இறைத்த இசைஞானியின் திறமைபட்டிலங்கும் பாடல்.ஸ்வர்ணலதா என்ற அற்ப்புதமான பாடகியை நிறைவுடன் பயன்படுத்தியவர் இளையராஜா.

10 இள நெஞ்சே வா தென்றல் தேரினில் – படம்:வண்ண வண்ண பூக்கள் 1990 – பாடியவர்கள்:: ஜேசுதாஸ் – இசை: இளையராஜா

காடும் காடும் சார்ந்த இடத்திற்கு இந்த ராகம் பொருத்தமானது என்பதற்கு ஏற்ப படமாக்கப்பட்ட பாடல்.அழகான பாடலுக்குப் பொருத்தமான படபிடிப்பு இருந்தாலும் பொருத்தமற்ற நடனம் அமைத்து பாழடிக்கப்பட்ட பாடல்.என்ன அருமையான ஆரம்பம் என வியக்க வைக்கும் பாடல்.ஜேசுதாசின் குரலில் சுத்ததன்யாசி ராகம் நம் ஜீவனை சுகம் பெற வைக்கும்.பாலு மகேந்திராவின் படப்பிடிப்பில் ஒவ்வொரு
பிரேம்மும் அழகான ஓவியங்களாக இருக்கும்.

11 உன்னை எதிர் பார்த்தேன் மன்னவா – படம்:வனஜா கிரிஜா 1994 – பாடியவர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + ஸ்வர்ணலதா – இசை: இளையராஜா
தேவதைகள் கொண்டு தரும் வானமுதம் போல கோரஸ் இசை நம்மை எங்கோ கொண்டு செல்லும் வகையில் அமைத்து பிரமிப்பூட்டிய இசைஞானியின் பாடல்.

12 செம் பூவே பூவே – படம்:சிறைச் சாலை 1996 – பாடியவர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா – இசை: இளையராஜா

13 ஒரு சுந்தரி வந்தாளாம் – படம்:அழகி 2002 – பாடியவர்கள்:உன்னிகிருஷ்ணன் + சாதனா சர்க்கம் – இசை: இளையராஜா

மனதை நெகிழ வைக்கும் பாடல்.பாடலின் பின் பகுதியில் பாடும் உன்னிகிருஷ்ணன் பாடலின் உணர்வில் சிகரத்தை எட்டுகிறார்.

14 நஞ்சை உண்டு புஞ்சை உண்டு – படம்:உன்னால் முடியும் தம்பி 1990 – பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

இன்னதுக்கு இன்னது என்று வரையறுக்கபட்ட ராகங்களின் இயலபுகளை எல்லாம் மீறி தான் உணர்ந்தவாறு பாடல்களை அமைத்து ,யாரும் குற்றம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு பாடல்களைத் தந்த ராஜாவின் முழுநிறைவான பாடல்.பாடலின் இடையிடையே வரும் வாத்திய அமைப்பும் சங்கதிகளும் எழுச்சியூட்டும் வகையில் அமைக்கப்பட்ட புல்லரிக்க வைக்கும் இனிமையான பாடல்.

15 ஆனந்த குயிலின் பாட்டு – படம்:உன்னால் முடியும் தம்பி 1990 – பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

16 என்ன சொல்லி பாடுவதோ – படம்:என் மன வானில் 2000 – பாடியவர்கள்:ஹரிஹரன் + சாதனா சர்க்கம் – இசை: இளையராஜா

இந்த பாடலின் ஆரம்ப வரிகளைப் போல , அதன் மென்மையை, மேன்மையை ,இனிமையை எப்படி எழுதுவது என்பது போல அமைந்த பாடல்.

17 புது ரூட்ட்லே தான் – படம்:மீரா 1991 – பாடியவர்:ஜேசுதாஸ் – இசை: இளையராஜா

முழுநிலவு போன்ற பொலிவு தருகின்ற குரலால் ஜேசுதாஸ் பாடி பரவசப்படுத்திய பாடல்.அன்புப்பாங்கின் நிறைவாய் ஒலிக்கும் தாலாட்டு இணைப்பும் அலாதியானது.

எத்தனை , எத்தனை வண்ணங்களில் பாடல்கள் தந்தாலும் படைப்புத்திறனில் புதிது புதிதாக தருவதில் இளையராஜாவுக்கு நிகரானவரை இந்திய சினிமா இதுவரை காணவில்லை என்று சொல்லக்கூடிய வகையில் ராகங்களில் பாடல்களை தந்திருக்கின்றார் ராஜா. ஒவ்வொரு பாடலும் தன்னளவில் முழுமைபெற்று சிறந்து விளங்குபவை.

18 கலகலக்கும் மணியோசை – படம்:ஈரமான ரோஜாவே 1992- பாடியவர்கள்:: மனோ + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

19 காதல் வானிலே காதல் வானிலே – படம்:ராசைய்யா 1997 – பாடியவர்:பவதாரிணி – இசை: இளையராஜா

20 தேனா ஓடும் ஓடக்கரையில் – படம்:பரணி 1997 – பாடியவர்:இளையராஜா + சுஜாதா – இசை: இளையராஜா

21 தீபங்கள் பேசும் – படம்:தேவதை 1997 – பாடியவர்:எஸ்.பி.பி.சரண் + சந்தியா – இசை: இளையராஜா

22 என்னவென்று சொல்வதம்மா – படம்:ராஜகுமாரன் 1994 – பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

23 இளைய நதி இனிய நதி – படம்:மனசெல்லாம் 2002 – பாடியவர்:ஸ்ரீநிவாஸ் + சாதனா சர்க்கம் – இசை: இளையராஜா”);

24 அந்தரங்கம் யாவுமே – படம்: ஆயிரம் நிலவே வா 1983 – பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

25 தாகம் எடுக்கிற நேரம் – படம்:எனக்காகக் காத்திரு 1982 – பாடியவர்:உமாரமணன் – இசை: இளையராஜா

26 ஏய் .. உன்னைத் தானே – படம்: காதல்பரிசு 1985 – பாடியவர்கள்:: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

27 வா பொன் மயிலே – படம்: பூந் தளிர் 1980 – பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை: இளையராஜா

28 ஆசையை காற்றிலே தூது விட்டு – படம்:ஜானி 1982 – பாடியவர்:சைலஜா – இசை: இளையராஜா

29 ஆடும் நேரம் இது தான் இது தான் – படம்:சூரசம்ஹாரம் 1989 – பாடியவர்கள்:பி.சுசீலா – இசை: இளையராஜா

30 சின்ன சின்ன முத்து நீரிலே – படம்:நினைக்கத் தெரிந்த மனமே 1986 – பாடியவர்கள்:: ஜேசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

சமீப காலங்களில் பல இனிய பாட்லக்ளைத் தந்தவர் என்ற ரீதியில் இசையமைப்பாளர் வித்யாசாகர் மிகத் திறமை காட்டி வருபவர். சுத்த தன்யாசி ராகத்தில் அவர் இசையமைத்த ” பார்த்திபன் கனவு ” என்ற படத்தில் ” கனாக் கண்டேனடி கனாக் கண்டேனடி தோழி ” மிக இனிப்பான சுத்ததன்யாசி.அருமையான இசையமைப்பு, பாடியவர்களும் அருமையாக பாடி சிறப்பித்த பாடல்.

மலையாள சினிமாவில் ஜி.தேவராஜன் இசையமைத்த

” சங்கமம் திரிவேணி சங்கமம் ” , – பாடலும்பாடலும்

” தங்க தளிகையில் பொங்கலு மாய் வந்த
தை மாத தமிழ் பெண்ணே ” என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலும் ,

பொம்பே ரவி இசையமைத்த

“சாகரங்களே பாடி உணர்த்திய சாம் கீதமே ” என்ற பாடலும் ,

ரவீந்திரன் இசையமைத்த ” சௌபர்னிகா மிருத வீஜிகள் பாடும் ” என்ற பாடலும் மிக ,மிக இனிமையானவை.

[தொடரும் ]

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்
Exit mobile version