Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்

ஆரபி ராகம் :

சுத்தசாவேரிக்கு மிக நெருக்கமான ராகமாகக் கருதப்படும் ராகம் ஆரபி.சுத்தசாவேரியில் கொஞ்சம் இடறினாலும் ஆரபி இலகுவாக நுழைந்து விடும் என்று சொல்லக் கூடிய விதமாக இருக்கின்ற ராகம். மங்களகரமான இந்த ராகம் வீர உணர்வையும் வெளிப்படுத்துவதில் சிறப்பு வாய்ந்தது. 29 ஆவது மேளகர்த்தா ராகமான தீரசங்கராபரணத்தின் ஜன்ய ராகமான இந்த ராகம் பழந் தமிழ் இலக்கியங்களில் பழந்தக்க ராகம் என அழைக்கப்பட்டுள்ளது.

ஆரோஹணம்: ஸ ரி ம ப த ஸ்
அவரோஹணம்: ஸ் நி த ப ம க ரி ஸ

சுந்தர குஞ்சித – முத்துத்தாண்டவர்
நரசிம்பா நாபவா – சுவாதித் திருநாள்
நாத சுதா ரச – தியாகய்யர்
பாலிம்ப ராம – பல்லவி சேஷய்யர்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார் சென்னி குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

என்று மன்னனையும் ,அரசையும் வாழ்த்திப் பாடி சிலப்பதிகாரக் கதையை பழ்ந்தக்கம் என்கிற இன்றைய ஆரபி ராகத்தில் ஆரம்பிக்கிறார் இளங்கோ என்பார்கள் சிலப்பதிகார இசைவல்லுனர்கள் கோடிலிங்கம் ,வைத்திலிங்கம்.

01. வசந்தன் பவனி வருவது பார் – படம்: குபேர குசேலா [1943 ] – பாடியவர்: TR ராஜகுமாரி – இசை :குன்னக்குடி வெங்கட ராமைய்யர் + எஸ்.என்.பாலகிருஷ்ணன்
1940 களின் இசை பாணியில் அமைந்த பாடல்.அந்தக்காலக் கனவுக்கன்னி என புகழப்பட்ட TR ராஜகுமாரி இனிய சங்கதிகளைக் கொண்டு பாடிய பாடல்.ராகத்தின் இனிமையை அழகாக வெளிப்படுத்தும் பாடல்.

02. ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே – படம்: மிஸ் மாலினி [1957 ] – பாடியவர்: டிவி ரத்தினம் – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
இனிய சங்கதிகளை அனாயாசமாகப் பாடக்கூடிய சிறந்த பாடகியும், தனித் தன்மைமிக்க குரல் வளமும் கொண்ட அந்தக் காலத்து பாடகியான திருமதி.டிவி ரத்தினம் மிகச் சிறப்பாகப் பாடிய பாடல். இது.இசைத்தட்டில் இருபக்க இசையாக அமைந்த நீண்ட பாடல்.முத்துஸ்வாமி தீட்சிதர் ஆரபி ராகத்தில் எழுதிய சம்ஸ்கிருத கீர்த்தனையின் [“ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே “] தமிழ் வடிவமாக ஒலிக்கின்ற பாடல்.சம்பிரதாயம் மிளிர டிவி ரத்தினம் அருமையாகப் பாடியிருப்பார்.இவரது திறமை அறிந்த இசை மேதை ஜி.ராமநாதன் பொன்முடி படத்தில் இவருடன் இணைந்து எல்லாப் பாடல்களை பாடியிருக்கின்றார்.

03. அம்பா அருள் புரிவாய் – படம்: ரம்பையின் காதல் [1957 ] – பாடியவர்: ராதா ஜெயலட்சுமி – இசை :TR .பாப்பா
செவ்வியல் இசைப்பாங்கில் அமைந்த பாதிப்பாடல். இது ஆரபி ராகத்தின் இனிமையை நிறைவாக தரும் T.R .பாப்பாவின் எளிமையான பாடல்.

04. ஏரிக்கரையின் மேலே போறவளே – படம்: முதலாளி [1957 ] – பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் – இசை :கே.வீ.மகாதேவன்

ஆரபி ராகத்தில் வெளிவந்த பாடல்களில் புகழின் உச்சியில் நிற்கின்ற பாடல். பாடல் வரிகள் நாட்டுப்புறபாங்கில் அமைந்தாலும் இசையோ செவ்வியல் இசை பாணியில் ஜீவகளையுடன் , ராகத்தின் ஆழ்ந்த செறிவாற்றலையும் காண்பிக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட பாடல். டி.எம்.சௌந்தரராஜன் தனது பாணியில் பாடி பெரும் புகழ் பெற்றார்.ஆரபி ராகம் என்றால் இன்று வரை எடுத்துக்காட்டாக விளங்கும் பாடல்.

07. இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே – படம்: தங்கப்பதுமை [1959 ] – பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.

நேற்று நம்மை கண்ட நிலா
நெஞ்சுருkiச் சென்ற நிலா
வாழ்த்துகள் சொல்லுமே
மனந்தனைக் கிள்ளுமே!

கேட்கும் போது மகிழ்ச்சிகள் துள்ளி நம் நெஞ்சங்களை நிறைக்கின்ற பாடல்.இனின்மையை முதன்மைப்படுத்தி எப்போதும் நெஞ்சங்களை கனிய வைத்த மெல்லிசை மன்னர்களின் என்றென்றும் வியக்க வைக்கும்.இந்த இசை இன்பங்களை அள்ளி ,அள்ளிப் பருகியதாலேயே இசைஞானி இளையராஜா ராகங்களில் அற்ப்புதங்களை நிகழ்த்தினார்.
டி.எம்.சௌந்தரராஜன் ,ஜிக்கி என்கிற அருமையான ஜோடி குரலில் ஒலித்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
என்ன பாடல் ! எப்படிப்பட்ட இசை ! இசையா , பாடலா என்று வியக்க வைக்கும் அற்ப்புதம் தரும் பாடல்.
நமது வாழ்க்கையின் தடங்களில் சுவடுகளை பதித்த முதன்மையான பாடல்களில் என்றும் நீங்காத ஒன்று இந்த புதுவெள்ளப்பாடல்.

08. காவிரி பாயும் கன்னி தமிழ் நாடு – படம்: மரகதம் [1959 ] – பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் – இசை: எஸ்.எம் சுப்பையாநாயுடு

கலைகளுக்கெல்லாம் தாய் வீடான தமிழ் நாட்டின் பெருமையை விளக்கும் பாடல்.எழுச்சியான ஆரபி ராகத்தில் அழகாக ஆரம்பிக்கும் பாடலை , தனக்கே உரித்தான விண்ணை மறைக்கும் கோபுரம் போல ,கம்பீரமான குரலால் நம்மை இன்புற வைத்திருக்கின்றார் டி.எம்.சௌந்தரராஜன். ஆரபி ராகத்தை தனது இசையலைகளில் மிதக்க விட்டு ,அதில் ஜோன்புரி , காம்போதி போன்ற ராகங்களையும் இணைத்து பாடலை அழகு படுத்தியிருக்கின்றார் இசைமேதை எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு.

09. கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ – படம்: இந்திரா என் செல்வம் [1962 ] – பாடியவர் : பி .பி .ஸ்ரீநிவாஸ் + சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை: சி.என்.பாண்டுரங்கன்
எப்படிப்பட்ட இசை என வியக்கவிக்கும் பாடல்.பழம்பெரும் இசைமேதை சி.என்.பாண்டுரங்கன் என்ற அற்ப்புதமான இசையமைப்பாளர் அமைத்த மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.

எனது தந்தையாரின் நண்பரான பல்கலைவேந்தர் சில்லையூர் செவராசன் அவர்கள் எங்கள் வீடு வரும் போதெல்லாம் என் தந்தையாரைப் பாடும் படி கேட்பதுண்டு. இயல்பாகவே பி .பி .ஸ்ரீநிவாஸ் குரலின் சாயல் கொண்ட , அருமையாகப் பாடக்கூடிய எனது தந்தையார் அடிக்கடி பாடும் பாடல்களில் ஒன்று என்பதால் அது எனது மனதிலும் பதிந்து விட்ட பாடலாகி விட்டது.

சி.என்.பாண்டுரங்கன் நெஞ்சை விட்டகலாத பல பாடல்களைத் தந்தவர்.குறிப்பாக எதிர்பாராதது [1954] படத்தில் ” சிற்பி செதுக்காத பொற்சிலையே ” என்று மகிழ்ச்சி பொங்க ஜிக்கியும் , சோகம் ததும்ப ஏ.எம்.ராஜாவும் தனித்தனியே பாடிய பாடல்களை நல்ல இசை ரசிகர்கள் யாரும் இலகுவில் மறக்க முடியாது.அதுமட்டுமல்ல ” காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன் ” என ராஜாவும் ,ஜிக்கியும் பாடிய அமரத்துவம் மிக்க பாடலகளை எழுதியவர் பின்னாளின் புகழ் பெற்ற திரைப்பட டைரக்டரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
சி.என்.பாண்டுரங்கன் கடைசியாக இசையமைத்த இறுதிக்காலப் படங்களில் உதவியாளாராக இருந்தவர் இளையராஜா.”சத்தியம் தவறாதே” பட டைட்டிலில் இசை சி.என்.பாண்டுரங்கன் என்றும் உதவி:ராஜா [இளையராஜா ] என்றும் இருக்கும்.

10. விழியே விழியே உனக்கென்ன வேலை – படம்: புதிய பூமி [1968 ] – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

கனமான ராகங்களில் மெல்லிசை வார்ப்புக்களைத் தந்து முன்னோடியாக விளங்கியவர் மெல்லிசைமன்னர்.வேகமும் , இனிமையும் ஒன்று கலந்து அவர் தந்த அற்ப்புதமான பாடல்.டி.எம்.சௌந்தரராஜன் குரலில் ஜொலிக்கும் பாடலில் ஆரபி ராகத்தை மறைத்து வைக்கும் விஸ்வநாதனின் கைவந்த கலை ஆச்சர்யப்பட வைக்கும்.

09. தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன் – படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் [1976] – பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

மெல்லிசைமன்னரின் இனிய பாடல்.ஆரபி யில் ஆரம்பிக்கும் பாடல் சாருகேசி ராகத்தில் நிறைவுறுகிறது.எந்த ஒரு பாடலும் பாடும் பாடகர்களால் மேன்மை அடையும் என்பதற்கேற்ப பாடகர்கள் தெரிவு அமைந்தது சிறப்பானது. 1970 களில் வெளிவந்த பல பாடல்களில் குறிப்பிடத்தகுந்த பாடல் இந்தப்பாடல்.புதிய , புதிய ராகங்களில் இனிய முயற்ச்சிகளை முனைந்து தந்த மெல்லிசைமன்னரின் ஆளுமைப்பாங்கு வியப்புக்குரியது.படைப்பாற்றலில் சலிக்காத அவரது இசையில் , மனதை ஈர்க்கும் பாடல்களில் , ராகங்கள் புத்துயிர் பெற்றெளுந்தன.

10. மந்தாரமலரே மந்தாரமலரே – படம்: நான் அவனில்லை [1976] – பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் + எ..ஆர்.ஈஸ்வரி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

மலையாளமும் , தமிழும் கலந்த இனிமையான பாடல்.செண்டை வாத்தியம் பயன்படுத்தப்பட்ட பாடல்களில் ஒன்று.எழுச்சியும் , களிப்பும் தருகின்ற ராகத்தில் மெல்லிசைமன்னரின் கம்பீரமான இசை வார்ப்பு.நினைவு சுழிகளில் பதுங்கிய பாடல்களில் ஒன்று.ஆயினும் கேட்க கேட்கத் திகட்டாத பாடல். ஜெயச்சந்திரன், எல்.ஆர்.ஈஸ்வரி ஜோடி பாடிய அபூரவமான பாடல்.

வழமைபோலவே பாரம்பரிய ராகங்களில் ஆச்சர்யம் மிக்க பாடல்களைத் தந்து பிரமிக்கவைக்கும் இளையராஜா இந்த ராகத்தையும் விட்டாரில்லை.

01.சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே – மெட்டி [1980] பாடியவர்:பிரமானந்தன் இசை இளையராஜா
மண்ணில் மறைந்திருக்கும் வைரங்ககளைத் தோண்டி எடுத்து ,அவற்றை பட்டை தீட்டி தரும் கைவண்ணங்களை போன்று இசையில் நவீனம் மிக்க பாடலக்ளைத் தந்து பழமை மாறாமல் , புதுமைக்கும் புதுமையாய் அவர் தந்த பாடக்ளில் இந்தப் பாடலும் ஒன்று.

02.ரெட்டைக்கிளிகள் அன்றாடம் – ஒரே ஒரு கிராமத்திலே [1980] பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ் +சித்ரா இசை இளையராஜா
இந்தப்பாடல் ஒரு புதிய பாடல் போல ஒலித்தாலும் , வாத்தியங்களின் இணைப்பில் அற்ப்புதங்களை எழுப்பிக் காட்டினாலும் ஆரபி என்ற ராகத்தின் அடிநாதம் கோலோச்சுகிறது.மெல்லிசை மன்னர்களின் ” இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே ” பாடலின் தெறிப்புக்கள் எங்கெங்கோ மின்னி மின்னி மறைகின்றன.அருமையான் ஹம்மிங் தொடங்கும் பாடலின் இடையிடையே வயலின் இசையில் ராகத்தின் உச்சங்களை தொட்டு ,தொட்டு செல்கின்றது.குறிப்பாக

நெஞ்சைத் தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி
கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ணக்குருவி
என்ற வரிகளின் பின்னால் உச்சங்களைத் தொடும் வயலின் இசை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

03 .மதுரை வாழும் மீனாட்சியே – புதுப்பட்டி பொன்னுதாயி [1994] பாடியவர்:உன்னி மேனன் + எஸ்.ஜானகி இசை இளையராஜா
நாதஸ்வர இசை என்ற அற்ப்புதத்துடன் இழைந்து வரும் சிறப்பான பாடல். தன்னிகரில்லாமல் உன்னி மேனனும் ,எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய ஆரபி ராகப்பாடல்.மெல்லிசையில் மட்டுமல்ல செவ்வியல் பாணியிலும் இனிமை ததும்பும் பாடல்களைத் தருவதிலும் ,அதிலும் புதுமையான வாத்திய ஒலிகளைக் கலக்கும் தனித்தன்மையை காண்பிக்கும் இளையாராஜாவின் தேனமுதப்பாடல்.

04 .மன்னவனே மன்னவனே – தந்துவிட்டேன் என்னை [1992] பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை இளையராஜா

எங்கேயும் கேட்காத சப்தங்களை எழுப்பி ,அதில் மரபு ராகங்களை பின்னி ,பின்னி தரும் இசைஞானியின் கற்பனை வளம் எல்லையற்றது. ராகங்களின் மறுவுயிர்ப்பும் ,மேலைத்தேய இசையின் விரிந்த கூறுகளும் இருந்தாலும் அதிலும் தமிழ்தன்மைமிக்க பாடல்களைத் தந்து வியக்கவைப்பவர் இளையாராஜா.

05 .ஆசைக்கிளியே ஆசைக்கிளியே – தந்துவிட்டேன் என்னை [1992] பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை இளையராஜா

கிண்டல் ,கேலிப்பாடலான இப்பாடலில் கிராமிய இசையின் கூறுகளையும் ஆரபி ராகத்தில் இணைத்துள்ளார்.

பிறமொழி பாடல்களிலும் இந்த ராகத்தில் அருமையான பாடல்கள் உள்ளன. மலையாள திரைப்படங்களில் வெளிவந்த ஆரபி ராக பாடல்களில் குறிப்பிடத்தக்க இரண்டு பாடல்களை இங்கே தருகின்றேன்.

01 . புத்தொரம் வீட்டில் ஜெனிச்சொரேல்லாம் – படம் : ஆரோமலுண்ணி 1972 – பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ் – இசை :ஜி.தேவராஜன்

02 . நவகாபிசேகம் கழிஞ்சு – படம் : குருவாயூர் கேசவன் 1977 – பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ் – இசை :ஜி.தேவராஜன்

தொடரும்…

Exit mobile version