இழைவும், குழைவும், இனிமையும் நிறைந்த தமிழ் ராகங்களில் மிக முக்கியமான ஒன்று சுத்தசாவேரி.பண்டைக் காலத்தில்இந்த ராகத்தின் பெயர் சாதாளி பண். மதங்கர்கள் [ அதாவது பாணர்கள் ] பாடி மகிழ்ந்த ராகம்.
சிலப்பதிகார கதையின் கானல்வரி பகுதியில் , கடற்கரைப் பகுதியில் , கோவலனும் , மாதவியும் பாடிய இசை பாடல்கள் பற்றி வர்ணிக்கும் முன்பாக, இளங்கோ கதையின் பின்னணியை சொல்லும் பாடல்கள் சுத்தசாவேரி ராகத்தில் அமைந்ததென்பார்கள் சிலப்பதிகாரப் பாடல்களை சுரப்படுத்தி , அதனை ஒரு இயக்கமாக நிகழ்த்தி வரும் கலைஞர்களான கோடிலிங்கம், வைத்திலிங்கம்.
சித்திரப் படத்துள் புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பு எய்தி
பத்தரும்கோடும் ஆணியும் நரம்பும் என்று
இத்திறத்து குற்றம் நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிப்
[ ஓவியம் வரையப் பெற்ற உறையுள் இருந்தது யாழ்.அவ்யாழுக்குக் கொட்டுமலர் சூட்டி இருந்தனர்.மை தீட்டிய கண்களையுடைய மணமகள் போன்ற அழகுடையதாக இருந்தது.யாழின் அடிப்படை உறுப்புக்களாகிய பத்தர் , கொடு ,ஆணி ,நரம்பு , என்ற நான்கும் பொருந்திய , குற்றம் இல்லாத நிலையில் இருந்தது.அந்த யாழைத் தொழுது வாங்கினாள் மாதவி.]
என்ற பாடலுடன் ஆரம்பித்து ,
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி. 2
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி. 3
உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி. 4
என்ற பாடல் வரை சுத்தசாவேரி ராகத்தில் [ சாதாளிப் பண் ] மிக இனிமையாக இசைப்பார்கள் கோடிலிங்கம், வைத்திலிங்கம்
என்ற சிலப்பதிகார இசைக்கலைஞர்கள்.
5 சுரங்களைக் கொண்ட இனிமையான ராகங்களில் [ Pentatonic Scale ] ஒன்றான சுத்த சாவேரி கீழைத்தேய நாடுகளான வியட்நாம் ,கம்போடியா போன்ற நாடுகளிலும் இந்தோனேசியா நாடுகளிலும் , ஆபிரிக்கா நாடுகளிலும் குறிப்பாக சூடான் நாட்டுப்புற இசையிலும் மிகுந்து காணப்படும் ராகமாகும்.
இது ஒரு மூர்ச்சனா ராகமாகும். மூர்ச்ச்சனா ராகம் என்றால் கிரகபேதத்தால் புதிய ராகங்களை உருவாக்கக் கூடிய ராகம் என்று பொருள் படும்.
மூர்ச்ச்சனா ராகமாகிய மோகனராகத்தின் கிரகபேதத்தால் உண்டான ராகங்களில் ஒன்று தான் மிக , மிக இனிமை மிக்க சுத்தசாவேரி ராகம்.
மோகன ராகத்தின் சுரங்கள் : ஸ ரி2 க3 ப த2 ஸ் – ஸ் த2 ப க3 ரி2 ஸ
மோகனத்தின்
ரிஷபம் – மத்தியமாவதி ராகத்தையும்
காந்தாரம் – ஹிந்தோள ராகத்தையும்
பஞ்சமம் – சுத்தசாவேரி ராகத்தையும்
தைவதம் – சுத்ததன்யாசி ராகத்தையும்
கொடுக்கும் என்கிறார் இசையறிஞர் பி.சாம்பமூர்த்தி [ கர்நாடக் சங்கீத புஸ்தகம் – 3ம்பாகம் ]
இது 28 வது மேளகர்த்தா ராகமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யராகம்.
ஐரோப்பிய இசை முறைகளான சம அளவுள்ள சுர வரிசை [ Equal Temparament ], பண்ணு பெயர்த்தல், அல்லது குரல் திரிபு [Modal Shift of tonic ] என தமிழர் அழைத்த பழைய இசை முறையை இன்று கிரகபேதம் ,அல்லது கிரஹசுரபேதம் என இன்று அழைக்கின்றோம்.
, பழந்தமிழ் நாட்டில் இசைக்கலைஞர்களால் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது ” என அவர் குறிப்பிடுகின்றார்.- எழுதுகின்றார் ஆப்ரகாம் பண்டிதர்.
பதிற்றுப் பத்து 65 ஆவது பாடல் 14, 15 வரிகளில் இவ்வாறு காணப்படுகிறது.
” தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்கு “
பன்னிரு சுரங்களுக்கும் இடையில் சம இடைவெளிகள் இருந்தால் தான் பண்ணு பெயர்க்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் பண்ணுபெயர்த்தல் இயலாததாகிவிடும் – என்கிறார்.து.ஆ.தனபாண்டியன்.- [நூல்: நுண்ணலகுகளும் இராகங்களும் – பக்கம் 114 – 115 ]
அது மட்டுமல்ல ஆப்ரகாம் பண்டிதர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
/// “..சங்கீத வித்தையில் அதாவது சங்கீதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் கலைகளில் மிக நுட்ப அறிவுடையவர்களாயிருந்த தமிழ்மக்கள் அவற்றிற்கேற்ற விதமாக ஏராளமான இராகங்களைப் பாடிக்கொண்டு வந்தார்களென்று தெரிகிறது. இசைத் தமிழுக்குரிய முழு நூல் எனக்குக் கிடைக்காததினால். அங்கங்கே சிதறிக் கிடக்கும் சிற்சில முக்கிய குறிப்புகளை இங்கே சேர்த்துச் சொல்ல வேண்டியது அவசியமாயிற்று.” – என்றும் ,
” …கர்நாடக சங்கீதத்தின் விதிகளில் இன்னும் அதிகமானவை அர்த்தமாகாமலிருக்கின்றன. சுரங்களைப்பற்றியும் சுருதிகளைப்பற்றியும் எவ்வளவு மேன்மையாய்ச் சொல்ப்பட்டிருக்கிறதோ அதற்கேற்ற விதமாய் இராகங்களை ஆலாபித்து விஸ்தாரஞ் செய்திருக்கிறார்கள் என்று இதன் பின் பார்ப்போம்.”-
என்றும்
மருதயாழ்த்திறன் வகையின் பெயர்.
தக்கேசி கொல்லி யாரிய குச்சரி
நாகதொனி சாதாளி யிந்தளந் தமிழ்வேளர்கொல்லி
காந்தாரங் கூர்ந்த பஞ்சமம் பாக்கழி
தத்தள பஞ்சம மாதுங்க ராகம்
கௌசிகஞ் சீகாமரஞ் சாரல் சாங்கிமம்
எனவிவை பதினாறு மருதயாழ்த் திறனே
மருதயாழ்த்திறன் வகையின் பெயர்-தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாகதொனி, சாதாளி, இந்தளம், தமிழ்வேளர்கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்க ராகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம்.
மேற்கண்ட இராகப் பெயர்களைக் கவனிக்கையில் பூர்வமான இராகங்களின் பெயர்கள் காலத்துக்குத் தகுந்த விதமாய் வரவர மாற்றப்பட்டு வழங்கி வந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. பிங்கல முனிவர் சொல்லியிருக்கும் இராகங்களுக்கும் தேவாரத்தில் வழங்கிவரும் இராகங்களுக்கும் பெயரிலும் தொகையிலும் வித்தியாசமிருப்பதாகக் காண்போம்.”…./// –
என ஆப்ரகாம் பண்டிதர் எழுதி செல்கிறார்.
சுத்தசாவேரி ராகத்தின்
ஆரோகணம்: ஸ ரி2 ம1 ப த2 ஸ்
அவரோகணம் :ஸ் த2 ப ம1 ரி2 ஸ
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர் சம்பிரதாயத்தில் இது தேவக்ரியா என்று அழைக்கப் படுகிறது.வடஇந்திய ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தை துர்க்கா என அழைக்கின்றனர்.இந்த ராகம் குறித்து சில மயக்கங்களும் உள்ளன.எனினும் சுத்தசாவேரி தான் துர்க்கா ராகம் எனப்படுகின்றது.பாடும் முறையில் ஓரளவு வித்தியாசம் காட்டுவார்கள் என்பர்.எனினும் சுரங்கள் ஒன்றாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுத்த சாவேரி , துர்க்கா குறித்த சந்தேகங்களை சங்கீத வித்துவானும் ,ராகங்கள் பாடுவதில் கைதேர்ந்தவரும் எனது உறவினருமான திரு .வை.பழனிநாதன் அவர்களிடம் வினவிய போது [1998 இல் ] , ” ஆராய்ச்சிக்குரிய கேள்வி கேட்டுள்ளீர்கள் என்றும் , சங்கீதம் படித்தவர்களுக்கே வராத சந்தேகம் வைத்துள்ளது ” என்று என்னை பாராட்டிவிட்டு , ராகத்தை பாடிக் காண்பித்து விட்டு ” ஒரே சுரங்கள் தான் , ஆனாலும் பாடும் முறையில் தான் இந்த ராகத்தின் வித்தியாசங்கள் காண்பிக்க முடியும் என்றார்.
இந்தக் கருத்தை இந்திய கலைஞர்கள் சிலரும் சொல்லியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துர்க்கா ராகத்தின்
ஆரோகணம்: ஸ ரி2 ம1 ப த2 ஸ்
அவரோகணம் :ஸ் த2 ப ம1 ரி2 ஸ
கர்நாடக இசையில் பிரபல் ராகமாகவும் விளங்கும் இந்த ராகத்தில் பின்வரும் கீர்த்தனைகள் புகழ் பெற்றவை.
தாரி நீ தெலுசுகொடி திரிபுர சுந்தரி – தியாகய்யர்
தாயே திரிபுர சுந்தரி – பெரியசாமி தூரன்
ஒருளுநாடு கோவென சின தேவ – தியாகய்யர்
ஸ்ரீ வசுத நாதம் – தீட்சிதர்
சமாஜ வரதா ரி – பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்
ஆறுமுகா அடிமையை கைவிடுதல் – பாபநாசம் சிவன்
கர்நாடக இசையிலும் ,ஹிந்துஸ்தானி இசையிலும் இந்த ராகத்தின் ஆலாபனையை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். குறிப்பாக ஹிந்துஸ்தானி இசையில் மாமேதை பிஸ்மில்லாஹான் [ Bismilla Khan ] செனாய் வாத்திய இசையில் எழில் பொங்கி பெருக்கெடுக்கும்.தனிதனமைமிக்க அவரது வாசிப்பு நெகிழ்ச்சியையும் , மன நிறைவையும் தந்து இன்புற வைக்கும்.அதே போன்றே சௌரசியாவின் புல்லாங்குழலிலும் இந்த ராகத்தின் இனிய திரட்சியை ,அதன் மென்மையை நாம் அனுபவிக்கலாம்.ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களின் வாத்திய இசையிலும் வாத்தியங்களின் தன்மைக்கு ஏற்ப இசைவிணக்கத்துடன் இழைந்து வரும் இந்த ராகத்தின் -இனிய இசையை நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
அற்ப்புதமான , இனிமைமிக்க இந்த ராகத்தை சினிமா இசையமைப்பாளர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள்.
வழமை போலவே இந்த ராகத்திலும் மனதை ஈர்க்கும் பாடல்களை தந்து பரந்துபட்ட மக்கள் மத்தியில் இந்த ராகத்தைக் கொண்டு சேர்த்த பெருமை சினிமா இசையமைப்பாளர்களையே சாரும்.
தமிழ் நாடக மேடையில் புகழ் பெற்று விளங்கியது இந்த ராகம்.
01. எல்லோரையும் போலவே என்னை – நடகமேடைப்பாடல் – பாடியவர்:எஸ்.ஜி.கிட்டப்பா.
சங்கரதாஸ்சுவாமிகளின் நாடக மேடையில் தோன்றி புகழ் பெற்ற பாடகரான கிட்டப்பா பாடி புகழ் பெற்ற பாடல்.சங்கரதாஸ் சுவாமிகளின் ஒளிப்பிழம்பில் தோன்றி சுடர்விட்ட இசைத்தாரகை தனது 28 வது காலமானார்.இவரது பாடல்கள் இசைத்தட்டுக்களாக வெளிவந்து புகழ் பெற்றன.இவரது பாடும் முறையை டி.ஆர்.மகாலிங்கம் போன்றோர் பின்பற்றிப் பாடி புகழ் பெற்றனர்.அசாத்தியமிக்க பாடகர் எஸ்.ஜி.கிட்டப்பா.
02. பொறுமை என்னும் நகையணிந்து – படம்: ஔவையார் [1953 ] – பாடியவர்: கே.பி.சுந்தராம்பாள் – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
மேலே சொல்லப்பட்ட பாடலின் மெட்டில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் மனைவியான கே.பி.சுந்தராம்பாள் பாடிய அருமையான சங்கதிகள் கொண்ட பாடல்.தனிதனமைமிக்க அவருடைய குரலில் அருமையான சங்கதிகள் இசையலையாக மிதந்து வரும்.
03. இருண்ட வாழ்வில் குதூகலம் – படம்: கச்சதேவயானி பாடியவர்:T. R.ராஜகுமாரி
1940 களில் வெளிவந்த இதப் பாடல் அந்தகால மெல்லிசை வகையைச் சேர்ந்தது என்று சொல்லத் தக்க பாடல்.பின்னாளில் தமிழ் திரையில் கதாநாயகிகள் பாடும் தனிப்பாடல் வகைகளுக்கு முன்னோடியான பாடல்.அந்தக் காலக் கனவுக் கன்னி என்று கருதப்பட்ட ராஜகுமாரியே பாடிய பாடல்.
04. தாயே சங்கரி தண்ணருள் கண்களால் – படம்:சியாமளா – பாடியவர்கள்: எஸ்.வரலட்சுமி + சரோஜினி
சுத்தசாவேரி ராகத்தில் பக்தி சுவை ததும்பும் அழகான பாடல்.சிறப்பாகப் பாடக்கூடிய ராக இனிமை ததும்ப பாடிய பாடல்.
05. வாங்கண்ணே போவோமே நாமே – படம்: காலம் மாறிப் போச்சு [1956 ] – பாடியவர்: திருச்சி லோகநாதன் – இசை :மாஸ்டர் வேணு
” பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடி துடித்தே
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே .. – பாரதி
என்று நெஞ்சு பொறுக்காமல் பாரதி பாடியதற்கு இணங்க உழைப்பாளி மக்களின் உழைப்பையும் ,ஒற்றுமையையும் வலியுறுத்தும் பாடல்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் தயாரித்த படம் காலம் மாறிப்போச்சு. அந்த படத்தின் வசனம், பாடல்களை எழுதியவர் முகவை ராஜாமாணிக்கம் அவர்கள்.மாசேதுங் எழுதிய கலையும் இலக்கியமும் என்ற நூலை தமிழாக்கியவர் முகவை ராஜமாணிக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த மிக முக்கியமான பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்.
வாங்கண்ணே போவோமே நாமே – கூடி
வாங்கண்ணே போவோமே
நொடியில் மலைகள் எல்லாம்
பொடிப் பொடியாக்கி தகர்ப்போமே
வாங்கண்ணே போவோமே நாமே ..
நந்திதேவன் உறுமி செடி தூக்கி வர்ராண்ணே
பண்ணையாள் நம்மோடு துணையாக வர்ராண்ணே
பூதேவி அருள் உண்டு புளங்காகிதம் உண்டு
பூதேவி அருள் உண்டு புளங்காகிதம் உண்டு
முத்தாரம் மணியாரம் போல பொலியும் உண்டு
வாங்கண்ணே போவோமே நாமே
ஏருளுவோர் ஏழை சொர்ணமே கங்காணி
ஏடு பதினாயிரமும் வீடதொ மேளிக்கே
ஏடு பதினாயிரமும் வீடதொ மேளிக்கே
கூட்டமாய் நாம் எல்லாம் ஒன்றாக வாழணும்
பஞ்சப் பேயின் மண்டை சுக்கு நூறாகணும்
வாங்கண்ணே போவோமே நாமே..
பயிர்களில் உண்மை அன்பு கொண்டு வளர்க்கும் விவசாயியின் வாழ் நிலையும் மாற கோரும் பாடல்.
காவிரி பெண்ணை பாலாறு நீள் நதிகள் பொங்கி
வெண்ணுரை தள்ளி குளங்களில் பாயணும்
கரை புரண்டோடியே கால்களில் பாயணும்
நீங்கிடா வறுமையும் நீங்கி ஒழிந்தோடணும்
என்று விவசாயிகள் உற்சாகம் பொங்கப் பாடும் பாடல்.எல்லையற்ற வீர உணர்ச்சி ததும்ப திருச்சி லோகநாதன் குழுவினருடன் பாடும் பாடல்.ஆவேசமும் , நெஞ்சுறுதியும் , அநியாயத்திற்கு எதிராக போராடும் உற்சாகமும் இசையில் கொப்பளிக்கும் பாடலில் தொடர்ந்து, விவசாயிகளின் ஆசை இப்படி ஒலிக்கிறது..
தரிசு நிலம் யாவையும் உழுது நல வயலாக்கி
காடாய் கிடந்ததை திருத்தியே சீராக்கி
வானத்து நீரை எவர் தடுத்தாலுமே
பாய்ந்தோடச் செய்வோம்
பொலி ஓங்கச் செய்வோம் …
வாங்கண்ணே போவோமே நாமே..
அதுமட்டுமா தண்ணீர் எனும் வாழ்வாதாரத்தை ,பொதுச் செல்வத்தை , அதனைத் தடுக்கின்றவர்களை எதிர்த்துப் பொங்குவதை கலை உணர்வுடன் , மாண்புடனும் வெளிப்படுத்தும் பாடல்.தண்ணீரை வரவேற்கும் பாங்கைப் பாருங்கள்.
காவேரி தாயே நீ கல கலலென வா வா நீ
உருண்டுமே சுருண்டுமே விரைந்துமே
சல் சலா கல கலா ,,,,
சல் சலா கல கலா ,,, நதி பெருகி பாய்ந்தோட
ஓடை நீர் அருவியும் ஒன்று சேர்ந்து உருண்டோட
அசைந்தாடி வாம்மா குதித்தோடியே வாம்மா
பொங்கியே வாம்மா..
என்று உச்சஸ்தாயியில் ஓங்கி ஒலித்து நிறைவடைகிறது.
பொங்கி பெருகும் காவேரி பற்றிய சித்திரம் மனத்திரையில் விரியவைக்கும் பாடல்.அற்ப்புதமான சுத்தசாவேரி ராகம் நெஞ்சை அள்ளுகிறது.
கம்யுனிச இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தயாரித்த படம் இது. பாடலை எழுதியவர் கம்யுனிச இயக்கத்தைச் சேர்ந்த முகவை ராஜமாணிக்கம்.பாட்டாளி வர்க்கத்தின் தன்னிகரில்லாத் தலைவர் மாஒ வின் ” கலையும் இலக்கியமும் ” என்ற புகழ் பெற்ற நூலை தமிழாக்கியவர் முகவை ராஜமாணிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் வரிகளா , இசையா என்று பிரித்துப் பார்க்கவொண்ணா வண்ணம் எல்லையற்ற எழுச்சியை தருகின்றது.அபாரமான பின்னணி இசையை குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும் .
இந்தப் பாடலுக்கு நிகராக ஒரு பாடலை சில வருடங்களுக்கு முன்பு கேட்க நேர்ந்தது.அது சினிமாவில் வந்த பாடல் அல்ல. மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளிட்ட ” காட் ஒப்பந்த ” எதிர்ப்பு ஒலிப்பேழையில் [அடிமைச்சாசனம் ]இடம் பெற்ற பாடல்.மிகவும் எழுச்சி மிக்க பாடல். தோழர் மருதையனின் எழுச்சி மிக்க முன்னுரையுடன் தொடங்கும் பாடல்.
தண்ணி வந்தது தஞ்சாவூரு
மடை திறந்தது மாயவரம்
என்று தொடங்குகிறது.
ஏ… தண்ணி வந்தது தஞ்சாவூரூ, தஞ்சாவூரு….
மடை திறந்தது மாயவரம், மடை திறந்தது மாயவரம்…..
மடை திறந்தது மாயவரம், மடை திறந்தது மாயவரம்…..
ஏ….ஓடையில தண்ணி வந்தா…
நாணல் தலையாட்டும்….
ஓடிவரும் நீரைக்கண்டா….
காத்தும் சிலுசிலுக்கும்….
வாய்க்கா வரப்புல பாட்டுச்சத்தம்..
வானத்து மொத்தமும் கேட்டு நிக்கும்..
பாலுக் கழுவும் எங்க புள்ளைங்களும்
பாட்டுச் சத்தத்த கேட்டுறங்கும்…
(ஏ தண்ணி..)
நாணல் தலையாட்டும்….
ஓடிவரும் நீரைக்கண்டா….
காத்தும் சிலுசிலுக்கும்….
வாய்க்கா வரப்புல பாட்டுச்சத்தம்..
வானத்து மொத்தமும் கேட்டு நிக்கும்..
பாலுக் கழுவும் எங்க புள்ளைங்களும்
பாட்டுச் சத்தத்த கேட்டுறங்கும்…
(ஏ தண்ணி..)
ஏ…பொன்னுமணி நெல் வெளையும்…
மண்ணு எங்க மண்ணாகும்…
போகம் மூணு ஈன்று தரும்..
தாயாக எங்க நிலம்….
கொண்டக்கதிருல பூ மணக்கும்…
வண்டல் படிஞ்ச நெல் மணக்கும்…
வெளைஞ்சு நிக்கிற நெல்லு கதுருல
வயலும், வரப்பும் மறஞ்சுடும்…
(ஏ தண்ணி..)
மண்ணு எங்க மண்ணாகும்…
போகம் மூணு ஈன்று தரும்..
தாயாக எங்க நிலம்….
கொண்டக்கதிருல பூ மணக்கும்…
வண்டல் படிஞ்ச நெல் மணக்கும்…
வெளைஞ்சு நிக்கிற நெல்லு கதுருல
வயலும், வரப்பும் மறஞ்சுடும்…
(ஏ தண்ணி..)
பொன்மலையா போர் உசரும்…
போட்டி வச்சு பொலி உசரும்…
பொங்கலோட தை பிறக்கும்…
செங்கரும்பு வாசல் வரும்…
மாசிப் பங்குனி மத்தாளம் கொட்டும்…
சித்திரை வெயில் வந்து வெருட்டும்…
தாகங்கொண்ட நிலம் காத்திருக்கும் –தண்ணி
காற்றிடம் தூது சொல்லி விடும்…
(ஏ தண்ணி..)
போட்டி வச்சு பொலி உசரும்…
பொங்கலோட தை பிறக்கும்…
செங்கரும்பு வாசல் வரும்…
மாசிப் பங்குனி மத்தாளம் கொட்டும்…
சித்திரை வெயில் வந்து வெருட்டும்…
தாகங்கொண்ட நிலம் காத்திருக்கும் –தண்ணி
காற்றிடம் தூது சொல்லி விடும்…
(ஏ தண்ணி..)
சொல்ல வந்த கருத்தை விளக்கி ,உயர்ந்த இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது இசை .சினிமாவில் நதி ,உழவர், அறுவடை ,பொங்கல் என பலவகைபாடல்கள் வெளிவந்திருக்கின்றன.இருப்பினும் இது போன்ற ஒரு பாட்டை நான் கேட்டதில்லை.அவ்வளவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள பாடல்.பாடிய கலைஞர்கள் மிக அற்ப்புதமாகப் பாடியிருக்கின்றார்கள்.மகிழ்ச்சியில் பாடும் பாடலாக பாடப்பட்டாலும் நெஞ்சை உருக்கும் பாடல்.மேலே உள்ள “வாங்கண்ணே போவோமே நாமே ” பாடலுக்கு நிகரான பாடல் இது.
இது மட்டுமல்ல ,
01. புன்னகைதனை வீசி இனிதாய் நமதாசைகள் பலித்தனவே –
02. இனிதாய் நாமே இணைந்திருபோமே –
“காலம் மாறிப் போச்சு ” படத்தில் இவை போன்ற மிக இனிய பாடல்களைத் தந்தவர் மாஸ்டர் வேணு.
அதுமாத்திரமல்ல “மஞ்சள் மகிமை ” என்ற படத்தில்
01.மாறாத சோகம் தானோ
02.கோடை மறைந்தால் இன்பம் வரும்
03. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
போன்ற இசை அர்ப்புதங்களைத் தந்தவர் மாஸ்டர் வேணு.இன்றைய திரைப்பட நடிகர் பானுசந்தர் என்பவற்றின் தந்தை தான் இந்த இசைமேதை.
06. பிருந்தாவனமும் நந்த குமாரனும் – படம்: மிஸ்ஸியம்மா [1955 ] – பாடியவர்கள் : ஏ .ம் .ராஜா + பி.சுசீலா – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
பொங்கி பெருகும் காவேரி பற்றிய சித்திரம் தந்த அதே சுத்தசாவேரி ராகத்தில் இதம் தரும் தென்றலின் சுகம் தந்து நெஞ்சை அள்ளும் ஓர் பாடல் இது.சுத்த சாவேரி ராகத்தின் இனிமை ஒரு புறமிருக்க ஏ .ம் .ராஜாவும் . பி.சுசீலாவும் தேனை அள்ளி இறைத்தது போன்று இனிமை அள்ளிக் கொட்டிப் பாடிய பாடல். என்றென்று கேட்டாலும் இனித்துக் கொண்டே இருக்கின்ற சாகாவரம் பெற்ற பாடல்.
தமிழில் மட்டுமல்ல ஹிந்தி சினிமாவிலும் கலக்கு கலக்கிய பாடல்.முகம்மது ரபி ,லதா மங்கேஷ்கர் இணைந்து பாடிய இசை அர்ப்புதங்களில் ஒன்று.பொதுவாக மாற்று மொழிப்படங்கள் ஹிந்தியில் மறு பதிப்பாகும் போது , ஹிந்தி இசையமைப்பாளர்கள் பாடல்களையும் மாற்றுவது வழமை.இந்தப் பாடலின் இனிமையால் இந்தப் பாடலை அப்படியே வைத்துக் கொண்டதிலிருந்து இந்தப் பாடலின் இனிமையின் வலிமையை உணர்ந்து கொள்ளலாம்.ஹேமந்த் குமார் என்கிற இசை மேதை மிகச் சிறந்த ஹிந்தி இசையமைப்பாலர்களில் ஒருவர்.அவரே இந்தப் பாடலின் இனிமையில் மயங்கி அப்படியே வைத்துக் கொண்டதால் ஒரு இனிய பாடலை ஹிந்தி இசை ரசிகர்களும் அனுபவிக்க வாய்ப்புக் கிடைத்தது எனலாம்.
ஹிந்தியில் இந்தப் பாடல் ” Brindavan Ka Krishna Kanhaiya” என்று ஆரம்பிக்கும்.இருந்தாலும் இதன் இசையமைப்பாளரான எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்களுக்கு நாம் தலை சாய்த்து வணக்கம் சொல்ல வேண்டும்.Hands off to S.Rajeswararao.
07. மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி – படம்: கர்ணன் [1963 ] – பாடியவர் : பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
” மஞ்சள் முகம் நிறம் மாறி ” என்ற பாடலின் பின் பகுதியில் இடம் பாடல் இது.பொதுவாக சோக உணர்வை வெளிப்படுத்த உதவும் செனாய் வாத்திய இசையுடன் ஆரம்பிக்கும் சுத்தசாவேரி தரும் சுகமான பாடல்.இனிமையை முன் நிறுத்தி இசையை வளர்த்த மெல்லிசை மன்னர்களின் அற்ப்புதமான இசை வார்ப்பு.காட்சிகளின் தன்மையை விளக்க அதற்குப் பொருத்தமான ராகங்ககளைத் தெரிந்தெடுத்து இசை அர்ப்புதங்களை நிகழ்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
08. ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் – படம்: ராதா [1973 ] – பாடியவர் : பி.சுசீலா – இசை: சங்கர் கணேஷ்
ஊற்றெடுத்துப் பெருகும் சுத்தசாவேரி ராகத்தில் எடுத்த எடுப்பிலேயே அதன் இனிமையை வசப்படுத்தும் ஆரம்ப ,இனிய இசையுடன் ஆரம்பிக்கும் பாடல். உந்தி வரும் நீரின் அழகை கண்டு பேருவகை கொள்ளத்தக்க ராகத்தில் தந்த இசையமைப்பாளர்களின் அழகுணர்ச்ச்சியைப் பாராட்டலாம். பொங்கி வரும் காவேரி தாயிடம் இன்னிசைமீட்டி மாயவித்தை செய்வதெல்லாம் தங்கள் நல வாழ்வுக்காக்கவுமே.
“வாங்கண்ணே போவோமே நாமே” பாடலில் பொங்கி வரும் காவேரியை வாழ்த்திய அதே ராகத்தில் ஆடிவரும் இந்த காவேரிப் பாடல் அமைந்ததது வியப்பில்லை.
மனதைக் கவரும் ராகங்களில் இன்னிசை மீட்டி ,மனத்திரையில் சித்திரங்களை எழுப்பவல்ல , கலையின் நோக்கமே அழகைப்படைப்பது என்ற இயல்பில் தனது ஆளுமையை , தான் அனுபவித்த விதங்களில் எல்லாம் வெளிப்படுத்தி, நம் சிந்தையை மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தி இசை அறிவுச் சாலையை திறந்து வைப்பது இளையராஜாவின் இசை.
01. கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ – கிழக்கே போகும் ரயில் [1978 ] – மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
மெல்லிதாய் ஆரம்பிக்கும் பல்லவியை தொடர்ந்து ,ஆன்மாவை வருடும் சுத்த சாவேரி ராகத்தினிலிருந்து எழுந்து படரும் ஒலியலைகள் , ஆரம்ப இசையாக எழுந்து ராகத்தின் தூயவடிவாக அழியாப் பேரெழிலைக் கொண்டு வருகிறது. நாம் அதில் மயக்கி கிடக்கும் நம்மை ,தொடர்ந்து வரும் பின்னணி இசை ஆன்மாவைப் பூரணத்தில் பொலிவுறும் வண்ணம் நகர்த்தி , நகர்த்தி விடைபெற முடியாத இன்பத்தில் திளைக்க வைக்கின்ற இளையராஜாவின் கைவண்ணத்தை என்னவென்பது.!
02. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் – பட்டாக் கத்தி பைரவன் [1980 ] – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
03. மானாடக் கொடி பூவாடும் ஒரு சோலை – முதல் வசந்தம் [1980 ] – எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
மெல்லிசையின் ஒளிக் கற்றைகள் பட்டொளி வீசி , பிரகாசித்து ,அழகின் ஈட்டமாக அணிவகுத்து ,இன்பத்தின் எல்லையை விரித்து , நம்மை புது உலகிற்கு அழைக்கும் பாடல்.கிராமிய எழிலைக் கண் முன் நிறுத்தும் , மெருகும் வளமும் கொண்ட பின்னணி இசை ஆற்றோட்டமாக விரிந்து செல்லும் பாடல்.
ஊர்கோலம் போகும் வண்ணக்கிளி ஆலோலம் சொல்ல ,மேகத்தின் நாட்டியத்தை மனத்திரையில் ஓவியமாக வடித்த கற்பனை வளமிக்க பாடல்.எஸ்.ஜானகி பிரமிக்க வைக்கும் வண்ணம் அர்ப்புதமாகப் பாடிய பாடல்.
04. ராதா ராதா நீ எங்கே – மீண்டும் கோகிலா [1980 ] – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
பேராற்றல் மிக்க ராகத்தில் , தமிழர்களை நிமிர வைக்கும் , கற்பனைக்கு எட்டாத மெல்லிசையாக்கி , இதயங்களை கொள்ளை கொள்ளும் பாடல்.ராகங்களில் உறைந்து கிடக்கும் அழகுகளை எல்லாம் கண்டறிந்து,அதில் தோய்ந்து ,உணர்ச்சி துடிப்புடன், புதுமையாய் முழு நிறைவாய் தருவது இசைஞானியின் பாங்காகும்.
05. மலர்களில் ஆடும் இளமை புதுமையே – கல்யாண ராமன் [1979 ] – எஸ்.பி.சைலஜா – இசை: இளையராஜா
இளைய பூவின் சிரிப்புக்கு ,இனிக்கும் தேனில் ஊறும் ராகத்தில், இனிக்கும் குயில் பாட , இதயத்தில் மழை தூவும் இதமான பாடல். மற்ற எல்லா இசையமைப்பாளர்களும் பயன் படுத்திய அதே வாத்தியங்களில் புதிய ஒலி அலைகளை எழுப்பிக் காட்டி ,கனிந்து வரும் இசைகளைத் தந்த இளையராஜாவின் பாடல்.
06. காதல் மயக்கம் கண்கள் துடிக்கும் – புதுமைப்பெண் [1984 ] – ஜெயச்சந்திரன் + சுனந்தா – இசை: இளையராஜா
ஒரு ராகத்தில் தான் எத்தனை , எத்தனை அதிசயம் தருகின்ற கற்பனை!! வளம் மிக்க கற்பனையில் ராகத்தின் சொரூபத்தை எளிதில் கோடிட்டுக் காட்டும் வல்லமையும் ,பிரமிப்பும் காட்டும் பாடல்.
ராகத்தின் செழுமையுடன் , இணைப்பிசை கொள்ளும் இனிய உறவில் வளம் பெற்று , அதன் உள்ளுறைவில் பதுங்கிய ஜாலங்களை உயிரில் கலந்த பாடல்களாக்கும் வல்லமை மிக்க இசைஞானியின் இசைக்கொடை இந்தப் பாடல்.
07. பூந்தென்றல் காற்றாக பூஞ் சோலை வண்டாக – மணம் மாறாத மல்லிகை [1984 ] – சீதாராமன் + சுசீலா – இசை: இளையராஜா
மீண்டும் ஒரு இனிய பாடல்.ராதா ,ராதா நீ எங்கே என்கிற பாடலின் சாயல் கொஞ்சம் இருந்தாலும் தனி த்துவத்துடன் விளங்கும் பாடல். புதிய பாடகர் சீதாராமன் பாடிய பாடல்.வழமையான இனிய பின்னணி இசை கொண்ட அழகான பாடல்.
08. இன்னருள் தரும் அன்னப்பூரணி – ஆத்மா [1984 ] – T .N .சேஷகோபாலன் – இசை: இளையராஜா
கர்னாடக இசை உலகில் புகழ் பெற்ற மதுரை T .N .சேஷகோபாலன் மிக எழுச்சியுடன் பாடிய , அருமையான பாடல்.அகம் குளிர வைக்கும் செவ்வியல் இசை முறையில் இசையமைக்கப்பட்ட பாடல்.இது போன்ற செவ்வியல் இசை ராகங்களை அவ்வப்போது இனிமை கலந்து இளையாராஜா ஒருவரே இன்னிசை ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கின்றார்.சுத்தசாவேரி சுத்தமான இனிமையை இங்கு அனுபவிக்கலாம்.
09. மணமகளே மணமகளே – தேவர் மகன் [1992 ] – மின்மினி +சுவர்ணலதா + குழுவினர் – இசை: இளையராஜா
மரபிசையின் கூறுகளிலிருந்து புதிய திசைகளில் தருவதுடன் ,வித்தியாசமான இசைக்கருவிகளையும் அதனுடன் இணைத்துப் புதிய இசை மரபை விளைபொருளாக உருவாக்குவதில் இந்திய இசையின் இயக்கமுள்ள சான்றாக இருப்பவர் இளையராஜா.
இந்தச் சிறிய பாடலில் வட இந்திய செவ்வியல் வாத்தியமான செனாய் என்ற வாத்தியத்தை பயன்படுத்திய முறை இந்திய மரபிசையின் ஆன்மாவிற்கு தனது இசை மூலம் வடிவம் கொடுத்தார் என கூறலாம்.
10. சண்டியரே சண்டியரே – விருமாண்டி [2008 ] – ஸ்ரேயா கோசல் + சாதனா + குழுவினர் – இசை: இளையராஜா
சுத்தசாவேரி ராகத்தில் கிராமிய வாசம் ஏற்றப்பட்ட ,செழிக்கும் மேலைத்தேய இசையின் மெல்லிய வருடலும் , கோரஸ் இசையின் லாவண்யமும் பின்னிப்பிணைந்து சங்கமிக்கும் பாடல்.
11. சித்த கத்தி பூக்களே – ராஜகுமாரன் [1994] – எஸ்.பி.பாலசுபிரமணியம் + சித்ரா – இசை: இளையராஜா
1990 களுக்கு பின்வந்த படங்களில் ராஜா அமைத்த இனிமையான பல் பாடல்களில் இதுவும் ஒன்று.
ராகங்களின் தொனிகளை வைத்துக் கொண்டு எத்தனை எத்தனை விதமான , மனதைப் பிணிக்கின்ற பாடல்களாக தந்திருக்கின்றார் என்பது நம்மை வியக்க வைப்பததாகும்.
தொடரும்…