ஹம்சானந்தி தமிழ் செவ்வியல் இசையில் 53 வது மேளகர்த்தா ராகமான கமனச்சரம வின் சேய் ராகமாகும். கமனச்சரம வின் இன்னுமொரு சேய்ராகமான பூரிகல்யாணி அல்லது பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி போன்ற இராகங்கள ஹம்சானந்திக்கு மிக நெருக்கமானவை எனக் கருதப்படுகின்றன.
ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகத்தை பூரிசோகினி அல்லது சோகினி என்று அழைக்கின்றனர்.ஹிந்துஸ்தானி இசை மேடைகளில் பிரபல்ய ராகமாகவும் விளங்குகின்றது.
செவ்விசை மரபில் மாலையில் பாடுவதற்கு உகந்த ராகமாகக் கருதப்பட்டாலும் ,சினிமாவில் மென்மையான , இரக்க சுபாவ உணர்வுகளை வெளிப்படுத்த இந்த ராகம் அர்ப்புதமாகப் பயன்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது.
கர்னாடக இசையில் ” பாவன குரு பவன புர ” என்ற பாடல் புகழ் பெற்றது.இந்தப்பாடலின் தமிழ் வடிவமான ” தூய நற்குரு துணையருளினை ” என்ற பாடலும் புகழ் பெற்றதே.
மரபிசையை ஒரே போக்காக பயன்படுத்தாமல் அதன் நுண் கூறுகளை ஆதார சக்தியாக எடுத்துக் கொண்டு புதிதாக ,எல்லோரும் ரசிக்கும் வண்ணம் பாடல்களைத் தர சினிமா இசையமைப்பாளர்கள் சிலர் முயன்றார்கள்.ஹம்சானந்தி போன்ற ராகங்களிலும் அந்த
முயற்ச்சிகள் வெற்றி பெற்றன என்றே சொல்லலாம்.
திரை இசையில் புதுமை விரும்பும் இசையமைப்பாளர்கள் சிலர் இந்த ராகத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மிக அருமையான பாடல்களைத் தந்து சென்றுள்ளார்கள். சிறிய வட்டத்துக்குள் வீணாக கிடந்த ராகங்களை அவர்கள் ஊர் சுற்ற விட்டார்கள்.ஊர் சுற்றிய ராகங்கள் பலவிதமான மனிதர்களின், இசை ரசிகர்களின் காதுகளிலும் நுழைந்து இன்பம் ஊட்டின.மேல்த்தட்டு மக்களில் ஒரு சிலருக்கே இசைவானதாக இருந்த சாஸ்திரீய இசை ராகங்கள் லட்சக்கணக்கான மக்களின் காதுகளில் இலகுவான பாடல்களாக ஒலித்து மகிழ்வூட்டின. பின்னாளில் இசை மேதைகளாக வளர்ந்த பல கலைஞர்களது உத்வேகம் இப்படிப்பட்ட ஜனரஞ்சக இசை வடிவங்களிலிருந்தே உயிர் பெற்றன.
இந்த ராகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமைந்த பாடல்களே திரைப்படங்களில் வெளிவதுள்ளன.ஹம்சானந்தி ராகத்தை மக்கள் மத்தியில் மெல்லிசையில் பயிற்றுவிக்க தக்க , புதிய கிளர்ச்சியை உண்டாக்கும் , அதே நேரம் ராகத்தின் அடிப்படைக்கூறை நேர்த்தியாக , உணர்ச்சி என்ற உயிர்த் துடிப்புடன் வெளிப்படுத்திய பாடல்களைப் பார்ப்போம்.
ஹம்சானநதி ராகம் திரையுலகில் 1950 களிலும் ,1960 களிலும் புது தினுசாக பயன்பட ஆரம்பித்தாலும் ,1940 களிலேயே சில பாடல்கள் வரன்முறையாக வெளியாகி இருக்கின்றன.எனது தேடலில் கிடைத்த ஆரம்ப கால பாடல்கள் 1940 களில் வெளிவந்த இரண்டு பாடல்களை இங்கே தருகின்றேன்.
01 . உதை வாங்காதே உடம்பு தாங்காதே – படம்: பிரபாவதி [1944 ] – பாடியவர்கள்: N.S.கிருஷ்ணன் + T.Aமதுரம் இசை: ———
கலைவாணர் என்று பெயர் பெற்ற சிறந்த ஆற்றல் மிக்க கலைஞரான N.S.கிருஷ்ணன் + T.Aமதுரம் இணைத்து பாடிய நகைச்சுவைப் பாடல். ஹம்சானந்தி ராகத்தில் ஒரு நகைச்ச்சுவைப் பாடலை அந்தக் காலத்திலேயே தந்து ஆச்சரியப்படுத்திய பாடல் என்பேன்.N.S.கிருஷ்ணன் தனது பாணியில் கோமாளித்தனத்தை அற்ப்புதமாக வெளிப்படுத்தினாலும் பாடல் முடிவில் ஹமசானந்தியின் அழகு தெரியும் வண்ணம் கைதேர்ந்த பாடகர் போல முடிப்பது அருமை.நகைச்சுவையிலும் அறிவு பூர்வமான கருத்துக்களை சொன்னவர் இசையிலும் அந்த ராகத்தின் சுவையை அலட்டிக்கொள்ளாமல் உணர்த்துகிறார்.
02 . பேராளா பிறைமதி அணி சடை பேராளா – படம்: பரஞ்சோதி [1945] – பாடியவர்கள்: T.P.ராஜலட்சுமி இசை: ————–
தமிழ் திரை உலகின் முதல் கதாநாயகி என்று பெயர் பெற்ற T.P.ராஜலட்சுமி பாடிய பாடல்.1940 களில் ஒலித்த பக்திப் பாடலில் ஹம்சானந்தியின் சுகத்தை அனுபவிக்கலாம்.
03 . தேசுலாவுதே தேன்மலராலே – படம்: மணாளனே மங்கையின் பாக்கியம் [1957] – பாடியவர்கள்: கண்டசாலா + P.சுசீலா இசை: ஆதிநாராயண ராவ்
மென்மையும் ,இனிமையும் இணையும் அதே நேரம் அசாத்தியமான சங்கதிகளையும் கொண்ட கொண்ட பாடல்.திரையுலகில் ஹம்சானநதி ராகத்திற்கு ஒரு நிலைத்த புகழை தேடி தந்த பாடல் என்று கூடச் சொல்லலாம்.
தமிழிலும் , தெலுங்கிலும் [ சுவர்ணசுந்தரி என்ற பெயரில் ] வெளியான படம் மணாளனே மங்கையின் பாக்கியம்.பின் சுவர்ணசுந்தரி என்று ஹிந்தியிலும் வெளியான படம்.அந்த படத்தில் இடம் பெற்ற சிறந்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்.கண்டசாலாவும் , P.சுசீலாவும் இணைந்து அற்புதமாகப் பாடிய பாடல்.தெலுங்கில் கண்டசாலாவும் , ஜிக்கியும் இணைந்து பாடினார்கள்.குறிப்பாக கண்டசாலா தன்னிகரற்றுப் பாடி அசத்திய பாடல் என்பேன்.
ஹம்சானந்தியில் ஆரம்பித்து அழகுகளைக் காட்டும் பாடல் கல்யாணியில் மங்களகரமாக நிறைவுறுகிறது.” மனதைப் போல் மலருமே குமுதமே ” என்று கல்யாணி ராகத்தில் மிக்க கனிவாக பாடலுக்குரிய கனிவை கலைக்குரிய தகுதியாக தந்து நிறைவு பெறுகிறது.
ஹிந்தி பதிப்பில் இந்த பாடலைப் பாட அழைக்கப்பட்ட முகம்மது ரபி [ Muhammed Rafi ] , கண்டசாலாவிற்கு ஈடாக தன்னால் பாடுவதற்கு செவ்வியல் இசையில் இவ்விதமான பயிற்சி இல்லை என்றும் , இதை பாட மன்னா டே [manna dey ]என்ற பாடகரை அமர்த்துங்கள என்று கூறி மறுத்ததாகவும் ,ஆயினும் இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவ் ,முகம்மது ரபி தான் பாட வேண்டும் என்றும் கால அவகாசமும் ,பயிற்ச்சியும் கொடுத்து அவரைப் பாட வைத்தார்.ரபியுடன் இணைந்து பாடியவர் லதா மங்கேஸ்கர்.
முகம்மது ரபியும் லதாமங்கேஷ்கரும் இணைந்து பாடிய இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்றாகி விட்டது.
ஆனாலும் கண்டசாலா பாடும் சங்கதிகள் விசேடித்துக் குறிப்பிடும் படியாக அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.
மெல்லிசையின் முன்னோடிகளில் ஒருவரான AM ராஜா வின் அருமையான இசையமைப்பில் வெளிவந்த பாடல்.மிக , மிக அருமையான ஹம்சானந்தி ராக ஆலாபனை முன்னீட்டுடன் ஆரம்பிக்கும் பாடல்.இழைந்து வரும் இனிய இசைக்குக் கட்டியம் கூறுவது போல இனிமைக்கு மூல காரணம் AM ராஜாவின் இனிய குரலே என்று துணிந்து கூற வைக்கும் பாடல்.பாரம்பரிய வாத்திய இசையுடன் விரிந்து செல்லும் எஸ்.ஜானகியின் ஈடிணையற்ற ஹம்மிங் பாடலின் மிகப்பெரிய பலம்.
அனுபல்லவி கடந்த பின் சரணத்திற்கு முன் வரும் வாத்திய இசை பொங்கிப் பிரவகித்து ஹம்சனந்தியின் பேரெழிலை காட்டி நிற்கும்.அதுமட்டுமல்ல ” மனதில் மேடை அமைத்தவள் நீயே மங்கல் நாடகம் ஆட வந்தாயே ” என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் பாடகர்களின் ஹம்மிங் AM ராஜாவின் படைப்பாற்றலின் ரகசியத்தை , உன்னதத்தை வெளிபடுத்தி நம்மை பரவச நிலைக்கு இட்டு சென்று மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.மனசு நிறையும் பாடல்.
05 . என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் – படம்: கர்ணன் [1964] – பாடியவர்கள்: PB ஸ்ரீநிவாஸ் இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
சாரங்கி என்ற வட இந்திய தந்தி வாத்தியத்தின் ஆரம்ப இசையுடன் ஆரம்பிக்கும் உருக்கமான பாடல்.மெல்லிசைமன்னர்களின் அழகான ஹம்சானந்தி வார்ப்பு.
இசைத்தட்டில் ” மழை கொடுக்கும் கொடையும் ” என்ற பாடலின் நடுவே வரும் பாடல்.தமிழ் திரையுலகின் நான்கு புக்ழ்பெற்ற பாடகர்கள் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்.படத்தில் தனித்தனியே கர்ணனை வாழ்த்துவதாக அமைக்கப்பட்ட பாடல்.அந்த பாடல் வரிசையில் மிக உருக்கமாகப் பாடப்படும் பகுதி இந்தப் பாடலாக அமைந்துள்ளது.
படத்திலும் நெகிழ்ச்சியான காட்சியாக இருக்கும்.கொடை வள்ளலான கர்ணனிடம் இந்திரன் தானம் கேட்டு வரும் காட்சி .கர்ணனின் உடலோடு ஒட்டிய கவசத்தையும் , செவியோடு சேர்ந்த குண்டலத்தையும் தானமாகக் கேட்டு , பாண்டவர்களுக்கு எதிரான போரில் கர்ணனை செயலிழக்க வைக்கும் சதி என்று தெரிந்தும் கர்ணன் தனது உயர்ந்த குணத்தால் தானம் கொடுக்கும் காட்சி.
பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மிக அற்ப்புதமாகப் பாடிய பாடல்.உருகாதவர்களையும் உருக வைக்கும் என்று சொல்ல வைக்கும் இசையமைப்பு.இதன் இனிமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.
” தன்னைக் கொடுப்பான் தன்
உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே ” என்ற வரிகளைப் பாடும் போது உள்ளம் பரவசமாகி விடும்.
06 . நினைத்தால் போதும் பாடுவேன் – படம்: நெஞ்சிருக்கும் வரை [1968] – பாடியவர்கள்: S.ஜானகி இசை: M.S.விஸ்வநாதன்
M.S.விஸ்வநாதனின் ஆழ்ந்த இசைப் பொலிவில் முகிழ்த்த பாடல்.வேகமும் ,இனம்புரியாத சோகமும் ததும்பும் பாடல்.இலங்கை வானொலியில் இந்தப் பாடலைக் கேட்கும் கேட்கும் தருணமெல்லாம் ஒரு பெண்ணின் அவலக் குரல் என்னை வாட்டும்.எஸ்.ஜானகி அவர்கள் அருமையாக பாடியுள்ளார்.
07 . குழலும் யாழும் குரலினில் ஒழிக்க – பக்தி பாடல் – பாடியவர் : KJ ஜேசுதாஸ் இசை: M.S.விஸ்வநாதன்
அன்னை மேரியை பற்றிய அற்ப்புதமான பாடல்.ஹம்சானந்தி ராகத்திற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லத் தக்க பாடல்.KJ ஜேசுதாஸ் மனதை வசீகரிக்கும் குரலில் பாடிய அருமையான பாடல்.இலங்கை வானொலி தவிர்ந்த வேறு எங்கும் இந்தப் பாடலை நான் கேட்டதில்லை.மாமேதை மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் திறனைப் பறைசாற்றும் பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.
08 . போட்டு வைத்து பூ முடிக்கும் நிலா – படம் : நினைத்தேன் வந்தாய் – பாடியவர் : SPB + சுவர்ணலதா இசை: தேவா
இளையராஜாவின் இசையமைப்பு முறையில் இசையமைப்பாளர் தேவ அமைத்த இனிமையான் பாடல்.இளையராஜாவின் “சம்மதம் தந்திட்டேன் நம்பு ” என்ற பாடலை ஞாபகப் படுத்தும் பாடல்.
09 . நினைத்து நினைத்து பார்த்தால் – படம் : 7G ரயின்போ காலனி – பாடியவர் : Sஸ்ரேயா ஹொஷல் இசை: யுவன் சங்கர் ராஜா
இசையமைத்தவர் யார் என்று தெரியாமல் நான் ரசித்த பாடல்.ராகமாலிகா என்ற இசை நிகழ்ச்சியில் TL.மகாராஜனின் மகளும் , SN.சுரேந்தரின் மகளும் இணைந்து பாடினார்கள்.அவர்கள் பாடி அசத்தினார்கள் என்று தான் சொல்வேன்.அதன் பின்னே தான் அதன் ஒரிஜினல் பாடலை தேடி கேட்க நேர்ந்தது.என்ன அருமையான இசையமைப்பு.கேட்கும் போது உருக வைத்தது.ஆண் குரலிலும் இந்தப் பாடல் உண்டு.ஆனால் பெண் குரலில் ஒலிக்கும் பாடல் மனதை வதைக்கும்.
இந்தப பாடலில் புத்தம் புது பூ பூத்ததோ , பிறையே பிறையே போன்ற பாடல்களின் சாயல் இருக்கும்.யுவன் ரகுமானின் ஒளிவட்டத்தில் மயங்காமல் இது போன்ற நல்ல பாடல்களை தரலாம்.
1980 களிலிருந்து ஹம்சானந்தி ராகத்தில் பல இனிமையான பாடல்களைத் தந்த பெருமை இசைஞானி இளையராஜாவைச் சேரும்.பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அதிகம் பயன்படுத்தாத ராகங்களில் ஒன்றாக இந்த ராகம் இருந்த நிலையில் அதனை ஒரு சவாலாக ஏற்று தனது இசைத்தடத்தை வெற்றிகரமாகப் பதித்து சென்ற இசையில் பேராசைக்காரன் இளையராஜா.
மிகப்பெரிய இசைமேதைகள் எல்லாம் பயன்படுத்தத் தயங்கிய ஒரு ராகத்தை அதிகமாக பயன்படுத்தியது மட்டுமல்ல, ” வேறு ஒரு இசையின் நலன்களைக் கொண்டே , இன்னொரு இசையின் நலங்களை ,அதன் செல்வங்களை வெளிப்படுத்துவது என்பது எல்லோருக்கும் இசைவதில்லை” என்ற கூற்றை மாற்றி தன்னால் முடியும் என்று நிலைநாட்டியவர் இளையராஜா.மேலைத்தேய இசை நுணுக்கங்களை அனாயாசமாக நமது ராகங்களில் இணைவாக பொருத்திய மேதமை என்றென்றும் வியக்க வைப்பதாகும்.அவரது இசையை ரசிக்கும் சாதாரண ரசிகர்களுக்கு எளிமையாகவும் , விஷயமறிந்தவர்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில் இந்த ராகத்தில் பாடல்களை பொலிவுறத் தந்த பெருமை இளையராசாவையே சேரும் இது வெறும் புகழ்ச்சியில்லை.
கர்னாடக இசைக்கலைஞர் மதுரை T.N.சேஷகோபாலன் பின்பருமாறு கூறுவார்.
” அவரை நான் ரசிக்கிறது என்னான்னா கர்நாடக் சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலேயும் என்னென ராகங்கள் explore பண்ணலேயோ அந்த ராகங்களை காதல் பாடலாகவும் ,வேறு பல பாடல்களாகவும் ஆக்கி ,அதிலே Brilliance காட்டக்கூடிய மாதிரி Melodical ஆக கொடுத்ததிருக்கார்….. குறிப்பாக ஹம்சானந்தி ராகத்திலே , அதற்க்கு முக்கியமான காரணம் என்னுடைய குரு நதரின் குருநாதர் ஆன பரமகுரு ஹரிகேசநல்லூர் முத்தைய்யா பாகவதர் அவர்கள் தான் ஹம்சானந்தி யை பிரபலப்படுத்தினார்.” பாகி ஜனனி பாகிமாம் ” என்ற சுவாதித்திரு நாளின் கீர்த்தனை , மற்றும் அதுக் அப்புறம் பாபநாசம் சிவனுடைய் ” ஸ்ரீனிவாஸ் திரு வெங்கட மு ” [ எல்லாவற்றியும் பாடிக் காண்பிக்கின்றார் ] இதெல்லாம் பெரியவா போட்டாங்க.
அவர் மட்டுமல்ல கர்னாடக இசை விமர்சகரான சுப்புடு ” உண்மையில் அவன் ராகதேவன் தான்யா : அவனைப்போல் கல்யாணியையும் ,ஹம்ச்சனந்தியையும் இவ்விதம் கும்பாபிசேக்கம் செய்தவன் யாருமில்லை ” புகழ்ந்தார்.
அதனால் தான் மலையாளிகள் ” இசையில் பெரியராஜா இளையராஜா ” என வியந்து போற்றுகின்றார்கள்.
01 . ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ – படம்:பயணங்கள் முடிவதில்லை – பாடியவர் : SPB இசை: இளையராஜா
மரபிசையில் கொஞ்சநேரம் பாடிப் பாடியே தான் இந்த ராகத்தின் சிறப்புக்களை வெளிப்படுத்துவார்கள்.ஆனால் இந்தப் பாடலின் பல்லவியிலேயே ராகத்தின் அழகுகள் துல்லியமாக தெரியும் வண்ணம் சிறைப்பிடித்திருக்கும் ஆற்றல் வியப்புத் தரும்.பாடலில் ராகமும், வாத்தியஇசை இணைப்பும் உயிர்நிலையில் தங்கவைத்துள்ளது.
03 . நீ பாடும் பாடல் எது – படம்:எங்கேயோ கேட்ட குரல் – பாடியவர் : S.ஜானகி இசை: இளையராஜா
பெண் கதாபாத்திரத்தின் மன அவலத்தை, உணர்ச்சி கொந்தளிப்பை வெளிப்படுத்தும் பாடல்.
03 . ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – படம்:தங்கமகன் – பாடியவர் :SPB + S.ஜானகி இசை: இளையராஜா
அற்ப்புதமான ஒரு காதல் பாடல்.பொங்கி பிரவகிக்கும் பேராறு வளைந்தோடி மலர்க்காடுகளை வனப்பாக்கி , பலவண்ண பூக்களையும் சுமந்து , பேரழகு காட்டி வருவது போல, ஹம்சானந்தி ராகத்தில் புது வண்ணம் காட்டியும் ,வாத்திய இசையில் வேகமும் ,நளினமும் , வாத்தியங்களை நுணுகி அறிந்து புதுமையும், இளமையும் மிக்க பாடலாய் தந்த இசைச் சிற்பியின் சிருஸ்டி எழில்மிக்க பாடல்.எனது பதின்ம வயதில் ஹம்சானந்தி ராகத்தில் ஒருவித மிதப்பை தந்த பாடல்.என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியபாடல்.ராகத்தை அறியாதவர்களை ரசிக்க வைக்கவும் ,ராகம் அறிந்தவர்களை வியக்கவும் வைக்கும் பாடல்.இந்த ராகத்தின் ஜீவனை கணப்பொழுதில் தேனாகத் தரும் பாடல்.
04 . வேதம் அணுவிலும் ஒரு நாதம் – படம்:சலங்கை ஒலி – பாடியவர் :SPB + S.Pசைலஜா இசை: இளையராஜா
ஹம்சனந்தியின் மூலாதாரத்தை வைத்துக் கொண்டு ஆவேசம் , துயரம் , இரக்கம் , வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வலி என பல்வகை உணர்வுகளைத் தரும் படைப்பாற்றல் மிக்க , திகைக்க வைக்கும் பாடல்.கற்பனைகளின் அதி உச்சம் காட்டும் பாடல்.
05 . வானம் இடம் மாறும் – படம்:தாவணிக் கனவுகள் – பாடியவர் :SPB + S.ஜானகி இசை: இளையராஜா
இதயத்தை உலுக்கிய பாடலுக்கு நேர் எதிர் மாறாக வரும் காதல் பாடல்ஒரே ராகத்தில் எத்தனை எத்தனை வண்ணங்கள் காட்டும் ராஜாவின் இசைப்பலம் காட்டும் பாடல்.
06 . புத்தம் புது பூ பூத்ததோ – படம்:தளபதி – பாடியவர் :KJஜேசுதாஸ் + S.ஜானகி இசை: இளையராஜா
இதயத்தை வருடும் ஹம்சானந்தி பாடல்.கண் பேசும் மௌனத்தை இசையில் வடித்த மெல்லிசைப் பாடல்.பழமையில் ஒளிந்து கொள்ளாத நிலையிலிருந்து விலகி,அதிலிருந்து புதுமையை கம்பீரத்துடன் தரும் அதே நேரத்தில் மலரின் வாசம் போல் விவரிக்க முடியாத சுகம் தரும் பாடல்.மனசு நிறையும் பாடல்.
07 . ஒரு பூஞ்சோலை ஆளானதே – படம்:வாத்தியார் வீடு பிள்ளை – பாடியவர் :SPB + சித்ரா இசை: இளையராஜா
ஏகாந்தத்தில் மிதக்க வைக்கும் பாடல்.எழிலும் ,கவர்ச்சியும் ,இனிமையும் கலந்து பளீச் என பகட்டில்லாமல் ஹம்சானந்தியை காட்டும் பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் என்பேன்.இது போன்ற பாடல்களை காலம் என்ற துருப்பிடிக்காது.
08 . ஓர் பூமாலை அதில் தேன் – படம்:இனிய உறவு பூத்தது – பாடியவர் :மனோ + சித்ரா இசை: இளையராஜா
எத்தனை எத்தனை விதமான மெட்டுக்கள் போட்டாலும் அதில் புதுமையும் இளமையும் இனிமையும் இணைந்த ஹம்சானந்தி நம்மை வசீகரிக்கும்.அந்தவகையில் இந்தப் பாடலும் ஒன்று.இசையில் Novelty காட்டும் அற்புதமானதொரு பாடல்.
09 . வாழ்க்கை ஓடம் செல்ல – படம்:அவள் அப்படித்தான் – பாடியவர் :எஸ்.ஜானகி இசை: இளையராஜா
அதிகம் பேசப்படாத பாடல் என்றாலும் இசையமைப்பில் சோடை போகாத இனிய பாடல்.இரண்டாயிரம் ஆண்டுகளில் வெளியாகி இருக்க வேண்டிய பாடல் 1980 களிலேயே வெளியாகியமை வியப்புக்கிரியது.
10 . கானக் குயிலே கானக் குயிலே – படம்:பூஞ்சோலை – பாடியவர் :உன்னி கிருஷ்ணன்+ பவதாரிணி – இசை: இளையராஜா
ஹம்சானதிக்கு எடுத்துகாட்டாக காட்டக் கூடிய பாடல்.அழகிய மெல்லிசை வார்ப்பு.உன்னி கிருஷ்ணன்+ பவதாரிணி இருவரும் அழகாகப் பாடிய பாடல்
12 . வா வா அன்பே அன்பே – படம்:அக்னிநட்சத்திரம் – பாடியவர் :KJ ஜேசுதாஸ் + S ஜானகி – இசை: இளையராஜா
ஆச்சரியம் தரும் ஹம்சானந்தி ராகப் பாடல்.இளையராஜாவின் படைப்பின் விந்தையை வியக்க வைக்கும் அதி உன்னத கற்பனையை நாம் உணர தந்த பாடல்.ஒரு ராகத்தில் எத்தனை எத்தனை இசை நெசவுகள் !?அவர் சாதாரண சினிமா இசையமைப்பாளாரா? என வியக்க வைக்கும் பாடல்.
ஈடில்லா இன்பம் தந்து உவகை ஊட்டும் எத்தனை எத்தனை பாடல்கள். இதயம் முழுதும் நமது வசமாகும் பாடல்.
13 . சம்மதம் தந்திட்டேன் நம்பு – படம் : காதல் தேவதை – பாடியவர் : SPB + சித்ரா இசை: இளையராஜா
புதுவித தாள லயத்தில் ஹம்சானந்தி அலை, அலையாக மிதக்கும் பாடல்.ராகங்கள் கோடி கோடி எதுவும் புதில்லை ,ஆனால்
ராஜாவின் இசையில் புதியதாக ஒலிக்கும் அதிசயம் நிகழ்கிறது.
10 . பிறையே பிறையே வளரும் பிறையே – படம்:பிதாமகன் – பாடியவர் :மதுபாலகிருஷ்ணன் – இசை: இளையராஜா
கருமேகங்கள் சூரியனை மறைப்பது போன்று இருள் படிந்த மன நிலையை விளக்கும் ஹம்மிங் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல் .சோகத்தை நிழலாட வைக்கும் பேரின்ப இசை மெதுவாக வெளிப்பட்டு நம்மை ஆதிக்கம் செய்யும் . உயிரினிக்கத் தரும் தேனிசை மனதை வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.இந்த பாடலில் ” புத்தம் புது பூ பூத்ததோ ” பாடலின் சாயலும் ” வாழ்க்கை ஓடம் செல்ல” என்ற பாடலின் சாயலும் மெதுவாக தெரியும்.
ஹம்சனந்தி ராகமும் பூர்விகல்யாணி ராகமும் :
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல தமிழ் செவ்வியல் இசையில் 53 வது மேளகர்த்தா ராகமான கமனச்சரம வின் இன்னொரு சேய் ராகமான பூர்விகல்யாணி என்கிற ராகம் ஹம்சானந்திக்கு மிக நெருக்கமான ராகம் ஆகும். எனினும் ஹம்சானந்தி அளவுக்கு இந்தராகத்தில் சினிமாப் பாடல்கள் இல்லை என்றே சொல்லலாம்.
ஒரு தாய் பெற்ற பிள்ளைகளில் ஒரு சில பிள்ளைகள் புகழ் பெறுவது போலவே இதனை எடுத்துக் கொள்ளலாம்.
சுத்தானநத பாரதியின் “காரணம் கேட்டு வாடி” மற்றும் தியாகையரின் ” பரிபூர்ண காம” போன்ற பாடல்கள் புகழ் பெற்றவை.புகழ் பெற்ற நல்ல பாடலகள இருப்பினும் இந்த ராகத்தின் தோற்றம் பற்றிய குழப்பமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்த ராகத்தின் முன் வரும் பெயரான் ” பூர்வி ” என்ற பெயரில் ஒரு ராகம் இருந்தது என “ராக தரங்கிணி ” என்ற நூலும் [ 14 ம் நூற்றாண்டு ] , மற்றும் “ஸ்த்ரதல சந்த்ரோதய ” என்ற [17 ம் நூற்றாண்டு ] நூல் மாயாமாளவ கௌளை என்ற ராகத்தின் ஜன்ய ராகம் எனவும் குறிப்புக்கள் தருகின்றன.
இன்னுமொரு செய்தியை TV சுப்பராவ் என்கிற இசையறிஞர் தனது ” ராகநிதி ” என்ற நூலில் “பூர்வி ” என்பது ஹிந்துஸ்தானி ” பூர்வி” க்கு பொருந்துகிறது என்ற குறிப்பைத் தருகிறார்.அதாவது இந்த ஹிந்துஸ்தானி ” பூர்வி” தமிழிசையில் பயன் படும் பந்துவராளி [ அல்லது காமவர்த்தினி ] ராகத்திற்க்குச் சமமான ராகம் என்கிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களில், பண் வகையில் சாதாரி என அழைக்கப்படுவது இன்றைய பந்துவராளி ஆகும்.ஆனால் பூர்விகல்யாணிக்குரிய “பண்” இல்லை என்றாலும் தேவாரங்களில் பாடப்படுகிறது என்கிறார்கள்.
இந்த குழப்பங்களை ஆய்வாளர்களுக்கு விட்டு விடுவோம்.
பூர்விகல்யாணி ராகம் ஹம்சனந்திக்கு மிக நெருக்கமானது என்று பார்த்தோம் அந்த வகையில் தமிழ் திரைப் பாடலகளில் நான் கேட்ட [ என் கேள்வி ஞானத்தில் ] ஒரு பாடல் :
சிலர் இந்தப் பாடலை பந்துவராளி ராகம் என்றும் சொல்லலாம்.
01 . அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு – படம் :காலங்களில் அவள் வசந்தம் 1976 – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை : விஜயபாஸ்கர்
மிக அருமையாக , அந்த பாடலின் உணர்வை வெளிப்படும் படியாக வாணி ஜெயராம் பாடிய பாடல்.1970 களில் தமிழ் சினிமாவில் நல்ல பல பாடல்களைத் தந்த விஜயபாஸ்கர் தந்த ரசனை மிக்க பாடல்.
தொடர்ந்து இந்த ராகங்களின் சாயலைக் கொண்டுள்ள சில ராகங்களைப் பார்ப்போம்.
[ தொடரும் ]