Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 26 ] : T.சௌந்தர்.

ராகமாலிகை.:

மரபு ராகங்களின் உள்ளோட்டங்களில் புதைந்த இன்பங்களை நமது திரையிசையமைப்பாளர்கள் இதயத்தை வருடும் பாடல்களாக்கித் தந்திருக்கிறார்கள்.புராதன ராகங்களிலிருந்து அமுதம் கடைந்து அயர்வில்லாத ஊக்கத்தோடு அவர்கள் தந்த நல்லிசை நயத்தால் விளைந்த பயன்கள் ஏராளம்!

தங்களுக்கு எட்டாதென்று , அன்னியப்படுத்தப்பட்டு , கர்னாடக இசை வித்துவான்களால் துரத்தியடிக்கப்பட்ட சாதாரண இசைரசிகர்களை புதிய அணுகுமுறைகளால் கவர்ந்திளுத்தார்கள்.திரும்பத் திரும்ப ஒப்புவிக்கின்ற இசைவித்தையாக அல்லாமல் ராகங்களை படைப்பாற்றலின் உந்துசக்தியாக கருதி செயல்பட்டவர்கள் சினிமா இசையமைப்பாளர்களே!

இதமும், மென்மையும், இனிமையுமிக்க மெல்லிசை கானங்களால் மனம் லயிக்கவைத்து.அதனூடே , ராகங்களின் இனிமையை ரசிக்க வைத்ததுடன் ,அதன் விளைபயனால் செவ்வியல் இசையை ரசிக்கும் ஓர் உள்நுழைவு படியையும் அமைத்துக் கொடுத்ததில் சினிமா இசையமைப்பாளர்களின் பங்கு மிகப்பெரியது.

ராகங்களின் அடிப்படையை மாற்றாத ,இலக்கணப் புலமையோடியைந்து புதிய உருவம் பெற்ற இசை திரையில் மலர்ந்தது.அது பாமரரசிகனை மட்டுமல்ல கட்டுபெட்டியான வித்துவான்களையும் சலனப்பட வைத்தது.

செவ்வியலிசையின் மறுவார்ப்பாக இருந்த 1940 களின் திரையிசையில் கர்னாடக இசைக்கலைஞர்கள் ஆங்கங்கே பாடினார்களெனினும் பரந்த இசை ராசிகளின் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடியவில்லை.

1950 , 1960 களில் சினிமாவில் பாடல்களைப் பாடிய பாடகர்களின் புகழ் அவர்களுக்கு பரந்த ரசிகர் வட்டத்தையும் ,அதனால் அவர்கள் பெற்ற மவுசும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

சமூகப் பொறுப்பற்ற கர்னாடக இசை வித்துவான்கள் செய்ய முடியாததை சினிமாவில் புகழ் பெற்ற , கர்நாடக இசை அறிந்த பாடகர்கள் சாதித்துக் காட்டினார்கள்.பரந்துபட்ட மக்களை விட்டு அன்னியமாகப் போய்கொண்டிருந்த , பழம் பஞ்சாங்கங்களின் இசை என்ற கசப்பு இசையாக இருந்த கர்நாடக இசை மேடைகளை இளைஞர்களால் நிறைத்துக்காட்டினார்கள்.

கர்னாடக இசை பாடும் இளங்கலைஞர்களும் கிழட்டுக் குரலில் பாடிக்கொண்டிருந்த வேளையில்
[ இப்போதும் சிலர் அப்படித்தான் பாடுகிறார்கள்] கே .ஜே .ஜேசுதாஸ் ,பின் அவரைத் தொடர்ந்து பி.உன்னிகிருஷ்ணன் போன்றோர் கம்பீரமிக்க , இனிமையான குரல்களால் கர்னாடக இசையரங்குகளை நிமிர வைத்தார்கள்.

புராதன இசையின் பெருங்கொடையான நமது ராகங்களில் உள்ள சுவையை அதனதன் குணங்களுக்கேற்ப நெஞ்சைத் தழுவும் இசைவார்ப்புகளாக தந்த இசையமைப்பாளர்கள், விதம், விதமான ராகங்களை இணைத்து அழகு காட்டியும் நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள்.ஒரு வட்டத்துக்குள் முடங்கிக் கிடந்த ராகங்களை வெளிக்கொணர்ந்து ராகம் பற்றிய சிந்தனை விரிவையும் ,ஏலவே இருந்த முன்முடிவுகளையும் மாற்றியமைத்தனர்.

புதிய இசைபோக்குகளுடன் ராகங்களின் மோதல் புதிய உன்னதங்களை அடைய உதவியது.

உணர்வுகளின் பலநிலைகளை உந்துசக்தியாகக் கொண்டு ஜீவன் நிறைந்த பாடல்களை தர ராகமாலிகை முறையையும் அழகு குன்றாமல் பயன்படுத்தி வெற்றியும் நிலைநாட்டினார்கள்.

வெவ்வேறு ராகங்களை இணைத்து பாடும் முறையை ராகமாலிகை என்றழைப்பர்.ராகமாலிகையில் பாடுவது என்பதும் இசையுலகிற்கு தமிழர்கள் வழங்கிய கொடையாகும்.இசையின் உன்னதங்களை எல்லாம் புராதன காலத்திலேயே கண்டறிந்ததென்பது அவர்களது நுண்ணறிவின் அடர்த்திக்கும் , முதிர்ச்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தமிழ் செவ்வியல் இசையில் ராகமாலிகைக்கு சிறப்பிடம் உண்டு.ஒன்றுக்கொன்று நுண்மையான வேறுபாடுகளைக் கொண்ட ராகங்களைப் பாடும் போது ஒரு பாடகரின் ராகப்புலமையையும் , நுட்பத்தையும் , நுண்ணிய அறிவையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

ராகமாலிகை என்றால் மாலையாகத் தொடுக்கப்பட்ட ராகங்கள் என்று அர்த்தமாகும்.

ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான, ஒரே தன்மைவாய்ந்த ராகங்களில் பாடல்களை அமைப்பது , அதே போல் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்ட ராகங்களை இணைப்பது என்பது நமது இசை வகைகளில் முக்கியம் பெறுகின்ற அம்சமாக உள்ளது.

உணர்வுகளை துலாம்பரமாகக் காட்ட மொழியால் முடியாத போது மரபார்ந்த ராகங்களின் நுண்மையான திறனால் சுருக்கமாகவும் சிக்கனமாகவும் வெளிப்படுத்த முடியும் என்பதை முன்னோர்கள் துல்லியமாக அறிந்து வைத்தார்கள்.வெவ்வேறு வகையான உணர்வுகளை வெளிப்படுத்த அதற்கான குறியீடுகளையும் ராகங்களில் அமைத்தனர்.

பக்திகாலத்தில் சம்பந்தர் தனது தேவாரங்களை திருநீலகண்டயாழ்பாணரின் யாழிசையுடன் பாடியதாகவும் , சம்பந்தரின் சந்தங்களை யாழில் இசைக்க முடியாத திருநீலகண்டர் யாழை முறித்ததாகவும், அதனால் யாழ்முரிபண் என அழைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு. சம்பந்தர் பாடிய ” மாதர் மடப்பிடி யானை ” என்று தொடங்கும் தேவாரம் பாடும் போதே இந்த சம்பவம் நடந்ததாகவும் அதன் காரணமாக யாழ்முரி அல்லது யாழ்மூரி என்ற பண்ணிலே அந்த தேவாரப்பாடல் பாடப்பட்டது என்பர்.

ஆயினும் தேவார காலத்திற்கு முன்னரே சிலப்பதிகாரத்தில் இதுபற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிலப்பதிகாரத்தில் கானல்வரிப்பாடல்களில் முரிபாடல் பற்றிய குறிப்பும் பின் சம்பந்தர் காலத்தில் யாழ்முரி என்றும் சொல்லப்பட்ட இசை முறை அல்லது பண்முறை ராகமாலிகை தான் என்பதை அனுமானிக்க வைக்கிறது.

எடுத்த இயலும், இசையும் தம்மில்
முரித்துப் பாடுதல் முரியெனப்படுமே’ …(சிலப்.7) (14) – (16) என்று சிலப்பதிகாரமும் ,

மொந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
முதிர ஓர் வாய் முரிபாடி (தேவா. 45: 5) என்று சம்பந்தர் தேவாரமும் முரிப்பாடல் பற்றிய குறிப்பைத் தருகின்றன.

“முரி என்பது தாளக் கணக்கிற்கும் பண் நுண்ணுமைக்கும் ஏற்ப பகுத்துப் பாடுதலாகும்.இது தொன்று தொட்டு இசைத்துறையில் சிறந்து வருவது “என்று தமிழிசைக் களஞ்சியமும்

” நடைக்கேற்ப சொற்களின் எழுத்துக்கள் காலப்படுத்தப்பட்டு பிரித்து இசைக்கப்பட்டது முரி எனப்பட்டது ” என தழிசையியலும்,

இசை வடிவத்தில் முரி அமைப்பது குறித்து பஞ்சமரபு எனும் நூல்

01 வாரம் கூடை முதலிய நடைகளை மாற்றுதல்
02 நடையுள் நடை வைத்தல்
03 தாளம் முரித்தல்
04 இசைக்காலம் முரித்தல்
05 பண் முரித்தல்

போன்ற குறிப்புக்களை சான்று காட்டுகிறது..

இன்றைய ராகமாலிகை என்பது முரிப்பாடலே என இசையறிஞர்கள் கருதுகின்றனர்.

தமிழ் செவ்வியல் இசையில் மகாராஜபுரம் சந்தானம் பாடும்
“விநாயகா ,விநாயகா விக்ன வினாசக் விநாயகா ” என்று ஆரம்பிக்கும் பாடல்,மற்றும் “கண்ணா வா மணி வண்ணா வா ” என்ற அம்புயம் கிருஷ்ணனின் பாடலும் பிரபல்யமானவை

இந்த ராகமாலிகை முறையை கையாளும் முறையில் இசைக்கலைஞனின் திறமையும் , ராகத்தில் அவனது திளைப்பும் புலப்படும்.

ஒரு மாறுதலுக்காக அல்லது புது சுவைக்காக ராகமாலிகை பயன்பட்டாலும் செவ்வியல் மேடைக்கச்சேரிகளை விட , காட்சிகள் மாறும் சினிமாவுக்கே இது மிகப்பொருத்தமானதொரு முறை என்று துணிந்து கூறிவிடலாம்.

ஏலவே எழுதப்பட்ட பாடல்களை இசையமைக்க சினிமா இசையமைப்பாளர்கள் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகவும் ராகமாலிகை பயன்பட்டிருக்கிறது.

நெருடும் சந்தங்களை மடக்கி பிடிக்கவும் சாதுர்யமாகத் தாண்டி செல்லவும் இராகமாலிகை 1950,.1960 களில் வெளிவந்த திரைப்படங்களில் விரிவாகப்பயன்பட்டிருக்கிறது.ராஜா ,ராணி கதைகளில் வரும் நாட்டியப் பாடல்களில் பெரும்பாலும் ராகமாலிகைப்பாடல்களாக அமைத்து நாட்டிய இசைமரபையும் இசையமைப்பாளர்கள் பின்பற்றி சென்றிருக்கிறார்கள்..ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவர்களும் ராகமாலிகையில் துணிந்து பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.

வெறும் இனிய ஓசை நயத்தை மட்டும் தராமல் பாடல் வரிகளின் உணர்வுகளையும் , ராகத்தின் இனிமையை , அதன் உணர்வை, குறுகிய நேரத்தில் அள்ளித் தெளித்து இசை ரசிகர்களை வித,விதமான உணர்வூட்டி கிளர்த்தி விடுவது ராகமாலிகையின் பண்பாகும்.

ஒரு பாடலின் முழுமையில் பல நிலைகளை விரித்து , பாடல் உணர்த்தும் நிலைகளில் திளைக்க வைத்து நுண்ணிய ரச அனுபவத்தை , உன்னதத்தை தந்துவிடுவது ராகமாலிகை.

ஒவ்வொரு மலரும் அழகாய் இருப்பதை ரசிக்கும் நாம் பல வண்ணமலர்கள் இணைந்த பூங் கொத்தையும் ரசிப்பது போன்ற உணர்வை நாம் ராகமாலிகைக்கு ஒப்பிடலாம்.

அரங்கேற்றுக் காதை என்னும் தலைப்பில் அரங்கேற்றம் பற்றியும் ,இசை பற்றியும் விவரிக்கும் சிலப்பதிகார காலம் தொட்டு இன்றுவரை ஆடிவரப்படும் தமிழ் நடனக்கலையான இன்றைய பரத நாட்டியத்தில் ஜதீஸ்வரம் என்ற பகுதி ராகமாலிகையில் அமைந்த பாடல்களால் நிறைந்து காணப்படுகிறது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் தமிழ்மரபுவழி வந்த கலைகளின் தொடர்ச்சியாக அமைந்தமையால் புராணம் சார்ந்த பக்திப்படங்களில் அதிகமாக மிக இயல்பாக ராகமாலிகையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.பின் , சமூகம் சார்ந்த கதைகளுக்கு ஏற்பவும் இசை நெகிழ்ச்சி போக்கு காட்டினாலும் ராகமாலிகை ராகம் சார்ந்த மெல்லிசை பாடல்களிலும் நெறிப்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகக் கதைகள் பெருகிவர ராகமாலிகையில் பாடல்கள் உரியவாறு குறைந்தும் வரலாயிற்று. எனினும் ஞானமும் , இசைவேட்கையுமிக்க இசையமைப்பாளர்கள் மெல்லிசையில் அவ்வப்போது பயன்படுத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையில் ராகமாலிகை அமைந்த பாடல்கள் :

01 ஐய்யே மெத்தக் கடினம் – படம்: நந்தனார் [1935] – பாடியவர்: எம் .எம் .தண்டபாணி தேசிகர் – இசை :எம்.டி.பார்த்தசாரதி + எஸ்.ராஜேஸ்வரராவ்
பொய்யாத பொன்னம்பலம் இருக்குமிடம் அறிந்த நந்தனிடம் பாவமன்னிப்பு கேட்கும் வேதியர் மன்றாடும் காட்சியில் பாடப்படும் பாடல்.
பாடல் அமைந்த ராகங்கள் 1.புன்னாகவராளி – 2. நாதநாமக்கிரியை 3 பிருந்தாவனசாரங்கா = 4.செஞ்சுருட்டி

02 காயாத கானகத்தே – படம்: ஸ்ரீவள்ளி [1948] – பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம் – இசை :சங்கரதாஸ் // சுதர்சனம்
சங்கரதாஸ் நாடகங்களில் கிட்டப்பா பாடி புகழ் பெற்ற இந்தப்பாடல் பைரவி ராகத்தில் விருத்தமாக ஆரம்பித்து ” மேயாத மான் ” என்று விதம் விதமான நளினங்கள் காட்டி, பின் காபி ராகத்தில் நிறைவும் பாடல். ஸ்ரீவள்ளி என்றால் இந்த பாடல் தான் கேட்பவர்கள் மனதில் ஒலிக்கும் வண்ணம் பாடி அசத்தியிருப்பவர் கிட்டப்பாவை மானசீகக் குருவாக கொண்ட டி.ஆர்.மகாலிங்கம்.

03 சிற்பக் கலைவிழாவின் – படம்: தூக்கு தூக்கி [1954] – பாடியவர்கள் : டி.வீ.ரத்தினம் + பி.லீலா + ராதா ஜெயலட்சுமி – இசை: ஜி ராமநாதன்
அழகான பல்லவியுடன் இனிமையாக ஆரம்பிக்கும் பாடல் பல்வகை உணர்வுகளை மிக சிறப்பாக உணர்த்தி அவலச் சுவையுடன் நிறைவுறுகிறது.பாடலின் நிறைவு நம்மை கதி கலங்க வைக்கிறது .

அம்பிகாபதி – அமராவதி காதல் கதையை நெகிழ்வுடன் சொல்ல ஜி ராமநாதன் கையாண்ட ராகங்கள் இசையை தீவிரமாக ரசிப்பவர்களுக்கு பெரும் செல்வமாக அமைந்து விடுகிறது.பாடலின் உணர்வுகள் ஒரு புறம் அதனை அற்புதமாகப்பாடிய பாடகிகளின் திறமை ஒரு புறம் என கதையில் நம்மை மூழ்கவும் வைத்து வீறு கொண்டெழவும் வைக்கின்றன.

இன்னுமொரு முக்கிய விடயம் இந்தப்பாட்டைப் பாடிய பாடகிகளின் குரல்கள் வெவேறு ரகங்களைச் சேர்ந்தவை.வெவேறு ராகங்களை உரசி செல்லும் இந்தப்பாடலை வெவ்வேறு அலைவரிசையில் பாயும் தன்மையும் , அதில் தனித் தன்மையுமிக்க குரல்களைக் கொண்டு பாட வைத்த இசை மேதை ஜி.ராமனாதனின் தீராத இசைத்தாகத்தையும் இந்தப்பாடலில் நாம் தரிசிக்கின்றோம்.

இந்தப்பாடல் அமைந்த ராகங்கள் :கல்யாணி + மாண்டு + சிந்துபைரவி + சரஸ்வதி + சண்முகப்ரியா + நீலாம்பரி ” + சாருகேஷி + முகாரி + சண்முகப்ரியா + ரேவதி

04 பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மீதே – படம்: ராஜாதேசிங்கு[1960]- பாடியவர்:எம்.எல்.வசந்தகுமாரி – இசை :ஜி.ராமநாதன்

பாடல் சண்முகப்ரியா ராகத்தில் ஆரம்பிக்கிறது.அதைத்தொடர்ந்து ” பாதகனாம் ஒரு ” என்ற பகுதி கேதார கௌளை ராகத்திலும் , ” வானவரும் ” என்ற பகுதி சாமா ராகத்திலும் , ” இரணியன் எனும் ஒரு படுபாவி ” என்ற பகுதி அடாணா ராகத்திலும், ” எங்கிருக்கிறான் ஹரி எங்கிருக்கிறான் ” என்ற பகுதி – மோகனராகத்திலும் , “மூவடி மண்கேட்டு வந்து ” என்ற பகுதி – பிலஹரி ராகத்திலும் , ” தேவர்களை சிறை மீட்டக “என்ற பகுதி கானடா ராகத்திலும். ” ஆவணி ரோகிணியில் “என்ற பகுதி காபி ராகத்திலும் ” அதைத்தொடர்ந்து சிவரஞ்சனி ராகத்திலும் பாடல் நிறைவு பெறுகிறது.

05 வீணைக் கொடியுடைய வேந்தனே – படம்:சம்பூரண ராமாயணம் [1958] – பாடியவர்கள் :சிதம்பரம் ஜெயராமன் +திருச்சி லோகநாதன் – இசை : கே.வீ.மகாதேவன்
இசைவேந்தன் ராவணனை போற்றி ஆரம்பிக்கும் அற்புதமான பாடலில் ராவணன் அரசவையின் வேண்டுகோளுக்கிணங்க சங்கீத ராகங்கள் பற்றி விளக்கிப்பாடும் இனிய பாடல்.
இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ” சுவாமி , கைலைநாதனை தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம் ” என்றென்றும் நம் நினைவுக்கு வரும்.

இந்தப்பாடலைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால் கே.வீ .மகாதேவன் தந்த உயிரெனவே நினைந்து உலவும் ஆனந்த கான அமுத மழை என்று தான் குறிப்பிடத் தோன்றுகிறது.
இந்தப்பாடல் அமைந்த ராகங்கள் :
மோகனம் +அடானா + பூபாளம் + சாரங்கா + வசந்தா +நீலாம்பரி + தன்யாசி +கம்பீரநாட்டை + சங்கராபரணம் + தோடி + கல்யாணி + காம்போதி.

06 ஆடிவரும் ஆடகர் பொற் பாவையடி நீ – படம்:தாய் மகளுக்குக் கட்டிய தாலி [1956] – பாடியவர்கள் :சீர்காழி + எஸ்.ஜானகி – இசை: டி.ஆர்.பாப்பா
சிந்து பைரவி ராகத்தில் ஆரம்பிக்கும் பாடல்.”வெண்ணிலவை கைபிடித்து விளையாட ” என்ற பகுதி காபி ராகத்திலும் , “உன்னெதிரே வெண்ணிலவு ” என்ற பகுதி கமாஸ் ராகத்திலும் , “சங்கத் தமிழ் பண்பும்,அன்பும் ” என்ற பகுதி கல்யாணி ராகத்திலும் ,குறிப்பாக பொங்கி வரும் அழகினிலே ஏழை இல்லை என்ற பகுதியில் கல்யாணி மிக இனிமையாக ஒலிக்கும்.

ஆரம்பகால இளம் ஜானகியின் மென்மையான குரலில் ஒலிக்கும் இனிமையான பாடல்.
டி.ஆர்.பாப்பா இசையமைத்த அருமையான பாடல்.

07 பாட்டு வேணுமா உனக்கொரு – படம்:மோகனசுந்தரம் [1953] – பாடியவர்கள் :டி.ஆர்.மகாலிங்கம் – இசை: டி .ஜி .லிங்கப்பா
வட நாட்டு படத்தில் வரும் மெட்டில் – நமது
நல்ல தமிழை புகுத்தி தொல்லை தரும்
சினிமா பாட்டு வேணுமா

என்று எள்ளி நகையாடும் இந்தப்பாடலை ஜனரஞ்சகமான இசையில் சிந்துபைரவி + காபி + சிந்துபைரவி + மாண்டு என ராகங்களை மிக அழகாக அமைத்திருக்கிறார் டி .ஜி .லிங்கப்பா

08 ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயம் அருள் – படம்: ராணி லலிதாங்கி [1958] – பாடியவர்கள் :பி.லீலா + டி.பி.ராமசந்திரன் – இசை: ஜி.ராமநாதன்
அழகிய சரஸ்வதி ராகத்தில் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் அதே தாள வேகத்துடன் “ஸ்ரீரஞ்சனி ஜெகமே புகழ் ரமணி “என்ற பகுதியில் ஸ்ரீரஞ்சினி ரகத்திலும் , தாள மாற்றத்துடன் “சதங்கை நாதம் சப்திக்கும் ” என்ற பகுதியில் லலிதா ராகத்திலும் கலந்து நிறைவுறுகிறது.
ஜி.ராமநாதனின் உதவியாளரான டி.பி.ராமசந்திரன் மிக அருமையாக லீலாவுடன் இணைந்து பாடிய பாடல்.லீலாவின் குரல் முன்னணியிலும் ராமசந்திரனின் குரல் பின் பாட்டு பாடுவது போன்ற உணர்வையும் தரும் பாடல்.

09 அன்னையின் அருளே வா வா – படம்: ஆடிப்பெருக்கு [1962] – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் + பி.பானுமதி – இசை : ஏ.எம்.ராஜா
பாடல்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் டைட்டிலிலேயே பாடல்கள் அமைக்கும் ஒரு முறையையும் கையாண்டு வந்திருக்கிறார்கள்.அந்த வகையில் கதாநாயகன் பாடுவதாய் அமைந்த அழகான பாடல்.மெல்லிசையில் புதுப்பாதை வகுத்த முன்னோடியான ஏ.எம்.ராஜா செவ்வியல் பாங்கிலும் தனது கைவரிசையைக் காட்டிய பாடல் இது.

கட்டிக்கரும்பின் சுவை போன்று இனிமை சொட்டும் ராகங்களை அநாசாயமாக கையாண்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா.அதை பொருத்தமானவரைக் கொண்டு பாட வைத்ததை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாடல் ஆபோகி ராகத்தில் ஆரம்பிகிறது. ” குடகில் ஊற்றுக்கண்ணாகி “-சண்முகப்ப்ரியா ராகத்திலும், “திருவாய் மொழியாம் “என்ற பகுதி ஹிந்தோள ராகத்திலும் , “கட்டிக்கரும்பின் சுவையும் நீயே “என்ற பகுதி கல்யாணி ராகத்திலும், ” வான் பொய்த்தாலும் ” என்ற பகுதி மோகன ராகத்திலும் அமைந்து மிகக்குதூகலம் தந்து காவேரியின் பெருமையை கூறி நிறைவுறும் பாடல்.

10 வேலன் வருவாரோடி வடிவேலன் – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை:
கர்னாடக இசையுலகில் கோலோச்சிய வசந்தகுமாரி தனக்கேஉரிய தனித்துவத்துடன் பாடிய செவ்வியல் இசை கலந்த பாடல்.
இந்தப்பாடலில் காம்போதி + ஹிந்தோளம் + கேதாரகௌளை + ஆரபி போன்ற ராகங்களைக் கேட்கலாம்.

11 மாலையிலே மன சாந்தி தந்து – படம்:கோகிலவாணி [1957] – பாடியவர்கள் :சீர்காழி கோவிந்தராஜன் – இசை: ஜி .ராமநாதன்
கிட்டப்பா பாடி பெரும் புகழ்பெற்ற ” கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ள ” என்று தொடங்கும் திருவருட்பாவின் மறு அவதாரம் என்று சொல்லும் வகையில் அமைக்கப்பட்ட பாடல்.விருத்தமாக அமைந்த இந்தப்பாடலில் ராமனாதனின் இனிய சங்கதிகளை சீர்காழியாரின் குரலினிமையில் நாம் கேட்டு இன்புறலாம்.
விருத்தப்பாடல் .. அமைந்த ராகங்கள் பந்துவராளி + காம்போதி + சண்முகப்ரியா.

12 காத்திருப்பான் கமலக்கண்ணன் – படம்:உத்தம புத்திரன் [1955] – பாடியவர்கள்: பி.லீலா – இசை:ஜி.ராமநாதன்

ரீங்காரம் என்ற சொல்லுக்கு உதாரணம் சொல்லத்தக்க பாடல்.அற்புதமான இசையமைப்பை இயல்புடனும் , விறுவிறுப்புடனும் பாடி பெருமைப்படுத்தியவர் பி.லீலா.அலாதி சுகம் தரும் பாடல் இது என்பதில் சந்தேகமில்லை.

இனிய தாளத்தின் அடர்த்தியும் ,ராகத்தின் இனிமையும் , பாடகியின் முதிர்ச்சிமிக்க குரலிலும் கேட்கும்போதெல்லாம் பரவசப்படவைக்கும் இந்தப்பாடல் அமைந்த ராகங்கள் ஜோன்புரி + திலங் + மோகனம்.

இளையராஜா இந்தப்பாடலின் அமைப்பை வியந்து பாராட்டியுள்ளார்.

13 சேவை செய்வதே ஆனந்தம் – படம்: மகாதேவி [1958] – பாடியவர்கள்: சௌந்தரராஜன் + ராஜேஸ்வரி – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
தேஷ் +கானடா என இரண்டு ராகங்களைப் பயன்படுத்தி மெல்லிசைமன்னர்கள் தந்த எழுச்சிமிக்க இனிமையான பாடல்.

14 மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூகாவிலே- படம்:காவேரி[1955] – பாடியவர்கள்:சி.எஸ்.ஜெயராமன்+ எம்.எல்.வசந்தகுமாரி – இசை:ஜி.ராமநாதன்
கல்யாணி + கானடா ரகங்களில் அமைந்த மிக நுண்ணிய சங்கதிகளைக் கொண்ட பாடல்.” பஞ்சவர்ணக்கிளிகள் கொஞ்சும் பரவசம் பார் ” என்ற வரிகளை மிக அனாயாசமாக சிதம்பரம் ஜெயராமன் பாடுவது ,அவரது பேராளுமையைக் காட்டி நிற்கும்.

15 எல்லையில்லாத இன்பத்திலே – படம்:சக்கரவர்த்தித் திருமகள் [1957] – பாடியவர்கள்:சீர்காழி + பி.லீலா – இசை:ஜி.ராமநாதன்
மீண்டும் கல்யாணி + கானடா இரண்டு ராகங்களை எடுத்தாண்டு ஜி.ராமநாதன் படைத்த இனிய கானம்.

16 மாசிலா நிலவே நம் காதலை – படம்: அம்பிகாபதி [1957] – பாடியவர்: சௌந்தரராஜன் + பி.பானுமதி – இசை : ஜி.ராமநாதன்
அம்பிகாபதி திரைப்படத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத காதல் பாடல்.எப்போது கேட்டாலும் எழுச்சியும் உற்சாகமும் தரும் ஜி.ராமனாதனின் கைவண்ணப்பாடல் என்று துணிந்து சொல்லிவிடலாம்.இளமையும் , எடுப்புமிக்க சௌந்தரராஜனின் குரலும் , இனிமையான அதிர்வு கொண்ட பானுமதியின் குரலும் ,ராமனதனுக்கேயுரிய தனித்துவமான, மிக துல்லியமான , இனிமை துலங்கும் தாளக்கட்டும் , ஒத்திசைந்து உடலெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கும் இனிய பாடல்.

இருபக்க இசையாக இசைத்தட்டில் ஒலிக்கும் இந்தப்பாடல் மாண்டு ராகத்தில் எழுச்சியுடன் ஆரம்பிக்கிறது.அதைத்தொடர்ந்து பின் “அன்பே இன்பம் ” என்ற பகுதி நடபைரவி ராகத்திலும் , பாடலின் இறுதிப்பகுதியான “வானமிங்கே பூமி இங்கே” என்ற பகுதி புன்னாகவராளி ராகத்திலும் கனிவுடன் நிறைவு பெறுகிறது.

17 சோறு மணக்கும் சோனாடா – படம்: அம்பிகாபதி [1957] – பாடியவர்: வீ.என்.சுந்தரம் + சீர்காழி கோவிந்தராஜன் + T .M .சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
இப்பாடலின் ஆரம்பத்தை வீ.என் சுந்தரம் நாட்டை ராகத்தில் மிகவும் கம்பீரமாக ஆரம்பிப்பார் ..” வெல்க நின் கொற்றம் மன்னா ” என்ற பகுதியை சீர்காழி கோவிந்தராஜன் கம்பீரமாக அடானா ராகத்திலும் ” வரும் பகைவர் படை வென்று ” என்ற பகுதியை சௌந்தரராஜன் கம்பீரக் குரலில் மோகன ராகத்திலும் பாடுவார்கள்.

இந்தப்பாடலில் அம்பிகாபதி பாடும் பகுதி போர் வீரர்கள் பற்றியும் ,அவர்களது பெற்றோர்கள் , மனைவிகள் பற்றியும் ,அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் வகையிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருப்பார்.

பின்னாளில் கர்ணன் படத்தில் கர்ணனைப்பற்றிய புகழ்ச்சிப் பாடலின் முன்னோடிப்பாடல்.

18 தண்ணீர் விட்டோ வளர்த்தோம் – படம்: கப்பலோட்டிய தமிழன் [1960] – பாடியவர்: திருச்சி லோகநாதன் – இசை : ஜி.ராமநாதன்

கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் குமுறி வெடிக்கும் உணர்வைவையும் ,அளவில்லாத சோகத்தையும்
, வலிகளையும் , வேதனைகளையும் தந்து நெஞ்சை நீறாக்கும் பாடல்.

பாரதியின் இந்தப்பாடலை ஒப்பரிய ஆற்றல் மிகுந்த இசையால் எட்டமுடியாத உச்சத்திற்கு ஏற்றி வைக்கிறார் இசை மேதை ஜி.ராமநாதன். வழமை போலவே உச்சஸ்தாயியில் இசையமைக்கும் ராமநாதன் இந்தப்பாடலையும் தனது பாணியில் ஆரம்பிக்கிறார்.

ஜி.ராமநாதன் அதிகம் பயன்படுத்திய ராகங்களில் ஒன்றான சிந்துபைரவி ராகம் போல ஒலிக்கின்ற ஜோன்புரி ராகத்தில் தொகையறாவுடன் ஆரம்பமாகிறது.
தொடரும் பல்லவியிலேயே எத்தனை எத்தனை ஆற்றுதல்கள் ! தேற்றுதல்கள் ! குறிப்பாக
” எண்ணமெல்லாம் ,மெய்யாக என்னுயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடிய திருவுள்ளமோ ”
என்ற வரிகளில் ராகத்தின் உள்ளோட்ட அலைகளால் மனதை நெகிழ வைக்கிறார்.

என்ற வரிகளை பாடும் போது
“ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ ” என்ற வரிகளை தேஷ் ராகத்தில் பாடும் போது தரும் மனக்கனிவும் தந்து

“தருமமே வெல்லும் என்னும் சான்றோர் சொல் பொய்யாமோ “என்ற வரிகளை சிவரஞ்சனி ராகத்தில்

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் ” வரிகளை தேஷ் ராகத்தில் பாடும் போது உணர்ச்சி கொப்பளிப்பும் , மடைதிறந்த வெஞ்சினமும் ,,உருக்கமும் இசையில் வெளிப்படுகிறது.

இசை என்றால் உணர்வுகளைத் தெளிவுற வெளிப்படுத்தும் கலைவடிவம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த பாடல் இது என துணித்து கூறலாம்.

இது போல வேறு சில பாடல்களை திருச்சி லோகநாதன் போல யாரும் பாட முடியாது என்று கருதிய இசைமேதை ஜி.ராமநாதன் மலேசியாவில் இசை நிகழ்சசி செய்ய சென்ற லோகநாதன் வரும் வரை காத்திருந்து பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வேறு சில பாடகர்கள் பல்லாயிரம் பாடல்கள் பாடினாலும் அவர்களைவிட இந்தப்பாடலில் உச்சங்களைத் தொட்டார் என்று சொல்லலாம்.

நிராசை , சோகம் ,ஆற்றாமை , கோபம் எல்லாம் ஒன்றிணைந்து எழும் உணர்வை ராகங்களின் குணம் அறிந்து அவற்றின் நுண்ணிசையால் தெளிவுற உணர்த்துகிறார் ஜி.ராமநாதன்.

19 ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா – படம்: திருவிளையாடல் [1967] – பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா – இசை : கே.வீ. மகாதேவன்
பாடலின் இசையமைப்பு , பாடியவரின் திறமை , திரையில் தோன்றிய தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணசித்திர நடிகர் பாலைய்யாவின் திறமை என அமைந்த வெற்றிக்கூட்டணியின் ஒப்பற்ற பாடல்.இன்று ராகமாலிகை என்று சொன்னால் உடனே நினைவுக்கு வரும் பாடல்.
மாண்டு +தோடி + தர்பார் + மோகனம் + கானடா போன்ற ராகங்கள் பயன்பாடுள்ள பாடல்.

20 அறுபடை வீடு கொண்ட திருமுருகா – படம்: கந்தன் கருணை [1966] – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் – இசை : கே.வீ. மகாதேவன்
பக்திப்படங்களின் ராகங்கள் தூக்கலாகத் தெரியும் வகையில் பாடல்கள் அமைப்பதில் தனி சிறப்பு வாய்ந்தவர் இசை மேதை கே.வீ.மகாதேவன்.உணர்ச்சி பாவமும் , இனிமையும் உயர்ந்து நிற்கும் பாடல்களை , அவை மெல்லிசை வடிவம் பெற்றவையாயினும் மரபு ராகங்களிலேயே தர முயன்ற இசையமைப்பாளர்களில் முதலிடம் வகிப்பபவர் திரையிசைத்திலகம் கே.வீ.மகாதேவன்.

இந்தப்பாடலில் காம்போதி . ஹிந்தோளம் , சக்கரவாகம் ,கானடா , ஹம்சாநந்தி போன்ற ராகங்களால் வண்ணங்களால் அமைத்த மிக அழகிய இசையோவியம். உள்ளங்களில் இன்பக்கனல்களை எழுப்பும் அருமையான பாடல்.

21 மழை கொடுக்கும் கொடையும் ஒரு – படம்:கர்ணன் [1964] – பாடியவர்கள் :சௌந்தரராஜன் + ஸ்ரீநிவாஸ் + சீர்காழி கோவிந்தராஜன் + திருச்சி லோகநாதன் – இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி

எடுத்த எடுப்பிலேயே உள்ளத்தை உருக வைக்கும் ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் பாடல்.ஒருபாடலின் பல்லவியில் எவ்வளவு கனிவு , எவ்வளவு இனிமை கொடுக்க வேண்டும் அதன் மூலம் கேட்கும் இசை ரசிகனை எப்படிக் கட்டிப்போட வேண்டுமென்ற சிருஸ்டி ரகசியம் தெரிந்த மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றல்மிக்க பாடல்
ஹிந்தோளம் + ஹம்சானந்தி + கானடா + மோகனம் + சக்கரவாகம் போன்ற ராகங்களின் சாறுகளைபபிழிந்து உணர்வின் மென்மையையும்

22 உலகின் முதலிசை தமிழிசையே – படம்:தவப்புதல்வன் [1972] – பாடியவர்கள் :சௌந்தரராஜன் +ஸ்ரீநிவாஸ் -இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

இசைப்போட்டியாக பாடப்படும் இனிமையான பாடல்.கர்னாடக இசை பாடும் போது விறுவிறுப்பும் , ஹிந்துஸ்தானி இசை பாடும் போது இனிமையும் மென்மையும் அதனுடன் உள்ளுறையும் வாத்திய இனிமையையும் காண்பிக்கிறார் மெல்லிசைமன்னர்.

இரண்டு இசை வகைகளையும் பிரித்துக்காட்டும் வகையில் ராகங்களை கையாண்டவிதம் மெல்லிசைமன்னரின் இசைபுலமையை காட்டுகிறது.ஸ்ரீராகம் + பகாடி + சிந்துபைரவி போன்ற ராகங்கள் மிக அருமையாகப்பயன்பட்டுள்ளன.

23 எங்கோ பிறந்தவராம் – படம்:பொம்மை [1964] – பாடியவர் : பி.சுசீலா – இசை: எஸ்.பாலசந்தர்
வீணை மேதை எஸ்.பாலசந்தரின் இனிய இசையமைப்பு
பாடலின் ஆரம்பம் ..சகானா ராகத்திலும் + ” விழிவாசல்” என்ற பகுதி சாரங்கா + ” நிலவு தன்னை ” என்ற பகுதி நாட்டக்குறிஞ்சி + ” தென்றலை ” என்ற பகுதி குசேனி .

24 மேரே பியாரி நிம்மல் மேலே – படம்:தூக்குத் தூக்கி [1954] – பாடியவர்கள் :வீ.என்.சுந்தரம் – இசை: ஜி .ராமநாதன்
நகைச்சுவை கலந்த இந்தப்பாடலில் காபி + ஆனந்தபைரவி போன்ற ராகங்களை எளிமையாகத் தந்திருக்கிறார் இசைமேதை ஜி.ராமநாதன்.

25 வாரணம் ஆயிரம் – படம்:தூக்குத் தூக்கி [1954] – பாடியவர்கள் :எம்.எல்.வசந்தகுமாரி – இசை: டி .ஜி .ராமநாதன்
விருத்தத்துடன் மோகன ராகத்தில் வசந்தகுமாரியின் குரலில் ஆரம்பிக்கும் இந்தப்பாடலை பின் ஆரபி ராகத்திலும், அதைத்தொடர்ந்து குதூகலத்தில் காம்போதியில் மிதக்க வைக்க பி.லீலாவின் விறு விறுப்பான குரலிலும் தாது நெகிழ வைக்கிறார் இசை மேதை ஜி.ராமநாதன்.

26 சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா – படம்:மணமகள் [1951] – பாடியவர்கள் :வீ.என்.சுந்தரம் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.ஆர்.சுப்பராமன்.
சினிமாவுக்காக இசையமைக்கப்பட்ட இந்த பாடல் கர்னாடக இசை மேடையில் இன்று வலம் வருகிற பாடலாகியும் உள்ளது.ராக்ப்பயன்பாட்டில் சிறந்து விளங்கும் இந்தாபாடலின் இசையமைப்பு அன்றைய இளம் இசையமைப்பாளராயிருந்த இசைமேதை சி.ஆர்.சுப்பராமனின் இசைஞானத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
இந்தபாடலில் காபி + மாண்டு + வசந்தா + திலங் + நீலமணி போன்ற ராகங்கள் பயன்பட்டு இன்று ராகமாலிகையின் குறியீடு எனக்கருதும் அளவுக்கு முக்கிய பாடலாகி நிற்கிறது எனலாம்.

27 எல்லாம் இன்ப மாயம் – படம்:மணமகள் [1951] – பாடியவர்கள் :பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.ஆர்.சுப்பராமன்.
இன்பக் கிளர்ச்சியும் ,கனிவும் , நெஞ்சை நெகிழ்த்தும் எழிலும் நிறைந்த கானாமுதம் என்று தான் இந்தப்பாடலை பற்றி எழுத முடியும்.அவ்வளவு இனிமை நிறைந்த சுழற்சிமுறை உள்ள பாடல்.
சிம்மேந்திரமத்திமம் , மோகனம் , ஹிந்தோளம் , தர்பார் போன்ற ராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

28 வடிவேலும் மயிலும் துணை – படம்:அம்பிகாபதி [1957] – பாடியவர்கள் :சௌந்தரராஜன் – இசை: ஜி .ராமநாதன்
காம்போதியில் ஆரம்பிக்கும் பாடல் ..”சற்றே சரிந்த குழலே ” என்ற பகுதி கேதார கௌளை ராகத்திலும் பாடப்படும்.100 பாடல் காதல் ரசம் கலக்காமல் பாட வேண்டும் என்பது கட்டளை , பாடல் எங்களை எண்ணிக்கொண்டிருந்த அமராவதியின் தவறால் 100 பாடலும் முடிந்தது என எண்ணி அம்பிகாபதி காதல் வேகத்தில் பாடும் பாடலாக அமைந்த இந்த பாடலை மிகவும் கம்பீரமாக சௌந்தரராஜன் பாடுவது எழுச்சியூட்டும்.

29 ஆருயிரே பிரேமா அமுத வாரியில் – படம்:பொன்முடி [1951] – பாடியவர்கள் :ஜி .ராமநாதன் + டி.வீ.ரத்தினம் – இசை: ஜி .ராமநாதன்
பொன்முடியில் இடம்பெற்ற மிகவும் இனிமையான பாடல்.காதல் சுவைக்கு சகானா ராகத்தைப் பயன்படுத்திய முன்னோடிப்பாடல் எற்று சொல்லும் வகையில் ஜி.ராமநாதன் இஅசையமைத்து அழககப்பாடிய பாடல்.தொடர்ந்து கல்யாணி மற்றும் தேஷ் போன்ற ராகங்கள் இனிமையை பறைசாற்றுகின்றன.

30 தேசுலாவுதே தேன் மலராலே – படம்:மணாளனேமங்கையின் பாக்கியம் [1956] – பாடியவர்கள் :கண்டசாலா + பி .சுசீலா – இசை: ஆதி நாராயணராவ்
பாடலின் பெரும் பகுதி ஹம்சானந்தி ராகத்தில் அமைந்தபாடல் என்பதால் அந்த ராகமே முதன்மையாக தெரிகின்ற பாடல்.எடுத்த எடுப்பில் ஹம்சானந்தி ராகத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த பாடல்களைப் பட்டியல் போட முனைந்தால் ஆண்டு வரிசையில் முதலில் இனம் காட்டிய பாடல் எனலாம்.
பாடல் அமைப்பிலும் , அதில் நிறைந்த அனாயசமான சங்கதிகளும் ,அதைப்பாடிய விதமும் மெய்சிலிர்க்க வைப்பதாய் அமைந்திருக்கும்.இன்று வரை பாடுபவர்களுக்கு சவாலாய் அமைந்ததாகவும் அமைந்த இந்தப்பாடல் வெளிவந்த காலத்தை கருத்தில் எடுத்து பார்க்கும் போது புதிய , மாற்று சிந்தனையை காதல் பாடல்களில் வைத்ததெனலாம்.

அது மட்டுமல்ல பின்வரும் ராகங்களின் அழகையும் , நளினத்தையும் காதலின் மென்மையையும் . மரபு மீறாத தடத்தை பற்றிக்கொண்டு குறுகிய நேரத்தில் ராகங்களின் கனிவையும் காட்டி புத்துணர்ச்சியைத் தூண்டி மகிழ்விக்கிறார் இசையமைப்பாளர்.
குறிப்பாக கல்யாணி ராகத்தை பாடும் போது மனம் இலவம் பஞ்சாக மிதந்து செல்கிறது!

இந்தப்பாடல் அமைந்த ராகங்கள் ஹம்சானந்தி + கானடா + வசந்தா + கல்யாணி.

31 வண்ணக்கிளி சொர்ணகிளி வாய் திறந்தாள் – படம்: – பாடியவர் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை:
கல்யாணி + ரஞ்சினி + சிந்துபைரவி போன்ற ராகங்களை வைத்து கோர்க்கப்பட்ட செறிவான இசைப்பாடல்.

32 ஆகா இவர் யாரடி – படம்: – பாடியவர்கள் :பி.லீலா + சூலமங்கலம் – இசை:
இனிமையை தரும் சரஸ்வதி + காம்போதி + கானடா + சிந்துபைரவி போன்ற ராகங்களால் அலங்கரிக்கப்பட்ட இசை விருந்து.

33 ஆடும் அழகே அழகு – படம்:ராஜ ராஜன் [1956] – பாடியவர்கள் :சூலமங்கலம் சகோதரிகள் + பி .லீலா – இசை: கே.வீ.மகாதேவன்
ரஞ்சினி ராகத்தில் ஆரம்பிக்கும் பாடல்.”ஊதும் மகுடி தரும் ஓசைதனை கேட்டு ” என்ற பகுதி சாருமதி ராகத்திலும் அமைந்த பாடல்.

34 தாயே உன் செயல் அல்லவோ – படம்: இரு சகோதரிகள் [1957] – பாடியவர்கள் :பி.லீலா + ML வசந்தகுமாரி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
விறுவிறுப்பான பாடலை மிக எழுச்சியாக வசந்தகுமாரியும் லீலாவும் பாடிய பாடல்.செவ்வியலிசை பயிலும் இரு சகோதரிகள் பாடும் இந்தப் பாடல் ஒரு நாட்டிய காட்சிக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தும் ,படத்தில் பாடும் காட்சியாக அமைந்த பாடல்.

சகோதிரிகள் இணைந்து பாடும் பாடல் அமைந்த ராகங்கள் மோகனம் +காம்போதி + சண்முகப்பிரியா + மத்யமாவதி/ ஸ்ரீராகம் + மோகனம் ஆகியவை ஆகும்.

35 பிரமன் தாளம் போட – படம்: கொஞ்சும் சலங்கை [1961] – பாடியவர்கள் : ராதா ஜெயலட்சுமி + சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை: எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு
சண்முகப்பிரியா ராகத்தில் தொகையாறாவுடன் ஆரம்பமாகி , பின் ” அபிநயங்கள் காட்டியே நீ ஆடலாமோ போட்டியே ” என்ற பல்லவியுடன் தொடரும் பாடல்.
நாட்டியப்போட்டியாக அமைக்கப்பட்ட இந்த பாடலில் பின்வரும் ராகங்கள் மாலையாக அமைக்கப்பட்டுள்ளன.
சண்முகப்பிரியா + காபி + மோகனம் + ஆனந்தபைரவி + காம்போதி + சாமா + போன்ற ராகங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தப்பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

36 மங்கியதோர் நிலவினிலே – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + – இசை: எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
பாரதி எழுதிய இந்தபாடல் பலவகையில் பயன்படுத்தப்பட்டாலும் இரு ராகங்களில் மிக அருமையாக இசையமைக்கப்பட்ட இந்தப்பாடலில் *தேஷ் + சாருகேஷி போன்ற ராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

37 வேலன் வருவாரோடி வடிவேலன் – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை:
கர்னாடக இசையுலகில் கோலோச்சிய வசந்தகுமாரி தனக்கேஉரிய தனித்துவத்துடன் பாடிய செவ்வியல் இசை கலந்த பாடல்.
பாடல் அமைந்த ராகங்கள் காம்போதி + ஹிந்தோளம் + கேதாரகௌளை + ஆரபி.

38 கண்ணோடு கண் கலந்தால் காதலின் – படம்:மாங்கல்யபாக்யம் [1957] – பாடியவர்கள் : சீர்காழி + பி.சுசீலா – இசை: ஜி ராமநாதன்
ஜி.ராமநாதன் தரும் இன்னுமொரு ஜீவன்மிகுந்த காதல் பாடல்.
நடபைரவி + ஜோன்புரி +

39 நாயகர் பட்டமடி எனக்கது – படம்: தூக்கு தூக்கி [1954] – பாடியவர்கள் : கோமளா + பி.ஏ.பெரியநாயகி – இசை: ஜி ராமநாதன்
இந்தப்பாடலைக் கேட்கும் போது புராதனமானது என்பதான ஓர் இனம்புரியாத உணர்வு நம்மை ஆட் கொள்வதை உணரவைக்கும் பாடல்.60 வருடங்களைக் கடந்த இந்தப்பாடல் , அதைப்பாடிய பெரியநாயகி, கோமளா குரலில் ஒருவிதமான லாகிரி நம்மை தழுவி செல்கிறது.வாத்திய அமைப்பும் இதன் நூதனமான உணர்வை தந்து பழமையை தாங்கி நிற்கிறது.

தொல்லிசையின் கானரசத்தை இன்னிசையில் தந்த ஜி.ராமனாதனின் கைவண்ணம் மின்னும் பாடல்.இந்தப்பாடல் சுத்தசாவேரி , சண்முகப்ப்ரியா , தேஷ் போன்ற ராகங்களை மலையாகக் கொண்டது.

40. மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு – படம்:மகாதேவி [1958] – பாடியவர் : டி.எஸ்.பகவதி + எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

திரைக்கதையின் போக்கை இசை உயர்த்தி சென்று உணர்ச்சி பிரவாகம் ஆக்கிவிடுகிறது.எனது பால்யவயதில் பார்த்த படங்களில் இந்தப்பாடல் என்னை அதிதுயர்கொள்ள வைத்த பாடல் என்பேன்.
ராகங்களில் புதைந்திருக்கும் ஒப்பாரி இசையின் கூறுகளைத் தீண்டாத, புறக்கணித்து ஓரம்கட்டிய செவ்வியலிசையாளர்கள் போலல்லாமல் அவற்றை தகுந்தமுறையில் பயன்படுத்தி இசையில் போடப்பட்ட திரைகளை திரையிசையமைப்பாளர்கள் அறுத்தார்கள். அதன் மூலம் மக்களை இசையால் கட்டி போட்டார்கள்.
இந்தப்பாடலை ராகமாலிகையில் அமைத்து உணர்வுகளை கிளற வைத்திருக்கிறார்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
சோக ரசத்திற்கு கன கச்சிதமாகப் பொருந்தும் முகாரி ராகத்தில் பாடல் ஆரம்பிக்கிறது..”கௌரவர்கள் படை கண்டான் ” என்ற பகுதி சிவரஞ்சினி ராகத்திலும், “அபிமன்யு போர்க்களத்தில் சாய்ந்து விட்டான் “என்ற பகுதி ஹிந்தோள ராகத்தில் அமைக்கப்பெற்று சோகத்தின் உச்சத்திற்கு சென்று உருகாதவர்களையும் உருக வைத்துவிடுகிறது.

இடையிடையே வரும் உணர்ச்சிபூர்வமான வசனங்களைத் தொடர்ந்து ” சிங்காரப்புன்னனகை ” என்ற பாடல் சோகமாக ஆபேரி ராகத்திலும் நம்மை சகஜ நிலைக்கு கொண்டுவருவதாக பாவலா காட்டி ஆசுசுவாசப்படுத்த முயல்கிறது.இருந்தாலும் சோகம் நம்மை மூழ்கடித்து விடுகிறது.

அமங்கலங்கள் நிறைந்த உணர்ச்சி பிரவாகத்தில் ,இதயம் கசிய வைக்கும் பாடல் இது.கேட்கும்கணம் தோறும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடவைக்கும் பாடல்.தாலாட்டும் ஒப்பாரியுமாக அமைந்த வித்தியாசமான பாடல் இது.
இந்தப்பாடல் காட்சியில் உணர்ச்சிப்பிழம்பாக தோன்றும் சாவித்திரி காட்டும் மிக இயல்பான முகபாவங்கள்,முக அசைவுகள் நம்மை நெகிழ வைக்கின்றன.

மிகச் சிறப்பாக இசையமைத்த மெல்லிசைமன்னர்களின் ராகபிரயோகங்கள் அவர்களின் மேதமையைக் காட்டி நிற்கிறது.கதையின் பொருள் அறிந்து பாடல் புனைந்த கண்ணதாசனும் தனது கைவண்ணத்தைக் காண்பித்திருக்கிறார்.

41 வில்லேந்தும் வீரர் எல்லாம் – படம்: குல்கேபஹாவளி [1955] – பாடியவர்: திருச்சி லோகநாதன் + பி.லீலா – இசை :விஸ்வநாதன் -ராமமூர்த்தி

இளவரசி ஒருத்தி பகடை விளையாட்டில் பல நாட்டு மன்னர்களையும் தனது தந்திரத்தால் அடிமையாக்கும் காட்சியில் வரும் பாடல்.பல நாட்டு மன்னர்களும் , இளவரசர்களும் போட்டியில் பங்குபற்றும் போதுபாடும் பாடல்.

பாடல் அமைந்த ராகங்கள்

கமாஸ் + கல்யாணி + மத்யமாவதி +ஸ்ரீராகம் + சுத்தசாவேரி +மோகனம்

ராகங்களை மிக இனிமையாகக் கையாண்ட மேதமையும் , பாடலின் உணர்வுகேற்ப ,நகைச்சுவையும், எள்ளலும் , கிண்டலுமாய் வர்ணஜாலம் காட்டும் இனிய பாடல்.மெல்லிசைமன்னர்களை புகழ வார்த்தையில்லை.

42 ஜெய ஜெய சாவித்திரி தேவி – படம்: பாடியவர் : பி.லீலா – இசை :
கல்யாணி ராகத்தில்ஆன்மாவை வருடும் மிக அருமையான பல்லவியை கொண்டு ஆரம்பமாகும் பாடல்.பரிபக்குவமும் , கம்பீரமும் குரலில் கொண்ட பி.லீலா ஒரு பிடி பிடித்த பாடல் என்று துணிந்து கூறத்தக்க பாடல்.கற்பரசிகளின் பெருமை கூறும் இந்தப்பாடலில் கல்யாணி, பிலகரி , சரஸ்வதி , காபி போன்ற ராகங்ககள் மிக அருமையாகப்பயபடுத்தப்பட்டுள்ளன.

43 காயாத கானகத்தே – படம்: ஸ்ரீவள்ளி [1948] – பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம் – இசை :சங்கரதாஸ் // சுதர்சனம்
சங்கரதாஸ் நாடகங்களில் கிட்டப்பா பாடி புகழ் பெற்ற இந்தப்பாடல் இது.பைரவி ராகத்தில் விருத்தமாக ஆரம்பித்து ” மேயாத மான் ” என்று விதம் விதமான நளினங்கள் காட்டி, பின் காபி ராகத்தில் நிறைவும் பாடல். ஸ்ரீவள்ளி என்றால் இந்த பாடல் தான் கேட்பவர்கள் மனதில் ஒலிக்கும் வண்ணம் பாடி அசத்தியிருப்பவர் கிட்டப்பாவை மானசீகக் குருவாக கொண்ட டி.ஆர்.மகாலிங்கம்.

44 திருமால் பெருமைக்கு நிகரேது – படம்:திருமால் பெருமை [1968] – பாடியவர் :டி.எம்.சௌந்தரராஜன் – இசை :கே.வீ மகாதேவன்
பால் கடல் அலை மேலே என்ற எம்.எல் வசந்தகுமாரியின் பாடலைப் போல திருமாலின் அவதாரங்களை வரிசையாக எடுத்துக்கூறும் பாடல் இது.
இந்தப்பாடலில் மத்யமாவதி + தன்யாசி +மோகனம் +கானடா + சாரங்கா + கமாஸ் + சாவேரி + சாருமதி + சுருட்டி + பேகடை போன்ற ராகங்களை மாலையாக கோர்த்து அழகு காண்பிப்பார் திரையிசைத்திலகம் கே.வீ.மகாதேவன் அவர்கள்.

45 ஒன்றானவன் உருவில் இரண்டானவன் – படம்:திருவிளையாடல் [1968] – பாடியவர் :கே.பி.சுந்தராம்பாள் – இசை :கே.வீ மகாதேவன்
பக்திப்படங்களில் நல்ல பாடல்கள் இருக்கும் என்று நிரூப்பிக்கும் வகையில் பாடலகள் அமைந்திருக்கும்.அந்த வகையில் அமைந்த பாடல் இது.தனக்கேயுரிய பாங்கில் உணர்ச்சி மேலிடப்பாடும் சுந்தராம்பாள் பாடிய இனிய அதிர்வு தரும் பாடல்.

46 வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் – படம்:அகத்தியர் [1971] – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + சீர்காழி கோவிந்தராஜன் – இசை :குன்னக்குடி வைத்தியநாதன்

சமமா..? நீ சமமா ? நீ சரிசமமா…? சதமா ..நீ சதமா ..?பரிகாசமா ..சாகசமா ? நீ பாதக மனிதா !. என எள்ளலையும் , நையாண்டியையும் சுரங்களில் அமைத்து பாத்திரங்களின் மன நிலையை துல்லியமாகக் காட்டும் வித்தகப்பாடாடல்.

ராவணனும் அகத்தியரும் போட்டியாகப் பாடும் அமர்க்களப்பாடல்.இசைவல்லாளன் ராவணனின் நையாண்டியும் , அகத்தியரின் பதற்றமும் , நிதானமும் பாட்டில் வெளிப்படும் பாடல்.

தெறிக்கும் மின்னல் போல குறுகிய கவி வரிகளில் மிகப்பெரிய ராகங்களின் உயிர் நிலையங்களை தொட்டுக்காட்டி செல்லும் இனிய சங்கதிகள் நிறைந்த பாடல் இனிய ராகங்களின் அழகுகளை மிகப்பெரிய தொகுப்பாக தந்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதனின் இசைஞானத்தின் அபார வெள்ளிப்பாடு!

ஓங்கி குரல் எடுத்து பாடும் பாணியில் வந்த இரு பெரும் பாடகர்கள் இணைந்து பாடி அசத்தியிருக்கிறார்கள்.
இந்தப்பாடலில் “நாட்டையும் நாதத்தால் “என்ற பகுதி நாட்டை , “அந்த பைரவி துணைவன் ” என்ற பகுதி பைரவி ,”இசை கேட்டு எழுந்தோடி வந்தான் ” என்ற பகுதி தோடி , ” ஆரபி மானம் கொள்வார் ” என்ற பகுதி ஆரபி , “சண்முகப்ரியன் என்னும் தைரியமா “சண்முகப்ரியா ,

நாட்டை , பைரவி , தோடி , ஆரபி , சண்முகப்ரியா ,தர்பார் , ஹம்சத்வனி , வசந்தா , மோகனம் போன்ற ராகங்கள் ராகமாலிகையாக வரும் பாடல்.

47 ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் – படம்:அபூர்வ ராகங்கள் [1975] – பாடியவர் : வாணி ஜெயராம் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
மெல்லிசைமன்னரின் இசையாற்றலை நிலைநாட்டும் ஒப்பற்ற பாடல்களில் ஒன்று.கதையோட்டத்தின் மனவோட்டவரைவை மிக துல்லியமாக காட்டும் தன்னிகரில்லாத பாடல்!

காணும் மனிதருக்கு எத்தனை சலனம்
கற்பனை சந்தோசத்தில் அவனது கவனம் ….சலனம் ,கவனம் போன்ற சொற்களை பாடும் இடங்கள் மட்டுமல்ல அனாயாசமான சங்கதிகளை கொண்ட அருமையான பாடல்.
வாணி ஜெயராம் அற்புதமாகப்பாடிய இந்தப்பாடல் பந்துவராளி , ரஞ்சினி , சிந்துபைரவி , காம்போதி போன்ற ராகங்களால் அலங்கரிக்கப்பட்ட பாடல்.

48 அதிசய ராகம் ஆனந்த ராகம் – படம்:அபூர்வ ராகங்கள் [1975] – பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
படத்தின் தலைப்புக்கேற்ப அமைந்த இந்தப்பாடல் சுவையுணர்வின் தனித்தன்மையுடன் அரிதான ராகமாகக் கருதப்படும் மகதி ராகத்தில் முன் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாய் மலர்ந்திருக்கும் ஒரு அழகிய மலரின் இளமை வனப்பும் , மென்மையும் ,எளிமையும் கொண்ட இசைப்படைப்பு.ராகத்தின் ஆழமும் ,கூர்மையும் ,இனிமையும் ஒன்று சேரக் காட்டும் உயிர்த்துடிப்பு மிகுந்த இந்தப்பாடல் இளைஞன் ஒருவனின் காதல் உணர்ச்சிப்பெருக்கை நிதானத்துடன் ,அமைதியுடனும் வெளிப்படுத்துகிறது.
பாடலின் பின்பகுதியில் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தும் விதமாக பிரகடனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதால் பைரவி ராகத்தில் அமைகிறது.
அரிதான ராகத்திலேயே இனிமையும் ,எளிமையுமிக்க பாடல்களை அள்ளி வீசி மெல்லிசையில் புதுப்பாதை வகுத்து தன்னை மாபெரும் இசைமேதை என எத்தனயோ பாடல்களில் நிரூபித்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இந்தப்பாடலை தனது ஆண்மையும் , இனிமையும் , கம்பீரமும் , நிதானமும் ,ஆழமும் மிக்க குரலால் பாடி சிறப்பித்தவர் கே.ஜே .ஜேசுதாஸ்.

பாடல் அமைந்த ராகங்கள் மகதி , பைரவி.மகதி ராகம் கேட்பதற்கு வலஜி என்கிற ராகம் போலவும் இருக்கும்.அருமையான இசையமுதம்!

49 என்ன சமையலோ என்ன சமையலோ – படம்:உன்னால் முடியும் தம்பி [1988 – பாடியவர் : எஸ்.பி .பி + சித்ரா + சுனந்தா – இசை : இளையராஜா
மிக இனிமையான மோகனராகத்தில அமைந்த பல்லவியுடன் ஆரம்பாகும் கலகலப்பான பாடல்.மோகனத்தைத் தொடர்ந்து நாதஸ்வர இசையுடன் எழுச்சி அதிர்வு தரும் கல்யாணி ராகமும் ,தொடர்ந்து வசந்தா ராகமும் , முடிவில் மத்யமாவதி ராகத்தில் மங்களமாக சமையலை நிறைவு செய்யும் ராகங்களின் ரசங்களை தந்த பாடல்.

50 நாத வினோதங்கள் நடன சிங்காரங்கள் – படம்:சலங்கை ஒலி [1983] – பாடியவர் : எஸ்.பி .பி + எஸ்.பி.சைலஜா – இசை : இளையராஜா
தனது படைப்பாற்றலின் வீச்சு எல்லையற்றது என இசைஞானி நிரூபித்த பாடல்களில் ஒன்று.ஸ்ரீரஞ்சனி ராகத்தில் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் விறுவிறுப்பான , வீறுகொண்ட அதே வேலை கருணை மிகு ஹம்சானந்தி ராகத்திற்கு மெல்லிழைவான முறையில் மாறி செல்கிறது.

51 நீ இல்லாத போது – படம்:இளமைக்கோலம் [1980] – பாடியவர் : மலேசியா வாசுதேவன் + சுஜாதா – இசை : இளையராஜா

வானவில்லின் நிறங்கள் ஒன்றை ஒன்றை கலந்து கரைவது போல சங்கராபரணம் , கல்யாணி , கம்சத்வனி , போன்ற ராகங்கள் ஜாலம் காட்டும் இந்தப்பாடல் மேலையத்தேய இசையின் இனிய கலப்பில் இளையராஜாவின் தனி முத்திரை பதித்து கிரகபேதம் காட்டும் பாடல்.

52 சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் – படம்:மனதில் உறுதி வேண்டும் [1988] – பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ் + சித்ரா – இசை : இளையராஜா
கலைச் செறிவும் ,சுகமும் இணைந்த பாடல் ஒன்றிற்கு உதாரணம் இந்தப்பாடல் என்று சொல்லுமளவுக்கு , மிக எடுத்த எடுப்பிலேயே நெகிழ்ச்சி தரும் இனிய ராகமான ஆபேரி ராகத்தை மென்மையான லயத்தில் பல்லவியை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

பாடலின் அனுபல்லவியோ இதயத்தை இளக வைக்கும் பாகேஸ்வரி ராகத்தில் மிக இயல்பான ஆற்றொழுக்குடன் கரைந்து மாறுகிறது.இனிய செறிவுடன் வரும் மிக அழகான சங்கதிககளை இதமாக அசை போடுகிறார் ஜேசுதாஸ்.

பாடலின் சரணம் பாடலின் பெருமையை ஏற்றி வைப்பது போல கல்யாணவசந்தம் ராகத்தில் உயிர்ச்சங்கிலியில் பிணைத்து நிறைகிறது.

நன்கு பழக்கப்பட்ட மரபு வாத்தியங்களிலேயே வசீகரமும் , உயிர்ப்பும் ,ரீங்காரமும் தரும் பின்னணி இசையால் தொன்மத்தை சாறுபிழிந்து அருமருந்தாக்கியிருக்கிறார் இசைஞானி இளையராஜா.
தகுந்த முறையில் பாடி பெருமைப்படுத்தியிருக்கிரார்கள் பாடகர்கள்!

53 கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே – படம்: உளியின் ஓசை 2010 – பாடியவர் :ஸ்ரீராம் பார்த்தசாரதி – இசை :இளையராஜா

புலர்கின்ற பொழுது காட்டு ” என்ற விருத்தத்துடன் பூபாளம் ராகத்தில் ஆரம்பமாகும் பாடல்.
கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே என்று ஆரம்பமாகும் பல்லவி அருமையான கல்யாணி ராகத்திலும்

சோழர் தம் கொடி மேவும் புலி காட்டு + கல்யாணி , சேரன் கை வில் காட்டு இமை காட்டு = தர்மவதி .விழி காட்டு பாடியர் தம் கயல் காட்டு = தர்மவதி ராகம் என உணர்வுகளின் உன்னதங்களில் விளையாடி ,மீண்டும் சுழன்று கல்யாணி சென்று

“உடல் உழைப்பின் களைக்காக உழைப்பாளர் நிலை காட்டு ” என்ற பகுதி வசந்தா ராகத்தில் பல அசைவுகளை காட்டி உணர்வுகளின் வீச்சை அள்ளி வீசி நிறைவுறுகிறது.

ஸ்ரீராம் பார்த்தசாரதி மிக நன்றாகப் பாடிய பாடல்.

54 அபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே – படம்: உளியின் ஓசை 2010 – பாடியவர் :பாம்பே ஜெயஸ்ரீ + சுதா ரகுநாதன் – இசை :இளையராஜா

சில ராகங்களைப்பாடக் கூடாது என்றும் அவை இனிமையற்றவை என்றும் “அமங்கலமான “ராகங்கள் என்று வர்ணிக்கப்படும் விவாதி ராகங்களில் சில பாடல்களை தந்தவர் இசைஞானி இளையராஜா.

விவாதி ராகங்கள் என்பது மிக நெருக்கமான சுரங்களைக் கொண்ட ராகங்களாகவும்,அதிகமான சுரங்களைக் கொண்ட ராகங்களாகவும் இருப்பவை. அதனால் ராகங்களின் நிலைகள் தடுமாறி விடும் அபாயமுண்டு.சுரங்களின் நிலைகள் மேல், கீழாக வருவதால் பாடுவது மிகுந்த சிரமம் தருவதால் கர்னாடக இசை வித்துவான்கள் “அமங்கலம் ” என்று கூறி அவற்றைத் தொடுவதில்லை.

எனினும் கர்னாடக இசையில் பாண்டித்தியமிக்க கே.ஜே.ஜேசுதாஸ் இவற்றை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விவாதி ராகங்களை மிகச் சிறப்பாகப் பாடி அசத்தியிருக்கிறார்.

சினிமாவிலும் இசைஞானி அனாயாசமாக விவாதி ராகத்தில் பாடல்களை அமைத்தும் பெருமைப்படுத்தியிருப்பது கவனத்திற்குரியது.

சாருகேசி ராகத்திற்கு நெருக்கமான ராகமான ராகவர்தினி என்ற ராகத்தில் பல்லவியைக் கொண்டு ஆரம்பமாகும் பாடல்.ராகவர்தினி ஒரு விவாதி ராகம்.

” முத்தை பழிக்கும் ” என்ற பகுதியில் நுழையும் பகுதியில் கரகரப்ப்ரியா ராகத்திலும் , ” முத்துத் தமிழ் கொஞ்சும் வண்ணச் சலங்கை “என்ற பகுதி பேரின்பம் தரும் ஆபேரி ராகத்திலும் “உடன் பிறப்பு என பிறந்த நடனக்கலையே ” என்ற பகுதி சுத்ததன்யாசி ராகத்திலும் அதைத்தொடந்து வரும் எழுச்சிமிக்க வயலினிசையோடு வரும் ” அடி எடுக்க தவறுமின்றி ” என்ற பகுதி மயக்கம் தரும் பந்துவராளி ராகத்திலும் விளாசித் தள்ளியிருக்கிறார் இசைஞானியார்.

பாடலுக்கு இரண்டு இனிமையான குரல்களைப் பயன்படுத்தியமை அதை பெறுமதியாக்கியுமமுள்ளது.நடனம் நம் கண் முன்னே விரியும் இசையமைப்பு !

55 சங்கீதம் என் தேகம் அன்றோ – படம்: கோயில் புறா [1980]- பாடியவர் : வாணிஜெயராம் – இசை :இளையராஜா

சிதம்பரி என்ற விவாதி ராகத்தில் ஆரம்பமாகும் இந்தப்பாடல் , கல்யாணியில் மிக அருமையாகத் தொட்டு சென்று, சண்முகப்ரியாவின் கம்பீரத்தையும் கனிவையும் காட்டி செல்கிறது.

ராகமாலிகையில் அமைந்த பக்திப்பாடல்கள் நிறைய உண்டு.அந்த வரிசையில் முக்கியமான பாடல்களாக நான் கருந்தும் பாடல்கள் இரண்டு .

01 கந்த சஷ்டி கவசம் – இசையமைத்து பாடியவர்கள் : சூலமங்கலம் சகோதரிகள்

உருக்கமும் , எழுச்சியும் தரும் ஆபேரி ராகத்தில் ஆரம்பித்து பந்துவராளி , கல்யாணி , தோடி ,என சுழன்று மயக்கும் பாடல்.

02 சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி – 72 ராகங்களில் இசையமைக்கப்பட்ட சாதனையாகும். அதனை இசையமைத்தவர் இசைமேதை டி.ஆர்.பாப்பா.

முன்முடிவுகளால் திணிக்கப்பட்ட ,புதிய பாய்ச்சலுக்கு பெருந்தடைக்கல்லாக இருந்த சனாதனப்பார்வையை மீறி ராகங்களை ஆழ்நோக்குடன் தடத்தை மாற்றி ,வேறு கோணங்களில் எல்லாம் சிந்தித்து இசையில் புதிய அகத்தூண்டுதலைத் திறந்து விட்டவர்கள் திரையிசையமைப்பாளர்களே!

உள்ளத்தில் எழுச்சியூட்டும் எத்தனை ,எத்தனை விதம் ,விதமான உணர்ச்சிகளை ராகங்களில் பின்னிப்பிணைத்து உளம் பிணிக்கும் பாடல்களாக்கியதுடன் , உலகின் பிற இசைப்போக்குகளை , மரபுகளை இனிமையாய் கலந்து மனம் லயிக்க வைத்து இசையில் மாற்றுவழிச் சிந்தனையை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பிடித்த திரையிசையமைப்பாளர்கள் என்றென்றும் தங்கள் படைப்பில் நின்று நிலைப்பார்கள்.

வாழ்வின் அடித்தளமாக விளங்கும் பொருளாதார நோக்கம் பின்னணியில் இருப்பினும் மரபைசையின் ராக மாண்புகளை மீறாமலும் ,தமது கற்பனைத் திறத்துக்கேற்ப பாடல்களைத் தந்து பல ஆயிரம் வருடங்கள் மக்கள் பழகி வந்த மண்ணிசையில் பிறந்த ராகங்களை இசையின் ஒரு கிளையாக விளங்கும் மெல்லிசையில் புகுத்தி, எளிமையாக பாமரனும் ரசிக்க வைத்து ,அந்த ரசனை விளையாட்டில் புதிய கற்பித்தல் நெறியை உண்டாக்கியவர்கள் திரையிசையமைப்பாளர்கள் என எண்ணத் தோன்றுகிறது.

பன்னெடுங்காலமாக மக்களின் மூதறிவிலிருந்து தோன்றிய , இனிமை என்ற அடிப்படையில் அமைந்த நமது இசையை மிகவும் எளிமையாக யாரும் பாடக் கூடிய பாடல்களாக அமைத்து இராகங்களை ஆலாபனை செய்யவும் வைத்தார்கள் சினிமா இசையமைப்பாளர்கள்!

” நாட்டுப்புறப்பாடல்களில் இருக்கும் ஒலிநயம் ராகங்களாக வளர்ந்திருக்கின்றனவே தவிர ,அந்த ராகங்களை யாரும் புதிதாக உண்டாக்கிவிடவில்லை.தாலாட்டில் பாட்டு ,கல்யாணத்தில் பாடு ,வயல்வரப்பில் பாட்டு என்றிருந்த ராகங்களே சங்கீதமாயின.புன்னாகவராளி , கேதாரகௌளை , மத்யமாவதி போன்ற ராகங்கள் இப்படி உருவானவை தான்.
பழம்விர்பவன் “நாகப்பழம் …..நாகப்பழம் ஆழாக்கு ஓரணா ” என்று அந்தக்காலத்தில் பாட்டுப்பாடி விற்பான் .அது “புன்னாகவராளி “ராகம். எனவே ஒவ்வொரு ராகத்திற்கும் பழைய நாட்டுப்புறப் பாடல்களே அடிப்படை. ” என்பார் இசைப்பேராசிரியர் டாக்டர் எஸ்.ராமநாதன்.

இந்த மக்கள் ராகங்களை அவர்களே நெருங்க முடியாமல் செய்த சனாதன நரித்தனத்தை அமைதியாய் உடைத்து நொறுக்கி , அதை மீண்டும் மக்களிடம் உணர்ச்சி நிறைந்த இசை மூலம் மலர வைத்த பெருமை சினிமா இசைக்கு உண்டு.கனதி மிக்க ராகங்களையும் கொடுக்கும் விதத்தில் கொடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று “கர்னாடக இசையை ஒப்புவிப்பவர்களுக்கு” போதனையையும் செய்தார்கள்.

ராகங்களை வைத்துக் கொண்டு அவர்கள் உணர்ச்சியற்ற கச்சேரி வைக்கவில்லை என்பதும் , ஆயினும் பல சினிமாப்பாடல்களையும் அந்தப் பாடல்களின் ராகங்களை ஆலாபனை செய்து பாடினால் அது கர்நாடக இசைக்கு நிகராக இருக்கும் என்பதையும் நாம் காண்கிறோம்.

தமிழில் பழங்காலம் தொட்டு பழகிவரும் பாடல் வகைகள் எத்தனையோ உண்டு.அந்த வகையில் சினிமாவில் வெளிவந்த பாடல்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் தனக்கென ஓர் தனித்துவத்தைக் கொண்டு மக்கள்மயமாகி இருக்கிறது சினிமா இசை.

தமிழ் சினிமா இசையைப் பொறுத்தவரையில் ஆரம்பகால இசையமைப்பாளர்களான பாபநாசம் சிவன் , ஜி.ராமநாதன் முதல் இசைஞானி இளையராஜா வரை பல்வேறு அலைவரிசையில் ராகங்களில் நின்று மெல்லிசையின் கொடியை உயர்த்திப் பிடித்து வந்ததைக் காண்கிறோம்.

தமிழ் திரையால் விளைந்த ஒரே நன்மையும் இசைதான் என்பதை நாம் பெருமையாகவும் கூறலாம்!

சௌந்தர் 26 பகுதிகளாக எழுதிய நீண்ட ஆய்வுக் கட்டுரை இத்துடன் நிறைவிற்குவருகிறது. தமிழ் சினிமாவில் கர்நாடக இசையின் ஆளுமை தொடர்பான துறைசார் நிபுணத்துவத்துடன் கூடிய இந்த ஆய்வு தமிழிசையின் வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. சௌந்தரின் இக் கட்டுரைத் தொடரை மேலும் சேர்க்கைகளுடன் நூலுருவில் வெளியிடும் முயற்சிகள் நடைபெறுகின்றன. 

முற்றும்.

தமிழ்திரை இசையில் ராகங்கள் [ 25 ] – T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 24 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 23 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 22 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 19 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 18 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்
Exit mobile version