Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 22 ] : T.சௌந்தர்

TH-MSV_MUSICஅதிகம் புகழ்பெறாமல் இருந்த பல ராகங்களைத் தூசிதட்டி எடுத்து ,அவற்றிற்கு புதிய அந்தஸ்த்தை தந்த சினிமா இசையமைப்பாளர்கள் ,உத்வேகத்துடன் பயன்படுத்தி ,புதிய அர்த்தம் பெய்த கவர்ச்சிகரமான ராகங்களில் ஒன்று கெளரிமனோகரி.

இது மனதுக்கு ஊக்கமும் ,திடமும், கனிவும் ஒன்று சேர தரும் பண்பட்ட ராகம். இன்பநிலை தந்து நுண்ணுனர்வுகளைக் கிளறிவிடுவதில் கெளரிமனோகரி தனித்தன்மை வாய்ந்தது. கனிவும் கருணையும்மிக்க இந்த ராகத்தை பாடி , அழியாமல்தலைமுறை தலைமுறையாகக் காத்தவர்கள் ஓதுவார்கள் ஆவர். .தமிழ்மக்கள் தந்த பெருமைமிக்க ராகம் கெளரிமனோகரி என்றால் மிகையில்லை.

சமுதாயரீதியில் பின்தள்ளப்பட்ட பாணர்கள் மரபில் வந்த ஓதுவார்கள் பயன்படுத்தி விருத்தி செய்த ராகங்களில் இதுவும் ஒன்று. .இதனை ஒப்புக்கொள்ளும் வகையில் இசைக்கலைஞர் ஜி.எஸ்.மணி .” ஓதுவார் பெருமக்கள் அதிகம் பாடிவருகின்ற ராகம் ” எனக் கூறுவார்.

புலவர்களும் ,பாணர்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டமையையும் ,பின் பாணர்கள் புலையர்களாகப் பின்தள்ளப்பட்டதையும் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடலாம்.எனினும் அருங்கலையாம் இசைக்கலையை பழந் தொடர்பறாமல் பாடி வந்தவர்கள் ஓதுவார்கள்.

எனினும் இந்த ராகத்தின் பூர்வ தமிழ்ப்பெயர் தெரியவில்லை.

“கேட்டமாத்திரத்தில் ஓட வைக்கும் கர்னாடக இசை” [ எழுத்தாளர்,கவிஞர் விந்தன் ] ராகங்களை தனது நாடகத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்த சங்கரதாஸ் சுவாமிகள் இந்த ராகத்தைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

கர்னாடக இசையிலும் அதிகம் பயன்படாத ராகங்களில் ஒன்றாகவும் கெளரிமனோகரி இருநது வருகிறது என்பதை மிகக் குறைந்த அளவு பாடல்களை வைத்தே கூறிவிடலாம்.

தமிழ் செவ்வியல் இசையில் 23 வது மேளகர்த்தா ராகமாக வரும் கெளரிமனோகரி கீரவாணி ராகத்திற்கு மிக,மிக நெருக்கமானதாகும்.

ஆரோகணம்: ச ரி2 க2 ம1 ப த1 நி3 ச
அவரோகணம்: ச நி3 த2 ப ம1 க2 ரி2 ச

இந்த ராகத்தை கிரகபேதம் செய்தால் வாசஸ்பதி,சாருகேசி ,நாடகப்ரியா போன்றா ராகங்கள் கிடைக்கும் என்பர்.

தனது மனம் போன போக்கில் ராகங்களுக்கு வேறு பெயர் வைத்து மகிழ்ந்த தீட்சிதர் இந்த ராகத்திற்கு இட்ட பெயர் கௌரிவேளாவளி என்பதாகும்.

இந்த ராகத்தில் தியாகய்யர் எழுதிய “குருலேக எடுவண்டி குனுகி” மிகவும் புகழ் வாந்த ஒன்றாகும்.

மைசூர் வாசுதேவாச்சாரியாரின் வரலட்சுமி நமஸ்துதே,

சுவாதித்திருநாளின் சரச சாம மிர்துபாத

போன்ற கீர்த்தனைகள் குறிப்பிடத்தக்கன.

ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் இந்த ராகத்தினை ” பட்தீப் ” என அழைக்கின்றனர். ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் விரிவாக வாசிக்கின்ற ராகங்களில் இதுவும் ஒன்றாகும்.ஹிந்தி சினிமாவிலும் குறைந்த அளவிலான பாடல்கள் இந்த ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் ஜனரஞ்சக இசையை மரபு சார்ந்து இசையமைப்பாளர்கள் கொடுத்துவந்தார்கள்.கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளை மிக நேர்த்தியாக வெளிக்கொணர முனைந்த அந்தக் காலத்து இசையமைப்பாளர்கள் சகலரும் “நல்ல பாடல்களைத் தர வேண்டும் “என்று பாரபட்சம் இல்லாமல் மிகக் கரிசனை காட்டினார்கள்.

வெகுமக்கள் இசை ரசனையில் கற்பனை வளத்தை வளர்க்கும் முக்கியமான ராகங்களில் கெளரிமனோகரியும் ஒன்று என்பதை அந்த ராகத்தில் வெளிவந்த தமிழ் சினிமாப்பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.ஆரம்பகால சினிமாவில் ஏனைய ராகங்களைப் போல சம்பிரதாயமான முறையில் அரிதாகப் பயன்படுத்தப்பட்டாலும் 1960 களிலிருந்து புதுதினுசாக பயன்படத் தொடங்கியது.மனதை வசப்படுத்தும் புதிய உத்திகள் உதித்த காலமும் அதுவே.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த பாடல்கள் சில.

01 எனையாளும் தயாநிதே படம்:ஹரிச்சந்திரா [ 1949 ]-பாடியவர்:P.U.சின்னப்பா இசை :

ஹரிச்சந்திரன் துன்பமிகுதியால் ஈசனை வேண்டிப்பாடுவது போல அமைந்த பாடல்.மனையையும் ,மகனையும் மறையோருக்கு விற்ற துன்பமும் ,சுடலை காக்கும் துயரமும் ,பசுவை நாளும் கொலையே செய்யும் புலையனானேன் என்ற துன்பமும் அரிச்சந்திரனை வாட்டி எடுக்கும் பாடல்.பாடல் கெளரிமனோகரி ராகத்தில் ஆரம்பித்தாலும் ஆங்காங்கே சாருகேசி ராகத்தின் சாயலும் தெரிகின்ற பாடலில் கனிவு கொஞ்சம் கம்மியாகவே வெளிப்படுகின்ற பாடல்.

02 நீதான் அல்லாமல் துணையார் – படம்: வேலைக்காரி [ 1949 ] – பாடியவர்:கே.ஆர்.ராமசாமி – இசை :சி.ஆர்.சுப்பராமன்.

கே .ஆர்.ராமசாமி , பாடி நடிக்கும் பரம்பரையில் வந்தவர்.சிறப்பாகப் பாடிய பக்திப்பாடல் .புதுமைநாட்டம் மிக்க இசைமேதை C.R. சுப்பராமன் இசையமைத்த பாடல்.

03 நிலவே நீதான் ஒரு வழி கூறாயோ – படம்: சின்னதுரை [ 1952] – பாடியவர்:டி.ஆர்.மகாலிங்கம் – இசை :டி .ஜி .லிங்கப்பா

மோன இருள் தீர
முத்தொளியை வீசுகின்றாய்
வானில் தவழும் முழு நிலாவே

சிறிய அழகிய விருத்தத்துடன் தொடங்கும் இதமான பாடல்.வரிகளுக்கு இசைந்த மெட்டா இல்லை மெட்டுக்கு இசைந்தொழுகும் பாடலா என எண்ணி வியக்க வைக்கும் பாடலில் கௌரிமனோகரி ராகத்தை விரகதாப உணர்வுக்கு மிக எளிமையாக மெல்லிசையில் தோய்த்து அசாதாரணமாக்கி தனது இசை லட்சியத்தில் உயர் நிலை எய்தியிருப்பவர் இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா.

பொதுவாக உச்சஸ்தாயியில் பாடிப் பெயர் பெற்ற டி.ஆர்.மகாலிங்கம் கீழ்ஸ்தாயியில் பாடி கேட்போரை நெகிழ வைக்கும் இனிய பாடல்.சிறிய பாடலாக இருந்தாலும் கெளரிமனோகரி என்ற பாலில் விளைந்த கடும்பு.அற்புதக்கலைஞனான டி.ஜி.லிங்கப்பா அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்காவிட்டாலும் ,இசையமைத்த படங்களில் எல்லாம் மிக இனிமையான பாடல்களைத் தந்த மகாகலைஞன்.குழு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட கலைஞனை கன்னட சினிமா அருமையாகப் பயன்பட்த்திக் கொண்டது.” அமுதைப் பொழியும் நிலவே ” , ” சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி “, கானா இன்பம் கனிந்ததேனோ ” போன்ற பாடல்கள் அவரின் திறமையை பறைசாற்றப்போதுமானவை.அமுதைப் பொழியும் நிலவே பாடலின் பாதிப்பு பாலும் பழம் படத்தில் இடம்பெற்ற ” ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் ” பாடலில் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

04 பொல்லாத பாவிகள் – படம்: பொன்வயல்[1951] – பாடியவர்:R . பாலசரஸ்வதிதேவி – இசை :சங்கரசாஷ்திரி

மென்மையும்,இனிமையுமிக்க குரல் கொண்ட ஆர்.பாலசரஸ்வதிதேவி பாடிய சோகப்பாடல் .

05 எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் – படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் [ 1949 ] – பாடியவர்:T.M.சௌந்தரராஜன் + R . பாலசரஸ்வதி தேவி இசை :K.V.மகாதேவன்

தன்னனலமும் பேராசையும் கொண்ட சமுதாயத்தில் நிகழும் சிதைவுகளும், ஒடுக்குமுறையும் மாறாதா என்று கவலை தோய்ந்த இசையில் மனதை நெகிழ வைக்கும் பாடல்.கதாபத்திரங்களின் வழியே உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

கீரவாணி ராகத்திற்கு மிக நெருக்கமான ராகமான கெளரிமனோகரி ராகத்திலும் கீரவாணி ராகத்தைப் போலவே ‘தன்னை நொந்து கொள்ளும் உணர்வை’ இயக்குசக்தியாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடல்.சௌந்தரராஜன் மிக அரிதாக பாலசரஸ்வதிதேவியுடன் இணைந்து பாடிய ஜோடிப்பாடல்.

06 வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கு – படம்:மல்லிகா [ 1957 ] – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை:டி.ஆர்.பாப்பா

ராக உயிர்த்துடிப்பை ஆழ்ந்த சோகப் பாடல் ஒன்றில் தந்து நம்மைத் துயரப் பெருக்கில் மூழ்கடிக்கும் பாடல்.இருளே நம்மில் கவிந்தது போன்ற உணர்வு நம்மில் படர்ந்து நம்மைதுயர் மனகாட்சியில் அமிழ்த்தும் பாடல்.பிரிவுத்துயரால் வேதும்பும்காதல் ஜோடியின் ஆழ்மனக் குமுறலை ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படுத்தும் அருமையான பாடல்.அமைதியான ஓலம்.

உள்ளத்திற்கு இசை ஊட்டச்சத்து ஊட்டும் இந்த பாடலை இசையமைத்தவர் இசைமேதை டி.ஆர்.பாப்பா தமிழ் சினிமா மெல்லிசையில் தனித்தடம் பதித்தவர்.அதிக வருமானம் தரும் சினிமா துறையை விட்டு விலகி , ஆத்மா திருப்திக்காக வானொலிக்கலைஞராக பணியாற்றியவர்.பின்னாளில் பகதிப்பாடல்களுக்கு இசையமைத்து தனி முத்திரை பதித்தவர்.

” சின்னஞ் சிறு பெண் போலே
சிற்றாடை இடை உடுத்தி … என்ற இனிமையான பாடல் சோற்றுபதம் ஆகும்.

07 பாட்டும் நானே பாவமும் நானே – படம்: திருவிளையாடல் [ 1965] – பாடியவர்:T.M.சௌந்தரராஜன் – இசை :K.V.மகாதேவன்

“பாட்டும் நானே பாவமும் நானே ” என்று பல்லவியைப் பாடும் போதே உற்சாகமும் ,தன்னமபிக்கையையும் ஒன்று சேர நெஞ்சில் எழுப்புகிறது.இந்த சபையில் என்னை வெல்லயார் ..? என்று கேட்டு முழங்கியவன் வாய் அடக்க ஈசன் பாட்டும் நானே என்று பிரகடனபபடுத்தும் பாடலை ,அதற்குரிய தன்மை கொண்ட கெளரிமனோகரி ராகத்தில் மகோன்னத முறையில் அமைக்கப்பட்ட பாடல்.

ராகங்களை அறிய ஆவலுள்ளவர்கள் கௌரிமனோகரியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமாயின் இந்தப் பாடல் ஒன்றே போதும்.ராகங்களை அதன் இயல்பு மாறாமல் மரபுரீதியாக தரக்கூடிய கே.வீ.மகாதேவன் அவர்களின் கைச்சரக்கின் வல்லமை காட்டும் பாடல்.

ஒருநாள் போதுமா என்று ” என்றவனின் வாயடைக்க கம்பீரமான குரலில் கர்ஜித்த தீ.எம்.சௌந்தரராஜனை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்?படத்தின் மனோபாவத்திர்க்கிசைந்து இசை இயல்பாய் அமைந்த நமது பாரம்பரிய வாத்தியங்களுடன் இணைந்து சாரல் வெள்ளமாக கொட்டுகிறது.

08 சரவணப் பொய்கையில் நீராடி – படம்: இது சத்தியம் [1963] – பாடியவர்:பி.சுசீலா – இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
மரபு ராகங்கள் இன்னென்ன உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்த உதவும் என்ற ஐதீகங்களை , முன்முடிவுகளை மீறி ,அவற்றில் பல வகையான உணர்வுகளை தர முடியும் என உணர்த்தியத்தில் அந்தக் கால இசையமைப்பாளர்கள் யாவரும் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.ராகங்களின் நயம் சிறிதும் குறைவடையாமல் எந்த ராகத்திலும் எந்த வகையான தரமுடியும் என இலட்சியத்துடன் இயங்கியுள்ளனர்.அவர்களைப் பொருத்தவரையில் எல்லாவகையான உணர்வுகளையும் மாற்றி மாற்றி தரமுடியும்.ஐதீகங்கள் தாண்டி செல்லும் வல்லமை அவர்களிடம் இருந்தது.

அந்த வகையில் மெல்லிசையில் பாரம்பரிய இசையின் ராகங்களை ஏட்டுச் சுரக்கையாக அல்லாமல் ஜீவன் ததும்ப தந்த பாடல்கள் ஏராளம்.அதில் ஒன்று இந்தப்பாடல்.

அதிகாலைக்குரிய ராகம் என வர்ணிக்கப்படாத கெளரிமனோகரி அதிகாலைக்குரிய காட்சியமைப்புக்கு பயன்படுத்தி வெற்றிபெற்ற பாடல்.இசையமசங்களில் முக்கியமானவற்றை ராகங்களின் இனிமையில் அமைத்துக்காட்டி தமிழ் சினிமாவின் மெல்லிசைப்போக்கில் சீரிய நெறி காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.தமிழ் மக்கள் இதயபீடத்தில் அமர்ந்த மேன்மைமிக்க பல பாடல்களைத் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.வடக்கில் ஹிந்தி தேர்ச்சி பெற்ற மெல்லிசை அவர்களின் ஆதர்சமாக விளங்கியது.

09 ஆலயமாகும் மங்கை மனசு – படம்: சுமதி என் சுந்தரி [ 1971] – பாடியவர்:பி.சுசீலா – இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

மேலே குறிப்பிடப்பட்ட பாடலைப் போன்ற ஒரு சூழ்நிலைக்கு போடப்பட்ட பாடல்.அதிகம் கேட்காத பாடல் என்றாலும் கேட்கும் போதெல்லாம் அதன் இனிமை வியக்க வைக்கும்.தி.மு.க வினரும் ,தமிழ் சினிமாக்காரர்களும் ஒப்பேற்ற துடித்த “கண்ணகி பரம்பரை பெண்ணை “காடட விளைந்த காட்சி.பாட்டுடைத்தலைவன் கனவைப் பூஜிக்கும் பாடல்.மகிழ்ச்சி தரும் மென்மையான பாடலின் இனிமை செனாய் வாத்திய இசையால் பெருக்கெடுக்கும் இன்பத்தையும் தரும் பாடல்.

10 மலரே குறிஞ்சி மலரே – படம்:டாக்டர் சிவா [1975] – பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ் +எஸ்.ஜானகி – இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

தமிழில் பாடகர் ஜேசுதாசை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்களில் முக்கியமானதொன்றாகும்.அவர் ஏற்கனவே மலையாள திரைப்பாடலான ” அகலே அகலே நீலாகாசம் ” என்ற பாடலின் அழுத்தமான பாதிப்பு நிறைந்த பாடல்.ஆயினும் சாருகேசி ராகத்தில் அமைந்தப்பாடலின் தன்மை ஓங்கி நிற்பதை மறைக்க கௌரிமனோகரி ராகத்தைப் பயன்படுத்திய நுட்பம் வியப்புத் தரவைப்பதுடன் ,அதை புதிய ,தனித்துவமான பாடலாக்கிய இசைவல்லமையின்ஆளுமை வியக்க வைப்பதாகும்.

பாடலைப்பாடிய குரலின் விந்தியா போடப்பட்ட மெட்டின் விந்தியா என ஆச்சர்யம் தந்து நமது வாழ்வுடன் இசைந்து விட்ட மெல்லிசைமன்னரின் ஈடு இணையற்ற பாடல்.எனது பத்து வயதுகளில் என்னை ஆக்கிரமித்த பாடல்கள் ஒன்று.நம் மனங்களில் அழியாத சித்திரங்களைத் தீட்டிய மெல்லிசை மன்னரின் இசை ஓவியம்.

11 கௌரிமனோகரியைக் கண்டேன் – படம்:மழலைப் பட்டாளம் 1980 ] – பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + வாணிஜெயராம் – இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

எந்த ராகமானாலும் அவற்றில் அநாசாயமாக பாடல்களை தரும் வல்லமைமிக்க இசைமேதை மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தந்த இனிய பாடல்.வேறு யாராவது ஆண் பாடகர் பாட்டியிருந்தால் இன்னும் நேர்த்தியும் சிறப்பான பாடலாகவும் அமைந்திருக்கும்.

12 நானா பாடுவது நானா – படம்:நூல்வேலி [1979] – பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + வாணிஜெயராம் – இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

ஒரே மெட்டை மாற்றி பாடல்கள் அமைப்பதை “வேட்டிக்குச் சாயம் மாற்றுவது போல ” என்று கூறி மாயவித்தைகள் செய்யும் மெல்லிசை மன்னரின் இசைஜாலம் காட்டும் பாடல் . மேலே உள்ள பாடலின் தெறிப்புக்களை நுணுகி கேட்டால் இந்த பாடலிலும் கேட்கலாம்.

13 பார்த்த பார்வையில் என் உள்ளம் இன்று பள்ளமானது – படம்:கௌரி மனோகரி 1992 – பாடியவர்கள் :ES.PI.பாலசுப்ரமணியம் + எஸ் .ஜானகி – இசை :இனியவன்

புதிய இசையமைப்பாளர் என்று சொல்ல முடியாத இனியவன் இசையமைத்த இனிய பாடல்.இளையராஜாவின் தாக்கம் துல்லியமாகத் தெரியும் பாடல்.

இசைஞானி இளையராஜா அமைத்த சில பாடல்கள்:

ராகங்களை ரசித்து சுவைக்க பொறுமையில்லாதவர்களும் ,அதன் உள்ளே பொதிந்திருக்கும் எழில் உச்சங்களை எல்லாம் தனது இசை லாவண்யங்களால் அனாயசமாகக் காட்டியவர் இசைமேதை இளையராஜா.ஒரு ராகத்தில் எத்தனை, எத்தனை விதம்,விதமான பாடல்கள்!!எத்தனை எத்தனை அழகு .. ரம்மியம் …!!!

01 தூரத்தில் நான் கண்ட உன் முகம் – படம்:நிழல்கள் [1980] – பாடியவர்:எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

ராகங்களில் விசித்திர சித்திரங்களை பாடல்களாக்கிக் காட்டும் இசைஞானியின் மாயாஜாலப் பாடல்.விரகதாப உணர்வை மனதை நெகிழும் வண்ணம் இசையில் திரட்டி தந்த பாடல்.இசை என்ற விளைநிலத்தில் விளைவித்த செழிப்புமிக்க இசை பயிர்.நெகிழ வைக்கும் பாடலில் இசைக்குகந்த இனிய சேர்க்கைகளாக மேலைத்தேய ஹார்மோனிய நுட்பங்களை பிணைத்துக் கட்டி காதல் வெம்மையில் நம்மையும் கரைய வைக்கும் பாடல்.கதாநாயகியின் உயிர் உருகும் உணர்வை மீரா கண்ணன் மீது கொண்ட காதலாக உவமிக்கப்படுகிறது.

02 பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் – படம்:இன்று நீ நாளை நான் [1986] – பாடியவர்:எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

ராகத்தின் உருவத்தை பல்வேறு கோணங்களில் பயன்படுத்தி ,பல்வகை பரிசோதனைகளையும் செய்து பார்த்த இசைஞானி ,கௌரிமனோகரி ராகத்தில் புதுமையாக ,இந்திரஜாலம் காட்டும் பாடல்.வாத்திய ஒலிகளில் எழும் இன்பங்களை , அதில் ஒளிந்திருக்கும் இரகசியங்களை கேட்க ,கேட்க வியப்பளிக்கும் வகையில் உணர்ச்சிகரமாக பின்னித் தந்த பாடல்.வாத்தியங்கள் நிகழ்த்தும் சம்பாசானைகள் மூலம் சொல்ல வந்த கருத்தை உன்னதக் குழைவுடன் தரும் பாடல்.சோக ரசம் ததும்பும் இசையைத் தரும் செனாய் வாத்தியத்தை இந்தப்பாடலில் பயன்படுத்தி , நுண்மை இன்பக் குழைவில் தந்து நம்மை வியக்கவைத்த பாடல்.

விரகதாபத்தை உருக,உருக மெல்லிசை வழியும் பாடலாக்கி கௌரி மனோகரி ராகத்திற்கு மகுடம் சூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்.மழையில் நனையும் இனிய உணர்வை ,மனக்கடலில் எழும் எண்ண அலைகளில் மிதத்திச் சென்று நம் மனங்களில் வியாபிக்கச் செய்துள்ளார் இசைஞானி.

மெல்லிசைமன்னர்கள் காலைக்குரிய ராகமாக்கினார்கள் என்றால், இசைஞானி இந்த ராகத்தை மழைக்குரிய ராகமாக்கி விட்டார்.

03 ஒரு காவியம் அரங்கேறு நேரம் – படம்:அறுவடைநாள் [1986] – பாடியவர்:இளையராஜா – இசை:இளையராஜா

தமிழில் வெளிவந்த முதல் ஒலித்தகடுகள் [ CD ] ஓரியண்டல் என்ற நிறுவனத்தால் 1988 களில் வெளியிடப்பட்டன.முன்னாள் இசையமைப்பாளர் ஆர்.பார்த்தசாரதி அதன் நிறுவனர். ” I AM WITH YOU ” என்ற ஒலித்தகட்டில் இளையராஜா பாடிய பாடல்களின் தொகுப்பாக வெளிவந்தது.

மழைக்குரிய ராகமாக்கிய இன்னுமொருபாடல் இது.பின்னணி இசைக்கோர்வை, ஹம்மிங் ,இதம் கொடுக்கும் தாளலயம் என வாத்தியங்களின் நூதனக் கலவை நம்மை திகைப்பில் ஆழ்த்திய பாடல்.இசைச் சேர்க்கைகள் விசித்திர சித்திரங்களாக விரிந்து செல்லுகின்ற பாடல்.அதை மிக நேர்த்தியாக தானே பாடியிருக்கிறார் இளையராஜா.

தரமான ஒருபாடலை தரமான ஒலியலைகளில் கேட்டு ஆனந்ததித்த அந்த தருணம் மறக்க முடியாதது.

04 சோலைப்பூவில் மாலைத் தென்றல் – படம்:வெள்ளை ரோஜா [1986] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் +எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

இன்ப சோபை தரும் எழில் மலரைப் பார்ப்பது போன்ற ஆனநதப்பாடல். CounterPoint என்ற இசை நுணுக்கத்தை பெரும்பான்மையான தனது பாடல்களில் வைத்து புதுமையைப் பூஜித்த இசையுள்ளத்தின் விலாசமனம் தெரியும் கைவண்ணப்பாடல்.ஒரு ராகத்தில் எத்தனை, எத்தனை ரசப்பிழிவுகள் !
நமது இசை மரபுக்கு புதுமை இன்பத்தையும் வலிமையும் தந்து , வளம் சேர்த்து ராகம் என்ற பெரு நதியின் கட்டுக்களை உடைத்து மெல்லிசை என்ற விளைநிலத்தில் பாய வைத்து ,இசை என்ற இன்பப்பயிர் வளர்த்து நம்மை திக்குமுக்காடச் செய்த பாடல்.

04 முத்தமிழ் கவியே வருக – படம் :தர்மத்தின் தலைவன் – பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ் + சித்ரா – இசை: இளையராஜா

இதயம் கசியும் அன்பை கல்லையும் கனிய வைக்கும் மெல்லிசையில் இனிய பின்னணி இசை ,மற்றும் ஹோரஸ் என்பவற்றை கொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் செம்மையாக அமைக்கப்பட்ட பாடல்.
வெளிப்பார்வையில் அமைதியான ஓட்டத்தைக் கொண்ட ஆழமான நதி போல , நெஞ்சுருக்கும் சோகத்தை உட்புதைத்துத் தந்த இசையமைப்பாளரின் ஆற்றல் வியக்க வைக்கும் பாடல்.

இன்பமாகப் பாடும் இந்தப்பாடலின் அனுபல்லவியின் முடிவிலும் ,சரணத்திலும் இன்பமான பாடலிலேயே சோகத்தின் உச்சமும் காட்டப்படுகிற பாடல்.கெளரிமனோகரி ராகத்தை சிகரத்தில் வைத்த பாடல்களில் ஒன்று.

05 செம்மீனே செம்மீனே உன்கிட்டே சொன்னேனே – செவ்வந்தி [1994] – பாடியவர்கள்:பி.ஜெயச்சந்திரன் +சுனந்தா – இசை :இளையராஜா

இசைஞானி போற்றும் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த ” சரவணப் பொய்கையில் நீராடி ” பாடலின் சாயல் பூசப்பட்ட குதூகலப்பாடல்.ஆனந்தத்தில் உந்தப்பெற்ற இரு உள்ளங்கள் எழில் உணர்ச்சியுடன் சிறகடித்துப் பாடும் பாடல்.இனிமையும் ,இசையும் ஒன்றாக பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதற்கொப்ப மெல்லிசையின் சிகாத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல்.
ராகங்களை மெல்லிசையால் ஊடுருவி நிகழ்காலத்திலும் ,எதிர்காலத்திலும் ஒளிர போகும் பாடல் வரிசையில் அமரப்போகும் பாடல்.

06 கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் – படம்: மனதில் உறுதி வேண்டும் [1988] – கே.ஜே.ஜேசுதாஸ் + சித்ரா – இசை: இளையராஜா

வலிந்து திணிக்கப்படாத இளையல்பாக கட்டுமானம் பெற்ற அழகிய சிற்பம் போன்று பூரணத்துவம் பெற்ற பாடல்.மகாசிற்பியின் கைத்திறன் போல அனாசயமாக தந்து நம் அகமனங்களை வருடிச் செல்லும் பாடல்.கௌரிமனோகரியின் ஜீவ சக்தியை கதாபாத்திரங்களின் மன ஓட்டத்திற்கும் , ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள கலாபூர்வமான உத்திகளும் கொண்டு ,சோகமும், இன்பமும் ஒன்றையொன்று தழுவிச் செல்லும் விரகதாபப் பாடல். இசைஞானி அமைத்த அமானுஷ்யப் பாடல். எந்த உணர்வை வெளிப்படுத்த அந்த பாடல இசையமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் பூரணத்துவம் பெற்றிலங்கும் பாடல்.
ஹிந்துஸ்தானி பாடலமைப்பில் மீரா கண்ணனை நினைத்து ஏங்கும் விரகதாப அலை நம் நெஞ்சங்களையும் மென்மையாக விம்மச் செய்கிறது.

07 உதயம் நீயே உலகம் நீயே – படம் :என்னருகில் நீ இருந்தால் – பாடியவர்:எஸ்.ஜானகி – இசை: இளையராஜா

இறைவன் மடியில் தன்னை அர்ப்பணிக்கும் பக்தை ஒருத்தி பாடும் கனிவுமிக்க பாடல்.இது போன்ற இசை அற்புதங்களை எல்லாம் அனாயாசமாக நாம் கடந்து வந்திருக்கின்றோம் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.நமது ராகங்களில் இருக்கும் சிறப்புக்களை நமக்கே காட்டும் பாங்கில் அமைந்த பாடல்.

அதிகமான வாத்திய பிரயோகங்களில்லாத பாடல் எனினும் புல்லாங்குழல் இசையின்உன்னத நாதம் ஆன்மாவைத் தழுவி செல்கிறபாடல்

08 சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே – படம்:நான் சிகப்பு மனிதன் [1987] – பாடியவர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் +எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

கௌரிமனோகரி ராகத்திற்கு மெல்லிசை மகுடம் சூட்டிய இசைஞானியின் மற்றுமொரு பாடல்.புதுமையும் இளமையும் ததும்பும் பாடல்.மெல்லிசைவானில் அழகுக் கோலம் காட்டி ஒளிவீசும் தாரகைகளில் ஒன்று.இசைக்கர்ப்பிதங்களை தகர்த்து ,சுவர்க்க இசையாத்திரைக்கு நம்மை அழைத்துச் சென்ற பாடல்.ராகங்களின் பிரயோகத்தில் மட்டுமல்ல தாள பிரயோகத்திலும் கஞ்சத்தனம் காட்டாத ,படைப்புக்கலையில் பேருலகைக் காட்டும் இசைஞானி ,இந்தப்பாடலிலும் தாவி தாவி பாய்ந்து ,பாய்ந்து வரும் பல்வகைத்தாலலயங்களில் மிதத்தி நம் உள்ளுணர்வுக்கு இதம் ஊட்டுகிறார்

09 வா வா அன்பே அன்பே – அக்னிநட்சத்திரம் [1988] – பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ் + சித்ரா – இசை: இளையராஜா
ஆச்சர்யம்தரும் இன்னுமொருபாடல்.இசைஞானியின் கற்பனை வளம் புதுக்கோலம் காட்டும் பாடல்.மேலைத்தேய வாத்தியங்களின் இனிமையை புதுதினுசாகப் பயன்புத்திய சாதனைப்பாடல்.
வாத்தியங்களின் குழைந்து வரும் இனிமை, இசை அலையில் மிதந்து வரும் கெளரிமனோகரி ராகத்தை அணைத்துச் செல்கின்றன.
கெளரிமனோகரி ராகத்தில் இப்படி ஒரு பாடலா!? என்று வியக்க வைக்கும் பாடல் என்பதை சொல்லாமல் கடந்து போக முடியாது.

10 மாங்குயிலே பூங்குயிலே – படம்:கரகாட்டக்காரன் [1989] -பாடியவர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா

கெளரிமனோகரி ராகத்திலும் நம்மை துள்ளச் செய்யும் பாடலில் அழகுணர்ச்சி ததும்பும் ஒரு பாடலை இசைஞானி போல் யாரால் தர முடியும் என்று எண்ணத் தோன்றும் பாடல்.நாட்டுப்புற இசையின் இதயத்துடிப்பை ,யுகம் யுகமாக நம் முன்னோர்கள் பழகி வந்த தாளக் கட்டுமானங்களை உள்ளடக்கமாகக் கொண்டு நவீனகலவையாக மேலைச் செவ்வியல் இசையுடன் பொருத்தி புதுமை விளைவித்த சாதனைப்பாடல்களில் ஒன்று.

இந்தப்பாடலின் சந்தம்”ஏறு மயில் ஏறி விளையாடு” என்ற அருணகிரிநாதரின் சந்தப்பாடலை அடிப்படையாகக் கொண்டது என்று இளையராஜா கூறியது பலரும் அறிந்த செய்தி தான்.தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாள் ஓடிய படம் கரகாட்டக்காரன் என்பார்கள்.அந்த திரைப்படத்தின் மூலமும், முதுகெலும்பும் இசைஞானியின் இசை தான் என்பதை எந்தப்பாமரனும் அறிவான்.

நாட்டுப்புற இசையின் பயிற்ச்சியும் ,புதுமை செய்யும் ஆர்வமும் மிக்க இளையராஜா புதுமைமிக்க இசையின் நாயகனாக
தோன்றியது இந்திய வரலாற்றின் இசை பெருமிதம் ஆகும்.

11 மணிக்குயில் இசைக்குதடி – படம்:தங்கமனசுக்காரன் 1991 – பாடியவர்:மனோ – இசை:இளையராஜா

கௌரிமனோகரி ராக அலையில் மிதந்து வந்த ஓயாத மெல்லிசை அலைகளில் ஒன்று.மனதை மயங்க வைக்கும் மெட்டில் ,நினைவுகளை பின்னோக்கித் திருப்பும் காட்சியில்மனதை நெகிழ வைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புல்லாங்குழலிசையும் இனிக்கின்ற பாடல்

12 தாழம்பூவே கண்ணுறங்கு – படம்:இன்று நீ நாளை நான் [1986] எஸ்.ஜானகி +உமாரமணன் + எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை:இளையராஜா

பாலுடன் தேன் கலந்தது போல ,இன்பமும் ,உள்ளு ரைவில் மென்மையான சோகமும் கலந்து இனிக்கின்ற பாடல் .

13 விடலப்புள்ளே பாசத்துக்கு சிவத்தபுள்ளே நேசத்துக்கு – படம்:பெரியமருது [1994] – பாடியவர்:சுவர்ணலதா – இசை:இளையராஜா

குரலில் இன்பரீன்காரம் கொண்ட பாடகி சுவர்ணலதா தனக்கேயுரிய தனித்துவத்துடன் பாடிய அழகான பாடல்.விரகதாப உணர்வை மிகையுணர்ச்சி இல்லாமல் அளவோடு தருகின்ற பாடல் .எழுச்சிமிக்க செனாய் வாத்திய இசையின் பயன்பாடு கிராமிய உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இன்பவர்ணனையாக நெகிழ வைக்கிறது .

ராகங்களின் பிரயோகங்களில் நயமும் ,அவற்றில் வகை ,வகையான ,திரும்பத் திரும்பதராமல் ,மாற்றி மாற்றி ,பலவகை உணர்வுகளை ,ராகங்களுக்குப் ” பராக்கு ” காட்டுவது போல இசைச் சிலம்புகளைச் சுற்றிக்காட்டியவர் இசைஞானி இளையராஜா .
மேலே சொல்லப்பட்ட பாடல்களுடன் கீழே வருகின்ற பாடல்களையும் கேட்டால் இசையில் அவரது மனக்களிப்பு எவ்விதமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்

14 கண்ணன் நாளும் போடும் வேடம் – படம்:இளமைக்கோலம் [1980] – பாடியவர்:எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

15 ஏய் ஐய்யா சாமி நீ ஆளைக் காமி -படம்:வருஷம் 16 [1992] – எஸ்.பி.பாலசுப்ரமணியம் +குழு – இசை:இளையராஜா

16 எல்லோருமே திருடங்க தான் – நான் சிகப்பு மனிதன் [1987] – பாடியவர்:இளையராஜா – இசை இளையராஜா

17 விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை -படம்:பேர் சொல்லும் பிள்ளை [1984] – பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன் +குழுவினர் – இசை:இளையராஜா

18 தென்றலைக் கண்டு கொள்ள – படம்:நிலவே முகம் காட்டு [1999 ] -பாடியவர்கள்:ஹரிகரன் +இளையராஜா – இசை:இளையராஜா

19 அன்பே வா அருகிலே – படம்:கிளிப்பேச்சு கேட்கவா [1995] – பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ் – இசை:இளையராஜா

20 வாராயோ வான்மதி -படம்: பகல் நிலவு [1986] – பாடியவர்:தினேஷ் – இசை:இளையராஜா

சினிமா இசையமைப்பாளர்களின் பரந்த தேடுதல் அற்புதமான ராகங்களின் மென்மையான சலனங்களையும் ,வீச்சுக்களையும் ,மனக்கடலின் ஆழத்தை தொட்டு சென்று உணர்வுகளைக் கிளர்த்தும் விநோதங்களையும் தந்துள்ளது.

தமிழில் மட்டுமல்ல பிறமொழிப்பாடல்களிலும் பல பாடல்கள் இந்த ராகத்தில் வெளிவந்துள்ளன.அந்தவகையில் நான் கேட்டு ஆனந்தித்த ,என்னைப் பரவசப்படுத்திய பாடல் ஒன்று கானம் என்ற மலையாளத் திரைப்படத்தில் இசைமேதை வீ.தட்சிணாமூர்த்தி இசையில் வெளிவந்த

” யாரனிகா வனமாலினா – சகி
யாரனிகா வனமாலினா “

என்று தொடங்கும், இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா பாடிய பாடலைக் குறிப்பிடலாம்.வீ.தட்சிணாமூர்த்தி இசையமைத்து 2000 ஆண்டு வெளிவந்த கோதை என்ற நாடகத்தில் வரும் ” தனியாகச் செல்லாதே ராதை ” என்ற பாடலும் மிக இனிமையானது.

வங்கக்கவி தாகூர் இசையமைத்த “கனுசொக்கே ரீ சோலே ” என்ற பாடலையும் குறிப்பிடலாம்.

ஹிந்தி சினிமாவில் வெளிவந்த ஷர்மிலி [ 1971 ]என்கிற படத்தில் இசைமேதை எஸ்.டி.பர்மன் இசையமைத்த ”மெகா சாயே அகிரா ” என்று ஆரம்பிக்கும் மனதை மயக்கும் பாடலும் கெளரிமனோகரி (ஹிந்தியில் பட்தீப் ) ராகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டான பாடலாகும்.

[ தொடரும் ]

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 19 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 18 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

Exit mobile version