‘ அப்ப போவோமே அப்பாச்சி ‘…எண்டு,
அப்ப.. நான் சொல்லுவேன் ” பிள்ளையள் எனக்கு கால் கொஞ்சம் வலிக்கிறமாதிரி இருக்கு , நீங்க முன்னாலே மெதுவா நடவுங்க , நான் பின்னாலே வாறன் ” ,
எண்டு பொய் சொல்லிப் போட்டு கரகரப்பிரியா முழுவதையும் கேட்டு விட்டுத் தானடா தம்பி வருவேன்.ஆ,, உன்ர பெரியப்பா குழந்தைவேல், அந்த ராகத்தை என்ன அற்புதமாய் பாடுவார் தெரியுமே …”
இது எங்கள் பக்கத்து வீட்டு தங்கமணி பாட்டி [ ஊர்க்காடு சங்கீதவித்துவான் நடராஜாவின் சகோதரி ] கரகரப்பிரியா ராகம் பற்றி என்னிடம் 1998 ஆம் ஆண்டு கூறிய வாக்கு மூலம்.
கேட்போரை உருக வைக்கும் இந்த ராகம் இனிமையும் ,பேரெழிலும் நிறைந்தது.நாதஸ்வரத்தில் இந்த ராகத்தைக் கேட்பவர்கள் இலகுவில் மனதை பறி கொடுத்து விடுவார்கள் என்ற அடித்துக் கூறலாம்.விரிவான ஆலாபனைக்கு ஏற்ற ராகமாக விளங்குவதால் ஆற்றல்மிக்க கலைஞர்களுக்கு தங்கள் வித்துவத்தைக் காண்பிக்க ஏதுவான ராகம்.
செவ்வியல் சட்டகங்களைக் கொஞ்சம் தளர்த்திப் பார்த்தோமானால் இந்த ராகம் நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்தது என்பதை இலகுவில் கண்டு விடலாம்.பழம் பெரும் தமிழ் ராகமான இன்றைய கரகரப்ரியா ராகத்தின் ஆதிகாலத் தமிழ் பெயர் படுமலைப்பண் என்பதாகும்.
பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் பழகி வந்த ராகங்கள் பக்தி இசையில் திருப்பப்பட்டு , ஆட்சி மாற்றங்களுடே சம்ஸ்கிருத மயப்பட்டு தமிழ் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போயின.
என்னதான் ராகங்களின் பெயர்களை மாற்றினாலும் அதிலூடுபாவமாயிருக்கும் இனிமையை மக்கள் மறந்தாரில்லை.
ஆப்ரகாம் பண்டிதர் என்ற கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இசை மேதை இவை தமிழ் மக்களின் இசை என்பதை வெளிப்படுத்த மாபெரும் கருத்துப்போராட்டம் நிகழ்த்தி ,கர்னாமிருதசாகரம் என்ற தனது 1,200 பக்கம் கொண்ட நூலையும் எழுதி 1917 இல் வெளியிட்டார். அதன் பின் வந்த சைவ சமயத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இவரை கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை.
உலகத்திலேயே இப்படி ஒரு பிரமாண்டமான இசை வரலாற்று நூல் இல்லை என்ற பெருமையுடைய அந்த நூல் , தமிழ் நாட்டில் இசைக்கலூரிகளில் பாட புத்தகமாக இன்றும் வைக்கப்படவில்லை.தமிழ் மக்களின் பூர்வீக இசையின் பெருமை கூறும் அந்த நூலில் ராகங்கள் பற்றிய ஏராளம் செய்திகள் உள்ளன.
தமிழ் செவ்வியல் இசையான கர்னாடக இசையில் தாராளமாகப் பயன்படும் ராகங்களில் முதன்மையான ராகம் கரகரப்ரியா.இங்கே கருணாரசத்திற்கு மட்டும் இடம் இருப்பதால் அந்த உணர்வையே எல்லாப் பாடல்களும் பிரதிபலிக்கின்றன.
தாய்ராகமான கரகரப்ரியா 22 வது மேளகர்த்தா ராகம்.இதிலிருந்து பிறந்த ராகங்கள் பல.ஆபேரி, ஆபோகி, ஸ்ரீரஞ்சனி , கானடா , மத்யமாவதி , தேவமனோகரி , சுத்ததன்யாசி , ஸ்ரீராகம் , நாயகி ,பிருந்தாவன சாரங்கா , முகாரி , ரீதிகௌளை , சிவரஞ்சனி , போன்ற இன்னும் பல அற்புதமான ராகங்களை கூறலாம்.இந்த ராகத்தின்
ஆரோகணம்: ச ரி2 க2 ம1 ப த2 நி2 ச
அவரோகணம்: ச நி2 த2 ப ம1 க2 ரி2 ச
இந்த ராகத்தில் ஏராளமான பாடல்களை உள்ளன . குறிப்பாக தியாகராஜர் எண்ணிக்கையில் அதிகமான பாடல் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சக்கனி ராஜ – தியாகராஜர்
பக்கல நிலாபாடி – தியாகராஜர்
ராம நீ சமான – தியாகராஜர்
ராமா நியதா – தியாகராஜர்
தமிழில் பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களும் இருக்கின்றன. ஹிந்துஸ்தானி இசையில் கரகரப்ப்ரியா காபி [ KAFI ] என்ற ராகத்திற்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது.
ஜாஸ் இசையின் பரமுனி என்றழைக்கப்பட்ட மாபெரும் ஜாஸ் இசைக்கலைஞன் ஜோன் கொல்ற்னெ [ John Coltrane – 1926 – 1967 ] . ஜாஸ் இசைக்கும் இந்திய இசைக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் பால் இந்திய இசையின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்.ரவி சங்கரின் இசை கேட்ட ஆரவத்தால் ராக இசையின் கூறுகளை ஜாஸ் இசையில் கலந்து பல பரிசோதனைகள் செய்த ஜோன் கொல்ற்னெ ஒரு ஜாஸ் இசைமேதை. அவர் இந்திய ராகங்கள் குறித்து பேசும் போது தனக்கு மிகவும் பிடித்த ராகம் கரகரப்ப்ரியா என்று கூறினார்.
ரவிசங்கரிடம் இசை பயின்ற ஜோன் கொல்ற்னெ.ரவிச்னகரின் மேலுள்ள பற்றுததால் தனது மகனுக்கு சங்கர் என்று பெயர் சூட்டியவர்.ஜாஸ் இசையில் பல பரிசோதனைகளை செய்தார்.எனினும் அவரது இளவயது மரணம் உலக இசைக்கு ஏற்ப்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.
விரிந்த ஆலாபனைக்கு இடம் தரும் கரகரப்ரியாவை ஒரு ஜாஸ் இசைக்கலைஞன் விரும்பியது ஆச்சரியமல்ல.ஜாஸ் இசையும் விரிந்த ஆலாபனையை வரவேற்கும் இசை வடிவம் தான்.
தமிழ் திரை இசையும் கரகரபிரியா ராகத்தை விட்டு வைக்காமல் .மிக நல்ல பாடல்களைத் தன் பங்கிற்கு தந்துள்ளது.
01 நடை அலங்காரம் கண்டேன் – படம்: குபேர குசேலா – பாடியவர் : பி.யு.சின்னப்பா – இசை: குன்னக்குடி வேங்கடராமையர்
அந்தக் காலத்து சுப்பர் ஸ்டார்களில் ஒருவர் பி.யு.சின்னப்பா.சினிமாவில் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தியவர்,நடிப்பு ,சண்டைக்காட்சி , பாடல் போன்றவற்றை அனாயாசமாகச் செய்து காட்டிய நடிகர்.ஆனாயாசமாகப் பாடுவதிலும் சூரர் என்பதை இந்தப் பாடலாகி கேட்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
பாடலின் கருத்து ஏற்ப பாவனைகளை மிக இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கு மற்றும் அற்ப்புதமான சங்கதிகளையும் அனாயாசமாகப் பாடுவதையும் கேட்டு இன்புறலாம்.அவர் பாடும் பாங்கில் இசையமைப்பாளர் எஸ்.வீ.வெங்கட்ராமனின் சாயலையும் நாம் அவதானிக்கலாம்.
02 தெளியும் கடல் – படம்: காளமேகம் – பாடியவர் : டி.என் ராஜரத்தினம் பிள்ளை – இசை:
இசைமேதை , சங்கீத சக்கரவர்த்தி டி.என் ராஜரத்தினம் பிள்ளை பாடிய பாடல்.நாதஸ்வர சக்கரவர்த்தியான இவர் பாடுவதிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் பாடல்.நாதஸ்வரம் என்பது அவருக்கு ஒரு கருவியாகவே பயன்பட்டிருக்கிறது என்பதை அவர் பாடும் போது நாம் உணர்ந்து கொள்ளலாம்.குரலில் இவ்வளவு அசாத்தியமாக சங்கதிகளை பாட முடியுமா என்று ஆச்சரியம் தரும் வகையில் பாடியிருக்கின்றார்.
நாதஸ்வரத்தின் அசரீரியை அச்சொட்டாக கேட்கலாம்.தியாகராஜாபாகவதர் சிறப்பாகப் பாடிப் புகழ் பெற்ற சிக்கலான சங்கதிகளைக் கொண்ட ‘ பவள மால்வரை ‘ என்ற பாடலுக்கான சங்கதிகளை டி.என் ராஜரத்தினம் பிள்ளை அவர்களிடம் கற்றுக் கொண்டு பாடினார்.
03 தானே வருவாரோடி – படம்: பாரிஜாதம் – பாடியவர் : டி.வீ ரத்தினம் – இசை:
தானே வருவாரோடி
என்னழகுக்கு வலிமை இல்லையோ
தானே வருவாரோடி
என்று அலட்சியமாக தொடங்கும் பாடலை அமர்க்களமாகப் பாடியிருப்பவர் குரல் வளத்தில் தனித்தன்மையும் கம்பீரமும் கொண்ட டி.வீ.ரத்தினம்.பாடல்களில் பிருக்காக்களை அனாசாயமான பாடும் வல்லமை கொண்டவர்.கரகரப்பிரியா ராகத்தை ஒரு பிடி பிடித்துள்ளார் என்று சொல்ல வைக்கும் பாடல்.
04 என்ன செய்வேனோ – படம்: சேவாதசதனம் – பாடியவர் : எம் .எஸ் சுப்புலட்சுமி – இசை:
05 எந்தன் இடது கண்ணும் – படம்: சேவாதசதனம் [1938] – பாடியவர் : எம் .எஸ் சுப்புலட்சுமி – இசை:
எம் .எஸ் சுப்புலட்சுமி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற பாடல். இன்று கேட்டாளாலும் இனிக்கின்ற பாடல்.
06 உலகே சமாதான ஆலயமாம் – படம்: – பாடியவர் : பி.லீலா – இசை:
உயிர்கள் யாவும் ஒன்று என்று கருதினால் இன்பம் மிகும் என்ற கருத்தை மையமாக வைத்து சமாதானத்தை வலியுறுத்தும் பாடல். செவ்வியல் இசைப்பாணியில் இசையமைக்கப்பட்ட இனிமையான பாடல். ஆசை தான் த்ன்பத்தின் அடிநாதம் என்பதையும் விளக்கும் இந்த பாடலை இனிமை ததும்பும் வண்ணம் பி.லீலா பாடியிருக்கின்றார்.படத்தில் நாட்டிய காட்சிக்கான அமைப்பைக் கொண்ட பாடல்.
07 இன்பமே சிறிதும் அறியாத – படம்: என் தங்கை – பாடியவர் : பி.லீலா – இசை: கோவிந்தராஜுலு நாயுடு
இன்பமே சிறிதும் அறியாத பெண் ஜென்மம் உலகிலே என்றும் உண்டோ என்று தன்னை தானே நொந்து கொள்ளும் பெண் பாடுவதாக அமைந்த பாடல்.துன்பமில்லா நாளில்லை என்ற என்பதற்கிணங்க சோகம் படிந்துள்ள பாடல்.முற்பிறப்பில் செய்த வினையின் பயன் இந்த துன்பம் என்கிறது பாடல்.கரகரப்பிரியா ராகத்தின் அழகுகளை தனது இனிமையான குரலால் மெருகேற்றியுள்ளார் பாடகி பி.லீலா
08 தேவி ஜெகன் மாதா – படம்: மச்சரேகை – பாடியவர் : டி.ஆர். மகாலிங்கம் – இசை:
வழமையான தனது ஸ்ருதியில் பாடாமல் சற்று கீழ் சுருதியில் டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கின்றார்.அவ்வப்போது மேல் ஸ்ருதியில் வரும் இடங்களில் வெகு இயல்பாக பாடி பக்தி ரசத்தை இரக்கத்துடன் தருகிறார்.
09 நீலி மகன் நீ அல்லவோ – படம்: மலைக்கள்ளன் – பாடியவர் : பி .ஏ . பெரியநாயகி – இசை:
எதைப் பற்றியும் கவலைப் படாமல் வெகு அநாசாயமாக சங்கதிகளைப் பாடும் பி .ஏ . பெரியநாயகி பாடிய நாட்டியப்பாடல்.பலவகையான பெண் குரல்கள் ஒலித்த 1950 களில் தனித்துவமும் , கம்பீரமும் , இனிமையும் நிறைந்த குரலுக்கு சொந்தக்காரி பி .ஏ . பெரியநாயகி. திறந்த குரலால் பாடுவது பாடலை மெருகூட்டுகிறது.கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் ஓடும் பாடல்.இசைத்தட்டில் இரண்டு பக்கமும் உள்ள பாடல்.கரகரப்ரியா இவரது குரலில் களைகட்டுகிறது.
10 அறியா பருவமடா – படம்: மிஸ்ஸியம்மா – பாடியவர் : பி.சுசீலா – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
கரகரப்பிரியாவில் அமைக்கப்பட்ட மிகவும் இனிமையான பாடல்களில் ஒன்று.சுசீலா அவர்கள் மிகவும் அழகாக பாடி மனதை மெய்சிலிர்க்க வைத்த பாடல்.எளிமையும் இனிமையும் ததும்ப எஸ்.ராஜேஸ்வரராவ் இசையமைத்த பாடல்.
11 அம்புலியைக் குழம்பாக்கி – படம்: அம்பிகாபதி – பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
கம்பனின் மகன் அம்பிகாபதி பாடுவதாக அமைந்த விருத்தப்பாடல்.சிக்கலான சங்கதிகளை போட்டு அதை உச்சச்தாயியிலும் அமைத்து , தான் கற்பனை செய்த வண்ணம் பாடகர்களை பாட வைக்கும் இசை மேதை ஜி.ராமநாதன் இசையமைத்த மெய்சிலிர்க்க வைக்கும் கரகரப்ரியா ராகப்பாடல்.டி.எம் சௌந்தரராஜன் கம்பீரமாக, அருமையாக ராமநாதனின் ஆசையை பூர்த்தி செய்த பாடல்.பாடிய முறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. கரகரப்ரியா ராகத்திற்கு அருமையான பாடலைத் தந்த ஜி.ராமநாதன் என்றென்றும் இந்த பாடலால் வாழ்வார்.
12 மாய வலையில் வீழ்ந்து – படம்: குலெபஹாவலி – பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
13 மகாராஜன் உலகை ஆளுவான் – படம்: கர்ணன் – பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மிக அற்புதமான , இனிமையான காதல் பாடல்.படத்தில் வெளிவராத பாடலாயினும் புகழ் பெற்ற பாடல்.மெல்லிசையின் இனிமையும் , செவ்வியல் ராகத்தின் கனதியும் ஒன்றாய் வார்ப்பாகி இனிமை என்ற இலக்கை தொட்ட பாடல்.திரையில் மெல்லிசை இயக்கத்தை இசைச் சித்திரங்களால் வளர்த்த மெல்லிசைமன்னர்களின் மேதமமையை சொல்ல வார்த்த்யில்லை எனக்கு.
மெல்லிசை மன்னர்கள் கரகரப்பிரியாவின் இனிமையை 3 நிமிடத்தில் தந்து அந்த ராகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
14 ஒ.. மேரி தில்ரூபா – படம்: சூரிய காந்தி – பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன் + ஜெயலலிதா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
மெல்லிசைப்பாங்கில் எத்தனை புதுமை வண்ணங்களைத் தந்த மெல்லிசை மன்னரின் இசை லாவண்யம். இந்த பாடலை தேர்ந்த ஒரு பாடகி போல ஜெயலலிதா பாடி ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.கரகரப் பிரியா ராகத்தை மறைத்து மெல்லிசை இனிமை மென்மையாக நம்மை தழுவச் செய்கிறார் மெல்லிசைமன்னர்.வியப்பான ராகப் பயன்பாடு.
15 மாதவி பொன் மயிலாள் – படம்: இருமலர்கள் – பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
கட்டுரை ஆரம்பத்தில் கூறிய தங்கமணி பாட்டியின் நினைவை போலவே எனது பத்து வயதுகளில் நடந்த நிகழ்ச்சி ஒன்றும் கரகரப்பிரியா ராகத்துடன் சம்பந்தபட்டுள்ளது.
ஊரில் நடக்கும் வைபங்களில் ஒலிபெருக்கியை இயக்கும் நபர்கள் என்னையும் என்னை ஒத்த சிறுவர்களின் கவனத்துக்குரியவர்களாயிருந்தனர்.ஒலிபெருக்கி சாதனங்களை அவர்கள் பக்குவமாகக் கையாள்வதும் , ஒவ்வொன்றாக அவற்றை பொருத்துவதும் , பின்னர் கிராமபோன் பெட்டியில் இசைதட்டை வைத்து , அது சுழல்வதற்கு ஒரு இயக்கியை பக்கவாட்டில் வைத்து , [இசைத்தட்டு சுழல்வதர்க்குரிய சக்தியை வழங்க] சுற்றுவதும் , பின் சுழலும் இசைத்தட்டில் , ஊசி முனையை வைப்பதையும் ஒரு தியானம் போல அவதானித்துக் கொண்டிருப்போம்.அப்படி ஒரு ஈர்ப்பு அதில் இருந்தது.அந்த வயதில் ஒலிபெருக்கி உரிமையாளர்களும் , பஸ் ஓட்டுனர்களும் எனது பிரியத்துக்குரியவர்களாயிருந்தனர்.
இது நாம் விளையாடும் விளையாட்டுக்களிலும் பிரதி பலித்தது.நானும், எனது வயதை ஒத்த உறுவுக்கார சிறுவனும் [அவர் பெயர் பொன் சிங்கம் , இப்போது அவர் கனடா வாசி ] இதில் தீவிரமாக இருப்போம்.தீக்குச்சிப்பெட்டியில் கிராமபோன் போல செய்து , அதன் நடுவே ஊசி ஒன்று செருகி , அந்த ஊசியில் , பழைய பாட்டரியில் கிடைக்கும் சப்பையான பகுதியை உரித்தெடுத்தால் கிடைக்கும் சிறிய வெள்ளி தகட்டை , அந்த ஊசியில் வைத்து கையால் சுழற்றினால் அது குறிப்பிட்ட நேரம் சுழலும்.நல்ல வேகமாகச் சுற்றினால் இன்னும் சில வினாடிகள் அதிகமாகச் சுழலும்.
மண்ணெண்ணெய் விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றப் பயன்படும் புனல் என்ற கருவி ஸ்பீக்கர் ஆகப் பயன்படும்.அதனையும் தீப்பெட்டியில் செய்த கிராமபோனையும் நூலால்[ வயர் போல ] இணைத்து அதனை பூவரசம் மரத்தில் உயரத்தில் கட்டுவோம்.
எல்லாம் சரி தான். பாட்டு எப்படி வரும்? அதற்காக , நான் நன்றாகப் பாடுவதால் என்னை பூவரசம் அமரத்தில் ஏறி, புனலை வாயில் வைத்துப் பாடச் சொல்வார்கள்.நான் அவர்கள் சொல்லும் வரை பாட வேண்டும். அல்லது எவ்வளவு நேரம் கீழே ” இசைத்தட்டு ” சுற்றுகிறதோ அதைக் கவனித்து பாட வேண்டும்.அது நின்றால் எனது பாட்டையும் நிறுத்திவிட வேண்டும் என்பது கட்டளை.
இப்படி பல நாட்கள் இந்த விளையாட்டு தொடரும்.ஒரு நாள் இவ்விதமான விளையாட்டில் நான் பாட வேண்டும்.இசைத்தட்டு சுழன்று நின்ற பின்னும் , கீழே உள்ளவர் சொல்லியும் நான் பாட்டை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருந்தேன்.முதல் தடவை கீழே சிறுவன் மன்னித்தான்.இரண்டாவது தடவையும் நான் நிறுத்தாமல் பாடியதால் விளையாட்டே குழம்பி விட்டது.
நான் நிறுத்தாமல் பாடியதால் கோபமடைந்த கீழே உள்ள சிறுவன் சொன்னான் ..” இது தானே சொல்லுறது ,தம்பியோடு [ என்னுடன் ] விளையாடக் கூடாதென்று…!”
என்னை மறந்து நான் பாடிக்கொண்டே இருந்த பாடல் கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த ‘மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்’ என்ற பாடல் ஆகும்.அந்த பாடல் இன்றும் எனக்கு முழுவதும் மனப்பாடமாக உள்ளது.இந்த ராகத்தின் அழகும் , கம்பீரமும் என்னை அறியாமல் இசையில் ஆழத்திலிருந்து எழும் உயிர்ப்பிலும் , உணர்விலும் என்னை தோய்த்தது.
எங்கள் ஊர் ஒலிபெருக்கியாளர்கள் இது போன்ற பழைய பாடல்களை எல்லாம் தங்கள் மனம் போன போக்கில் ஒலிபரப்பி, நம்மில் இந்த மாதிரியான பாடல்களை எல்லாம் மனதில் பதிய வைத்து விட்டார்கள்.அவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
16 I Will Sing For You – படம்: மனிதரில் மாணிக்கம் [ 1975 ] – பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆட்டமென்ன சொல்லு நீ தோழி – நான்
ஆடிடுவேன் கொஞ்ச நாளில்
என்ற புகழ் பெற்ற சி.எஸ்.ஜெயராமனின் பாடலை நகைச்சுவையாக பாடும் பாடல்.மெல்லிசைமன்னரின் ஆற்றோட்டமான இசை, எந்த வகையில் அமைந்தாலும் அதன் தனித்துவம், சிறப்புமிக்கதாகவும் இருக்கும்.கரகரப்ரியா ராகத்தை வைத்துக் கொண்டு ஒரு அமர்க்களமான நகைச்சுவை பாடலை தந்து வியக்க வைக்கும் பாடல்.
அப்பர் பாடிய தேவாரம்
அதற்கு மேல் என் சாரீரம்
என்ற அடிகளைத் தொடர்ந்து வரும் ஆலாபனை அருமையாக இருக்கும்.பாடலின் இடையிடையே மேலைத்தேய ராக் அண்ட் ரோல் இசையும் , கதகளி தாளமும் , நாட்டுப்புற இசையும் கலந்து அமர்க்களப்படுத்தும் பாடல்.
தான் எடுத்துக் கொண்ட மெட்டைத் தொய்யாமல் இறுதிவரை அதன் இனிமை குறையாமல தருவதில் முன்னோடி மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.டி.எம்.சௌந்தரராஜன் அனாசாயமாகப் பாடிய பாடல்.
17 இசையாய் தமிழாய் இருப்பவனே – படம்: அகத்தியர் [ 1972 ] – பாடியவர்கள்: சீர்காழி + டி.ஆர்.மகாலிங்கம் – இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
இரண்டு ஒப்பற்ற பாடகர்கள் இணைந்து அசத்திய பாடல் என்று தான் இதனை சொல்ல வேண்டும்.அந்தவகையில் இசை தந்த குன்னக்குடி வைத்தியநாதனின் சிறப்பான தனித்தன்மை வாய்ந்த சிறப்பான இசையமைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. இரண்டு பாடகர்களும் பாடலில் போடும் அனாயாசமான சங்கதிகள் வியக்க வைக்கும்படியாக இருக்கும்.
அந்த சங்கதிகளில் அலை அலையாய் மிதக்கும் கரகரபிரியா ராகத்தின் இனிமை நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும்.
இசையின் எல்லை விரிந்து செல்வது போல தனது படைப்பாற்றலின் வீச்சும் எல்லையற்றது என்று நிரூபிக்கும் வண்ணம் ராகங்களைக் கையாள்வதில் தன் முன்னோர்களுக்குச் சளைத்தவர் அல்ல என்று நிதானமாக திடசித்தத்துடன் செயல்படுபவர் இசைஞானி இளையராஜா.அவர் தந்த கரகரப்பிரியா ராகப்பாடல்கள் சில.
01 பூ மலர்ந்திட நடமிடும் – படம்: டிக் டிக் டிக் [ 1981 ] – பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ் + ஜென்சி – இசை: இளையராஜா
I will sing for you என்ற பாடலில் மெல்லிசைமன்னர் எப்படி மேலை இசையைக் கலந்தாரோ ,அதே போல இந்தப் பாடலிலும் அநாசாயமாக கரகரப்பிரியா ராகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.ராகத்தின் உருவங்களைப் பல்வேறு கோணங்களில் அமைத்து காட்டி இசைச் சிலம்பங்களை சுழற்றிகாட்டிய மாயவித்தைக்காரன் தான் என இசைஞானி இளையராஜா தன்னைக் காட்டிக் கொண்ட பாடல்களில் ஒன்று.
குறிப்பாக பாடலில் வரும் வயலின் இசை கரகரப்பிரியா ராகத்தின் உச்சங்களைத் தொட்டு மெய்சிலிர்க்க வைப்பதுடன் , மரபுகளுடன் புதுமையையும் அள்ளித் தந்து செல்கிறது.பாடியவர்களின் குரல்களுக்கேற்ப இனிமையான மெட்டமைப்பு அமைந்து 33 வருடங்கள் கழிந்தும் புதுமை குன்றாத பாடல்.
02 மாப்பிள்ளைக்கு மாமன் மனசு – படம்: நெற்றிக்கண் [ 1981 ] – பாடியவர் : மலேசியா வாசுதேவன் + பி.சுசீலா – இசை: இளையராஜா
அழகான கரகரப்பிரியா ராக ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் பாடலில் மிருதங்கத் தாளமும் உற்சாகமூட்டி ஆனந்திக்க வைக்கும் பாடல். வயது முதிர்ந்த , ஆனாலும் காமஉணர்வு அதிகமிக்க
கதாநாயகனை கிண்டலும் கேலியும் பண்ணும் பாடல்.அவனின் நினைவும் நனவும் பாடலில் இசையில் வடிக்கப்பட்டு விடுகிற பாடல்.நினைவு மேலைத்தேய இசையிலும் , நிஜம் தமிழ் செவ்வியல் இசையிலும் ஒரு சில கணங்களில் ஒலிக்கும் இசையில் வந்து போகிற நுட்பமான பாடல்.
மலேசியா வாசுதேவன் பாடும் ராக ஆலாபனை [ 02:14] மிக அருமையாக இருப்பதுடன் அதனுடன் பின்னணியில் இசைந்து வரும் மேலைத்தேய தாளமும் , தொடர்ந்து வரும் ஜதியும் இசையமைப்பாளரின் சிந்தனை தரிசனத்தின் தரத்தைக் காட்டும். மலேசியா வாசுதேவன் + பி.சுசீலா இருவரும் அற்ப்புதமாக பாடிய பாடல்.
03 ஆனந்தம் பொங்கிட பொங்கிட – படம்: சிறைப்பறவை [ 1987 ] – பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ் + சுனந்தா – இசை: இளையராஜா
கரகரப்பிரியா ராகத்தின் செவ்வியல் இன்பத்தை நேரடியாக மெல்லிசை வடிவத்தில் எளிமையும் இனிமையும் மிக்க பாடலாக்கி மனதை நெகிழ வைத்திருக்கிறார் இளையராஜா.கே.ஜே.ஜேசுதாஸ் + சுனந்தா இணை இனிமைக்கு இனிமை சேர்க்கிறது.
என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே சுகமே இனி தினம் தினம்
என்று ஜேசுதாஸ் பாடும் போதும் ..
கண்கள் உன்னை தேடும்
கால்கள் துள்ளி ஓடும்
என்று சுனந்தா பாடும் வரிகளிலும் கரகரப்பிரியா கனிவு கொடுக்கிறது.கோரஸ் இசையும் ஒத்தூக்கிறது.செவ்வியல் இசைக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என்று அடித்து கூறதக்க வகையில் அமைந்த பாடல்.
04 யாரு யாரு இந்தக் கிழவன் யாரு – படம்: தர்மத்தின் தலைவன் [ 1988 ] – பாடியவர் : மலேசியா வாசுதேவன் + மனோ + குழுவினர் – இசை: இளையராஜா
அபாரமான ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் துள்ளிசைப் பாடலிலும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கரகரப்பிரியா ராகப் பாடல்.ஆற்றல் உள்ளவர்கள் எப்படியும் தங்களால் படைக்க முடியும் என்று நிரூபிக்கும் பாடல்.
05 தூளியிலே ஆட வந்த – படம்: சின்னத்தம்பி [ 1991 ] – பாடியவர் : மனோ + சித்ரா – இசை: இளையராஜா
கரகரப்பிரியா ராகத்தை அசாத்தியமான முறையில் ஒளித்து வைத்தஉணர்ச்சி செறிவான பாடல். அழாமல் அழவைப்பது இசைக்கலையின் மகத்துவம் என்பதை மரபு ராகங்களில் எடுத்துக்காட்டும் இசைஞானியின் ஆழ்ஞானம் வியக்கவைக்கிறது.
06 உன்னை வாழ்த்த வந்தேன் – படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன் – பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ் – – இசை: இளையராஜா
மிக இனிமையான கரகரப்ரியா ராகத்தை இந்த பாடலில் கேட்கலாம்.ஜேசுதாஸ் அனாயாசமாக பாடிய பாடல்.
07 தானா வந்த சந்தனமே – படம்: ஊரு விட்டு ஊரு வந்து [ 1990 ] – பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
செவ்வியல் இசையின் நீண்ட தூர சொந்தக்காரியான நாட்டுப்புற இசையில் தரப்பட்டுள்ள பாடல்.செவ்வியல் தன்மை குறைத்து நாட்டுற வீச்சை காட்டும் பாடல்.நீண்ட ஆராய்ச்சிகள் செய்து காட்ட வேண்டிய விசயங்களை எல்லாம் இசைஞானி இளையராஜா மிக எளிமையாக எல்லோரும் புரியும் படி செய்த மௌனப் புரட்சியின் அசைக்க முடியாத இசைக்கோலங்களில் இந்தப் பாடலும் ஒன்று. இது வெறும் புகழ்ச்சி அல்ல.
மலையாள மொழி பாடல்களில் நான் ரசித்த இரண்டு மிக இனிமையான பாடல்களைக் குறிப்பிடா விட்டால் கரகரப்ரியா ராக பாடல்கள் நிறைவு பெறாது.அந்த மூன்று பாடல்களையும் இசையமைத்தவர் இசைமேதை வீ.தட்சிணாமூர்த்தி. அவற்றை இனிமையாகப் பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ்.
01. உத்தரா சுயம் வரம் கதகளி காணுவான் – படம் :டேஞ்சர் பிஸ்கட் [ 1969 ] – பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ் – இசை : வீ.தட்சிணாமூர்த்தி
02. புலையனார் மணியம்மை பூ முல்லா – படம் :பிரசாதம் [ 1976 ] – பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ்.– இசை : வீ.தட்சிணாமூர்த்தி
03. அசோகா பூர்ணிமா – படம் :மறு நாட்டில் ஒரு மலயாளி [ 1971 ] – பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ்– இசை : வீ.தட்சிணாமூர்த்தி
[ தொடரும் ]