பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகங்களில் தமிழ் ராகங்களுடன் ஹிந்துஸ்தானிய இசையையும் அங்கொன்று , இங்கொன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியமை பார்சி நாடகத்தின் தாக்கமாகும்.இசைச்சுவைக்காக மட்டுமல்ல , ரசிகர்களைக் கவரும் ஒரு உத்தியாகவும் பயன்பட்டது.
அமீர்கல்யாணி, யமன்கல்யாண் , மாண்ட், தேஷ், ஜோன்புரி, பீம்ப்ளாஸ், போன்ற ராகங்கள் நாடக மேடைகளில் ஒலிக்கத்த் தொடங்கின.இந்த தொடர்ச்சி தமிழ் சினிமாவிலும் எதிரொலித்தது இயல்பானதாக இருந்தது.
மேலே சொல்லப்பட்ட ஹிந்துஸ்தானி ராகங்களுடன் பெரிதும் அறியப்படாத ராகம் ஒன்று , மேகத் திரைமறைவில் மறைந்து , மறைந்து ஜாலம் காட்டும் நிலவு போல், இன்பப் பொலிவை தந்து சென்று மௌனமாக இருந்திருக்கிறது.
ஏற்கனவே அறிமுகமான ராகங்களில் அல்லாமல் , புதிதான ராகங்களில் பாடல்களை தர முனைந்த இசையமைப்பாளர்கள் நிதானமாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட ராகங்களில் இதுவும் ஒன்று.
ஏகோபித்த அபிமானம் பெற்ற ராகங்களில் வெளிவந்த பாடல்களினால் ,இன்பத்தில் திக்கித் திணறிய மக்கள் , இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை முற்று முழுதாக ஒதுக்கி வைக்கவுமில்லை.இந்த ராகத்தில் விளைந்த இன்பங்களை தமது அரிய படைப்புத் திறத்தால் பாடல்களாக்கித் தந்த திரை இசைமேதைகளின் பாடல்களை கேட்டு இன்றும் நாம் வியப்புறுகின்றோம்.
இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் பலவும் நம்மை ‘ ஆஹா …ஆஹா ‘ சொல்ல வைத்துவிடுகின்றன.தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் தெரியாத ராகம் அல்லது புகழ் பெறாத ராகம் என்றும் கூறலாம். அந்தப்பாடல்களில் ஏதோ ஒரு வித ஈர்ப்பும் , இனிமையும் இருப்பதுடன் இன்ப ரகசியம் ஒளித்து வைத்தது போலவும் அமைப்பைக் கொண்ட ராகம்.
அபூர்வமான அந்த ராகத்தில் பாடல்கள் கொடுக்கப்பட்டதால் , அந்த பாடலின் இனிமையால் , அதன் தனித்துவத்தால் , நாம் பார்க்கும் அந்தப் பாடல் இடம்பெற்ற படத்துக்கும் ஒரு தனித்துவ ஆன்ம எழுச்சியைக் கொடுத்து விடுகிறது.
வற்றாத ஜீவநதிகள் ஊற்றெடுக்கும் மலைகள் நிறைந்த ஜம்மு , காஸ்மீர் பகுதியின் நாடுப்புற இசையில் பிறந்தது அந்த ராகம்.அந்த பகுதிகளில் வாழும் மக்கள் ‘பஹார்’ என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் ஜம்மு , காஸ்மீர் , நேபாளம் , இமய மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.
பஹார் மக்கள் தந்த இனிமைக்க அந்த ராகத்தின் பெயர் பஹாடி என்பதாகும் .
பஹாட் என்றால் ஹிந்தி மொழியில் மலை என்று அர்த்தப்படும்.பஹாடி என்ற பெயரில் சிறப்பான ஓவிய மரபு ஒன்றும் அங்கு காணப்படுகிறது.
மலை முகடுகளில் இருந்து பிறக்கும் குளிர்ந்த காற்றுப் போல இந்த ராகத்தில் பிறந்த பாடல்கள் குளுமையும் ,மென்அமைதியும் , இனிமையுமிக்க பாடல்களாய் திகழ்கின்றன.
வட இந்தியாவில் அதிக புழக்கத்திலிருக்கும் இந்த ராகத்தில், இசையின்பத்தைக் கொட்டிக் குவித்த ஹிந்தி சினிமா, வெற்றிக் கொடி நாட்டிய பல பாடல்களைத் தந்திருக்கின்றது.
ஆராதனா என்ற படத்தில் , இசைமேதை எஸ்.டி.பர்மன் இசையமைத்த ” கொரஹா கஸுதா யே மனு மேரா ” என்ற பாடல் , இந்த ராகத்தின் இனிமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வட இந்திய செவ்வியல் இசையில் அதிகம் பயன்பாட்டில் உள்ள ராகமாகவும் பஹாடி விளங்குகிறது.பிஸ்மில்லா கான் ,படே குலாம் அலி கான் , சிவகுமார் சர்மா , ஹரிபிரசாத் சௌராசையா போன்ற பிரபல இசைவாணர்கள் சரளமாக பயன்படுத்தும் ராகமாகவும் திகழ்கிறது.
ஹிந்துஸ்தானி இசையில் பஹாடி ராகம் ‘தாட் ‘ என்கிற மேளகர்த்தா முறையில் ‘ பிலவால் ‘ என்ற [ தமிழ் மேளகர்த்தா ராகமான தீரசங்கராபரணம் ] ராகத்தின் ஜன்ய ராகமாக உள்ளது.
ஆரோகணம் : ப த ச ரி க ப த ச
அவரோகணம் : ச நி த ப க ரி ச + நி த ப த ச
ஹிந்துஸ்தானி இசையின் ஹசல் , பஜன் , தும்ரி போன்ற இசை வடிவங்களில் அதிக பயன்பாட்டில் உள்ள ராகம் பஹாடி.இந்த ராகத்தில் அமைந்த பாடல்களில் மோகன ராகத்தின் சாயல் இருப்பதை எனது அவதானம் உணர்த்தியிருக்கிறது.
தமிழ் செவ்வியல் இசையில் பஹாடி ராத்தில் குறிப்பிடும் படியான பாடல் இல்லை. எனினும் அந்தக் குறையை லால்குடி ஜெயராமனின் தில்லானா நிவர்த்தி செய்திருக்கிறது.
தமிழ் சினிமா இசையில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவில் வெளிவந்தாலும் இசை ரசிகர்களின் மனங்களில் தங்கி நிற்கும் மதிப்பையும் , வலுவையும் பெற்றுள்ளது.ஆர்ப்பட்டமில்லாமல் , ராகத்தின் உள்ளசைவுகளில் உணர்வுகளின் நுண்மைகளை வெளிக்கொண்டு வந்த சினிமா இசையமைப்பாளர்களின் இசை வர்ணிப்புகள் , கண்வழியே புகுந்து கருத்தில் நிலைபெற முடியாத படங்களை எல்லாம், இசைப்படிமங்களாக செவி வழியே புகுத்தி நம் நெஞ்சங்களில் பதிய வைத்துவிட்டன.
பஹாடிராகத்தில் அமைந்த பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும் போது அதில் இனிமையும் , மென்மையும் மேலோங்கியிருப்பதை இருப்பதையும் மெல்லிசையில் அதற்கென ஓர் தனித்துவமான இடம் இருப்பதையும் நாம் உணரலாம்.
பஹாடி ராகத்தில் வெளிவந்த திரையிசைப்பாடல்கள்.
01 எனது உயிர் உருகும் நிலை – படம் : லைலா மஜ்னு [ 1949 ] – பாடியவர்கள் : கண்டசாலா + பி.பானுமதி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
அழகின் மென்மலர் தழுவும் சுகத்தைத் தருகின்ற பாடல்.மெல்லிசை யுகத்தை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்த சுப்பராமன் பாடல்.விரகதாபத்தில் மனம் தோய வைக்கும் இசையமைப்பு.பழமைப்பண்பு கிட்ட நெருங்காத பாடல்.இப்போது கேட்கும் போதே நம் மனதை என்ன மாதிரி ஆட்டி வைக்கின்ற இந்த பாடல், அந்தக் கால ரசிகர்களை எப்படி உலுக்கியிருக்கும் என்பதை உணர்த்தும் பாடல்.
பொதுவாக எனது குடும்பத்தவர்கள் சுப்பராமனின் பாடல்களை கிலாகித்து பேசுவதை நிறையக் கேட்டிருக்கின்றேன்.இரவு வேளைகளில் இந்த பாடல்கள் பற்றியே அதிகம் பிரஸ்தாபிக்கப்படும்.குறிப்பாக எனது அம்மா, சித்தி மலர் [ என் அம்மாவின் சகோதரி ] மிகப்பெரிய ரசிகைகள்.ஏ.எம்.ராஜா. கண்டசாலா , லீலா போன்ற அந்தக்காலப் பாடகர்களை வியந்து ரசிப்பார்கள்.குறிப்பாக தேவதாஸ், லைலா மஜ்னு , காதல், சண்டி ராணி போன்ற பல படப்பாடல்கள் பற்றி உரையாடல்கள் நடக்கும்.
எனது பதின்ம வயதில் ஒரு நாள் இரவு ,பாடல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது , எனது அம்மா கூறியது எனது மனதில் நன்றாகப் பதிந்து விட்டது.அவர் சொன்ன வாசகம் ‘ ஒ ..ஒ தேவதாஸ் என்ற பாட்டிற்கு முன்பாக வரும் ஓகோ ..கோ , ஓகோ ..கோ என்ற ஹம்மிங் என் உயிரைக் கொல்கிறது.’ என்பதாகும்.அதை என் சித்தியும் ஆமோதித்தாள்.அந்த அளவுக்கு சுப்பராமனின் பாடல்கள் பற்றிய விதந்துரைப்புக்கள் நடைபெற்றன.
அதே போலவே ” வான்மதி….ஒ.. வான்மதி ” என்று மனம் கசிய வைக்கும் விழிப்புடன் ஆரம்பமாகும் இந்தப் பாடல் பற்றிய பிரஸ்தாபிப்புக்களை எல்லாம் நானும் அள்ளிப் பருக நேர்ந்தது.
” எனது உயிர் உருகும் நிலை ” என்ற இந்த பாடல் எனது மனதில் நன்கு பதிந்த பாடல். காரணம் என்னுடைய மாமா ஒருவர் [ நெவில் துரை ] அடிக்கடி பாடும் பாடல்களில் ஒன்று இது.இந்தப்பாடலில் வரும்
சாகாது என் காதல் போகாது ஜீவன்
ஆசை தீராது மானே ……
சாகாது என் காதல் போகாது ஜீவன்
ஆசை தீராது மானே
அகிலமெல்லாம் லைலா உன்
அன்பு சேரும் கதை வாழும்
இன்ப காவியம் எந்நாளும்
என்ற வரிகளை பாடும் போது , அவர் தானே சலீம் என்ற எண்ணத்தில் பாடுவது போலிருக்கும்.இந்தப் பாடல் மட்டுமல்ல அதே படத்தில் [ லைலா மஜ்னு ] இடம் பெற்ற ” உன்னை பார்க்கப் போகிறேனோ ” என்ற பாடலில் வரும்
“எனை ஆளும் ஏழை லைலா
இனி வாழ்வில் ஏது பயனே ….”
என்று உச்சஸ்தாயியில் அவர் பாடுவது என்னை உருக்கியிருக்கிறது.சிந்துபைரவி ராகத்தின் உயிர் அந்தப் பாடலில் மின்னும்.அவர் பாடி , பாடி இந்தப் பாடல்களை எல்லாம் எனது மனதில் பதிய வைத்தார்.
அதே போல மெல்லிசைமன்னரின் ” இயற்க்கை என்னும் இளைய கன்னி ” என்ற பாடலையும் ,
பிற்காலத்தில் அவர் இசைஞானி இசையமைத்த ” ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே ” என்ற பாடலை ஓயாமல் பாடிக் கொண்டிருப்பார்.
இப்போது எண்ணிப்பார்க்கும் போது அவர்கள் இந்தப் பாடல்களில் எவ்வளவு தோய்ந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி ஆச்சர்யம் மேலிடுகிறது. நானாகத் தேடிக் கிடைக்காத பாடல்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் அவர்கள் மூலம் எனக்கு மிக சாதாரணமாக கிடைத்தது.
02 உறவுமில்லை பகையுமில்லை – படம் : தேவதாஸ் [ 1952 ] – பாடியவர்கள் : கண்டசாலா + ராணி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
இதுவும் சுப்பராமனின் கைவண்ணம் தான்.காதலின் மாண்பையும் , துயரத்தையும் அருமையாக வெளியிடும் பாடல்.இசை நெஞ்சை அள்ளிச் செல்லும்.தேவதாஸ் படத்தின் இசை, கதையை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல.சரத் சந்திரரின் கதையும் , இயல்பான நடிப்பும் , பாடல்களின் வசீகரமும் பின் வந்த எத்தனையோ தமிழ் படங்களுக்கு முன் மாதிரியாகவும் அமைந்தது.
இந்த படத்தின் பாடல்களும் பின் வந்த எத்தனையோ இசையமைப்பாளர்களிடம் பாதிப்பையும் உண்டாக்கியது.
03 வான் மீதிலே இன்பத் தேன் மாறி பெய்யுதே – படம் : சண்டிராணி [ 1952 ] – பாடியவர்கள் : கண்டசாலா + பி.பானுமதி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
வசீகரமிக்க பாடலை சுப்பராமனின் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.ஆயினும் சுப்பராமனின் பாடல் என்றே பரவலாக அறியப்பட்ட அற்ப்புதமான பாடல்.தனி எழிலும் , வசீகரமுமிக்க பஹாடியின் மென்மை நம்மை ஆரத் தழுவி செல்லும் பாடல்.
எனது குடும்பத்தவர்களின் இசை பற்றிய உரையாடல்களில் விதந்து பேசப்பட்ட பாடல்களில் இந்தப் பாடலுக்கு முதலிடம் உண்டு .நெஞ்சில் நிறைந்தவை என்ற இலங்கை வானொலி நிகழ்ச்சியை நினைக்கும் போதெல்லாம் இந்தப் பாடல்க என் நினைவில் முன் நிற்கும்.
இசைஞானி இளையராஜாவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பாடலை விதந்து , பேசும் போது நாம் ஒரே ரசனையில் பயணித்திருக்கிறோம் என்ற பெருமை என்னுள் எழும்.இளையராஜா , மெல்லிசை மன்னருடன் இணைந்து இசையமைத்த போது இந்தப் பாடலை குறிப்பிட்டு சொல்லி தனக்காக இதே போல ஒரு மெட்டு போடும்படி வேண்டி பெற்ற பாடல் ” வா வெண்ணிலா ” என்ற பாடல்.
04 காதல் வாழ்வில் நானே – படம் : எதிர் பாராதது [ 1954 ] – பாடியவர்கள் : ஜிக்கி – இசை : சி.என்.பாண்டுரங்கன்
அமரத்துவமிக்க பாடல்களைக் கொண்ட திரைப்படம் எதிர்பாராதது.கவிநயமிக்க பாடல்களை எழுதியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கவிஞாரக தனது வாழ்வை ஆரம்பித்த அவர் பின்னாளில் சிறந்த இயக்குனராக திகழ்ந்தவர்.இந்த பாடலை ஜிக்கி சிறப்பாகப்பாடி புகழ் பெற்றார்.மனதை நோக வைக்கும் மென்மையான இசையை தந்து அழியாத இடம் பிடித்த இசையமைப்பாளர் பாண்டுரங்கன் வேறு பல அற்புதமான பாடல்களையும் தந்த மேதையாவார்.
05 காற்றில் ஆடும் முல்லை கொடியே – படம் : ரங்கோன் ராதா [ 1954 ] – பாடியவர்கள் : பி.பானுமதி – இசை : டி.ஆர்.பாப்பா
ரங்கோன் ராதா படத்தில் நினைவில் தங்கி நிற்கும் பாடல்களில் முக்கியமான பாடல் இது.
06 கண்கள் இரண்டில் ஒன்று போனால் – படம் : இல்லறஜோதி [ 1954 ] – பாடியவர்கள் :காந்தா – இசை : ஜி.ராமநாதன்
சோகம் இழையோடும் மென்மையான பாடல்.இந்தப்பாடலின் மூல வடிவம் ஒரு ஹிந்தி பாடலாகும்.ராமநாதனின் இசைப்பாங்கும் சேர்ந்து ஒலிக்கும் பாடல்.
07 சகாயம் யாருமில்லடா நீ தானே என் பிரதானம் – படம்:ஜீவித நௌகா [1950 ]- பாடியவர்: திருச்சி லோகநாதன் – இசை : வீ.தட்சிணாமூர்த்தி
குரலை நசுக்காமல் ,வெளிப்படையாக பாவங்கள் காட்டி , திருச்சி லோகநாதன் பாடிய இனிய பாடல்.பாடலின் ஜீவனை உணர்வு பொங்க வெளிப்படுத்தியுள்ளார்.முகமது ரபி பாடிய ஹிந்தி பாடலின் தழுவல்.ஆயினும் வெவ்வேறு பாவங்ககளை வெளிப்படுத்துகிறது இந்தப் பாடல்.
08 ஏன் சிரித்தாய் என்னைப்பார்த்து – படம் : பொன்னித் திருநாள் [ 1960 ] – பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை : கே.வீ. மகாதேவன்
பஹாடி ராகம் என்பதை மிக எளிமையாக அடையாளம் காட்டி விடுகின்ற மெட்டமைப்பைக் கொண்ட இனிமையான பாடல்.பஹாடி ராகம் என்ன என்பதைத் தெரியாதவர்களுக்கு இலகுவாக புரிய வைக்க இந்தப் பாடலை பாடிக் காட்டினாலே போதும் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்த பாடல்.இசைமேதை கே.வீ.மகாதேவனின் அருமயான மெட்டை அழகப் பாடியிருப்பார் பி.பி.ஸ்ரீநிவாஸ்.மெல்லிசைப்பாடல்களில் தனக்கென தந்த்துவம் மிக்க ஆளுமை கொண்டவர் கே.வீ.மகாதேவன்.
09 ஒரு நாள் இது ஒரு நாள் – படம் : அன்புக்கோர் அண்ணி [ 1961 ] – பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை : ஏ.எம்.ராஜா
வசீகரமும் , குதூகலமும் பொங்கும் பாடலை இசையமைத்து ஜிக்கியுடன் பாடிய ஏ.எம் ராஜாவின் ஆற்றல் நம்மை வியக்க வைக்கும்.பஹாடியில் அமைக்கப்பட்ட தனித்துவமான பாடல்.
10 கண்ணுக்கு குலம் ஏது – படம் : கர்ணன் [ 1964 ] – பாடியவர்கள் : பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பஹாடி ராகத்திற்கு எடுத்துக்காட்டான இன்னுமொரு சிறந்த பாடல் இது.பலர் கூடியிருந்த சபையில் குறைந்தவன் என்று அவமானப்படுத்தப்பட்ட கர்ணனை அவனது மனைவி ஆறுதல் கூறித் தேற்றும் பாடல்.அன்பும் , அரவணைப்பும் கொண்ட பாடலை பஹாடியில் அமைத்து அந்த ராகத்தின் பெருமையை உணர்த்தியிருக்கின்றார்கள் மெல்லிசைமன்னர்கள்.பஹாடி ராகத்திற்கு சிறந்த உதாரணம் என காட்டத் தக்க பாடல்.
11 அத்தை மகனே போய் வரவா – படம் : பாத காணிக்கை [ 1962 ] – பாடியவர்கள் : பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
தவழ்ந்து வரும் இளம் தென்றலுக்கு ஒப்பான பாடல்.கேட்கும் போதெல்லாம் எங்கும் பொங்கிப் புரளும் இன்பமும் மென்மையும் தந்து , இந்த பாலுடன் சம்பந்தப்பட்ட மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , கவிஞர் கண்ணதாசன் , பாடிய பி.சுசீலா அவர்களையும் எண்ணி எண்ணி வியக்க வைக்கும் பாடல்.
12 யார் யார் யார் அவள் யாரோ – படம் : பாசமலர் [ 1961 ] – பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
“லதா மங்கேஷ்கர் . என்னைக் காணும் போதெல்லாம் இந்தப் பாடலைப் பாடி தான் என்னை வரவேற்பார் ..அவர் மட்டுமல்ல அவரது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான பாடல இது ” என்று பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
பஹாடி ராகத்தின் உயிரோட்டமே இந்தப்பாடலின் இனிமையின் அடிப்படை ஆகும்.அவ்வின்பத்தை நுகர நம்மைத் தூண்டிய மெல்லிசைமன்னர்களின் பொற்காலத்திய பாடல் இது.
13 கண் படுமே பிறர் கண் படுமே – படம் : காத்திருந்த கண்கள் [ 1967 ] – பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
படைப்பில் புது இலக்கணம் வகுத்த மெல்லிசைமன்னர்களின் மெல்லிசையுகத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய இனிமையான பாடல்.இசை ஓட்டத்தில் எங்கும் இடர் விழாத அலங்காரமற்ற ,இயல்பான மெல்லிசை பாடல்.
12 பொன் மேனி தழுவாமலே – படம் : யார் நீ [ 1967 ] – பாடியவர்கள் : பி.சுசீலா – இசை : வேதா
வேதாவின் நேர்த்தியான வாத்திய சிங்காரிப்பைக் காட்டும் பாடல்.ஹிந்திப் பாடலின் தழுவல் என்றாலும் நெருடலான வார்த்தைகளைப் போட்டு குழப்பாமல் அசல் தமிழ் பாடலாக்கி நமக்குத் தந்திருப்பது அசாத்தியமானது. குறிப்பாக இவரது பின்னணி இசையின் கலவை அவ்வளவு நேர்த்தியாக பல சமயங்களில் மூல வடிவத்தை விட சிறப்பானதாக இருக்கும்.மிக இனிமையான ஒரு பாடலை தமிழில் தந்த இசையமைப்பாளரை நாம் வாழ்த்தலாம்.
14 பூப் போல பூப் போல பிறக்கும் – படம் : யார் நீ [ 1967 ] – பாடியவர்கள் : T . M .சௌந்தரராஜன் பி.சுசீலா – இசை :ஆர்.சுதர்சனம்
அந்தக் காலத்து இசையமைப்பாளர்கள் யாருக்கு யார் சளைத்தவர்கள் ? என்று போட்டி போட்டுக் கொண்டு , எந்தப்பக்கம் திரும்பினாலும் இனிய பாடல்களைத் தந்து நம்மைத் திக்குமுக்காடச் செய்கையில் நம்மால் என்ன செய்யமுடியும்.இன்பத்தில் திக்கித் திணறுவதை தவிர..!!
இசைமேத ஆர்.சுதர்சனம் தந்த மனதை வருடும் இனிய பாடல் அது.
15 நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன – படம் : வல்லவனுக்கு வல்லவன் [ 1967 ] – பாடியவர்கள்: T . M .சௌந்தரராஜன் பி.சுசீலா – இசை : வேதா
T . M .சௌந்தரராஜனின் குரலில் இந்த பாடல்களைத் தந்து அவரது பாடல்களுக்குப் புது பரிமாணம் தந்தவர் வேதா.இயற்கையான , தனித்துவமிக்க படைப்புக்களைத்தர வல்லவர் வேதா என்பதை பல பாடல்களில் கண்டோம்.இந்தப்பாடலும் ஒரு ஹிந்தி பாடலின் தழுவல் என்ற போதிலும் இசையின் நேர்த்தியை வாத்திய அமைப்பில் ,இசை விருந்தில் இனிமை வீச்சை தந்து சென்றவர் வேதா.எப்படிப்பட்ட இனிமை என்று கேட்கும் தோறும் வியப்பில் ஆழ்த்தும் பாடல்.இந்த ராகத்தின் தனித்துவ சிறப்பில் பிறந்து இனிமை தளைத்து மலர்ந்திருக்கும் பாடல்.
16 கண்டாலும் கண்டேனே உன் போலே – படம் : வல்லவனுக்கு வல்லவன் [ 1967 ] – பாடியவர்கள் :சீர்காழி + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை : வேதா
சீர்காழியையும் ஆங்காங்கே வைத்து , அவருக்கேயுரிய வகையில் பாடலையும் தந்தவர் வேதா.ஒரு நகைச்சுவை பாடலை பஹாடி ராகத்தில் நிலைநிருத்தியிருக்கின்றார் வேதா.பாடல்களில் மட்டுமல்ல தான் இசையமைக்கும் படங்களில் பின்னணி இசையை சிறப்பாக தந்தவர்களில் வேதாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது.
16 தொட்டு தொட்டு பாட வா – படம் : வல்லவன் ஒருவன் [ 1967 ] – பாடியவர்கள் : T . M .சௌந்தரராஜன் பி.சுசீலா – இசை : வேதா
மீண்டும் வேதாவின் நேர்த்தியான இசையில் அருமையான பாடல். T . M .சௌந்தரராஜன் குரலுக்கு புதிய ஆற்றலை வழங்கிய இசையமைப்பைச் சேர்ந்த பாடல்.வேதாவின் இசையில் வாத்தியங்களின் இசைப்பில் அசாத்தியமான நளினமும் , கவர்ச்சியும் , நேர்த்தியும் இருக்கும்.
17 உலகின் முதலிசை தமிழிசையே – படம் : தவப்புதல்வன் [ 1973 ] – பாடியவர்கள் : T . M .சௌந்தரராஜன் + பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை :எம்.எஸ். விஸ்வநாதன்
வடக்கா , தெற்கா இசையில் சிறந்து என்பதற்கமைய இசையமைக்கப்பட்ட பாடல்.”இசைக்கலை தான் எங்களின் முதல் பாடம் ..” என்று தமிழ் மக்கள் இசைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கண்ணதாசன் அழகாக உணர்த்துகிறார்.இரண்டு இனிமைமிக்க ராகங்களில் மெல்லிசை மன்னர் ஜீவன் ததும்ப இசையமைத்த பாடல்.மத்யமாவதி ராகத்தில் தமிழிலும் ,பஹாடி ராகத்தில் ஹிந்தியிலும் தந்து தனது மேதாவிலாசத்தை காட்டுகிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இந்தப் பாடலில் வரும் ஹிந்தி வரிகளை எழுதியவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் என்பது முக்கியாமான செய்தியாகும்.பஹாடி பாடும் போதும் அதனைத் தொடர்ந்து சிந்துபைரவி ராகம் பாடும் போதும் ஸ்ரீநிவாசின் இசைஞானம் நம்மை சிலிர்க்க வைக்கிறது.பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் பகுதி மிக , மிக இனிமையாக இருக்கும்.T . M .சௌந்தரராஜன் பாடும் பகுதி கம்பீரமாக ஒலிக்கும்.
18 கலீர் கலீர் என்றே காலம் தன்னால் – படம் : தேவதை [ 1979 ] – பாடியவர்கள்: எஸ்.ஜானகி – இசை : ஷியாம்
தமிழ் கிறிஸ்தவரான ஷியாம் இசையமைத்த இனிமையான பாடல்.மலையாளப்படங்கள் பலவற்றிக்கு இசையமைத்ததால் மலையாளி என்று பொதுவாக அறியப்படுபவர்.பல இசையமைப்பாளர்களுக்கும் பின் மெல்லிசைமன்னரின் உதவியாளராகவும் இருந்தவர்.சாமுவேல் ஜோசெப் என்ற இவரது இயற்பெயர் தன வாயில் நுழையாததால் மெல்லிசை மன்னர் இவர் ஷியாம்என்று அழைத்ததால் அந்த பெயரே சினிமாவில் நிலைத்து விட்டது.இது போன்ற தென்றல் சுகம் தரும் பல பாடல்களுக்குச் சொந்தக்காரர் ஷியாம்.
19 பொன்னே பூமியடி அது சரி அது சரி – படம் : மனிதரில் இத்தனை நிறங்களா [ 1979 ] – பாடியவர்கள்: எஸ்.ஜானகி + வாணி ஜெயராம் – இசை : ஷியாம்
எஸ்.ஜானகி + வாணி ஜெயராம் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்களில் இதுவும் ஒன்று.இளையராஜாவின் இசை அலையில் அடித்துச் செல்லப்பட்ட அருமயான இசையமைப்பாளர் ஷியாம்.தான் இசையமைத்த படங்களில் அருமையான் மெல்லிசைகளையும் , வாத்திய இசையின் லாவண்யங்களையும் காட்டும் அற்புதத் திறமையாளர் கவனிக்கப்படாமல் போனது இசை ரசிகர்களுக்கு பெரும் இழப்பு.ஆனாலும் மலையாளத் திரை இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டது.
புகழ் பெற்ற கர்நாடக் இசைக்கலைஞர் லால்குடி ஜெயராமன் இசையமைத்த ‘தில்லானா’ என்கிற Fusion இசைத்தட்டிற்கு இனிய பின்னணி இசையை வழங்கி புகழ் பெற்றவர் ஷியாம்.
20 பொங்குதே புன்னகை – படம் : இது ஒரு தொடர் கதை [ 1975 ] – பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + பி.வசந்தா – இசை : பி.பானுமதி
இந்த பாடலும் ஆராதனா பாடலான ” kora kagaz tha yeh man mera ” பாடலின் மென்மையான தழுவல் கொண்ட பாடல்.பல்கலை வித்தகி பி.பானுமதி இசையமைத்த பாடல்.
21 ஏய் வெண்ணிலா என் நெஞ்சமே – படம் : இப்படியும் ஒரு பெண் [ 1986 ] – பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை : கங்கை அமரன்
இந்த பாடல் ” வா வெண்ணிலா , உன்னைத்தானே வானம் தேடுதே ” என்ற பாடலின் பாதிப்பிலிருந்து பிறந்தது என்று அதன் இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியது கவனத்திற்குரியது.
உணர்வுகளின் மொழியான சங்கீத அலைகளிலிருந்து எழுந்து மனதிற்கு அமைதியும், ஆனந்தமும் தரும் பஹாடி ராகத்தில் மேன்மைமிக்க பாடல்களைத் தந்த இசைமேதைகள் வரிசையில் , அந்த மேதைகள் வழங்கிய இனிமையான பாடல்களுக்கு நிகராக , காலத்திற்கு ஏற்ப புதுமையாக , கேட்கக் கேட்க புதுமைகள் விளையும் பாடல்களாக்கி ராகங்களின் மேன்மையை தனது ஒவ்வொரு பாடலிலும் தந்து தனது படைப்பாற்றலின் மேதமையை காட்டி வருபவர் இசைஞானி இளையராஜா.
ஒவ்வொரு ராகங்களிலும் அவர் தந்த பாடல்களின் எண்ணிக்கை மட்டுமல்ல , அதன் தரமும் , அவற்றில் இழைக்கப்பட்டிருக்கும் நாத கலவைகளும் புதுமைக்கும் புதுமையாய் விளங்குபவை.அவை கற்பனையிலும் பெரும் வீச்சுக்கள் கொண்ட படைப்புகளாகவும் விளங்குகின்றன.அந்த வகையில் அவர் இசையின் சிகரம் என்பேன்.
இளையராஜா தந்த பஹாடி ராகப்பாடல்கள் சில:
01 ஒரே நாள் உன்னை நான் – படம் : இளமை ஊஞ்சலாடுகிறது [ 1978 ] – பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + வாணி ஜெயராம் – இசை : இளையராஜா
1970 களின் இறுதியில் வெளிவந்த காதல் பாடல்களில் குறிப்பிடத்தகுந்த பாடல்.சில கணங்களில் ஒலிக்கும் இனிய வாத்திய இசையின் கலப்பில் நம்மை மிதக்க வைத்த பாடல்.கிட்டார், வயலின் வாத்தியங்களின் மென்னிசையும் அதைதொடர்ந்து வரும் புல்லாங்குழலிசையும் பாடலின் சுவையைக் கட்டியம் கூறிவிடுகின்றன.அந்த இசை அற்புதம் 19 வினாடிக்குள் அரங்கேறிவிடுகிறது.
அன்று கேட்ட அதே இனிமையை இன்று அசைபோடும் போதும் அனுபவிப்பதும் ராஜாவின் கை வண்ணத்திற்க்கே உரியது.இளையராஜா , பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம் இணையில் வெளிவந்த நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.
பல்லவியைத் தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலும் , வயலினும் உரையாடாடிக் கொள்ளும்.அதே போல் அடுத்துவரும் இடையிசையில் கிட்டாரும் ,புல்லாங்குழலும் இழைந்து போகும்.
02 நானே நானா யாரோ தானா – படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன் [ 1978 ] – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை : இளையராஜா
வெளிவந்த நேரத்தில் இது போல் வேறு ஒரு பாடலைக் கேட்டதில்லை என்று சொல்லுமவளவுக்கு தனித்துவமிக்க பாடலாக அமைந்த இந்தப்பாடல்.மெட்டமைப்பும் ,சேர்ந்திழைந்த தாளமும் புதுமை தந்தது.மதுவின் மயக்கத்தில் பாடும் இந்த பாடலின் மெட்டு நம்மையும் மயக்கும் வண்ணம் பஹாடி ராகத்தில் அருமையாக தந்திருப்பார் இளையராஜா.வாணி ஜெயராம் இந்த பாடலின் மூலம் பெரும் புகழ் பெற்றார்.
03 மேகமே தூதாக வா – படம் : கண்ணன் ஒரு கைக் குழந்தை [ 1977 ] – பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் + பி.சுசீலா – இசை : இளையராஜா
மலையின் ஈரக்காற்று போல சுகமாக நம்மை தழுவும் பாடல்.எடுத்த எடுப்பிலேயே இனிமை தரும் பல்லவியை கொண்டு எங்கும் தொய்யாத இசை ஓட்டத்தை பாடல் முழுவதும் அமைப்பது இசைஞானி போன்ற மேதைகளுக்கு கைவந்த கலை.அவரது ஆரம்பகாலப் பாடலான இந்தப் பாடலில் இதனை அவதானிக்கலாம்.
04 தேவதை ஒரு தேவதை – படம் : பட்டாகத்தி பைரவன் [ 1978 ] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
ஆராதனா படத்தின் புகழ் பெற்ற “kora kagaz tha yeh man mera ” என்ற பாடலின் மிகுந்த தாக்கம் உள்ள பாடல்.ஆனாலும் அதிலும் தனித்துவத்தை, புதுமையை காண்பித்து இன்ப அலைகளில் நம்மை மிதக்க வைத்திருப்பார் இசைஞானியார்.
05 ஒ.. நெஞ்சமே இது உன் ராகமே – படம் : எனக்காகக் காத்திரு [ 1981 ] – பாடியவர்கள் :தீபன் சக்கரவர்த்தி + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
வானமீதிலே இன்ப தேன் மாறி பெய்யுதே பாடலின் பாதிப்பில் இசைஞானி உருவாக்கிய பாடல்.யாதை அவர் சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.வெளிவந்த காலத்தில் என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று.
06 இந்த மான் எந்தன் சொந்த மான் – படம் : கரகாட்டக்காரன் [ 1989 ] – பாடியவர்கள் :இளையராஜா + சித்ரா – இசை : இளையராஜா
எப்போது கேட்டாலும் அலுப்பையோ, சலிப்பையோ தராத பாடல். ஒவ்வொரு பாடல்களிலும் வரும் வாத்திய இசையை அவர் தந்த விதம் நெஞ்சை அள்ளும வண்ணம் இருக்கும்.புல்லாங்குழலின் ராஜாங்கத்தில் இன்ப அதிர்வுகளை தந்து வியக்க வைக்கும் பாடல்.
07 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் – படம் : புன்னகை மன்னன் [ 1986 ] – பாடியவர்கள் :சித்ரா – இசை : இளையராஜா
இந்த ராகத்திற்க்கேயுரிய சிறப்பும் பண்பும் கொண்ட தனித்துவமான பாடல்.ராகங்களில் பதுங்கியிருக்கும் இன்பங்களை எல்லாம் துருவித்தேடி அதை புது ஆற்றலாகத் தரும் மேதமைத்தனத்தை ஒவ்வொரு பாடலிலும் காட்டி, பாடலின் முருகியலை அள்ளி அள்ளி தரும் முனைப்பு விதந்து போற்றத்தக்கது.பாடலின் ஆரம்ப இசையே எவ்வளவு எளிமையும் வசீகரமும் மிக்க வாத்தியங்களின் நுண் கூறுகளில் அனாசாயமாக்கி தந்திருப்பார்.
09 நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் – படம் : கைராசிக்காரன் [ 1985 ] – பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
மெல்லிசையின் இதமான அரும்பவிழ்ப்புகளை வினோதமான இசை பரிவாரங்களுடன் தருவதில் இசைஞானி தெளிவு மிக்கவர்.இந்தப்பாடலின் பின்னணி இசையைக் கவனிப்பவர்கள் , நிலவு தண்ணீரில் ஊறித் ததும்பும் அற்புதக் காட்சியை மனக் கண்ணில் காணலாம்.பாரதி சொன்ன ” நிலவூறித் ததும்பும் ” காட்சி என் மனத் திரையில் இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒளி வீசிச் செல்லும்.
10 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் – படம் : மெல்லத் திறந்தது கதவு [ 1986 ] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : விஸ்வநாதன் + இளையராஜா
இரண்டு மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்த வரலாறு இந்த படத்திற்கு முன்பு நிகழ்ந்ததில்லை.ஆர்மோனியத்தில் கை பட்டாலே இனிய மெட்டுக்களை அள்ளிக் கொட்டும் இசை மேதை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் ஆற்றொழுக்கான மெட்டுக்களுக்கு இனிய வாத்திய இசையை வழங்கியவர் இசைஞானி.
இசைஞானியின் வாத்திய இசையின் தனித்துவத்தால் பலரும் இந்தப் பாடல்கள் எல்லாம் இளையராஜா இசையமைத்தவை என்று நம்பிக்கொண்டிருக்கின்ற நிலை இருந்து வருகின்றது.
11 மௌனமான நேரம் – படம் : சலங்கை ஒலி [ 1983] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
விரகதாபத்தை வெளியிடும் மென்மையான மெட்டுக்கு , மனதை வசியம் செய்யும் வாத்திய இசையும் பாடல் வரிகளும் பொருந்தி இனிமைக்கு இனிமை சேர்த்து விடுகிறது.பாடலின் பெரும்பகுதியை புல்லாங்குழல் இனிமையில் அமைத்து நம்மைப் பரவசத்துக்குள்ளாக்கியிருக்கின்றார் இசைஞானி.
12 சீர் கொண்டு வா வெண் மேகமே – படம் : நான் பாடும் பாடல் [ 1985] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
பாடல் அமைந்த மெட்டு மட்டுமல்ல ,அதனூடே இயைந்த இசைச் சேர்க்கைகளையும் குழைத்து தரும் இசைச் சித்தனின் புத்துணர்ச்சி மிக்க பாடல்.மனதில் முழு நிறை இன்பம் தரும் பாடல்.
13 பாடு நிலாவே தேன் கவிதை – படம் : உதயகீதம் [ 1985] – பாடியவர் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை : இளையராஜா
ஏக்கத்தின் தாகம் வளர்ந்து உயிரை வதைக்கும் உணர்வை கிளறி விடும் பாடல்.பலவிதமான அறியப்பட்ட வாத்தியங்களுடன் கீபோர்ட் என்கிற நவீன வாத்தியத்தின் இனிய ஒலிகளில் புதிய நாத அலைகளை பொங்கி எழ வைத்து , பழமைமிக்க ராகங்களில் புத்துணர்வூட்டும் இசையை பொலிவுறத் தந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
வாத்திய அமைப்பிலும் சிறப்புற்று திகழும் பாடல்.மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒன்று கலந்து இசையை வடிக்கும் திறன்மிக்க இசைச் சூத்திரதாரி என்பதை இளையராஜா நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று.கேட்கும் போது இது போன்ற ஒரு அற்ப்புதமான பாடல் இந்திய சினிமாவில் வந்துள்ளதா ? என்று நம்மை நாமே கேட்க வைத்து விடுகின்ற பாடல்.
14 நினைத்தது யாரோ நீ தானே – படம் : பாட்டுக்கொரு தலைவன் [ 1988] – பாடியவர்கள் :மனோ + ஜிக்கி – இசை : இளையராஜா
ராகங்களைக் கண்டெடுத்து அதில் பொலிவுறும் பாடல்களைத் தருவது போல , நம் நினைவலைகளில் தங்கி நிற்கும் காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடிய பழம்பெரும் பாடகி ஜிக்கி அவர்களுக்கு மீண்டும் கண்டெடுத்து ஒரு வரவேற்பை கொடுத்த வெற்றிப் பாடல்.
15 எங்கே என் ஜீவனே – படம் : உயர்ந்த உள்ளம் [ 1978 ] – பாடியவர்கள் :கே.ஜே ஜேசுதாஸ் + எஸ்..ஜானகி – இசை : இளையராஜா
இசையாக்க வன்மையில் புதிய , புதிய வண்ணங்களில் , புதுமை மெருகேறும் பாடல்களை தந்து நம்மை , நமது இசை வாழ்வை மேன்மையாக்கிய இசைஞானியின் படைப்பூக்கத்தில் விளைந்த இனிய பாடல்.இடையிடையே வந்து போகும் இனிய பின்னணி இசை தாவல்களால் அலங்கரிக்கப்பட்ட பாடலை சுகந்தமாகப் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
16 முத்து தேரே தேரே பக்க யாரே யாரே – படம் : [ 1992 ] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா – இசை : இளையராஜா
பகாடி ராகத்தின் இனிமைக்கும் ,மென்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இன்னொரு அழகான பாடல்.எத்தனை எத்தனை வகை , வகையான இசையை ஒரு மனிதனால் கொடுக்க முடியும்? என்று எண்ணி வியக்க வைக்கும் பாடல்.
17 சின்ன சின்ன சொல்லெடுத்து – படம் : ராஜகுமாரன் [ 1994 ] – பாடியவர்கள் :கே.ஜே ஜேசுதாஸ் + எஸ்..ஜானகி – இசை : இளையராஜா
சோக உணர்வின் மென்மை வழியே குறுக்கே ஏதும் இடற விடாமல் அதன் போக்கிலேயே இன்ப உணர்வும் தந்து இசைரசவாதம் நிகழ்த்தும் பாடல்.தன் வழியே தனி வழி என்று பாடிச் செல்லும் ஜேசுதாஸ் சில இடங்களில் பொடி சங்கதிகளை அனாயாசமாகப் பாடி செல்லும் பாடல்.அதில் விளைவது சுகம் சுகம் சுகம்.சின்னச் சின்ன இழைகளைப் பின்னி அற்புத இசையோவிங்களைப் படைக்கும் இசை ஓவியன் இசைஞானி.
18 நாடு சாமத்திலே சாமந்திப் பூ – படம் : திருமதி பழனிசாமி [ 1978 ] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
இந்தப்பாடலிலும் புல்லாங்குழலின் இசைக்கும் பஹாடி ராகத்திற்கும் நல்ல இசைவு உண்டென்பதை இழை பிரியாத இன்ப பாடலாக்கியிருப்பது ரசனைக்குரியதாகும்.
19 போகுதே போகுதே என் பைங்கிளி – படம் : கடலோரக்கவிதைகள் [ 1986 ] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை : இளையராஜா
இந்த ‘ போகுதே ‘ என்ற சொல் எனக்கு லைலாமஜ்னு படத்தில் கண்டசாலா பாடிய ‘ பறந்து செல்லும் பைகிளியே மறதியாகுமா ‘ என்ற பாடலை ஞாபகப்படுத்தும் அந்தப் பாடலின் ஆரம்பமும் ‘ போகுதே ‘ என்று தான் ஆரம்பிக்கும்.
20 குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் – படம் : மெல்ல திறந்தது கதவு [ 1986 ] – பாடியவர்கள் :சித்ரா – இசை : இளையராஜா
குழலுக்கேற்ற ராகம் பஹாடி என்பதற்கிணங்க குழலிசை அருமையாகப் பயன்பட்டுள்ள பாடல்.மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு அருமையான பின்னணி இசை வழங்கியவர் இசைஞானி.
21 அந்தியிலே வானம் – படம் : சின்னவர் [ 1992 ] – பாடியவர்கள் :மனோ + அவர்ணளதா – இசை : இளையராஜா
இந்தப் பாடலிலும் குழலிசையின் ஜால வித்தைகளை அனுபவிக்கலாம்.
22 வைகை நதியோரம் – படம் : ரிக்சா மாமா [ 1978 ] – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை : இளையராஜா
இசையில் நுட்பங்கள் பலவற்றை இடம் மாற்றி , மாற்றி அதனூடே ராகங்களின் தலை எழுத்தை மாற்றுவது போல ,அதில் பொதிந்திருக்கும் இனிய ரசத்தை வெளிப்படுத்தி அந்த ராகங்களைக் கௌரவிக்கும் விதமாய் பாடல்களைத் தருவதில் விற்பனர் என்பதற்கு இந்த பாடலும் சிறந்த உதாரணமாகும்.பகாடி ராகத்தில் இப்படி ஒரு கற்பனை என காட்டும் பின்னல்கள் இசையாய் பொலிந்துள்ள பாடல்.
குறிப்பாக எஸ்.ஜானகி தனித்துப் பாடும் பாடலில் பின்னணி இசையை ஆற அமர இருந்து கேட்டால் அந்த இனிமையின் நுட்பம் நம் காதுகளை குளிரவைக்கும்.
23 அம்மா சொன்ன ஆரிரரா – படம் : சொல்ல மறந்த கதை [ 2002 ] – பாடியவர்கள் :இளையராஜா – இசை : இளையராஜா
24 உன்னை தேடி தேடி – படம் : கொஞ்சிப் பேசலாம் [ 2002 ] – பாடியவர் :சாதனா சர்க்கம் – இசை : இளையராஜா
25 பூ பூத்தது தோட்டம் யார் போட்டது – படம் : மும்பை எக்ஸ்பிரஸ் [ 2008 ] – பாடியவர்கள் :சோனு நிகம் + ஷ்ரேயா கோஷால் இளையராஜா – இசை : இளையராஜா
ஜாஸ் இசையின் மெல்லிய இசைக்கூறுகளை கொண்ட பாடல்.
பஹாடி ராகத்தில் பிறமொழி திரைப்படங்களிலும் மிக சிறப்பான பாடல்கள் பல வெளி வந்துள்ளன.நான் கேட்ட வரையில் குறிப்பாக ஹிந்தி திரைப்படங்களிலும் , மலயாள படங்களிலும் சிறந்த பாடல்களை எடுத்துகாட்டாக சொல்லலாம்.
ஹிந்தி பாடல்கள் சில:
01 suhani raat dhal chuki – Film :Dulari [1949 ] Singer : Mohamad Rafi – Music :Nausad
02 kora kagaz tha yeh man mera – Film :Aradhana [1969 [ – singer :Kishore Kumar + Lata mangeskar – music : S.D.Burman .
மலையாளப் பாடல்கள் சில :
01 Aagasa Poikaiyil – Film :Pattu thouvala [1963 ] Singer : K Purusoththaman + P .susheela – Music :G .devaraajan
02 Sree maangalyaa – Film:Madhavi kutty [1973] – Singer: Mathuri – Music:G.Devarajan
03 Aakaasha Thaamara – Film:Suvarkka Puthri [1973] – Singers: K.J.Yesuthas +Mathuri – Music:G.Devarajan
இது போன்ற ஏராளமான இனிமையான பாடல்கள் உள்ளன.
தொடரும்