Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

காலங்களில் அவள் வசந்தம் 

கலைகளிலே அவள் ஓவியம் 

என்ற  கண்ணதாசனின்   பாடல் வரிகள் புகழ் வாய்ந்தவை. ஆனால்  எல்லோர் மனதையும் ஈர்த்து  உணர்வுகளை கிளர்த்துவதில்  பேராற்றல் கொண்டது  இசை.

கலைகளிலே முதன்மையான இடத்தையும்  பிடித்திருப்பது இசைக்கலையே !. எந்தக் கலைக்கும் வாய்க்காத இந்த சிறப்பு இசைக்கு வாய்த்திருப்பது அதிசயமும் அல்ல.
இசை மனிதப்  பொறிகளில்  மின்னலைகளை பாய்ச்சும்  ஒலி அதிர்வுகளுடன் தொடர்புடையது .நுண்கலைகள் ஒன்றுடன் ஒன்று  தொடர்பு கொண்டவையாக விளங்கினாலும் , அதில் தன்னிகற்ற கலையாக இசை உயர் நிலை பெற்றிருக்கிறது.பாமரர் முதல் பண்டிதர் வரை ரசிக்கும் ஒரே கலை ,  இசைக்கலை  என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது எனலாம்.

நல்ல இசை ரசனை வீண் டம்பத்தையும் ,வரட்டுப் பெருமையையும் நொறுக்கிவிடும்.கசடு நீங்கிய நல்  வாழ்வுக்கும்  துணை போகும்.உள்ளத்தில் ஒளியும் ,உணர்வும் பொங்கச் செய்வது இசை.

செவி , கண் , மூக்கு , வாய் , மெய்  என்ற ஐம் பொறிகளில் இன்பத்தை உண்டாக்கும் இயற்க்கை சூழலை வர்ணிக்கும் அப்பர் ” மாசில் வீணையும்  ” என  மிக நுட்பமாக இசையையே முன் நிறுத்துகிறார்.

எத்தனையோ இன்பம் இந்த நாட்டில்  உண்டு
அத்தனைக்கும் இன்பம் பாட்டில் உண்டு

என்று மகுடம் வைத்தது போல்  சொன்னான்  மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம். இன்பங்களை தேடிய மனிதன் இசையையும் அதில் அங்கமாகவே  கண்டான். துயரம் ததும்பும்  ஒரு பாடலிலும்  இன்பத்தை அனுபவிப்பவன் மனிதன்.

மன்னர்களின்  சபைகளில் இசை என்பது ” இன்பம் துய்த்தல் ” என்று கருதப்பட்டு வந்ததை நாம் வரலாற்றிலிருந்து அறிகின்றோம். இசையின் உன்னதங்களை பல அறிஞர் பெருமக்கள் விதந்து பேசியிருக்கின்றார்கள்.

இசையின் இந்த மயக்கும் ஆற்றல் , செயற்கரிய நல்ல காரியங்கள் செய்வதைத் தடுக்கும் ஆபத்தும் கொண்டது  என்று  சில அறிஞர்கள் கருதியிருக்கின்றனர்.சீன தத்துவ அறிஞர்  மோசி [ Mozi ,470  -391 BC ] ,” இசையும் நடனமும் பிரயோசனமற்றவை “என்றார்.இவரின் இந்த கருத்திற்காக பின்  வந்த தத்துவாசியர்களால் கண்டனத்துக்குள்ளாகியுமிருக்கின்றார் மோசி. ஸ்பெயின் நாட்டு தத்துவ மேதை George Santayana என்பவர் ” Music is Essentaially useless , as life is ” என்ற ஒரு கருத்தையும் கூறியிருக்கின்றார்.

எதிர்மறையாக இப்படிப்பட்ட சில  கருத்துக்கள் இருப்பினும் , இசையை போற்றிய கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோவின் கருத்துக்களைச் சார்ந்தே அறிஞர்கள்  பலரும் கருத்துக்களை   வெளியிட்டுள்ளனர்.

” உலகம் வண்ணங்களால் என்னுடன் பேசுகிறது.என்னுடைய ஆன்மா இசையில் பதில் அளிக்கிறது !”  என்று  தாகூர் கூறியது மிகவும் நுட்பமான விடயமாகும்.காட்சியும் , ஒலியும்  இல்லாத உலகம் இல்லை. புற உலகை  அறிகின்ற வகையில் இரண்டு கலைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.


ஓசையும் , ஒலியும் இசைக்கு அடிப்படையானவை.. பேச்சுக்கும்    ஓசை, ஒலி தாம் அடிப்படை என்றாலும் பேச்சை , இசை பின்னுக்குத் தள்ளி விடுகின்றது.இனிய ஓசையிலும் , ஒலியிலும் உருவாவது இசை. இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடு  மிகவும் நுண்ணியது.  ஒலி என்பது சத்தத்தையும் , ஓசை என்பது ஒருவித லயத்துடன் வருவதையும் குறிக்கும்.

ஒலி குறுகியது. ஓசை பரந்தது.ஓசை, ஒலி எல்லாம் ஆனாய் நீயே என  ஓசையையும் , ஒலியையும் விதந்து  போற்றுவது அதன் முக்கியத்துவம் கருதியே.

ஒலியின் முக்கியத்துவத்தை ஆதிகால மனிதன் அறிந்திருக்கின்றான்.அதனால் தான்  புராதன மக்களின் மொழி இசையுடன் இயைந்திருந்தது என்பர்.

தமிழிலும் பல் துறை சார்ந்த பழைய நூல்கள் எல்லாம் பாட்டு வடிவிலும் இருப்பதை நாம் காணலாம்.பழங்காலத்தில் தமிழ் கவிதைகளை இசையுடன் பாடி வந்தனர்.அதன் வழியே மகாகவி பாரதியும் தனது கவிதைகளை இன்ன இன்ன ராகங்களில் பாட வேண்டும் என்ற குறிப்புக்களை எழுதிச் சென்றுள்ளான்.

ரசிகமணி டி.கே.சி அழகாகச் சொல்வார்.” தமிழ் பாடல்களுடைய அமைப்பையும் , அழகையும் அனுபவிக்க வேண்டும் என்றால் பாட வேண்டும்.எந்த ராகத்தைக் கொண்டாவது பாட வேண்டும். இந்த விசயத்தில் ஆங்கில ஹோதா ,உத்தியோக ஹோதா வந்து குறுக்கே நிற்க்கக் கூடாது  ” என்று.

உடலுழைப்பின் களை தெரியாமல் இருக்க எழுப்பிய பாட்டாளி மக்கள் எழுப்பிய ஒலிகள், ஓசைகள்  சந்தங்களாகி ,பின் நாட்டுப்புறப்பாடல்களாக மலர்ந்தன.உழைப்பின்  தாள கதிக்கேற்ப  அவர்களின் உள்ளத்திலிருந்து தன்னிச்சையாக பீறிட்டு எழுந்தவை. பல்லாயிரமாண்டுகளாக உழைக்கும் மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையிலிருந்து  பெற்ற அனுபவங்களிலிருந்து    தங்கள் உள்ளத்து  உணர்வுகளை எல்லாம்  கொட்டித் தீர்த்த  பாடல்கள் அவை.
இவ்விதம் பாடப்பட்ட பாடல்களின் பாடகர்களும் ,கவிஞர்களும், இசையமைப்பாளர்களும் அந்த மக்களே . வாழ்வின் எல்லா நிலைகளையும் அவர்களின் பாடல்கள் தொட்டுச் செல்லும்.அவற்றில் கற்பனையும் உவமைகளும் சிறந்து விளங்கும் படியாக அமைந்திருக்கும்.இதனை நாட்டுப்புறப் பாடல்கள் அல்லது நாடோடிப்பாடல்கள்  என்று அழைப்பர்.

பல் வகை உழைப்பில் ஈடுபட்ட மக்கள்  தன்னானே , தனனானே , ஏ தன்னானே  என்று பாடியவைகளே பிற்காலத்தில் சந்தக் குழிப்புக்களாயின. அதன் ஓசை நயம் பெரும் புலவர்களையும் ஈர்த்த்திருக்கிறது. இந்த சந்தக் குழிப்புக்களே வண்ணப்பாடல்கள் ஆயின என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதிலிருந்தே பிற்காலத்தில் ராகங்கள் விருத்தி அடைந்தன.

ஒலி  நயம் மிகுந்த கம்பன் பாடல்

                    தழையொலித்தன வண்டொலித்தன தரொலித்தன பேரியா

                    முழவொலித்தன தேரொலித்தன முத்தொலித்தன மல்குபேர்

                    இழையொலித்தன புள்ளொலித்தன யாழொலித்தன எங்கணும்

                    மழையொலித்தன போல்கலித்தன மனத்தின் முந்துறு வாசியே

தொல்காப்பியம் ஒலிநயம் , ஓசைநயம் குறித்து ஏராளமான செய்திகளைக் கூறுவதுடன் , குறிப்பாக ஒலி நயத்தின் சிறப்பை விளக்கும் வண்ணம் , சந்தம் போன்றவற்றையும்   விரிவாக பேசுகிறது.

” வண்ணந்   தானே நாலைந்தென்ப ..” என்று கூறி , அந்த இருபது வண்ணங்களை விபரித்துச் செல்கிறார் தொல்காப்பியர்.

                    பாஅ வண்ணந் தா வண்ணம்

                    வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண

                    மியைபு வண்ண மளபடை வண்ண

                    நெடுஞ் சீர் வண்ணங் குருஞ்சீர் வண்ணஞ்

                    சித்திர வண்ண நலிபு வண்ண

                    மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண

                    மொழகு வண்ண மொரூஉ  வண்ண
மெண்ணு வண்ண மேந்தல் வண்ண
முருட்டு வண்ண முடுகு வண்ணாமன்
                     றாங்கன மறிப வறிஞ்சதிசி னோரே   – [ செய்யுள் :213]

அவர் பட்டியலிட்ட வண்ணங்கள்.

1. பாஅ வண்ணம்   2. தாஅ  வண்ணம்    3. வல்லிசை வண்ணம்   4. மெல்லிசை வண்ணம்   5.இயைபு வண்ணம்   6.அளபடை வண்ணம்   7.நெடுஞ்சீர்  வண்ணம்  8. குருஞ்சீர் வண்ணம்  9. சித்திர வண்ணம்   10. நலிபு வண்ணம்  11. அகப்பாட்டு வண்ணம்   12. புறப்பாட்டு வண்ணம்   13.ஒழுகு வண்ணம்   14. ஒருஉ வண்ணம்  15. எண்ணு வண்ணம்  16.அகைப்பு வண்ணம்  17. தூங்கல் வண்ணம் 18. ஏந்தல் வண்ணம் 19. உருட்டுவண்ணம்  20.முடுகு வண்ணம்

சொற்களின் ஒழுங்கான சீரமைப்பில்  ஓசை நயம் இயல்பாக உருவாகும் என்பர்.இசைந்து வரும் ஓசைநயம் இசை எனப்படும்.தொல்காப்பியத்தில் மட்டுமல்ல , பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் பலவும் வண்ணம்  பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

” வள்ளிதழ்க் கோதை தானே இட்டதோர் வண்ணம் தன்னைக்
கொள்ளத்தான் முரலறுற்றுக் கோலமை வீணை கொண்டாள்  ”   
என்று சீவகசிந்தாமணியும்

”  எண்ணிய நூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ண இசை வகையெல்லாம் மாதுரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதற் கதியில்
பண்ணனமய எழும் ஓசை எம்மருங்கும் பரப்பினார்..”           
என்று  பெரியபுராணமும் கூறுகிறது.

சமணம் சார்ந்த  சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் பண் என்பதன் அடிப்படை  வண்ணப் பாடல்களே  என்பர்.

கவிதையிலும்  ஓசை நயம் முக்கியமானதாகும். உரைநடைக்கும் , கவிதைக்குமுள்ள வித்தியாசமே இந்த ஓசை நயம் என்கிற இசைத்தன்மை தான் காரணம் என்பர். ஓசைநயமும் , ஒலிநயமும் கவிதைக்கு மிக முக்கியமானதெனினும் ,கவிதைக்குரிய ஓசை நயம் பிரத்தியேகமானது.கவிதையில் இருக்கும் ஒலிநயம் உத்வேகம் தந்துவிடும். கவிதையில் எதுகை, மோனை போன்றவை  நினைவில் நிறுத்திக் கொள்ள பயன் படும் ஒலி நய  உத்திகள்  என்பர். மோனை மேடைப் பேச்சுக்களிலும் பயன்படக்கூடிய இனிய உத்தியாகும்.

பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.

என சம்பந்தர் தனது தேவாரத்தில்  ஓசை , ஒலி  பற்றி  சொல்லிச் செல்கிறார்.

பழங்காலத்தில் யாழ் என்பதில் ஒரு பகுதியாக பண் வழங்கப்பட்டது. பண் பற்றிய ஏராளமான குறிப்புக்களையும்  தொல்காப்பியம் மற்றும்  பழந் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. 103 தாய் பண்களிலிருந்து   11,991 இசைகள் உண்டாயின என்றும்   , காலப்போக்கில் அவை வர வரக் குறைந்து வந்ததென்றும் , தற்காலத்தில் 10 ராகங்கள் இன்றும் வழக்கில் உள்ளன என்றும்  இசையறிஞர் ஆப்ரகாம் பண்டிதர் கூறுகிறார். இதற்க்கான சிலப்பதிகார ஆதாரத்தையும் காட்டிச் செல்கிறார்.

“இசையென்பது நரப்படை வாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகளும்.
அவையாவன :-
“உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினு

முடறமி ழியலிசை யேழுடன் பகுத்து
மூவேழ் பெய்தந் …. …. ….
தொண்டு மீண்ட பன்னீ ராயிரங்
கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே.”   –  
 [சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை]

என்னுஞ் சூத்திரத்தாலுறழந்து கண்டு கொள்க. என்கிறார்.

இந்தப் பண்களே இன்று ராகங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த கூற்றை பின் வந்த பல சொல்லகராதிகளும் ஏற்றுக்கொள்கின்றன.

ராகம் பாடுதல் அல்லது ஆலாபனை என்றால் ஒரு குறிப்பிட்ட உணர்வை சொல் இல்லாமல் இசையில் வெளிப்படுத்துவதாகும்.ராகம் என்பது ஒலியின் கவிதை எனலாம்.

இந்த ராக நுட்பங்களையும் ,அவற்றை உருவாக்கும் முறையையும் , இசையமைப்பு முறைகளையும் மிகப் பண்டைக்காலம் தொட்டு தமிழ் மக்கள் மிக நன்கு அறிந்ததுடன் , அவற்றைப்  பாடியும்  இன்புற்றிருக்கின்றனர்.

பண் என்கிற தமிழ் சொல்லிற்கு ஈடாக பொருள் கொள்ளப்படும் வட மொழிச் சொல்லே   ராகம் என்று இன்றும் பரவலாக அறியப்பட்டு வருகின்றது.

” தமிழ் நாட்டில் பழங்காலத்திலிருந்தே இராக முறையைப் பண் முறை என்றும் ,இராகங்களைப் பண்கள் என்றும் அழைத்து வந்திருக்கிறார்கள்.முழு வடிவமும் முழுமையான அகல நீளமும் கொண்ட இராகங்களை பண்கள் என்றும் இவற்றிலிருந்து தோன்றுகிற சேய்  இராகங்களை பண்திறம் என்றும், பண் திறத்திறம் என்றும் தமிழர்கள் தொன்று தொட்டு அழைத்து வந்திருக்கிறார்கள்.எனவே , பண்முறை என்பது தமிழரின் இசை முறைக்கு மற்றொரு பெயர் ” என்பார் மீ.ப.சோமசுந்தரம்.

இசையறிஞர் வீ.பா.கா .சுந்தரம்  அவர்கள் அழகாக விளக்குவார்.

“ஏறு நிரலும் இறங்கு நிரலிலும் தனக்குரிய கோவை வரிசைகளைக் கொண்டு நிறம் தொடரக் [ உயர்ச்சி தோன்ற ] கமகங்கள் ததும்பக் கோவைகளை விரித்து வளர்த்துப் பாடுவதே பண் “. “பண்ணப்படுவது பண் எனலாம்.”
கோவைகளை கோத்து சுவைகள் தோன்றப் பண்ணப்பட்டமையால் பண் எனப் பெயர் பெற்றது.வெறும் கோவைகளை கோத்து விடுவதால் பண் அமைந்து  விடாது.ஒவ்வொரு கோவையையும் நீட்டியோ , குறுக்கியோ ,வளுக்கியோ , அசைத்தோ ஒலிப்பதால் எண் சுவைகள் தோன்றும்.இவ்வாறு பண்ணப்பட்டது பண் என வெவேறு நூல்களில் பண்  குறித்து குறிப்புக்கள் அமைந்துள்ளதை காண முடிகிறது.”

பண் என்பது தமிழில் பல பொருள்களில் வருகிறது.பண் என்பது இசை என்ற பொருளிலும் குறிப்பிடப்படுகிறது.

1. ” பாட்டிடை கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத் திய்யே ”  – தொல்காப்பியம் – [ தோல்: செய்; 173 ]
பண்ணைத் தோற்றுவிப்பதால் பண்ணத்தி என்கிறார் தொல்காப்பியர்.

2. ” ஆடல் பாட லிசையே தமிழே
பண்ணே பாணி தூக்கி முடமே ” – சிலம்பு : [ அரங்: 45 -46 ]

3.  ” பண்ணியாழ்க் கரணமும்  பாடைப்பாடலும் ” – மணிமேகலை – ஊரலுரை: 20

4.  ” பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண்  ” – குறள் :573  ராகம் என்ற பொருளில்

5.  ” தாளத்தோடு பொருந்திய இயற்றமிழ் பாவினோடு இசையை இயைத்துப் பாடும் போது அது திறம் தோன்ற  அதாவது பண்  அல்லது ராகம் தோன்ற இனிமையாக ஒலிக்கிறது.பழந்தமிழ் மக்கள் பண் என்று அழைத்ததை நாம் இப்போது ராகம் என்று அழைக்கிறோம்.” – து.ஆ.தனபாண்டியன்

6.  ” நிறை நரம்பிற்றே , பண்ணெனலாகும் ” – சேந்தன் திவாகரம்

7.  ” பாட்டின் பெயரும் பரிமாக்கலனையும் நாட்டிய பண்னும்  பண்ணென நவில்வர்  – பிங்கலநிகண்டு [ இசைப்பாட்டு என்ற பொருளில் ]

8.  ” பண்ணென்ப பாட்டும் பண்ணும்பரிமாவின் கலணையும்  ” -[ இசைப்பாட்டு என்ற பொருளில் ]

9.  ” இசை , இசைப்பாட்டு , ஏழு சுரம் உள்ள இசை ,யாழ் முதலிய கருவிகள், ஓசை        ,கூத்துவகை ,- தமிழ் -தமிழ் அகரமுதலி  – மு.சண்முகம்பிள்ளை.

என பண் பற்றிப் பலவிதமான கோணங்களிலும்  விவரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் ராகம் என்பது தமிழ் சொல் என்றும் , அராகம் என்ற  மூலச் சொல்லிருந்து உண்டானது  என்றும் வேர்ச் சொல்லியல் ஆய்வாளர் திரு.ப.அருளிகீழ் கண்டவாறு விளக்குவார்.

” உர் என்ற சொல் தமிழில் ஒலிக்கான மூலம். உரை என்பது  ஒலியிடு என்பதாகும். உர்  என்கிற  சொல் உரவு என்று வரும். உரவு என்பது  ஒலி யைக் குறிக்கும்.
முடங்கு என்பது மடங்கு  என்று வரும்,
முயங்கு எனபது மயங்கு என்று வரும் ,
குடம் என்பது கடம் என்று  வரும் ,
முயங்கு  என்பது மயங்கு என்று வருவதுபோல உரவு என்பது வந்தது.

உரவு என்கிற  சொல்  அரவு. அரவு என்றால் ஒலி என்று அர்த்தம். அரவு + அம் = அரவம் [ என்ன ஆள் அரவம் கேட்கிறது ], பாம்பு வகையில் சீறும் பாம்புக்கு அரவம் என்று பெயர்உண்டு. ” நாம நல் அரா “என்றால் நல்ல பாம்பு என்று அர்த்தம். அரவம் , அராவனம் , அராவம் என்பது ஒலி ஆகும்.  சிவப்பு என்பதை சிகப்பு என்பது போல அராவம்  என்பதை அராகம் என்பது போல அந்த அராகத்தில் “அ ” வை அகற்றிவிட்டு ராக என்று மாற்றினார்கள்.”

மேலும் அவர் தொடர்கிறார்.

ராகம்  என்பதற்கு வட மொழி சொல்லகராதியில் ” ரஞ் ” என்கிற சொல்லிலிருந்து வருவதாக குறிப்பிடுகின்றனர். ” ரஞ் ” என்பதின் பொருள்  நிறம் , சாயம் , சிவப்பு  நிறம் ,அடர்த்தி , பற்று , விளைவு ,மகிழ்ச்சி ,இரக்கம், அழகு.  அழகிலிருந்து வந்ததாக முடிக்கிறார்கள்.

” ராகம் என்பதற்கு நேரடியான விளக்கம் வட மொழியில் இல்லை ” என்பார் இசைப் பேராசிரியர் கோ.வைத்திலிங்கம்.

சங்க இலக்கியத்தில் கலிப்பா என்ற பாடல் அமைப்பில்  ஒரு உறுப்பு அராகம்  என்றழைக்கப்படுகிறது.பிங்கல நிகண்டு தரும் பின்வரும் பாடல்

“அராக நேர்திற முறுப்புக் குறுங்கலி
யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே.”  
என்ற  குறிப்பையும் தருகிறது.

முடகு என்பதும் அராகம் ,வண்ணம் , அடுக்கியல் என்ற அர்த்தத்தில் வரும் என்பார் இசை ஆய்வாளர் மம்மது.

முடுகும் ராகம் என்பதை நெகிழ்ந்த ஒசையவாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துகளால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது என்பர்.அதுமட்டுமல்ல பல்வேறு அமைப்பில் அமைக்கப்பட்ட தேவார திருபதிகங்களில் ” திருவிராகம்” என்றும் குறிப்பிடப்படுகின்றன.

திருவிராகம் என்பதில் இருந்தே  ராகம் எனும் சொல் பிறந்தது என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ராகம் என்பது தமிழ் சொல்லே.இதனை  வட மொழி என்றால் தமிழில் இருந்து திரிக்கப்பட்ட , திருடப்பட்ட ஏராளமான சொற்க்களில் ஒன்று  என கொள்ளலாம். கால ஓட்டத்தில் மொழிகளுக்கிடையிலான முயங்குதலின் விளைவாகவும் இருக்கலாம்.ஆயினும்  சமஸ்கிருதத்தில் இருக்கின்ற ஏராளமான சொற்கள் [ 50 வீதம் ]  தமிழ்ச் சொற்கள் என்று சொல்வார் தேவநேயப் பாவாணர். அதுமட்டுமல்ல வட  மொழியில் இருப்பன எல்லாம் தமிழர்களுக்கு சொந்தமானவை அல்ல என்பதிலும் உண்மை இல்லை எனபார்.

யாழ் என்பது பெரும்பண் ஆகும். மருத யாழ், பாலை யாழ் , நெய்தல் யாழ் ,முல்லை யாழ் , குறிஞ்சி யாழ் என வாழ்ந்த நிலங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டன என்பர்.இவை மட்டமல்ல ச.ரி ,க, ம ,ப த , நி  போன்றவையும் தமிழில் உண்டானதே! சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதை  என்ற பகுதியில் கீழ்  வரும் பாடல் உள்ளது.

‘ ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை’

இந்த ராகங்ககளுக்கு உயிர் கொடுப்பவை சுரங்களில் பொதிந்திருக்கும் கமகங்கள் ஆகும்.இந்த கமகங்களே பிற நாட்டு இசையிலிருந்து நமது இசையை துல்லியமாக வேறுபடுத்திக்காட்ட உதவுகின்றது.
இதனை பழந் தமிழ் இலக்கியங்களில் உள்ளோசைகள் என அழைத்தனர்.இந்த உள்ளோசைகளை எவ்விதம் பாட வேண்டும் என்ற குறிப்பையும் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.

வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்
சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்
ஏறுடைப் , பட்டடை என இசையோர் வகுத்த
பட்ட வகைதன் செவியின் ஒர்த்த   –   [ சிலப்பதிகாரம் 17 கானல்வரி  12- 6 ]

தமிழ் மக்களின்  இந்த  இசையை , ராகங்களை    வளர்த்தவர்கள்  பாணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.அறிஞர்  தேவநேயப் பாவாணர்
 ” இசைத் தமிழ்த் தொன்மை ” என்ற கட்டுரையில்  பின் வருமாறு விளக்குவார்.

” …  மேற்கூறிய இசைக் கருவிகளையெல்லாம் தொன்றுதொட்டுச் செய்து வந்தவரும் இயக்கி வந்தவரும் தனித் தமிழரே. அவர் பாணர், மேளக்காரர் (நட்டுவர்) என இரு வகுப்பினர். இசைத் தெய்வத் திற்கே மாதங்கி (பாடினி) என்றுதான் பெயர்….
பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்து வந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே “பாண் சேரிப் பற்கிளக்கு மாறு” என்னும் பழ மொழியும் எழுந்தது. பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர். திருப்பாணாழ் வார் முதலிய யாழ்வேந்தரெல்லாம் பாணரே. 11ஆம் நூற்றாண்டில் தேவாரத் திற்கு இசை வகுத்தது திருநீல கண்ட யாழ்ப்பாணரின் மரபினரான ஒரு பெண்டாவர். 
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்து வழங்கிவரும் பாணாற்றுப் படை கூத்தராற்றுப் படை முதலிய செய்யுள்களும் நூல்களும் பாணரின் இசைத் தலைமையைப் புலப்படுத்தும்.”

இந்திய இசையின் சிறப்பம்சமான  இந்த ராகங்கள் தமிழ் மக்கள்  உலகுக்கு வழங்கிய கொடையாகும்.சுரங்களை இறங்கு நிலையாகவும் ,ஏறுநிலையாகவும் பாடும் போது    ராகங்கள் பிறக்கும்.சுரங்களை ஒழுங்கு முறையில் பாட பிறக்கும் இனிய இசையில் ரசம் பிறக்கும் என்பர்.பாடும் சுரங்களுக்கேற்ப ராகங்களும் மாறு படும்.இனிமையை முன்னிலைப் படுத்திய தமிழர்கள் இணைவான சுரங்களை வைத்து இனிய இசையை உணடாக்கியதுடன்  இனிமையற்ற இசையை உண்டாக்கக் கூடய சுரங்களின் சேர்க்கையை தவிர்த்தும் வந்திருக்கிறார்கள்.அதனை அவர்கள் அபஸ்சுரம்  [ Atone ] என அழைத்தனர்.

நவீன இசை வடிவமாக மாற்றம் கண்ட ஐரோப்பிய இசை அபஸ்வர இசையயும் இணைத்துக் கொண்டு [ Twelve Tone Series ]  வளர்ச்சியடைந்தது. ஆர்னொல்ட்   ஷூன்பேர்க்  [ Arnold Schoenberg – 1874–1951]என்ற ஆஸ்திரிய நாட்டுக் கலைஞரால் இது கண்டு பிடிக்கப்பட்டது.
தேவார காலத்தில் இசையில் மிக முக்கியான மாற்றங்கள் ஏற்ப்பட்டன.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழிசை ராகங்கள் மத வழி பாட்டுக்குள் திருப்பப்பட்டதால் புதிய பரிசோதனைகள் புறம் தள்ளப்பட்டு , பார்ப்பனீய சித்தாந்தத்துக்கு ஏற்ப குறுக்கப்பட்டு அதன் வளர்ச்சியும் தடுக்கப்பட்டன.உழைக்காமல் காலத்தை கொண்டு சென்ற பார்ப்பனீய சித்தாந்தம் தனது வாழ்வியல் உள்ளடக்கத்தை இசையிலும் திணித்து இறுக்கியது.தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் பல்லியம்  [ Orchestra ] என்கிற வாத்திய இசையை புறக்கணித்து மதப் பிரச்சாரத்திற்கு,  மொழி சார்ந்த இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தது.உழைக்கும் மக்கள் சார்ந்த தாளலய இசை [ Rythmic ] முற்றாக மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது.இது போன்ற ஒரு நிலையை நாம் மத்திய கால ஐரோப்பிய சர்ச் இசை வரலாற்றிலும் காண்கிறோம். ஐரோப்பாவில் 17 ஆம் நூற்றாண்டில் ஏற்ப்பட்ட எழுச்சி [ Revolution ] மதம் சாராத சிம்பொனி இசையை

[ Symphony] உருவாக்கியது. இசையை மதத்தின் தளைகளிலிருந்து பிரித்தது.இது  போன்றதொரு மாற்றம் தமிழ் , இந்திய சூழலில் சிந்தித்துப் பார்க்கமுடியாதிருந்தது.

முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;
முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன –                    என சிலப்பதிகாரத்தில் இளங்கோ பாடுகிறார்.

பல வகையான வாத்தியங்களின் பெயர்கள்  பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நிறைந்து காணக் கிடைப்பினும் , அவற்றின் சிறப்புக்கள் பேசப்பட்டாலும் “நரம்பின் மறை ” என்று தொல்காப்பியம் [133] யாழ் என்ற இசைக்கருவிக்கு இலக்கண நூல் இருந்தது என்று கூறினாலும் வாத்திய இசை என்பது பின்வந்தவர்களால் புறம் தள்ளப்பட்டு வந்துள்ளது.அதற்க்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது. வாத்தியங்களுக்கென தனியே ஒரு இசைமுறை இல்லாமல் போனது.
இன்று வரை வாத்தியஇசையென்பது மொழி சார்ந்த பாடல்களையே நம்பியிருக்கிறது. குறிப்பாக செவ்வியல் இசையில் தமிழ் கீர்த்தனைகளையும் , அதன் தொடர்ச்சியாக பின் வந்த மும்மூர்த்திகளின்  தெலுங்கு கீர்த்தனைகள் சார்ந்த தாகவே உள்ளன.வாத்திய இசை கலைஞர்கள் சங்கீத பாடல்களையே வாசிக்கும் நிலைக்குள்ளானார்கள்.

தமிழ் சூழலில் பக்தி இசை மட்டும் அங்கீகாரத்திற்க்குரியதாக விளங்கியது. அதன் மூலம் பக்தி இசை வளர்ச்சி பெற்றது.அந்த அடிப்படையிலிருந்து விலக முடியாத வண்ணம் இசை குறுக்கப்பட்டது.முன்னேர்ற்றத்திற்கோ , பரிசோதனைகளுக்கோ இடமளிக்காத பக்தி என்ற செக்கை சுற்றிய மாடாக இசை விளங்கியது.பண்டைத் தமிழ் கலைமரபில் இசைக் கலையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட கூத்துக்கலையின் வீழ்ச்சியும் , பக்தி இயக்கத்தின் எழுச்சியும்  இதனை நிலை பெறச் செய்தன என எண்ணத் தோன்றுகிறது.

இந்திய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின்  அளவுகடந்த சலுகைகள் பெற்ற செல்லப்பிள்ளைகளாகவும் சுரண்டல் தத்துவதத்துவத்தின் ஞானதந்தைகளாகவும் விளங்கியவர்கள் பிராமணர்கள். தனது கற்பனைகளுக்கு ஏற்ப கடவுளையும் , கோயில்களையும்  கட்டமைத்த பார்ப்பனீய சித்தாந்தம் , நமது மரபு இசையின்  ராகங்களையும்   இசையையும் அதற்க்கு தொண்டாற்றவும் பணித்தது.
” பிராமண சமுதாயத்தால் நிர்வாகிக்கப்படும் சத்திரிய ஆ ட்சி பிறரால் வெல்ல முடியாததது ஆகும்.அது எப்போதும் வெற்றி பெறும் .” என்ற அர்த்த சாஸ்திர ஆசிரியரின் கருத்துக்கு ஏற்ப ஆட்சி நடாத்தினார்கள் தமிழ் மன்னர்கள். 15 ம் நூற்றாண்டில் சைவ சமய சித்தாந்தம் வகுக்கப்பட்டமையும் இதற்க்கு இன்னும் பலம் சேர்த்தது எனலாம்.மக்களை சுரண்டும் இந்த சித்தாந்தத்தை மன்னர்களும் ,நிலப்பிரபுக்களும் மகிழ்ச்சியுடன் ஆதரித்தனர்.

தமிழில் மும்மூர்த்தியினர் தோன்றி கீர்த்தனை என்கிற இசை வடிவத்தை அமைத்துக் கொடுத்த காலமும் இதுவே ஆகும்.

தமிழில் தோன்றிய மும்மூர்த்திகள்.

1. முத்துத் தாண்டவர் [ 1525-1625 ]
2. அருணாசலக் கவிராயர்  [1712-1779 ]
3. மாரிமுத்தாப் பிள்ளை   [1717-1787 ]

முத்து தாண்டவர் [ 1525-1625 ] எழுதிய
– சேவிக்க வேண்டும் ஐய்யா – ராகம் :கல்யாணி –  ஏக தாளம்
– சிற்சபைதனிலே கண்டு – ராகம் : நீலாம்பரி  –   திரிபுடை தாளம்
– நடனம் கண்ட போதே எந்தன் – ராகம்: ஆகிரி  – ஆதி தாளம்
– ஈசனே கோடி சூரிய பிரகாசனே – ராகம்: நளினகாந்தி
– ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண – ராகம்: மாயாமாளவகௌளை

அருணாசலக் கவிராயர்  [1712-1779 ] எழுதிய

– எப்படி மனம் துணிந்ததோ – ராகம் : குசினி  – கண்டசாபு தாளம்
– ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே – ராகம் : ஹிந்தோளம்   ஆதி தாளம்
– யாரோ இவர் யாரோ  –  ராகம் : பைரவி   – ஆதி தாளம்
– ஏன் பள்ளி கொண்டீர் ஐய்யா –  ராகம் : மோகனம் – ஆதி தாளம்

மாரிமுத்தாப் பிள்ளை   [1717-1787 ] எழுதிய
– இன்னமும் ஒரு தலம் இருக்கும் – ராகம்: சுருட்டி
– காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – ராகம்: யதுகுல காம்போதி
– தண்டனிட்டேன் என்று சொல்லடி –

போன்ற பல கீர்ததனைகள் புகழ் பெற்றிருந்தன.இவற்றில் பல பாடல்கள் இன்றும் பாடப்படுவனவாகும்.

ஆதி மும்மூர்த்திகளான  இவர்களின் பாடல்களைப் பின்பற்றி  தியாகய்யர் [ 1767 – 1848 ] , முத்துச்சுவாமி  தீட்சிதர் , சியாமா சாஸ்திரி [ 1762 – 1827 ] போன்றோர் சமஸ்கிருத்ததிலும் , தெலுங்கிலும் பாடல்கள் புனைந்து புகழ் பெற்றனர்.மன்னர்களும் , பிரபுக்களும், கோயில்களும் இந்த இசையை  ஊக்குவித்தனர்.முத்துசுவாமி தீட்சிதர் , சியாமா சாஸ்திரி , பட்டணம் சுப்பிரமணி அய்யர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தும் அவர்கள் தமிழில் தங்கள்  பாடல்களை எழுதவில்லை. தெலுங்கு மொழி ஆளும் மொழியாகிய வரலாற்று சூழலில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

இவ்விதம் தமிழ் செவ்வியல் இசையில் நேரடியாக ராகங்கள் பயன்பட்டு வந்தது போலவே தமிழ் மக்கள் பழகி  வந்த பல் வகை இசை வடிவங்களின் உள்ளீடாக , மறை பொருளாக ராகங்கள் இருந்து வந்ததையும் நாம் அவதானிக்கலாம்.மக்களிசை என்று கருதப்படும் நாட்டுப்புற இசையின் வேர்களிலிருந்து தோன்றியவையே ராகங்கள்.நாட்டுப்புற இசைப்பாடல்களிலும் இராகங்களை எளிதாக அடையாளம் காணலாம். உதாரணமாக  ஆனந்தபைரவி , குறிஞ்சி, ஆபேரி , சிந்துபைரவி ,மாயமாளவ கௌளை , நாதநாமக்கிரியை  போன்ற ராகங்ககளை சொல்லலாம்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே இசையமைப்பாளர்கள் நாட்டுபுற இசையையை அங்கங்கே பயன் படுத்தி வந்திருக்கின்றார்கள். அவர்களில் முதன்மையானவராக  இசை மேதை ஜி.ராமநாதன் , இசைமேதை கே.வீ.மகாதேவன் போன்றோர் திகழ்ந்தார்கள்.

ஜி.ராமநாதன் மிக அதிக அளவில் நாட்டுப்புற இசையை, குறிப்பாக அதன் தாள லயத்தை மிக வெற்றிகரமாகப் பயன்படுத்திய மாமேதை  எனலாம்.அவர் இசையமைத்த பெருமபாலான படங்களில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளளன.நல்ல தங்காள் ,
அரசிளங்ககுமரி , காத்தவராயன் , மதுரைவீரன் , நான்பெற்ற செல்வம் , கற்புக்கரசி , சதாரம் , தூக்குத் தூக்கி , கோகிலவாணி  போன்ற படங்களில் நாடுப்புற இசை மிக தூக்கலாகத் தெரியும்.செவ்வியல் இசை ராகங்களை எவ்வாறெல்லாம் அற்ப்புதமாகப் பயன்படுத்தினாரோ  அதே  வீச்சுடன் நாட்டுப்புற   இசையையும் பயன்படுத்திய முன்னோடி இசையமைப்பாளர் தான்  இசைமேதை ஜி.ராமநாதன்.

காத்தவராயன் என்ற படம் தெலுங்கில்  காத்தவரயுனி கதா [ Karthavarayuni Katha 1958 ] என்ற பெயரிலும் வெளிவந்தது.தமிழில் இசையமைத்த ஜி.ராமநாதனுடன் , அஸ்வத்தாமா [ வீணை காயத்ரியின் தந்தை ] என்ற இசையமைப்பளரும் இணைந்து இசையமைத்தார். இந்தப் படத்தில் காதல் பாடலகளில் மெல்லிசைப் பாங்கு ஓங்கியிருக்கும். தமிழை விட தெலுங்கு சினிமா இசை மெல்லிசை வடிவத்தை முன்பே பின்பற்ற தொடங்கி விட்டார்கள் என்றே எண்ணத தோன்றுகிறது.பல தெலுங்கு இசையமைப்பாளர்கள் தமிழ் படங்களில் இசையமைத்து பெரும் புகழ் பெற்றார்கள்.

1950 களில் தமிழ் திரையிசையில் மேலைத்தேய இசையின் இணைவு ஆரம்பித்த வேளையில் புகழ் பெறத் தொடங்கிய கே.வீ.மகாதேவன்    திரையிசையில் நாட்டுப்புற இசையைப்  பயன் படுத்தி பல வெற்றி பாடலக்ளைத் தந்தார். ஜி.ராமநாதன் , கே.வீ .மகாதேவன் போலவே , இன்னும் மேல் சென்று  நாட்டுப்புற இசையின் முழு வீச்சையும் காட்டியவர்  இசைஞானி இளையராஜா.

தமிழ் செவ்வியல் இசை ராகங்களிலேயே நாட்டுப்புற பாங்கில்  ஏராளமான  பாடல்களை , அவருக்கு முன்பிருந்த இசைமேதைகளின் வழியில்  அதனை இன்னும் விஸ்தாரமாகச் செய்து காட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. செவ்வியல் இசை ராகங்களுக்கு நாட்டுப்புற சாயங்ககளை பூசி , அதிலிருந்து இது வந்ததோ , அல்லது இதிலிருது அது வந்ததா  என்பது போன்றிருக்கும் ஒரு நிலையை செய்முறையாக நிகழ்த்திக்  காட்டியிருப்ப்பார்.

சினிமாவில் வெளிவந்த ஏராளமான பாடல்கள் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசை யமைக்கப்பட்டவையே.அன்றிலிருந்து இன்று வரை இது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.1990 களிலிருந்து மேற்கத்தேய இசையின் தாக்கம் அதிகமாக இருப்பினும் ராகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களும் ஆங்கங்கே வந்த வண்ணம் தான்  இருக்கின்றன. அந்நிய இசையை புரிந்து கொண்டு பயன்படுத்துவது என்பதில்லாமல்   ,அது ஒரு மோகமாக , நோயாக வளர்ந்தும் விட்டிருக்கிறது.எது எவ்வாறாயினும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கப்போவது நமது மண்ணிலிருந்து , பண்பாட்டிலிருந்து உருவாகும் பாடல்களே!  இதனை நாம் ஏலவே வந்த பாடல்கள் மூலமும் இதனை நிரூபிக்கலாம்.

1940 களில் மிகுந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட மங்கம்மா சபதம் திரைப்படத்தில் மேல்நாட்டு  இசை  பெருத்த ஆரவாரத்துடன் பயன்படுத்தப்பட்டது.மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப் பட்டது.ஆயினும் அந்தப்பாடல்கள இன்று யாராலும் பேசப்படுவதில்லை. ஆனால் அதே காலத்தில் எடுக்கப்பட்ட ஹரிதாஸ் போன்ற படங்களில் ஒலித்த தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன.மண்ணின் மணம் பாடலகளில் இருந்ததால் மக்கள்  அவற்றை தங்களுக்கு நெருக்கமானதாக  உணர்ந்தார்கள்.அதே போல் 1950 களிலும் 1960 களிலும் 1980 களிலும் வெளிவந்த பாடல்கள் மக்களின் ஊன் உயிர்களில் கலந்து விட்டன.அவை மெல்லிசை வடிவமாக , செவ்வியல் இசையாக, மேலைத்தேய இசையுடன் கலந்த மெல்லிசை வடிவமாக வெளி வந்து பாமரர் முதல் படித்தவர்களும் பாடக்கூடிய    பாடல்களாகவும் அமைந்திருந்தன.அதன் உள்ளீடாக , உயிர் நாடியாக இருந்தது அவர்கள் கால காலமாகப் பழகி வந்த ராகங்களே.

இன்றைய சினிமாவின் இசைக்கு முன்னோடியாக வழி காட்டி நின்றது தமிழ் கூத்து / நாடக இசை என்றால் மிகை  இல்லை.இதன் வளர்ச்சியை நாம் அறிய வேண்டும் என்றால் முதலில் நாடக இசையில் இருந்து தான் நாம் தொடங்க  வேண்டும்.

[ தொடரும் ]

Exit mobile version