Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ச்சினிமாவின் மீது தமிழக அரசு பூசிய கரி! :மாதவராஜ்

tamilnaduபுழுக்கத்தில் இருந்த தமிழ்ச்சினிமாவுக்குள் தென்றலின் தீண்டலாய் பாவிய மொழி படத்திற்கு இரண்டாவது பரிசாம். தமிழ்ச்சமூகத்தின் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு போனால் போகிறது என்று சிறப்புப் பரிசாம். இந்தப்படங்களையெல்லாம் தாண்டி  ரசனையை, சிந்தனையை, பண்பாட்டை சீரழிக்கும் சிவாஜி படத்திற்கு 2007ம் ஆண்டு சிறந்த பட விருதாம். ரஜினி சிறந்த நடிகராம்.  இந்தச் செய்தி, எரிச்சலிலும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. பெரிய அளவில் எல்லோராலும் பேசப்பட்ட பருத்திவீரனை தமிழக அரசு தொலைத்து விட்டது போல. எடுக்கப்பட்ட விதத்தில் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்த கல்லூரியை கணக்கில் வைத்துக் கொள்ளவேயில்லை போலிருக்கிறது.

2008ம் ஆண்டு விருதுகளுக்கும் அதே கொடுமைதான். சீரியஸாய் ஆரம்பித்து காமெடியாகி எல்லோரையும் குழப்ப சுனாமியில் மூழ்கடித்த தசாவதாரம் படம் சிறந்த படமாம். ஒரே நேரத்தில் பத்து மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொண்ட கமல் சிறந்த நடிகராம்.(இவருக்கு இந்த படத்தில் பின்னணிக்குரலுக்கு வேண்டுமானால் பரிசு கொடுக்கலாம்). தமிழ்ச்சினிமாவுக்கு இன்னொரு அத்தியாயம் எழுதியதாய்ச் சொல்லப்படுகிற சுப்பிரமணியபுரத்தில் ஒரு பிண்ணனிப் பாடகருக்கு மட்டும் விருது கிடைத்திருக்கிறது.

முன்னணி நடிகர்களை கைக்குள் வைத்துக்கொள்வது என்னும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் தந்திரம் அப்பட்டமாய் தெரிகிறது. இந்த அரசியல் ஆலிங்கனத்தில் குருவிக்காரன் எப்படி விடுபட்டுப் போனார் என்பதற்கு என்ன கிளைக்கதை இருக்கிறதோ தெரியவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. சன் டி.வியின் டாப் டென்னுக்கும், தமிழக அரசின் விருதுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

மீண்டும் தமிழ்ச்சினிமாவிற்குள் புதியவர்களும், புதிய சிந்தனைகளும் ஒரு மறுமலர்ச்சி போல பிரவேசித்திருக்கிற காலம் இது. கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் எதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்போடு அவர்கள் இருப்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த  படங்களில் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தமிழக அரசு இந்த விருது மூலம் சொல்கிற செய்தி என்ன? பிரம்மாண்டமான படங்கள் பக்கம்தான் தமிழக அரசு நிற்கும் என்பதுதானா? உளி இங்கே சிலைகளை செதுக்கவில்லை, உடைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் சத்தம் நாராசமாய் கேட்கிறது.

தமிழக அரசு இந்த விருதுகளின் மாண்புகளையும், மதிப்பையும் சீர்குலைத்துவிட்டது. தமிழ்ச்சினிமாவின் மீது கரியை பூசியிருக்கிறது. நல்ல கலைஞர்கள் இப்படிப்பட்ட ‘கலைஞரிடம்’ இருந்து விருதுகளை இனி எதிர்பார்க்க மாட்டார்கள். உலகத் தமிழ் மாநாட்டை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!

http://mathavaraj.blogspot.com/2009/09/blog-post_29.html

Exit mobile version