Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்சினிமா இசையில் அகத்தூண்டுதல் : 6(முற்றும்) : T .சௌந்தர்

தமிழ் திரைப்பட இசையின் வளர்ச்சியில் பாபநாசம் சிவன் , ராஜகோபால் போன்ற ஆரம்பகால இசையமைப்பாளர்களை பின்பற்றி ,அதில் தமிழ் மெல்லிசைக்கான முயற்ச்சிகளை ஜி.ராமநாதன், எஸ்.எம் சுப்பையா நாயுடு. எஸ்.வீ.வெங்கட்ராமன் ,ஆர். சுதர்சனம் போன்ற இசை மேதைகள் விரிவாக்கினார். பின் திரை இசைத் திலகம் கே.வீ.மகாதேவன் . மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,ஏ.எம்.ராஜா போன்ற பல கலைஞர்கள் பெரும் பங்காற்றினார்கள்..இவர்களின் தொடர்ச்சியாக இளையராஜா ஆச்ச்சர்யமிக்க வளர்ச்சியை காட்டினார்.அவரது இசை பழ்மைக்கு பழமையாயும் , புதுமைக்குப் புதுமையாயும் விளங்கியது.

இளையராஜாவின் இசையின் தாக்கமில்லாத அவரது சமகால இசையமைப்பாளர்கள் இல்லை என்ற நிலையை பார்த்தோம்.இளையராஜாவின் இசை புதிய அலைகளை எழுப்பியது. இசை என்பது ” கதாநாயக “னாக அவரது காலத்தில் உருவெடுத்தது. இசை பற்றிய விழிப்புணர்வை அவரது இசை ஏற்ப்படுத்தினாலும் , அவருக்கு முன்னிருந்த இசை மேதைகளின் வழியில், மரபில் நின்று பல புதுமைகளைச் செய்து காட்டினார். மேலைநாட்டு சங்கீதம் நன்கு தெரிந்தவர் எனினும் அவற்றை அளவான கலவையில் தர அவரால் முடிந்தது.அந்தக் கலவையில் இரண்டு இசை வகைகளின் பிணைப்பு ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத, சிறப்பாக இருந்ததுடன், அதில் எந்த வயதுப் பிரிவினரையும் ஏற்க வைக்கும் கலாமேதமையும் இருந்தது.

“சிகர “, ” இமய ” இயக்குனர்களின் படங்களிலும் ” கட்டாந்தரை” இயக்குனர்களின் படங்களிலும் அவரது இசை சிறப்பாகவே இருந்தது. கார்த்திக் படத்திலும் கமல் படத்திலும் , ரஜனி படத்திலும் ராமராஜன் படத்திலும் இசை சிறப்பாகவே இருந்தது என்பதை நாம் கண்டோம்.போட்டியும் , பொறாமையும் , காழ்ப்புணர்வும் நிறைந்த சினிமா உலகில் பொதுவாக ஏற்ப்படக்கூடிய மன்க்கசப்புக்களால் சில ” பெரிய இயக்குனர்கள்” இளையராஜாவுடன் ” நானா நீயா ” போட்டியில் இறங்கினர்.இந்த மனவேறுபாடுகளால் அவர்கள புதிய இசையமைப்பாளர்களை தேடி ஓட ஆரம்பித்தனர். அதன் நிகழ்வாக பல இசையமைப்பாளர்கள் “சிகர ” , ” இமய ” இயக்குனர்களால் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமான்வர்களாக மரகதமணி , அம்சலேகா, தேவேந்திரன் .ரவீந்திரன் , வீ.நரசிம்மன் , எஸ்.ஏ.ராஜ்குமார் , சௌந்தர்யன் , தேவா போன்றவர் களைக் குறிப்பிடலாம்.அவர்கள் நல்ல பாடல்களைத் தந்தாலும் அவை கூட இளையராஜாவின் எதிரொலிகளாகவே இருந்தன..அவற்றிற்கு உதாரணங்களாக

1 . சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு – படம்: கொடி பறக்குது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : அம்சலேகா

2 . காதல் என்னை காதலிக்கவில்லை – படம்: கொடி பறக்குது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : அம்சலேகா

3 . கண்ணுக்குள் நூறு நிலவா – படம்: வேதம் புதிது பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : தேவேந்திரன்

4 . சம்மதம் சொன்னேன் வந்துவிடு – படம்: வேதம் புதிது பாடியவர்கள் மனோ + சித்ரா இசை : தேவேந்திரன்

5 . சங்கீத சுரங்கள் – படம்: அழகன் பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : மரகதமணி

6 . தத்தித்தோம் தோம் – படம்: அழகன் பாடியவர்கள் சித்ரா இசை : மரகதமணி

7 . ஆவாரம்பூ ஆறேழு நாளா – படம்: அச்சமில்லை அச்சமில்லை பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + சுசீலா இசை : வீ.நரசிம்மன்

8 . அம்மா அடி அம்மா – படம்: ஒரு ரசிகன் ஒரு ரசிகை – பாடியவர்கள் பி. ஜெயச்சந்திரன் + எஸ்.ஜானகி இசை : ரவீந்திரன்

9 . சங்கீத வானில் சந்தோசம் பாடும் – படம்: சின்ன பூவே மெல்ல பேசு – பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் + வாணி ஜெயராம் இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

10 . சின்ன பொண்ணுதா வெக்கப்படுது – படம்: வைகாசி பொறந்தாச்சு சு – பாடியவர்கள் மனோ + சித்ரா இசை : தேவா

11 . காதல் கடிதம் வரைந்தேன் – படம்: சேரன் பாண்டியன் – பாடியவர்கள் லாப்சன் ராஜ்குமார் + ஸ்வர்ணலதா இசை : சௌந்தர்யன்

12 . தாமரைப் பூவுக்கும் – படம்: பசும் பொன் – பாடியவர்கள் : கிருஷ்ணசந்தர் + ஸ்வர்ணலதா இசை : வித்யாசாகர்
மேல் சொன்ன இசையமைப்பாளர்கள் நல்ல இசையமைப்பாளராக நல்ல பாடல்களைத் தர முயர்ச்சித்தமை பாராட்டுக்குரியது.குறிப்பாக் மரகதமணி பல நல்ல பாடல்களை தந்துள்ளார்.அவர் வேறு மொழி படங்களுக்கு M.M. கீரவாணி என்ற பெயரிலும் இசையமைத்துள்ளார்.குறிப்பாக தேவராகம் என்கிற மலையாள படத்தில் மென்மையான , மெல்லிசைப்பாங்கான பாடல்களை தந்துள்ளார்.மலையாளப்படங்களில் இசையமைத்துத் தனக்கென ஒரு பாணியை அமைத்த ரவீந்திரன் தலை சிறந்த பாடல்களைத் தந்து சென்றுள்ளார்.அவரது மரணம் , நல்ல இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு வருடத்தில் 45 , 50 படங்களுக்கு இளையராஜா இசையமைத்தாலும் தரத்திலும் [ஒரு சில படங்களை திவிர] அவை சோடை போனதில்லை.இளையராஜாவுடைய பாடல் அமைப்பு முறைகளை அப்பட்டமாக பிரதி பண்ணத் தயங்காத ஒரு இசையமைப்பாளராக தேவா தமிழ் திரைக்கு ” வைகாசி பொறந்தாச்சு ” என்ற படம்மூலம் அறிமுகமானார்.

இளையராஜாவின் இசையின் மலிவான வடிவமாக பல பாடல்களை தேவா தந்தார். இளையராஜாவை தங்கள் படங்களுக்கு அமர்த்த முடியாத இயக்குனர்களின் மலிவு இசையமைப்பாளரானார். தனது தனித்துவத்தை காட்டத் தவறிய தேவா மற்றவர்களைப் ” போல ” [ Imitation ] இசையமைக்கும் இசையமைப்பாளரானார்.தரம் பற்றிய எண்ணமில்லாத திரைப்பட வியாபாரிகளுக்கு இந்த Imitation இசை போதுமானதாக இருந்ததும் வியப்பில்லை. இளையராஜாவின் பாடல்களை வகை தொகையில்லாமல் தேவா செய்த நகலேடுப்புக்கள் அவரது இசையை மலினப்படுத்தின. அது இளையராஜாவின் இசையின் மதிப்பையும் கெடுத்தது.

இவை ஒரு புறமிருக்க இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக MTV , STAR டிவி போன்றவை இந்தியாவில் நுழைந்தன. தொடர்ச்சியாக அவர்கள் ஒளிபரப்பிய ஆங்கில பாடல் கள் ஒரு ரசனை மாற்றத்தை ஏற்ப்படுத்தியது.

ஆங்கிலேய அமெரிக்க பொப் பாடக , நடன மணிகளான சமந்த பாக்ஸ் , மடோன்னா போன்றவர்களின் இசை நிழச்சிகளும் பரபரப்புடன் நிகழ்த்தப்பட்டன. இப்படிப்பட்ட இசை நிகழ்ச்சிகளுக்கு இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களும் பார்வையாளராக அழைக்கப்பட்டனர்.

பிறப்பால் இந்தியர்களாகவும் , நினைவில் வெள்ளையர்களாக வாழும் இந்தியர்களுக்கு ஒரு உவப்பான காலம் இது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் அவர்களில் கணிசமானோர்கள் தாய் மொழியில் பேசுவது தாழ்ந்ததாகவும் , ஆங்கிலத்தில் பேசுவது உத்தமமேனும் எனும் ஒரு தாழ்வு நிலையால் பீடிக்கப்பட்டவர்களயாயிருகின்றனர்.

தாய்மொழியான தமிழில் தங்கள் பிள்ளைகள் படிக்க கூடாது என்று எண்ணுகிற கணிசமான தமிழ் பெற்றோர்கள் இன்றும் இருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினவு கொள்ளலாம். இவ்விதம் தங்கள் தாய் மொழியில் படிக்க விரும்பாத மக்களை உலகில் எந்தப் பகுதியிலாவது நாம் அறிந்திருக்கிறோமா? அது போலவே தமிழ் பாடல்களைக் கேட்பதும் தரக்குறைவான செயல் , நாகரீகமற்ற செயல் என்பது போன்ற கருத்துக்கள் வைத்திருந்தவர்களுக்கு கொண்டாட்டமான காலமானது எனலாம்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகள் இந்தியாவின் உத்தியோக பூர்வ கொள்கையாகிய நிலையில் , அந்த உலக மயக் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களை ஒருங்கமைக்கும் திருப்பணியை இந்திய அரசே தலைமை ஏற்று செய்து கொண்டது, செய்து கொண்டுமிருக்கிறது. அதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களான கொக்கோ கோலா , பெப்சி போன்ற நிறுவனங்கள் உள்நுழைந்தன. கொக்கோ கோலா கண்டெடுத்த அழகியாக சுஸ்மிதா சென்னும் , பெப்சி கண்டெடுத்த அழகியாக ஐஸ்வர்யா ராயும் உலக அழகிகள் ஆக்கப்பட்டனர்.இதன் உள்நோக்கம் என்பது அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தையை கைப்பற்றுவது தான் என்பதும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.

நீண்ட காலம் இந்திய திரைப்படங்களைப் புறக்கணித்து வந்த ஒஸ்கார் விருது, மரணத்தின் வாசலில் இருந்த சத்யஜித் ரே க்கு” வாழ்நாள் சாதனை ” ஆஸ்கர் விருது [ 1992 ல் ] கொடுத்து தனது பாவத்தை கழுவிக்கொண்டது. அமெரிக்க அரசின் இந்தியா மீதான புதிய போக்கின் வெளிப்பாடு என இதனைக் கொள்ளலாம்.

எண்பதுகளில் அமெரிக்காவின் உலக மய கொள்கையின் இசைத் தூதுவனாக உருவாக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன் , செயற்கைக்கோள்களின் [ SATALITE ] உதவியுடன் திட்டமிடப்பட்டு உலகெங்கும் காண்பிக்கப்பட்டார்.அவரது வியக்க வைக்கும் பிரமாண்டமான மேடை அலங்காரங்கள் , சிறப்பான ஒலிப்பதிவு தொழில் நுட்பம் , ஒளியமைப்பு உள்ளடங்கிய இசை நிகழ்சிகள் உலகெங்கும் ஒரே நேரத்தில் விண் கோள்களின் வலைப்பின்னல் தொடர்பில் உருவாக்கப்பட்ட தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபட்டன.

புற்றீசல்களாக உருவான இருபத்தி நான்கு மணி நேர தொலைக்காட்சிகள் மூலம் இவை இடை விடாமல் ஒளிபரப்பபட்டன. கிட்டதட்ட 200 மில்லியன் மக்கள் உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் இவற்றை பார்க்கும் படியான நிலை வளர்ந்தது. உலகின் பல இனக் கலாச்சாரங்களை அழிக்கும் ஒரு போக்காக , ஒரு போதையாக இந்த வகை இசை திரும்ப, திரும்ப திட்டமிட்டு உலகெங்கும் ஒளிபரப்பட்டது. ஏனெனில் தொடர்ந்து ஒரு விஷயத்தை கேட்டுக்கொண்டிருந்தால் கேட்பவர் மனதில் அவை பதிந்து விடும். அப்படிப்பட்ட இசையை மக்கள் மனதில் முதலில் பதிப்பிதே அவர்களது நோக்கமாக இருந்தது. இந்தப் போக்குக்கு இணங்கும் கலைத்துறையினர் ஊக்குவிக்கப்பட்டனர்.

இசை என்பது ஒரு பண்பாடு , கலாச்சார மரபிலிருந்து உருவாவது. நாம் மெக்சிக்கோ நாட்டு இசையை கேட்கும் போதும் , எத்தியோப்பிய இசையை கேட்கும் போதும் அநதந்த நாட்டு மக்களின் வெவேறு விதமான இசையை கேட்கலாம். அவற்றில் உள்ள வித்தியாசமான இசையின் இனிமையை ரசிக்கிறோம். இந்திய இசையை ரசிக்கும் நாம் அவற்றின் ராகங்களை எல்லாம் வேறு சில நாட்டு இசைகளிலும் கேட்டு இன்புறுகிறோம்.

சூடான் நாட்டு இசையில் சுத்த தன்யாசி , சுத்தசாவேரி போன்ற ராகங்களின் சாயல்களைப் பாடல்களில் கேட்டு இன்புறுகிறோம். அது போலவே மேலைத்தேய இசையிலும் சில தமிழ் ராகங்களை அடையாளம் கண்டு , அதன் சாயல்கள் இருப்பதை கேட்டு ஆனந்திக்கிறோம். அந்தந்த ராகங்களின் சாயல்கள் அவற்றிலிருந்தாலும் காலச்சார வேறுபாடுகளால் அவை புதிய தரிசனங்களைத் தருகின்றன.

இந்த வேறுபாடுகளை அழித்து தாங்கள் திணிக்கும் ஒரு இசைக்கு ஏற்ப தாளம் போட வைப்பதே உலகமய கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம். உலகின் மக்கள் தொகையில் இசை கேட்பவர்களே அதிகம்.எழுத, படிக்கத் தெரியாதவர்கள் கூட இசையை கேட்கலாம்.எந்த விதமான செலவும் இல்லாமல் இசையை கேட்க்கலாம். போகுமிடமெல்லாம் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இசையை மக்கள் மனதில் பதிய வைக்கவே மைக்கேல் ஜாக்சன் , மடோனா ,இன்ன பிற மேலைத்தேய பொப் இசை பாடகர்களின் பாடல்களை திட்டமிட்டு ஒலிபரப்புகிறார்கள்.

அதில் உள்ள கவர்ச்சியைக் காட்டி மக்களை மயக்குகிறார்கள். எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும் , என்னென உடை உடுத்த வேண்டும் , எப்படி பட்ட இசையை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் குறியாக இருக்கின்றார்கள். இது போன்ற மாற்றங்களை எல்லாம் கொண்டுவரும் கருவியாக இசையையும் அவர்கள் பயன் படுத்துகிறார்கள்.

” இசை உலகை மாற்றும், ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது ” என்று ஓர் அறிஞர் கூறியது தற்செயலானதல்ல. இசைக்கு அந்த ஆற்றல் இருக்கிறது. உலக மக்களின் பண்பாடுகளை அழிப்பதற்கு இசை பயன் படுகிறது. பண்பாட்டை இழந்தால் மக்களை தம் எண்ணம் போல் ஆட்டிப்படைக்கலாம் என்பதும் அவர்கள் அறிந்த ஒன்றே.

இப்படிப்பட்ட ஒரு புற சூழ்நிலை அமைந்த நிலையிலும் எஸ்.ஏ.ராஜ்குமார், மரகதமணி , அம்சலேகா, தேவேந்திரன் , ரவீந்திரன் ,வீ.நரசிம்மன் . இப்படி பல இசையமைப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு எதிர் பார்க்கப்பட்ட வெற்றியளிக்காத சூழ்நிலையில் , பத்தோடு பதினொன்றாக ஏ.ஆர். ரகுமான் அறிமுகப்படுத்தப்பட்டார். இவ்விதம் பல இசையமைப்பாளர்கள் அறிமுகம் செய்யபட்டு வெற்றியடையாத சூழ்நிலையில் ஒலிப்பேழைகளில் இளையராஜாவின் பெயரை போட்டு அதனுடன் , வேறொரு இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படப் பாடல்கள் [ அந்த இசையமைப்பாளர்களின் பெயர்கள் இல்லாமலேயே ] விற்பனை செய்யப்பட்டன. ரோஜா பட ஒலிப்பேழையிலும் இசையமைப்பாளரின் பெயர் இருக்கவில்லை.

ரோஜா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒலித்தரத்தில் சிறப்பானதாக விளங்கியது. பாடல்களில் ஏதோ ஒரு வேறு பாடு தெரிந்தது.பாடல்களும் பிரபல்யமடைத்த்ன. முஸ்லீம் எதிர்ப்பு படமாக விளங்கியதால் இந்தியா அரசு தேசிய விருது கொடுத்து கௌரவித்தது.முஸ்லீம் எதிர்ப்பை ஆரம்பித்து வைத்த ரோஜா திரைப்படம் மணிரத்தினமும் , பாலச்சந்தரும் இணைந்து எடுத்த படமாகும். ரகுமானின் இசைக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டது. அந்த ஆண்டு விருதுக்குத் தெரிவு செய்யப் பட்ட படங்களில் தேவர் மகன் என்ற படமும் முக்கியமானதாக இருந்தது என்றும் , இளையராஜாவின் இசை நன்றாக இருந்ததெனினும் , ஒரு புது இசையமைப்பாளருக்கு கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டதாக பின்னாளில் தேர்வுக் குழுவில் இருந்த இயக்குனர் பாலு மகேந்திரா சொல்லியிருக்கிறார்.

மேலைத்தேய இசை அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலை காட்டிய போதும் ஆரம்பகால் இசையமைப்பாளர்கள் அங்கொன்றும் , இங்கொன்றுமாய் திரையில் சூழ் நிலைகளுக்கு தகுந்தவாறு பயன் படுத்தி வெற்றிகண்டார்கள்.” எங்கே இசையமைச்சாலும் நம்ம பாரம்பரிய இசையிலிருந்து விலகாதே .எல்லா இசையும் தெரிஞ்சுக்கோ !.. ஆனால் உன் பாதையை விட்டு விலகாதே .கேட்டாஎங்க அம்மா ,அப்பா தமிழர் தான், வெள்ளைக்காரா இல்லைன்னு சொல்லு ..” என்று இசைமேதை ஜி.ராமநாதன் தனது உதவியாளராக இருந்த சுந்தரம் என்பவருக்கு கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப கண்ணியம் காத்தார்கள்.

மேலைத்தேய இசை நன்கறிந்த இளையராஜா மேலைத்தேய இசையை அப்பட்டமாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவரோ அவருக்கு முன்பிருந்த இசை மேதைகள் போல அளவோடு நிருத்திக் கொண்டார். புதிய தொழில் நுட்பங்களும் , அதற்க்கு பின்னால் ஓடுவதும், வெளிநாட்டு இசைக்குத் ஏற்ப தாளம் போடுவதும் , மரபார்ந்த மண்ணின் இசையை சீரழித்து விடும் என்ற எண்ணமும் அதனால் முக்கியமாக் தமக்குக கெட்ட பெயர் வந்து விடும் என்ற தயக்கமும் பழைய இசையமைப்பாளர்களிடம் இருந்தது எனலாம். வட இந்தியாவில் 1990 களில் சில பொப் அல்பங்களைப் பாடி புகழ் பெற்றருந்தவர் ஆசா போஸ்லே , அது போல தென்னிந்தியாவில் இளையராஜா உச்சத்தில் இருந்தார்.இந்த இருவரும் மேலைத்தேய இசைக்கு இந்திய அளவில் தோற்றம் தரக்கூடியவர்கள் அல்ல.அவர்களுடைய வயதும் பொருத்தமானதல்ல.

அவர்களுக்கு வேறு விதமான அடையாளம் இருந்தது. அதனால் மேலைத்தேய போப் இசைக்கு இசைவாகப் போகக் கூடிய ஒருவர் தேவையாக் இருந்தது. ரோஜா பட வெற்றி அவர்கள் காத்திருந்த ஒருவரை பெற்றுக்க் கொடுத்தது.

ரோஜா பட வெற்றியின் மூலம் நல்ல இசை தருவார் என்ற எண்ணம் இசை ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது.” சின்ன சின்ன ஆசை “, ” புது வெள்ளை மழை ” போன்ற பாடல்களில் மேலைத்தேய இசையை ஆரம்பித்த ரகுமான் தனது பாடலகளுக்கான உந்துதுலாக [ INSPIRATION } தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால் பாடல்களின் ஒலித்தரத்தில் காட்டப்பட்ட நுட்பம் இசை மெட்டுக்களில் வெளிப்படவில்லை. அவை உணர்ச்சியற்ற அலங்காரங்களாகவே வெளிப்பட்டன.

மேலைத்தேய பொப் இசைக்குபின்னால் ஒடக்கூடியவராக ரகுமான் இருந்தார்.அவர் ஏற்க்கனவே ராக் இசை குழுவை [ பஞ்சதன் ] நடாத்தியதுடன் விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்து வந்தார். அவர் பிடித்த கண்ணி தாளமாகும்.எங்கும் தாளம் எதிலும் தாளம் என்பது போல தாளத்தை ஒரு முழக்கமாக்கினார். தாளம் என்பது மனிதன் கண்ட ஆதி கலை. இசை , நாட்டியம் , நாடகம் போன்ற கலைகளின் ஆதாரம் தாளம். மனிதனின் உள்ளியக்கத்தில் இயல்பாக இருப்பது. தாளத்தின் வேகம் பலவிதமான உணர்வுகளை தரவல்லது.

தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம். என்று அழகாகச் சொல்வான்.

குறிப்பாக பருவ வயது இளைஞர்களை [ 13 – 20 வயது ] அலைபாய வைக்கின்ற வேகமான தாள லயம் அவர்களைக் கொந்தளிப்புக்குள்ளாக்கி விடுவதாய் அமைந்து விடுகின்றன.அறியும் ஆர்வமும் , உடல் , உள மாற்றங்களை செய்தி ஊடகங்கள் திட்டமிட்டு குழப்பி விடுகின்றன. தாளத்திற்க்குக் கட்டுப்படாத மனிதனே கிடையாது.:பாடலின் மொழி விளங்காதவர்கள் கூட தாளத்தில் லயித்து நிற்பர் . பாடலுக்குத் தாளம் என்பது போய் , தாளத்திற்க்குப் பாடல் என்ற நிலைக்கு தாழ்ந்து விட்டது.

முக்காலா முக்காப்புலா லைலா பாடலின் பின் அது போன்ற தாளத்தை முன்னிறுத்தும் பாடல்களை தருவதிலும் , அர்த்தமற்ற வார்த்தைகளை வைத்துப் பாடல்களை பிரபலயப்ப்டுத்துவதிலுமே முனைப்பும் காட்டினார்.அர்த்தமற்ற சொற்களை வைத்து பாடலாக்குவதை முன்பிருந்த இசையமைப்பாளர்களும் மிக , மிக அரிதாகச் செய்தவை தான்!. சில

உதாரணங்கள் :

1 . ஐயோ பாகிரியாமா… – படம்: சந்திரலேகா [1948 ] – பாடியவர்: என்.எஸ்.கிருஷ்ணன் + மதுரம் இசை: S.ராஜேஸ்வர ராவ் இந்தப் பாடல வெளிப்பார்வைக்கு அர்த்தமற்ற சொற்கள் போல் தெரிந்தாலும் , படத்தில் மறைமுகமான , பூடகமான செய்தியை தெரிவிப்பதாக அமைந்தது.படத்தின் கதைக்கு அந்த பாடல் முக்கியமாக இருந்தது.

2 . ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா – படம்: அமரதீபம் [1956 ] – பாடியவர்: ஜிக்கி இசை: T.சலபதிராவ்

3 .மச்சான் உன்னை பார்த்து மயங்கி போனேன் நேற்று ” -படம்: பாசவலை [1956 ] – பாடியவர்: ஜிக்கி இசை:விசுவநாதன் ராமூர்த்தி

இந்தப் பாடல் சுமார் என்று அந்த படத்தின் தாயாரிப்பாளர் டீ.ஆர் .சுந்தரம் கூறிய போது ” இந்த பாடலை நாம் ஒரு ஹிட் பாடலாக்கி காட்டுகிறோம் ” என்று சொல்லி அந்த பாடலின் முன்னால் ” லொள் லொள் லொள் லொள் ” என்ற பாடலுக்கு சம்பந்தமில்லாத அர்த்தமற்ற சமாச்சாரத்தை சேர்த்தோம்.பாடல் பயங்கரக் ஹிட் ஆகியது ” என்று மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறினார்.படத்தில் ஒரு பெண் குடி போதையில் , நாயை வைத்துக் கொண்டு பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது.

4 . ஜியோஜியோ யோ ஐயோ என் அம்புலியோ – படம்: அடுத்த வீட்டுப்பெண் [1960 ] – பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ் + S .ஜானகி இசை: ஆதிநாராயணராவ்

5 . ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு சொல்லி தாரேன் மனக்கணக்கு – படம்: குருசிஷ்யன் [1987 ] – பாடியவர்: மனோ + சித்ரா இசை: இளையராஜா

” முக்காலா முக்காப்பிலா லைலா போன்ற பாடல்கள் ஆரோக்கியமானதல்ல ” – என்று [ அப்துல்ஹமீதின் ] பேட்டி ஒன்றில் கூறிய ரகுமான் , தானே தொடர்ந்து அது போன்ற அர்த்தமற்ற சொற்களைக் கொண்டு ஆரம்பிக்கும் பாடல்களையும் , பாடல்களுக்குதேவை இல்லாத சப்தங்களையும் எழுப்புவது , காட்டு கத்தல் கத்துவது போன்றவற்றை புதுமை என்று நினைத்திச் செய்து வருகிறார். இன்று புகழ் பெற்றிருக்கும் ” நாக்கு மூக்கா நாக்கு மூக்கா … நாக்கு மூக்கா …நாக்கு மூக்கா ” பாடல் இந்த போக்கின் உச்சம் எனலாம்.இது போன்ற பாடலை மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ தொலைக்காட்சிகள் விடுவதாய் இல்லை.

அகத்தூண்டுதல் [ Inspiration ] என்பதை மலினப்படுத்துவது போல, பிற இசையமைப்பாளர்களின் புகழ் பெற்ற பாடல்களின் பல்லவிகளை பயன்படுத்தி தனது பாடலாக்குவதும் , அல்லது வெவ்வேறு பாடலகளை வெட்டி ஓட்டுவது என்ற தவறான செய்முறையை மற்றவர்களும் செய்து காட்டியவர் ரகுமான்.மற்றவர்களின் படைப்பிலிருந்து அகத்தூண்டுதல் [ Inspiration ] பெறுவது கலைகளின் அடிப்படையே. மற்றவர்கள் பாடலில் எங்காவது ஒரு இடத்தில் தமக்கு தேவையானதை எடுப்பார்.ஆனால் இவரோ மற்ற இசைகலைஞரின் பாடல்களின் புகழ் பெற்ற பல்லவிகளை தனது பாடல்களில் அமைத்திருக்கிறார்.இந்த முறை அந்த பாடலை பிரபல்யமாக்கும் ஒரு மலின முறையாகும்.பாடல்களில் பல்லவி என்பது தான் அதன் அடையாளம். ரகுமான் எடுத்தாண்ட புகழ் பெற்ற பல்லவிகளைப் பார்ப்போம்.

1 . என்னை விட்டால் யாருமில்லை – படம்: நாளை நமதே – பாடியவர்கள் கே .ஜே . ஜேசுதாஸ் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

ரோஜா ரோஜா ரோஜா – படம்: காதலர் தினம் – பாடியவர்: உன்னி கிருஷ்ணன் இந்த பாடலிலேயே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த
சிப்பியிருக்குது முத்துமிருக்குது – படம்: வறுமையின் நிறம் சிவப்பு – பாடியவர்கள் :எஸ்.பி. பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி
என்ற பாடலும் வரும்.

2 . தங்கபதக்கத்தின் மேலே – படம்: குமரிகூட்டம் – பாடியவர்கள் டி.எம் சௌந்த்ரராஜன் + பி.சுசீலா . இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தப் பாடலின் பல்லவி தான்

என்னவிலை அழகே …. – படம்: காதலர் தினம் – பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

3 . O Mere Sona Re – film: Teesri Manzil Singers: Rafi + Asha Bosley Music: R.D.Burman
நேருக்கு நேர் நின்று – படம்: எதிரிகள் ஜாக்கிரதை – பாடியவர்கள் டி.எம் சௌந்த்ரராஜன் + பி.சுசீலா . இசை : வேதா ..
வாராய் என் தோழி வாராய் என் தோழி – படம்: ஜீன்ஸ் இசை : ஏ.ஆர் .ரகுமான்

4 . Aap Jaisa Koi Meri Zindagi – film: Qurbaani [1980 ] Singers: Rafi + Asha Bosley Music: Pappi Lahiri

பச்சைக் கிளிகள் தோளோடு – படம்: இந்தியன் – பாடியவர்: கே .ஜே .ஜேசுதாஸ் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

5 .ஆசையே அலை போலே படம்:தை பிறந்தால் வழி பிறக்கும் – பாடியவர்: திருச்சி லோகநாதன் . இசை : கே..வீ .மகாதேவன்
முக்காலா முக்காப்பிலா லைலா – படம்: காதலன் – பாடியவர்: மனோ . இசை : ஏ.ஆர் .ரகுமான் ..

6 . உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வரும்மாம் தென்றல் – படம்:பூஜைக்கு வந்த மலர் – பாடியவர்: பி.சுசீலா . இசை : விசுவநாதன் ராமூர்த்தி

தென் மேற்கு பருவக் காற்று – படம்: கருத்தம்மா – பாடியவர்: உன்னி கிருஷ்ணன் + சுஜாதா . இசை : ஏ.ஆர் .ரகுமான்

இந்த பாடலின் பல்லவி மேல் சொன்ன பாடல் என்றால் மிகுதியை
O.. Neele Gagen Ke Tele Film: Hamraaz [ 1967] Singer : Rafi Music: Ravi …. [ அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் என்ற பாடலின் ஹிந்தி மூல வடிவம்.] என்ற பாடலின் சில பகுதிகளிலிருந்து வெட்டி ஓட்டப்பட்டிருக்கும்.

7 . Patta Patta Podda – Hariharan gazal
மலர்களே மலர்களே- படம்: Love Birds – பாடியவர்: சித்ரா + ஹரிகரன் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

8 . Tune Mera Naina – Guida no 911 [ 1959] lata mangeshkar musi: Duttaram
உப்புக் கருவாடு ஊற வைத்தசொறு – படம்: முதல்வன் – பாடியவர்: சங்கர் மகாதேவன் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

9 . உறவுகள் தொடர்கதை – படம்: அவள் அப்படித்தான் பாடியவர்: கே.ஜே ஜேசுதாஸ் . இசை :இளையராஜா
உயிரே உயிரே உன்னை என்னோடு – படம்: பம்பாய் – பாடியவர்: ஹரிகரன் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

10 . The Robots – KRAFTWERK
புதிய மனிதா பூமிக்கு வா – படம்: இந்திரன் – பாடியவர்: ரகுமான் . இசை : ஏ.ஆர் .ரகுமான்

ஏ.ஆர்.ரகுமானின் பிரபலய்மான பல பாடல்கள் இவ்விதம் வெவ்வேறு பாடல்களிலிருந்து வெட்டி ஓட்டப்பட்டவையாக இருப்பதை காணலாம்.ரோஜா படத்தில் வெளியான ” புதுவெள்ளை மழை பொழிகிறது ” [ ரகுமானின் பாடலகளில் நான் மிகவும் ரசித்த பாடல் ] இரண்டு ஆங்கிலப் பாடல் இசையிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவை என்பதை அறிந்த போது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அந்த இரண்டு பாடலகளின் பெயர்கள் கீழே உள்ளன.

1. Queitman [ Beauty Nature Slow ] Music: Yanni

2. Vangelis – Chariot Of Fire [ 1981]

இது மட்டுமல்ல பிரபலமான ஆங்கில , ஆபிரிக்க பாடல்களின் தாளங்களை அப்படியே எடுத்துக்கொண்டு , அதற்க்கு ஏற்ப பாடல்களை உருவாக்கி , அதில் நவீன ஒலியமைப்புக்களை காட்டி பிரமிக்க வைப்பதன் மூலம் அது Second Hand Music என்பதை அழகாக மறைத்தல் . அதன் மூலம் உலக சந்தைக்குரிய இசையை தயாரிக்கும் ஒரு பணியை முன்னிறுத்தி வேரில்லாத இசையை உருவாக்குதல், அதன் மூலம் இசையில் பண்பாட்டுக் கூறுகளை அழித்தல் போன்றவற்றை ரகுமானும் அவரை பின்பற்றி அவருக்கு பின் வந்த யுவன் சங்கர் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் , விஜய் அன்டனி , தேவிஸ்ரீ பிரசாத் போன்றவர்களும் செய்து வருவது வருந்தத்தக்க விசயமாகும்.இவர்களுக்குக் கிடைத்த ,கிடைக்கின்ற அங்கீகாரம் , புகழ் எல்லோரையும் மிரள வைப்பதாக இருக்கின்றது.இப்படியான மிரள வைக்கும் போக்கினூடாக “இது தான் சிறந்த இசை ” என்பதாக மக்களை நம்ப வைக்கும் திருப்பணியை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஊதிப்பெருக்கி செய்து வருகின்றன.சாதாரண மக்களின் மனதுக்கு இந்த இசை ஒவ்வாததாக அல்லது மனதில் ஒட்டாத இசையாக இருந்தாலும் கொடுக்கப்படும் விருதுகளால் அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டு விடுகின்றன.

ஒரே ஒரு பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தனுஷின் ” கொலை வெறிப்பாடல்” எவ்விதம் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது என்பதை அறிந்தோம்.ஒரு “தமிழ் [ ? ] ” பாடல் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டது என்று பலரும் பெருமைப்பட்டுக் கொண்டார்கள்..அந்தப் பாடலைப் பாடிய தனுசை ” இந்தியாவின் இசை அடையாளம் ” அல்லது தனுசை தெரியாதவர்கள் இசை தெரியாதவர்கள் ” என்று சொல்லலாமா? முன்பு ஒரு இசை விழாவில் ரகுமான் பெயர் தெரியாதவர்கள் ” இசை தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் ” சொல்லப்பட்டது. கொலை வெறி பாடலின் சாதனை ரகுமானின் சாதனையை விட சாதனை என்று தான் கொள்ளவேண்டும்.

ஆனால் தனுஷ் ” அது ஒரு தவறுதலாக நடந்த சம்பவம், இனி மீண்டும் அது நடவாது ” என்று சுய விமர்சனம் செய்து கொண்டார். இது போன்ற அபத்தங்கள் நிறைந்த காலமாக இந்தக் காலம் இருக்கிறது.எது நடக்கும் எது நடக்காது என்று ஆரூடம் சொல்ல முடியாத காலம்.

A.R.ரகுமான் உலகெங்கிலும் உள்ள இசையிலிருந்து அவற்றின் தாளங்களை எடுத்து , அல்லது அப்படியே பிரதி பண்ணி பல பாடல்களைத் தயாரித்துள்ளார். சில உதாரணங்களைப் பார்ப்போம். இவை அகத்தூண்டுதல் என்பதற்கு மாறான நேரடியான பிரதி எடுப்பு [ COPY ] தவிர வேறல்ல.அவர் ஒரு சிறந்த Copyist என்று சொல்லுமளவுக்கு செயல்பட்டிருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

1. KUBE – RHYTHM OF THE PRIDE LANDS

பூ பூக்கும் ஓசை – மின்சாரக் கனவு – சுஜாதா

2. DR.ALBAN – OM WE REMBWE IKE – ONE LOVE

தென் மேற்கு பருவக் காற்று – கருத்தம்மா – உன்னிகிருஷ்ணன் + சுஜாதா

3. OSIBISA – KELELE FUNK – [ஆபிரிக்க இசைக்குழு ]

பார்க்காதே பார்க்காதே – ஜென்டில்மென் – மின்மினி

4. POUL YOUNG – LOVE OF THE COMMEN PEOPLE

அக்கடாங்கு நாங்க உடை போட்டா – இந்தியன் – சுவர்ணலதா

5. THE MUMMY RETURNS – DEEP FOREST – NIGHTCLUB

தில்லான தில்லானா – முத்து – ஆரம்ப இசை நேரடியாக பிரதி.

6. Ace of Base – Happy Nation

டெலிபோன் மணி போல் – இந்தியன் – தாளம் நேரடியாக பிரதி.

7. Can’t Live without you – Happy Nation

ஓமனப்பெண்ணே – விண்ணை தாண்டி வருவாயா –

8. Ennini Morricone – For a few dollers more

மெல்லிசையே மெல்லிசையே – MR. ரோமியோ –

M.I.A என்ற பெயரில் புகழ் பெற்ற ஈழத் தமிழ் பெண் பாடகியான மாதங்கி அருள்பிரகாசம் என்பரின் , KALA என்கிற அல்பத்தில் வெளியான ” PAPER PLANE ” என்ற பாடல SLUMDOGMILLIONAIRE படத்தில் பயன்படுத்தபட்டது.இவரின் BAMBOO BANGA என்ற பாடலில் இளையராஜா இசையமைத்த ” காட்டுக்குயிலு மனசுக்குள்ளே ” என்ன்ற தளபதி படப்பாடலின் தாளம் பயன்படுத்தபட்டிருப்பதுடன் , அந்த பாடலில் வரும் ” எல்லோரும் சொர்க்கத்திலே ” என்ற பாடல் வரிகளுடன் தொடக்கி அதன் தாளம் முடியும் வரை பின்னிப்பினைக்கபபட்டிருக்கிறது.M.I.A வின் HUSSEL அல்பத்தில் இளையராஜாவின்” ஆட்டமா தேரோட்டமா “என்ற பாடல் பிணைக்கப்பட்டுள்ளது.மேலே சொன்ன பாடலகள் போல இன்னும் பல பாடல்கள் உள்ளன.நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.இது ரோஜாவிலிருந்து எந்திரன் வரை நீண்டு கிடக்கிறது. இவ்விதம் உலகெங்கும் உள்ள இசைகளை அப்பட்டமாக காப்பி அடிக்கும் ரகுமான் மேதையாகவும், உயர்வாகவும் , உள்ளூரில் அப்பட்டமாக காப்பியடிக்கும் தேவா தாழ்வாகவும், இழிவாகவும் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டார்.குமுதம் , விகடன் போன்ற பத்திரிகைகள் கூச்சமில்லாமல் தேவா பற்றிய ஜோக்ஸ் வெளியிட்டன.பதத்திற்கு ஒன்று.

ஒருவர்: அவர் Xerox கடையில் வேலை பார்க்கிறாரமே ?

மற்றவர் : ஆமாம், அவர் தேவாவின் ரசிகராச்சே !

தேவா எந்த பாடலைத் தழுவி அவற்றை செய்கிறார் என்பதை அறிந்திருந்த பத்திரிகைகள் , ரகுமான் எந்த வெளிநாட்டு பாடலகளை தழுவி இசையமைத்தார் என்ற விபரங்களை அறியாத்திருந்தமையே அதற்க்குக் காரணம் எனலாம். தேவா உள்ளூர் , ரகுமான் வெளியூர் என்பதுதான் வேறுபாடு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அழகாகச் சொல்வார்.

பட்டப் பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது – ஒரு
பஞ்சையைத் தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்று உதைக்குது

இசையில் உள்ளடக்கத்தில் கற்பனை வளமற்ற படைப்புக்களுக்கு விருதுகள் கொடுப்பதன் மூலம் அவர்களை விலைக்கு வாங்குவதன் ஊடாக மக்கள்மத்தியில் பிரமிப்பூட்டப்படுகிரார்கள். விருதுகள் பெற்று புகழ் பெறுபவர்களை துதிபாடுதலேன்பது ஒரு கலையாகவே பயிலப்படுகிறது. இந்தபிரமிக்கும் விருது கொடுப்புகளால் மயக்கத்தில் வீழ்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் ,கலை விமர்சகர்கள் , இந்த போக்குக்கு வக்காலத்து வாங்குவது அதிசயமானதல்ல. குறிப்பாக ” நவீன “, “தீவிர இலக்கிய ” எழுத்தாளர்கள் எல்லாம் இசை பற்றியும் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரண மக்கள் கேட்கும் பாடலின் அளவுக்குக் கூட இவர்கள் பாடல்களை கேட்டதில்லை.ஆனாலும் இசை பற்றி எழுதுகிறாகள். ஏனென்றால் இந்த “அலையில்” தாம் விடுபட்டு போய் விடுவோம் என்ற பயம் தான் என நினைக்கத் தோன்றுகிறது! எழுத்து மூலம் பிரபலம் அடைந்த இவர்கள் மறைமுகமாக அவர்களை ஆதரிப்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.அதன் மூலம் தாங்கள் இன்னும் புகழ் பெறலாம் என்பதும் காரணமாக இருக்கலாம்.

மேற்கத்தேய இசை என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு மேலைத்தேய இசையில் தெளிவான புரிதலற்ற வெறும் தாள லயத்தை முன்னிறுத்தி செய்யப்படும் செக்கு மாட்டுத் தனமான இசையும் , உணர்ச்சிக் குழப்பமும் , தெளிவான மொழியற்ற பாடல்களும் புது அங்கீகாரம் பெறுவதன்மூலம் உணமையான கலையாக்கத் திறன் அழித்தொழிக்கப்படுகின்றது. குறுகிய காலத்தில் புகழ் பெறுவதும் ,அங்கீகாரம் , விருதுகள் கிடைப்பதும் பல இளம் கலைஞர்களை ஈர்த்து சீரழிப்பதாக உள்ளது.

கலைவாணர் என்.எஸ் .கிருஷ்ணன் பாடிய “சரியில்லை மெத்த சரியில்லை” [ படம்: டாக்டர் சாவித்திரி ]என்ற ஓர் பழைய பாடலில் , என்னென்ன சரியில்லை என்று வரிசைப்படுத்துவார்.அதில்

சுதி விட்டு பாடுவதும்
ஜதி விட்டு ஆடுவதும்
சரியில்லை

மெத்த சரியில்லை என்று பாடுவார்.இன்றைய பாடல்களின் ஆதாரமே சுதி விட்டு பாடுவதும் ,ஜதி விட்டு ஆடுவதும் என்று சொல்லும் தரத்தில் உள்ளன. ஏ.ஆர்.ரகுமானின் செம்மொழி பாடலைக் கேட்ட போது என்.எஸ்.கே யின் இந்த பாடல் தான் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது ! . சுருதி பல இடங்களில் இல்லாமல் பாடப்பட்டது. காட்டுக்கத்தல் புதிய நாகரீகமாகவும் கருதப்படுகிறது. தமிழ் தெரியாத பாடகர்கள் தமிழை கொச்சையாயகப் பாட வைக்கப்படுகின்றனர், என்றால் தமிழ் பாடகர்களும் வேண்டுமென்றே கொச்சையாகப் பாட வைக்கப்படுகின்றனர்.

மேலே உள்ள பாடலைப் போலவே பாதுருஹரி [1944 ] என்ற படத்தில் T.A.மதுரம் பாடிய ” பாட்டைக்கேக்கோணும் ” என்று ஆரம்பிக்கும் பாடலின் சரணத்தில் மிக அழகாக இன்றுள்ளவர்களுக்கு பொருத்தமாகப் பாடியது போல அமைந்த பாடல இதோ …

சுதியும் குரலும் ஒன்றுக்கொன்று
சொந்தம் கொண்டாட வேணும்
நல்ல மதி சேர் மனதில்
நல்ல மகிழ்ச்சி நேர வேணும்
தொடரும் பதமும் பொருளும் தெரிய
பகுத்து பாட வேணும்
பக்கம் பார்க்காமல் பல்லைக் காட்டாமல்
தலையாட்டாமல் கையை நீட்டாமல்
அங்க சேஷ்டை செய்யாமல்
பதமும் பொருளும் தெரிய பகுத்துப் பாட வேணும்
பாக்களில் உள்ள வாக்கியங்களை
மூக்காலும் கடி நாக்காலும்
சொல்லி தேய்க்காமல் ஊரை ஏய்க்காமல்
பதமும் பொருளும் தெரிய பகுத்துப் பாட வேணும்

“உணர்ச்சியில்லாமல் நல்ல இசையை வழங்குதல் சாத்தியமற்றது..” என்பார் வயலின் இசை மேதை யகூடி மெனுகின் [Yehudi Menuhhin ] ஆனால் இன்றைய கால கட்ட இசையை பலரும் ஒலிக்காகவே கேட்கிறார்கள்.உணர்வுகளை விட ஒலிகளை முதன்மைப்படுத்துவதால் வந்த விபரீதம் இது.பொதுவாக இன்றைய பாடல்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் ? பாடல்கள் சுமார் தான் ஆனால் பாடலின் ஒலித்தரம் காரில் கேட்க நன்றாக இருக்கிறது என்று !

ரகுமானால் பின்பற்றப்படும் இன்றைய இசைப்பாணி [ MUSIC STYLE ] மேற்கில் 1990 களில் உருவாக்கபட்ட கல்ப்பிசையின் பிரதியாகும். இந்த இசையை ஆரம்பித்து வைத்தவர் Nusrat Fateh Ali Khan என்கிற தலைசிறந்த பாகிஸ்தானிய கவாலி இசைப்பாடகர். இவரது குடும்பத்தவர்கள் ஆறு தலைமுறையாக கவாலி [ Qawwali ] இசையை பாடி வருபவர்கள்.கவாலி இசையை உலக அளவின் கொண்டு சென்ற பெருமை இவரைச் சாரும். இவரது கச்சேரிகள் எழுச்சியும் ,இனிமையும் , கம்பீரமும் கொண்டனவாக இருக்கும்.ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அவர் பாடும் போது, அவரைத் தொடர்ந்து அவரது குழுவினர் ஒவ்வொருவராக அதே ராகத்தை தங்கள் மனோதர்த்திற்கேற்ப பாடி சிறப்பிப்பார்கள்.

குறிப்பிட்ட அந்த ராகத்தின் அழகுகளை எல்லாம் உணர்ச்சி மயமாகப் பாடி பிரமிக்க வைப்பார்கள்.அவர்களது இசையில் பாகிஸ்தானிய , பஞ்சாபிய இசை ரசிகர்கள் கட்டுண்டு கிடப்பர்.

ஸுபி இசையின் [SUFI MUSIC ] பிரிவுகளான ஹசல் , கவாலி முக்கியனாவையாகும்.கவாலி இசையின் பிறப்பிடம் பொதுவாக பாகிஸ்தான் என்று சொல்லப்பட்டாலும் ,அதன் வேர்கள் ஈரான் இசையிலும் , ஆப்கானிஸ்தான் இசையிலும் உள்ளன.கவாலி இசையில் புகழ் பெற்ற கலைஞர்களில் Nusrat Fateh Ali Khan , Sabri Brothers முக்கியனானவர்கள்.ஸுபி இசையின் ஹசல் வகையைச் சேர்ந்தவை தான் மெல்லிசையின் உச்சம் என்று இன்றும் போற்றப்படுகின்ற பழைய ஹிந்தி பாடலகள்.இந்தவகைப் பாடல்களின் தாக்கத்தினாலேயே உந்தப்பட்டவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி , மற்றும் பல இசையமைப்பாளர்களும். அதுபோலவே கவாலி , பங்க்ரா இசையும்.இந்த வகை இசையையும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் தேவையான இடங்களில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். ரகுமான் தான் சூபி இசையை கண்டெடுத்தது போல பிரச்சாரம் செய்கிறார்கள்.

கவாலிசைக்கு சில உதாரணங்கள்.

1. இங்கே மிருகம் பாதி – படம்: சித்தி பாடியவர்: T.A. மோதி + குழுவினர் இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்

2. பாரடி கண்ணே கொஞ்சம் -படம்: வல்லவனுக்கு வல்லவன் – பாடியவர்: T.M.சௌந்தரராஜன் + சீர்காழி கோவிந்தராஜன் இசை :வேதா

3. ஆற்றின் கரை தனிலே கண்ணன் என்னை – படம் : அக்பர் பாடியவர்: பி.சுசீலா

4. தங்கச்சி சின்னப்பொண்ணு – படம் : கருப்புப்பணம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் + எல்.ஆர். ஈஸ்வரி + குழுவினர் இசை :விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பங்க்ரா இசைக்கு உதாரணங்கள்

1. ஆடலுடன் பாடலைகேட்டு – படம்: குடியிருந்த கோயில் பாடியவர்: T.M.சௌந்தரராஜன் + பி.சுசீலா இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்

2. கல்யாண சாப்பாடு போடா வா -படம்: மேயர் சந்திரகாந்த் – பாடியவர்: T.M.சௌந்தரராஜன் இசை :வீ.குமார்

3. நேற்று ராத்திரி தூக்கம் போச்சுது . – படம் : சகலகலா வல்லவன் பாடியவர்: எஸ்.பி.பி இசை :இளையராஜா

4. நாடுக் கொட்டை செட்டியாரு – படம் : – பாடியவர்: மனோ + குழுவினர் இசை :இளையராஜா

பாடகர் அலிகான் [ .Nusrat Fateh Ali Khan ] குழுவினரின் கச்சேரிகள் இங்கிலாத்தில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. இதனால் ஏற்ப்பட்ட புகழ் ஆங்கில இசை கலைஞர்களின் அறிமுகத்தை கொடுத்தது.அதன் விளைவால் Peter Gabriel என்கிற ஆங்கில ராக் பாடகர் இவருடன் இணைந்து சில பாடல்களை உருவாக்கினார்.மேலைத்தேய கலப்புடன் அலிகானின் பாடல் ஒலித்தது. கவாலி கலப்பிசை [Qawwali fusion ] என்கிற புதிய இசை பிறந்தது. அந்த இசைத தொகுப்பு ” Mustt Mustt ” என்ற பெயரில் இசைத்தட்டாக 1990 இல் வெளியானது.இந்த இசைத் தட்டை Peter Gabriel ன் இசை நிறுவனமான ReallWorld Records வெளியிட்டது.இந்த நிறுவனம் பல நாட்டு இசைகளை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தில் உள்ள ” “Mustt Mustt [Lost in His Work]” (Nusrat Fateh Ali Khan) ” என்ற பாடல் வரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்து புகழ் பெற்றது. அந்த இசைத்தட்டில் ரீமிக்ஸ் ஆக வெளிவந்த “Mustt Mustt ( Massive attack remix)” பாடல் மிகவும் பிரபல்யமானது.பின்னர் கொக்கோ கோலா விளம்பரத்திற்கும் இந்தப்பாடல் பயன்பட்டது. இந்தப் பாடலின் புகழ் தான் இன்றைய தமிழ் சினிமா இசையில் A.R.ரகுமானின் Inspiration [ அகத்தூண்டுதல் ] என்று சொல்லலாம்.இந்த அல்பத்தில் வெளி வந்த பாடல்களின் பிரதிபலிப்பு இன்று வரை A.R.ரகுமானின் இசையில் தொடர்கிறது.இந்தக் காரணத்தால் தான் ரகுமானின் பாடல்கள் தமிழ் பாடல்கள் போல தெரிவதில்லை.தமிழில் தான் பாடப்படுகிறது , ஆனால் அவற்றில் உள்ள தமிழ் பாடல் வரிகள் நீக்கப்பட்டால் அவற்றில் தமிழ் தன்மை இல்லாதிருப்பதை நாம் உணரலாம்.

உலகெங்கும் ஒரே வகை மாதிரியான இசையைஇன்று நாம் கேட்டு வருகின்றோம்.அது உலகமயம் என்ற வல்லாதிக்கத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வருகிறது. உலகெங்கும் இது போன்ற இசை ஊக்குவிக்கப்படுகிறது. பல் இனக் கலாச்சாரங்கள் எல்லாம் புறம்தள்ளப்பட்டு ஒரே வகைமாதிரியான நுகர்வுக்கலாச்சாரம் பரப்பபட்டு வருகின்றது. அந்த வகையிலேயே இசையிலும் ஒரே வகைமாதிரியான முறை பினப்ற்றப்படுகிறது. அந்த இசை ஜப்பானில் , வியட்நாமில், தாய்லாந்தில் , ஆபிரிக்காவில் , அரேபியாவில் எங்கு ஒலித்தாலும் அவற்றில் ஒட்டியிருக்கும் மொழியை அகற்றி விட்டால் சிறிதளவும் வித்தியாசம் தெரியாமல் இருப்பைதை நாம் உணரலாம். அந்த ” உலக இசையின் ” இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் செயல்படுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா,ஹரீஸ் ஜெயராஜ், விஜய் அன்டனி , ஜி.வீ.பிரகாஸ் மற்றும் புற்றீசல்களாக அறிமுகமாகும் பல இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித் தன்மை தெரிவதில்லை. பல நூறு பாடகர்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் அவர்களிலும் தனித்தன்மை வெளிப்படுவதில்லை. நல்ல பாடகர்களான மதுபாலகிருஸ்ணன் , ஷ்ரேயாகோசல் போன்றவர்கள் ஓரளவு தனித்தன்மை காட்டினாலும் , ஒரே வகைமாதிரியான , சலிப்புத் தரும் ஃபார்முலா பாடல்களின் தன்மையால் அவர்கள்கூட மழுங்கடிக்கப்ப்டுகிரார்கள். தற்போது வெளிவரும் பாடல்களுக்கும் ஆங்கில பாடல்களுக்கும் அதிக வேறுபாடில்லை என்னுமளவுக்கு இன்றைய தமிழ் திரை இசையின் நிலை மாறியிருக்கிறது .

1990 களின் ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளில் அரேபிய சானல்களில் [ MBC ]அலி கானின் போல ஒலித்த அரேபிய பாடல்களும் ரகுமானின் பாடல்களுக்கு முன்மாதிரியனவையாக இருந்தன..அரேபிய பாடல்கள் மேலைத்தேய தாளங்களை கொண்டு பாடப்பட்டு வந்தன.

இந்த PATTERN ஐ தான் ரகுமானும் அவரை பின் தொடர்ந்த பல இசையமைப்பாளர்களும்பிரதி பண்ணினார்கள்..அதனால் தான் அரேபிய பாடல்களை போன்ற பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் 1990 களில் முழக்கமிட்டன. பல அரேபிய பாடலகள் காப்பியடிக்கப்பட்டன.இந்த ரகப் பாடல்களை மக்கள் முகம் சுழித்தே கேட்டனர்.கோமாளித்தனமான நடனங்களால் கேலிக்குரிய பாடல்களாகவும் அவை இருந்தன. இவை தமிழ் திரையிசையின் வீழ்ச்சியை தான் பறை சாற்றின.கற்பனை வளமற்ற , தாளத்தை வெறும் முழக்கமாக்கி , வகை தொகையின்றி வெளிநாட்டு இசை கொப்பியடிக்கப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சி அதாவது பிறது படைப்பை கூச்சமில்லாமல் கொப்பியடிப்பதில் முடிந்திருக்கிறது. ” கொப்பியடிப்பதில் வல்லமை காட்டும் ஒரு போக்கு ” , அது ” திறமை ” என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது.அதற்க்கு அவர்கள் நாகரீகமாக இட்ட பெயர் REMIX. இந்த நாமத்தை வைத்துக் கொண்டு பழைய பாடல்களை எல்லாம் குதறினார்கள்.ஆயினும் இவர்கள் செய்யும் இந்த கொடூரத்தை நியாயப்படுத்தவும் சிலர் முனைந்தார்கள். ” இதன் மூலம் பழைய பாடல்களை மக்கள் கேட்கும் வாய்ப்புக்களை ஏற்ப்படுத்துகிறார்கள் ! ” என்று நியாயப்படுத்தப்பட்டார்கள்.பின்னணிப்பாடகர் டி.எல்.மகாராஜன் சொல்வார் ” அந்தப் பாடல்களை சுமாராகப் பாடினாலும் பரவாயில்லை , ஏன் பாட வந்தார்கள் என்பது போல பாடக்கூடாது ” என்று. இன்றுள்ள நிலைமையில் அந்தப்பாடல்களின் இனிமையை இந்த Remix கெடுக்கின்றது என்பதே பலரது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்த Remix என்கிற சங்கதியை பழம்பெரும் இசையமைப்பாளர்களும் Remix என்ற பெயரில்லாமலேயே செய்திருக்கிறார்கள்.மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற மெட்டுக்கள் என்பதை நன்கு தெரிந்து பயன் படுத்தியிருக்கிராகள்.சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1 .கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்

வகைகிடைத்த குளிர் தருவே என்ற வள்ளலாரின் அருட்பா விருத்தப் பாடலை நாடகங்களில் பாடி கிட்டப்பா பிரபல்யப்படுத்தினார். பல வருடங்களுக்குப் பின் அதே மெட்டை வைத்துக் கொண்டு இசைமேதை ஜி.ராமநாதன் கோகிலவாணி என்ற படத்தில்

மாலையிலே மனச்சாந்தி தந்து மணம் பரப்பும் மலர் வானமே ….. என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜனை பாட வைத்தார்.அந்தப் பாடல் ஒரு தனித்துவமிக்க பாடலாக வெற்றி பெற்றது.

2 .ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற தியாகராஜ பாகவதரின் பாடலை இசையமைப்பாளர் கே.வீ.மகாதேவன் குலமகள் ராதை படத்தில்
ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்று டி.எம் சௌந்தரராஜனை மீண்டும் பாட வைத்தார்.

3 .உன்னை ஒன்று கேட்பேன் என்ற புதிய பறவை படப் பாடலை இசைஞானி இளையராஜா , தாய்க்கு ஒரு தாலாட்டு என்ற படத்தில்

இளமைக்காலம் இங்கு என்று திரும்பும் என்ற பாடலை தனது வாத்திய இசையால் அழகு படுத்தியிருப்பார்.பழைய பாடல் , புதிய பாடல் என்ற வகைப்படுத்தல் இளையராஜாவின் காலத்திலேயே வகைப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த பாடல் அவரது சுய விமர்சனப்பாடல் என்றும் நாம் வைத்துக் கொள்ளலாம்.” பழைய பாடல் போலே புதிய பாடல் இல்லை ” என்று பாடவும் , அதை எதிர் கொள்ளும் தைரியமும் அவரிடம் இருந்தது எனலாம்.ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதற்காக சில பாடல்களை அதற்குப் பொருத்தமான காட்சிகளுக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லலாம்.

ஆனால் இன்றோ பழைய திரைப்பட பாடல்களை எடுத்துக் கொண்டு தாளத்தை முழக்குவதர்க்காகவே பயன்படுத்துகிறார்கள். “தலை தெறிக்க ஆடுவது ” இதுவே ஒரு வியாதி போல பரவி வருகிறது. ரகுமான் ஆரம்பித்து வைத்த இந்த ரீமிக்ஸ் வகை தொகையில்லாமல் மற்றக் கலைஞர்களின் படைப்புக்களை இழிவு படுத்தும் பாங்கில் , சேஷ்டையாகவும் பயன்படுத்துகின்றார்கள். இன்றைய இசையமைப்பாளர்கள் பலரும் இதை ஒரு பிழைப்பாகச் செய்துவருவது அருவருக்கத்தக்க செயலாகும்.படைப்பாற்றலற்றவர்கள் தமது கையாலாகத்தனத்தை மறைக்கும் ஒரு யுக்தியாகவும் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு எதிரான குரலகள் அவ்வப்போது ஒலித்தாலும் அவை சட்டை செய்யப்படுவதில்லை.

சமீபத்தில் கவிஞர் புலமைப்பித்தன் மிகக் காட்டமாக ஒரு கருத்தை துணிந்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பலரும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்ததால் எழுந்த ஆவேசக்குரலாக அவரது குரல் ஒலித்தது. அவர் சொன்னார் :

” தலை வாழை இல்லை போட்டு அதில் அறுசுவை உணவு பரிமாறிக்கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு நாய் வந்து அசிங்கம் செய்து விட்டுப் போவது போல கேவலமானது “

தனது சொந்த டியூனை எப்படிவேண்டுமானாலும் கெடுத்துக் கொள்ள இசையமைப்பாளர்களுக்கு உரிமையுள்ளது. அதை நான் ஆட்சேபிக்கவில்லை.ஆனால்பழம்பெரும் இசையமைப்பாளர்களின் பாடல்களை சிதைக்க அவர்களுக்கு உரிமையில்லை.தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான பூமழை தூவி பாடலை ஒரு படத்தில் ரீமிக்ஸ் செய்வதாகக் கேள்விப்பட்டேன் அது உண்மையானால் அந்த இசையமைப்பாளருக்கு எதிராக கோட்டுக்குப் போவேன்.ஏ.ஆர் ரகுமான் முதலில் தமிழைச் சரியாக கற்றுக் கொள்ளட்டும்.பிறகு இசைப்பள்ளியை ஆரம்பிக்கட்டும். – புலமைபித்தன்.

நல்லதை நல்லதென்றும் , தீயதை தீயது என்றும் சொல்லத்தயங்குகின்ற இன்றைய காலகட்டத்தில் உண்மையை துணிந்து கூறியமை பாராட்டத்தக்கது.புகழ் பெற்றவர்களை பாராட்டுவதும் அவர்கள் செய்வதெல்லாவற்றையும் நியாயப்படுத்தும் போக்கையும் நாம் காண்கிறோம்.இந்த மாதம் [august 2012]இந்த Remix கலாச்சாரத்தை கடுமையாக , அதனைக் கண்டித்துக் கூறக்கூடிய அருகதை உள்ளவரான மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூறிய கருத்தும் குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர்களிடம் அவர் கூறிய கருத்து :

“பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது ரொம்ப தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. புதுசா பண்ணுங்க. சொந்த கற்பனையை பயன்படுத்துங்க. ரீமிக்ஸ் பண்ண வேண்டாம். ரீமிக்ஸ் என்பது சில நேரம் தப்பாக போய்விடும். அவரவர் கற்பனையில் நல்லது செய்யுங்கள்,” என்றார்.

அந்த காலத்து பாடல்களை போல் இப்போது இல்லையே என்று பலரும் கேட்கிறார்கள். அந்தக் காலத்துப் பாடல்களைப் போல இப்போதும் போட முடியும். ஆனால் அப்படி கேட்டு யாரும் பாட்டு வாங்குவதில்லையே.

முன்பெல்லாம் இசைக் கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து பாடல்களை உருவாக்கினோம். இப்போது மிஷின் வந்துவிட்டது. மிஷினே பாட்டு வேலைகளையெல்லாம் செய்கிறது. மிஷினை வைத்து பாட்டுபோட எனக்கு தெரியாது,” – எம்.எஸ்.விஸ்வநாதன்

ரகுமான் செய்யும் ” விளையாட்டுக்களை” நியாப்படுத்த பலர் இருக்கிறார்கள். அவரிடம் பாடும் பாடகர்கள், பாடகிகள் மற்றும் கவிஞர்கள், அதில் முதன்மையானவர் வைரமுத்து.அவருக்கு மறு வாழ்வு கொடுத்த நன்றி கடன் அது.

ரகுமான் மீதுள்ள பொதுவான குற்றச்சாட்டு” அவர் தாமமதமாக்ச் செயல்ப்படுகிறார் என்பது ” அது பற்றி கவிஞர் வைரமுத்து கூறுகிறார்.

” அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.அவர் திட்டமிட்டுத் தாமதமாக இல்லை.வேண்டுமென்றே தாமதமாக இல்லை.அந்தப் பாடலின் விளைச்சலுக்காக , பாடல் என்ற நிலக்கரி வைரமாக முதிர்வதர்க்காக அவர் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறார்.அந்த நேரத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியும்.பல மெட்டுக்களைப் போட்டு போட்டு பார்த்து அழிக்கிறார்.இது என் காதுக்குச் சுகமில்லை.இது என் நெஞ்சுக்கு நெருக்கமில்லை, இது தமிழர்களுக்கு ஆகாது , இந்த இசை ஏற்க்கனவே வந்தது,எனக்கு முன்னாள் பெரும் சாதனையாளர்கள் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள், ஜி.ராமநாதன் அவர்கள் , கே.வீ. மகாதேவன் அவர்கள், எம்.எஸ் .விஸ்வநாதன் அவர்கள் , இளையராஜா அவர்கள், இவர்கள் எல்லாம் செய்யாத சாதனைகளை செய்ய முடியுமா என்று அந்த சின்னஞ் சிறுவன் யோசித்து இந்தப் பெரியவர்களின் வழி காட்டுதலோடு , ஆனால் இந்த பெரியவர்களின் பாதிப்பு இல்லாத வகையில் அவன் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.அந்த ஆசையின் விளைச்சல் தான் இந்த வெற்றி என்று கருதுகிறேன்.- வைரமுத்து
இவ்விதம் ரகுமானே சிந்தித்து இருக்கமாட்டார் !!

” நான் ஒஸ்கார் நிகழ்ச்சியை சோபா நுனியிலிருந்து பார்த்தேன் ” என்று எழுதினார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவர் மட்டுமல்ல , எழுத்தாளர் ஜெயமோகன் ரகுமான் பற்றி பின் வருமாறு எழுதுகிறார்.

” ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் . இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார். ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது. ரஹ்மானின் சையைப்பற்றி விரிவாகப்பேச நான் தேர்ந்த இசை ரசிகன் அல்ல. ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கார் விருது அந்தத் திறனுக்கான சர்வ தேச அங்கீகாரம்.”

“ஒரு கூட்டுவெளிப்பாடு ” என்றால் கூட்டாக அல்லவா விருதுகள் வழங்கப்பட வேண்டும். இவர்களின் பெருமிதமெல்லாம் ” விருதுகளின் ” அங்கீகாரம் தான்.இவர் ஐஸ்வர்யா ராய் பற்றி எழுதுவதை பாருங்கள்.

” ஐஸ்வர்யா ராயை நான் சந்த்திதிருக்கிறேன்.அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன் .அழகான பெண் .அழகான பெண்கள் இருப்பது போல் அல்லாமல் புத்திசாலியும் கூட.அவருடன் பேசும் போதெல்லாம் ” இவர் உலக அழகி ” எண்ணம் வந்த படியே இருந்தது.அல்ல இப்படியும் சொல்லலாம், ” உலகம் என்பது தான் என்ன “என்ற எண்ணம், உலகில் எத்தனை கோடிப் பெண்கள், எத்தனை கோடி அழகிகள் ,எத்தனை லட்சம் பேரழகிகள் எத்தனை வண்ணங்கள் , எத்தனை வடிவங்கள். ஆனால் யாரோ நம்மிடம் சொல்லிவிட்டார்கள் ” இவர் உலக அழகி ” என்று.பலகோடி ரூபாய் செலவில் அடஹி விளம்பரம் செய்து நிறுவி விட்டார்கள்.அது ஒரு உண்மையாகி விட்டது.அதன் பின் நம்முடன் இருப்பது ஒரு பெண்ணல்ல. ஒரு குறியீடு. ஒரு அமைப்பு .”

ஆனால் இதே எழுத்தாளர் இன்னொரு பெண் எழுத்தாளரான அருந்ததி ராய் பற்றி பின்வருமாறு எழுதுகிறார். அருந்ததி ராய் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகப் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

” ஒரே ஒரு பல்ப் நாவல் மட்டும் எழுதிய , போதிய அரசியல் அறிவோ , வாசிப்போ , கள அறிவோ இல்லாத இந்தப் பெண்மணிக்கு ஊடகங்கள் உலகெங்கும் அளிக்கும் விளம்பரத்தின் உள்சதிகளை காணும் கண்ணற்றவர்கலாக இருக்கிறார்கள்.”

தமிழ் திரைப்படக்கதையை ஒரு தேநீர் வழங்கும் பையனும் சொல்லுவது போல , ” கதை தயாரிப்பது ” போல. இசையைத் தயார் செய்பவராக இருப்பதால் அவர் ஒரு இசை தயாரிப்பாளர் என்றழைககபடுகிறார்..அதனால் பாடகர்களும் ,வாத்தியக்காரர்களும் தங்கள் கற்பனைக்கு ஏற்ப வாசிப்பதை பொருக்கி ஓட்டுவதா இசையமைப்பாளனின் வேலை ? .உண்மையான இசைக்கலைஞனிடம் அந்தக் கணத்தில் பீறிட்டு எழுவது இசை.ஜி.ராமநாதனிலிருந்து இளையராஜா வரை அவர்களின் கற்பனைக்கும் , இசைவடிவங்களுக்கும் தான் வாத்தியக்காரர்கள் துணை போயிருக்கிறார்கள்.வாத்தியக்காரர்களிடம் என்ன வேண்டுவது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.இந்த மாதிரி பல பாடல்களை ரகுமான் தயாரித்திருப்பதை அவரிடம் பாடிய பாடகிகளும் , பாடகர்களும் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்கள்.அவர் எங்கள் நண்பர் ” நாங்கள் எங்கள் எண்ணத்திற்கு பாடலாம் ” !! என்று.அதனால் தான் போலும் நீண்ட நாட்கள் எடுத்து கொள்கிறார்.

என்னுடைய நீண்ட கால நண்பர் , என்னை விட பல வயதுகள் மூத்தவர்.நீண்ட காலம் வெளிநாட்டில் வசித்தவர்.மிக பழைய பாடல்களின் ரசிகர். அவர் புதிய பாடல்களை பற்றி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பேசியவரல்ல. ஆனால் பேச்சுவாக்கில் ஒருநாள் ஏ.ஆர் .ரகுமான் மிக திறமையான இசையமைப்பாளர் என்றார்.அவருடைய பாடலகள் உங்களிடம் இருக்கிறதா ? என்றும் கேட்டார்.” நீங்கள் கேட்கும் பாடல் என்னிடம் இருக்கிறதோ தெரியவில்லை, நீங்கள் பாடலை சொல்லுங்கள் பார்க்கலாம் ” என்றேன் .” கொஞ்சம் தாமதித்து ” நான் அவருடைய பாடல்கள் ஒன்றுமே கேட்டதில்லை ” என்றார்.ஏ.ஆர்.ரகுமானின் பாடலகளைக் கேட்காத ஒருவருக்கும் தெரிகிறது அவர் சிறந்த இசையமைப்பாளர் என்று!

இந்த கட்டுரை எழுதும் போது டென்மார்க் எழுத்தாளரான H.C.ANDERSON எழுதிய THE EMPORER’S NEW CLOTHS என்ற குட்டி கதை ஞாபகத்திற்கு வருகிறது.அந்த கதையின் சுருக்கம் இது தான். புதிய ஆடை அணிவதில் மிக்க மோகம் உள்ள ஒரு அரசனை , இரண்டு நெசவாளிகள் , தாம் அதி நவீன டிசைன்களில் ஆடை செய்வதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள்.தாம் நெய்யும் ஆடைகள் அறிவில்லாதவ்ர்களுக்கும் , முட்டாள்களின் கண்களுக்கும் புலப்படாது என்று கூறி விடுவதால் ,, மந்திரிகளும் , அதிகாரிகளும் அவர்கள் நெய்யும் ஆடை ஒன்றுமில்லை என்று தெரிந்தும் ,உண்மையைச் சொன்னால் தம்மை முட்டாள் என்று சொல்லி விட்டால் தங்கள் பதவிகள் பறி போய் விடும் என்று எண்ணி , அவர்கள் நெய்யாத ஆடைகளை எல்லாம் அற்ப்புதம் , அற்ப்புதம் என்று போற்றி மன்னனை உற்சாகப்படுத்துகிறார்கள் . மன்னன் அந்த ஆடையை அணித்து ஊர்வலம் போகும் நாளும் வருகிறது.மன்னனும் தான் முட்டாள் இல்லை என்று நிரூபிக்க அந்த ஆடையை அணிந்து ஊர்வலம் போகிறான்.எல்லோரும் அற்புதம் , அற்புதம் என்று கோஷமிடுகிறார்கள்.அந்த ஊர்வலத்தில் சென்ற ஒரு குழந்தை தந்தையிடம் ” மன்னனின் உடம்பில் ஒரு துணியுமில்லை ” என்று சொல்கிறது.அது ஊர்வலத்தில் பரவுகிறது. மக்கள் எல்லோரும் ” மன்னனின் உடம்பில் ஒரு துணியுமில்லை ” கோஷமிடுகிறார்கள்.மன்னனுக்கும் புரிகிறது , ஆனால் ஊர்வலத்தை நிறுத்த விரும்பவில்லை.

தமிழ் நாட்டின் இன்றையை திரை இசை அம்மணமாகி நிற்பதைச் சொல்ல ஒரு குழந்தை இல்லையே!

காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்

கள்ளர்கள் வாழ்விலும் நியாயமுண்டு – என்பது கண்ணதாசன் வரிகள் .” இந்த இசை ஏற்க்கனவே வந்தது” என்று தெரிந்து தான் ரகுமான் இசையமைக்கிறார் எனபதற்கு மேல் சொன்ன பாடல்கள் பல சான்றாக உள்ளன என்பதை POET EMPORER அறியாமலிருப்பது அதிசயமல்ல.

முன்பெல்லாம் மிக அரிதாக வந்து போகக் கூடிய விருந்தாளிகள் போல வந்து நம்மை மகிழ்வித்த மேல்நாட்டு இசை , இன்று நாம் வரவேற்க்காமலே வந்த விருந்தினர் போல நம் வீட்டில் உட்கார்ந்து நம்மை அதிகாரம் செய்யும் பரிதாப நிலைக்கு நாம் வந்துள்ளோம்..அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்விதமே என்பதற்கிணங்க பொப் கலாச்சாரம் திட்டமிட்டுப் பரப்பபடுகிறது. ரகுமானின் பாடல்கள் உணர்வு நிலையில் பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லை.உயிரே உயிரே என்று ஓலமிட்டாலும் மனதில் சலனங்களை எழுப்புவனவல்ல.உணர்ச்சி செறிவான இசையற்ற , வெறும் அலங்கார இசை மக்கள் மனங்களில் அமரமுடியுமா? இசை நிறுவனங்கள் பழக்கப்படுத்த முனையும் தாள லயன்களை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் இசை மக்களுக்கு அன்னியமாயிருப்பதால் அவை நின்று நிலைப்பதில்லை. அவை அற்ப ஆயுளில் மறைந்து போக நேர்கிறது. உணர்ச்சியற்ற மேலோட்டமான இசையினால் ஏற்ப்படும் விளைவு இது. வியாபாரத்திற்காக உருவாக்கப்படும் வேரில்லாத இசை இன்று வலிந்து ஊடகங்களால் தொடர்ச்சியாக திணிக்கப்பட்டு, பரப்பபட்டு வருகிறது. கணனியில் இசை மென்பொருட்களை கொண்டு பலரும் இசையமைப்பதால் புற்றீசல்களாக அறிமுகமாகும் பல இசையமைப்பாளர்களின் இசையில் தனித்தன்மை தெரிவதில்லை. இந்த நிலைமை இன்றைய மொபைல் தொலை பேசியில் ஒலிக்கும் அழைப்புஒலி[ RinkTone] போன்றே உள்ளது.எல்லோரிடமும் உள்ள மொபைல்தொலைபேசிகளில் ஒரே விதமான சத்தங்கள் ஒலிக்கும் போது , ஒருவர் தானாக ” அது என்னுடைய தொலைபேசி ” என்று உறுதிப்படுத்துவது போலவே , இன்றைய இசையமைப்பாளார்களும் ” இந்த பாடல்களுக்கு நான் தான் இசையமைத்தேன் ” என்று சொன்னால் தான் நமக்கு புரியும் என்கிற பரிதாபத்தில் இன்றைய தமிழ் சினிமா இசை உள்ளது.இவ்விதம் இசை மலினப்படுத்தப்படும் அதே வேளையில் , இசை அமைப்பு என்பது உயர்ந்த தொழில் நுட்பம் சார்ந்ததாகவும் ஆக்கப்பட்டு வருகின்றது.இந்த நுட்பங்களை அறிய வாய்ப்பில்லாதவர்கள் இசைத்துறைக்கு வர இயலாத அளவுக்கு மறைமுகமான முட்டுக்கட்டை போடப்படுகிறது.

Inspiration என்பதை முற்றாக தவறாகப் புரிந்து கொண்ட அல்லது , அது பற்றிய சிந்தனையற்ற விரைவான புகழையும் , விருதுகளையும் , அங்கீகாரங்களையும் எதிர்பார்க்கின்ற , குறுக்கு வழிகளில் அவற்றைப்பெறத் துடிக்கின்ற , சந்தர்ப்பங்களுக்கேர்ப்ப நடிக்கின்ற , படைப்பாற்றலற்றவர்களின் கையில் இன்றைய சினிமா உலகம் சிக்கியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றை உலக மயக் கொள்கைகளுக்கு அடிமையாகி போன ஒரு கூட்டத்தின் கையில் இன்றைய சினிமா இசை சிக்கித் தத்தளிக்கின்றது.வங்காளப் படங்களைக் காப்பி அடித்தவர் “இயக்குனர் சிகரம்” !! , GODFATHER என்ற அமெரிக்கப்படத்தை காப்பியடித்து , அதை ஒஸ்காருக்கு அமெரிக்காவிற்கே அனுப்பிய மணிரத்தினம் ” இந்தியாவின் சிறந்த இயக்குனர் “!!.

இசையமைப்பது என்பது மற்ற கலைகளைப் போன்றே சிறப்பான கலை.அது எல்லோருக்கும் கைவரப் பெறுவதல்ல.ஆனால் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி என்பது கலையாற்றலை தொழில் நுட்பமாகக மாற்ற முயற்ச்சிக்கிறது.பெரு வணிகத்தின் வீச்சும், அதை ஊக்குவிக்கும் , அதன் அத்தியாவசியத் தேவையான விளம்பரமும் இன்று கலையாகப் பிரச்சாரப் படுத்தப்படுகிறது.உலக மக்களின் பண்பாடுகளை அழிப்பதும் , இறையாண்மையை அழிப்பதும் உலக மயத்தின் பிரதான் குறிக்கோளாக இருக்கிறது.அந்த குறிக்கோளிற்கு உதவும் ஒரு கருவியாக இசை பயன் பட்டு வருகிறது. சகல துறைகளிலும் உலக மயகொள்கை திணிக்கப்பட்டு வருகிறது.கம்பியூட்டர்களை , சில மென் பொருட்களை இயக்கத் தெரிந்தவர்கள் கலைஞர்களாக போற்றப்படும் அவல நிலை உருவாகியிருக்கிறது.இதன் விளைவு இசையில் பன்முகம் இழந்த ஒரே ரகமான , அலுப்புத்தட்டுகின்ற இசை முழக்கப்பட்டு வருகிறது.நல்ல இசையை கேட்க சந்தர்ப்பமில்லாதவ்ர்களுக்கு தேவையானால் இது போன்ற முழக்க இசை வியப்பாக இருக்கலாம்.மகத்தான நவீன தொழில் நுட்பத்தை வைத்துக் கொண்டு வித்தை தான் இவர்களால் காட்ட முடிகிறது.

ஜி.ராமநாதன் , எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு போன்ற இசைமேதைகள் தமிழ்த்திரை இசையை மண் மணத்தோடு ஒரு எல்லை வரை வளர்த்தெடுத்தார்கள்..அதை அடுத்த கட்டத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி , கே.வீ.மகாதேவன் போன்றோர் வளர்த்தெடுத்தார்கள்.அவர்கள் வழியே இளையராஜா இசையின் உச்சங்களை தொட்டார். கலையம்சமான இசையின் தொடர்ச்சி அவருடன் நின்று விட்டது வேதனைக்குரியது.

-முற்றும்-

முன்னைய பகுதிகள்:

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்(5): T .சௌந்தர்
தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் : T.சௌந்தர்
Exit mobile version