பதுங்கு குழிகளின் படிக்கட்டுகளில் காத்திருந்த மரணத்தின் அவலத்தையும் அதன் ஆழத்தில் புதைந்துகிடந்த வாழ்விற்கான நம்பிக்கைகளையும் தமிழ்க்கவி போர்களத்தின் இலக்கியப் போராளியாக கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
தமிழ் கவியின் ஊழிக்காலம் ஒரு மக்கள் இலக்கியமாகவே பயணிக்கிறது . அது மனித மனங்களை ஒளிவு மறைவின்றி எடுத்து சொல்கிறது மரணம் மலிந்த நிலையிலும் சமூகத்தின் அழுகிய பக்கங்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.
ஊழல், அதிகாரத் துஸ்பிரயோகம், சாதீய முரண்பாடுகள் என்ற அனைத்தையும் ஊழிக்காலம் தொட்டுச் செல்கிறது. போரின் உச்சக் காலத்திலும் சமூக முரண்பாடுகளின் புதிய பரிமாணத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. மரணத்தின் விழிம்பிலும் கூட அவற்றிலிருந்து விடுபடமுடியாத மனித உணர்வுகளை ஊழிக்காலம் விசாரணை செய்கிறது.
இறுதி வரைக்கும் இராணுவத்தை நிறுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் போராடும் போராளிகளுக்கும் ஆதிக்க மனோநிலையை விட்டுக்கொடுக்காத மற்றொரு பகுதிக்கும் இடையிலுள்ள வெளியை மக்களின் மரண ஓலத்தால் நிரப்புகின்ற படைப்பே ஊழிக்காலம் எனலாம்.
படைப்பாளியின் குறிப்பான அரசியல் பார்வையிலிருந்தான பிரச்சார நோக்கங்களுக்கு அப்பால் சம்பவங்களின் தொகுப்பாக சொல்லப்படும் இலக்கியம் எதிர்கால அரசியலுக்கான இன்றைய பாடங்கள்.
பேரினவாத அரசின் உச்சப்பட்ச அழிப்பின் கோரம் நூல் முழுவதும் இழையோடும் அதே வேளை இயக்கப் பொறுப்பாளர்களின் தவறுகள், நிர்வாக ஊழல்கள் போன்ற அனைத்தையும் கடந்து செல்லும் இந்த நூலைப் படித்துக்கொண்டிருந்த வேளையில் கிங்ஸ் ஜமாத்தாவின் சோவியத் நூலான குல்சாரி நினைவுகளில் வந்து போனது.
மாயைகளுக்குள்ளும், போலியாகக் கட்டமைக்கப்பட்ட விம்பங்களுக்குள்ளும் அமிழ்த்தப்பட்டிருக்கும் எமது தமிழ்ப் பேசும் சமூகம் வாசிக்க வேண்டிய முக்கிய நூல் இது. எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் நோக்கில் கடந்த காலம் தொடர்பான சுய விமர்சனத்தை முன்வைப்பதற்கு ஊழிக்காலம் முக்கிய பங்காற்றும் என்பதை உறுதியாகக் கூறலாம்.
எமது சமூகத்தில் தடம்பதித்துக் கடந்து சென்ற ஈழப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்கள்:
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்
ஊழிக்காலம்: தமிழ்க்கவி